பெரியாருக்கு ஒரு கவிதாஞ்சலி
திண்ணையில் பல அருமையான கட்டுரைகளை எழுதிவரும் நண்பர் திரு. அருணகிரி தான் இயற்றிய இந்தக் கவிதையை மின் அஞ்சலில் அனுப்பியிருந்தார்.
காதைப்பிளக்கும் பெரியார் பஜனைகளுக்கு நடுவில், சந்தம் தளைதட்டாமல் கருத்துக்கள் களைகட்டும் ஒரு நல்ல மரபுக் கவிதை. Hats off அருணகிரி!
இந்த அருமையான கவிதையை அவர் அனுமதியுடன் இங்கு வெளியிடுகிறேன்.
ஈ.வெ.ரா பெரியார் - இவரா பெரியார்?
பெரியார் யாரெனத் தெரியா மூடர்
சிறுமை தம்முள் அதிகம் கொண்டவர்
ஒருவர் தம்மைத் தேர்ந்து எடுத்து
பெரியார் என்றொரு பெயரும் வைத்தார்.
அறியார் அறவழி தெரியார் அடிமை
வெறியார்வத்தால் வேற்றவனுக்கு
விரிவாய்ப் பலவாய்ச் சேவகம் செய்து
இழிவாய் வாழ்ந்தார் இவரா பெரியார்?
அடிமை செய்த வெள்ளையன் அவனின்
கொடுமைத் தளையைக் கொன்றிடும் நாளில்
மிடிமை கொண்டெமை மீண்டும் ஆளெனக்
கடிதம் போட்டார் இவரா பெரியார்?
செந்தமிழ் மொழியின் சிறப்பறியார், பல
குந்தகம் சொன்னார்; கொள்ளையன் வந்து
தந்த அம்மொழியே தனிச்சிறப் பென்றார்
இன்தமிழ் இகழ்ந்தார் இவரா பெரியார்?
கீழ்மைச் சிந்தனை யாளர் சீழ்மனப்
பான்மை கொண்டு ஆபாசப் பேச்சில்
தாழ்மைக் கோஷம் போட்டார் சொல்லின்
நேர்மையற்றார் இவரா பெரியார்?
உள்ளம் தன்னில் உயர்நெறி இல்லார்
சொல்லும் சொல்லின் சுத்தம் அறியார்
தள்ளும் வயதில் மகளெனத் தக்க
பிள்ளை மணந்தார் இவரா பெரியார்?
மண்ணின் உடலை மதத்தால் வெட்டி
பின்னப் படுத்திய எதிரியைப் போல
இன்னும் இதனை இரண்டாய் வெட்டச்
சொன்னார் சிறியார் இவரா பெரியார்?
நாய்ப்பால் குடித்த நரிக்குக் கூட
நன்றி என்றொரு ஞாபக மிருக்கும்
வாய்ப்பால் வெள்ளையன் வாலைத் தூக்கி
நோய்ப்பால் குடித்தவர் இவரா பெரியார்?
வீட்டின் விளக்கை விலைமகள் என்று
ரோட்டில் செல்கையில் கேவலம் செய்யக்
கூட்டம் சேர்த்துக் குறுமதி சேர்த்துக்
காட்டிக் கொடுத்தார் இவரா பெரியார்?
அறிவின் விரிவில் அடக்கம் காட்டி
எளியார் மீதும் இரக்கம் காட்டி
கருமித்தனமும் காழ்ப்பும் நீங்கிய
தருமர் எவரோ அவரே பெரியார்!

