Saturday, March 31, 2007

காஷ்மீர், கன்னியாகுமரி: இந்தியமக்களைக் கொல்லும் தேசவிரோதிகள்

ஒரே நாள்.. தேசத்தின் இரு முனைகள். ஒரே விதமான செய்திகள். இந்திய விரோதிகள் இந்தியக் குடுமக்களைப் படுகொலை செய்த சம்பவங்கள்.

ஜம்மு காஷ்மீரில், 5 இந்து தொழிலாளர்களைத் தனியாக அடையாளப் படுத்தி ஜிகாதி தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். தங்கள் வழக்கமான வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் இவர்கள்.

டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி:

JAMMU: Five labourers were killed and four injured, when two terrorists attacked a shelter at Rajouri's Mathiani village late Thursday night. Police said two men dressed in military fatigues entered the village shelter at about 10.30 pm and demanded identity proof from the labourers. The labourers were then asked to segregate themselves based on their religion. After rounding up 11 Hindu labourers, the attackers opened fire, killing five of them on the spot. Two labourers, who managed to escape, reported the incident to an Army camp in the area at about 7 am on Friday. A rescue team airlifted four injured workers from the village. They have been admitted to Jammu's Military Hospital. Three columns of the Army were rushed to the area. "Police has launched a hunt for the killers," said Jammu IG S P Vaid. "This is an act of terrorism. We will trace the group behind it." In May 2006, terrorists had unleashed two communal terror attacks at Doda and Udhampur.

கன்னியாகுமரியில் மீன்பிடிக்கச் சென்ற இந்திய மீனவர்கள் 5 பேர் மர்மமான முறையில் கொல்லப் பட்டுள்ளனர். வழக்கம் போல கடலில் மீன்பிடிக்க சென்றவர்கள் இவர்கள். தேசவிரோத வலை இவர்கள் உயிரை விழுங்கி விட்டது. இவர்கள் மீது சுட்டது இலங்கைக் கடற்படை என்று தினமலர் கூறுகிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி இது விடுதலைப் புலிகளின் வேலையோ என்று ஐயுறுகிறது..

NEW DELHI: The killing of four Indian fishermen, who had strayed into Sri Lankan waters on Thursday, could be the handiwork of LTTE in order to create a rift between the Indian and Sri Lankan governments. Holding that this possibility could not be ruled out, Navy chief Admiral Sureesh Mehta on Friday said an inquiry into the incident was being conducted to ascertain the facts. Asked about the incident on the sidelines of a ceremony where Army chief General J J Singh took over as the new chairman of the chiefs of staff committee, Admiral Mehta said, "Fishermen cross over into each other's waters in search of lucrative catches...But the Sri Lankan Navy chief has assured me that he has asked his forces not to fire at Indian boats." Outgoing IAF chief Air Chief Marshal S P Tyagi, in turn, said the LTTE air strike on a Sri Lankan airbase near Colombo on Monday had added a completely new "dimension" to the internal war taking place in the island nation. "The existence of aircraft (with LTTE) did not come as a surprise...we have been monitoring it. But the attack was a surprise. This is a new dimension and, therefore, it is serious," he said. This confirms an earlier TOI report which held that the Indian security establishment was worried that even a light aircraft in the hands of a terrorist outfit could be used as a missile against high-value targets, demonstrated well by the 9/11 strikes by al-Qaida in US in 2001. India has strengthened patrolling and surveillance along its coastline, especially in the Palk Strait and Gulf of Mannar region. This becomes all the more important since the radar coverage in central and peninsular India is quite weak, as reported earlier by TOI.

இந்திய மக்களின் வாழ்வைக் குலைக்க இருமுனைகளிலும் இருந்து தாக்குதல் தொடுக்கும் தேசவிரோதிகளை ஒன்றிணைந்து வெற்றி கொள்வோம்.

யார் பிற்படுத்தப்பட்டவர்கள்?

'பந்த்' நிறுத்தங்களினால் ஒரு நாள் தேசிய உற்பத்தித் திறன் மற்றும் பலகோடி ரூபாய்கள் இழப்பு தவிர ஆகப்போவது ஒன்றும் இல்லை என்று தெளிவாக எல்லாருக்கும் புரிந்திருக்கும் நிலையிலும், அரசு ஆதரவில் தமிழ்நாட்டில் முழு பந்த் - இடஒதுக்கீடு பற்றிய உச்சநீதிமன்ற ஆணையை எதிர்த்து. ஏற்கனவே தான் நடைமுறைப்படுத்தியிருக்கும் இடஒதுக்கீட்டு கொள்கைகள் போதாதென்று, இந்த அருவருக்கத் தக்க செயல் மூலம், இந்திய மாநிலங்கள் எல்லாவற்றிக்கும் ஒரு மகா மோசமான முன்னுதாரணத்தை தமிழ்நாடு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

வழக்கமாக ஆங்கிலத்தில் எழுதும் நண்பர் Reason இதே தலைப்பில் ஒரு நல்ல தமிழ்ப் பதிவு போட்டிருக்கிறார். அதில் கூறுகிறார் -

எதற்கு இந்தப் 'போராட்டம்'? தேசீயக்கல்வி நிலையங்களில் 'பிற்படுத்தப் பட்டவர்களுக்கான' இட ஒதுக்கீட்டு ஆணையை உச்ச நீதிமன்றம் தடை செய்ததற்கு.

ஏன் அந்த ஆணையை உச்ச நீதிமன்றம் தடை செய்தது?மத்திய அரசு - திரா'விட'ர்கள் அங்கம் வகிக்கும் மத்திய அரசு - யார் பிற்படுத்தப் பட்டவர்கள் என்ற கேள்விக்கு சட்டம் அங்கீகரிக்கக் கூடிய விடை அளிக்காததால்.

முப்பது கோடி இந்தியர்கள் ஒரு நாளைக்கு ஒரு டாலர் - 45 ரூபாய்க்கும் குறைவான வருவாயில் வாழும் நாட்டில், இந்தக் கேள்விக்கு விடை அளிப்பதில் என்ன கஷ்டம் இருக்க முடியும்?

'விடை அளிக்காததால்' - 'முடியாததால்' அல்ல, 'விடை அளிக்க விரும்பாததால்'. சரியான விடை அளித்து விட்டால் இந்தப் பிற்படுத்தும் விளையாட்டு - இந்தியா முழுவதும் நடக்கும், திரா'விட'ர்கள் முன்னின்று நடத்தும் விளையாட்டு - நிறுத்தப் பட வேண்டியிருக்கும்.

இப்படித் தொடங்கி , ஏற்கனவே மிகவும் பிரபலமாகி விட்ட மாநிலவாரியான பிற்படுத்தப் பட்டவர்கள் சதவீதம் பற்றிய அட்டவணையையும் சுட்டிக் காட்டி கேட்கிறார் -

ஒரிசா - வளர்ச்சிக் குறியீடுகளில் ஒரு பின் தங்கிய மாநிலம் - அங்கு கார் தொழிற்சாலைகளோ, IT காரிடார்களோ கிடையாது - ஆளைக் கொல்லும் வறட்சியும் வெள்ளமும் உண்டு. 2004-ஆம் ஆண்டில் OBC - பிற்பட்ட ஹிந்து மக்கள் தொகை - 37.8 சதவீதம். தமிழ் - மன்னிக்கவும் திராவிட நாட்டில் - 72.5 சதவீதம.

இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஒரிசாவில் பந்த் இல்லை. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ் - மன்னிக்கவும் திராவிட நாட்டில மட்டும்.நாட்டின் போக்கை எதிர்த்து - தேசியத்தை எதிர்த்து - ஏன் இறையாண்மையையே எதிர்த்து - செயல் படுவது திராவிடர்களுக்குப் புதிதல்ல. அதில் ஊறியவர்கள்.

உண்மையில், முன்னேறிக் கொண்டிருக்கும் தமிழகம், ஒரிஸ்ஸா போன்ற வறுமையில் உழலும் மாநிலங்களுக்கு உதவுவது பற்றி யோசிக்க வேண்டும். ஆனால், "உண்டாலம்ம இவ்வுலகம்.. தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுனர் உண்மையானே" என்ற தமிழ்ச் சான்றோர்களின் எண்ணத்திற்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இங்கே பந்த் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மானமுள்ள தமிழனையும் வெட்கப் படச் செய்யும் சமாசாரம்.

இது பற்றி எனது பழைய திண்ணண கட்டுரையில் சொன்ன ஒரு விஷயத்தை மறுபடியும் இங்கு மீள்பதிகிறேன். இந்த பிரசினையைப் பற்றிய என் முழுக் கண்ணோட்டமும் அந்தக் கட்டுரையிலேயே உள்ளது -

... இந்தியாவிலேயே அதிக சதவீதம் பிற்படுத்தப் பட்டவர்கள் உள்ள மாநிலம் என்கிற 'பெருமை'யையும் தமிழகம் பெற்றிருக்கிறது. மலைவாழ் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் சத்தீஸ்கட், மத்தியப்பிரதேசத்தை விடவும் தமிழ்நாட்டில் அதிகம் 'பிற்பட்டவர்கள்' இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! அகில இந்திய அளவில் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகவில்லை. அதனால் தான் இட ஒதுக்கீட்டு அரசியலை எதிர்ப்பதற்கு ஓரளவு மக்கள் சக்தியாவது உள்ளது. 100% இட ஒதுக்கீடு என்று தமிழக அரசு ஒரு பேச்சுக்காக அறிவித்தாலும் கூட, அதை எதிர்ப்பதற்குத் தமிழ்நாட்டில் நாதியிருக்காது. இதுதான் தங்கள் தலையெழுத்து என்று இட-ஒதுக்கீடு-இல்லாத-சாதியார் தங்களை நொந்துகொண்டு வேறு வழிகள் தேட வேண்டியது தான்.

3. இதில் கூடுதல் சோகம் - தமிழகத்தில், ஒதுக்கீடு இல்லாத போட்டிக்கான இடங்களின் (open competition) பெரும்பங்கையும் எப்படி ஒதிக்கீடு-பெறும் சாதிக்காரர்களே பெற்று ஏப்பம் விட்டு, ஒதுக்கீடு இல்லாத சாதிக்காரர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள் என்பது. (பார்க்க: [2]). இவர்களுக்கு உண்மையிலேயே மனச்சாட்சி இருந்தால் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், இட ஒதுக்கீட்டையே பயன்படுத்துவேன் என்று சொல்லி, OC (ஓஸி?)யில் கிடைக்கும் இடத்தை, பாவப்பட்ட, இட ஒதுக்கீடு பெறமுடியாத மாணவர்களுக்கு விட்டுத் தர வேண்டும்.. ஆனால், இவர்களது சிந்தனை "நமக்கு OC-யில் இடம் கிடைத்து விட்டதே.. அந்த இடத்தை நம்ம சாதிக் (இட ஒதுக்கீடு சாதி) காரன் ஒருத்தன் எடுத்துக் கொள்ளட்டும்" என்பதாகத் தான் இருக்கிறது.. இந்த சிந்தனை சுயநலம், குரூரம் மற்றும் துவேஷ மனப்பான்மையினாலேயே உருவாகிறது.

4. இந்த BC இட ஒதுக்கீட்டையே அழித்து விட வேண்டும். SC/ST ஒதுக்கீடு போக மீதி இருக்கும் எல்லா இடங்களிலும் எல்லாரும் போட்டி போடலாம் (open competition) என்று அறிவிக்க வேண்டும். இந்தப் போட்டிக்கான "புள்ளிகளை" (points) நிர்ணயிப்பதில் தான் சமூக நீதியும், சமூக அக்கறையும் வெளிப்பட வேண்டும்....

Friday, March 30, 2007

தமிழ் வலைப்பூக்களின் பரிணாமம்

பிளாக் எனப்படும் வலைப் பூ எழுதும் உந்துதல் உள்ளவருக்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப் பட்டது. தமிழ் வலைப் பூக்கள் துவக்கத்தில் தொழிற் நுட்பக் காரணங்களில் தடுமாறினாலும்,மெல்ல மெல்ல மற்ற மொழியினர் வியக்கும் வண்ணம் வளர்ந்தது. படித்தவர்கள், இளைஞர்கள்,பெண்கள் என்று பல தரப்பிலும் பதிவர்கள் உண்டாயினர்.அச்சில் தன் எழுத்தைப் பார்க்க முடியாதவர்களுக்கு தங்கள் கருத்தைப் பகிரவும்,எழுத்தை மேம் படுத்தவும் இது நல்ல மேடையாக அமைந்தது.

நன்றாக வளரும் வேளையில் பிடித்தது சனி! சாதாரண ஆத்திக நாத்திக வாதங்கள் சாதிச் சண்டையில் கொழுந்து விட,இது எந்தஅளவிற்கு போய் விட்டது என்றால்,இன்று ஒரு பதிவர் எனக்கு அந்த நடிகரைப் பிடிக்கும் என்றால் அவரை நடிகரின் சாதியோடு இணைத்து ஏசும் அளவிற்கு!ஒரு குறுப்பிட்ட சாதியினரின் ஆதிக்கம் மதுரையில் அதிகமாம்.அதனால் எனக்கு மதுரை பிடிக்கும் என்றால் கூட ஏச்சு விழுகிறது! பாரதியார் பற்றி எழுதினால்,அதில் சாதி,தேசீயம் என்றால் அதில் சாதி,வால் மார்ட் பற்றிக் கூறினாலும் சாதி,திரை விமர்சனம் எழுதினால் கூட சாதி!எதைப் பற்றி கூறினாலும் அதில் சாதியை நுழைப்பதே தலையாயமாகி விட்டது. இன்று தமிழ் மணம் என்ற திரட்டியில் பாருங்கள்; வரும் பதிவுகளில் பாதிக்கு மேல் சாதி மதங்களைப் பற்றித்தான்.

இதில் மிகவும் பாதிக்கப் பட்டவர்கள் பெண் பதிவர்கள்தாம்.பல பெண்கள் தங்கள் எழுத்தா ர்வத்தை வெளிப்படுத்துவதற்கு வலைப் பூக்கள் ஒரு நல்ல வடிகாலாயின.ஆனால் என்ன சொல்வது? இன்று பல பெண்கள் வலையில் எழுதுவதில்லை. காரணம், பின்னோட்டம் என்ற பெயரில் வரும் ஆபாசங்கள்தான் மூல காரணம். என்னதான் கமென்ட் மாடரேஷன்களைப் போட்டாலும் இந்த ஆபாசங்கள் புகுந்து விடுகின்றன. அதிலும் மணமான பெண்கள் என்றால் பின்னோட்ட ஆபாசம் அதிகம்.

எதிர் கருத்துக்களை நாகரீகமாகவும் வெளியிட முடியும் என்று தெரியாதவர்களா இவர்கள். இல்லை என் கருத்துக்கு எதிர் கருத்தே கூடாது என்பவர்களா? இதில் குரூப்பிசம் வேறு! அதாவது dictorship of idiots என்பார்களே அதுதான் நடக்கிறது. ஒருவருடய கருத்தை மற்றவர் மாற்ற இயலுமா? இயன்றாலும்அது தேவையா? இதனால் விரோத பாவங்கள் கூடுதலும், கால விரயமும் தானே மிச்சம்.


மற்ற மொழிகளின் வலைப் பூக்களைப் பார்த்தால் போர்னோ மற்ற வகையறாக்கள் ஒரு 3 விழுக்காடு இருக்கும். நம் மொழியினர் போல சாதிச் சாக்கடை நாறவில்லை!செம்மொழி அல்லவா!!


வலையில் எழுதும் முக்கால் வாசிப் பேர் நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள், இந்தியாவிலும், கடல் கடந்தும். வயதில் இளையவர்கள். படித்தவரிடம் நல்ல பண்பு இருக்கும் என்பது பொதுவான ஒரு நம்பிக்கை. இன்றைய பதிவுகளைப் பார்த்தால் நம்பிக்கை பொய்யோ எனப் படுகிறது.


ஸ்ரீனி


Copyright:thinnai.com

பின் குறிப்பு:

திண்ணை 29 மார்ச் 2007 இதழில் ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு - தமிழ் வலைப்பூக்களின் பரிணாமம்" என்ற தலைப்பில் வந்த ஸ்ரீனியின் கட்டுரை இது. அதை இங்கே மீள் பதிப்பித்திருக்கிறேன்.

கட்டுரை ஆசிரியரின் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.

Thursday, March 29, 2007

நற்குணக் கடல்: ராம தரிசனம்

தவத்திலும், கல்வியிலும் சிறந்த நாரத மகரிஷியைப் பார்த்து முனிபுங்கவர் வால்மீகி கேட்கிறார் - "உலகில் தலைசிறந்த குணவான் யார்? வீரன் யார்? தர்மத்தை அறிந்துணர்ந்தவன், செய்ந்நன்றி மறவாதவன், சத்தியத்தில் உறுதியாக நிலைபெற்றவன் யார்?" (வால்மீகி ராமயணம், 2-ஆம் சுலோகம்) பின்னர் இப்படி பல நற்குணங்களின் பட்டியலை அடுக்கிக் கேள்வி கேட்டுக் கொண்டே போகிறார். இறுதியில் நாரதர் இவை எல்லாவற்றுக்கும் ஒரே விடையாக "ராமன் என்று மக்களிடையே புகழ்பெற்றவன்" (ராமோ நாம ஜனை: ஸ்ருத:) என்று பதிலளிக்கிறார்.

கம்பராமாயணம் 2-ஆம் பாடலில், கம்பர் கூறுகிறார் -

சிற்குணத்தர் தெரிவுஅரு நல்நிலை
எற்கு உணர்த்த அரிது; என்ணிய மூன்றினுள்
முற்குணத்தவரே முதலோர்; அவர்
நற்குணக் கடல் ஆடுதல் நன்று அரோ.


சாத்விகம், ராஜசம், தாமசம் என்ற மூன்று குணங்களையும் கடந்த ஞானியர் நிலையை என்னால் உணர்த்த முடியாது; இவற்றுள் முதலாவதான சத்துவகுணத்தின் முழு உருவமாகத் தோன்றிய ஸ்ரீராமனுடைய நற்குணங்களாகிய கடலில் மூழ்குவதே நன்று.

"எல்லையொன்றின்மை எனும் பொருள் அதனைக்
கம்பன் குறிகளால் காட்டிட் முயலும் முயற்சியைக் கருதியும்.."


என்று பாரதி சொன்னது எல்லையற்ற பரம்பொருளை அல்ல, ஸ்ரீராமனுடைய எல்லை காணமுடியாத குணக்கடலைத் தான் என்றே எண்ணத் தோன்றுகிறது. அன்புக்கு எல்லை உண்டா? பாசத்திற்கு எல்லை உண்டா? பக்திக்கு எல்லை உண்டா? ஞானத்திற்கு எல்லை உண்டா? தொண்டுக்கு எல்லை உண்டா? 4 முழம் அன்பு, 3 கிலோ பாசம் என்று யாராவது சொல்லுவார்களா?

எல்லையில்லாத இந்த மனிதப் பண்புகளுக்கு ராமன், சீதை, லட்சுமணன், பரதன், அனுமன், குகன் என்றெல்லாம் குறியீடுகளால் காட்ட விழைந்தான் அல்லவா கம்பன்? அதைத் தான் பாரதி குறிப்பிடுகிறான் என்று கொள்ள வேண்டும்.

கற்றுக் கடக்க முடியாத கரைகாணாக் கடல் காகுத்தன் கல்யாண குணங்கள். அதனால் தான் "கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ?" என்று கேட்டார் நம்மாழ்வார்.

"அனுபம குணாம்புதி சந்த்ரஸி!" (ஒப்பற்ற குணங்களாகிய கடலுக்குச் சந்திரனே) என்று அழைத்துப் பாடினார் தியாகராஜர். கடல் அலைகள் சந்திரனைக் கண்டு பொங்கி மகிழ்வது போல, நற்குணங்கள் ராமனுக்காக அலைபாய்கின்றனவாம். இந்து தத்துவ மொழியில் கடல், சந்திரன் இரண்டும் மனத்தின் குறியீடுகள், இரண்டும் ஒன்றே என்பது உட்கருத்து.

நூற்றாண்டுகள் கழித்து ஸ்ரீஅரவிந்தர் கம்பனின் அதே கருத்தை எதிரொலிக்கிறார் -

.. It was Rama's business to be not necessa-rily as perfect, but as largely representative of sattvic man, faithful husband, obedient son, a tender and perfect brother, father, friend — of the outcast Guhaka, of animal leaders, Sugriva and Hanuman, of the vulture Jatayu, friend of even rakshasa Vibhishana. All that he was in a brilliant, striking but above all spontaneous and inevitable way... with a certain harmonious completeness.

His business was to destroy Ravana and to establish Rama Rajya... an order proper to the sattvic civilised human being who governs his life by finer emotions, moral ideals, such as truth, obedience, cooperation and harmony, the sense of domestic and public order — to establish this in a world still occupied by anarchic forces.

(From : Rama As An Avatar Of The Sattvic Human)

சத்யகாமன், சத்யசங்கல்பன், சத்யபராக்ரமன் என்பனவெல்லாம் ராமனுக்குரிய அடைமொழிகள். "தருமத்தின் தனிமூர்த்தி" என்பான் கம்பன். "ராமோ விக்ரஹவான் தர்ம:" என்பான் வால்மீகி.
சத்தியத்தின் வேர்ச்சொல்லான "சத்" என்பதன் பொருள் "உள்ளது". அதாவது என்றும் உள்ளது எதுவோ அது உண்மை. அதுவே தருமம். சத்தியம், தருமம் இரண்டும் ஒரே உண்மையின் இரு பக்கங்கள் தான். அதனால் தான் ஈசாவாஸ்ய உபநிஷத் "சத்ய தர்மாய த்ருஷ்டயே" என்று முடிகிறது.

"உண்டெனும் தருமமே உருவமாய் உடைய நிற்-
கண்டுகொண்டேன் இனிக் காண என் கடவெனோ?"


என்று உயிர்விடும் நேரத்தில் வாலிக்கு இந்த ராம தரிசனம் மூலமாக இந்த ஞான தரிசனம் கிடைக்கிறது.

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்


என்று வள்ளுவர் குறிப்பிடுவது இந்த "உண்மை"க் குணமான சத்துவ குணத்தைத் தான். சத்துவ குண சொரூபன் ராமன். அவனது வழி தருமம், சத்தியம். அதனால் தான் அவன் தன் உயிர்க்கு மட்டும் அல்ல, மன்னுயிர்க்கெல்லாம் துணையாகிறான்.

ராமனுக்கு முடிசூட்டும் செய்தியைச் சொன்ன தசரதனிடம் வசிஷ்டர் கூறுகிறார் -

பொன் உயிர்த்த பூ மடந்தையும் புவியெனும் திருவும்
"இன்னுயிர்த்துணை இவன்" என நினைக்கின்ற இராமன்
தன் உயிர்க்கு என்கை புல்லிது; தற்பயந்து எடுத்த
உன்னுயிர்க்கென நல்லன், மன்னுயிர்க்கெலாம் உரவோய்!

(மந்திரப் படலம், 37)

இங்கே பூமடந்தை என்னும் திருமகளும், புவிமடந்தையாகிய நிலமகளும், அவள் உருவாகவே தோன்றிய சீதையும் எல்லாரும் ஒன்று தான். அதனால் இவர்கள் அனைவர்க்கும் துணையானாலும் ராமன் தன் ஏகபத்தினி விரதத்தை பங்கம் செய்யவில்லை!

மகாபாரதத்தில் தருமர் யட்சன் உரையாடலில் "ஒரு மனிதனுக்கு உற்ற துணைவர்கள் யார்?" என்று யட்சன் கேட்க "தருமம் தாய், சத்தியம் தந்தை, கருணை நண்பன், அமைதி மனைவி.. " என்பதாக தருமர் பதிலளிக்கிறார்.
இதே கருத்தில், இருளில் காட்டில் ராமன் செல்கையில் இந்த நற்குணங்களாகிய விளக்குகளே அவன் துணையாயிற்று என்பதாக கம்பன் அழகாகச் சொல்லுவான் -

தையல் தன் கற்பும், தன் தகவும், தம்பியும்,
மையறு கருணையும், உணர்வும், வாய்மையும்,
செய்யதன் வில்லுமே, சேமமாகக் கொண்டு
ஐயனும் போயினான், அல்லின் நாப்பணே.

(தைலம் ஆட்டு படலம், 47)

மனிதர்களாகவே வந்த சீதை, ராமனுடைய திரு அவதாரங்கள் மானுடப் பண்புகளை மனித குலம் முழுமைக்கும் நினைவூட்டிக் கொண்டிருக்கும், "ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்" என்று வால்மீகியின் ராமன் தன்னைக் கூறிக் கொள்கிறான். "மானுடம் வென்றதன்றே!" என்று கம்பன் மெய்சிலிர்க்கிறான்.

ஸ்ரீராமன் புகழ்பாடும் சந்திரோதயம்
சீதாவின் முகம் தேடும் அருணோதயம்!

இந்திய தேசியத்திற்கு எதிரான முள்காடு பூங்கா: கண்டியுங்கள்

தமிழ்மணம் வலைத்திரட்டி தொகுத்து அளிப்பதாகக் கூறும் பூங்கா என்ற வலையிதழ் (முள்காடு என்ற பெயர் தான் இதற்குப் பொருத்தமாக இருக்கும்) இந்திய தேசியத்திற்கு எதிரான கருத்துக்களைத் தானாகவும், பொறுக்கி எடுத்தும் மீண்டும் மீண்டும் வெளீயிட்டு வருவதைக் காண்கிறேன். குறிப்பாக கடந்த இதழ் ஆசிரியர் குழு எழுதியிருப்பது அக்மார்க் இந்திய தேசவிரோதக் கருத்துக்கள்.

தந்தைப் பெரியார் பார்ப்பனீயம் இந்தியாவில் மூன்று முகங்களைக் கொண்டிருக்கிறது என்றார். ஒன்று வலதுசாரி இந்துத்துவ முகம், நடுநிலையாகத் தோன்றமளிக்கும் காங்கிரஸின் இந்திய தேசிய முகம், இடதுசாரி பொதுவுடமை காட்டும் முகம். அணிகின்ற முகமூடிகள் வெவ்வேறு தன்மையுடையனவாய்த் தோன்றுகிற போதும் உள்ளிருந்து தொழிற்படுகின்ற சக்தியாய் பார்ப்பனீயம் இருக்கிறது. தனது நலன்களை காப்பாற்றிக்கொண்டு, மக்களை அதிகாரத்தின் நுகத்தடிகளில் வைத்திருக்க, காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப அது முகமூடிகளைத் திறம்பட பயன்படுத்துகிறது. நந்திகிராமில் பூணூல் திருவிழா நடத்தி தனது சாதித் திமிரை காட்டும் காம்ரேடுகள் அணிவது நவ- இடதுசாரி முகமூட...

இந்தியாவின் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, ஆளும்கட்சிக்கு ஜால்ரா போடும் கட்சி எல்லாமே பார்ப்பனீயமாம்! இந்த பார்ப்பனீயக் காங்கிரசின் அங்கமாக இருந்து குடும்பச் சொத்து சேர்க்கும் தி.முக, திராவிடக் கட்சிகளும் அப்படியானால் பார்ப்பனீய அடிவருடிகள் தானே? அதை ஏன் விட்டுவிட்டார்கள்? "இந்திய தேசியம்" என்ற கருத்துருவாக்கமே பார்ப்பனீயமா? அது ஒரு தீமையா? அப்படியானால் இந்த பார்ப்பனீயத்திற்கு எதிரான ஜிகாதி தீவிரவாதம், நக்சசலைட் தீவிரவாதம், பிரிவினைவாதம், ஜனநாயக எதிர்ப்பு இதெல்லாம் தான் சிறந்ததா? சபாஷ்!

நந்திக்கிராம வன்முறையைக் கண்டிப்பதில் அந்தக் குறிப்பிட்ட இடதுசாரி குண்டர் கட்சி தவிர மற்ற அனைத்து இந்திய மக்களும், அரசியல் கட்சிகளும் ஒன்று திரண்டுள்ளன. அதை யாரும் ஆதரிக்கவில்லை. ஆனால் இங்கே நந்திக்கிராம வன்முறை கண்டனம் என்ற போர்வையில் நச்சு உமிழப் பட்டிருக்கிறது.

பூங்கா ஒரு நடுநிலை இதழ் என்று என்றுமே தன்னை அறிவித்துக் கொண்டதில்லை தான். சில கருத்துக்களில், சில சார்பான நிலைப்பாடுகளை அது எடுக்கலாம்.. ஆனால் பிராமண வெறுப்பு என்ற முகமூடியில் இங்கே அது பேசுவது கடைந்தெடுத்த இந்திய தேச விரோதம்...இதை எளிதாக ஒதுக்கி விட முடியாது.

இந்திய ஜனநாயகத்தில் பல குறைபாடுகள் உள்ளன. ஊழல், கிர்மினல் அரசியல், சுயநலம்.. ஆனால் இவை அனைத்தையும் எதிர்த்துப் போராடும் சக்தியின் ஊற்றுக் கண்ணாக விளங்குவது இந்திய தேசியம், இந்திய ஜனநாயகம், இந்திய அரசியல் சட்டம் தான். இன்று நாம் மார்தட்டிக் கொண்டு பேசும் கருத்துரிமை எல்லாம் அது வழங்கிய கொடை தான். நம் பொருளாதார முன்னேற்றம், வாழ்வுரிமை எல்லாவற்றுக்கும் ஆதாரமே அது தான்.

இடதுசாரி இந்துத்துவம் இப்படியான செயற்பாடுகளில் சற்றும் கூச்சமின்றி ஈடுபடும் போது வலதுசாரி ....

நந்திக்கிராமில் அப்பாவி மக்களைக் கொன்ற கடும் இந்து விரோத கம்யூனிஸ்டு அரசை "இந்துத்துவம்" என்று வர்ணிக்க படுபயங்கரமான மனநிலைப் பிறழ்வும், குழம்பிய மனநிலையும் வேண்டும். Hats off!

பைதிவே, இந்த இடதுசாரி இந்துத்துவம் என்ற சொல்லாட்சியை எனக்குத் தெரிந்து அறிமுகப் படுத்தியவர் என் நண்பர் அருணகிரி தான். அவர் திண்ணையில் எழுதிய இந்தக் கட்டுரையில், எப்படி மேற்கத்திய நாடுகளில் "இடதுசாரி" என்று சம்பிரதாயமாக அறியப்படும் பெண்ணுரிமை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு போன்ற மக்கள் பிரசினைகள் இந்தியாவில் இந்துத்துவ இயக்கங்களால் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப் படுகின்றன என்பதை விளக்க இந்த முரண்போன்று தோன்றும் சொல்லாட்சியப் பயன்படுத்தியிருக்கிறார். அதை இவ்வளவு அசிங்கமாகத் தான் காப்பியடிக்க முடியுமா?

மதுரையிலும், கோவையிலும், சென்னையிலும், பெங்களூரிலும், மும்பையிலும், தில்லியிலும் இருந்து தமிழில் பதிவு போட்டு மகிழ்பவர்கள் இதைக் கண்டிப்பாக எண்ணிப் பார்க்க வேண்டும். இன்று இந்தியாவில் தான் தமிழர்கள் சகல உரிமைகளுடனும், வசதிகளுடனும், வாய்ப்புகளுடனும் திகழ்கிறார்கள், உலகில் வேறெங்கும் அல்ல. இந்திய தேசியம் தான் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் ஒரு தமிழரை ஜனாதிபதியாகவும், இன்னொரு தமிழரை நிதியமைச்சராகவும் ஆக்கியிருக்கிறது. இதற்கு ஈடான தமிழ்ப் பெருமிதம் உண்டா?

நிலைமை இப்படியிருக்கையில், இந்தியர்களை பெரும்பான்மை படைப்பாளர்களாகவும், வாசகர்களாகவும் கொண்ட ஒரு வலையிதழின் ஆசிரியர் குழு எப்படி இங்ஙனம் எழுதத் துணிகிறது?

இதற்காக பூங்கா ஆசிரியர் குழுவை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழ்மணத்தில் தங்கள் பதிவுகளை இட்டு வரும் இந்திய தேசியத்தில் நம்பிக்கையுள்ள பதிவர்கள் அனைவரும் பூங்கா மற்றும் அதன் ஆசிரியர் குழு என்ற பெயரில் இப்படி எழுதிய புல்லுருவிகளை வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

Friday, March 23, 2007

சுவாமி விவேகானந்தருக்கு எதிராக இஸ்லாமிய ஃபத்வா வருமா?

… இந்த உணர்வு நிலையில் தற்செயலாகச் சென்று விழுவதில் பெரும் அபாயம் உள்ளது என்று யோகி சொல்லுகிறான். பெரும்பாலானவர்கள் விஷயத்தில் மூளை முழுவதுமாக மிக மோசமாக பாதிக்கப் படும் அபாயம் உள்ளது. அதனால், தவறாமல் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் இந்த பரவச நிலையைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் அதில் தற்செயலாகத் தடுக்கி விழுந்தவர்கள் இருளில் தடுமாறுபவர்களாக இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அவர்களிடம் அறிவாற்றலோடு கூடவே சில நேர்த்தியாகத் தோன்றும் ஆனால் பெரும் தீமை தரும் மூடநம்பிக்கைகளும் இருக்கும். நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் பலவிதமான மனப்பிராந்திகளுக்கு அவர்கள் ஆட்படுவார்கள்.

ஒருநாள் கேப்ரியேல் தேவதை ஒரு குகையில் தம்மிடம் வந்ததாகவும், தன்னை ஹரக் என்ற தேவலோகக் குதிரையில் சுவர்க்கத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் முகமது கூறினார். இதை வைத்துக் கொண்டு, பின்னர் முகமது சில ஆச்சரியகரமான உண்மைகளைப் பற்றிப் பேசினார். நீங்கள் குரானைப் படித்தால் அதில் உள்ள பெரும்பாலான ஆச்சரியகரமான உண்மைகள் மூடநம்பிக்கைகளுடன் கலந்திருப்பதைப் பார்க்கலாம். அந்த மனிதர் உணர்ச்சி பெற்றார், வாஸ்தவம் தான், ஆனால் அந்த உணர்ச்சி தடுக்கி விழுந்ததால் ஏற்பட்டது. அவர் பயிற்சியடைந்த யோகி அல்லர், தான் என்ன செய்கிறோம் என்றே அவர் அறிந்திருக்கவில்லை. உலகத்திற்கு முகமது செய்த நன்மையை நினைத்துப் பாருங்கள், அவரது வெறித்தனத்தால் செய்யப் பட்ட மிகப்பெரும் தீமைகளையும் எண்ணிப் பாருங்கள். அவரது போதனைகளால் படுகொலை செய்யப் பட்ட லட்சக் கணக்கானவர்களை எண்ணிப் பாருங்கள்: குழந்தைகளை இழந்த தாய்மார்கள், அநாதைகளாக்கப் பட்ட குழந்தைகள், முழுவதுமாக அழிக்கப் பட்ட தேசங்கள், லட்ச லட்சமாகக் கொல்லப் பட்ட மக்கள் ! [1]

யோக உளவியல் அடிப்படையில் முகமது நபியின் வஹி எனப்படும் பரவச அனுபங்களை இன்று விளக்க முயலும் எல்லா அறிஞர்களுக்கும் ஒருவகையில் முன்னோடி சுவாமி விவேகானந்தர் தான் என்று எண்ணத் தோன்றுகிறது. இதே கருத்தைத் தான் பேராரியர் கொய்ன்ராட் எல்ஸ்ட், டாக்டர் டேவிட் ஃப்ராலி இவர்கள் ஆங்கிலத்திலும், நேசகுமார் தமிழிலும் மிக விரிவாக விளக்கியிருக்கின்றனர்.

இஸ்லாமின் சமயக் கோட்பாடாகவே ஆகி விட்ட மட்டற்ற மதவெறி சார்ந்த வன்முறை உணர்வையும் சுவாமி விவேகானந்தர் சுட்டிக் காட்டுகிறார்.

.. பல முகமதியர்கள் இந்த விஷயத்தில் மிக வக்கிரமானவர்கள், மிக குழுவெறி கொண்டவர்கள். அவர்களது மந்திரம்: ஒரே கடவுள், முகமது அவரது இறைத்தூதர். இது அல்லாத மற்ற விஷயங்கள் எல்லாம் மோசமானவை மட்டுமல்ல, உடனே அழித்து ஒழிக்கப் படவேண்டியவை. ஒரு கண நேர முன்னறிவிப்பில் இதை முழுவதும் நம்பாத ஒவ்வோர் ஆணும், பெண்ணும், கொல்லப் படவேண்டும். இந்த வழிபாட்டு முறை இல்லாத மற்ற எல்லாம் உடனடியாக உடைத்து நொறுக்கப் படவேண்டும். இது தவிர வேறு எதையாவது கற்பிக்கும் எல்லா புத்தகங்களும் எரிக்கப் படவேண்டும். பசிபிக்கில் இருந்து அட்லாண்டிக் வரை 500 வருடங்கள் உலகம் முழுவதும் ரத்த ஆறு ஓடியது: அது தான் முகமதியம்! [2]
ஆனால் சுவாமிஜி குருட்டுத்தனமான இஸ்லாமிய வெறுப்பாளர் அல்ல (கொய்ன்ராய்ட் எல்ஸ்டும், நேசகுமாரும் கூட இவ்வகையானவர்களே என்பது என் கருத்து). பொதுவாக ஒப்பிடுகையில், இஸ்லாம் என்ற தங்கள் குழுவுக்குள் இணைந்தவர்களை முஸ்லீம்கள் எப்படி சமமாகவும், சகோதரத்துவத்துடனும் நடத்தினர் என்பதை சுவாமி சுட்டிக் காட்டுகிறார். புகழ்ந்துரைக்கவும் செய்கிறார். வெள்ளை அமெரிக்கர்கள் கறுப்பர்களை நடத்தும் விதத்தை இஸ்லாமியரின் குழு சகோதரத்துவத்தோடு ஒப்பிட்டுக் காட்டவும் சுவாமிஜி தயங்கவில்லை.

.. மற்ற சமயங்கள் போலன்றி ஒரு மனிதன் முகமதியன் ஆன உடனேயே இஸ்லாம் அவனை திறந்த கரங்களுடன் வரவேற்கிறது. உங்கள் அமெரிக்க செவ்விந்தியர்களில் ஒருவன் முகமதியன் ஆகிவிட்டால் துருக்கி சுல்தான் அவன் கூட உட்கார்ந்து சாப்பிடுவதற்குக் கூட ஆட்சேபம் இருக்காது. அவனுக்கு மூளையும் இருந்தால், எந்த நிலையிலும் அவனுக்குத் தடங்கல்கள் இருக்காது. ஆனால் இந்த தேசத்தில் வெள்ளையனும், கருப்பனும் அருகருகே மண்டியிட்டு பிரார்த்தனை செய்யும் எந்த தேவாலயத்தையும் நான் பார்த்ததில்லை. [5.1]

தனது முஸ்லீம் நண்பரும் சீடருமான முகமது ஸர்ஃபராஜ் ஹுசைன் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் இதே கருத்தை மீண்டும் கூறுகிறார் -

… சமய உலகின் முடிந்த முடிபான தத்துவம் அத்வைதம். ஏனென்றால் அத்வைதம் என்ற நிலையில் இருந்து தான் ஒருவர் எல்லா சமயங்களையும், எல்லா இனங்களையும் அன்போடு நோக்க முடியும். வருங்காலத்தின் அறிவொளி பெற்ற மனித சமுதாயத்தின் சமயம் இதுவே என்று நான் கருதுகிறேன். இந்த தத்துவத்தை மற்ற எல்லா இனங்களுக்கும் முன்பு முதலில் கண்டடைந்த பெருமை இந்துக்களைச் சாரும், அவர்கள் யூத, அரபிய இனங்களை விடப் பழமையானவர்கள் என்பதால். ஆனால் மனிதகுலம் முழுவதையும் தன் ஆன்மா போலக் கருதும் நடைமுறை அத்வைதம் அதன் முழுமையான அளவில் இந்துக்களால் வளர்க்கப் படவில்லை. என் அனுபவத்தில், இந்த சமத்துவம் என்ற விஷயத்தை ஓரளவு பாராட்டத் தக்க வகையில் அணுகிய ஒரு மதம் இருக்குமென்றால், அது இஸ்லாம். [3.1]

வேதாந்த மனமும், இஸ்லாம் உடலும் கொண்டு, இந்தக் குழப்பங்கள் மற்றும் மோதல்களில் இருந்து மீண்டெழும் புகழ்மிக்க, அசைக்க முடியாத வருங்கால பாரதம்.. இதை என் மனக்கண்ணில் பார்க்கிறேன். [3.2]

இந்த சந்தர்ப்பத்தில் "இஸ்லாமிய உடலும்" என்று கூறுகையில் இந்த குழு சார்ந்த சகோதரத்துவம் தேசிய அளவிலான சகோதரத்துவமாக மாற வேண்டும் என்பதையே சுவாமிஜி குறிக்கிறார் என்பது புலனாகும்.

மதவெறியர்களான இஸ்லாமியர்களுக்கு நடுவிலும் இந்த வெறியில்லாத, ஆன்மிகத்தில் ஈடுபட்ட மனிதர்கள் இருந்தனர் என்பதை சுவாமிஜி மறுக்கவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரையில் இவர்களை இப்படி மாற்றியது இந்து ஆன்மிகத்தின் வலிமை தான் என்றும் அவர் கூறுகிறார் -

(சீடர்): இறுதியில் இந்தியா தன்னை வென்றவர்களையும் வென்றுவிடுமா??

ஆம். கருத்துக்களின் உலகில். இன்று இங்கிலாந்திடமும் வாள் இருக்கிறது, பௌதிக உலகம் என்கிற வாள், நம்மைத் தோற்கடித்த முகம்மதியர்கள் போலவே. ஆனால் மாமன்னர் அக்பர் நடைமுறையில் ஒரு இந்துவாகவே ஆகிவிட்டார். கற்றறிந்த முகமதியர்களும், சூபிக்களும் இந்துக்களிடமிருந்து வேற்றுமை காண முடியாதவர்களாகவே உள்ளனர். இவர்களில் பலர் பசு மாமிசத்தைத் துறந்து விட்டவர்கள், அவர்களது நடைமுறைகள் அனைத்தும் நம்மைப் போலவே உள்ளன. அவர்களது சிந்தனைகள் முழுதும் நம் தர்மத்தினுடையவையே நிரம்பியிருக்கின்றன. [4]

சுவாஜியின் லட்சியம் புற அளவிலான சமயக் கோட்பாடுகள் அனைத்தையும் கடந்த அத்வைத வேதாந்தம் தான். இதை மீண்டும் மீண்டும் அவர் உறுதி செய்கிறார் -

வேதங்களைக் கடந்த, பைபிளைக் கடந்த, குரானைக் கடந்த ஓர் இடத்திற்கு மனிதகுலத்தை இட்டுச் செல்லவே நாம் விழைகிறோம். ஆனால் இதைச் செய்வதற்கு வேதங்களுக்கும், பைபிளுக்கும், குரானுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தியாக வேண்டும். ஒருமை என்ற ஒரே மதத்தின் பல்வேறு மாறுபட்ட வெளிப்பாடுகளே இந்த மதங்கள் எல்லாம் என்று மனிதகுலத்திற்குக் கற்றுக் கொடுக்க வெண்டும். தனக்குப் பொருத்தமான வழியை ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்க அது வழிசெய்யும். [5.2]

மொத்தத்தில் சுவாமிஜி இஸ்லாத்தின் சில அம்சங்களைப் புகழ்ந்தும், அதே சமயம் அதன் அங்கமாகவே ஆகி விட்ட குருட்டு மதவெறி மற்றும் ஜிகாத் வன்முறை மீது மிகக் காட்டமான விமரிசனங்களை வைத்தும் இருக்கிறார்.
குறிப்பாக, முகமது நபியைப் பற்றிக் கூறியுள்ளவற்றைப் படிக்கையில் சிலகாலம் முன்பு இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பைக் கிளப்பிய டேனிஷ் கார்ட்டூன்கள் சுவாமிஜியின் கருத்தை விட மென்மையானத் தான் இருந்தன என்று தான் தோன்றும்! ஆனால், அந்த கார்ட்டூன் கலைஞரையும் அதை வெளியிட்ட பத்திரிகையை அதிபர்களையும் கூட கொன்று ஒழிக்க வேண்டும் என்று உலகெங்கும் முல்லாக்கள் ஃபத்வாக்கள் விட்டனர். பல தூதரகங்கள் தாக்கப்பட்டு, பொது சொத்துக்கள் நாசம் செய்யப் பட்டன. இந்தியாவிலும் கடும் கண்டன ஊர்வலங்கள் நடந்தன.

இஸ்லாம் பற்றிய சுவாமிஜியின் கருத்துக்கள் இவை. இந்திய தேசிய எழுச்சியின் நாயகரும், சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த உலக சிந்தனையாளர்களில் ஒருவருமான சுவாமிஜியைப் பற்றிய இஸ்லாமிய சமயக் கருத்து என்னவாக இருக்கும்? சுவாமி விவேகானந்தருக்கு எதிராக இஸ்லாமிய ஃபத்வா வருமா?

பின்குறிப்பு:

இங்கே எடுத்தாளப் பட்டுள்ள மேற்கோள்கள் அனைத்தும் அத்வைத ஆசிரமம், கல்கத்தா வெளியிட்டுள்ள "சுவாமி விவேகானந்தரின் முழுப் படைப்புக்கள்" நூலில் இருந்து நேரடியாக மொழிபெயர்க்கப் பட்டவை.

[1] : Volume 1 - Raja Yoga - Dhyana and Samadhi
[2] : Volume 4 - Lectures and Discourses - The Great Teachers of the World
[3.1],[3.2] : Volume 6 - Epistles Second Series - CXLII
[4] : Volume 5 / Interviews / << INDIA AND ENGLAND
[5.1],[5.2] : Volume 2 - Practical Vedanta and other lectures - The Way to the realization of Universal religion

Monday, March 19, 2007

இஸ்லாமிஸ்ட் இந்து வேதத் திரிப்புக்கள் பற்றி என்.வி.கே.அஷ்ரஃப்

நேசகுமாரின் சமீபத்திய பகவத்கீதை - இஸ்லாமிஸ்டுகளின் திரிப்பு பதிவில் மரக்காயர் கீதையில் ஓரிறைக் கொள்கை என்று சில கீதை சுலோகங்களைத் திரித்து வழக்கமான இஸ்லாமிஸ்ட் ஏமாற்று பொய் வேலை செய்வதை அம்பலப் படுத்தியிருக்கிறார். நன்றி நேசகுமார்.

விளக்கவுரை அல்ல, சாதாரன கீதை மொழிபெயர்ப்புகளைப் படிப்பவர்களுக்குக் கூட இந்த ஏமாற்று வேலைகள் புரிந்து விடும்.

அப்பதிவில் கடைசியில் நேசகுமார் கூறுகிறார் :

பகவத் கீதையின் அறப்போரே , குரானின் ஜிகாத் என்று இஸ்லாமிஸ்டுகள் நூலெல்லாம் வெளியிட்டுக் கொண்டுள்ளார்கள். ஜிகாதை நியாயப்படுத்தும் இந்தச்செயலை இந்து ஆன்மீகவாதிகள் முன்வந்து கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இது எப்படிப்பட்ட திரித்தல் என்பதையும் விளக்க வேண்டும்.

நேசகுமார், என்.வி.கே. அஷ்ரஃப் என்பவர் இப்படிப் பட்ட ஒரு ஆன்மிகவாதியாகத் தான் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். சமீபத்தில் இணையத்தில் மேய்கையில் இவரது வலைத் தளத்தைப் பார்த்தேன். "இந்து வேதங்களில் முகமது.. ?" என்று ஆண்டர்சன் என்பவர் எழுதியதற்கு இவர் எழுதிய அருமையான எதிர்வினையில் இதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.. இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் அஷ்ரஃப் கூறுகிறார் -

Being a tolerant faith, Hinduism offers a great degree of freedom to interpret its scriptures. Ironically, this freedom has been abused by Muslim and Christian scholars to read their ideas into these texts. We will soon see that their claims of prophecies from the Vedas are a result of mistranslations and misinterpretations.

"பவிஷ்ய புராணத்தில் முகமது" போன்ற கட்டுக்கதைளை உரித்து வைக்கும் அஷ்ரஃப் , சொர்க்கம், நரகம் பற்றிய வேத இலக்கிய வர்ணனைகளின் ஆன்மிகக் குறியீடுகளையும் அலசுகிறார்.

குறிப்பாக "9 வாசல்கள் உடைய நகரம்" (நவத்வாரே புரே தேஹி) என்று வரும் பதத்தை இஸ்லாமிஸ்டுகள் "பாப்-ஏ-இப்ராஹிம் முதலான 9 வாசல்கள் உடைய காபா இறைவனின் வீடு" என்று பரப்பும் மகா மோசடியை சாடுகிறார்..

இந்த 9 வாசல்கள் என்பன யோக சாஸ்திரத்தின் படி நம் உடம்பில் உள்ள ஒன்பது துளைகளைக் குறிப்பவை. நகரம் என்பது உடல், இதன் உள்ளே உறையும் ஆன்மா பிரம்ம ஸ்வரூபம் என்பதைக் குறிக்கும் மந்திரங்களைத் தான் இஸ்லாமிஸ்டுகள் இப்படித் திருக்கின்றனர். அஷ்ரஃப் கூறுகிறார் -

The reference to 9 gates occur quite commonly in many Hindu scriptures..

Nine Gates in Tirumandiram
He fashioned this body, Into that body He breathed life; And set gates nine; (470)

Nine Gates in Svetasvatara Upanishad
It is He who resides in the body, The city of 9 gates. He is the soul That sports in the outside world..." (3:18)

Nine Gates in Bhagavad Gita
The stable person, renouncing work through knowledge,Neither acts himself, nor forces action on others, But takes refuge in the body, the city of 9 gates (V: 13)

"மலம் சோரும் ஒன்பது வாயிற்குடிலை" என்ற திருவாசக வரிகள் கூறுவதும் இதையே தான்.

Muslims have invariably tried to understand other religions from their point of view. Sanskrit words that sound similar to those in Arabic were often distorted to fit similar equivalents. The best of all examples is the mistaken identity of `Brahma' for `Abraham' [3,8]. Dr. Haq mentions a series of similar mistaken identities: Manu for Nuh (Noah), Saraswathi for Sarah, and of course Mamah for Muhammad! Indeed, some Muslim scholars have let their imaginations run wild!

திருமந்திரத்தை மேற்கோள் காட்டியதால் இவர் தமிழராக இருக்குமோ என்று இன்னும் கொஞ்சம் தேடியதில், இது உறுதியாயிற்று ! இதே கட்டுரையில் நரகம் பற்றிய இந்துக் கருத்தை விளக்குகையில் "இருள்சேர் இருவினையும் சேரா.." என்ற மிகப் பொருத்தமான குறளை சுட்டுகிறார்.

"குரானில் எண்ணிக்கைகளை வைத்து செய்யப் பட்ட கணித அற்புதங்கள் இருப்பதாகவும், இவை மனிதர்களால் அல்ல, ஏக இறைவனாயே செய்யப் படமுடியும்" என்ற இஸ்லாமிஸ்ட் சவடாலை எதிர்க்க நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் எழுதிய குறளில் உள்ள "கணித அற்புதங்களை" எடுத்துக் காட்டி அந்த வாதத்தைப் பொடிப் பொடியாக்குகிறார். திருக்குறளில் இவருக்கு இருக்கும் மிக ஆழ்ந்த புலமை பிரமிப்பூட்டுகிறது. பல மொழிகளிலும் திருக்குறள் என்று ஒரு பக்கத்தையும் தன் வலைத் தளத்தில் வைத்திருக்கிறார்.

"குரானைப் போன்ற மொழி நடையில் உள்ள நூலே உலகில் கிடையாது, அதில் உள்ளது போன்று 'சுரா'க்களை யாரும் எழுத முடியாது" போன்ற ஜல்லிகளுக்கு பதிலடியாக தமிழ், சம்ஸ்கிருதம், பஞ்சாபி மொழிகளிலுள்ள அற்புதமான பக்திப் பனுவல்களைக் காட்டி எதிர்ச்சவால் விடுகிறார்.

இவர் பெயரில் மட்டும் முஸ்லீம் அல்ல, அரபி மொழியிலும், இஸ்லாமிய நூல்களிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர் என்பது இந்தக் கட்டுரைகளில் இருந்து தெளிவாகிறது.

ஐயா அஷ்ரஃப், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? சுவனப்பிரியன், இறைநேசன், நல்லடியார், மரக்காயர் போன்று பல வண்ணங்களில் ஜிகாதிய வெறித்தனத்தை உமிழும் ஆசாமிகள் தான் இங்கு இருக்கிறார்கள். உங்களைப் போன்ற உண்மையான அறிஞர்கள் தான் இவர்களைத் தெளிவிக்க வேண்டும்!

Friday, March 16, 2007

நீலகண்டனைத் தூற்றும் நிழல்-கண்டு-அஞ்சும்-கோழைகள்

தமிழ் இணையத்திலும், எழுத்துலகிலும் தனக்கென ஒரு உயர்ந்த இடத்தை உருவாக்கிக் கொண்டுள்ளவர் அரவிந்தன் நீலகண்டன். அறிவியல், சமயம், தத்துவம், வரலாறு, இலக்கியம், சமூகம் உள்ளிட்ட பல துறைகளிலும் அவரது ஆழ்ந்த கல்வியும், அறிவுத் திறனும் அவரது எழுத்துக்களை சில காலமாகப் படித்து வரும் எவருக்கும் விளங்கும். "கடவுளும் 40 ஹெர்ட்ஸும்" (தமிழினி பதிப்பகம்) என்ற தலைப்பில் அவர் எழுதி வெளிவந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு சமீபகால தமிழ் அறிவியல் பதிவுளில் முக்கியமானது.
அவரது சமூக, அரசியல் நிலைப்பாடு இந்துத்துவம் என்பதை மிகத் தெளிவாகப் பலமுறை பல இடங்களில் பதிவு செய்தும் இருக்கிறார். தன் ஒவ்வொரு வாதத்திற்கும், எதிர்வினைக்கும், கருத்துக்கும் அசைக்க முடியாத ஆதாரங்களைத் தருவதில் அவரை விஞ்சிய ஒருவரைத் தமிழ் இணைய உலகில் காண்பது அரிது. அறிவுத் தளத்தில் காணும் இதே தீவிரத்துடன் உணர்ச்சித் தளத்திலும் தனது வெளிப்பாடுகளை சக்திவாய்ந்த, வீரியமிக்க மொழியில் முன்வைப்பவர் அவர்.

இத்தகைய ஒரு ஆளுமையை, தங்கள் வலைப் பதிவுகளில் சிலர் மிகக் கேவலமான, மோசமான, கீழ்த்தரமான முறையில் வசைபாடுவதைக் கவனித்து வருகிறேன். அதிலும் அசுரன் (பழைய கற்பகவினாயகம்), கேடயம் பதிவுகளில் அண்மைக் காலப் பதிவுகளில் இந்த வசவுகள் அத்துமீறிப் போய்க் கொண்டிருக்கின்றன.

தூ வெக்கங்கெட்ட கூமுட்டைகளா ! ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லிக்க வக்கில்ல.. RSS ராஸ்கல்ஸ்.. சோத்துல உப்பு போட்டு திங்கறவனா இருந்தா இதுக்கெல்லாம் பதில் சொல்லுடா நீலகண்டா..

பெரும்பாலான வசவுகள் இந்த வகையில் உள்ளன. நடுநடுவில் "சுயமரியாதை இருந்தால் இதற்கு பதில் சொல்.." என்பது மாதிரி சவடால்கள். காலாவதியாகிப் போய்க் காளான் பிடித்த பழைய மார்க்சியத்தையும், பார்ப்பன வெறுப்பில் அமிழ்த்திய திராவிட இனவாத ஜல்லியையும் குழைத்து எழுதியுள்ள இந்தப் பதிவுகளில் முழுக்க முழுக்கத் தென்படுவது வெறுப்பு, துவேஷம், குருட்டுத் தனம், கோழைத்தனம். முன்னுக்குப் பின் முரணான சமாச்சாரங்கள் - ஒரு இடத்தில் கர்நாடக சங்கீதத்தைக் காறி உமிழ வேண்டியது, இன்னொரு இடத்தில் "பார்ப்பனர்கள் உழைக்கும் மக்களிடமிருந்து கர்னாடக இசையைத் திருடி விட்டார்கள்" என்று ஏதாவது சொல்ல வேண்டியது. பார்ப்பனக் கடவுள் இந்திரனைப் பற்றி ஆபாசமாக எழுத வேண்டியது.. கொஞ்சநாள் கழித்து "திராவிடக் கடவுள் இந்திரனை பார்ப்பனர்கள் திருடி வேதக் கடவுள் ஆக்கி விட்டார்கள்.. " என்று கத்த வேண்டியது. ஆதாரம்?? குடித்து விட்டு உளறுவது போல இருக்கும் விசயத்துக்கெல்லொம் யாராச்சும் ஆதாரம் கேட்பாங்களா அப்பு?

ஜெயமோகன் எழுதிய "பின் தொடரும் நிழலின் குரல்" நாவலில் கெ.கெ.எம் என்று பழைய தலைமுறை ஸ்டாலின்-வழிபாட்டு கம்யூனிஸ்டு வருவார்.. அவரது கூட்டங்களில் சரக்கு அடித்து விட்டு வந்து கடைசி வரிசையில் நின்று கைதட்டும் கட்சித் தோழர்களின் மனநிலை தான் இவர்களது எல்லா எழுத்துக்களிலும் தெரிகிறது. இன்னும் கொஞ்ச நாளில் பித்தம் தலைக்கேறி சட்டையைக் கிழித்துக் கொள்ளும் நிலைக்குப் போனாலும் ஆச்சரியமில்லை.இதில் ஒரு ஆள் "ஸ்டாலின்" என்று பெயரிட்டுக் கொண்டுள்ளார்.. சொந்தப் பெயராக இருந்தால் சரி, அதில்லாமல் , தன் நாட்டில் மக்கள் தொகையில் சரிபாதியைக் கொன்று அழித்த மகா கொடூர சோவியத் சர்வாதிகாரியின் நினைவால் அவர் இந்தப் பெயரை வைத்துக் கொண்டிருப்பார் ஆனால் அவர் எத்தகையவர் என்பது அதிலிருந்தே புலனாகும்.

உண்மையில் இவர்களுக்காகப் பரிதாபப் படுகிறேன். இவர்களும், இவர்கள் பதிவில் வந்து புலம்பிக் கொண்டிருக்கும் தோழர்களும் மேற்சொன்ன நூலைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அவர்களது மூளையை ஆக்கிரமித்திருக்கும் சில அடிப்படைகளை அது அசைத்துப் பார்க்கும். குறைந்தபட்சம் ஒரு நல்ல நாவலைப் படித்த திருப்தியாவது கிடைக்கும்.

நீலகண்டன் எழுதும் ஒவ்வொரு கட்டுரையும், பதிவும் இவர்களது பத்து நாள் தூக்கத்தைக் கெடுக்கிறது என்று தெரிகிறது... தங்கள் நிழலைக் கண்டு பயந்து ஓடும் இந்தக் கோழைகளை அவர் கருத்துக்களில் உள்ள நிஜம் பயமுறுத்துகிறது. உள்ளூர அவர்களுக்குக் கிலி பிடித்துக் கொள்கிறது. அதன் வெளிப்பாடு தான் இந்த வசவுகள். அசுரனது பல புழுக்கைகளைத் தவறாமல் திரட்டிப் பூங்காவில் போடும் பூங்கா ஆசிரியர் குழுவினர் யாரும் இந்த வசவுகளைப் பார்க்கவில்லையா? இந்தத் தரம் வாய்ந்த எழுத்துக்களையும் தயது செய்து பூங்காவில போடுங்க ஐயா!

இந்துத்துவம் என்பதைக் கருத்தளவில் எதிர்க்கத் துணிவில்லாத இவர்கள், ஒரு சிறந்த அறிஞரை வசைபாடுவதை தமிழ்ப் பதிவர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.

நீலகண்டன், இவற்றைப் புறந்தள்ளுங்கள். உங்கள் எழுத்துக்கள் மேன்மேலும் வரட்டும், சிறக்கட்டும். "நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும!" என்ற தமிழ் மூதாட்டியின் வாழ்த்துரையை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்.

Thursday, March 08, 2007

வேதங்கள், உபநிஷதங்கள், சனங்கள்

சாரு நிவேதிதாவின் தடாலடி சாய்பாபா சந்திப்பு பரவசத்தை முன்வைத்து நேசகுமார் எழுதியிருந்தது மிகவும் ரசிக்கும்படியாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருந்தது. சில விமரிசனங்கள்.

// வேதத்தின் முடிவு, சிகரம் என்றெல்லாம் புகழப்படும் வேதாந்தத்தின் மீது எனக்கு அபரிதமான மரியாதை உண்டு. ஆனால், வேதங்கள்? அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்ததில் எனக்கு இது நமக்கு விளங்காத விஷயம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். //

நேசகுமார், இதை நீங்கள் சொல்வது எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. குரானையும், ஹதீஸ்களையும், பற்பல இஸ்லாமிய இலக்கியங்களையும் சளைக்காமல் படித்துக் கரைத்துக் குடித்திருக்கும் நீங்கள் இந்த முயற்சியில் அயர்ந்து விட்டீர்களா? ஒருவேளை மேற்சொன்ன நூல்கள் போன்று “வெட்டு ஒன்று துண்டு இரண்டு” (literally) என்று உள்ள சமாசாரங்களை நீங்கள் மிக அதிகமாகப் படித்துவிட்ட பழக்க தோஷத்தால், பல தளங்களையும், பற்பல படிமங்களையும், பல்வேறு அதீத உருவகங்களையும் உள்ளடக்கிய ஆகத் தொன்மையான வேத இலக்கியத்தை நிதானமாகப் படிக்கப் பொறுமை இல்லாமல் போய்விட்டதோ?

// சாருவைப் போன்று வேதங்களை திட்டத் தோன்றாததற்குக் காரணம் – உபநிஷத்துக்கள். வேதத்தின் சாரமென்று சொல்கிறார்களே அந்த உபநிஷத்துக்கள் உன்னதமானவை, இந்த பூமியில் என்றோ இத்துனை உயர் கருத்துக்களை சிந்தித்து போதித்துள்ளார்களே, அந்த முன்னோர்களை , மகான்களை நினைத்து பெருமைப்படுகின்றேன். அதே சமயம், வேதத்தின் பக்கம் போக வேண்டாம். உபநிஷத்துக்களுடன் நமது தேடலை நிறுத்திக்கொள்வோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். //

உபநிஷதங்களும் வேதத்தின் பகுதி தான் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்கள். அதனால் இங்கே ‘வேதங்கள்’ என்று நீங்கள் சொல்ல வருவது சடங்குகள் மற்றும் தேவதைகள் பற்றிப் பேசும் கர்மகாண்டப் பகுதியை என்று எடுத்துக் கொள்கிறேன்.

நான்கு வேதங்களிலும் சம்ஹிதா (துதிப் பாடல்கள்), பிராமணம் (யாக செயல்முறைகள்), ஆரண்யகம் (விளக்கங்கள்), உபநிஷத் (தத்துவம்) என்ற எல்லா பகுதிகளும் உள்ளன. மந்திரங்கள் ரிஷிகளின் மெய்யுணர்வில் உதித்த காலத்தில் இந்த எல்லாப் பகுதிகளிலும் உள்ள பாடல்கள் ஒன்று கலந்தே வந்தன. இத்தகைய பகுப்புகள் பின்னால் வேதவியாசரால் உருவாக்கப் பட்டவை.

உபநிஷதம் ஓரளவு படித்தவர்கள் கூட அது வேத கர்மகாண்டத்தினின்றும் வேறானது அல்ல, மாறாக அதன் தொடர்ச்சி, வளர்ச்சி, முதிர்ச்சி என்ற முடிவுக்குத் தான் வரமுடியும். சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர் இருவருமே இக்கருத்தைக் கூறியுள்ளனர். சுவாமி விவேகானந்தர் வேத சம்ஹிதைப் பகுதியில் இருக்கும் ஒரு பகுதியில் உள்ள வாசகத்தினை சுழுமுனைக்கு குறியீடாக தமது இறுதி நாளில் சீடரிடம் பேசினார். ஸ்ரீ அரவிந்தர் இன்னும் ஒருபடி மேல் சென்று சம்ஹிதை மந்திரங்களில் எல்லாம் கூட அடிநாதமாக இருப்பது உபநிஷதங்களின் வேதாந்தம் தான் என்கிற கருத்தை மிக அழுத்தமாகக் கூறுகிறார். இந்த கருத்து அடங்கிய அவரது “Hymns to the Mystic fire” என்ற நூல் மிகவும் புகழ்பெற்றது.

உதாரணமாக, உபநிடதத்திலேயே மிகவும் அழகான இரட்டைப் பறவை படிமம் ரிக் வேதத்திலேயே (ரிக், 1.164) கூறப்பட்டுள்ளது. “அரச மரத்தில் அமர்ந்திருக்கும் ஒரே மாதிரியான இரு பறவைகள்: ஜீவன் மற்றும் பரமாத்மா” என்ற இந்த வேதப் படிமமே முண்டக உபநிஷதத்தில் இன்னும் அழகாக வளர்த்தெடுக்கப் படிகிறது : இவற்றில் ஒரு பறவை இனிப்பும், கசப்புமான பழங்களைத் தின்று கொண்டிருக்கிறது, இன்னொன்று அமைதியாக உட்கார்ந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இதை முழுதாக உணர்வதற்கு சம்ஹிதை மந்திரங்களின் கவிதைகளில் பொதிந்துள்ள குறீயீடுகளுடன் பரிச்சயம் வேண்டும். இது இல்லாவிட்டால் பல ஆரம்பகால ஐரோப்பிய மொழிபெயர்ப்பாளர்கள் பல வேத சம்ஹிதை மந்திரங்களுக்கு அபத்தமும், அனர்த்தமும், அதிபயங்கர ஊகங்களும் கலந்து அளித்தது போன்ற, பல சமயம் சம்பந்தமே இல்லாத, மேம்போக்கான பொருள் தான் இருப்பதாகத் தோன்றும்.

கீதை உபநிஷதங்களின் சாரம். யோகம் பற்றிய மிகத் தெளிவான சித்திரத்தை அது அளிக்கிறது. இதே கருத்துக்கள் உபநிஷதங்களில் பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன, சில நேரிடையாக இல்லாமல் மறைபொருளாக உள்ளன. இதை அப்படியே நாம் உபநிஷதங்களின் முன்னோடியான வேத சம்ஹிதைகளுக்கும் பொருத்தலாம். துதிப் பாடல்களால் ஆன ரிக்வேதம் பக்தியோகத்தையும், யாக யக்ஞங்கள் பற்றி அதிகம் பேசும் யஜுர்வேதம் கர்மயோகத்தையும், இசைவடிவான சாம வேதம் ஞான யோகத்தையும் குறிப்பதாக சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்

// திருவிடைமருதூர் கோவில் வாயிலில் பிரம்மஹத்தி உட்கார்ந்து கொண்டிருக்கும். நமது கண்ணுக்குப் புலப்படா தலித்ஹத்திகள் ஒவ்வொரு கோவில் வாயிலிலும் அமர்ந்து கொண்டிருக்கின்றன. பிராம்மணக் கொலைகளுக்காக பிரம்மஹத்திகள் நம்மை பிடிப்பது பொய்யாகக் கூட இருக்கலாம், ஆனால் இந்த தலித்கத்திகள் இருப்பது நிஜம். தலித்ஹத்திகள் நம்மை விரட்டுமுன், நாமே முன்வந்து மாற்றங்களைச் செய்தல் நலம்.//

மிக அழகான ஒப்புமை. “தலித்ஹத்தி” என்ற பதப் பிரயோகத்தை மிகவும் ரசித்தேன். உங்கள் கருத்துடன் முற்றிலும் உடன்படுகிறேன்.

// இந்து மதத்தில் இதுதான் பிரச்சினை. வேதத்தில் என்ன ரகசியம் வேண்டிக்கிடக்கிறது? எதற்கு ஒரு ஜாதி மட்டுமே படிக்க வேண்டும், பாராயணம் செய்ய வேண்டும்? … பெருவாரியான சனங்களுக்கு போய்ச்சேராத வேதங்களும், ஆகமங்களும், உபநிஷத்துக்களும், அறுவகைத்தத்துவங்களும் இருந்தால் என்ன, இல்லாவிட்டால்தான் என்ன. //

இங்கு மறுபடியும் தவறு செய்கிறீர்கள் நேசகுமார். ஒரு உணர்ச்சி மேலீட்டில் இதை எழுதிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

வேதம் ஒரு குறிப்பிட குழுவுக்கு மட்டும் உரியது என்ற கருத்து வேதங்களில் எங்குமே இல்லை. வேலைக்காரப் பெண்ணுக்குப் பிறந்த சத்யகாம ஜாபாலன் கதையை உபநிஷதத்தில் படித்திருப்பீர்கள். வேதங்களைத் தொகுத்த வியாசரே மீனவப் பெண்ணின் மகன் தான். சுக்ல யஜுர் வேதத்தின் இந்த மந்திரத்தை எடுத்துக் காட்டி சுவாமி விவேகானந்தர் இதனை அழகாக விளக்குகிறார்.

"yathA-imAm vAcham kalyaNIm AdadAmi janebhyah;
Brahma-rAjanyAbhyAm sUdrAya cha AryAya cha svAya-chAraNAya cha"

Just as I am speaking these blessed words tothe people,
in the same way you also spread these words among all men and women -
the Brahmanas, kshtriyas, vysayas, Sudras andall other,
whether they are our own people or aliens.

வேத ரிஷி கூறுகிறார் - “(சீடர்களே) நான் உங்களிடம் இந்த நலம் பயக்கும் வேத மந்திரங்களைக் கூறியது போலவே, நீங்களும் பிராமணர், அரசர், வைசியர், சூத்திரர் எல்லா மக்களிடத்திலும் இவற்றைப் பரப்புங்கள். நம் மக்களாயினும் சரி, வேறு மக்கள் ஆயினும் சரி, எல்லாரிடமும் இச்சொற்களைப் பரப்புங்கள்"

செவிவழியாகவே கற்றுக்காக்க வேண்டிய கட்டாயத்தால் காலப்போக்கில் அது ஒரு குழுவின் சொத்தாகிப் போயிருக்கலாம். வேதத்தை முதல் மூன்று வர்ணங்களுக்கு மட்டும் என்று பிறகு வந்த மனு ஸ்மிருதி ஒதுக்கிற்று, பின்னர் காலத்தின் கோலத்தால் அது ஒரு ஜாதியில் உள்ள சிலருக்கு மட்டும் என்று ஆயிற்று. ஆனால் அதன் நுட்பங்கள், மெய்ஞானம், கருத்தியல் யாவும் பெருவாரி மக்களைப் பல விதங்களில் சென்று சேர்ந்தே இருக்கிறது. திருவைந்தெழுத்து மந்திரம் போதும், அதைவிடப் பெரியது வேதத்தில் என்ன இருக்கிறதென்று சில அரைகுறைச் சைவர்கள் கேட்கலாம். ஆனால் முழுதுணர்ந்த சைவர்கள் வேதரத்தினமான பஞ்சாட்சரம் கிருஷ்ண யஜுர்வேதத்தின் ரத்தினமான ஸ்ரீருத்ரம் என்ற துதியின் மையத்தில் ரத்தினம் போன்று திகழ்கிறது என்று அறிவார்கள். கார்காத்த வேளாளர் நற்குடியில் அவதரித்த அப்பர் பெருமான் இந்த ஸ்ரீருத்ரம் என்ற உத்தமமான துதியின் சாரத்தையே நின்ற திருத் தாண்டகமாகப் பாடினார்.

வேதக் கருத்துக்கள் அவரவர்களது மொழிகளில் மக்களைச் சென்று அடைந்திருக்கின்றன எனபதே உண்மை. பல இந்திய மொழிகளிலும் உள்ள பக்தி இலக்கியம் உள்ளிட்ட பல பழைய, புதிய இலக்கியங்களை நான் படிக்கையில் இந்த எண்ணம் வலுப்பெற்றுக் கொண்டே தான் வருகிறது. பிராமணர்களது ஆதிக்கத்தையும், சாதி வெறியையும் முனைந்து எதிர்த்த கன்னட வீரசைவ பசவேஸ்வரர் கூட தத்துவம் என்று வருகையில் முழுக்க முழுக்க உபநிஷதங்களின் உபதேசத்தையே சொல்கிறார், வேதங்களை எதிர்த்தாரில்லை. திருமந்திரமும், சித்தர் பாடல்களும், வள்ளலாரும், தாயுமானவரும் அப்படியே.

சொல்லப் போனால் இப்படி நீங்கள் பேசுவதும் உங்களுடைய மேட்டிமை சிந்தனை என்பேன். ஓஷோ யோகம் பயிலும் போது தாம் தொடக்க நிலையில் சமாதி அடைந்த போது தம் உயிர் போகாமல், அவர் என்ன நிலையில் இருக்கிறார் என புரிந்து கொண்டு ஒரு மாடு மேய்க்கிற பெண் காப்பாற்றியதை குறிப்பிடுகிறார். இந்த யோக முறை குறித்து அந்த பெண்ணுக்கு தெரிந்திருந்தது குறித்து ஆச்சரியமடைகிறார். அதே போல பஞ்சாட்சர மந்திரம் சொல்லி விபூதி அணிவதால் விபூதிக்கே பஞ்சாட்சரம் என்று ஒரு பெயர் உண்டு. பல பண்டிதர்களுக்கே தெரியாத விசயம் இது. திருமுருக கிருபானந்த வாரியார் ஒருமுறை ஒரு கோவிலுக்கு போய்கொண்டு திரும்பிக்கொண்டிருந்த போது ஒரு தலித் பெண்மணி அவரிடம் சர்வ சாதாரணமாக "ஓய் சாமி எனக்கு பஞ்சாட்சரம் கொடுத்துட்டு போ" என்றாராம். வாரியார் சுவாமிகள் திக்கித்து போய் நின்றுவிட்டாராம். பிறகு திருநீறு கொடுத்துவிட்டு வந்தாராம். தமது சுயசரிதையில் கூறுகிறார். ஐயா வைகுண்டர் எந்த வேதமும் படிக்கவில்லை ஆனால் அவருடைய பல வாசகங்களில் வேத எதிரொலியை காணமுடியும். நாராயணகுரு மருத்துவ ஈழவ (நாவிதர்)குலத்தை சேர்ந்தவர் ஆனால் அவருக்கு எளிதாக (அந்த சாதீய அமைப்பிலும் அதற்கு எதிர்ப்பு இருக்கவில்லை) ஆறுவகை தத்துவங்களையும் வேதோபநிடதங்களையும் பயில முடிந்ததே!

ஆன்மிகத் தளத்தில் மட்டுமல்ல, இந்தியப் பண்பாட்டின் அடித்தளத்திலும் இருப்பவை வேதக் கருத்துக்களே அல்லவா? “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்று குழந்தைகளுக்கு இயல்பாகவே ரத்ததோடு ஊறி வரும் கருத்தின் முதல் துடிப்பு எது? “மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ” என்ற வேத வாசகங்களே அல்லவா? “தாய் மண்” (இந்தச் சொல் கண்டிப்பாக அரபியில் இருக்காது என்று சொல்லலாம்) என்று நம் மொழியிலேயே கலந்து விட்ட அந்த உணர்வு எங்கேயிருந்து வந்தது? “மாதா பூமி: புத்ரோஹம் ப்ருதிவ்யா” (இந்த பூமி என் தாய், நான் அவள் அன்பு மகன்) என்ற வேத ரிஷியின் வாக்கு தானே அது?

நமக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தவர் செய்வது போல வழவழ கண்ணாடி பேப்பரில் வேதத்தை பிரிண்ட் போட்டு கொடுக்க முடியவில்லையாக இருக்கலாம். ஆனால் எத்தனை எத்தனையோ மகான்கள், சித்த புருசர்கள், கோவில் சிலைகள் முதல் தெருவோர சாந்து பூசிய கம்பங்கள் வரை மாலையிட்ட சுமைதாங்கிகள் வரை வேதத்தினை, வேதத்தின் சாறினை, வேத முடிவில் நடம் நவிலும் விமலத்தை நம் 'பாமர' மக்களுக்கு அளித்துக்கொண்டுதான் வருகின்றன.

இவ்வளவும் சொன்னது எப்படி வேதக் கருத்துக்கள் தாமாகவே பல வடிவிலும் மக்களைச் சேர்ந்தடைந்துள்ளன என்று காட்டுவதற்காகத் தான். வேதத்தை அதன் மூல வடிவிலேயே பலதரப் பட்ட மக்களும் பயில்வதும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது, இது மேன்மேலும் பெருக வேண்டும். எல்லாத் தரப்பினரும், வேத ஞானத்தின் பங்கு தாரர்கள். வேத ஞானம் உலகம் முழுவதற்கும் உரியது, தேவையானதும் கூட.

(இங்கே பயன்படுத்தியுள்ள சில குறிப்புக்களைத் தந்து உதவிய, தங்கள் பெயர்களைக் குறிப்பிட விரும்பாத இரு இணைய நண்பர்களுக்கு மிக்க நன்றி).

பெண்மை வாழ்க என்று கூத்திடுவோம்!

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும். 1

அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்.
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்;
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம். 2

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம். 3
பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை!
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா. 4

சக்தி யென்ற மதுவையுண் போமடா!
தாளங் கொட்டித் திசைகள் அதிரவே,
ஒத்தி யல்வதோர் பாட்டும் குழல்களும்
ஊர்வி யக்கக் களித்துநின் றாடுவோம். 5

உயிரைக் காக்கும், உயிரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா!
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே. 6
'போற்றி தாய்' என்று தோள் கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே;
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே. 7

'போற்றி தாய்' என்று தாளங்கள் கொட்டடா!
'போற்றி தாய்' என்று பொற்குழ லூதடா!
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே. 8அன்ன மூட்டிய தெய்வ மணிக் கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;
கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம்


- மகாகவி பாரதி

உலகப் பெண்கள் நாளில் பெண்மையின் புகழை வாழ்த்தும் விடுதலைக் குயில் பாரதியின் பாடலை இங்கே பதிவு செய்கிறேன்.

எல்லாப் பெண்களுக்கும் எனது வாழ்த்துக்கள், வணக்கங்கள், அன்புப் பகிர்தல்கள்.

உண்மையும், திண்மையும், வண்மையும், மென்மையும் உருக்கொண்ட பெண்மை வாழ்க!