Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Tuesday, December 07, 2010

இந்திய மதப்பிரிவினை சட்டம் (Article 30) = பண்பாட்டு அழிவு?

அரசு நிதியில் இயங்கும் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களும் மத அடிப்படையில் பெருமளவில் இட ஒதுக்கீடு செய்ய வழிவகுக்கும் சர்ச்சைக்குரிய இந்திய சட்டம் இது...

தில்லி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி தொடங்கி மதுரை அமெரிக்கன் கல்லூரி வரை இந்தச் சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு செய்யும் அடாவடிகள் கடந்த சில ஆண்டுகளாக அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்...

இதன் நீண்டகால விளைவுகள் என்னவாக இருக்கும்? - என்பது பற்றி நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் தாமஸ் ஷெல்லிங்கின் ஒரு அறிவியல்பூர்வமான கோட்பாட்டின் அடிப்படையில் ஆராய்ந்து டாக்டர் மூர்த்தி முத்துசுவாமி என்பவர் எழுதிய ஒரு கட்டுரையை நான் மொழிபெயர்த்திருக்கிறேன் -

Tuesday, July 15, 2008

ஏழை இந்து மாணவர்கள் கல்விக்கு உதவுங்கள்

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கயுள்ள இந்து மாணவ, மாணவியர்களின், படிப்பிற்காக இளைய பாரதம் சேவா டிரஸ்ட் நிதி உதவி கோருகிறது. இந்த உதவி நேரடியாக வறுமையில், துயரத்தில் வாடும் அடித்தட்டு இந்துக் குடும்பங்களைச் சேர்ந்த் மாணவர்களைச் சென்றடையும்.

இளய பாரதம் சேவா டிரஸ்ட் அறக்கட்டளை இந்தியாவின் முன்னணி மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தமிழகக் கிளையின் தொண்டுப் பிரிவாகும். கடந்த11 வருடங்களாக இந்த அறக்கட்டளை பல தொண்டுப் பணிகளை செய்துவருகிறது.

மறைந்த இந்து சமூகத்தொண்டர் மதுரை பேராசிரியர் கே. ஆர்.பரமசிவன் நினைவு வாராந்திர இலவச மருத்துவ ஆலோசனை முகாம் ஒன்றினை கடந்த 10 வருடங்களாக இடைவெளி இல்லாமல் நடத்தி வருகிறது. இதில் வாரந்தோறும் சுமார் ரூ5000 மதிப்புள்ள மருந்துகளை இலவசமாக வழங்கிவருகிறது . சென்னை ஆலந்தூர் நகராட்சிப் பகுதியில் கடந்த 4 வருடங்களாக காசநோய் தடுப்பு தொடர் சிகிட்சை மையத்தையும் நடத்தி வருகிறது. மற்றும் மாணவர்களின் வளர்ச்சிக்காக பல திட்டங்களையும் செயல் படுத்தி வருகிறது. இந்த அறக்கட்டளையின் சேவை மையங்கள் சென்னை மற்றும் மதுரையில் உள்ளன.

இந்து மாணவர்களின் படிப்பிற்காக நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் தங்களது உதவியை காசோலையாகவோ, வரைவோலையாகவோ அல்லது பணமாகவோ வழங்கலாம். தேவைப்படுபவர்களுக்கு வருமானவரி விலக்குச் சான்றிதழ் 80 ஜி வழங்கப்படும் (தங்கள் நன்கொடையுடன் இதனைக் குறிப்பிட்டு எழுதவும்). நன்கொடைகளை " இளய பாரதம் சேவா டிரஸ்ட்" (Ilaiya Bharatham Seva Trust) என்கிற பெயரில் வழங்கிடவேண்டும்.

நன்கொடைகளை அனுப்பவேண்டிய முகவரி:

ஆசிரியர்- விஜயபாரதம்
# 12 எம் .வி. நாயுடு தெரு
சேத்துப்பட்டு, சென்னை - 600 031
தொலைபேசி எண்: 044 2836 0874

இளய பாரதம் சேவா டிரஸ்ட் அலுவலக முகவரி:

அலுவலக செயலாளர்,
ஏ. பி வி பி அலுவலகம்,
# 35/12 சிவாஜி தெரு,
தி. நகர், சென்னை - 600 017

பள்ளி, கல்லுரிகள் திறந்துவிட்டதால் தங்களால் முடிந்த உதவிகளை விரைவாகச் செய்வது சிறந்தது.

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

Monday, August 13, 2007

கிறித்தவப் பள்ளிகள் பற்றி பாரதியார்

எவ்வளவு தீர்க்க தரிசனத்துடன் பாரதி எழுதியிருக்கிறார் பாருங்கள்.

மிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல்

பாரதியார் இந்தியா பத்திரிக்கையில் 18-8-1906 இல் எழுதியது.

சென்ற வாரம் சுதேசீய மஹான் களையும் புராதன வீரர்களையும், கவிஞர்களையும், தத்துவ ஞானிகளையும் பற்றி நமது இளைஞர்கள் நன்றா யறிந்திருக்கும்படியான சுதேசீய கல்வி இக்காலத்தில் கொடுக்கப்படவேண்டுமென்று வற்புறுத்திப் பேசினோம். மிஷனரிகளின் சம்பந்தமில்லாத சுத்த ஹிந்துப்பாடசாலைகளில் கூட மேற்கண்டவிதமான கல்வி அளிக்கப்படாமலிருத்தல் மிகவும் விசனகரமான விஷயமே. ஆனால் மேற்படி ஹிந்துப் பாடசாலைகளிலே நமது மஹான் களைப் பற்றி வேண்டுமென்று தூஷணை புரிந்து வாலிபர்களின் மனதை மாசு படுத்துவதில்லை என்ற ஒரு நலம் இருக்கிறது.

வியாஸர், வசிஷ்டர், யாக்ஞவல்கியர், சங்கரர் என்ற பெயர்களைப் பற்றி ஹிந்துப் பாடசாலை மாணாக்கர்கள் ஏதுமறியாமலிருக்கிறார்களென்பது மெய்யேயாயினும் மேற்படிப் பெரியோர்களைத் திட்டும்படிக்கு ஹிந்துப்பாடசாலை உபாத்தியாயர்கள் கற்பித்துக் கொடுப்பது கிடையாது. இது சாதாரணத் தீமை என்பதாக லேசாய் எவரும் நினைத்துவிடக் கூடாது.
புராதன சரித்திரமற்ற தேசத்துக்கு மென்மேலும் அபிவிருத்தி ஏற்படுதல் கஷ்டம். புகழ்பெற்ற புராதன சரித்திரமிருந்தும், அதனை மறந்திருக்கும் ஜாதியார் அழிந்தே போய்விடுவார்கள். புகழ் பெற்ற பூர்வகாலச் சரித்திரமிருக்க, அதனை இகழ்ந்து அதன் பொருட்டு லஜ்ஜையுறத் தலைப்படும் தேசத்தாரின் கதியை எழுதவும் வேண்டுமா ?


எனவே கிறிஸ்தவப் பாடசாலைகளுக்குப் பிள்ளைகளை அனுப்பிச் சிவாஜியைக் கொலையாளி யென்றும், வியாசரை அறிவிலி யென்றும், ஸ்ரீகிருஷ்ண பகவானைத் தூர்த்தனென்றும் அவ் விளைஞர்கள் கற்கும்படி செய்கிற ஒவ்வொரு தந்தையும் புத்திரத் துரோகியாகிறான். இளைஞர்கள் அவ்வாறே நினைப்புக் கொண்டவர்களாகி, தமது ஒழுக்கத்திற்கும், அபிவிருத்திக்கும், ஊக்கத்திற்கும் முன்னோர்களிலிருந்து யாரையும் திருஷ்டாந்தமாகச் சொல்ல வன்மையற்றவர்களாகி, அது காரணமாக ஒழுக்க முதலியவற்றிலே தாழ்வடைந்து போய் விடுவார்களாதலால் மேற்கண்டவாறு தமது புத்திரர்களை மிஷன் பாடசாலைகளுக்கு அனுப்பும் தந்தையர் தேசத் துரோகிகளுமாகிறார்கள்.

கிறிஸ்து மார்க்கத்திலே நாம் அனாவசியமாக விரோதம் கொண்டிருப்பதாக யாரும் நினைக்க வேண்டாம். உலகத்திற் பிறந்த மஹோபகாரிகளிலும், மஹா ஞானிகளிலும் கிறிஸ்து ஒருவரென்று நாம் நம்புகிறோம். 'நானும் எனது தந்தையும் ஒன்றே ' என்று கிறிஸ்துநாதர் கூறியதற்குக் கிறிஸ்தவர்கள் என்ன பொருள் கூறிய போதிலும் 'சிவோஹம் ' என்னும் அத்வைதக் கோட்பாட்டையே கிறிஸ்து மேற்கண்டவாறு சொன்னாரென்று விவேகாநந்தர் போன்று பெரிய ஹிந்து தேசிகர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆதலால், நாம் கிறிஸ்து மார்க்கத்தை விரோதிக்கவில்லை. கிறிஸ்தவப் பாடசாலைகளிலே கல்வி கற்பிக்கப்படும் மாதிரியையே விரோதிக்கிறோம். இதற்குப் பாதிரிமார்களைக் குறை கூறுவதால் சிறிதேனும் பயனில்லை. அவர்கள் நம்மையும் நமது பூர்வகால மஹான்களையும் அறியாமையாலும், தாம் வாங்கும் சம்பளத்தின் பொருட்டாகவும் தூஷணை புரிகிறார்கள்.

ஆரியத் தன்மையைப் பெரும்பாலும் இழந்து அஞ்ஞானம், மூடநம்பிக்கை என்னும் சேறுகளிலே அழுந்திக் கிடக்கும் நம்மவர், கிறிஸ்தவப் பாதிரிகள் நமது முன்னோரைப் பற்றிக் கூறுவதே மெய்யாக இருக்கலாமென்று கிரகித்துக் கொள்கிறார்கள்.



ஸ்ரீமத் ரானடே, ஸ்ரீ தத்தர் முதலியோர் எழுதியிருக்கும் பூர்வகாலச் சரித்திரப் பகுதிகளை நமது இளைஞர்களுக்குப் பயிற்ற வேண்டும். அறியாமை மிகுந்த அன்னியர்கள் அழுதி வைத்திருக்கும் பொய்ச் சரித்திரங்களைச் சுழற்றி யெறிந்து விட்டு நமது நாட்டின் தேசபக்தியும் நவீன அறிவும் கலந்த மேலோர்கள் சரியானபடி ஆராய்ச்சிகள் புரிந்து உண்மையான சரித்திரங்கள் எழுதத் தலைப்படவேண்டும். அதற்கிடையே இளைஞர்களின் அறிவையெல்லாம் பாதிரிகள் விஷமாக்கி விடாதவாறு அவர்களின் பாடசாலைகளை விலக்கி வைக்க முயல வேண்டும். போதுமானபடி பணம் குவித்து வைத்திருக்கும் மனிதர்கள் பச்சையப்பன் காலேஜ் போன்ற சுதேசீய காலேஜ்களையும் ஸ்கூல்களையும் பலப்படுத்தி, பாதிரிகளின் பள்ளிக்கூடங்களுக்கு நிகராக வேண்டும்.

நமது பாடசாலைகளில் உபாத்தியாயர்கள் ரஸமில்லாமலும், சம்பளம் அதிகமாகவும் இருக்குமானால் இவற்றை மாணாக்கர்கள் எட்டிப் பார்க்கவே மாட்டார்கள். இதையெல்லாம் செல்வர்கள் கவனிக்க வேண்டும். தேசத்தை நாளுக்குநாள் கீழே அழிய விட்டு விடுவோமானால், பிறகு எந்த உபாயத்தாலும் உயர்த்த முடியாமல் போய்விடக்கூடிய ஒருநாள் வந்து விடும். தெய்வக் கிருபையால் அந்த ஒருநாள் இன்னும் வந்து விடாமலே யிருக்கின்றது. அது வருமுன்பாக நானாவிதத்தாலும் முயற்சி புரிந்து நமது நிலைமையைச் சீர்திருத்திக் கொள்ளவேண்டும்.

'விழிப்பீர்! எழுவீர்! இன்றேல் நீர் வீழ்ந்து கிடப்பீர் என்றுமே!

* * *

பாரதியின் இந்தக் கனவுக்கு வடிவம் கொடுப்பதில் முன் நின்றவை, முன் நிற்பவை இந்து இயக்கங்கள் தாம். பா.ஜ.க தலைமையில் ஆன தேசிய முன்னணி ஆட்சியின்போது தான் அப்போதைய கல்வி அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி வரலாற்றுப் புத்தகங்களில் எழுதப் பட்டிருக்கும் பொய்களை சரி செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். இவை தேசதுரோக இடதுசாரிகளாலும், போலி மதச்சார்பின்மை வாதிகளாலும் கடுமையாக விமர்சிக்கப் பட்டன.

பாரதி சொன்னதை செய்ததற்காக பாரதீய ஜனதா கண்டிப்பாக பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.