Sunday, January 28, 2007

அப்துல் கலாம் கூறிய அழகிய அனுபவங்கள்

நம் அனைவரின் பேரன்பிற்கும், பெருமதிப்புக்கும் உரிய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் இரண்டு நாட்கள் முன்பு வழங்கிய குடியரசு தினச் செய்தியின் தொடக்கத்தில் இந்தியக் குடியரசைப் பெருமிதம் கொள்ள வைக்கும் சில அழகிய அனுபவங்கள் (beautiful experiences that have made the Indian Republic proud) பற்றி பேசியுள்ளார்..

குடியரசு தலைவர் முழு உரை : சுட்டி

பஞ்சாப் விவசாயிகள் உலகத் தரத்திற்கு ஈடாக பருத்தி விதை உற்பத்தியை இரட்டித்ததைக் கண்டு நான் அடைந்த பெருமிதத்தைச் சொல்லவா?

குஜராத் விவசாயிகள் அந்த மாநிலம் முழுவதும் எல்லா கிராமங்களிலும் மின்சாரம் வந்து விட்டதைக் கொண்டாடியதைச் சொல்லவா?

வடகிழக்கு மாநில கிராமம் ஒன்று தன் மண் சார்ந்த பட்டு உற்பத்தி மூலம் தன்னிறைவடைந்ததைச் சொல்லவா?

அல்லது நாட்டின் பல பகுதிகளில் நான் சந்தித்த மாமனிதர்களைப் பற்றிச் சொல்லவா?

புனித யாத்திரீகர்களின் ஒத்துழைப்பைக் கொண்டே மாசு படிந்த சிற்றாறு ஒன்றை தூய்மை செய்யும் இயத்தை வழிநடத்திய மகாத்மா ஒருவர்.

ஆந்திரம் மற்றும் தமிழக மக்களின் மனங்களைப் பாயும் நீர்ப் பெருக்கால் இணைத்த தெய்வீக ஆத்மா இன்னொருவர்.

ஆழிப்பேரலை பாதிக்கப் பட்ட கொச்சி அருகில், தீபகற்பப் பிரதேசத்தை பிரதான நிலப் பரப்புடன் இணைக்கும் பாலத்தைக் கட்டிய தெய்வீக ஆளுமை இன்னொருவர்.

அல்லது PURA மூலம் 1 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 65 தமிழக கிராமங்கள் பொருளாதாராத் தன்னிறைவு அடைந்ததைச் சொல்லவா?

ஜம்மு காஷ்மீர் பூகம்பத்தில் பாதிக்கப் பட்டவர்களில் தேவையானவர்களுக்கு, சரியான நேரத்தில் இழப்பீடு மற்றும் உதவித்தொகை கிடைப்பதில் மாநிலத்தின் நீதித்துறையின் பங்காற்றுதலைச் சொல்லவா?

நம் ஆயுதப் படைகளின் வீரதீரம் பற்றி சொல்லவா?

மேலே கூறிய பெருமித அனுபங்களில் பேசப் பட்டவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பஞ்சாப் ஆன்மீக குரு பல்பீர் சிங் சீச்வால், சத்ய சாயி பாபா, மாதா அமிர்தானந்த மயி ஆகியோர். ஊடகங்கள் இந்த உரை பற்றிய செய்திகளைத் தரும் போக்கிலோ, (அல்லது வேண்டுமென்றோ) சரியாக இந்த பெரும் மாமனிதர்களைச் சுட்டிக் காட்டாதிருந்திருக்கலாம்.

ஆனால், தன் உரையில் உறுதியான அரசியல் தலைமை, மனித நேயத்துடன் மாபெரும் சமூகப் பணி புரியும் இந்து ஆன்மிகத் தலைவர்கள் இவர்களை அடையாளம் கண்டு பாராட்டி விட்டார் நம் அன்புக்குரிய அப்துல் கலாம். இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் சக்திகள் எவை என்பதையும் தெளிவாக்கியிருக்கிறார்.

காதுள்ளவர் கேட்கக் கடவர். கண்ணுள்ளவர் பார்க்கக் கடவர்.

செய்தி மூலம் :

Friends, when we are celebrating the 58th Republic Day, I was thinking what thoughts I can share with you. Shall I talk to you on what message I got during my visits to various parts of our country and my interactions with the people particularly the youth with their dreams or

shall I talk to you about the proud feeling I had when the farmers in Punjab succeeded in doubling the seed cotton productivity in tune with the world record or

shall I talk to you how a village in north-eastern state has become prosperous by developing its core competence in native silk production or

*shall I talk to you about the elation of the Gujarat farmers celebrating the arrival of electricity to all the villages in the State* or

shall I talk to you about many great human beings whom I met in various parts of the country such as,

*one great soul providing the leadership for transforming a polluted rivulet into a clean river in Punjab through the efforts of pilgrims themselves, or

about another divine soul who has connected the hearts of people of Andhra Pradesh and Tamilnadu through the flow of water or

about another divine personality, building a bridge connecting the peninsular region to the mainland near Kochi over the backwaters of the Arabian Sea in the Tsunami affected area or

shall I talk to you on how 65 villages with a population of one lakh in Tamilnadu have generated a self-sustaining economy through PURA or

shall I talk to you about the way that the judicial system of the State became a partner for on the spot disbursal of compensation to the victims of an earthquake in J&K for ensuring timely compensation to the right persons, or

shall I talk to you about the bravery of our armed forces?

I have already shared with you about these and other beautiful experiences that have made the Indian Republic proud. Such beautiful events and people have been changing the fabric of the nation.

Wednesday, January 24, 2007

மதமாற்ற பிரசாரத்திற்கு எதிராக பெங்களூர் கிறித்தவர்கள்

இந்திய கிறித்தவர்கள் என்ற முறையில், ஏசு கிறிஸ்து வாழ்ந்து காட்டியதுபோன்று, பதிலுக்கு எதையும் எதிர்பாராமல் நமது அண்டை வீட்டார் மீது நிபந்தனையற்ற அன்பு செலுத்துவதே நமது விசுவாசத்திற்கு சாட்சியாக இருப்பதற்கான வழி என்று நாங்கள் நம்புகிறோம். எந்த ஒரு மதக்குழுவும் செய்யும் ஆக்கிரமிப்பு ரீதியான “மத வியாபார” உத்திகளை நாங்கள் எதிர்க்கிறோம். ஏனென்றால், இவை எல்லா சமயங்களுக்கும் மரியாதை அளிக்கும் பாரத நாட்டின் கலாசாரத்தை அவமதிக்கின்றன; “எந்த மதத்தையும் பின்பற்றலாம், பிரசாரம் செய்யலாம்” என்ற உரிமையை வழங்கும் அரசியல் சட்டத்தின் உண்மையான கோட்பாட்டிற்கு எதிராக இருக்கின்றன.

நாம் கிறிஸ்தவர்கள். நம்மில் சிலர் பிறக்கும் போதே கிறித்தவர்களாக இருந்தோம், வேறு சிலர் விருப்பப்பட்டு கிறித்தவத்தைத் தழுவினோம். புனிதர் மத்தேயுவின் சுவிசேஷ வசனம் (Great Commission in the Gospel according to Matthew) சந்தேகமின்றி பிறன் தனது நம்பிக்கைகளைப் பின்பற்றவும், உபதேசிக்கவும் உள்ள உரிமையை மீறாத படி, கிறித்துவை பன்முக அமைப்பில் காணவேண்டும் என்று தான் அறிவுறுத்துகிறது. கிறிஸ்துவின் சாட்சியம் எக்காலத்திலும் கேள்விக்குறிய முறைகளினாலோ, மக்களது சமூக, மனம் சார்ந்த குறைபாடுகளைப் பயன்படுத்தியோ அல்லது மற்ற சமயங்களை இழிவுபடுத்தியோ செயல்படுத்தப் படக் கூடாது.

மேலும், எல்லா தேசங்களிலும் விசுவாசிகளை உருவாக்குதல் (to make disciples of all nations) என்னும் கிறித்தவ உபதேசத்தை நற்செய்தி தருபவர்கள் சிறந்த வழியில் கடைப்பிடிப்பது என்பது கிறித்தவம் கூறும் உயர்வான ஒழுக்க நெறிகளைக் கடைப் பிடிப்பதும், பரந்த சமூக நலனுக்கு நன்மை தரும் வகையில் நமது நாட்டின் பன்முகத் தன்மையை மதித்து, அதற்கு உண்மையாக இருப்பதுமே ஆகும் என்று நாங்கள் நம்புகிறோம். வாழ்க்கையையே மாற்றும் இயல்புடைய நம்பிக்கை மாற்றம் என்பது ஒவ்வொருவரது சுய அனுபவம் மூலமே சாத்தியம். அதில்லாமல் இன்றைய காலகட்டத்தில் நடத்தப்படும் மதமாற்றங்கள் நாடகத் தனமான திடீர், உடனடி அதிர்வுகளாலேயே ஏற்படுத்தப் படுகின்றன.

1977-ல் இந்திய உயர்நீதிமன்றம் கூறிய தீர்ப்பில், ஒரு இந்தியக் குடிமகன் தனது மதத்தை “கடைப்பிடிக்கவும், உபதேசிக்கவும், பரப்பவும்” வழங்கப் பட்டுள்ள உரிமை மதம் மாற்றுவதற்கான உரிமை அல்ல என்று தெளிவாகக் கூறியுள்ளது. இது அரசியல் சட்டத்தையும், பண்பாட்டு நெறிமுறைகளையும் மேலும் உறுதிப் படுத்துகிறது.

இந்தியாவின் அனைத்தையும் அரவணைக்கும் கலாசாரமும், மதச்சார்பற்ற அரசியல் சட்டமும், தன் நாட்டுக் குடிமக்களை மட்டுமல்ல, இங்கு பயணிகளாக வருபர்களுக்கும் தங்கள் மதத்தைப் பின்பற்றும் சுதந்திரத்தை அளித்துள்ளது. ஆனால், இந்த உரிமைகளை உறுதி செய்யும் அரசியல் சட்டம் 25-வது பிரிவு, “சமூக ஒழுங்கு, நீதி நெறிகள் மற்றும் நல்வாழ்வு” இவற்றின் வரையறைக்கு உட்பட்டுத் தான் இந்த உரிமைகள் உள்ளன என்பதையும் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

ஆகையால், இந்திய அரசு மற்றும் எல்லா மதச்சார்பற்ற நாடுகளும் ஐ.நா. சபையின் மனித உரிமைத் தீர்மானத்தில் கூடுதலாக இங்கே கொடுக்கப் பட்டுள்ள (தடி எழுத்தில் உள்ள) இரண்டாம் வாக்கியத்தையும் இணைக்குமாறு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

“ஒவ்வொருவருக்கும் தனது சுயசிந்தனை, மனச்சாட்சியம் மற்றும் மதம் இவற்றுக்கான உரிமை உள்ளது; இந்த உரிமையில் தனது மதம் மற்றும் நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ளுதல் மற்றும் தனியாகவோ, குழுவாகவோ அல்லது பொதுவிலோ, தனியிடத்திலோ தனது சமயம் மற்றும் நம்பிக்கைகளை கற்பித்தல், உபதேசம், வழிபாடு இவற்றின் மூலமாக வெளிப்படுத்துதல் இவையும் அடங்கும். ஆனால், எந்தவொரு தனிமனிதனோ, நிறுவனமோ வயது வராதவர்கள் (minors) மற்றும் மனவளர்ச்சி குறைந்தவர்கள் உள்ளிட்ட வேறு தனிமனிதர்களையோ அல்லது குழுக்களையோ, அதிகாரபூர்வமாகவோ அல்லது அதிகாரபூர்வமற்றோ – பணம் மற்றும் பொருள் சலுகைகள் அளித்தல் , உடல், மன அல்லது உணர்வு ரீதியாக நிர்ப்பந்தப் படுத்துதல், மிரட்டல் மற்றும் பயமுறுத்தல் இத்தகைய வழிமுறைகள் மூலமாக – ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாற்றக் கூடாது.”

எல்லா விதமான மதத் தலைவர்கள் மற்றும் மத அடிப்படைவாதிகளின் மதமாற்ற முயற்சிகளையும் நாங்கள் கண்டிக்கிறோம். இந்திய கலாசாரத்தின் உயர்ந்த மரபுகளின் படி பலவித மத நம்பிக்கைகளுக்கும் இடையில் நல்லெண்ணத்தை உருவாக்குவதற்கு உழைப்போம் என்று உறுதி கூறுகிறோம். ஒரு முன்னேறும் ஜனநாயக நாட்டின் செயல்பாட்டிற்குத் தேவையான எல்லா உரிமைகளையும் வழங்கும் அரசியல் சட்டம், மதசார்பின்மை மற்றும் எல்லா மதங்களையும் ஏற்றுக் கொள்ளும் தன்மை - இவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்ட இந்திய நாட்டின் பன்முகத் தன்மையைப் பேணிப் பாதுகாக்க முயலும் எங்கள் முயற்சிகளில் இணையுமாறு எல்லா இந்தியர்களையும் அழைக்கிறோம்.

இங்ஙனம்,

பி.என். பெஞ்சமின் மற்றும் கையொப்பமிட்டவர்கள்


P.N.Benjamin

"CHRISTIANS AGAINST PROSELYTISM"
A CAMPAIGN DECLARATION FROM
BANGALORE INITIATIVE FOR RELIGIOUS DIALOGUE (BIRD)
7A, 3rd Cross, Da Costa Square, Bangalore 560 084, INDIA

January 1, 2007

BIRD அமைப்பின் இந்த ஆங்கில அறிக்கையின் தமிழ் மொழியாக்கத்தை திரு. பி. என். பெஞ்சமின் அவர்களின் அனுமதியோடு எனது வலைப் பதிவில் வெளியிடுகிறேன். இந்த அறிக்கையில் ஏற்கனவே 500 கிறித்தவர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்றும் திரு. பெஞ்சமின் தெரிவிக்கிறார்.

இந்திய தேசியத்தை வலிமையுறச் செய்யும் திரு.பெஞ்சமின் மற்றும் அவரது இயக்கத்தின் முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

இந்த நன்முயற்சியில் இணைய விரும்புவோர் திரு. பெஞ்சமின் அவர்களை benjaminpn@hotmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

BIRD இயக்கத்தின் வலைப் பதிவுகள்:

http://birdbenjamin.blogspot.com/
http://pnbenjamin.blogspot.com/
http://benjaminpn.blogspot.com/

பெரியாருக்கு ஒரு கவிதாஞ்சலி

திண்ணையில் பல அருமையான கட்டுரைகளை எழுதிவரும் நண்பர் திரு. அருணகிரி தான் இயற்றிய இந்தக் கவிதையை மின் அஞ்சலில் அனுப்பியிருந்தார்.

காதைப்பிளக்கும் பெரியார் பஜனைகளுக்கு நடுவில், சந்தம் தளைதட்டாமல் கருத்துக்கள் களைகட்டும் ஒரு நல்ல மரபுக் கவிதை. Hats off அருணகிரி!

இந்த அருமையான கவிதையை அவர் அனுமதியுடன் இங்கு வெளியிடுகிறேன்.

ஈ.வெ.ரா பெரியார் - இவரா பெரியார்?

பெரியார் யாரெனத் தெரியா மூடர்
சிறுமை தம்முள் அதிகம் கொண்டவர்
ஒருவர் தம்மைத் தேர்ந்து எடுத்து
பெரியார் என்றொரு பெயரும் வைத்தார்.

அறியார் அறவழி தெரியார் அடிமை
வெறியார்வத்தால் வேற்றவனுக்கு
விரிவாய்ப் பலவாய்ச் சேவகம் செய்து
இழிவாய் வாழ்ந்தார் இவரா பெரியார்?

அடிமை செய்த வெள்ளையன் அவனின்
கொடுமைத் தளையைக் கொன்றிடும் நாளில்
மிடிமை கொண்டெமை மீண்டும் ஆளெனக்
கடிதம் போட்டார் இவரா பெரியார்?

செந்தமிழ் மொழியின் சிறப்பறியார், பல
குந்தகம் சொன்னார்; கொள்ளையன் வந்து
தந்த அம்மொழியே தனிச்சிறப் பென்றார்
இன்தமிழ் இகழ்ந்தார் இவரா பெரியார்?

கீழ்மைச் சிந்தனை யாளர் சீழ்மனப்
பான்மை கொண்டு ஆபாசப் பேச்சில்
தாழ்மைக் கோஷம் போட்டார் சொல்லின்
நேர்மையற்றார் இவரா பெரியார்?

உள்ளம் தன்னில் உயர்நெறி இல்லார்
சொல்லும் சொல்லின் சுத்தம் அறியார்
தள்ளும் வயதில் மகளெனத் தக்க
பிள்ளை மணந்தார் இவரா பெரியார்?

மண்ணின் உடலை மதத்தால் வெட்டி
பின்னப் படுத்திய எதிரியைப் போல
இன்னும் இதனை இரண்டாய் வெட்டச்
சொன்னார் சிறியார் இவரா பெரியார்?

நாய்ப்பால் குடித்த நரிக்குக் கூட
நன்றி என்றொரு ஞாபக மிருக்கும்
வாய்ப்பால் வெள்ளையன் வாலைத் தூக்கி
நோய்ப்பால் குடித்தவர் இவரா பெரியார்?

வீட்டின் விளக்கை விலைமகள் என்று
ரோட்டில் செல்கையில் கேவலம் செய்யக்
கூட்டம் சேர்த்துக் குறுமதி சேர்த்துக்
காட்டிக் கொடுத்தார் இவரா பெரியார்?

அறிவின் விரிவில் அடக்கம் காட்டி
எளியார் மீதும் இரக்கம் காட்டி
கருமித்தனமும் காழ்ப்பும் நீங்கிய
தருமர் எவரோ அவரே பெரியார்!

Monday, January 22, 2007

பெங்களூர் இந்து சமூக விழா காட்சிகள்

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இரண்டாவது தலைவர் குருஜி கோல்வல்கர் நூற்றாண்டு விழாவினையொட்டி இந்து இயக்கங்கள் நாடு முழுவதும் இந்து சமுதாயத்தை ஒன்றிணைக்கும், தேசபக்தியை வளர்க்கும் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.அல்சூர் இந்து சமூக விழாவில் தமிழ் பேனர்கள்


இதன் பகுதியாக 21-ஜனவரி ஞாயிறு அன்று மாலை பெங்களூரில் 3 இடங்களில் பிரம்மாண்டமான "விராட இந்து சமாஜோத்சவ" நிகழ்ச்சிகள் நடந்தேறின.
கடந்த இரண்டு வாரங்களாகவே பெங்களூரின் பல பகுதிகளைக் காவிக் கடலில் மூழ்கடித்திருந்தன இந்து இயக்கங்கள்.

அல்சூர் ஹொய்சள நகர் நிகழ்ச்சியில் சுமார் 10,000 பேர் கலந்து கொண்டனர். சங்கத்தின் முக்கிய பேச்சாளர் திரு. பிரபாகர் இந்துப் பண்பாட்டின் அடிப்படையில் இழையோடும் சமூக சமரசம் பற்றி கன்னடத்தில் மிக அருமையாகப் பேசினார்.திருவள்ளுவர், அம்பேத்கர், பசவேஸ்வரர், விவேகானந்தர், நாராயண குரு, கனக தாசர் திருவுருவங்கள் அணி செய்யும் பொதுக்கூட்ட மேடை


இது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் இந்து முன்னணி தலைவர் திரு.ராமகோபாலன் தமிழில் சமூக நல்லிணக்கம் மற்றும் கிறித்துவ மதமாற்றங்களின் தீமைகள் பற்றி அருமையாகப் பேசினார். திருமதி சத்தியவாணி தெலுங்கிலும் பேச, நிகழ்ச்சி நிறைவடைந்தது.கூட்டத்தினரின் ஒரு பகுதி
அல்சூர் ஊர்வலத்தின் ஒரு பகுதி

Saturday, January 20, 2007

திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு: ஒரு தமிழ்க் கருவூலம்

திருக்குறள் சம்பந்தமாகப் பெரிய வேலை ஏதாவது செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது; என்ன செய்யலாம்?” என்று கேட்டார். “மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் (உ.வே.சா) திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தார்கள். திருக்குறளுக்குக் கிடைக்கும் பழைய உரைகளையெல்லாம் தொகுத்து ஒவ்வொரு குறளின் பின்னும் அமைத்து, இலக்கண, இலக்கிய உரைகளில் குறளை மேற்கோளாகக் காட்டும் இடங்களை அங்கங்கே காட்டி, தொல்காப்பியம் முதல் இக்கால இலக்கியம் வரை குறளில் சொற்பொருள்களை எடுத்தாண்ட ஒப்புமைப் பகுதிகளையும் இணைத்து, வேண்டிய அடிக்குறிப்புகளும், அகராதிகளும், ஆராய்ச்சியுரையும் சேர்த்து வெளியிட வேண்டும் என்பது அவர்களுடைய எண்ணம். அந்த எண்ணம் அவர்கள் காலத்தில் நிறைவேறவில்லை. அதைச் செய்யலாம்” என்றேன்.

1950 வாக்கில் நடந்த இந்த உரையாடலில் கேள்வி தொடுத்தவர் அமரர் தி.சு.அவிநாசிலிங்கம். பதிலிறுத்தவர் உ.வே.சாவின் சிறந்த மாணாக்கரான அமரர் கி.வா.ஜகந்நாதன். இதன் உந்துதலால், இந்திய அரசின் ஆதரவுடன் 1950-ல் தொடங்கிய இந்த ஆராய்ச்சி கி.வா.ஜ அவர்களின் இடையறாத உழைப்பினால் 1963-ல் முடிவுற்றது. கி.வா.ஜ அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 1963-ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி திரு. ராதகிருஷ்ணன் அவர்களால் “திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு” முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஒரு அற்புதக் கருவூலமான இந்த நூல், தமிழ் கூறும் நல்லுலகத்தின் நற்பேற்றினால் 2004-ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக வெளிவந்திருக்கிறது. 2006-ம் ஆண்டு இறுதியில் தற்செயலாக இதன் ஒரு பிரதியை எனது நற்பேற்றினால் நான் வாங்க நேர்ந்தது. அள்ளுதொறும் தமிழ்ச் சுவை நல்கும் இன்னூல் வாழ்நாள் முழுதும் படித்து இன்புறத் தக்கது என்று உணர்கிறேன்.

தமிழின் ஒப்புயர்வற்ற நூல்களில் தலையாயது தெய்வப் புலவர் இயற்றிய திருக்குறள். அந்தக் குறள் என்னும் ஆழ்கடலில் மூழ்கித் திளைக்க விரும்புவோர் அனைவருக்கும் பேருதவி புரியும் நூல் இது. 1133 பக்கங்கள் உள்ள பெரிய அளவு (அட்லாஸ் போல) புத்தகம்.


ஒவ்வொரு குறளுக்கும்,

• திருக்குறள் மூலம்

• பரிமேலழகர் உரை (முழுமையாக)

• உரை வேறுபாடு : மணக்குடவர், பரிதியார், பரிப் பெருமாள், காளிங்கர், கவிராஜபண்டிதர், எல்லிஸ் துரை இவர்களது உரைகள் பரிமேலழகர் உரையுடன் வேறுபடும் இடங்கள்

• ஒப்புமை: குறளின் சொல், பொருளை எடுத்தாளும் பிற இலக்கியங்கள். இதில் இறையனார் அகப்பொருள் உரை, தண்டியலங்காரம், நேமிநாதம், கல்லாடம் திருவாய்மொழி, தேவாரம், கம்பராமாயணம் உள்ளிட்ட ஏறக் குறைய 100 நூல்களிலிருந்து மேற்கோள்கள் தரப் படுகின்றன

• அடிக்குறிப்புக்கள்

பொதுப் பகுதிகளாக,

• திருவள்ளுவ மாலை, உரையுடன்

• திருக்குறள் சொல் அகராதி, பொருள் அகராதி, பொது அகராதி (200 பக்கங்கள்)

• நூலின் தொடக்கத்தில் குறளின் பல்வேறு வகைப் பட்ட தன்மைகளையும், சிறப்புக்களையும் விளக்கும் பதிப்பாசிரியர் கி.வா.ஜவின் மணியான, விரிவான முன்னுரை (104 பக்கங்கள்)

• பல அறிஞர்களின் அருமையான கட்டுரைகள்: திரு. அ.ச. ஞானசம்பந்தனின் “திருக்குறளில் கவிதைப் பண்பு”, இலங்கை பேராசிரியர் க.ச.அருள்நந்தியின் “வள்ளுவரின் உளநூல்”, டாக்டர் டி.எம்.பி. மகாதேவனின் “திருக்குறளின் தத்துவம்”, டாக்டர் மா.இராசமாணிக்கனாரின் “திருவள்ளுவர் காலம்”

• டாக்டர் அவ்வை நடராசன், டாக்டர் பொன். கோதண்டராமன், சுவாமி கமலாத்மானந்தர் ஆகியோரது அணிந்துரைகள்

விலை மதிப்பற்ற இந்தப் பதிப்பை மிகக் குறைந்த விலையான ரூ. 400க்கு வெளியிட்டிருப்பவர்கள் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், பெரிய நாயக்கன் பாளையம், கோயம்புத்தூர் – 641020. ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் கிளைகளிலும், விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் என்பதாக அறிகிறேன். தேசிய, ஆன்மிக எழுச்சியூட்டும் சமூகப் பணிகளோடு இத்தகைய தமிழ்த் தொண்டும் புரியும் ஸ்ரீராமகிருஷ்ண மடம் பாராட்டுக்குரியது.

எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால் – சொல்லால்
பரந்த பாவால் என் பயன்? வள்ளுவனார்
சுரந்த பா வையத் துணை

- திருவள்ளுவ மாலை (மதுரைத் தமிழ் நாகனார் பாடியது)

Monday, January 15, 2007

உலகத் திருநாள் பொங்கல்: சில சிந்தனைகள்

மகர சங்க்ராந்தி என்ற பெயரில் பாரத நாடு முழுதும் கொண்டாடும் திருநாள் பொங்கல். பருவ மாற்றத்தை சூரியதேவனின் வடக்கு முகப் பயணபாக உருவகித்த நம் முன்னோர் இந்த இயற்கைத் திருவிழாவைப் பெரும் களிப்புடன் கொண்டாடும் மரபை உருவாக்கினர். தமிழகமும், ஆந்திரமும், கர்நாடகமும் அறுவடைத் திருநாள் கொண்டாடும் இதே நாளில் தான் பஞ்சாபிய உழவர்களும் "லோஹ்ரி" என்ற தங்கள் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். வட மாநிலங்கள் முழுவதும் மக்கள் நதிகளில் நீராடி ஞாயிறு போற்றுவதைப் பார்க்கலாம். உலகம் முழுதும் வாழ்ந்த பாகன் (pagan) மதங்கள் ஒரு காலத்தில் கொண்டாடி வந்த சூரியத் திருநாளின் மரபுகளோடு இயைவதால் உலகின் ஆதித் திருநாளாகவும் ஆகிறது.

தமிழகத்தில் வெல்லம், பால், புத்தரிசி என்றால் மகாராஷ்டிரத்தில் எள்ளும், வெல்லமும் (Til-Gul), கர்னாடகத்தில் எள்ளு, பெல்லா. எல்லா இடங்களிலும் கரும்பு உண்டு. எல்லாமே இனிப்பானவை தான். இப்படிப் பலவிதமான கொண்டாடும் முறைகள் வானவில் திருவிழாவாக இதைக் கொண்டாடினாலும் பண்டிகையின் கருப் பொருள் ஒன்றே தான்.

கதிரோனின் கவின் ஒளி கண்டு
கண் கூசி நின்றிடவில்லை
காயத்ரி மந்திரம் சொல்லிற்று நம் வேதம்.

காவிரி நாடனின் திகிரியைக்
கதிரோனின் பரிதிச் சக்கரமாகக் கண்டு
ஞாயிறு போற்றிற்று நம் காவியம்.

பெற்று வளர்த்த பூமித் தாயை
நிலமென்னும் நல்லாள் என்று
போற்றி வணங்கியது நம் தெய்வீக மரபு.

இயற்கையின் வர்ண ஜாலங்களில் எல்லாம்
இறைமையை உணர்த்திற்று
நம் சமயம், கலாசாரம்.பிரபஞ்சம் முழுவதும், இயற்கை முழுவதும் வியாபித்திருக்கும் சக்தியை வியந்து போற்றி அதன் உணர்வில் ஒன்று படுதல் என்பது தான் பொங்கல் பண்டிகையின் கருப் பொருள் . அதன் தத்துவ, கலாசாரப் பின்னணி இந்து ஆன்மிக, ஞான, பக்தி மரபில் தான் உள்ளது.

சகோதரர் திரு. ஜோ கத்தோலிக்கர்கள் பொங்கல் கொண்டாடுவதைப் பற்றி எழுதியிருக்கிறார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. .. தான் பொங்கல் கொண்டாடுவது சாத்தானின் தூண்டுதலால் என்று கிறித்தவ இறையியலை யாராவது முன் நிறுத்தினால் இல்ல இல்ல அது இந்துப் பண்டிகையே இல்லங்க என்று சொல்லிக் குழப்பலாம் என்றோ என்னவோ பொங்கல் இந்துப் பண்டிகையே அல்ல என்று அந்தப் பதிவில் ஜல்லி யடிக்கிறார். மதம் வேறு, கலாசாரம் வேறு என்று அவர் கூறுவதை முழுமையாக ஒப்புக் கொள்ள முடியாது. இரண்டுக்கும் நடுவில் உள்ள எல்லை மிகவும் நெகிழ்ச்சித் தன்மை உடையது. மதம் மாறிவிட்டாலும், அவரது கிறித்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கலாசாரக் கூறுகளை விடாமல் கடைப் பிடிப்பது மிகவும் பாரட்டுக்குரிய விஷயம். இந்திய தேசியத்தை வலுப்படுத்தும் இந்த கலாசாரப் போக்கு வரவேற்கத் தக்கது.

இந்து பண்டிகை என்பதற்காக அல்ல "தமிழர் திருநாள்" என்பதற்காக பொங்கல் கொண்டாட வேண்டும் என்று ஒரு கருத்து போகிறது. வங்காளத்தில் உள்ள இந்துக்கள் அல்லாதவர்களும் துர்கா பூஜாவை இதே போல் கொண்டாடுகின்றனர், மகாராஷ்டிர விநாயக சதிர்த்தி, ஆந்திர உகாதியும் இப்படியே.. பல மாநிலங்களில் தீபாவளி, ஹோலி, தசராவையும் அந்த மண்ணின் திருவிழாக்கள் என்று அங்கங்கே உள்ள இந்துக்கள் அல்லாதவர்களும் கொண்டாடுகின்றனர்.. எனவே, இது பொங்கல் பண்டிகைக்கு மட்டும் உரியதான தனித்தன்மை அல்ல. அப்படியானால் இவை எதுவுமே இந்துப் பண்டிகைகள் அல்ல என்று ஆகி விடுமா? கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சகோதரர் திரு. நல்லடியார் எழுதியிருப்பது இதற்கு நேர்மாறானது. மிக இறுக்கமான, வெறித்தனமான சில இஸ்லாமியக் கருத்துக்களை முன்வைத்து ஏன் முஸ்லீம்கள் பொங்கல் கொண்டாடக் கூடாது என்று ரொம்ப மெனக்கெட்டு வாதிடுகிறார். இதே சிந்தனைப் போக்கில் போனால் முஸ்லீம்கள் ஏன் திருக்குறள் படிக்கக் கூடாது, ஏன் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடக் கூடாது, ஏன் "சத்யமேவ ஜயதே" என்று பொறித்த இந்திய தேசியச் சின்னத்தை மதிக்கக் கூடாது (எனது பழைய வந்தே மாதரம் பதிவில் இவை பற்றி விரிவாக) என்றெல்லாம் மிக எளிதாக கருத்துக்கள் எடுத்து வைக்கலாம். முஸ்லீம்கள் மத்தியில் இத்தகைய போக்கு பரவுவது மிகவும் கவலைக்குரியது. கண்டிக்கப் பட வேண்டியது.

இந்துக் கலையான யோகா இன்று உலகம் முழுவதும் அதன் பயன்களுக்காகப் பலராலும் பயிலப் படுகிறது. இந்து மருத்துவமான ஆயுர்வேதமும் அப்படியே. இத்தாலிய/அமெரிக்க உணவான பிட்சாவை சாப்பிட்டு நான் இத்தாலியனாகவோ/அமெரிக்கனாகவோ, சீன நூடுல்சை சாப்பிட்டு சீனனாகவோ ஆகிவிட மாட்டேன். அது போலத் தான் இதுவும். ஆனால், நான் பாதுகாப்பாக உணர்வதற்காக அது சீன உணவே அல்ல என்று சொன்னால் எப்படிருக்கும்?? அது போலத் தான் பொங்கல் இந்துப் பண்டிகை அல்ல என்ற வாதங்கள்!

பொங்கல் இந்துப் பண்டிகை தான். அதனை அப்படி அழைத்தே கிறித்தவர்கள் கொண்டாடினால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது.

"இந்து" என்ற சொல்லோடு தொடர்புடைய எந்த உயர்வான விஷயமும் இருக்க முடியாது, அது மோசமானது என்று பிரிட்டிஷ் காலனிய காலங்களிலிருந்து பரப்பப் பட்டு வரும் துவேஷப் பிரசாரம் தான் இதன் பின்னணியில் உள்ளது. இந்து மதத்தின் மேலான, அற்புதமான விஷயங்களையெல்லாம் (யோகா, பாரம்பரிய இசை, பரதம் முதலான நடனங்கள், சிற்பம், இலக்கியம்) தனித்தனியாகப் பிய்த்து இவற்றையெல்லாம் அனாதையாக்கி சிறு சிறு குழுக் கலாசாரம் என்று அடையாளப் படுத்துவது.. அதே சமயம் சாதி வேறுபாடுகள், மூட நம்பிக்கைகள், பிற்போக்குத் தனம் எல்லாவற்றையும் மூட்டை கட்டி இது தான் இந்து மதம் என்று முத்திரை குத்தித் திட்டிக் கொண்டிருப்பது! இந்தப் பிரசாரத்தினால் மூளைச் சலவை செய்யப் பட்ட மன நிலையின் வெளிப்பாடு தான் "பொங்கல் இந்துப் பண்டிகை அல்ல" என்பது..

பொங்கல் தமிழர் திருநாளாம். அதாவது இந்தியாவில், தென்கோடியில் வேறு எதோடும் சம்பந்தமில்லாமல் தமிழர் என்று ஒரு கூட்டம் மட்டும் அதைக் கொண்டாடுமாம்.. பக்கத்து மாநிலங்கள் கூட அதைக் கொண்டாடுவதில்லையாம் ! அது வேறு பண்டிகை சங்கராந்தியாம்.

ஆனால், கிறிஸ்துமஸ் ? அது உலகத் திருநாள்! ரம்ஜான்? அதுவும் உலகத் திருநாள் (மலேசியாவில் ஹரி ராய பூஸா என்ற பெயரில் அது கொண்டாடப் பட்டால் கூட!!) இந்து மதத்தின் கூறுகளைத் தனிமைப் படுத்தி அவற்றுக்கு சின்னத் தனம் தரும் அரசியல் இது என்பது தெளிவாகப் புரிகிறதல்லவா? இந்து மதம் உலக மதம். இந்துப் பண்டிகைகள் உலகப் பண்டிகைகளே.

உலகம் முழுதும் சுற்றி இந்து தர்மத்தின் ஆன்மீக ஒளியை சுடர்விடச் செய்த ஞான சூரியன் சுவாமி விவேகானந்தர் பிறந்ததும் பொங்கல் திருநாள் அன்று தான். என்ன பொருத்தம்!

"செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியே
எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக!"

மங்கலம் நல்கும் இம்மறைமொழி கொண்டு
எங்கள் உலகோர் பொங்கிடும் பொங்கல்!

உங்கள் வீட்டிலும், எங்கள் வீட்டிலும்
பொங்குக பொங்கல்! தங்குக செல்வம்!

வறுமை ஒழிக, வான்மழை பொழிக !
பொறுமைக் குணத்தைப் புவியோர் போற்றுக!

உழவும் தொழிலும் ஓங்கி வளர்க !
கழுகுக் கரசன் கனிவுடன் வாழ்த்து.

அனைவருக்கும் இனிய உலகத் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்!