Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Tuesday, December 07, 2010

இந்திய மதப்பிரிவினை சட்டம் (Article 30) = பண்பாட்டு அழிவு?

அரசு நிதியில் இயங்கும் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களும் மத அடிப்படையில் பெருமளவில் இட ஒதுக்கீடு செய்ய வழிவகுக்கும் சர்ச்சைக்குரிய இந்திய சட்டம் இது...

தில்லி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி தொடங்கி மதுரை அமெரிக்கன் கல்லூரி வரை இந்தச் சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு செய்யும் அடாவடிகள் கடந்த சில ஆண்டுகளாக அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்...

இதன் நீண்டகால விளைவுகள் என்னவாக இருக்கும்? - என்பது பற்றி நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் தாமஸ் ஷெல்லிங்கின் ஒரு அறிவியல்பூர்வமான கோட்பாட்டின் அடிப்படையில் ஆராய்ந்து டாக்டர் மூர்த்தி முத்துசுவாமி என்பவர் எழுதிய ஒரு கட்டுரையை நான் மொழிபெயர்த்திருக்கிறேன் -

Monday, November 22, 2010

ஒரு தேசம், இரு உரைகள்

... சாதாரண பாமர மக்களின் இந்த சாதாரண பாமர முட்டாள்தனத்தை அருந்ததி ராய் போன்ற அறிவுஜீவி எழுத்தாளரால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்? எனவே துப்பாக்கிகளும், துவேஷ பிரசாரங்களும், ரத்தக்களறிகளும் தான் அவர்களது மீட்புக்கு வழி என்று போதிக்கிறார். ...

முழுதும் படிக்க - http://www.tamilhindu.com/2010/11/a-nation-and-two-speeches/


Thursday, March 26, 2009

காங்கிரசின் பிரதமர் வேட்பாளருக்கு ஒரு கடிதம்

அன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய டாக்டர் மனமோகன் சிங்ஜி அவர்களுக்கு,

நலம். நலமறிய அவா. நாட்டின் தலைவராகிய நீங்கள் உடல்நலம் தேறி தங்கள் வழக்கமான பணிகளில் ஈடுபடுவது மகிழ்ச்சியளிக்கிறது. உற்சாகத்துடன் தேர்தல் பிரசாரத்தில் கூட பங்கெடுத்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

நேற்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் நீங்கள் தான் காங்கிரஸ் கூட்டணியின் அதிகாரபூர்வ வேட்பாளர் என்று சோனியா காந்தி அறிவித்தார். உடனே தேர்தல் சரவெடி ஒன்று உதிர்க்க வேண்டும் என்று எண்ணிவிட்டீர்கள் போலிருக்கிறது. வேறு ஏதோ ஒரு தொடர்பில்லாத கேள்விக்கு பதிலாக “அத்வானி இந்த தேச நலனுக்கு என்ன செய்திருக்கிறார்?என்று கேட்டு அதிர வைக்கிறீர்கள்! வழக்கமாக மிக மென்மையாகவும், அமர்ச்சையுடனும் பேசும் நீங்கள் அப்போது மிகவும் படபடப்பாக இருந்தீர்கள்.

ஐயா, இதே கேள்வியை நேருக்கு நேர் ஒரு தொலைக்காட்சி விவாத்தில் அத்வானிஜியிடம் நின்று முகம் கொடுத்து, உங்களால் கேட்க முடியுமா?

நீங்கள் மேடையில் மந்தகாசத்துடன் அமர்ந்திருக்க, சோனியா காந்தி சொல்கிறார் – “பிரதமர் ஆவதற்கு யார் யாரோ ஆசைப் படுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒருவர் கூட டாக்டர் மன்மோகன் சிங் முன்பு நிற்க முடியாதுஎன்று.

எப்படி நிற்க முடியும்? உங்களுக்கு எதிராக நிற்பதற்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்தால் தானே நிற்க முடியும்? மக்களவைத் தொகுதி ஒன்றில் நின்று போட்டியிடுவதற்கு உங்களுக்கு விருப்பம் இல்லையா அல்லது அந்த அஸ்ஸாம் தொகுதி மீது ஏதாவது கோபமா அல்லது காங்கிரசின் பிடி தளர்ந்துவரும் அந்த மாநிலத்தில் விளைவு என்னாகுமோ என்று எண்ணித் தயக்கமா, புரியவில்லை, அந்தத் தொகுதியின் ராஜ்யசபை பிரதிநிதியாகவே இருந்து வருகிறீர்கள். ஏதேனும் காரணம் இருக்கலாம். ஆனால் அதை சோனியா காந்தி இப்படியா போட்டுடைக்க வேண்டும்? இந்த குரூர இத்தாலிய அங்கதம் உங்களுக்கும் புரிந்திருக்கும். ஆனாலும் அப்படி அமைதியாக இருக்கிறீர்களே!

வாக்குச் சீட்டில் மக்களைச் சந்திப்பதற்கே இவ்வளவு யோசிக்கும் நீங்கள் விவாதத்தில் மக்களை எதிர்கொள்வீர்கள் என்றெல்லாம் எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகம் தான்.

அத்வானி இந்த தேச நலனுக்கு என்ன செய்திருக்கிறார்?

கடல் நீரை அளவிட முடியாது என்று உங்களுக்கும் தெரியும். பேச்சுக்கு ஒன்றே ஒன்று. இந்த தேசத்தின் ஒவ்வொரு தனிமனிதனின் சுதந்திரத்தையும் எமர்ஜென்சி என்ற பெயரில் உங்கள் காங்கிரஸ் கட்சி சிறையிட்டுப் பூட்டிய அந்த நான்கு வருடங்களும், தன் வாழ்வின் அத்தனை சுகங்களையும் மறந்து கொடுஞ்சிறையின் நான்கு சுவர்களுக்குள் வாடியிருக்கிறார் ஐயா அத்வானி. இன்று நீங்களும் நானும் அனுபவிக்கும் இந்த சுதந்திரம், எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் தேர்தலில் நீங்கள் இன்று கேள்வி கேட்கும் இந்த ஜனநாயக உரிமை நமக்குக் கிடைப்பதற்காக. இன்றைக்கு உங்கள் பிரதமர் பதவியையே உறுதி செய்கிறதே இந்திய அரசியல் சாசனம், அந்த சாசனம் மீறப்பட்டபோது, மிதிக்கப் பட்டபோது, அதன் மாண்பை மீட்பதற்காக. (சமீபத்தில் இது பற்றி அவர் தன் இணையதளத்தில் எழுதியும் இருக்கிறார்) என் தலைமுறைக்கே இது தெரியும் போது நீங்கள் எப்படி மறந்தீர்கள்?

அத்வானி தீவிர வாசகர், நிறைய படிக்கவும் செய்வாராம். ஆனால் 1000+ பக்கங்கள் அவர் வாழ்க்கை வரலாற்றை எழுதி இருக்கிறாரே, அதிலும் “என் தேசம், என் வாழ்க்கைஎன்று சொல்கிறாரே, இப்படி ஒரு கேள்வியைக் கேட்பதற்கு முன் அதன் சுருக்கத்தையாவது படித்துப் பார்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா ஐயா? நீங்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் கற்ற அறிஞர் என்பதையும் நாடறியும்.

நலன்பற்றிக் கேட்கிறீர்கள். இன்றைக்கு இந்தியாவிலேயே மிகச் சிறந்த அளவில் மக்கள் நலத் திட்டஙகளை செயல்படுத்தும் மாநில அரசுகள் பாஜக அரசுகள் தான் என்பதும் மத்திய அரசை நடத்தி வரும் உங்களுக்குத் தெரியாததல்ல. ஒவ்வொரு கிராமத்திற்கும் தடையில்லாத மின்சாரம் கிடைக்கச் செய்த குஜராத் அரசின் “ஜோதிர்கிராம்திட்டமாகட்டும், குழந்தைகளின் நலன் பேணும் மத்தியப் பிரதேச அரசின் அற்புதமான “லாட்லி லக்‌ஷ்மி யோஜனாவாகட்டும், பெண்கல்வியை மிகப் பெரிய அளவில் மாநிலமெங்கும் கொண்டு சென்ற முந்தைய ராஜஸ்தான் அரசின் சாதனையாகட்டும். இவற்றைத் தந்த தலைவர்களை உருவாக்கிய மகா தலைவர் அல்லவா அத்வானி? தலைமை என்பது ஒரு எக்ஸிக்யூட்டிவ் பதவி மட்டும் அல்ல, அது பல சுடர்களை உருவாக்கும் ஒரு ஒளிப்பிழம்பு.

தில்லி, வாரணாசி, பெங்களூர், மும்பை, சம்ஜௌதா எக்ஸ்பிரஸ், மாலேகாவ், ஹைதராபாத், உத்திரப் பிரதேசம், ஜெய்பூர், அகமதாபாத் என்று 13 பெரிய அளவிலான ஜிகாதி தீவிரவாதத் தாக்குதல்கள் உங்கள் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்துள்ளன. ஏறக்குறைய ஆயிரம் இந்தியர்கள் இவற்றில் கொடுமையாக பலியாகியுள்ளனர்.

2004 முதல் 2008ன் இறுதி வரை இந்தக் கொடூரத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தவும், இவற்றில் ஈடுபட்ட குற்றவாளிகளை வேட்டையாடித் தண்டிக்கவும் ஒரு உருப்படியான நடவடிக்கையைக் கூட, சிறிதளவும் உங்கள் அரசு எடுக்கவில்லை. 26/11 மும்பை தாக்குதலுக்குப் பிறகு தான் உலுக்கினாற்போல விழித்துக் கொண்டு அடிப்படையான பாதுகாப்பு உள்கட்டமைப்பு விஷயங்களைப் பற்றி யோசிக்கவே ஆரம்பிக்கிறது அரசு. எத்தகைய கிரிமினல்தனமான மெத்தனம்!

ஆனால் இந்தத் தேர்தல் பிரசாரத்தில், தீவிரவாத்தைப் பற்றி எழும் ஒவ்வொரு விவாத்த்திலும், இதற்கு முன்பு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாராளுமன்ற தாக்குதல் நடக்கவில்லையா? கண்டஹார் விமானக் கடத்தல் நடக்கவில்லையா என்பதையே மொண்ணைத் தனமாகக் கேட்கிறீர்களே, இதற்கு என்ன பொருள்? அப்போது சில இந்தியர்கள் மாண்டார்களே, இப்போது அதைப் போல 10 மடங்கு இந்தியர்கள் தான் மடிந்திருக்கிறார்கள்..நீங்களூம் கொஞ்சம் செத்துப் போனால் தான் என்னவாம் என்று மக்களைக் கேட்கிறீர்களா? அதுவும், பாராளுமன்றத் தாக்குதலுக்காக மரண தண்டனை விதிக்கப் பட்ட அப்சலின் தண்டனையை நிறைவேற்றக் கூட வக்கில்லாத ஒரு அரசின் சார்பாக? ஆஸ்திரேலியாவில் தீவிரவாதத் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்ட முகமது ஹனீஃபின் குடும்பத்தினரை டிவியில் பார்த்து “அன்று இரவு முழுக்க எனக்குத் தூக்கம் வரவில்லைஎன்று தழுதழுத்த குரலில் உருக்கமாக சொன்னீர்கள். ஆனால் இந்தத் தீவிரவாத்த் தாக்குதல்களில் தங்கள் துணையை, குழந்தைகளை, சுற்றத்தாரை, நண்பர்களை இழந்த இந்தியக் குடிமக்களான தாயருக்கும், தந்தையருக்கும், மக்களுக்கும் அதே போன்று அழுத்தமாக ஆறுதல் சொல்ல வேண்டும் என்று உங்களுக்கு ஏன் தோன்றவில்லை? உங்களுக்கே வெளிச்சம். ஆனால் இதெல்லாம் இந்த்த் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு மறந்து விடவில்லை என்பது நினைவிருக்கட்டும்.

“அத்வானியின் ஒரே சாதனை பாபரி மசூதியை இடித்ததில் பங்கு வகித்த்து தான்என்று இன்னொரு முத்தையும் உதிர்த்திருக்கிறீர்கள். அந்த பாப்ரி அமைப்பு மசூதி அல்ல, அங்கு தொழுகை நின்று போய் நூற்றுக் கணக்கான ஆண்டுகள் ஆகிறது, ராம நாம பஜனை தான் 50 ஆண்டுகளாக நடந்து வருகிறது. எல்லா அரசு ஆவணங்களும், நீதிமன்றக் குறிப்புகளிலும் கூட “சர்ச்சைக்குரிய கட்டிடம்” (disputed structure) என்று தான் சொல்லப் படுகிறது. இதெல்லாம் உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஜெயமோகன் என்று ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர் இருக்கிறார். சமீபத்தில் “அரசியல் சரிநிலைகள்என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், ஒரு மலையாளக் கதை பற்றிக் குறிப்பு வரும். சோஷலிச சார்பு உடைய, அதே சமயம் நேர்மைக்கும், நடுநிலைக்கும் பெயர்போன சுயநலமற்ற ஒரு மூத்த தலைமுறை பத்திரிகையாசிரியர். 1992ல் அந்தச் செய்தி வரும்போது, உதவியாசிரியர்கள் நாளிதழின் முதல்பக்கச் செய்தியாக சர்ச்சைக்கிடமான கட்டிடம் இடிக்கப்பட்டதுஎன்று சரியாக அச்சு கோர்த்திருக்கிறார்கள். ஆசிரியர் ஒருகணம் யோசித்து விட்டு அதை எடுத்து வெட்டிவிட்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதுஎன்று செய்தியை மாற்றுகிறார். இது தான் கதை. இதன் வரலாற்று விளைவுகளை அந்தக் கட்டுரையில் பின்னர் ஜெயமோகன் அலசுகிறார்.

சட்டத்தின் கண்ணியத்தைக் காக்க வேண்டிய மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் நீங்கள், நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் மேடையில் நின்று கொண்டு இந்தத் தருணத்தில் பாபர் *மசூதி* என்று சொல்கிறீர்களே? அதற்கு என்ன பொருள்? இதன் உள்நோக்கம் என்ன?

இந்த்த் தேர்தல் கடந்த காலத்தின் காயங்களைக் கிளறுவதோ, ஆறிக் கொண்டிருக்கும் வடுக்களை மறுபடிக் கீறுவதோ பற்றியது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்படிச் செய்வதாயிருந்தால் ஏன் பாப்ரியோடு நிறுத்த வேண்டும்? 1984ல் தில்லியில் நடந்த சீக்கியப் படுகொலை பற்றியும் பேசலாம். பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கட்டவிழ்த்து விடப் பட்ட மதக்கலவரங்களைப் பற்றியெல்லாம் பேசவேண்டியிருக்கும். வேண்டாமே!

பொருளாதாரம், தேசப் பாதுகாப்பு, மக்கள் நலம் ஆகிய எந்த விஷயத்திலும் பாஜகவை குற்றம் சாட்டவோ, பாஜக மீது விரல் நீட்டவோ எந்த முகாந்திரமும் இல்லை என்று உங்களுக்கே தெரிந்திருக்கிறது. அதனால் தான் “மதவாதக் கட்சிஎன்று ஊசிப்போன உளுத்தை வாத்த்தை இந்த நேரத்தில் கையில் எடுக்கிறீர்கள். இது தான் உண்மை, இல்லையா?

இந்தத் தேர்தல் இப்போது எரிந்து கொண்டிருக்கும் பிரசினைகளைப் பற்றியதாகவே இருக்க வேண்டும், அப்படியே இருக்கும். நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பணவீக்கம் (inflation) பூஜ்யத்திற்கும் கீழே போய் பணப் பிதுங்கல் (deflation) வரும் அபாயகரமான நிலை ஏற்பட்டிருக்கிறது, உலக அளவில் எல்ல நாடுகளும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க புதியவகை நடவடிக்கைகளை எடுத்து வந்தபோது, உஙக்ளைப் போன்ற ஒரு பொருளாதார நிபுணர் தலைமையில் இயங்கும் அரசு, ரிமோட் கண்ட்ரோல் நெருக்கடிகளால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நிலைமை தானாக சீரடையும் என்ற கரும்பாறை நிலையில் நடந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகளின் அரசுகள் ஊக்கத் திட்டங்கள் (stimulating packages) தீட்டி வந்த சமயத்தில், உங்கள் அரசு தன் “சாதனைகளைப் பற்றி செய்தித் தாள்களில் விளம்பரங்கள் மட்டும் அளித்து ஊடகங்களை மட்டும் ஊக்குவித்து வந்தது!

வாஜ்பாய் அரசு ஆரம்பித்த தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் போன்று மிகப் பெரிய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களை உங்கள் அரசு இழுத்து மூடியது. அது ஒன்றும் மதவாத அஜெண்டா இல்லையே, அனைத்து மக்களும் பயன்பெறும் சீரிய செக்யுலர் திட்டம் தானே.. பழங்கால மன்னர்கள் பஞ்ச காலத்தில் தான் பெரிய கோயில்களும், அரண்மனைகளும் கட்டுவார்கள். ஏனென்றால் வேலைவாய்ப்பு பெருக வேண்டும், மக்கள் கையில் பணம் சென்றடைய வேண்டும் என்பதற்காக. லக்னோவின் இமாம்பாராவும்,ஜோத்பூர் அரண்மனையும் அப்படிக் கட்டப் பட்டவை தான். இந்தப் பழைய பொருளாதாரம் (old economics) உங்களைப் போன்ற ஒரு நிபுணருக்கு எப்படி மறந்து போயிற்று?

இதன் விளைவுகள் பயங்கரமான இருக்கின்றன. ஏராளமானோர் வேலையிழந்து வருகின்றனர். ஏற்றுமதி இறக்குமுகத்தில் இருக்கிறது. எல்லா தொழில்துறைகளும் திணறிக் கொண்டிருக்கின்றன. இதைச் சீர்செய்வதற்காக உங்கள் கட்சியிடம் உருப்படியாக ஒரு திட்டமும் இல்லை. ஒப்பீட்டில் பா.ஜ.க தெளிவான, தீர்க்கமான செயல்திட்டங்களை தேர்தல் அறிக்கையில் முன்வைத்திருக்கிறது.

உதாரணமாக, பா.ஜ,கவின் ஐ.டி துறை முன்னேற்ற வளர்ச்சித் திட்ட ஆவணம்

எல்லாவற்றும் அடிப்படையான தேவை தலைமை. இந்தத் தேர்தலில் மிக மிக முக்கியமான கேள்வி அது தான்.

ஒருபுறம் உறுதியான, தீர்க்கமான முடிவுகளை சுயமாக எடுக்கும் தலைமை நிற்கிறது. இன்னொரு புறம், தலைமை என்ற பண்புக்கு மகா சுமாரான மாற்றாக, உங்கள் “வாடகை தலைமை(surrogate leadership) நிற்கிறது. எந்த உறுதியான முடிவையும் எடுக்க முடியாமல் துவண்டு, தேர்தல் களத்தில் மக்களை சந்திக்கக் கூட அது தயங்குகிறது. பதவிக்கு மட்டும் பிரதமர், அதிகாரத்திற்கு அல்ல” ( PM in office, not in power) என்று உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைமையைப் பற்றி சர்வதேசப் பத்திரிகைகள் வரை எழுதும் அளவிற்குக் கொண்டு சென்றுள்ளது. அரசாட்சி (governance) என்பதே நடக்கிறதா இல்லையா என்றே சந்தேகம் வரும் அளவில் இந்த அரசின் செயல்பாடுகள் இருந்துள்ளன.

உறுபசியும், ஓவாப் பிணியும் செறுபகையும் சேராதியல்வது நாடுஎன்று திருவள்ளுவர் என்கிற தமிழ் முனிவர் சொல்கிறார். இதில் ஒவ்வொரு விஷயத்திலும் உங்கள் அரசு தோல்வியைத் தழுவியுள்ளது.

இன்றைய இந்தியா பெரும் முன்னேற்ற தாகத்துடன் இருக்கிறது. உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை அது விழைகிறது. தன் சுதந்திரத்தையும், தேசப் பாதுகாப்பையும் எந்த சக்தியிடமும் சமரசம் செய்துகொள்ளாத அரசையும், தலைமையும் அது வேண்டி நிற்கிறது.

இந்தியா இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறது. India deserves better. இந்தியா மாற்றத்தை விரும்புகிறது. அதை உணர்ந்தே அது வாக்களிக்கும்.

குட்பை!

அன்புடன்,

ஜடாயு

Monday, June 16, 2008

அஸ்ஸாம் அரக்கனைத் தமிழனாக்கும் கருநாநிதியின் அபத்த உளறல்கள்

கடலூர்: தீபாவளி தமிழன் கொல்லப்பட்ட நாள். அந்த நாளை மறந்து விட்டு, தமிழை ஏற்றி வைக்கும் நாளான பொங்கலை கொண்டாடுங்கள் என முதல்வர் கருணாநிதி கூறினார்" -

- தட்ஸ்தமிழ்.காம் செய்தி

தமிழகத்தின் ஒரு பழைய இருண்டகாலத்தில், திராவிட இனவெறிக் கும்பல்கள் உருவாக்கிய ஒரு கேவலமான பொய்ப் பிரசார கட்டுக் கதையை, தேவையில்லாமல் 2008ம் ஆண்டில் தமிழக முதல்வர் கருநாநிதி வாந்தி எடுத்திருக்கிறார்.

நரகாசுரனை ஸ்ரீகிருஷ்ணன் வதம் செய்ததும், அப்போது அவன் தீமை அழிந்த நாளாக தன் மரணதினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று வரம் கேட்டதுமான தீபாவளிப் பண்டிகை தொடர்பான புராணக் கதை எல்லாருக்கும் தெரியும்.

யார் இந்த நரகாசுரன்?

மகாபாரதத்தின் படி, இன்று அஸ்ஸாம் என்று இன்று அழைக்கப் படும் காமரூப தேசத்தில் ப்ராக்ஜோதிஷபுரம் என்ற நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த கொடுங்கோல் மன்னன். புராணங்களின் படி இவன் பூமிதேவியின் மகன் (சிலவற்றில் ஹிரண்யாக்ஷன் என்ற அசுரன் மகன்). 16,000 பெண்களை இவன் சிறைப்பிடித்து வைத்தது, மக்களைக் கொடுமைப் படுத்தியது, பின்னர் சத்யபாமா தேரோட்ட கண்ணன் போர்செய்து நரகாசுரனைக் கொன்றது, தர்மவானான அவனது மகன் பகதத்தனுக்குப் பட்டம் சூட்டியது எல்லாம் புராணங்களில், மகாபாரதத்தில் வருகிறது. இந்த பகத்தன் பின்னர் பாரதப் போரில் கௌரவர் பக்கம் வீரப் போர் புரிகிறான்.

எந்த ஒரு புராணத்திலும், இதிகாசத்திலும் தமிழகத்திற்கும் நரகாசுரனுக்கும் எந்தத் தொடர்பும் சொல்லப் படவில்லை. பழந்தமிழ் நூல்களில் எதிலாவது நரகாசுரனைப் பற்றி ஏதாவது கூறப் பட்டுள்ளதா? அப்பேர்ப்பட்ட மறத்தமிழன் நரகாசுரனைப் பற்றி ஏதாவது கல்வெட்டு, கில்வெட்டு இருக்கிறதா? ம்ஹூம்.

பத்தாம் நூற்றாண்டில் திருவஞ்சைக் களத்தில் வாழ்ந்த, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகரப் பெருமாள், தனது "முகுந்த மாலை" என்ற சம்ஸ்கிருத நூலில் "நரகே வா நரகாந்தக ப்ரகாமம்" (நரகனை அழித்தவனே, நான் நரகத்தில் இருந்தாலும், உன்னை மறவாமலிருக்க வேண்டும்) என்று பாடும் ஒரு வரி இருக்கிறது. தீபாவளி தோறும் வரும் எண்ணெய்க் குளி தவிர்த்து, பழந்தமிழகத்திற்கும், நரகாசுரனுக்கும் உள்ள ஸ்நானப்ராப்தி இவ்வளவு தான்.

பின் எந்த ஆதாரத்தில், ஒரு மாநில முதல்வர் இப்படி ஒரு வெறுப்பைத் தூண்டும், துவேஷத்தை வளர்க்கும் பச்சைப் பொய்யைக் கூறுகிறார்?

மக்களே கேட்டுக் கொள்ளுங்கள் - தமிழனின் கொலையைக் கொண்டாடும் மன்மோகன் சிங் என்ற ஒருவர் தான் உங்களுக்கு பிரதமராக இருக்கிறார்.
இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும், தமிழர்கள் உள்ளிட்ட கோடிக் கணக்கான இந்தியர்கள் தமிழன் கொலை செய்யப் பட்ட ஒரு நாளைக் கொண்டாடி வருகின்றனர் உலகெங்கும் வாழும் தமிழர்கள் எல்லா நாடுகளிலும் தமிழன் கொலையுண்டதைக் கொண்டாடி வருகின்றனர் ! ஐயகோ, ஆனாலும் தமிழனுக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்கக் கூடாது.

மேலும், நரகாசுர வதம் என்பது தீபாவளி என்கிற மாபெரும் பண்டிகை பற்றிய மரபுகளில் ஒன்று தான்.

இறைவனை ஒளிதரும் ஜோதியாக வழிபடுதல், கோவர்த்தன பூஜை, கார்கால அமாவாசையில் காளி பூஜை (வங்கத்தில்), பாற்கடலில் இருந்து மகாலக்ஷ்மி உதயம், ராமர் அயோத்தி திரும்பிய நாள் என்று ஏராளமான சிறப்புக்கள் இப்பண்டிகைக்கு உண்டு. ஜைனர்களுக்கும், சீக்கியர்களுக்கும் கூட முக்கியமான பண்டிகை.



இதே உரையில் "அப்படி என்றால் அது பொங்கல் அல்ல, தமிழனுடைய விழா அல்ல. ஆரியனுடைய மகர சங்கராந்தி. எப்படி வந்தது மகர சங்கராந்தி?"
என்று கேட்டு மகர சங்கிராந்தி என்ற பெயரிலும் அழைக்கப் படும் பொங்கல் என்ற உன்னதமான இந்துப் பண்டிகையையும் இழிவு செய்திருக்கிறார்



மேலும், எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல, "தமிழா உனக்கு ஆண்டுக் கணக்கே இல்லை என்றால் இதை விட கேவலம் இருக்க முடியுமா?. எப்படி பிறந்து நமக்கு ஆண்டு?. மகா விஷ்ணுவுக்கும் நாரதருக்கும் பிறந்த 60 பிள்ளைகள் அல்லவா நமக்கு ஆண்டாக கூறப்பட்டுள்ளது" என்றும் பிதற்றியிருக்கிறார் கருநா.

"மாயை- காலத்தின் தன்மை ஆகியவற்றைக் காட்டும் -இன்றைய நவீன அறிவியல் புனைவின் அனைத்து தன்மைகளையும் கொண்Î Time-consciousness-illusion ஆகியவற்றைக் காட்டும் தொன்மம் இது." என்று அரவிந்தன் நீலகண்டன் அற்புதமாக விளக்கும் இந்தப் புராணக் கதையின் கவித்துவம் கலைஞர், கவிஞர் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் ஒருவருக்குப் புரியாமலிருக்குமா? பின் ஏன் இப்படி உளறுகிறார்?

பாரத நாட்டின் தேசிய பண்டிகைகளான தீபாவளி, மகர சங்கிராந்தி என்கிற பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு ஆகியவற்றைப் பற்றி பொய்யைப் பரப்பி, மக்களிடையே துவேஷத்தையும், வெறுப்பையும் வளர்க்கும் முதல்வர் கருநாநிதி மீது தேசவிராத சட்டத்தின் கீழ் வழக்குப் போடவேண்டும்.

Thursday, June 05, 2008

பிறந்தநாள் பிச்சை கேட்கும் தமிழினத் தலைவர்

இந்த தினமணி செய்தியைப் பாருங்கள் -

சென்னை, ஜூன் 2: சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றித் தாருங்கள் என்று எதிர்ப்பாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற "உளியின் ஓசை' திரைப்படத்தின் பாடலை வெளியிட்டு அவர் பேசியதாவது: சுற்றியுள்ள மாநிலங்கள் அனைத்தும் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் மாநிலங்களாக இல்லை. கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தமிழகத்தை தனித் தீவாக மாற்றிவிட்டன.

இந்தச் சூழ்நிலையில் தமிழகத்தின் "ஒரே கதி' சேது சமுத்திரத் திட்டம் மட்டுமே. சேது சமுத்திரத் திட்டத்தால் மட்டுமே தமிழகம் வளம் கொழிக்கும் மாநிலமாக மாறும். வாணிபத் தொடர்புகள் அதிகரிக்கும். சேது சமுத்திரத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றித்
தாருங்கள் என்று அந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். எனது பிறந்த நாள் யாசகமாக இதனைக் கேட்டுக் கொள்கிறேன். என் பேரப் பிள்ளைகளுக்காகக் கேட்கவில்லை. தமிழகத்தின் எதிர்காலத்துக்காகக் கேட்கிறேன்...."

சேது திட்டம் தான் "ஒரே கதியாம்". தமிழகம் "தனித்தீவாக" ஆகி விட்டதாம். எப்படிக் கூசாமல் அண்டப் புளுகு புளுகுகிறார் ஒரு மாநில முதல்வர்? மாநிலத்தின் வளர்ச்சிக்காக உருப்படியாக ஒன்றும் செய்யாமல், செய்யத் தெரியாமல், அண்டை மாநிலங்களை அநாவசியமாக வம்புக்கு இழுத்திருக்கிறார், துவேஷ மனப்பான்மையை வளர்க்கிறார். மிகவும் பொறுப்பற்ற பேச்சு.

திருவள்ளுவர், திருவள்ளுவர் என்று ஒருவர் இருந்தார். உலகின் உன்னதமான அறநூலான திருக்குறளை எழுதியவர். அதில் "இரவச்சம்" என்று ஒரு அதிகாரம் உண்டு. (ராத்திரி பயம் அல்ல; இப்போது இருப்பது போல திருவள்ளுவர் காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அவ்வளவு மோசமாக இல்லை). அதாவது உயிர்போவது பற்றிக் கூட பயம் கொள்ளாத மானமுள்ள மனிதர்கள் இரப்பதற்கு, பிச்சை கேட்பதற்கு அதை விடமிகுந்த நாணமும், அச்சமும் படுவார்கள் என்பதை வலியுறுத்திக் கூறும் அதிகாரம். அதில் ஒரு குறள்:

"ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்குஇரவின் இளிவந்தது இல்"

"(சாகக் கிடக்கும் ஒரு பசுவைக் காப்பாற்றுவதற்காக) பசுவிற்கு நீர்வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும் அந்த இரத்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை."

அதனால் என்ன? திருக்குறளை ஒரு அலங்காரத்துக்காக மட்டுமே "குறளோவியமாக" சட்டம் போட்டு மாட்டிவைத்து புளகாங்கிதப் படும் தன்மானத் தமிழினத் தலைவர் அவர்கள் இப்படித் தயங்காமல் பிச்சை கேட்பது ஆச்சரியம் இல்லை தானே?

அதுவும் யாரிடம்? இந்தத் திட்டத்திற்கு எதிராக இருப்பவர்கள், முட்டுக்கட்டை போடுபவர்களிடமாம். அது யார் யார்?

நீதிமன்றம். அது தான் இந்தத் திட்டத்திற்குத் தடை விதித்து, தொல்பொருள் ஆய்வுத் துறை சேது பகுதியில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் நீதி கிடைக்கலாம். பிச்சை..?

பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். கூட்டணிக் கட்சிகளிடம் மன்றாடுவதில் கின்னஸ் சாதனை படைத்த பல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். வாக்காளர்களிடம் மன்றாடியார்கள் இருக்கிறார்கள். ஆனால் முதன்முறையாக, தள்ளாத வயதில் எதிர்க்கட்சிகளிடம் மன்றாடுவதாக வெட்கமில்லாமல் அறிவித்த அரசியல்வாதி என்கிற சாதனை பட்டத்தை இதன்மூலம் தானைத் தலைவர் தட்டிச் செல்கிறார்.

இந்து இயக்கங்கள், ராம பக்தர்கள், துறவிகள். இவர்களைப் பார்த்து கலிஞ்சர் செய்யாத கேலியா? கிண்டலா? ஏளனமா? அவதூறா? கடைசியாக, இந்த "மூட, மௌடீக, மதவாத" சக்திகளிடமெல்லாம் பிச்சை கேட்கும்படி அவர் நிலைமை ஆகிவிட்டதே. தெரியாமல் முதுகில் பட்டுவிட்ட வேலுக்கெல்லாம் கூட நாணிக் கோணி, வீறாப்பு தன்மான டயலாக் பேசி, ஓவராக ஃபிலிம் காட்டிய, பொழைக்கத் தெரியாத புறம்போக்கு புறநானூற்றுத் தமிழனுங்க பேரையெல்லாம் ஏந்தான் சொன்னோமோ என்று தன்மானத் தலைவர் தன்னைத் தானே நொந்துகொண்டு நோகும்படி ஆகிவிட்டதே. ரொம்ப பரிதாபமாக இருக்கிறது.

தலைவர் பேச்சில் எப்பவுமே ஒரு பொடி இருக்கும். தென்னாட்டு பெர்னாட்ஷாவிடம் அவர் கற்ற பாடம் அது. அதாவது உடன்பாட்டாகச் சொல்ல வேண்டியதை எதிர்மறையாகச் சொல்வார்...and vice versa. முந்தைய காலங்களில், அப்போதைய அரசுகள் சட்டவிரோத அல்லது அரசியல் காரணங்களுக்காக அவரைக் கைதுசெய்து சிறையில் அடைக்கும்போதெல்லாம் உடன்பிறப்புகளுக்கு பஸ்களை எரிக்கக் கூடாது, கலவரம் எதுவும் செய்யக் கூடாது, வன்முறையில் ஈடுபடுவது கூடவே கூடாது என்று அறிக்கை விடுவார். உடனடியாக என்ன செய்யவேண்டும் என்று தொண்டனுக்குத் தெரியும்.

இன்னொரு சமீபத்திய உதாரணம். தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையருக்கு நினைவு மண்டபம் அமைக்கிறோம் என்ற பெயரில் உத்தமதானபுரம் ஊரில் அவர் வாழ்ந்த அழகிய பாரம்பரிய வீட்டை இடித்து எந்தக் கலை உணர்வும் இல்லாத ஒரு கான்கிரீட் கட்டிடத்தைக் கட்டி, தனது தொடரும் கலை, கலாசார ஒழிப்புப் பட்டியலில் இன்னும் ஒரு எண்ணைச் சேர்த்தது தமிழக அரசு. படிக்கும்போதே ரத்தக் கண்ணீர் வருகிறது. இது பற்றி மனம் நொந்து விமர்சன பிதாமகர் வெங்கட் சாமிநாதன் எழுதியிருக்கும் கட்டுரையில் கூறுகிறார் -

"... அச்செய்திகளில், முதல்வர் கலைஞரின் வாழ்த்துச் செய்தியும் காணப்பட்டது. அவருடைய பாராட்டுச் செய்தியும், தமிழுக்குத் தொண்டாற்றிய உ.வே.சா எந்த இனத்தைச் சேர்ந்தவர் எந்த ஜாதிய்னர், குடியினர் என்பதையெல்லாம் புறமொதுக்கித் தான், அவரது தமிழ்த் தொண்டை போற்றத் தான் நினைவகம் உருவாக்கப்பட்டுள்ளது என்ற பொருளில் தான் இருந்தது. எந்த ஜாதி, எந்த இனம் என்ற சிந்தனை இல்லையென்றால் அதைச் சொல்லவேண்டும் என்ற எண்ணமும் தோன்றி யிராது தானே. யாரும் ஏதும் கேட்காமலேயே 'எங்களுக்கு அந்த சிந்தனையெல்லாம் கிடையாது" என்று சொல்லித் தன் தாராள மனதுக்கும் சிந்தனைகளுக்கும் பாராட்டுக்களைத் தனக்கு வழங்கிக் கொள்ளும் அவசியம் இருந்ததென்றால், அந்த சிந்தனை தான் மேலோங்கியிருக்கிறது என்று தானே பொருள் படும். இது தான் இன்றைய தமிழ் நாடு."

ஆமாம். அந்தத் தமிழ்நாட்டின் தலைவர் பேச்சில் அந்தப் பொடி இன்னும் இருக்கிறது. "என் பேரப் பிள்ளைகளுக்காகக் கேட்கவில்லை. தமிழகத்தின் எதிர்காலத்துக்காகக் கேட்கிறேன்" என்று அவர் கூறும்போது, அதில் மேலோங்கியிருக்கும் சிந்தனை என்ன என்பது இந்த முதுபெரும் தலைவரின் கரகர பேச்சைக் காலம் காலமாய்க் கேட்டு வரும் மாங்கா மடையர்களாகிய நமக்குப் புரியாதா என்ன? மிக மிக நன்றாகவே புரியும்.

Thursday, May 29, 2008

கர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி சொல்வது என்ன?

காங்கிரஸ் கட்சி மற்றும் போலி மதச்சார்பின்மை அரசியலின் தொடர் வீழ்ச்சியின் அடுத்த கட்டமாக, தென்னகத்தில் முதன்முறையாக தாமரையின் ஆட்சி முழுமையாக மலர்ந்திருக்கிறது. குழிபறிக்கும், ஏமாற்றும் கூட்டணிக் கட்சியாக வரலாற்றில் புகழ்பெற்றுவிட்ட தேவகவுடாவின் “மதச்சார்பற்ற ஜனதா தளம்” கட்சியை அனேகமாக மண்ணைக் கவ்வ வைத்ததோடு, அரசியல் ஸ்திரத்தன்மை, மாநில முன்னேற்றம், தேசிய அளிவிலான பிரசினைகள் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு வாக்களித்த கர்நாடக மக்கள் பாராட்டுக்குரியவர்கள்.

தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருந்த நேரம், ஊடகங்கள் மண்டையைக் குடைந்து கொண்டு பா.ஜ.க வெற்றிக்கான காரணங்களைத் தேடிக் கொண்டிருந்தன. எடியூரப்பாவை முதல்வராக முன்னிறுத்தியதன் மூலம் அப்பட்டமான லிங்காயத் ஜாதி அடையாளத்தைக் காட்டி பாஜக அரசியல் செய்தது என்று காங்கிரஸ் தலைவர்கள் புலம்பினார்கள். “இதற்காகத் தான் நாங்கள் முதல்வர் யார் என்றே அறிவிக்கவில்லை!” என்று கோஷ்டிப் பூசலுக்குப் பேர்போன கர்நாடக காங்கிரசின் தலைவர் ஒருவர் கூறியது கலகலப்பான காமெடி. “ஒருவர் தான் முதல்வராக இருக்க முடியும், அவர் ஏதாவது ஒரு ஜாதிக் காரராக இருந்துதானே ஆகவேண்டும்? என்ன தான் சொல்ல வருகிறீர்கள்?” என்ற நிருபரின் கேள்விக்கு அவர்கள் வழிந்த அசடைப் பார்க்க வேண்டுமே!

தேர்தல் பிரசாரத்தில் ஆரம்ப முதலே பாஜக ஒரு தெளிவான, உறுதியான வானவில் சமூக ஆதரவை விழைந்தது என்பது தான் சரியாக இருக்கும். எடியூரப்பா, மாநிலத் தலைவர் சதானந்த கௌடா, பெங்களூர் நகர எம்.பி அனந்தகுமார் இந்த மூவரின் படங்கள் பிரதானமாகவும், மேலிருந்து அத்வானி, வாஜ்பாய் ஆசி வழங்குவது போலும் பாஜக வெளியிட்ட அனைத்து விளம்பரங்களும் நகரம், கிராமம், உழவர்கள், தொழில்முனைவோர், முக்கியமான சமூகங்கள் அனைத்தையும் பிரதிநிதித் துவம் செய்தன. மாறாக, காங்கிரஸ் விளம்பரங்களிலேயே அந்தக் கட்சியின் குழப்பம் தெரிய ஆரம்பித்து விட்டது. விளம்பரம் செய்வது எந்தக் குழு என்பதைப் பொறுத்து அதில் இந்திரா காந்தி, ராஜீவ், மல்லிகார்ஜுன் கர்கே, ஜாபர் ஷெரீப், ராகுல், எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையா, தரம்சிங், பிரகாஷ், வீரப்ப மொய்லி என்று 12 பேருக்குக் குறையாமல் இருந்தார்கள்!

மத்திய கர்நாடகம், கடற்கரை மாவட்டங்கள், பெங்களூர், வடக்கு கர்நாடகம், ஆந்திராவை ஒட்டிய பெல்லாரி பகுதிகள் இவை அனைத்திலும் கணிசமான வாக்கு விகிதத்தையும் பெற்று, இடங்களையும் வென்றதன் மூலம் பா.ஜ.க கர்நாடகத்தில் ஆழமாகவும், அகலமாகவும் வேரூன்றியுள்ளது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. தேவகவுடாவின் கோட்டையான மைசூர் பிரதேசத்தில் மட்டுமே பாஜகவுக்கு அவ்வளவு இடங்கள் கிடைக்கவில்லை. இது ஒரு பிரதேச போக்கு மட்டுமே தவிர, தேவகவுடாவின் சமூகத்தினரான ஒக்கலிகர்கள் பாஜகவை நிராகரிக்கவில்லை என்பது கண்கூடு. வெற்றிபெற்ற பாஜக எம்.எல்.ஏக்களில் 17 பேர் இந்த சமூகத்தினர் (ஜனதாதளத்தில் 15 பேர்). 9 பிராமண பாஜ.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் (கர்நாடக மக்கள்தொகையில் 7% பிராமணர்கள்). வெற்றிபெறும் வாய்ப்பு உள்ள முஸ்லீம் வேட்பாளர்கள் பாஜகவில் இல்லாததால் தான் அந்த சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் இல்லை என்று தெரிவித்த பாஜக தலைமை, ஆட்சி அமைக்கும் நேரத்தில் ஒரு முஸ்லீம் அமைச்சர் அரசில் கண்டிப்பாக இடம் பெறுவார் என்றும் அறிவித்துள்ளது. இத்துடன், தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஒதுக்கப் பட்ட 36 ரிசர்வ் தொகுதிகளில் 22ஐயும், பழங்குடியினர் ரிசர்வ் தொகுதிகளில் கணிசமான இடங்களையும் பா.ஜ.க, கைப்பற்றையுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

பிரணய்ராயின் என்.டி.டிவி போன்ற சில தொலைக் காட்சிகள் சாதிதான் தேர்தலில் மிக முக்கியமான காரணி என்று “அறிவியல் பூர்வமான” ஒற்றைப் படைக் கருத்தாக்கங்களை மீண்டும் மீண்டும் சொல்லி வருவதனால், இது ஒரு பிரம்மாண்டமான விஷயமாக மக்கள் மனதில் பதிந்துள்ளது. ஆனால் உண்மையில், பிரதிநிதித்துவம் என்ற அளவில் மட்டுமே இதன் தாக்கத்தைப் பார்க்கவேண்டும். இதோடு கூட, ஒட்டுமொத்தமாக தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பது அப்போதைய சூழலும், தேவைகளும், பிரசினைகளும் தான்.

இந்த தேர்தலின் முக்கிய பிரசினைகளாக இருந்தவைகள் என்னென்ன?

காங்கிரஸ் வெற்றியடைந்தால் அதில் சோனியா, ராகுல் மற்றும் “முதல் குடும்பத்தின்” பங்களிப்பையும், தோல்விகளுக்கெல்லாம் அமானுஷ்யமான காரணங்களையும் காண்பதை ஒரு கலையாகவும், பாரம்பரியமாகவும் ஆக்கிக் கொண்டுள்ள காங்கிரஸ், இந்தத் தேர்தலில் உள்ளூர் பிரசினைகளை மட்டும் வைத்து மக்கள் வாக்களித்தார்கள், தேசிய அளவிலான எந்த பிரசினையும் விவாதிக்கப் படவேயில்லை என்று சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்கிறது. இந்திய வாக்காளர்களிடம் சில பலவீனங்கள் இருந்தாலும், ஜனநாயகம் என்ற ஆயுதத்தை பிரயோகிப்பதில் அவர்கள் சாதுர்யமானவர்களாகி வருகிறார்கள் என்பதை பல சமீபத்திய தேர்தல்கள் நிரூபித்து வருகின்றன. பல விஷயங்களையும் கூட்டிக் கழித்துப் பார்த்துத் தான் அவர்கள் வாக்களிக்கிறார்கள்.

இந்தத் தேர்தலில், அடித்தட்டிலிருந்து வந்த, எளிமையானவராகவும், உழைப்பாளியாகவும் அறியப் பட்ட எடியூரப்பாவின் உறுதியான தலைமையை முன்வைத்தது மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு உத்திரவாதம் கூறியது : இந்த இரண்டும் பா.ஜ.க வெற்றிக்கு முக்கியக் காரணங்கள். பல முன்னேறும் மாநிலங்களில் இரு கட்சி ஜனநாயகம் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பதால், மூன்று கட்சிகளால் விளையும் குழப்பங்களை மக்கள் ஊகித்து ஜனதா தளத்தை ஓரங்கட்டினார்கள் என்றும் சொல்லலாம்.

மத்திய அரசு விலைவாசியைக் கட்டுப் படுத்தத் தவறியது, ஜிகாதி தீவிரவாதத்தை ஒடுக்காமல் மறைமுக ஆதரவு அளித்து வருவது உள்ளிட்ட தேசிய அளவிலான பிரசினைகளும் பிரசாரத்தில் முக்கியப் பங்கு வகித்தன. குறிப்பாக, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளுக்குப் பின் நிகழ்ந்த மூன்றாம் கட்ட தேர்தல் பிரசாரத்தில், அந்த நிகழ்வுக்கும், அப்சல் குருவை இன்னும் தூக்கிலிடாமலிருப்பதற்கும், வட கர்நாடகம், ஹூப்ளி பகுதிகளில் ஜிகாதி தீவிரவாதிகள் கைது செய்யப் பட்டதற்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக் காட்டி பா.ஜ.க செய்த தேசப் பாதுகாப்பு பற்றிய பிரசாரம் பரவலாக மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. தீவிரவாதத்தை ஏன் அரசியலாக்குகிறீர்கள் என்று அழாதகுறையாக காங்கிரஸ் கேட்டுக் கொண்டிருந்தது தான் மிச்சம். பா.ஜக. ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும், இதற்கு முழுப் பொறுப்பாளி மத்திய காங்கிரஸ் அரசு தான் என்று அடித்துச் சொல்லப் பட்ட பிரசாரத்தைக் கூட எதிர்கொள்ளத் திராணியற்றுப் போய் இருந்தது காங்கிரஸ் தரப்பு.

இந்துத்துவம்..

ஆகக் கூடி, இந்தத் தேர்தலில் “பா.ஜக இந்துத்துவம் பற்றி எதுவுமே கூறவில்லை. அதனால் இந்த வெற்றிக்கும் இந்துத்துவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்கிற அதிசய “உண்மையை”யும் செக்யுலர் ஊடகங்கள் மறக்காமல் சொல்லிவருகின்றன. ஆனால், இத்தகைய செய்திகளின் தலைப்புகள் என்னவோ “Saffron Surge” “Karnataka goes saffron” என்று இருக்கின்றன!

1980களில் ஹெக்டே அரசுக்கு சிறிய கட்சியாக ஆதரவு அளித்த பா.ஜக., 90களில் ராமஜன்ம பூமி இயக்கத்தின் பின்னணியில் கர்நாடகத்தில் பெருவளர்ச்சி கண்டு, இப்போது தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்திருப்பது ஒரு பெரிய சாதனை. அமரர் யாதவராவ் ஜோஷி, அமரர் ஹெச்.வி. சேஷாத்ரி போன்ற தன்னலமற்ற தலைவர்களின் அயராத உழைப்பால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து இயக்கங்கள் கர்நாடகத்தின் பல பகுதிகளில் வேரோடி இருந்ததும், பொதுப் பணிகள், சமூக சேவை, இந்து சமூக ஒருங்கிணைப்பு இவற்றில் ஈடுபட்டிருந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம். இது பற்றிக் கேட்டபோது, பாஜகவின் அருண் ஜெட்லி, “தெளிவாகவே, பாஜ.க ஒரு கருத்துச் சார்புடைய கட்சி. கொள்கைச் சார்புடைய தொண்டர்களைக் கொண்ட கட்சி. மக்களுக்கு இது நன்றாகவே தெரியும், அதைச் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை” (We are an idelogical party, and clearly a cadre based party. People know that very well, no need to keep repeating that). என்று கூறினார். எனவே இந்தத் தேர்தல் வெற்றியை, இந்துத்துவம் என்கிற சமூக, அரசியல் சித்தாந்தம் கர்நாடக மக்களால் பெரும்பான்மையாக அங்கீகரிக்கப் பட்டு விட்டது என்பதற்கான குறியீடாகக் கொள்வதில் தவறேதும் இல்லை.

தமிழர்கள், தமிழகம்...

ஆரம்பத்தில் சலசலப்பு ஏற்படுத்திய ஒகேனக்கல் பிரசினை தேர்தலின் போது தலைகாட்டாமல் அனைத்துக் கட்சிகளும் கட்டுப்பாடு காத்தது சந்தர்ப்பவாத அரசியலின் ஒரு யுக்தி என்றாலும், ஆரோக்கியமான முன்னுதாரணம். காவிரி பிரசினையில் வெளிப்படையான தமிழர் எதிர்ப்பு நிலைப் பாட்டை எடுத்து வரும் வட்டள் நாகராஜை இந்தத் தேர்தலில் டெபாசிட் இழக்க வைத்ததன் மூலம், மொழிவெறி அரசியலைத் தெளிவாகவே நிராகரித்திருக்கும் கன்னட மக்கள் பாராட்டுக்குரியவர்கள். அதே நேரத்தில் எடியூரப்பாவையும், ஏன் பா.ஜ.கவையுவே தமிழக எதிரிகள் என்ற கணக்கில் சித்தரித்து பீதியைக் கிளப்பிய பொறுப்பற்ற பல தமிழ் ஊடகங்கள் கண்டனத்திற்குரியவை. கடும் இந்துத்துவ வெறுப்பு, பாஜக எதிர்ப்பு போன்ற சட்டகத்தில் அடித்த எதிர்மறை மனப்பான்மைகளை மூட்டி கட்டி வைத்து விட்டு இரு மாநிலங்களுக்கும் இடையேயான நட்புறவைக் குலைக்கும் படி அவைகள் கருத்துக்கள் வெளியிடாமல் இருப்பது நல்லது.

கர்நாடகத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்கள் இரண்டு : கோலார், சாமராஜ் நகர் பகுதி, பெங்களூர் நகரின் பல பகுதிகள். இதில் முதலில் குறிப்பிட்ட தொகுதிகள் உள்ள பிரதேசம் முழுவதுமே ஜனதாதளம், காங்கிரஸ் வேட்பாளர்கள் வென்றுள்ளனர், அது ஒரு அலை. ஆனால் பெங்களூர் நகரில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் மல்லேஸ்வரம், ராஜாஜி நகர், ஜெயநகர், சி.வி.ராமன் நகர், பெங்களூர் தெற்கு ஆகிய தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிவாகை சூடியதில் கணிசமான அளவு பெங்களூர் தமிழர்களின் வாக்குகள் இருந்தேயாக வேண்டும் என்பது கண்கூடு.

தேர்தல் வெற்றிக்குப் பின் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் எடியூரப்பா ஒகேனக்கல் பிரசினையில் தனது தரப்பைத் தெளிவாகவே கூறியிருக்கிறார் -





“.. ஒகேனக்கல் பிரச்னையைப் பொறுத்தவரை நான் அன்றைக்கு சொன்னதுதான் இன்றைக்கும்..! தர்மபுரி ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்காகத் தண்ணீரை உறிஞ்சினால் கர்நாடகாவுக்கு தண்ணீர் பற்றாக்குறை வரும்னு இங்குள்ள மக்கள் நினைக்கிறாங்க. அதனால நானும் அந்த விஷயத்துல ஆரம்பத்துல இருந்தே எதிர்ப்பு காட்டிட்டு வர்றேன். எலெக்ஷன்ல ஜெயிக்கிறதுக்காக ஒகேனக்கல் பிரச்னையை வச்சு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியும் காங்கிரஸ்காரங்களும் ஏதேதோ டிராமா போட்டுப் பார்த்தாங்க. எதுவும் மக்கள்கிட்ட எடுபடல.

தமிழ்நாட்டுக்காரங்களோ,மகாராஷ்டிரா காரங்களோ எனக்கு எதிராளிகள் கிடையாது. எந்த மொழிக்கும் நான் எதிரானவன் கிடையாது. இன்னும் சொல்லணும்னா தமிழர்கள், கன்னடர்கள், மராட்டியர்கள் மூவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள்னு நினைக்கிறவன் நான். கர்நாடகா என்னுடைய வீடு. இந்த வீட்டுக்கு நான்தான் குடும்பத் தலைவன். என்னோட வீட்ல இருக்கறவங்களோட பிரச்னையை முதல்ல நான் தீர்த்து வச்சாகணும். அதுக்குப் பிறகுதான் பக்கத்து வீட்டைப் பத்தி யோசிக்க முடியும். அதனால காவிரி பிரச்னையிலும் சரி, ஒகேனக்கல் விவகாரத்திலும் சரி... எடுத்தோம் கவுத்தோம்னு எந்த முடிவும் எடுக்க முடியாது. பேசி முடிவு பண்ணலாம். ஆனா, அந்த முடிவு நிச்சயமா எங்க மாநிலத்து மக்களோட நலனுக்கு பாதகமா இருக்க முடியாது. இருக்கவும் விடமாட்டேன்.''

அரசியல் சட்ட அடிப்படையிலும், காவிரி நடுவர்மன்ற முடிவுகளின் படியும், தமிழக அரசின் இந்தத் திட்டத்தை கர்நாடக அரசு ஆட்சேபிக்க முடியாது என்ற உண்மை ஒருபுறம் இருந்தாலும், ஒரு மாநில முதல்வர் என்ற அளவில் எடியூரப்பா முதிர்ச்சியுடனும், தேசிய உணர்வுடனும் பேசியிருக்கிறார். இந்திய ஒருமைப்பாட்டில் உறுதியான பிடிப்பு வைத்திருக்கும் அவரது நிலைப்பாடு நம்பிக்கையளிக்கிறது. தமிழக முதல்வர் தானைத் தலைவர் ஒருமுறை கூட அண்டை மாநில மக்களைப் பற்றி இவ்வளவு அன்போடு ஏதாவது கூறி, நான் படித்ததாக ஞாபகம் இல்லை.

இன்று கர்நாடகம். நாளை பாரதம்?

இந்தத் தேர்தல் முடிவுகளின் அதிர்வலைகள் தேசிய அரசியலில் ஏற்கனவே புயலைக் கிளப்பத் தொடங்கி விட்டன. ஏழு பெரிய மாநிலங்களில் பாஜக அரசுகள் உள்ள நிலையில், காங்கிரசை விடப் பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பாஜக அடைந்திருக்கிறது. இடதுசாரிகளின் இழுபறி ஆதரவுடனும், பெயரளவில் அதிகாரம் செலுத்தும் ஒரு பிரதமருடனும் ஓடிக் கொண்டிருக்கும் சோனியாவின் சமையலறை கேபினெட் மத்திய அரசு, மக்களைப் பாதிக்கும் முக்கியமான பிரசினைகள் ஒவ்வொன்றையும் தவற விட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வளவு நடந்த பிறகும், காங்கிரஸ் கட்சி தனது வீழ்ச்சி மற்றும் தோல்விக்கான காரணங்களை சிறிதும் ஆராய்ந்து பார்ப்பதாகத் தெரியவில்லை. விநாச காலே விபரீத புத்தி:?

கர்நாடகம் தென்னகத்தில் பா.ஜகவின் வரவைக் கட்டியம் கூறும் நுழைவாயில் என்று சில அரசியல் விமர்சகர்கள் ஹேஷ்யம் கூறுகின்றனர். தமிழகம், கேரளம், ஆந்திரா இந்த மூன்று மாநிலங்களிலும் ஜிகாதி தீவிரவாதத்திற்கு எதிரான சமரசமற்ற நடவடிக்கைகள், இந்துமதம் மீது துவேஷம் வளர்க்காத அரசியல், முன்னேற்றம் விழையும் திட்டங்கள் ஆகிய கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவு கண்டிப்பாக இருக்கிறது. இதனை செயல்திறனோடு ஒருங்கிணைக்கக் கூடிய அரசியல் தலைவர்களையும், தொண்டர்களையும் இந்த மாநிலங்களில் பா.ஜ.க உருவாக்க வேண்டும்.

கர்நாடக வெற்றியில் இருந்து, பா.ஜ.கவும் சரி, காங்கிரசும் சரி, கற்க வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன.

Friday, April 25, 2008

திராவிட இயக்க திருக்குறள் பார்வைகள் குறித்து

கிறிஸ்தவ இறையியலில் Dehellenization என்று ஒரு கருதுகோள் உண்டு. “ஹெலன் இல்லாமல் ஆக்குவது” என்ற பொருள் தொனிக்கும் இந்தப் பதத்தின் உண்மைப் பொருள் “கிரேக்கத் தாக்க நீக்கம்” என்பதாகும் (நன்றி: அருணகிரி) 16ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க சர்ச்சின் எதேச்சாதிகாரத்தை எதிர்த்து பிராட்டஸ்டண்ட் இயக்கம் எழுந்தபோது இந்தக் கருத்தியல் உருவானது. கிறிஸ்தவ மதக் கொள்கை, அதன் சின்னங்கள், சமய இலக்கியம் இவற்றில் இழையோடிக் கொண்டிருப்பதாகக் கருதப்பட்ட கிரேக்க தத்துவ ஞானம், கிரேக்க புராண, உருவவழிபாட்டு “பாகன்” மத தாக்கங்கள் இவற்றைத் திட்டமிட்டு நீக்கி, கிறிஸ்தவத்தை “சுத்திகரிக்க” வேண்டும் என்ற எண்ணத்துடன் பைபிள் முழுவதும் இந்தப் பார்வையில் வாசிக்கப்பட்டு அதன் கருத்துக்களுக்கு விளக்கமளிக்கும் “பண்டிதர்கள்” உருவானார்கள். ஆனால், மதிப்பீடுகள் மாறிவரும் நவீன காலகட்டங்களில் கிரேக்க தத்துவ தரிசனத்துடன் பைபிளும், கிறிஸ்தவமும் தொடர்புடையது என்று நிறுவுவதும் ஒருவகையில் சாதகமான நிலைப்பாடு தான் என்றும் கருதப் பட்டது. இன்றும் வாத்திகன் மற்றும் ஏனைய கிறிஸ்தவ வட்டாரங்களில் இதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பான குரல்கள் எழுந்துவருகின்றன. சர்ச்சையைக் கிளப்பிய தனது சமீபத்திய 2006ம் ஆண்டு உரையிலும் போப் இதுபற்றிக் குறிப்பிட்டார் (இந்த உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு)

முனைவர் மு.இளங்கோவன் என்பவர் திண்ணையில் சென்ற இரு வாரங்களாக எழுதி வந்த “திராவிட இயக்க திருக்குறள் பார்வைகள்” கட்டுரையைப் படிக்கும்போது இந்தச் சொல் என் நினைவில் தோன்றி மறைந்தது. பழந்தமிழ் இலக்கியங்கள், கலை மற்றும் கலாசார விஷயத்தில் DeHinduization (இந்துத்தன்மை நீக்கம்) என்கிற “சுத்திகரிப்பு” வேலையைத் தானே முதலில் தமிழகத்திற்கு வருகை புரிந்த கிறிஸ்தவ மிஷநரிகளும், பின்னர் அவர்களால் போஷிக்கப் பட்டு வரும் திராவிட இயக்கமும் செய்து வந்திருக்கின்றன?

ஆனால் இரண்டிற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. சர்ச் கிரேக்கத் தாக்கநீக்க வேலையை ஆரம்பித்த காலகட்டத்திற்கு ஒரு பன்னிரண்டு நூற்றாண்டுகள் முன்பே கிரேக்க மதமும், தத்துவமும், கலாசாரமும் கிறிஸ்தவத்தின் வன்முறைப் பரவலால் வேரறுக்கப் பட்டுவிட்டன. அதை வெளிப்படையாகக் கடைப் பிடிப்போர் யாருமில்லை. அவற்றின் ஒளியை தரிசிக்க விரும்பிய ஐரோப்பிய மறுமலர்ச்சிக் கால ஆரம்ப சிந்தனையாளர்கள் கூட சர்ச் அதிகார அமைப்பால் வேட்டையாடப் பட்டனர். பின்னர் கிரேக்கத் தத்துவம் போற்றுதலுக்கு உரியதாக மாறிவந்ததும், சர்ச் அதன் ஒளியில் தானும் குளிர்காயத் தொடங்கியது.

ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த “சுத்திகரிப்பு” தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககாலத்தில் இந்துமதம் இன்று போலவே உயிர்த்துடிப்புடன் வாழ்ந்து வந்தது. இந்திய தேசிய எழுச்சியின் நாயகர்களான விவேகானந்தர், திலகர், லாஜபத்ராய், அரவிந்தர், மகாகவி பாரதி, வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட தலைவர்கள் இந்து கலாசார அடித்தளத்தின் மீதே தேசிய எழுச்சிக்கான கருத்தியல்களைக் கட்டமைத்தனர். தமிழ்ப் பண்பாடு உள்ளிட்ட பாரத நாட்டின் அனைத்து சமுதாய வாழ்க்கை முறைகளிலும் இழையோடிக் கொண்டிருந்ததும் இந்தக் கலாசாரத்தின் கூறுகள் தாம் என்றும் அவர்கள் நாடெங்கும் எடுத்துரைத்தனர்.

ஆனால், இந்த தேசிய நீரோட்டத்திற்கு மாறாக “தமிழ்ப் பழம்பெருமை”, “நாத்திகம்/பகுத்தறிவு” என்ற இரண்டு தொடர்பேயில்லாத சண்டிக் குதிரைகள் மீது சவாரி செய்ய விரும்பியது திராவிட இயக்கம். ஒரு மிகப்பெரிய நகைமுரணாக, “நவீன” சித்தாங்களின் அடிப்படையில் எழுந்ததாகத் தன்னை சொல்லிக் கொண்ட இந்த இயக்கம் வெறித்தனமான மரபு வழிபாட்டு, இனப்பெருமைக் கொள்கைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது, அவற்றை வளர்த்தெடுத்தது. பண்டைக் கலாசாரத்தின் கூறுகளை முழுமையாக மறுக்கும் “தூய” பகுத்தறிவுவாதம் தமிழ்மண்ணில் சுத்தமாக எடுபடாது என்பதை இந்தப் பகுத்தறிவுப் பகலவன்கள் அறிந்தே இருந்தனர்.

ஆனால் கோயில்களும், சிற்பங்களும், பேரிலக்கியங்களும், பாரம்பரிய இசை, நடனக் கலைகளும், சைவ, வைணவ சமயங்களும் இல்லாமல் “தமிழ்ப் பழம்பெருமை” என்று ஒன்று இருக்கவே முடியாதே, என்ன செய்வது? இந்த ஓட்டையை இட்டு நிரப்பத் தோதாகக் கிடைத்தது கால்டுவெல் பாதிரியார் உருவாக்கிய போலியான ஆரிய-திராவிட இனவாதக் கொள்கை. அதிலிருந்து முளைத்தவையே பிராமண வெறுப்பு, இந்துமத எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு, வட இந்திய வெறுப்பு, சம்ஸ்கிருதக் காழ்ப்புணர்ச்சி எல்லாம்.

இந்தச் சட்டகம் இறுதி வடிவம் அடைந்ததும், தங்கள் கையில் கிடைத்த பழந்தமிழ் இலக்கியங்களையும், கலாசாரப் பிரதிகளையும் இந்தப் பார்வையில் திரித்து, உருமாற்றி, சிதைத்து புதுப்புது விளக்கங்கள் அளிப்பது திராவிட இயக்க குடிசைத்தொழில் போன்று ஆகியது. ஒப்பீட்டளவில் “கிரேக்கத்தாக்க நீக்கம்” செய்த பாதிரிகளுக்கு இருந்த ஆழ்ந்த புலமையில் சிறிதளவும் தேராத “புலவர்”களும், பாவலர்களும், நாவலர்களும், தமிழ்க் காவலர்களும், அரசியல் ஏவலர்களும் கூட இதில் புகுந்து விளையாடினர். “சீரங்க நாதனையும் தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளக்க” ஒருவர் அறைகூவுவார். இன்னொருவர் வானளவாவ உயர்ந்த கோபுரங்களையும், அணிமாடக் கோயில்களையும் கட்டிய தமிழனின் சிற்பக் கலை உன்னதத்தைப் பற்றி அடுக்குமொழியில், துடுக்கு நடையில் உரையாற்றுவார்!

இந்தக் கட்டுரை தரும் திராவிட இயக்க திருக்குறள் உரைப் பட்டியலில் வ.சுப.மாணிக்கம் போன்று ஒரு சில உண்மையான அறிஞர்களின் உரைகள் தவிர்த்து, பெரும்பாலான உரைகளை இன்று படித்துப் பார்க்கும், ஓரளவு இலக்கியப் பிரக்ஞையும், கொஞ்சம் மரபிலக்கியப் பயிற்சியும் உள்ள எந்தத் தமிழ் வாசகனும் அவை எவ்வளவு போலித்தனமாகவும், அறிவுசார் நேர்மை இன்றியும், குருட்டாம்போக்கிலும் எழுதப்பட்டுள்ளன என்பதை உணரக் கூடும்.



பரிமேலழகர் காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில் பட்டாச்சாரியாராக இருந்தவர் என்பது மரபு

திருக்குறள் தமிழிலக்கியத்தின் ஒரு சிகரம் என்றால், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப் படும் ஈடு இணையற்ற உரையாசிரியர் பரிமேலழகர் அதற்குச் செய்த உரையை தமிழிலக்கியத்தின் சிகர தீபம் என்பதே சரியாக இருக்கும். எல்லா பழம் நூல்களையும் போல, காலம் கடந்து நிற்கும் இவ்வுரையும் சிற்சில இடங்களில் தன் காலத்தைப் பிரதிபலிப்பதாகவே இருப்பது புரிந்துகொள்ளக் கூடியதே (திருக்குறளும் இதற்கு விதிவிலக்கல்ல). ஆனால் பரிமேலழகரின் உரையில் “ஆரிய சதிவேலை”யைத் தோண்டித் துருவிக் கண்டுபிடித்துப் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருக்கும் இந்த உரையாளர்களுக்கு, அதை இன்னும் கொஞ்சம் நீட்டித்தால், அதே “ஆரிய சதிவேலை”யைத் திருக்குறளின் உருவாக்கத்திற்கே கூட மிக எளிதாகப் பொருத்திவிடலாம் என்ற அடிப்படைத் தர்க்கம் கூட புரியாமல் இருந்தது ஆச்சரியம் தான்! (திருக்குறளில் வேதநெறி பற்றிய பல குறிப்புகளை இந்தத் திண்ணைக் கட்டுரையில் காணலாம்)


திருவள்ளுவ நாயனார், திருமயிலை

இத்தகைய தர்க்க ஓட்டைகளை அடைப்பதற்கு, திருக்குறளில் வரும் சில சொற்களுக்கு இவர்கள் பொருள் கொள்ளும் விதம், உலக மொழியாராய்ச்சிகளின் ஓட்டைச் சித்தாந்தங்கள் (crack pot theories) எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு விடும்! ‘அமிழ்தம்’ என்பதன் பொருள் பாற்கடல் அமிர்தம் அல்ல, அது அம்மா ஊட்டும் “அம்ம”மாம். ஆனால் சங்கநூல் புறநானூற்றில் “இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும்..” என்று வருகிறது, சிலப்பதிகாரம் “அலையிடைப் பிறவா அமிழ்தே” என்கிறதே என்று ஒரு சாதாரண ஆள் கூடக் கேட்கலாம். ஆனால் அதற்கெல்லாம் திராவிட அகராதியில் பதில் கிடையாது. இதை இப்படியே நீட்டி “கருமம்” என்பதற்கு “கரு மம்மம்” அதாவது கரிய சோறு (வெள்ளைச் சோறு ஆரிய உணவு!) என்றும் தனித்தமிழ்ப் பொருள் தரலாம். திருக்குறளின் “வேள்வி”யும் “வேட்ட”லும், திராவிட உரைகளில் வேட்டைக் காரனில் இருந்து வேட்டி வரை என்ன வேண்டுமானாலும் ஆகலாம். சரி, புறநானூற்றின் “இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி” யாகம் தானே செய்தான் என்றால் அதற்கும் அதிர்ச்சிகரமான பல திராவிட உரைவிளக்கங்கள் வரலாம்! தேவர்களாக இருந்த “புத்தேளி”ரை திராவிடர்கள் “புதிய தேள்”களாகக் கூட ஆக்கி விடுவார்கள்! இந்த உரைகள் எழுதப்பட்ட காலத்தில், உலகத்திலேயே அதிக அளவு மொழிக் கோமாளிகள் தமிழ்நாட்டில் தான் இருந்திருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியும். இவர்களின் தலைவரை மொழிஞாயிறு என்றும் அழைத்து தமிழக அரசு கௌரவப் படுத்தியது. இன்றும் மெரீனா கடற்கரையில் அமாவாசை தினங்களில் நடு இரவில் சில பிசாசுகள் வந்து இதுபோன்ற தனித்தமிழ்ச் சொல்லாராய்ச்சிகள் செய்துகொண்டிருப்பதாகக் கேள்வி.

“செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென” என்னும் மணிமேகலையையும் “ஊரவர் கவ்வை எருவாக, அன்னைசொல் நீர்மடுத்து” என்ற திருவாய்மொழியும் போன்று, திருக்குறளின் சொற்களையும், பொருள்களையும் அதற்குப் பின்வந்த பல நூல்கள் பல இடங்களில் நேரடியாகவே எடுத்தாண்டுள்ளன. அதனால் திருக்குறளில் புழங்கும் இத்தகைய பழம்சொற்கள் ஏதோ உறைந்து கிடந்ததாக எண்ணி, அவற்றுக்குப் “புதுமைப்” பொருள் கூற முயன்ற செயல், இத்தகைய உரையாளர்களின் இலக்கிய, மொழியியல் அறியாமையையே காட்டுகிறது. கி.வா. ஜகன்னாதன் பதிப்பாசிரியாராக இருந்து கொணர்ந்த “திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு” ஒவ்வொரு குறளுக்கும், இத்தகைய மேற்கோள்களைத் தேடித் திரட்டித் தொகுத்திருக்கின்றது (இந்த நூல் பற்றிய எனது திண்ணைப் பதிவு)

மொத்தத்தில், திராவிட இயக்கம் நிகழ்த்த முயன்ற இந்தக் கலாசார அழிப்பு வேலையில் தமிழரின் உன்னத அறிவுக் கருவூலமான திருக்குறளும் தப்பவில்லை என்பதையே ஒரு இரங்கற்பா போன்று அந்தக் கட்டுரை சொல்லிச் செல்வதாக எனக்குத் தோன்றுகிறது.

Sunday, April 13, 2008

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! எதிர்ப்பீர் திமுக அரசின் கலாசார ஒழிப்பை!

சங்கடங்கள் தீர்க்க வரும் சர்வதாரி
சத்திய தர்மம் காக்க சக்தி தாராய்!
கங்கையுடன் காவிரியும், இமயம் தொட்டு
கடல்குமரி ஈறாகக் கைகள் கோர்த்து
பங்கமிலாப் பாரத நல் நாடுயர்க!
பாரெங்கும் பாதகர்கள் ஒழிந்து வீழ்க!
மங்களங்கள் பொங்கிடுக! மக்கள் கூட்டம்
மனையறங்கள் பாலித்து மகிழ்ந்து வாழ்க!


அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

காலம் காலமாக நம் முன்னோர் கொண்டாடி வரும் இந்தப் புத்தாண்டுத் திருநாளை அரசாணை மூலம் திரித்து உருமாற்ற முயலும் கருநாநிதி அரசின் அப்பட்டமான கலாசார ஒழிப்புத்திட்டம் மற்றும் அதன் உள்நோக்கங்கள் பற்றி ஏற்கனவே பழைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். இது பற்றி வரலாற்று அறிஞர், ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் எழுதிய சித்திரையில் தான் புத்தாண்டு என்கிற கட்டுரையையும் சுட்டியிருந்தேன்.

இந்நிலையில் இந்தப் புத்தாண்டு நாளில் திமுக அரசு இன்னும் சில அராஜக அரசாணைகள் மூலம் மக்களின் கலாசார உரிமைகளைக் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறது.

இன்று தமிழ்ப் புத்தாண்டு என்று பேசுவதும், எழுதுவதும் ஏதோ கொலைக் குற்றம் என்னும்படியான அல்பத் தனமான, கிறுக்குத் தனமான பயம் தமிழ்ச் சமூகம் முழுவதும், ஊடகங்கள் முழுவதும் பீடித்திருக்கிறது. "சித்திரைத் திருநாள் நிகழ்ச்சிகள்" என்கின்றன தொலைக் காட்சிகள். "சித்திரைச் சிறப்பிதழ்" என்று அறிவிக்கின்றன பத்திரிகைகள். காலை தொலைபேசி புத்தாண்டு வாழ்த்துத் தெரிவிக்கும்போது சென்னை உறவுக்காரப் பெண் ஒருத்தி "சித்திரைத் திருநாள்னு சொல்லுங்க" என்று பயந்து கொண்டே சொல்கிறார். எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா "விஷு வாழ்த்து" மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்கிறார்! என்ன நடக்கிறது இங்கே?



இன்று எங்கள் வீட்டு வாசல் கோலம்

இந்த அரசின் விஷக் கொடுக்குகளில் சிக்கியிருக்கும் தமிழகத்தின் முக்கிய கோயில்களில் எல்லாம் இன்று சிறப்புப் பூஜைகள் செய்யக் கூடாது, பஞ்சாங்கம் படிக்கக் கூடாது என்று இந்து அறநிலையத் துறை ஆணையிட்டியிருக்கிறது. ஜோதிட நம்பிக்கை உள்ளவர்கள் தான் பஞ்சாங்கம் படிப்பவர்கள், கேட்பவர்கள் - அவர்கள் கருநாநிதி அறிவித்த அபத்தப் புத்தாண்டு அறிவிப்பைப் சிறிதும் சட்டை செய்யவில்லை என்பது தெளிவு. ஆனால் அவர்கள் கொண்டாட விரும்பும் புத்தாண்டில் அவர்கள் நம்பும் சடங்கு ஒன்றிலும் குறுக்கிட்டு அரசு எப்படி ஆணையிட்டுத் தடுக்க முடியும்? அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம் இது!

இந்துக் கோயில்கள் எந்த நாளில், எந்தப் பண்டிகையை எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதையெல்லாம் இனிமேல் இந்த இந்து விரோத அரசே தான் முடிவு செய்யுமா? அதற்கான வெள்ளோட்டம் தான் இதுவா?

இன்னும் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்? எல்லா கோயில்களிலும் டிசம்பர் மாதம் கழுதை வாகனத்தில் ஏசு பவனி நடத்த வேண்டும், அன்று கூடவே பெரியார் என்ற பரிவார தேவதைக்கு வெங்காய அலங்காரம் செய்யவேண்டும் (அது குளிக்காது, அபிஷேகம் செய்தால் தொலைந்தார் அர்ச்சகர்!).

ஸ்டாலின் பட்டாபிஷேக உற்சவம், அழகிரி பாரி வேட்டை, கனிமொழி திருஅவதார தினம் இந்த எல்லா விழாக்களும் தான் தமிழர் தொன்மைத் திருநாள்கள். அவற்றை எல்லா கோயில்களும் கொண்டாட வேண்டும் என்றும் அரசாணை வரலாம்!

இனிமேல் தமிழ்நாட்டில் யாரும் மாவிலை கட்டக் கூடாது -சுப நிகழ்ச்சிகளில் எல்லாம் பனை ஓலை தான் கட்ட வேண்டும்.. ஏனென்றால் திராவிட நாடான இஸ்ரவேலுக்கு ஓசன்னா பாடிக் கொண்டு இயேசுவின் கூட்டம் நுழைந்த போது அந்த இலையைத் தான் ஆட்டிக் கொண்டு போனார்கள் என்பது பற்றி பத்துப் பாட்டிலும், எட்டுத் தொகையிலும் பலப் பல ஆதாரங்கள் உள்ளன என்று தமிழறிஞர்கள் ஆய்ந்து முடிவெடுத்துள்ளனர்.

மேலும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி முக்கனிகளில் பேரீச்சம்பழமும், ஆதாம் கடித்த ஆப்பிளும் சேர்க்கப் படுகின்றன. ஆரியக் கனிகளான மாம்பழத்தையும், பலாப் பழத்தையும் நீக்க தமிழக அரசு விரைவில் அரசாணை கொண்டுவரப் போகின்றது!

அடப் பாவிகளா! ஒரு மாநிலம் முழுவதும் இவ்வளவு பெரிய ஆட்டுமந்தைக் கூட்டமாகவா இருக்கிறது? தமிழ்ப் புத்தாண்டு என்று பேசும், எழுதும் அத்தனை பேரையும் அரசால் கைது செய்து விட முடியுமா? தண்டனை தான் வழங்க முடியுமா? என்ன செய்ய முடியும்? ஒரு அரசியல்வாதி, ஊடக நிறுவனம் கூடவா இதை எண்ணிப் பார்க்கவில்லை? வெட்கம் ! வெட்கம்!

ஆனால், ஆரவாரமில்லாமல் ஏராளமான தமிழர்கள் தங்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் புத்தாண்டைக் கொண்டாடியிருக்கின்றனர். பா.ஜ.க மற்றும் இந்து இயக்கங்கள் இன்று தமிழ்ப் பண்பாட்டுக் கலாசாரக் கொலையை எதிர்த்து சிறு குரல் கொடுத்திருக்கின்றன. வேப்பம் பூப் பச்சடியில் வந்து விழும் மாம்பழத் துண்டுகள் போல, ஆறுதல் அளிக்கும் சமாசாரம்.

அடுத்து வரும் அரசு, அது எந்த அரசானாலும் சரி, இந்தக் கேடுகெட்ட சட்டசபைத் தீர்மானத்தை ரத்து செய்யவேண்டும், அடுத்த தமிழ்ப் புத்தாண்டிலாவது தங்கள் உண்மைக் கலாசாரத்தின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளும் உணர்வுள்ளதாக தமிழர் கூட்டம் மாற வேண்டும் என்று இந்த நன்னாளில் அனைத்தையும் தரிப்பவளான சர்வதாரி, அன்னை பராசக்தியிடம் வேண்டிக் கொள்கிறேன். நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்.

Sunday, March 09, 2008

மலேசியாவிலிருந்து ஒரு சந்தோஷ செய்தி!

மலேசியாவில் இருந்து ஒரு நண்பர் அனுப்பிய மடல்:

தொடர்ந்து நீடிக்கும் விரக்திக்கும், கையாலாகாத்தனத்தின் வெறுப்புக்கும்இடையே, சில சந்தோஷங்கள், சின்ன சின்ன சந்தோஷங்கள் கிடைத்துவிடுகின்றன. அதை தெரிந்தவர், தெரியாதவர்களுக்கிடையே பகிர்ந்து கொள்வதிலும் ஒருசந்தோஷம். இன்று காலைச் செய்தி, டத்தொ சாமி வேலு, மலேசிய அரசின் ஒரே தமிழ் மந்திரி, தேர்தலில் தோற்றுப் போனது தான். தன் சுகத்துக்காக, பதவிக்காக, தன் மக்களைக் காட்டிக் கொடுக்கும் துரோகப் பரம்பரையை அன்றைய ஜஸ்டீஸ் பார்ட்டியில் பார்த்தோம். இன்றைய கழகங்கள், தமிழ் நாட்டு கம்யூனிஸ்ட் வகையறாக்களிடம் பார்த்தோம் பார்த்து வருகிறோம். இவர்களுக்கு அழிவு காலம் வராது போலிருக்கிறது. ஆனால், சாமி வேலு தோற்றதில் எனக்கு பரம சந்தோஷம். அவருக்கு தமிழ் நாட்டில் மரியாதை தொடுத்தது அங்குள்ள உலகத் தமிழ் ஈனத்தலைவர் :))

Friday, March 07, 2008

சிதம்பர விவகாரம்: ஆன்மிகத்துக்கு விடுக்கப்பட்ட சவால் - அர்ஜுன் சம்பத்

சமீபத்திய சிதம்பரம் நிகழ்வுகளின் பின்னணியில் திரு. அர்ஜுன் சம்பத் இன்றைய தினமணி நாளிதழில் எழுதியிருக்கும் ஒரு அருமையான கட்டுரையை இங்கு மீள்பதிப்பிக்கிறேன்.

தமிழகத்தில் இந்து எழுச்சியின் நாயகர்களில் ஒருவரான அர்ஜுன் சம்பத் அவர்களின் கருத்து, தெய்வ நம்பிக்கை உள்ள அத்தனை தமிழர்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.

ஆன்மிகத்துக்கு விடுக்கப்பட்ட சவால் -
அர்ஜுன்சம்பத் - தலைவர் - இந்துமக்கள் கட்சி





சைவத்தின் தலைநகரம் என்று போற்றப்படும் சிதம்பரத்தில் தமிழுக்கும், சைவத்துக்கும் ஒரு மிகப் பெரிய இடைவெளியை உருவாக்கும் சதித் திட்டம் திட்டமிட்ட ரீதியில் அரங்கேறியுள்ளது. சமீபத்தில் சிதம்பரம் கோயிலில் நடைபெற்ற தேவாரம் சர்ச்சையின் நோக்கம், ஆன்மிகமாக இல்லாமல் நாத்திகவாதிகளின் கீழ்த்தரமான சதியாக இருப்பதுதான் கவலை அளிக்கிறது.

சிதம்பரம் திருக்கோயில் மனித உடலையொத்த வடிவமைப்பு உடையது. முதுகுத் தண்டு கொடி மரமாகவும், கோபுரம் இறைவனின் திருப்பாதமாகவும், சிற்சபை (நடராஜப் பெருமான் திருநடனம் ஆடுகின்ற பகுதி) இதயப் பகுதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடராஜர் தத்துவம் அணு தத்துவங்களோடு பொருந்திப் போகிறது. சிவதாண்டவம் என்னும் நடராஜரின் நடன அசைவு உலக இயக்கமாகக் கருதப்படுகிறது.


இந்தத் தில்லை வனத்தில் யோக சாஸ்திரத்தில் நிபுணத்துவம் பெற்ற பதஞ்சலி முனிவருக்கும், ஆன்மிகத்தில் பெரும் நிபுணத்துவம் பெற்ற வியாக்ரபாதருக்கும் (புலிக் கால் முனிவர்) இறைவன் தனது திருநடனக் காட்சியை அருளியிருக்கிறான் என்கிறது தலபுராணம்.


சந்தானக் குரவர்கள் நால்வரும் சமய உண்மைகளையும், ஆன்மிக வழிமுறைகளையும் இங்கே வடிவமைத்து வைத்துள்ளனர். மூவர் பாடிய தேவாரம் இந்தத் திருக்கோயிலில் உள்ள ஓர் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. மாமன்னன் ராஜராஜ சோழன், நம்பியாண்டார் நம்பிகள் துணையோடு தில்லைவாழ் அந்தணர்களின் சம்மதத்தோடு தேவார பதிக ஓலைகளை மீட்டெடுத்து தமிழ்கூரும் நல்லுலகம் எங்கும் பரவச் செய்தான்.

சைவ சமய குரவர்கள் நால்வருக்கும், தில்லைவாழ் அந்தணர்களுக்கும் எப்போதும் எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. தில்லைவாழ் அந்தணர்கள் சிவபெருமானின் அம்சமாகக் கருதப்படுபவர்கள். எனவேதான் சுந்தரமூர்த்தி நாயனார் "திருத் தொண்டர் தொகை' பாடுகிறபோது தொண்டர்தம் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் இறைவனே "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்' என அடியெடுத்துக் கொடுக்கிறார்.

தில்லைவாழ் அந்தணர்கள் சைவத்துக்கும், தமிழுக்கும் பெரும் தொண்டு புரிந்தவர்கள். ஆதிசைவ அந்தணர் மரபில் தோன்றிய இவர்கள் சுத்த தமிழர்கள் ஆவார்கள். சந்தானக் குரவர் நால்வரில் கொடிக் கவி பாடி சிதம்பரத்தில் கொடியேற்றிய உமாபதி சிவம் தில்லைவாழ் அந்தணர் குடும்பத்தைச் சார்ந்தவர்.


பொதுவாக அந்தணர்கள் (பிராமணர்கள்) வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்பது ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் வெளிப்பாடாகும். இந்தியத் திருநாட்டின் ஆன்மா சமயத்தில் உள்ளது. சமயத்தைப் பேணுபவர்கள் அந்தணர்கள். ஆகவே அந்தணர்களை சமுதாயத்தில் இருந்து தனிமைப்படுத்திவிட்டால் இந்தியாவை எளிதாக அடிமைப்படுத்தி விடலாம் என்கிற காரணத்தால் பிராமணர்களுக்கு எதிரான கருத்துகளை வரலாற்றில் புகுத்தியுள்ளனர் ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள்.

இப்போதும் மெக்காலேயின் வாரிசுகளும், திராவிட இயக்கத்தினரும், கம்யூனிச இயக்கவாதிகளும் மேற்கண்ட பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகி பிராமணர்கள் வேறு, தமிழர்கள் வேறு என பிரசாரம் செய்துவருகின்றனர்.


கடவுள் இல்லை என்று சொல்கிற நாத்திகர்கள், சிதம்பரம் கோயில் வழிபாட்டு முறைகளில் சீர்திருத்தம் செய்ய முயற்சிப்பது நமது சமய நம்பிக்கைகளை அழிக்கும் முயற்சியாகும்.

சிதம்பரம் கோயிலில் சிற்சபை (சிற்றம்பலம்) என்பது இறைவனின் கருவறையாகும். சிற்சபைக்கு முன்பு பொற்சபை (பொன்னம்பலம்) உள்ளது. வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத வகையில் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மட்டும்தான் அனைவரும் சாதிபேதமின்றி கருவறை (சிற்சபை) வரை சென்று இறைவனை வழிபடலாம்.

பாரம்பரியமாக தேவாரம் பாடுவதற்கு அங்கே இடமிருக்கிறது என்பது மட்டுமல்ல, தேவாரம் தினசரி பாடவும்படுகிறது. காசி திருப்பனந்தாள் திருமடத்திலிருந்து ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு திருமுறை பாராயணம் நடைபெறுகிறது என்பது அன்றாடம் நடைபெறும் உண்மையாகும்.
ஆனால் தற்போது சிதம்பரம் திருக்கோயிலில் தேவாரம் பாடுவதற்குத் தடை இருப்பது போலவும், சிதம்பரம் தீட்சிதர்கள் தமிழுக்கு எதிரானவர்கள் போலவும் சித்திரிக்கப்படுகிறது. சிற்றம்பல மேடை என்கிற பெயர் சிற்சபைக்கு சமீப காலத்தில் திராவிட இயக்கங்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளால் ( மகஇக) சூட்டப்பட்ட பெயராகும்.


நீண்ட காலமாகவே திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கோயில்களை அவமதிக்கும் நோக்கத்தோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள், "தில்லை நடராஜரையும், ஸ்ரீரங்கநாதரையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ, அந்நாளே தமிழகத்தின் பொன்னாள்' என்று சொல்லி இறை துவேஷத்தையும், பிராமண துவேஷத்தையும் வளர்த்து வருகிறார்கள். கடந்த 25 ஆண்டுகளாக சிதம்பரம் நடராஜர் கோயிலிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் கருவறை நுழையும் போராட்டம் என அறிவித்து ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து ரங்கநாதருக்கு செருப்பு மாலை போட்டு அசிங்கப்படுத்தி அருவெறுக்கத்தக்க செயலைச் செய்தவர்கள் இவர்கள்.

இப்படிப்பட்ட மகஇகவினரும், திராவிட கழகத்தினரும் மீண்டும் கருவறைக்குள் நுழைந்து இறைவனை அவமதிக்கும் உள்நோக்கத்தோடுதான் ஆறுமுகசாமி என்கிற ஓர் ஆன்மிகவாதியை முன்னிறுத்தி சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடவேண்டும் என்கிற போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றக் கூடிய மரபுகளையும், சமய நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் மீற வேண்டும் என்பது இவர்கள் நோக்கம். குறிப்பாக ஹிந்துக் கோயில்களை சர்ச்சைக்குரிய இடங்களாக மாற்றுவது இவர்களின் குறிக்கோள். அதற்கு ஆறுமுகசாமி உள்ளிட்ட சில ஆன்மிகவாதிகளும் பலியாகியுள்ளனர். ஊடகங்கள் போராட்டம் நடத்தும் மகஇகவினரையும், திராவிட இயக்கத்தவரையும் சிவனடியார்கள் எனக் குறிப்பிடுவதுதான் வேடிக்கை.

இறைமறுப்புக் கொள்கை உடையவர்களும், மத நம்பிக்கை இல்லாதவர்களும் ஆன்மிக விஷயங்களில் தலையிட வேண்டிய அவசியம் என்ன? தமிழுக்காக என்கிற கோஷம்தான் காரணம் என்றால், ஏனைய மதங்களிலும் தமிழில்தான் வழிபாடு என்று சொல்லித் தட்டிக் கேட்கும் தைரியம் இவர்களுக்கு இருக்கிறதா?


சொல்லப்போனால், தமிழுக்கு மிகப்பெரிய தொண்டாற்றியிருப்பது இந்து மதம்தான். தில்லை நடராஜரை பீரங்கி வைத்துப் பிளக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பவர்கள், சிவபெருமான் புகழ்பாடும் தேவாரத்துக்கு வக்காலத்து வாங்குவது, ஆடு நனைகிறதே என்று ஓநாய் கண்ணீர் விட்ட கதையை நினைவுபடுத்துகிறது.

சிதம்பரம் திருக்கோயிலின் பூஜை உரிமைகள் தில்லைவாழ் அந்தணர்களுக்கு (தீட்சிதர்) பாரம்பரியமாக உரியதாகும். அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், அவர்களை மிரட்டி பணிய வைக்கும் முறையிலும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதுதான் உண்மை.

தில்லைவாழ் அந்தணர்களின் பாரம்பரிய உரிமையான சிதம்பரம் நடராஜர் கோயிலை, அறநிலையத்துறையின் கண்காணிப்பில் கொண்டுவர வேண்டும் என்கிற முயற்சி, திமுக ஆட்சிக்கு வந்ததுமுதலே தொடங்கியது. நகரத்தார்களின் நன்கொடைகளும், பக்தர்களின் காணிக்கையும்தான் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் பராமரிப்புக்கு உதவுகின்றன. தில்லைவாழ் அந்தணர்களின் வாழ்வும் இந்த ஆலயத்துடன் பின்னிப் பிணைந்துதான் தொடர்கிறது. இவர்களிடமிருந்து ஆலய நிர்வாகம் அரசின் பொறுப்பில் வந்தால்தான் அரசியல்வாதிகளுக்குப் பிழைப்பு நடக்கும் என்பதால், அரசியல் கட்சிகளும் இந்தப் பிரச்னையைப் பெரிதுபண்ணி தங்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள முயல்கின்றன.

சிதம்பரம் திருக்கோயிலும், தில்லைவாழ் அந்தணர்களும் தமிழர்களின் ஆன்மிக அடையாளங்கள். தீட்சிதர்களின் தாய் மொழி தமிழே. சோழ மன்னர்களுக்கு முடிசூட்டும் உரிமை தில்லைவாழ் அந்தணர்களுக்கே உரியது.


ஒருமுறை போரில் சோழ மன்னர்கள் தோற்று நாட்டை இழந்தபோது, வென்ற அன்னிய மன்னனுக்கு முடிசூட்ட மறுத்து தமிழ் மண்ணுக்கு விசுவாசம் காட்டியவர்கள் இந்தத் தில்லைவாழ் அந்தணர்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அதைப்பற்றி இவர்கள் ஏன் பேசுவதில்லை?

ஆட்சியாளர்களுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ, அதிகாரிகளுக்கோ சமய விஷயங்களில் உத்தரவு போடுவதற்கு உரிமை கிடையாது. அப்படியே பூஜை முறைகளிலும், ஆலய நிர்வாகங்களிலும் ஏதேனும் மாற்றம் செய்யவேண்டும் எனில் சமயத் தலைவர்களும், குருமார்களும், மடாதிபதிகளும், ஆதீனங்களும் கூடி முடிவெடுக்கலாம். அதுதான் முறை. இறை நம்பிக்கையற்றவர்கள், இறை வழிபாடு பற்றிப் பேசும் அருகதையற்றவர்கள்.

தமிழின் பெயரால், தேவாரத்தின் பெயரால் சிதம்பரம் கோயிலை சர்ச்சைக்குரியதாக மாற்றி வருகிறார்கள். இது இறை நம்பிக்கைக்கு விடுக்கப்பட்ட சவாலே தவிர தில்லைவாழ் அந்தணர்களுக்கு எதிரானது என்று நினைத்தால் தவறு. இந்த விஷயத்தில் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ஒன்றுபட்டு செயல்பட்டாக வேண்டும்.

திருச்சிற்றம்பலம்.

Friday, February 15, 2008

ஜெயமோகன் பதிவும், ஆனந்த விகடனும்

ஜெயமோகன் எம்.ஜி.ஆர், சிவாஜி இவர்களைப் பற்றி எழுதியிருக்கும் தொப்பி, திலகம் ஆகிய இரு பதிவுகளையும் படித்து கண்களில் இருந்து கண்ணீர் வருமளவு சிரித்தேன். கிரீஷ் கர்நாட் நாடகங்களில் வரும் சில புராண கேலிகள் பற்றி "நாஸ்திக வாடையில்லாமல் சிரிக்கவைப்பவை" என்று சொல்வார்கள்। ஜெ.மோவின் இந்தப் பதிவுகளைப் பார்த்ததும் தமிழ்நாட்டின் போலித் தன வாடைகள் ஏதும் இல்லாதவையாக அவை எனக்குத் தெரிந்தன. ஹாட்ஸ் ஆஃப் ஜெ.மோ! இதற்கு முன்பு இந்த நடிகர்கள் பற்றிய இதே போன்ற, ரசிக்கும் படியான விமர்சனத்தை நான் படித்தது "புலிநகக் கொன்றை" நாவலுக்குள் ஒரு இடத்தில் தான் :))

ஆனால் "தமிழகத்தின் முகவரி" என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும், நகைச்சுவையைத் தன் முக்கிய அம்சமாகப் பிரகடனம் செய்யும் ஆனந்த விகடன் ஜெயமோகன் மீது அவதூறும், குற்றச்சாட்டும் சுமத்தியிருக்கிறது.. சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.

'கருணாநிதி இலக்கிய வாதியே இல்லை!' என்பது தொடங்கி, 'பெரியார், தமிழ்ப் பண்பாடு பற்றிய ஆரம்ப அறிவுகூட இல்லாதவர்!' என்பது வரை ஜெயமோகனின் தடாலடி ஸ்டேட்மென்ட்கள் பிரபலமானவை.

'அப்படி இவருக்கு அந்த இரண்டு சகாப் தங்களின் மீது என்னதான் பகை?' என்று படிப்பவர்கள் குமுறிக் கொந்தளிக்கும் அள வுக்கு

. ..ஒரு பொறுப்பான எழுத்தாளர் தன் அடையாளங்களைச் சொல்லி... அதே சமயம் தன் ஆவேசத்தை நியாயப்படுத்தக் காரணங்களும் சொல்லாமல் இப்படி சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்திருப்பதை என்னவென்று சொல்வது?

தமிழகத்தின் இலக்கிய ஆளுமை ஒருவர் மீது வெறுப்பைத் தூண்டும், அதன் மூலம் வன்முறையைத் தூண்டும் சாத்தியம் கொண்ட இது போன்ற சொல்லாடல்களின் மூலம் ஆனந்த விகடன் தான் தன் பொறுப்பற்ற தன்மையை நிரூபிக்கிறது. கருணாநிதி, ஈவேரா பற்றிய ஜெ.மோ விமர்சனங்கள் தடாலடி அல்ல, அவற்றுக்குப் பின் தீர்க்கமான, தெளிவான அலசலும், ஆய்வு நோக்கும் உள்ளது. அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை என்கிற இந்த அருமையான கட்டுரை ஒரு உதாரணம்.

உலகெங்கும் கோடிக் கணக்கான மக்கள் தெய்வ அவதாரமாக வழிபடும் ராமபிரானையும், ராமாயணத்தையும் பற்றி தமிழக முதல்வர் கருநாநிதி உதிர்த்த அவதூறுகளைப் பற்றி ஒரு வரிகூட எழுதத் தோன்றாத இந்தப் பத்திரிகைக்கு இரண்டு பழைய மசாலா கதாநாயகர்கள் பற்றிய ஒரு விமரிசனத்தைப் பார்த்து இப்படி உள்ளம் குமுறுகிறதா? வெட்கக் கேடு.

ஜெ.மோ தனது இன்னொரு பதிவில் "இன்றைய இலக்கியத்தில் இத்தகைய பகடி மிக முக்கியமான ஒரு அம்சம்." என்று கூறுகிறார். உலகம் முழுவதும் சுதந்திரமான சமூகங்களில் இன்றைக்கு ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்தாகும் இது.

"... His renowned eccentricities were owed in large measure to his mother, a simple woman from the country who lived for her rituals, which could last for months on end and “came with a series of fasts and half-fasts”। From this ensued his devotion to diet। He was a man who liked eating but who pledged himself to asceticism and simplicity।

One of Gandhi’s multitude of disciples was “a foolish man”, Vinoba Bhave, whose brain was softened by emulation and self-mortification, and who had to be dragged from the spinning wheel lest he made himself ill.

“He had lived for so long as a parasite, and away from the world, that he had become a kind of half-man, and he thought that Gandhi had been like that too. Vinoba had no means of knowing that Gandhi was a man of appetite, and his sexual abstinence hadn’t come easily. .."


இந்த வரிகளை எழுதிய "பொறுப்பற்ற ஆசாமி"க்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப் பட்டுள்ளது என்று ஆனந்தவிகடன் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. இந்திய தேசம் முழுதும் போற்றும் இரண்டு பெரும் தலைவர்களைப் பற்றி இப்படி எழுதிய பின்னரும், வி.எஸ்.நய்பால் மீது இங்கே வைக்கப் பட்ட விமரிசனங்கள், இந்த விகடன் வரிகளை விட மிகவும் பண்பட்டவையாக இருந்தன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆ.வி கட்டுரையைப் பார்த்து நொந்துபோன ஒரு நண்பர் அடித்த கமெண்ட் -

.. உண்மையில் ஜெமோ-வின் அந்த எம்சியார், சிவாஜி பற்றிய கட்டுரைகளைப் படித்துவிட்டு சிரித்துக் கொண்டிருந்தேன்.. ஹப்பாடி, இனிமேலாவது இவர்கள் போன்றஆளுமைகளைக் கடவுளாகப் பார்க்கும் தமிழர்களின் கெட்ட பழக்கம் கொஞ்சம்கொஞ்சமாகக் குறையும் என்று நினைத்தேன். ஆ.வி வெளியிட்டிருக்கும்கட்டுரையைப் பார்த்தால் அதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்றுநினைக்கிறேன்... இனிவரும் காலங்களில் சிம்பு, தனுஷ் போன்ற கடவுள்களும்,தென்னாட்டு டி-காப்ரியோ, தென்னாட்டு ப்ரூஸ்லீக்களும் உலா வருவார்கள்என்று எதிர்பார்க்கலாம். [ஏற்கனவே தன்னை சிம்பு ஒரு மகா பெரியமேதாவியாகத்தான் சொல்லிக்கொள்கிறார்!]

Thursday, February 07, 2008

அத்வானி, சானியா அச்சுறுத்தல்கள்: நம் அடிப்படை உரிமைகளுக்கு விடப்பட்டுள்ள சவால்

இந்த வாரம் இந்தியாவின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும் இரண்டு பெரிய அச்சுறுத்தல்கள் வந்திருக்கின்றன.

பா.ஜ.க தலைவர் அத்வானி உள்நாட்டு பாதுகாப்பு, தீவிரவாதத்தை நேர்கொள்வதில் இப்போதைய அரசின் தோல்விகள் இவற்றை முன்னிறுத்தி நாடு முழுவதும் 13 இடங்களில் பேரணிகள் நடத்தப் போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து தற்கொலைப் படைத் தாக்குதல்கள் உள்ளிட்ட பல விதங்களிலும் அவரது உயிருக்கும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உயிருக்கும் ஆபத்து இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அறிவித்தார். இது வழக்கமான எச்சரிக்கை மட்டுமல்ல, உளவுத்துறையால் உறுதி செய்யப்பட்ட தகவல் என்பதால் பா.ஜக இந்தப் பேரணிகளை தீவிர மறுபரிசீலனை செய்யவேண்டும், தேவைப்பட்டால் ரத்து செய்யவும் வேண்டும் என்று எடுத்துரைக்கப் பட்டது. மோடி மற்றும் அத்வானிக்கு அளிக்கப் படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் படும் என்றும் செய்திகள் கூறுகின்றன.

அரசுத்துறையின் தகவல்கள் உண்மையாகவே இருக்க வேண்டும். பாஜக பேரணியை மத்திய அரசு குலைக்கப் பார்க்கிறது என்று சில கட்சித் தலைகள் பேசும் அற்ப அரசியலை ஒதுக்கி விடலாம். ஆனால் இதன் மூலம் அத்வானி மேற்கொண்டிருக்கும் பிரசாரம் எந்த அளவுக்கு அத்தியாவசியமானது, உண்மையானது என்பது நிரூபிக்கப் பட்டு விட்டது. இந்த தேசத்தின் இறையாண்மை, சுதந்திரம், முன்னேற்றம் இவற்றின் மீது விடாமல் போர்தொடுத்து வரும் ஜிகாதி தீவிரவாதத்தை எதிர்த்து பிரசாரம் செய்வது என்பதே அபாயகரமான செயலாக ஆகிவிட்டிருக்கிறது. அதுவும், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்கள் என்ன செய்ய முடியும்?

முட்டாள் தனத்திற்காக ஒரு சாராரால் கேலிசெய்யப் பட்டாலும் “நாம் அவர்களை சாம்பலாக்குவோம்” (We will smoke ‘em out) என்று தீவிரவாதிகளுக்கு முஷ்டியை மடக்கிக் காட்டி அதைச் செய்தும் காட்டும் கௌபாய் ஜார்ஜ் புஷ் போன்ற துணிவும், உறுதியும் வாய்ந்த அரசியல் தலைமை நமக்கு வாய்க்கவில்லை தான். அதற்காக விதியை நொந்துகொள்வோம். ஆனால் இந்த பலகட்சி, பல கொள்கை ஜனநாயக நாட்டில், ஜிகாதி தீவிரவாதத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடையே உண்டாக்கி, அதை ஒரு அரசியல், தேர்தல் பிரசினையாக்குவதற்குக் கூட முதல் கட்டத்திலேயே முட்டுக்கட்டை போடும் அளவுக்கு இந்த தீவிரவாத வலைப்பின்னலின் ஊடுருவல் இருக்கிறது என்பது வெட்கக் கேடான விஷயம்.

இந்திய விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த “பெங்களூர் ஓபன்” போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று டென்னிஸ் இளம்புயல் சானியா மிர்சா அறிவித்து ஒரு பெரிய குண்டைப் போட்டிருக்கிறார். இது மட்டுமல்ல, இனிமேல் இந்தியாவுக்காக வெளிநாடுகளில் விளையாடுவேன், இந்தியாவில் எங்குமே தைரியமாக விளையாடுவதற்கான சூழல் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

டென்னிஸ் வீராங்கனைகளுக்கே உரிய கச்சிதமான பாவாடையை அவர் அணிவது இஸ்லாமுக்கு எதிரானது என்று லக்னோவிலிருந்து லாலாபேட்டை வரை ஒரு முல்லா, மௌல்வி விடாமல் பிரசாரம் செய்து முடித்தாயிற்று. இந்த “ஹராமை” அவர் தொடர்ந்து செய்து வருவதற்கு எதிராக பல ஃபத்வாக்களும் விடப் பட்டிருக்கின்றன. அவர் போகுமிடங்களில் எல்லாம் இது பற்றிக் கேள்விகள் கேட்கப் பட்டு அவரை சங்கடத்திலும், அசௌகரியத்திலும் ஆழ்த்துகிறார்கள். இது போதாதென்று ஹைதராபத் மசூதி ஒன்றின் பின்னணியில் அவர் ஒரு விளம்பரப் படத்தில் நடித்தார் என்பதற்காக அவர் மீது வழக்குகள், மிரட்டல்கள். (அந்தப் புகைப் படத்தைப் பார்த்தால் அதில் மசூதி எங்கோ தூரத்தில் இருக்கிறது - அதற்கே இந்தக் கூப்பாடு). இந்த முரடர்கள் விளையாட்டு மைதானத்தில் வந்து ஏதாவது பைப் குண்டுகளை வீசி எறிந்து விட்டால் என்ன செய்வது என்று சானியா உண்மையிலேயே கவலைப் படுவதாகத் தெரிகிறது.




இத்தனைக்கும் சாதாரண முஸ்லீம்கள் சானியா போன்று ஒரு துடிப்பான, அழகான விளையாட்டு வீராங்கனையை தங்கள் ‘icon” ஆக நினைப்பதில் பெருமைப் படுகிறார்கள். பல முஸ்லீம் கடைகள், வாகனங்கள், நிறுவனங்களில் அவரது குறுகுறு எழில்முகத்தை ப்ளோ அப்களில் பார்க்கிறேன். இத்தகைய வெகுஜன அங்கீகரித்தல்கள் தரும் தைரியத்தை விட சில முட்டாள் முல்லாக்களின் பயமுறுத்தல்களும், அவற்றை நிறைவேற்றும் தீவிரவாத குழுக்களும் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீராங்கனையை முடக்கிப் போடும், நசுக்கும் அவலம் இந்த நாட்டில் நிகழ்கிறது.

அயன் ராண்ட் தமது Atlas Shrugged நூலில் ஒரு சுவாரசியமான கற்பனையை முன்வைக்கிறார். திறமைசாலிகள், சாதனையாளர்கள், பெரும் கனவுகளைக் காண்பவர்கள் (dreamers of dreams) தங்கள் திறனும் ஊக்கமும் முடக்கப் படும் சூழலில், அதை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்தால் என்ன ஆகும் என்று. சாதனையாளர்களை நசுக்கும் தேசம் அவர்களால் புறக்கணிக்கப் பட்டு, பாழ்படும்.

நேற்று பிப்ரவரி-6 புதன் அன்று ஜபல்பூரில் அத்வானியின் முதல் பேரணி நடந்து முடிந்திருக்கிறது. பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சலை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை என்பது உள்ளிட்ட பல கேள்விகளோடு இந்தப் பிரசாரம் தொடங்கியிருக்கிறது. அத்வானியின் அனைத்துப் பேரணிகளும் சில தேதி மாற்றங்களுடன் முன்பு அறிவிக்கப் பட்ட படியே திட்டமிட்ட எல்லா இடங்களில் நடைபெறும் என்ற அறிவிப்பு இந்த இருளில் ஒரு ஒளிக்கீற்றாக வந்திருக்கிறது.

இதே போன்று சானியாவும் தன் முடிவை மாற்றிக் கொள்வாரா? சானியாவின் உரிமைகள் நிலைநாட்டப் படுவது இந்த சுதந்திர நாட்டின் முதன்மையான கடமை.

Friday, January 25, 2008

புத்தாண்டு சர்ச்சை: கருநாவின் கலாசார ஒழிப்பு திட்டம்

தை மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப் போவதாக தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று கவர்னர் உரை மூலம் தெரிவித்து, கிறிஸ்தவ மிஷநரிகள் பல பத்தாண்டுகளாக தமிழகத்தில் நிகழ்த்தி வரும் கலாசார திரிப்பு, ஒழிப்பு முயற்சிகளுக்கு இன்னொரு அடித்தளம் அமைத்துத் தந்திருக்கிறார். 1921-லேயே சில தமிழறிஞர்கள் இது பற்றி "விவாதித்து" புத்தாண்டைப் பற்றிய கருத்துக் கூறினார்களாம்! "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய" தமிழ்க்குடியினர் சமீபத்தில் தங்கள் புத்தாண்டு எது என்று குழம்பி, சர்ச்சை செய்தார்கள் என்று கூறுவதற்கு வெட்கமாயில்லையா?

நேற்றைய தினமணி இதழில் வரலாற்று அறிஞர், கல்வெட்டு ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் "சித்திரையில் தான் புத்தாண்டு" என்றொரு அருமையான கட்டுரை எழுதியுள்ளார். அதில் உள்ள் குறிப்புகளின் படி "தைப் புத்தாண்டு" என்கிற கருத்தாக்கம் ஒரு திட்டமிட்ட முழுமையான கிறிஸ்தவ மிஷநரிகளின் சதி என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. இதற்கு பண்டைத்தமிழ் வரலாறு, இலக்கியம், மரபுகள், நாட்டார் வழக்கு எதிலும் ஆதாரம் கிடையாது.

இன்னொரு முக்கிய விஷயம். பாரத நாடு முழுவதும் பரவியிருக்கும் தேசிய, கலாசாரக் கூறுகளில் இருந்து தமிழ்ச் சமுதாயத்தைப் பிரிக்கும் முயற்சியும் ஆகும் இது. நாம் கொண்டாடும் சித்திரை முதல் நாள் (ஏப்ரல் 14, 15ம் தேதிகளில் வரும்) தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் பல பகுதிகளிலும், ஏன் சில அண்டை நாடுகளிலும் கூட புத்தாண்டு தான்.

இந்து மரபின் சூரிய காலக்கணக்கு (Solar Calendar) முறை "சூர்ய சித்தாந்தம்" என்ற தொன்மையான அறிவியல் நூலில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் சூரிய ஆண்டின் முதல் நாள் புத்தாண்டு என்றாகிறது. தமிழகம் மட்டுமல்ல, கேரளம், மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, திரிபுரா, மணிப்பூர், அஸ்ஸாம், பஞ்சாப், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய எல்லா இடங்களிலும் இந்த நாள் தான் புத்தாண்டாக மிக நெடுங்காலமாக கொண்டாடப் படுகிறது.

வங்காளத்தில் நபோ பர்ஷோ (Nôbo bôrsho). பஞ்சாபில் பைசாகி (Baisakhi). அஸ்ஸாமில் ரோங்காலி பிஹு (Rongali Bihu). கேரளாவில் விஷு.

இது மட்டுமன்று, இந்து, புத்த சமயப் பின்புலம் கொண்ட தாய்லாந்து, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளிலும் இந்தப் பண்டிகை வேசாக், வைசாக், விசாக பூஜா (Vesak, Waisak, Visaka Bucha ) என்ற பெயர்களில் புத்த பூர்ணிமா நாளுடன் இணைத்துக் கொண்டாடப் படுகிறது.. இந்த எல்லா சொற்களும் தமிழின் வைகாசி என்ற சொல்லுடன் தொடர்புடையவை. சூரியப் புத்தாண்டையும் சந்திர-சுழற்சி அடிப்படையிலான மாதங்களையும், பண்டிகைகளியும் பின்பற்றுவதால் இரண்டாம் மாதமான வைகாசி இந்த நாளன்று வந்துவிடுகிறது.




தமிழ் மாதங்களின் பெயர்களும், பாரதத்தின் பாரம்பரிய மாதப் பெயர்களே. எல்லா மொழிகளிலும் இந்த மாதப் பெயர்கள் (சில ஒலிக்குறிப்பு வேறுபாடுகள் தவிர) ஒன்று போலவே உள்ளன.

சம்ஸ்கிருதம் - தமிழ்
--------------------------

சைத்ர - சித்திரை (வங்காளியில் சொய்த்ரோ - Choitro)
வைசாக - வைகாசி
ஜ்யேஷ்ட - ஆனி (ஜ்யேஷ்டா அல்லது கேட்டை நட்சத்திரத்திற்கு தமிழில் ஆனி என்றும் ஒரு பெயர் உண்டு)
ஆஷாட - ஆடி
சிராவண - ஆவணி
ப்ரோஷ்டபத - புரட்டாசி
ஆஸ்வயுஜ - ஐப்பசி
கார்த்திக - கார்த்திகை
மார்கசிர - மார்கழி
புஷ்ய - தை (8வது நட்சத்திரமான புஷ்யம் (பூசம்) என்பதற்குத் தமிழ்ப் பெயர் தை. இந்த மாதத்தின் பூசம் தமிழர்களின் தொன்மையான பண்டிகை)
மாக - மாசி
பல்குன - பங்குனி


எனவே, தமிழ்ப் புத்தாண்டு என்பது பாரதத்தின் தேசிய கலாசாரத்தின் ஒரு அங்கமே. இது இட்டுக் கட்டும் சமாசாரமல்ல, இந்த எல்லா மாநில மக்களும் நன்கு அறிந்த விஷயம். உதாரணமாக வங்காளப் புத்தாண்டு பற்றிய இந்தக் கட்டுரையில், ஆசிரியர் மறக்காமல் தமிழ் மற்றும் மற்ற புத்தாண்டுகள் பற்றிக் குறிப்பிடுவதைக் கவனியுங்கள்.

இந்தக் குறைந்தபட்ச கலாசார அறிவு கூட தமிழகத்தை ஆளும் "கலைஞர்" கருநாநிதிக்கு இல்லையா? ஒரு மாநில அரசு காலங்காலமாக இருந்து வரும் கலாசாரப் பிணைப்பை திட்டமிட்டு அறுத்தெறிய ஏன் முயலவேண்டும்? இதில் என்ன உள்நோக்கம் உள்ளது? மார்க்சிஸ்ட்கள் ஆளும் மே.வங்கத்திலும், கிறிஸ்தவத் தாக்கம் அதிகம் உள்ள கேரளத்திலும் கூட இவ்வளவு அப்பட்டமான ஒரு கலாசார அழிப்பு வேலை கண்டிப்பாக சகித்துக் கொள்ளப் படாது.. சகித்துக் கொள்வதென்ன, இப்படி ஒரு பேச்சே எழாது.

ஆனால், தமிழகத்தில் கிறிஸ்தவ மிஷநரி சதிக்கும்பல்கள் மற்றூம் அவர்கள் கைப்பாவையாவும், அடிவருடிகளாகவும்ஆகிவிட்ட திராவிட இயக்கங்கள் அதன் தலைவர்கள் - இந்த இரண்டு இந்திய தேசிய விரோத சக்திகளும் கைகோர்த்துக் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.

மத்திய அரசின் கலாசாரத் துறை இதில் குறுக்கிட வேண்டும். இந்திய தேசியம் மீதும், தமிழ்க் கலாசாரத்தின், மரபுகளின் தொன்மையின் மீதும் கொஞ்சமாவது அபிமானம் உள்ள ஒவ்வொருவரும் தமிழக அரசின் இந்த அறிவிப்பை எதிர்க்க வேண்டும். இது சட்டசபையில் நிறைவேற்ற விடக் கூடாது.

அனைத்து அரசியல் கட்சிகள். இந்து இயக்கங்கள், சமூக, கலை, கலாசார அமைப்புகள் அனைத்தும் இதில் ஈடுபடவேண்டும். ஆயிரமாயிரம் ஆண்டுக் காலத் தொன்மைக் கலாசாரம் இந்த அற்ப அரசியல் அயோக்கியர்களின் கையால் சிதைக்கப் படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

Thursday, November 22, 2007

வாடிக்கை கவுடா, வாடிய தாமரை: கர்”நாடக” அரசியல்

“காலையில் மலர்ந்த தாமரைப் பூ இப்படி அந்திக் கருக்கலுக்குள் மறைந்து விட்டதே : (( அல்பாயுசில் போய் விட்டதே? எவன் பெயர் வைத்தானோ கவுடா என்று, கவுடா, கவுடா என்று கவிழ்ப்பதையே தொழிலாய் செய்கிறார்கள்..” - ஏழுநாள்-அதிசயமாக எடியூரப்பா அரசு கவிழ்ந்தவுடன் நகைச்சுவைக்குப் பெயர் போன நண்பர் ஒருவர் அடித்த கமெண்ட் இது.

“இந்தியாவில் நீங்கள் அதிகம் வெறுக்கும் அரசியல்வாதி யார்” என்று இப்போது ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினால் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தேவகவுடா அதில் வெற்றிபெற்று விடுவார். எடியூரப்பா ஆட்சி அமைக்கட்டும், கண்டிப்பாக ஆதரவு தருவேன் என்று கவர்னர் முன்பு எம்.எல்.ஏக்கள் தலை எண்ணி வாக்குறுதி அளித்து விட்டு, நம்பிக்கை ஓட்டெடுப்பு அன்று காலை, காலை வாரிய அவரது நரித்தனம் கர்நாடக சட்டசபை வரலாற்றில் ஒரு மறக்க முடியாத கருப்பு நிகழ்வாக இடம்பெற்று விட்டது.

பொதுவாக கட்சித் தலைவர்கள் என்போர் அரசாட்சி, மக்கள் நலத் திட்டங்கள், மக்கள் பிரசினைகள், கொள்கை வகுத்தல் இவற்றில் ஈடுபடுவதோடு “அரசியல்வாதி” என்ற ஒரு முகமும் கொண்டிருப்பது தான் ஜனநாயகத்திற்கு உகந்தது. ஆனால் தேவ கவுடா தான் ஒரு “365 நாள் அரசியல்வாதி” (நன்றி: யூ.ஆர்.அனந்தமூர்த்தி) என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். சுரங்கங்கள், பெங்களூர் நகர அபிவிருத்தி முதலான பணம் கொழிக்கும் துறைகளைப் பங்கு போட்டுக் கொள்வதில் ஏற்பட்ட சண்டை அரசைக் கவிழ்த்து விட்டது. இரண்டு கட்சிகளும் ஏன் இந்தத் துறைகளைக் கையகப் படுத்துவதில் குறியாக இருக்கின்றன என்பது நிதர்சனம். ஆனாலும், இந்த ஒளிவு மறைவில்லாத பணவேட்கைப் போட்டியில் கூட, தான் அவுட் ஆனதும், அடுத்தவனுக்கு மட்டையைத் தராமல் அடம்பிடிக்கும் அடாவடி கிரிக்கெட் சிறுவன் போல தேவகவுடா நடந்து கொள்வது மக்களுக்கு பெரும் எரிச்சலை ஊட்டிவிட்டது.

தேவகவுடாவை எதிர்த்து அந்தக் கூட்டத்திலேயே கட்சி எம்.எல்.ஏக்கள் பொருமித் தள்ளியது பற்றிய விவரங்கள் செய்தி ஊடகங்களில் வெளியாயின. “எங்களை பொதுவில் நிர்வாணமாக்கி விட்டீர்கள், இப்போது பொத்திக் கொள்ளவாவது அவகாசம் கொடுங்கள்” என்றார் ஒரு எம்.எல்.ஏ. “பணம் தேவை தான், பதவி தேவை தான், ஆனால் குறைந்த பட்சம் மானம், ரோஷத்தையும் இவற்றுக்காக அடகு வைக்க வேண்டுமா?” என்றார் இன்னொரு எம்.எல்.ஏ. இதோடு, “சே, அதுக்குள்ள தேர்தலா, மறுபடி காங்கிரஸ் கூட்டணி வையுங்கப்பா” என்று அலையும் எம்.எல்.ஏக்களும் காணக் கிடைத்தார்கள். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களிலும் ஒரு பிரிவினருக்கு இன்னும் கவுடாவுடன் சேரலாமா என்று குளிராட்டிக் கொண்டிருந்ததாம். ஆனால் மத்திய அரசின் சட்டசபைக் கலைப்பு ஆணை இன்னும் ஒரு ரவுண்டு கேலிக் கூத்துகள் நடப்பதை நிறுத்திவிட்டது.

தன் தந்தையின் அரசியல் செயல்பாட்டினால் கடுப்படைந்திருப்பதாகக் கூறும் குமாரசாமி, ஒரு மாநிலக் கட்சியைத் துவக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். ஆனால் கர்நாடகத்தில் முளைத்த மாநிலக் கட்சிகளின் வரலாறு தமிழகத்தைப் போல உற்சாகமூட்டுவதாக இல்லை என்பது அவருக்குத் தெரிந்திருக்கும். கெங்கல் ஹனுமந்தையா, தேவராஜ் அர்ஸ், பங்காரப்பா போன்ற பெருந்தலைகள் தனிக்கட்சிகள் தொடங்கி பெரிய அளவில் கையைச் சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். ராமகிருஷ்ண ஹெக்டேவின் “லோக சக்தி” ஓரளவு வெற்றியடைந்தாலும், நீண்டகாலத்திற்கு தனிக் கட்சியாக நிற்க இயலாமல் ஜனதா தளம்(யூ)வுடன் இணைந்துவிட்டது.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரம் என்பதால் பெங்களூர் நிகழ்வுகள் உலக அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப் படுகின்றன. இந்த அரசியல் கூத்துகள் பெங்களூர் என்ற நகரின் மதிப்பை அதளபாதாளத்தில் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அரசியல் ஸ்திரத்தன்மை இன்மை காரணமாக கடந்த சில மாதங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை கர்நாடகம் இழந்திருக்கிறது என்று மாநில வர்த்தக, தொழில்துறை வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன. போக்குவரத்து நெரிசல், கட்டமைப்பு குறைபாடுகள், அதிகம் செலவு பிடிக்கும் நகர்ப்புறம் - இந்த எல்லா பலவீனங்களுக்கு நடுவிலும், பெங்களூர் தனது தகவல் தொழில்நுட்ப முன்னணியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அவலட்சண அரசியல் இதைக் குலைக்கும் சாத்தியக் கூறுகளை உருவாக்குவது பெரும் துரதிர்ஷ்டம்.

இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மாநில மக்களுக்கு எல்லாக் கட்சிகளிலும் எல்லாவிதமான பாத்திரப் படைப்புகளும் கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்கிற விஷயம் தெளிவாகப் புரிந்திருக்கிறது. கொள்கையில் உறுதியாக நிற்க விரும்பும் எம்.எல்.ஏக்கள், எந்த சமரசத்திற்கும் தயாராக இருக்கும் எம்.எல்.ஏக்கள், தார்மீக நிலைப்பாடுகளைக் கடைப்பிடிப்பதில் வரையறை வைத்திருக்கும் எம்.எல்.ஏக்கள் இப்படி. ஆனால், மொத்தத்தில் ஒரு மோசமான இயக்குனர் இயக்கிய அபத்த நாடகமாக இது ஆகிவிட்டது.


பாஜகவைப் பொருத்தவரை இந்த இழப்பு, ஏமாற்றம் ஒரு முழுமையான அனுதாப அலையாக மாறும் என்று நம்புவதாகத் தெரிகிறது. திரும்பத் திரும்ப ஜ.தவையும் கவுடாவையும் நம்பி பரிதாபமாக நிற்கும் பாஜக, இந்த ஏமாளித்தனம் ஜ.தவை முழுமையாகத் தோலுரிக்க உதவியிருக்கிறது என்றும் மதிப்பிடுவதாகக் கேள்வி. 2008 பெப்ரவரி மார்ச்சில் தேர்தல் வரும் வரை இந்த அனுதாப அலை இருக்குமா? வாக்காளர்கள் தான் சொல்லவேண்டும்.

Thursday, November 15, 2007

கர்நாடகத்தில் மலர்ந்த கமலம்

“The day when the lotus bloomed” என்று செய்தித்தாள்களின் முதல் பக்கங்களும், எம்.ஜி ரோடில் உள்ள தட்டிகளும் அறிவித்தபோது உடனடியாக என் மனதில் மின்னியது தாகூரின் கீதாஞ்சலி பாடல் தான் -

On the day when the lotus bloomed, alas, my mind was straying, and I knew it not.

My basket was empty and the flower remained unheeded. Only now and again a sadness fell upon me, and I started up from my dream and felt a sweet trace of a strange fragrance in the south wind.

தென் திசைக் காற்றின் மணம்! தென்னகத்தில் தாமரை மலர்கிறது என்று பாஜக தலைவர்கள் குறிப்பிட்டது ஏனோ நினைவுக்கு வந்தது.

ஆனால் இது தாகூரின் கவிதை சொர்க்கம் அல்ல. ஒன்றரை மாதமாக தினமொரு ஹேஷ்யமும், மணிக்கொரு மாறாட்டமும், குடும்ப, வாரிசு, ஜோதிட அரசியல்களின் முடிச்சுகளுமாக குழம்பித் தவித்த சேற்றில் ஒருவழியாக முக்கி முனகியாவது தாமரையோ அல்லியோ ஏதோவொரு மலர் மலர்ந்துவிட்டது என்பதில் மாநில மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறோம் என்பது தான் உண்மை.

இந்த ஒன்றரை மாத காலத்தில் அரசியல் நாடகத்தின் பல காட்சிகள் அரங்கேறின. தேவகவுடாவும், குமாரசாமியும் சொன்னபடி பாஜகவுக்கு அரசுரிமையைத் தராமல் ஏமாற்றி விட்டார்கள் என்று பாஜக தலைவர்கள் ஊர் ஊராகச் சென்று நம்பிக்கைத் துரோகப் படல காட்சிகளை அரங்கேற்ற, அதே நேரத்தில் செக்யுலரிசத்திற்காக ஏமாற்றுவதும், வாக்குத்தவறுவதும் எல்லாம் அரக்க பா.ஜ.கவிடம் போகாமல் நாட்டைக் காப்பாற்றுதற்குத் தான் என்று புலம்ப ஆரம்பித்தார் குமாரசாமி. சரியாக 20 மாதங்கள் முன் ஆசார செக்யுலர் ஜனதா தளம் மதவாத பாஜகவுடன் கூட்டு வைப்பது அபசாரமில்லையோ என்று கேட்டதற்கு “செக்யுலரிசமா? அது என்ன என்று எங்கள் கட்சிக் காரர்கள் உட்பட எல்லாரையும் கேட்டுப் பார்த்தேன், ஒருத்தனுக்கும் அதற்கு அர்த்தம் கூடத் தெரியவில்லை. அதைக் காரணம் சொல்லி வலிய வந்த ராஜ்ய லஷ்மியை எட்டி உதைப்பதா??” என்று அசர வைத்த அதே குமாரசாமி!

பாஜகவை நிராகரித்ததை நம்பிக்கை நிரூபணமாக்கி சிறுபான்மை ஓட்டுக்களை தூண்டில் போட நினைத்த ஜனதா தளம், எடியூரப்பாவுக்கு வீரசைவ மடத்தலைவர்கள் அனைவரும் ஒருமித்த ஆதரவு அளிப்பதைக் கண்டு “இது ஒக்கலிகர் (கௌடா), லிங்காயத் முதல்வராவதைத் தடுக்கச் செய்யப் படும் சதி” என்று முத்திரை குத்தப் படுமோ என்று அஞ்சி நடுங்கி அடுத்த வாரத்திலேயே அந்தர் பல்டி அடித்தது! இந்தக் கூத்துக்களை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த காங்கிரஸ் காரர்கள் என்னதான் இவர்கள் மறுபடிக் குலாவிக் கொண்டு கவர்னரிடம் போய் நின்றாலும், சோனியா நாயக மத்திய அரசு ஜனநாயகத்தை எட்டி உதைத்து என்னவாவது செய்து சட்டசபையைக் கலைத்து விடும் என்று எண்ணிய எண்ணத்திலும் மண் விழுந்தது.

இப்படியாக தாமரை மலர்ந்து விட்டது. எடியூரப்பா பதவியேற்பு நிகழ்ச்சியிலேயே ஜனதாதள, பாஜக பிணக்குகள் வெளித் தெரியத் தொடங்கியிருக்கின்றன. இருப்பினும், குறைந்தபட்ச கூட்டணி தர்மம், உடனடி தேர்தலைச் சந்திக்க விரும்பாத கட்சிக்காரர்கள் இவைகள் இந்த அரசு அதன் முழு கால அளவு வரை நீடிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

ஒருவிதத்தில் இது ஜனநாயகத்தின் வெற்றி என்றும், சாதுர்ய (pragmatic) அரசியல் மற்றும் அரசாட்சி தரும் (governing) அரசியல், போலித்தனமான, துவேஷம் வளர்க்கும் கொள்கை அரசியலைப் பின்னுக்குத் தள்ளி வருவதை நிரூபித்து வரும் இன்னொரு இந்திய நிகழ்வு என்றும் தான் மதிப்பிட வேண்டும். வளர்ந்து வரும் மாநிலமான கர்நாடகம் ஆட்சியாளர்களைத் தான் தேடுகிறதே அன்றி அடித்துக் கொண்டு அலறும் அரசியல் பூச்சாண்டிகளை அல்ல. தென்னிந்தியாவில் முதல் பாஜக அரசு அமைந்து அந்தக் கட்சியின் தலைவர் முதல்வராவது ஒரு குறிப்பிடத் தக்க அரசியல் நிகழ்வு தான். பதினைந்து ஆண்டுகளாக அடிமட்ட அளவில் கட்சியைக் கட்டமைத்து, வியூகங்கள் வகுத்து, சமரசங்கள் செய்து, படிப்படியாக தேர்தல் வெற்றிகள் அடைந்து இந்த நிலைக்கு பாஜக வந்திருக்கிறது. அதற்கு மேல் இதில் பயப்படும்படியாக ஒன்றும் இல்லை.

ஆனால் கர்நாடகத்தின் சில அறிவுஜீவிகளும், சிந்தனையாளர்களும் அப்படி நினைத்ததாகத் தெரியவில்லை. அதற்கு முன்பு நடந்த எல்லா அரசியல் அவலட்சணங்களையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், பாஜக அரசு உருவாகிவிடும் என்ற சாத்தியக் கூறு உருவான உடனேயே, கூட்டமாகக் கூடி, முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு கவர்னரிடம் போய் “கர்நாடகத்தின் அரசியல் இழுபறி மிக மோசமாகி விட்டது, உடனடியாக சட்டசபையைக் கலையுங்கள்” என்று கோரிக்கை வைத்தனர். ஒரு சாதாரண குடிமகனுக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சியும், ஜனநாயக உணர்வும் கூட இல்லையோ என்று சந்தேகம் தோன்றும் வகையில், யு.ஆர்.அனந்தமூர்த்தி, கிரீஷ் கர்னாட் உள்ளிட்ட ஞானபீட படைப்பாளிகள் தேவகவுடாவை விட மோசமாக நடந்து கொண்டது அவர்கள் மீது மக்கள் கொண்டிருந்த மதிப்பைக் கண்டிப்பாகக் குறைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

அரசு அமையும் நாளில் “கர்நாடகத்தை இன்னொரு குஜராத் மாதிரி ஆக்கிவிடாதீர்கள்” என்று எச்சரிக்கிறார் யூ.ஆர்.ஏ. அனைத்து கிராமங்களிலும் தடையறாத மின்சாரம், தொழில் வர்த்தகம் முதலீடு, வளர்ச்சி வாய்ப்புக்கள் இவற்றில் முதலிடம் என்று நடைபோடும் குஜராத் மாதிரி கர்நாடகம் ஆகாதா என்று ஏங்கும் சாதாரண கன்னட குடிமகனின் உணர்வுகள் அவர் போன்ற அறிவுஜீவுகளுக்கு இருக்காதோ என்னவோ?

Friday, September 21, 2007

"ஏசு குடிகாரன், ஔவை குடிகாரி": சொல்வாரா கருணாநிதி?

முன்னுக்குப் பின் முரணாக மட்டும் அல்ல, மூளையோடு தான் பேசுகிறாரா என்று எப்போதும் ஒரு ஐயம் இழையோடிக் கொண்டிருக்க்குமாறு பேசுவதையே ஒரு கலையாகக் கற்றிருக்கின்ற தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ராமசேது திட்டத்தின் பெயரால் தானும், டி.ஆர். பாலுவும், தங்கள் குடும்பங்களும் அடிக்க நினைத்திருக்கும் பெரும் கொள்ளை எங்கே பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் குளிர்ஜுரம் வந்து உளறிக் கொண்டிருக்கிறார்!

முதலில் ராமன் எந்தக் காலேஜில் இஞ்ஜினீயரிங் படித்து பாலம் கட்டினான்? என்று பிதற்றல். அடுத்தது "ராமன் என்பது பொய். நான் எழுதற நாவல்ல வர கேரக்டர் மாறி அவரும் ஒரு கேரக்டர்" என்ற உளறல். அடுத்தது "ராமன் குடிகாரன் என்று வால்மீகி ராமாயணத்திலேயே இருக்கிறது.. ராமாயணத்தைப் படைத்த வால்மீகி சொன்னதை விட நான் தவறாக எதையும் சொல்லி விடவில்லை" என்று இன்னொரு அபத்தப் பேச்சு. இதில் விவாதம் செய்யத் தயாரா என்று அத்வானியிடம் ஒரு சவடால் வேறு.

"இல்லவே இல்லாத ராமனை"ப் பற்றி உனக்கென்னய்யா இவ்வளவு அக்கறை?

தனக்கு வாக்களித்து தன்னைத் தேர்ந்தெடுத்து இருக்கும், கடவுள் நம்பிக்கையுள்ள கோடிக்கணக்கான இந்துக்களை மடையர்கள் என்று இதன் மூலம் அழைத்திருக்கிறார் கருணாநிதி. ஏனென்றால் ஸ்ரீராமனையும், ராமாயணத்தையும் கேலிசெய்து, அவமதித்து, இப்படி அறிக்கைகள் விடுவதற்கு வேறு முகாந்திரமே இல்லை - "ராமசேது என்பது பாதுகாக்கப் பட வேண்டிய தேசிய, கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை/செயற்கை அமைப்பா" என்பது மட்டும் தான் கேள்வி.. "ராமசேது திட்டம்" பற்றிய வழக்கில் அனாவசியாக ராமாயணம் என்ற இதிகாசத்தையும், அகழ்வாராய்ச்சியையும் குழப்பி காங்கிரஸ் கூட்டணி அரசு அளித்த அபத்த அறிக்கையும், அதற்கு எழுந்த நாடு தழுவிய உறுதியான எதிர்ப்பு அலையும், காங்கிரசின் மழுப்பல், பின்வாங்கல், மன்னிப்பு, இதற்கு யார் தலையை வாங்கலாம் என்ற கணிப்புகளும் இன்னும் முடிந்த பாடில்லை. இன்னும் 3 மாதத்திற்கு சேது சமுத்திர திட்ட செயல்பாட்டில் கைவைக்காமல் இதை மறுபரிசீலனை செய்வோம் என்று அரசு உச்சநீதி மன்றத்திலேயே வாக்களித்தும் ஆகி விட்டது.

இந்த சூழலில், இந்த முழுப் பிரசினையிலும், மகா கோமாளிகளாகவும், பைத்தியக் காரர்களாகவும் கருணாநிதியும், அவரது அரசும், கட்சியும் வெளிவந்திருக்கின்றன. காங்கிரஸ் கட்சி "ஏன் இந்த சனியன் நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கிறான்" என்று சொல்லாத குறையாக நாளுக்கு நாள் இவரது ராம தூஷணைகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறன..

ராமன் ஒன்றும் கிருஷ்ணன் அல்ல,
சிசுபாலனின் நூறு தூஷணைகளையும் சிரித்துக் கொண்டே கேட்டுவிட்டு கடைசியில் சக்ராயுதத்தை எடுப்பதற்கு. ஆனானப் பட்ட சமுத்திரராஜனுக்கே மூன்று நாள் கெடு, அதற்குப் பிறகு ராம பாணம் தான்.

"ராமன் குடிகாரன்" என்று இவர் காலையில் சொல்கிறார்.. மாலையில் தொலைக்காட்சியில் அமைச்சர் பொன்முடி "ராமன் சோமபானம் அருந்தியதாக வால்மீகி ராமாயணத்தில் வருகிறது.. அதனால் குடிகாரன்" என்கிறார்.

"சோமம்" என்பது வேதகாலத்தில் அறியப்பட்ட ஒரு அற்புத மூலிகை, அதன் சாறு தான் சோம்பானம், வேள்விகளில் இது சம்பிரதாயமாக அருந்தப் பட்டது , மேலும் "சோமம்" என்பதே தெய்வ சக்திக்கான ஒரு குறியீடு என்பதான விவரங்கள் நன்கறியப் பட்டவை என்பதைக் கூடத் தெரிந்துகொள்ளாத அரைகுறைகள்தான் இந்த திராவிட இயக்க அல்லக்கைகள். "தேவர்களே, சோமத்தை அருந்துவீர், எம்மைக் காப்பீர்" என்ற பாரதியின் வசன கவிதை வரிகள் சொல்ல வருவதும் இக்கருத்தையே. "சுராபானம்", "மது" "ஆஸவம்" இவையே மது மற்றும் கள்ளுக்கான பெயர்கள்.

இந்த கேள்வி எழுந்துவிட்டதால் ராமாயணத்தில் மது பற்றி வரும் குறிப்புகளை சுருக்கமாக பார்ப்போம் -

1) ராவணனும், அவன் மனைவியரும் மத்யபானம் செய்து அதன் வாசனையுடன் உறங்குவதை அனுமன் காண்பது பற்றி சுந்தரகாண்டத்தில் வருகிறது. சாமவேத விற்பன்னனும், புலஸ்தியரின் மகனுமான பிராமணன் ராவணன் போகத்திற்காக மதுபானம் செய்தான் என்று கூறும் வால்மீகி இதை *பாவம்* என்று சொல்லவில்லை.

2) வானரர்கள் மது அருந்தியது பற்றி பல இடங்களில் உள்ளது.. குறிப்பாக சுக்ரீவன் மிதமிஞ்சிக் குடித்திருந்ததும், லக்ஷ்மணன் தேடி வந்த சமயத்தில்நினைவயர்ந்து கிடந்ததும், தாரையை அனுப்பி வைத்து, அதன் பின்னால் வந்துலக்ஷ்மணனுடன் உரையாடியதுமான குறிப்புகளும், 'என் தம்பிக்கு என்னைப் போலவேகுடிப்பழக்கம் உண்டு' என்று வாலி சொல்லும்போதும் இது வெளிப்படுகிறது.

கம்பன் இந்தக் காட்சியை வைத்து கள்ளுண்ணாமை என்ற நற்பண்பை போதிக்கின்றான் -

'ஐய! நான் அஞ்சினேன், இந் நறவினின் அரிய கேடு;
கையினால் அன்றியேயும் கருதுதல் கருமம் அன்றால்;
வெய்யது ஆம் மதுவை இன்னம் விரும்பினேன் என்னின், வீரன்
செய்ய தாமரைகள் அன்ன சேவடி சிதைக்க' என்றான்.

என்று சுக்ரீவனை மனம் வருந்திச் சொல்லச் செய்கிறான். 'கையினால் தொடுவதுமட்டுமில்லை; மனத்தினால் நினைக்கவும் மாட்டேன். அப்படி மதுவை விரும்பினேனானால், இராமபிரானுடைய திருவடித் தாமரை என்னைச் சிதைக்கட்டும்'என்று சூளுரைக்கிறான்.

3) அயோத்யா காண்டத்தில் (சர்க்கம் 55, சுலோகம் 20) யமுனையைக் கடக்கும்போது சீதாதேவி "நூறு கள்குடங்களை உனக்கு காணிக்கையாகத் தருகிறேன், என் குடும்பத்தையும், உறவினர்களையும் காப்பாற்று" என்று யமுனா நதியை வேண்டிக் கொள்வதாக வருகிறது - இன்றும் கூட ஒரு கருப்பாயியும், ராக்காயியும் தங்கள் வழிபடு தெய்வமான பல கிராம தேவதைகளுக்கு கள் நிவேதனம் செய்யும் தொல்குடிப் பழக்கத்தின் ஆதி வடிவம் ராமாயணத்திலேயே இருப்பதற்கான ஆதாரம் தான் இது.

4) சுந்தரகாண்டத்தில், "ராமன் தேவியைப் பிரிந்ததில் இருந்து சாறையும் அருந்துவதில்லை, கதுப்பையும் உண்பதில்லை" என்று வருகிறது. இதில் சாறு, கதுப்பு என்பவை மது, மாமிசம் என்பதாக சில உரையாசிரியர்கள் கருதுகிறார்கள். இருக்கலாம் - க்ஷத்திரியர்கள் இந்த உணவுப் பழக்கம் கொண்டிருந்தது இதிகாசங்களில் வேறு பல இடங்களிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால் இதுவும் ராமனைக் குடிகாரன் ஆக்காது, தன் குல வழக்கத்திற்கேற்ற உணவுப் பழக்கத்தைக் கைக்கொண்ட, தர்மத்திலிருந்து சிறிதும் வழுவாத தரும நாயகன் என்றே நிலைநிறுத்தும் - வால்மீகி என்ற மாமுனிவன் எல்லா இடங்களில் ஸ்ரீராமனை நற்குணக் கடல் என்பதாகவே வர்ணித்திருக்கிறான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

ஆயிற்றா? இன்னும் என்ன விவாதம் செய்யப் போகிறார் கருணாநிதி, அத்வானியுடன்? இப்படி போன தலைமுறை திராவிடப் பைத்தியங்கள் எழுதிவைத்த "கீமாயணம்" குப்பையைக் கிளறி அதில் இருக்கும் ஒவ்வொரு சாக்கடை வாந்தியையும் எடுத்து பரிமாறப் போகிறாரா? இன்றைய தமிழ் மக்கள் அந்த அளவுக்கு முட்டாள்களும், ஏமாளிகளும், வேலையத்தவர்களும் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளட்டும்.

இன்னொரு நியாயமான கேள்வி.. (தலைப்புக்கு வரணுமில்லையா?)

ஒரு கோப்பை ஒயினையே பலமடங்காக்கி கூட்டத்தில் வந்திருந்தவர்கள் எல்லாருக்கும் ஏசு கொடுத்ததாக பைபிள் கதை உள்ளதே? அந்த மரபின் நீட்சியாக இன்றும் கிறித்தவப் பாதிரிகள் சம்பிரதாயமாக ஒயின் பிரசாத விநியோகம் செய்கிறார்களே? "ஏசு குடிகாரரன் மட்டுமல்ல, குடிப்பழக்கத்தை பிரசாரம் செய்தவன்" என்று பகுத்தறிவுப் பாசறையில் வந்த கருணாநிதி கூறுவாரா?

ராமாயணம், மகாபாரதத்தில் வரும் மது தொடர்பான குறிப்புகளே போன்று தான், ஏன் இன்னும் அதிகமாகவே சங்க இலக்கியங்கள் முழுவதும் கள்ளும், மதுவும், தேறலும், நறவமும், பிழிசலும் பெருக்கெடுத்து ஓடுகின்றன.

"ஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப, மகிழ்சிறந்து.. " - புறநானூறு (24)


தங்கக் கிண்ணத்தில் மங்கையர் கள் ஊற்ற அருந்திய வீரத்தமிழ் மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியன் குடிகாரன் என்று கருணாநிதி கூறுவாரா?

தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ,
ஊண்முறை ஈத்தல் அன்றியும் ,
கோண்முறைவிருந்திறை நல்கி யோனே - புறநானூறு (392)

"தேள் கொட்டுவது போல சுரீர் என்னும் சுவை தரும் புளித்த கள்ளை பொன் கிண்ணத்தில் ஊற்றி அளித்தான்" என்று அதியமான் மகன் பொகுட்டெழினி தனக்குக் கள் ஈந்த அனுபவத்தைப் பாடுபவர் யார் தெரியுமா? தமிழின் தலைசிறந்த பெண் கவிஞர்களில் ஒருவரான சங்ககால ஔவையார் ! "ஔவை ஒரு மொடாக் குடிகாரி" என்று கூறுவாரா கருணாநிதி?

முதலில் ஜெயலலிதாவை இதே போன்று குடிகாரர் என்றார். பிறகு விஜயகாந்த். இப்போது ஸ்ரீராமன் வரைக்கும் போய்விட்டது. மஞ்சள் துண்டு காரனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்!

மூடத்தனமே உன் பெயர் தான் முதலமைச்சரோ?
கயமையே உன் பெயர் தான் கலைஞரோ?

Wednesday, July 25, 2007

இந்தியப் பெண்மைக்குப் பெருமையும், சிறுமையும் இன்று ஒரே நாளில்..?

இந்திய நாட்டின் கோடானுகோடி"சாதாரண" பெண்களை மறந்து விடுங்கள். அவர்களைப் பற்றியெல்லாம் யார் பேசுவார்கள்? நாம் பேசிக் கொண்டிருப்பது தங்கள் தலைமயிரை 'பாப்' கட் செய்து கொண்ட புதுமைப் பெண்களைப் பற்றி ( ஒரு இந்தி சேனலில் எந்த மாதிரி பெண்கள் இந்தியப் பாராளுமன்றத்திற்குப் போகிறார்கள் என்ற விவாதத்தில் ஒரு நாரீமணி உதிர்த்த பதம் இது - 'baal katiwali mahila')

பிரதீபா பாட்டீல் இன்று பாரத நாட்டின் முதல் "மேடம் பிரசிடென்ட்" ஆகி விட்டதைக் குறித்து செய்தி ஊடகங்கள் அல்லோல கல்லோலப் படுத்திக் கொண்டிருக்கின்றன - இந்தியப் பெண்மை பெருமிதம் அடைந்து விட்டதாக... தன்மீது சுமத்தப்பட்ட ஊழல், கொலை மற்றும் சட்டவிரோத குற்றச்சாட்டுகளுக்கு இன்று வரை நேர்மையான பதில் அளிக்க முடியாத, தன் முக்காடிட்ட முகத்தை எப்போதும் முக்கால்வாசி மட்டுமே அறியத் தரும் ஒரு அரசியல் அடிமைப் பெண் இந்த உயர்பதவிக்கு வந்திருப்பது 'பாப் கட்' பெண் முதல் பர்தா போடும் பெண் வரை எல்லாரையுமே பெருமைப் படுத்தி விட்டது தான் ! நம்புவோம்.

சிறுமை என்று சொல்ல வந்தது வேறு விஷயம். உறுதிக்கும், செயல்திறமைக்கும், நேர்மைக்கும் உதாரண புருஷி என்று சொல்லத் தக்க ஒரு பெண். ஏற்கனவே பல கடினமான, சவாலான பொறுப்புக்களை வகித்து அவை ஒவ்வொன்றிற்கும் பெருமை சேர்த்த ஒரு பெண். அதே துறையில் முறைப்படி அவருக்கு வந்திருக்க வேண்டிய ஒரு உயர் பதவி மறுக்கப் பட்டிருக்கிறது இன்று. தில்லி காவல்துறை ஆணையர் ஆவதற்கு முழுத் தகுதி படைத்த கிரண் பேடி ஓரங்கட்டப் பட்டு ஒய்.எஸ். தாலிவால் தேர்வு செய்யப் பட்டுள்ளார். இந்த அநியாயத்தை எதிர்த்து வெளிப்படையாகவே வெகுண்டு எழுந்துள்ளார் கிரண் பேடி.

காரணம் என்ன தெரியுமா?

யாரைப் பெருமைப் படுத்த வேண்டும், யாரைச் சிறுமைப் படுத்த வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை இருக்கிறதே, அது மட்டும் எந்த இந்தியப் பெண்ணிடமும் இல்லை, ஜன்பத் 10ஆவது எண் வீட்டில் வசிக்கும் ஒரு இத்தாலியப் பெண்ணிடம் தான் அது உள்ளது.

அவருக்குப் பிடிக்காதவர்கள், அவரை முறைத்துக் கொண்டவர்கள் கனவுகாணும் விஞ்ஞானியாகட்டும், காக்கிச் சட்டை கண்ணியர்களாகட்டும் - கடாசப் படுவார்கள்.

அவரது பெண் அடிமைகள் ஜனாதிபதி ஆவார்கள், ஆண் அடிமைகள் பிரதமர்களாகவும், அமைச்சர்களாவும் சேவகம் புரிவார்கள் ! உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இருக்கும் ஒரே இந்தியநாட்டு வாசி இந்தப் பெட்டை தான் என்றால் சும்மாவா? (டென்ஷன் ஆகிடாதீங்க, இவ்வளவு பெரிய அடிமைகளை அடக்கி ஆள்பவர் எவ்வளவு பெரிய "ஆண்டை" யாக இருக்கணும்! அதைத் தான் பெண்பாலில் எழுதியிருக்கிறேன்).

ஆக மொத்தத்தில் பெண்மை பெரிய பெருமை பெற்றுவிட்டது என்று தோள் தட்டி, மண்டையில் அடித்துக் கொள்வோம்!