Friday, February 02, 2007

வீர ரசம் பொங்கும் ஜடாயு நடனம்: இந்தோனேசியாவிலிருந்து

ராமாயணம் பற்றி யூ-ட்யூபில் தேடிக் கொண்டிருக்கையில் கிடைத்தது இந்த இந்தோனேசியாவின் பாரம்பரிய நடனம் (பாலி / ஜாவா பகுதிகளைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஊகிக்கிறேன்).




எட்டே நிமிடங்களில் ராமகாதையின் ஜடாயு படலத்தை உணர்ச்சி மயமாகச் சித்தரித்திருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் ஜடாயு நுழைந்தவுடன் ஆடும் தாண்டவம் அருமை. தோள்களைக் குலுக்கிக் கொண்டு முகத்தில் கொடூரத்தை வெளிப்படுத்தும் ராவணன்.. சீதையாக வரும் பெண்ணின் முகத்தில் தான் என்ன அழகு, என்ன ஒரு grace! அதுவும் ஜடாயு சிறகொடிந்து விழுந்ததும் அவளது முக பாவங்கள்! யுத்தக் காட்சியில் வீர ரசம் கொப்பளிக்கிறது. ராம லட்சுமணர்கள் ஜடாயுவைக் கண்டதும் ஆற்றாமை பொங்க அவன் சொல்லும் செய்திகளில் ஆழ்ந்த அபிநயங்கள். கடைசியாக ராம-லட்சுமணர்கள் வீழ்ந்த கழுகரசனுக்கு அஞ்சலி செய்து வணங்கும் காட்சி பரவசமூட்டுகிறது.

"கைவழி நயனம் செல்ல, கண்வழி மனமும் செல்ல" என்ற பரத இலக்கணத்தைப் போலவே மிகவும் நுணுக்கமான ஹஸ்த முத்திரைகள் இந்த நடனத்திலும் உள்ளன. நடனம் முழுவதும் discrete பகுதிகளாக இல்லாமல் காட்சிகள் அலை அலையாக தொடர்ந்து வருகின்றன..

ராமாயண பாத்திரங்களின் ஒப்பனைகள் அற்புதம். ராம-லட்சுமணர்கள் அம்பறாத் துணியைச் சேர்த்துக் கட்டியிருக்கும் கம்பீரம்! ஜடாயுவின் சிறகு ஒப்பனையின் கலை நயம் வெகு நேர்த்தி.

இனிமையான பின்னணி இசை இந்திய செவ்வியல் இசையின் சாயலுடன் ஜலதரங்க ஒலியை நினைவூட்டுகிறது. பாடல்கள் மேற்கத்திய ஓபரா போன்று பாடப் பட்டாலும், வார்த்தைகள் மற்றும் பாடல் வரிகளில் சில சம்ஸ்கிருத ஒலிகள் தெளிவாகத் தெரிகின்றன. (ஜாவா, பாலித் தீவின் மொழிகளில் ஏராளமான சம்ஸ்கிருதச் சொற்கள் உள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது).

ராமாயண காவியம் இன்றும் இஸ்லாமிய நாடு என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்தோனேசியாவில் அழியாமல் உயிர்த்துடிப்புடன் இருப்பது பெரிய விஷயம். இந்த நாடகங்களில் நடிப்பதையும், பார்ப்பதையும் அங்குள்ள கலை, கலாசாரத்தில் ஆர்வமுள்ள மக்கள் பெரும் பாக்கியமாகக் கருதுகிறார்கள். இந்த கலாசார பொக்கிஷம் வரும் காலங்களிலும் பாதுகாக்கப் படும் என்றே நம்புவோம்.

Thursday, February 01, 2007

டாடாவின் இரும்புக் கரங்கள்: இந்தியாவின் பெருமிதம்

"என்ன சொல்லுகிறீர்கள்? டாடாக்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் தரத்திற்கு இரும்பு எஃகு தயாரிக்கப் போகிறார்களா? அப்படி நடந்தால், அவர்கள் தயாரிக்கும் ஒவ்வொரு இரும்புத் துண்டையும் சாப்பிடுவேன் என்று பந்தயம் வைக்கிறேன்" என்று 1907ஆம் ஆண்டு சவால் விட்டார் அப்போதைய பிரிட்டிஷ் இந்திய ரயில்வே துறைத் தலைவர் சர் ஃபிரடெரிக் அப்காட். டாடா வணிகக் குழுமத்தைத் தொடங்கிய பாரதத் தாயின் தவப் புதல்வர் ஜாம்ஷ்ட்ஜி டாடா இந்த எள்ளல்களைக் கண்டு அயரவில்லை. இதற்கு முன் 1899ஆம் ஆண்டிலேயே ஒரு பத்திரிகையில் எழுதினார்: “நமது இளைஞர்கள் ஐரோப்பாவின் தலைசிறந்த நிறுவனங்களுக்குச் சமமாக அவர்கள் களத்திலேயே நிற்க வல்லவர்கள் என்று நிரூபித்து வருவகிறார்கள்; அது மட்டுமல்ல, இந்த நிறுவனங்களை வீழ்த்தவும் நம்மால் முடியும்”.





காலச் சக்கரம் சுழல்கிறது, கனவு மெய்ப்படுகிறது. 2006 : இந்தியாவில் பிறந்த லட்சுமி நிவாஸ் மித்தல் தலைமையில் இயங்கும் மித்தல் ஸ்டீல் ஐரோப்பாவின் பிரம்மாண்டமான இரும்புத் தொழில் கம்பெனியான அர்செலர் நிறுவனத்தை பல சர்ச்சைகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் இடையில் வாங்கி கையகப் படுத்தியது. 2007 தொடக்கம்: இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், நார்வே உள்ளிட்ட நாடுகளில் இரும்பாலைகள் கொண்ட “கோரஸ்” என்ற ஐரோப்பாவின் மிகப் பெரிய இரும்புத் தொழில் நிறுவனத்தை டாடா குழுமம் சி.எஸ்.என். என்ற வேறொரு பன்னாட்டு நிறுவனத்தை ஏலத்தில் தோற்கடித்து வாங்கியுள்ளது பற்றிய செய்தியை எல்லாரும் படித்திருப்பீர்கள். இதற்காக டாடா நிறுவனம் தரும் விலை ரூ. 53,000 கோடி மட்டுமல்ல, முதலீட்டாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் தங்கள் நிறுவனத்தின் எதிர்காலம் முழுவதையுமே துணிந்து பணயம் வைத்துள்ளது. சாகசத்தை விழையும் தீரர்களின் வரிசையில் டாடா குழுமத் தலைவர் ரதன் டாடா இணைந்திருக்கிறார். தன்னையும் விடப் பெரிய அளவு உள்ள வணிக நிறுவனத்தை வாங்கும் துணிச்சல், அதை நன்கு நிர்வகித்து நடத்தி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இவற்றால் உந்தப் பட்ட டாடா ஸ்டீல் நிறுவனம் புதிய இந்தியாவின் கனவுகளையும், நம்பிக்கைகளையும் பிரதிபலிக்கிறது.

ஒரு பெரிய சஸ்பென்ஸ் திரைப்பட முடிவு போல பெரும் திகிலுடன் வணிக ஊடகங்களால் பேசப் பட்ட இந்த ஏலத்தின் கடைசிச் சுற்று நேற்று முடிவடைந்தவுடன் டாடா நிறுவன முக்கியஸ்தர்களின் முகத்தில் ஒளிர்ந்த அந்தப் பரவசம். தலைமையகம் பாம்பே ஹவுசிலும், ஜாம்ஷெட்பூர் டாடா நகரிலும், தொழிலாளர்கள் மற்றும் யூனியன்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்! முதலாளித்துவம், வர்க்கப் போராட்டம், புடலங்காய் எல்லாம் காற்றில் கரைய டாடா நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் ஒருவருக்கொர்வர் தழுவிக் கொண்டு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். “டாடா கோரஸ் ஜிந்தாபாத்” என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.

இதன் மூலம் உலகின் முதல் 5 இரும்புத் தொழில் நிறுவனங்களின் பட்டியலில் டாடா-கோரஸ் இடம் பிடிக்கிறது; இந்தியாவின் மிகப் பெரிய வணிகக் குழுமம் என்கிற கிரீடத்தை ரிலையன்சிடமிருந்து டாடா தட்டிப் பரிக்கிறது. பிர்லா, ரிலையன்ஸ் தலைவர்கள் மற்றும் பல தொழிலதிபர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் இந்த வரலாற்று சாதனையைப் பற்றிப் பெருமையுடன் பேசினர். அசூயையோ, பொறாமையோ அல்ல, ஒரு சக இந்தியக் கம்பெனியின் சிகரம் தொடுதலை வாழ்த்தும் பாங்கு அதில் தென்பட்டது.

“இரும்பினால் ஆன தசைகள், எஃகு நரம்புகள், அதனுள் இடியை உண்டாக்கும் இதயம் ; இவையே எதிர்கால இந்தியாவிற்குத் தேவை” என்றார் சுவாமி விவேகானந்தர். டாடா ஸ்டீல் நிறுவனம் மற்றும் டாடா குழுமம் எடுத்திருக்கும் இந்தப் பெரும் முயற்சிகள் ஒவ்வொரு இந்தியனையும் தோள் தட்ட வைக்கின்றன என்றால் மிகையில்லை.

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா!

Sunday, January 28, 2007

அப்துல் கலாம் கூறிய அழகிய அனுபவங்கள்

நம் அனைவரின் பேரன்பிற்கும், பெருமதிப்புக்கும் உரிய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் இரண்டு நாட்கள் முன்பு வழங்கிய குடியரசு தினச் செய்தியின் தொடக்கத்தில் இந்தியக் குடியரசைப் பெருமிதம் கொள்ள வைக்கும் சில அழகிய அனுபவங்கள் (beautiful experiences that have made the Indian Republic proud) பற்றி பேசியுள்ளார்..

குடியரசு தலைவர் முழு உரை : சுட்டி

பஞ்சாப் விவசாயிகள் உலகத் தரத்திற்கு ஈடாக பருத்தி விதை உற்பத்தியை இரட்டித்ததைக் கண்டு நான் அடைந்த பெருமிதத்தைச் சொல்லவா?

குஜராத் விவசாயிகள் அந்த மாநிலம் முழுவதும் எல்லா கிராமங்களிலும் மின்சாரம் வந்து விட்டதைக் கொண்டாடியதைச் சொல்லவா?

வடகிழக்கு மாநில கிராமம் ஒன்று தன் மண் சார்ந்த பட்டு உற்பத்தி மூலம் தன்னிறைவடைந்ததைச் சொல்லவா?

அல்லது நாட்டின் பல பகுதிகளில் நான் சந்தித்த மாமனிதர்களைப் பற்றிச் சொல்லவா?

புனித யாத்திரீகர்களின் ஒத்துழைப்பைக் கொண்டே மாசு படிந்த சிற்றாறு ஒன்றை தூய்மை செய்யும் இயத்தை வழிநடத்திய மகாத்மா ஒருவர்.

ஆந்திரம் மற்றும் தமிழக மக்களின் மனங்களைப் பாயும் நீர்ப் பெருக்கால் இணைத்த தெய்வீக ஆத்மா இன்னொருவர்.

ஆழிப்பேரலை பாதிக்கப் பட்ட கொச்சி அருகில், தீபகற்பப் பிரதேசத்தை பிரதான நிலப் பரப்புடன் இணைக்கும் பாலத்தைக் கட்டிய தெய்வீக ஆளுமை இன்னொருவர்.

அல்லது PURA மூலம் 1 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 65 தமிழக கிராமங்கள் பொருளாதாராத் தன்னிறைவு அடைந்ததைச் சொல்லவா?

ஜம்மு காஷ்மீர் பூகம்பத்தில் பாதிக்கப் பட்டவர்களில் தேவையானவர்களுக்கு, சரியான நேரத்தில் இழப்பீடு மற்றும் உதவித்தொகை கிடைப்பதில் மாநிலத்தின் நீதித்துறையின் பங்காற்றுதலைச் சொல்லவா?

நம் ஆயுதப் படைகளின் வீரதீரம் பற்றி சொல்லவா?

மேலே கூறிய பெருமித அனுபங்களில் பேசப் பட்டவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பஞ்சாப் ஆன்மீக குரு பல்பீர் சிங் சீச்வால், சத்ய சாயி பாபா, மாதா அமிர்தானந்த மயி ஆகியோர். ஊடகங்கள் இந்த உரை பற்றிய செய்திகளைத் தரும் போக்கிலோ, (அல்லது வேண்டுமென்றோ) சரியாக இந்த பெரும் மாமனிதர்களைச் சுட்டிக் காட்டாதிருந்திருக்கலாம்.

ஆனால், தன் உரையில் உறுதியான அரசியல் தலைமை, மனித நேயத்துடன் மாபெரும் சமூகப் பணி புரியும் இந்து ஆன்மிகத் தலைவர்கள் இவர்களை அடையாளம் கண்டு பாராட்டி விட்டார் நம் அன்புக்குரிய அப்துல் கலாம். இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் சக்திகள் எவை என்பதையும் தெளிவாக்கியிருக்கிறார்.

காதுள்ளவர் கேட்கக் கடவர். கண்ணுள்ளவர் பார்க்கக் கடவர்.

செய்தி மூலம் :

Friends, when we are celebrating the 58th Republic Day, I was thinking what thoughts I can share with you. Shall I talk to you on what message I got during my visits to various parts of our country and my interactions with the people particularly the youth with their dreams or

shall I talk to you about the proud feeling I had when the farmers in Punjab succeeded in doubling the seed cotton productivity in tune with the world record or

shall I talk to you how a village in north-eastern state has become prosperous by developing its core competence in native silk production or

*shall I talk to you about the elation of the Gujarat farmers celebrating the arrival of electricity to all the villages in the State* or

shall I talk to you about many great human beings whom I met in various parts of the country such as,

*one great soul providing the leadership for transforming a polluted rivulet into a clean river in Punjab through the efforts of pilgrims themselves, or

about another divine soul who has connected the hearts of people of Andhra Pradesh and Tamilnadu through the flow of water or

about another divine personality, building a bridge connecting the peninsular region to the mainland near Kochi over the backwaters of the Arabian Sea in the Tsunami affected area or

shall I talk to you on how 65 villages with a population of one lakh in Tamilnadu have generated a self-sustaining economy through PURA or

shall I talk to you about the way that the judicial system of the State became a partner for on the spot disbursal of compensation to the victims of an earthquake in J&K for ensuring timely compensation to the right persons, or

shall I talk to you about the bravery of our armed forces?

I have already shared with you about these and other beautiful experiences that have made the Indian Republic proud. Such beautiful events and people have been changing the fabric of the nation.

Wednesday, January 24, 2007

மதமாற்ற பிரசாரத்திற்கு எதிராக பெங்களூர் கிறித்தவர்கள்

இந்திய கிறித்தவர்கள் என்ற முறையில், ஏசு கிறிஸ்து வாழ்ந்து காட்டியதுபோன்று, பதிலுக்கு எதையும் எதிர்பாராமல் நமது அண்டை வீட்டார் மீது நிபந்தனையற்ற அன்பு செலுத்துவதே நமது விசுவாசத்திற்கு சாட்சியாக இருப்பதற்கான வழி என்று நாங்கள் நம்புகிறோம். எந்த ஒரு மதக்குழுவும் செய்யும் ஆக்கிரமிப்பு ரீதியான “மத வியாபார” உத்திகளை நாங்கள் எதிர்க்கிறோம். ஏனென்றால், இவை எல்லா சமயங்களுக்கும் மரியாதை அளிக்கும் பாரத நாட்டின் கலாசாரத்தை அவமதிக்கின்றன; “எந்த மதத்தையும் பின்பற்றலாம், பிரசாரம் செய்யலாம்” என்ற உரிமையை வழங்கும் அரசியல் சட்டத்தின் உண்மையான கோட்பாட்டிற்கு எதிராக இருக்கின்றன.

நாம் கிறிஸ்தவர்கள். நம்மில் சிலர் பிறக்கும் போதே கிறித்தவர்களாக இருந்தோம், வேறு சிலர் விருப்பப்பட்டு கிறித்தவத்தைத் தழுவினோம். புனிதர் மத்தேயுவின் சுவிசேஷ வசனம் (Great Commission in the Gospel according to Matthew) சந்தேகமின்றி பிறன் தனது நம்பிக்கைகளைப் பின்பற்றவும், உபதேசிக்கவும் உள்ள உரிமையை மீறாத படி, கிறித்துவை பன்முக அமைப்பில் காணவேண்டும் என்று தான் அறிவுறுத்துகிறது. கிறிஸ்துவின் சாட்சியம் எக்காலத்திலும் கேள்விக்குறிய முறைகளினாலோ, மக்களது சமூக, மனம் சார்ந்த குறைபாடுகளைப் பயன்படுத்தியோ அல்லது மற்ற சமயங்களை இழிவுபடுத்தியோ செயல்படுத்தப் படக் கூடாது.





மேலும், எல்லா தேசங்களிலும் விசுவாசிகளை உருவாக்குதல் (to make disciples of all nations) என்னும் கிறித்தவ உபதேசத்தை நற்செய்தி தருபவர்கள் சிறந்த வழியில் கடைப்பிடிப்பது என்பது கிறித்தவம் கூறும் உயர்வான ஒழுக்க நெறிகளைக் கடைப் பிடிப்பதும், பரந்த சமூக நலனுக்கு நன்மை தரும் வகையில் நமது நாட்டின் பன்முகத் தன்மையை மதித்து, அதற்கு உண்மையாக இருப்பதுமே ஆகும் என்று நாங்கள் நம்புகிறோம். வாழ்க்கையையே மாற்றும் இயல்புடைய நம்பிக்கை மாற்றம் என்பது ஒவ்வொருவரது சுய அனுபவம் மூலமே சாத்தியம். அதில்லாமல் இன்றைய காலகட்டத்தில் நடத்தப்படும் மதமாற்றங்கள் நாடகத் தனமான திடீர், உடனடி அதிர்வுகளாலேயே ஏற்படுத்தப் படுகின்றன.

1977-ல் இந்திய உயர்நீதிமன்றம் கூறிய தீர்ப்பில், ஒரு இந்தியக் குடிமகன் தனது மதத்தை “கடைப்பிடிக்கவும், உபதேசிக்கவும், பரப்பவும்” வழங்கப் பட்டுள்ள உரிமை மதம் மாற்றுவதற்கான உரிமை அல்ல என்று தெளிவாகக் கூறியுள்ளது. இது அரசியல் சட்டத்தையும், பண்பாட்டு நெறிமுறைகளையும் மேலும் உறுதிப் படுத்துகிறது.

இந்தியாவின் அனைத்தையும் அரவணைக்கும் கலாசாரமும், மதச்சார்பற்ற அரசியல் சட்டமும், தன் நாட்டுக் குடிமக்களை மட்டுமல்ல, இங்கு பயணிகளாக வருபர்களுக்கும் தங்கள் மதத்தைப் பின்பற்றும் சுதந்திரத்தை அளித்துள்ளது. ஆனால், இந்த உரிமைகளை உறுதி செய்யும் அரசியல் சட்டம் 25-வது பிரிவு, “சமூக ஒழுங்கு, நீதி நெறிகள் மற்றும் நல்வாழ்வு” இவற்றின் வரையறைக்கு உட்பட்டுத் தான் இந்த உரிமைகள் உள்ளன என்பதையும் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

ஆகையால், இந்திய அரசு மற்றும் எல்லா மதச்சார்பற்ற நாடுகளும் ஐ.நா. சபையின் மனித உரிமைத் தீர்மானத்தில் கூடுதலாக இங்கே கொடுக்கப் பட்டுள்ள (தடி எழுத்தில் உள்ள) இரண்டாம் வாக்கியத்தையும் இணைக்குமாறு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

“ஒவ்வொருவருக்கும் தனது சுயசிந்தனை, மனச்சாட்சியம் மற்றும் மதம் இவற்றுக்கான உரிமை உள்ளது; இந்த உரிமையில் தனது மதம் மற்றும் நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ளுதல் மற்றும் தனியாகவோ, குழுவாகவோ அல்லது பொதுவிலோ, தனியிடத்திலோ தனது சமயம் மற்றும் நம்பிக்கைகளை கற்பித்தல், உபதேசம், வழிபாடு இவற்றின் மூலமாக வெளிப்படுத்துதல் இவையும் அடங்கும். ஆனால், எந்தவொரு தனிமனிதனோ, நிறுவனமோ வயது வராதவர்கள் (minors) மற்றும் மனவளர்ச்சி குறைந்தவர்கள் உள்ளிட்ட வேறு தனிமனிதர்களையோ அல்லது குழுக்களையோ, அதிகாரபூர்வமாகவோ அல்லது அதிகாரபூர்வமற்றோ – பணம் மற்றும் பொருள் சலுகைகள் அளித்தல் , உடல், மன அல்லது உணர்வு ரீதியாக நிர்ப்பந்தப் படுத்துதல், மிரட்டல் மற்றும் பயமுறுத்தல் இத்தகைய வழிமுறைகள் மூலமாக – ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாற்றக் கூடாது.”

எல்லா விதமான மதத் தலைவர்கள் மற்றும் மத அடிப்படைவாதிகளின் மதமாற்ற முயற்சிகளையும் நாங்கள் கண்டிக்கிறோம். இந்திய கலாசாரத்தின் உயர்ந்த மரபுகளின் படி பலவித மத நம்பிக்கைகளுக்கும் இடையில் நல்லெண்ணத்தை உருவாக்குவதற்கு உழைப்போம் என்று உறுதி கூறுகிறோம். ஒரு முன்னேறும் ஜனநாயக நாட்டின் செயல்பாட்டிற்குத் தேவையான எல்லா உரிமைகளையும் வழங்கும் அரசியல் சட்டம், மதசார்பின்மை மற்றும் எல்லா மதங்களையும் ஏற்றுக் கொள்ளும் தன்மை - இவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்ட இந்திய நாட்டின் பன்முகத் தன்மையைப் பேணிப் பாதுகாக்க முயலும் எங்கள் முயற்சிகளில் இணையுமாறு எல்லா இந்தியர்களையும் அழைக்கிறோம்.

இங்ஙனம்,

பி.என். பெஞ்சமின் மற்றும் கையொப்பமிட்டவர்கள்


P.N.Benjamin

"CHRISTIANS AGAINST PROSELYTISM"
A CAMPAIGN DECLARATION FROM
BANGALORE INITIATIVE FOR RELIGIOUS DIALOGUE (BIRD)
7A, 3rd Cross, Da Costa Square, Bangalore 560 084, INDIA

January 1, 2007

BIRD அமைப்பின் இந்த ஆங்கில அறிக்கையின் தமிழ் மொழியாக்கத்தை திரு. பி. என். பெஞ்சமின் அவர்களின் அனுமதியோடு எனது வலைப் பதிவில் வெளியிடுகிறேன். இந்த அறிக்கையில் ஏற்கனவே 500 கிறித்தவர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்றும் திரு. பெஞ்சமின் தெரிவிக்கிறார்.

இந்திய தேசியத்தை வலிமையுறச் செய்யும் திரு.பெஞ்சமின் மற்றும் அவரது இயக்கத்தின் முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

இந்த நன்முயற்சியில் இணைய விரும்புவோர் திரு. பெஞ்சமின் அவர்களை benjaminpn@hotmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

BIRD இயக்கத்தின் வலைப் பதிவுகள்:

http://birdbenjamin.blogspot.com/
http://pnbenjamin.blogspot.com/
http://benjaminpn.blogspot.com/