முன்னுக்குப் பின் முரணாக மட்டும் அல்ல, மூளையோடு தான் பேசுகிறாரா என்று எப்போதும் ஒரு ஐயம் இழையோடிக் கொண்டிருக்க்குமாறு பேசுவதையே ஒரு கலையாகக் கற்றிருக்கின்ற தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ராமசேது திட்டத்தின் பெயரால் தானும், டி.ஆர். பாலுவும், தங்கள் குடும்பங்களும் அடிக்க நினைத்திருக்கும் பெரும் கொள்ளை எங்கே பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் குளிர்ஜுரம் வந்து உளறிக் கொண்டிருக்கிறார்!
முதலில் ராமன் எந்தக் காலேஜில் இஞ்ஜினீயரிங் படித்து பாலம் கட்டினான்? என்று பிதற்றல். அடுத்தது "ராமன் என்பது பொய். நான் எழுதற நாவல்ல வர கேரக்டர் மாறி அவரும் ஒரு கேரக்டர்" என்ற உளறல். அடுத்தது "ராமன் குடிகாரன் என்று வால்மீகி ராமாயணத்திலேயே இருக்கிறது.. ராமாயணத்தைப் படைத்த வால்மீகி சொன்னதை விட நான் தவறாக எதையும் சொல்லி விடவில்லை" என்று இன்னொரு அபத்தப் பேச்சு. இதில் விவாதம் செய்யத் தயாரா என்று அத்வானியிடம் ஒரு சவடால் வேறு.
"இல்லவே இல்லாத ராமனை"ப் பற்றி உனக்கென்னய்யா இவ்வளவு அக்கறை?
தனக்கு வாக்களித்து தன்னைத் தேர்ந்தெடுத்து இருக்கும், கடவுள் நம்பிக்கையுள்ள கோடிக்கணக்கான இந்துக்களை மடையர்கள் என்று இதன் மூலம் அழைத்திருக்கிறார் கருணாநிதி. ஏனென்றால் ஸ்ரீராமனையும், ராமாயணத்தையும் கேலிசெய்து, அவமதித்து, இப்படி அறிக்கைகள் விடுவதற்கு வேறு முகாந்திரமே இல்லை - "ராமசேது என்பது பாதுகாக்கப் பட வேண்டிய தேசிய, கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை/செயற்கை அமைப்பா" என்பது மட்டும் தான் கேள்வி.. "ராமசேது திட்டம்" பற்றிய வழக்கில் அனாவசியாக ராமாயணம் என்ற இதிகாசத்தையும், அகழ்வாராய்ச்சியையும் குழப்பி காங்கிரஸ் கூட்டணி அரசு அளித்த அபத்த அறிக்கையும், அதற்கு எழுந்த நாடு தழுவிய உறுதியான எதிர்ப்பு அலையும், காங்கிரசின் மழுப்பல், பின்வாங்கல், மன்னிப்பு, இதற்கு யார் தலையை வாங்கலாம் என்ற கணிப்புகளும் இன்னும் முடிந்த பாடில்லை. இன்னும் 3 மாதத்திற்கு சேது சமுத்திர திட்ட செயல்பாட்டில் கைவைக்காமல் இதை மறுபரிசீலனை செய்வோம் என்று அரசு உச்சநீதி மன்றத்திலேயே வாக்களித்தும் ஆகி விட்டது.
இந்த சூழலில், இந்த முழுப் பிரசினையிலும், மகா கோமாளிகளாகவும், பைத்தியக் காரர்களாகவும் கருணாநிதியும், அவரது அரசும், கட்சியும் வெளிவந்திருக்கின்றன. காங்கிரஸ் கட்சி "ஏன் இந்த சனியன் நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கிறான்" என்று சொல்லாத குறையாக நாளுக்கு நாள் இவரது ராம தூஷணைகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறன..
ராமன் ஒன்றும் கிருஷ்ணன் அல்ல,
சிசுபாலனின் நூறு தூஷணைகளையும் சிரித்துக் கொண்டே கேட்டுவிட்டு கடைசியில் சக்ராயுதத்தை எடுப்பதற்கு. ஆனானப் பட்ட சமுத்திரராஜனுக்கே மூன்று நாள் கெடு, அதற்குப் பிறகு ராம பாணம் தான்.
"ராமன் குடிகாரன்" என்று இவர் காலையில் சொல்கிறார்.. மாலையில் தொலைக்காட்சியில் அமைச்சர் பொன்முடி "ராமன் சோமபானம் அருந்தியதாக வால்மீகி ராமாயணத்தில் வருகிறது.. அதனால் குடிகாரன்" என்கிறார்.
"சோமம்" என்பது வேதகாலத்தில் அறியப்பட்ட ஒரு அற்புத மூலிகை, அதன் சாறு தான் சோம்பானம், வேள்விகளில் இது சம்பிரதாயமாக அருந்தப் பட்டது , மேலும் "சோமம்" என்பதே தெய்வ சக்திக்கான ஒரு குறியீடு என்பதான விவரங்கள் நன்கறியப் பட்டவை என்பதைக் கூடத் தெரிந்துகொள்ளாத அரைகுறைகள்தான் இந்த திராவிட இயக்க அல்லக்கைகள். "தேவர்களே, சோமத்தை அருந்துவீர், எம்மைக் காப்பீர்" என்ற பாரதியின் வசன கவிதை வரிகள் சொல்ல வருவதும் இக்கருத்தையே. "சுராபானம்", "மது" "ஆஸவம்" இவையே மது மற்றும் கள்ளுக்கான பெயர்கள்.
இந்த கேள்வி எழுந்துவிட்டதால் ராமாயணத்தில் மது பற்றி வரும் குறிப்புகளை சுருக்கமாக பார்ப்போம் -
1) ராவணனும், அவன் மனைவியரும் மத்யபானம் செய்து அதன் வாசனையுடன் உறங்குவதை அனுமன் காண்பது பற்றி சுந்தரகாண்டத்தில் வருகிறது. சாமவேத விற்பன்னனும், புலஸ்தியரின் மகனுமான பிராமணன் ராவணன் போகத்திற்காக மதுபானம் செய்தான் என்று கூறும் வால்மீகி இதை *பாவம்* என்று சொல்லவில்லை.
2) வானரர்கள் மது அருந்தியது பற்றி பல இடங்களில் உள்ளது.. குறிப்பாக சுக்ரீவன் மிதமிஞ்சிக் குடித்திருந்ததும், லக்ஷ்மணன் தேடி வந்த சமயத்தில்நினைவயர்ந்து கிடந்ததும், தாரையை அனுப்பி வைத்து, அதன் பின்னால் வந்துலக்ஷ்மணனுடன் உரையாடியதுமான குறிப்புகளும், 'என் தம்பிக்கு என்னைப் போலவேகுடிப்பழக்கம் உண்டு' என்று வாலி சொல்லும்போதும் இது வெளிப்படுகிறது.
கம்பன் இந்தக் காட்சியை வைத்து கள்ளுண்ணாமை என்ற நற்பண்பை போதிக்கின்றான் -
'ஐய! நான் அஞ்சினேன், இந் நறவினின் அரிய கேடு;
கையினால் அன்றியேயும் கருதுதல் கருமம் அன்றால்;
வெய்யது ஆம் மதுவை இன்னம் விரும்பினேன் என்னின், வீரன்
செய்ய தாமரைகள் அன்ன சேவடி சிதைக்க' என்றான்.
என்று சுக்ரீவனை மனம் வருந்திச் சொல்லச் செய்கிறான். 'கையினால் தொடுவதுமட்டுமில்லை; மனத்தினால் நினைக்கவும் மாட்டேன். அப்படி மதுவை விரும்பினேனானால், இராமபிரானுடைய திருவடித் தாமரை என்னைச் சிதைக்கட்டும்'என்று சூளுரைக்கிறான்.
3) அயோத்யா காண்டத்தில் (சர்க்கம் 55, சுலோகம் 20) யமுனையைக் கடக்கும்போது சீதாதேவி "நூறு கள்குடங்களை உனக்கு காணிக்கையாகத் தருகிறேன், என் குடும்பத்தையும், உறவினர்களையும் காப்பாற்று" என்று யமுனா நதியை வேண்டிக் கொள்வதாக வருகிறது - இன்றும் கூட ஒரு கருப்பாயியும், ராக்காயியும் தங்கள் வழிபடு தெய்வமான பல கிராம தேவதைகளுக்கு கள் நிவேதனம் செய்யும் தொல்குடிப் பழக்கத்தின் ஆதி வடிவம் ராமாயணத்திலேயே இருப்பதற்கான ஆதாரம் தான் இது.
4) சுந்தரகாண்டத்தில், "ராமன் தேவியைப் பிரிந்ததில் இருந்து சாறையும் அருந்துவதில்லை, கதுப்பையும் உண்பதில்லை" என்று வருகிறது. இதில் சாறு, கதுப்பு என்பவை மது, மாமிசம் என்பதாக சில உரையாசிரியர்கள் கருதுகிறார்கள். இருக்கலாம் - க்ஷத்திரியர்கள் இந்த உணவுப் பழக்கம் கொண்டிருந்தது இதிகாசங்களில் வேறு பல இடங்களிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால் இதுவும் ராமனைக் குடிகாரன் ஆக்காது, தன் குல வழக்கத்திற்கேற்ற உணவுப் பழக்கத்தைக் கைக்கொண்ட, தர்மத்திலிருந்து சிறிதும் வழுவாத தரும நாயகன் என்றே நிலைநிறுத்தும் - வால்மீகி என்ற மாமுனிவன் எல்லா இடங்களில் ஸ்ரீராமனை நற்குணக் கடல் என்பதாகவே வர்ணித்திருக்கிறான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
ஆயிற்றா? இன்னும் என்ன விவாதம் செய்யப் போகிறார் கருணாநிதி, அத்வானியுடன்? இப்படி போன தலைமுறை திராவிடப் பைத்தியங்கள் எழுதிவைத்த "கீமாயணம்" குப்பையைக் கிளறி அதில் இருக்கும் ஒவ்வொரு சாக்கடை வாந்தியையும் எடுத்து பரிமாறப் போகிறாரா? இன்றைய தமிழ் மக்கள் அந்த அளவுக்கு முட்டாள்களும், ஏமாளிகளும், வேலையத்தவர்களும் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளட்டும்.
இன்னொரு நியாயமான கேள்வி.. (தலைப்புக்கு வரணுமில்லையா?)
ஒரு கோப்பை ஒயினையே பலமடங்காக்கி கூட்டத்தில் வந்திருந்தவர்கள் எல்லாருக்கும் ஏசு கொடுத்ததாக பைபிள் கதை உள்ளதே? அந்த மரபின் நீட்சியாக இன்றும் கிறித்தவப் பாதிரிகள் சம்பிரதாயமாக ஒயின் பிரசாத விநியோகம் செய்கிறார்களே? "ஏசு குடிகாரரன் மட்டுமல்ல, குடிப்பழக்கத்தை பிரசாரம் செய்தவன்" என்று பகுத்தறிவுப் பாசறையில் வந்த கருணாநிதி கூறுவாரா?
ராமாயணம், மகாபாரதத்தில் வரும் மது தொடர்பான குறிப்புகளே போன்று தான், ஏன் இன்னும் அதிகமாகவே சங்க இலக்கியங்கள் முழுவதும் கள்ளும், மதுவும், தேறலும், நறவமும், பிழிசலும் பெருக்கெடுத்து ஓடுகின்றன.
"ஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப, மகிழ்சிறந்து.. " - புறநானூறு (24)
தங்கக் கிண்ணத்தில் மங்கையர் கள் ஊற்ற அருந்திய வீரத்தமிழ் மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியன் குடிகாரன் என்று கருணாநிதி கூறுவாரா?
தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ,
ஊண்முறை ஈத்தல் அன்றியும் ,
கோண்முறைவிருந்திறை நல்கி யோனே - புறநானூறு (392)
"தேள் கொட்டுவது போல சுரீர் என்னும் சுவை தரும் புளித்த கள்ளை பொன் கிண்ணத்தில் ஊற்றி அளித்தான்" என்று அதியமான் மகன் பொகுட்டெழினி தனக்குக் கள் ஈந்த அனுபவத்தைப் பாடுபவர் யார் தெரியுமா? தமிழின் தலைசிறந்த பெண் கவிஞர்களில் ஒருவரான சங்ககால ஔவையார் ! "ஔவை ஒரு மொடாக் குடிகாரி" என்று கூறுவாரா கருணாநிதி?
முதலில் ஜெயலலிதாவை இதே போன்று குடிகாரர் என்றார். பிறகு விஜயகாந்த். இப்போது ஸ்ரீராமன் வரைக்கும் போய்விட்டது. மஞ்சள் துண்டு காரனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்!
மூடத்தனமே உன் பெயர் தான் முதலமைச்சரோ?
கயமையே உன் பெயர் தான் கலைஞரோ?