Tuesday, May 15, 2007

யோக ஞானத்திற்குக் காப்புரிமை (patent) கேட்கும் அமெரிக்கர்கள்!

ஜாக்கிரதை! அடுத்த தடவை புஜங்காசனம் செய்வதற்கு முன்னால் நீங்கள் அதற்கான உரிமை பெற்றிருக்கிறீர்களா என்று ஒரு தடவை சரிபார்த்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால் அந்த ஆசனத்துடன் அப்படியே உங்களைத் தூக்கிக் கொண்டு போய் அமெரிக்கச் சிறைகளில் போடும் சாத்தியம் உள்ளது.

"அமெரிக்க காப்புரிமை மற்றும் ட்ரேட் மார்க் நிறுவனம் இதுவரை யோக சாதனங்கள் தொடர்பான 134 காப்புரிமைகள் (patents), 150 காபிரைட் உரிமைகள் மற்றும் யோகா தொடர்பான 2315 ட்ரேட் மார்க் உரிமைகள் இவற்றை வழங்கியிருக்கிறது" என்று சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் மற்றும் இன்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிபியூன் பத்திரிகைகளில் சுகேது மேத்தா எழுதியுள்ள இந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.

நவம்பர் 2006-ல் பிட்ஸ்பர்க் நகரத்தைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவின் எல்லா யோகா பள்ளிகளுக்கும் ஒரு அறிக்கை அனுப்பினார் - "ஓம்" என்ற மந்திரத்திற்கு அவர் ட்ரேட் மார்க் வாங்கிவிட்டதாகவும், அதனால் இந்த மந்திரத்தை ஓதுவதற்கும், ஓம் படங்களைப் பயன்படுத்துவதற்கும் அவரிடம் அனுமதி பெற வேண்டும் என்பதாக. யோகா காப்புரிமைகளைக் கண்டு கடுப்படைந்த ஒருவரது கற்பனை இது!

ஆயிரமாயிரம் வருடங்களாக பாரதத்தின் ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் உலக நன்மைக்காக உருவாக்கிய இந்தக் கலையை இன்று அமெரிக்காவின் சந்தைப் பொருளாதாரம் ஒரு பெரும் வியாபாரம் என்ற அளவிலும் கொண்டுவந்திருக்கிறது. யோக வகுப்புகள், பயிற்சிகள், புத்தகங்கள், வீடியோக்கள், உபகரணங்கள் இவை எல்லாம் அடங்கிய "யோகா சந்தை"யின் மதிப்பு ஆண்டு ஒன்றுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. யோகம் எந்த அளவிற்கு சமுதாயத்தில் ஊடுருவி உள்ளது என்பதை உணர்த்தும் நல்ல விஷயம் தான் இது. மேலும் தங்கள் உழைப்பிற்கும், திறமைக்குமான ஊதியத்தை யோகம் கற்றுத் தருபவர்கள், அந்த நிறுவனங்கள் எதிர்பார்ப்பதும் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், இதிலும் போட்டி மனப்பான்மையாலும், பேராசையாலும் உந்தப் பட்டு தங்கள் லாபங்களை மட்டும் பெருக்கிக் கொள்ள சிலர் தேர்ந்தெடுக்கும் வழிகள் தான் இந்த காப்புரிமை சமாசாரங்கள். இவர்கள் யோகா கற்றுக் கொண்டு, கற்றுக் கொடுத்து என்ன பயன்?

இந்து ஆன்மிக மரபில் வழிவழியாக வரும் கலை தான் யோகம் என்பது இன்று உலகறிந்த விஷயம். இப்படியிருக்கையில், காப்புரிமை கோரி விண்ணப்பம் செய்பவர்களுக்கு எந்த அடிப்படையில் அமெரிக்க அரசு நிறுவனம் அந்த உரிமையை வழங்குகிறது என்பது புரியாத வேடிக்கையாக உள்ளது. இத்தகைய வியாபார சுறாக்களிடமிருந்து பாதுகாப்பு வேண்டியிருப்பதால் பாரதத்தின் ஆன்மிகப் பாரம்பரியத்தில் வந்த யோக குருமார்களும் தங்கள் யோக முறைகளைக் காப்புரிமை செய்யும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள் - ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் "சுதர்ஷன க்ரியா" என்ற பிராணாயாம முறை, மகரிஷி மகேஷ் யோகியின் "ஆழ்நிலைத் தியானம்" இவற்றுக்கும் அமெரிக்காவில் காப்புரிமை உள்ளது.




இந்திய கலாசாரத்தில் ஞானம் என்பது கடைச் சரக்கல்ல என்ற கருத்து பண்டைக் காலம் முதலே வேரூன்றி உள்ளது. "ஷ்ருண்வந்து ஸர்வே அம்ருதஸ்ய புத்ரா:" (அமுதத்தின் புதல்வர்களே! எல்லாரும் கேளுங்கள்) என்று அறைகூவிய ரிஷிகள் இந்த ஞானத்தை உலகம் முழுவதற்கும் வாரி வழங்கியிருக்கின்றார்கள். இவற்றுக்கு விலை வைப்பது என்பது யோகத்திற்கு செய்யும் பெரும் அவமதிப்பு அன்றி வேறில்லை.

இந்தியாவின் எல்லா கிராமங்களிலும் அறியப் பட்ட பாட்டி வைத்திய மஞ்சள் மருத்துவமுறைகளுக்கு இதற்கு முன்பு காப்புரிமை வழங்கப் பட்டபோது தான் இந்த பிரசினையின் தீவிரம் நமக்கு உறைத்தது. இந்த வழக்கில் பல பழைய சமஸ்கிருத ஆயுர்வேத நூல்களை எல்லாம் ஆதாரம் காட்டி நாம் வெற்றி பெற்றோம். பிறகு விழித்துக் கொண்ட அரசு சம்ஸ்கிருதம்,பிராகிருதம், பாலி, தமிழ் மொழிகளில் உள்ள பழைய நூல்களில் இருக்கும் யோகம், ஆயுர்வேதம் பற்றிய விவரணங்களை வகைப் படுத்தி இவற்றை டிஜிட்டல் உருவில் கொணர்ந்து வரும் தலைமுறைகளுக்காக பாதுகாக்கும் திட்டத்தைத் தொடங்கியது. இந்தத் திட்ட செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போதே, இது போன்ற காப்புரிமைகள் வளரும் நாடுகளில் வழங்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது தான் சோகம்.

இந்தியாவில் "அறிவுக் கொள்ளை" (intellectual piracy) பெரிய அளவில் நடந்து வருகிறது என்று வளரும் நாடுகள் முறையிடுகின்றன. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் உள்ளிட்ட திருட்டு மென்பொருள்கள், ஹாலிவுட் திரைப்பட திருட்டு சி.டிக்கள் முதல் பிளாட்பாரக் கடைகளில் கிடைக்கும் உலக எழுத்தாளர்களின் நூல்கள் வரை காப்புரிமை பெற்ற பல பொருட்கள் திறந்த வெளியில் திருடப் படுகின்றன என்பது உண்மையே - ஒரு வளரும் நாட்டின் அடக்க முடியாத தாகத்தை இவை தணிக்கின்றன. ஆனால் இவை அனைத்தும் சட்டத்திற்கு எதிராகத் தான் நடக்கின்றன. இவை போக, உரிய விலை கொடுத்து இந்தப் பொருட்களை வாங்கும் இந்திய மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது இதனால் வரும் லாபக் குறைச்சலை ஓரளவுக்கு சரிக் கட்டுகிறது என்றும் சொல்லலாம்.

இந்த நிலையில் தங்கள் பாரம்பரிய ஞானத்தை வளரும் நாடுகள் திருடுவதாக இந்தியா கோபப் படுவது நியாயமா என்று கேட்கப் படுகிறது.

பல உயிர்காக்கும் மருந்துகள் பன்னாட்டு மருத்துவக் கம்பெனிகளால், இந்தியர்களின் ஆராய்ச்சி மற்றும் உழைப்பு மூலம் இந்தியாவிலேயே தான் கண்டுபிடிக்கப் படுகின்றன. இவற்றுக்கு காப்புரிமை பெற்று, இந்தியா உட்பட உலகெங்கும் விற்று கோடி கோடிகளாக வருமானம் ஈட்டும் இந்த கம்பெனிகள் அது போதாதென்று, பாரத மக்களின் பாரம்பரிய ஞானத்திற்கும் வியாபார உரிமை கோருவது எந்த வகை நியாயம்?

".. மருந்துகள், யோகா இரண்டின் தேவையும் ஆரோக்கிய வாழ்வு அளிப்பது தான். இந்தியா உலகம் முழுவதற்கும் யோகாவை இலவசமாகவே அளித்துள்ளது. அதனால் அதற்கு பிரதி உபகாரமாக உலகம் உயிர்காக்கும் மருந்துகளை குறைந்த விலையில் இந்தியாவுக்கு வழங்க வேண்டும், அல்லது குறைந்த பட்சம் இந்தியக் கம்பெனிகள் இவற்றின் குறைந்த விலை வகைகளை (cheap generics) தயாரிக்க அனுமதியாவது வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு?

பத்மாசனம் மனித குலம் முழுவதற்கும் சொந்தமானது என்றால், லூகோமியாவிற்கான "க்ளீவெக்" (Gleevec) மருந்துக்கான பார்முலாவும் அப்படித்தான். பின் ஏன் இந்த மருந்துக்கான பிரத்தியேக காப்புரிமையைக் கேட்டு ஒரு சுவிஸ் நாட்டு மருந்துக் கம்பெனி இந்திய அரசின் மீது உலக வர்த்தக நிறுவனத்திடம் வழக்குத் தொடுக்க வேண்டும்?"


மேற்சொன்ன கட்டுரையில் ஆசிரியர் வைக்கும் இந்தக் கேள்வி சிந்தனைக்குரியது.

12 comments:

Anonymous said...

யோகாசனம் என்பது புகழ்பெற்றுவிட்டதால் அந்த பெயரிலேயே காப்புரிமை எடுத்துள்ளார்கள். புகழ் பெறாத ஞானவளமாக இருக்குமானால் அதற்கு வேறு பெயர் கொடுத்து ஒருவித யூரோப்பிய அறிவியல் சாயம் கொடுத்து ஆரம்பத்திலிருந்தே எங்களுடையதுதான் என்று சொல்லிவிடுவார்கள்.

உதாரணமாக NLP (Neuro Linguistic Programming). இந்திய மற்றும் பாகனீய சடங்குகளில் பயன்படுத்தப்படும் பயிற்சிகளை அப்படியே உள்வாங்கி அதற்கு இரண்டு மூன்று யூரோப்பிய விஞ்ஞான கருத்துக்களை உபயோகித்து செய்யப்படும் அறிவு திருட்டு. மற்றொரு உதாரணம் வேத கணிதத்தை Speed System of Basic Mathematics என்று பெயரை மாற்றி காசை அள்ளுவது. ***

விவரம் தெரியாத நம் ஆட்கள் வேதத்தில் இருப்பதெல்லாம் வெறும் காமகுப்பைகள், வன்முறை வெறிகள் - வெள்ளைக்காரனை பார் NLP கண்டுபிடிச்சிருக்கான் Speed System of Basic Mathematics கண்டுபிடிச்சிருக்கான் என்று சொல்லிவிடுவார்கள்.***

பாம்பு தீண்டி இறந்த பெண்ணை உயிர்ப்பித்த ஹிந்துத் தமிழ் பாடல்களும், சித்தர் பாடலில் இருக்கும் பல்வேறு வாழ்க்கை வள முறைகளும், சித்தர் பாடல்களின் வடமொழி வடிவமான வேத பாடல்களிலும், தந்த்ரா முறைப்படி கட்டமைக்கப்பட்ட சடங்குகளிலும் எத்தனையோ வாழ்க்கை வள முறைகள் உள்ளன. ***

ஆனால் காப்புரிமை வாங்குவதுபோல பெயர் மாற்றி கொள்ளையடிப்பது அவ்வளவு அபாயமானது இல்லை. இந்திய சடங்குகள் செய்வதை எந்த கோர்ட்டும் தடை செய்யமுடியாது. வேத கணிதத்தை பயன்படுத்துவதை யாரும் தடை செய்யமுடியாது.

ஆனால், காப்புரிமை வாங்கிவிட்டால் இந்தியாவிலுள்ள வேத ஞானிகளும், புத்த லாமாக்களும், ஜைன பிக்குகளும், மற்றுமுள்ள இயற்கை சார்ந்த வழிபாடுகளை நடத்தும் ஹிந்துக்களும் அவற்றை செய்யமுடியாது. ***

அடிக்குறிப்புகள்:

*** என்னிடம் இந்திய சடங்கு முறை பற்றிய புத்தகம் இல்லை. NLP புத்தகம் இருக்கிறது. வேத கணித புத்தகம் இல்லை. Speed System of Vedic Mathematics இருக்கிறது. சென்னையின் பிரம்மாண்ட கன்னிமரா லைப்ரரி மட்டும் உதவாவிட்டால் நானும் வெள்ளைக்காரனை பார் NLP கண்டுபிடிச்சிருக்கான் Speed System of Basic Mathematics கண்டுபிடிச்சிருக்கான் என்று சொல்லிக்கொண்டிருந்திருப்பேன்.

*** இந்த கூட்டத்தில் மனித வெறுப்பு பற்றி நல்ல தெளிவுள்ள ஆட்களும் மாட்டிக்கொண்டு இருப்பது வருத்தம் தருவது.

*** பெங்களூரில் வரும் 27ம் தேதி வேதமந்திரங்களின் நடைமுறை பலன் கள் குறித்த ஒரு முழு நாள் கருத்தரங்கம் நடக்க இருப்பதாக கேகே நகர் பிள்ளையார் கோயில் அர்ச்சகர் சொன்னார். பெங்களூர்காரர்களுக்கு நல்ல வாய்ப்பு. சென்னைவாசிகளான நாங்கள் மாறனை கருணாநிதி ஏன் விலக்கினார் என்று தினத்தந்தி படித்து தெரிந்துகொள்கிறோம்.

*** எதற்கும் எனது வீட்டின் வாசல், சன்னல் கதவுகளை சாத்திவிட்டு, திரைச்சீலைகளை இழுத்துவிட்டுவிட்டு, விளக்குகளை அணைத்துவிட்டு, உடம்பெல்லாம் கருப்பு மையை தடவிக்கொண்டு, அமாவாசை நள்ளிரவுகளில் மட்டுமே யோகாசனம் செய்யப்போகிறேன். அப்போது கருப்புப்போர்வை ஏதேனும் இருந்தால் அதையும் போர்த்திக்கொள்ளுகிறேன். அந்த மாதிரி போர்வையெல்லாம் பாரதிராஜா படங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன். சென்னையில் எங்கே கிடைக்கும்?

Anonymous said...

@@@@@@ காப்புரிமை பெற்ற பல பொருட்கள் திறந்த வெளியில் திருடப் படுகின்றன என்பது உண்மையே - ஒரு வளரும் நாட்டின் அடக்க முடியாத தாகத்தை இவை தணிக்கின்றன. ஆனால் இவை அனைத்தும் சட்டத்திற்கு எதிராகத் தான் நடக்கின்றன. @@@@@

சட்டம்போட்டு தப்பு செய்தால் தப்பு இல்லை சார்.

"Blame the dog legally, and then hang it" - சொன்னது வெள்ளைக்காரன்.

"பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" - சொன்னது பாரதியார்.

"ஒழுக்கமில்லாத பெண்களை கல்லால் அடித்து கொல்லும் சட்டத்தை அரசு கொண்டு வரவேண்டும். பல மத்தியகிழக்கு நாடுகள் இந்த முறையை கொண்டு வந்ததன் மூலம் பெண்களை ஒரு கட்டுப்பாட்டில் வைக்கமுடிகிறது. இந்த மாதிரி விசயங்களை கையாள இதுவே ஒரே வழி" - சொன்னது தமுமுகவின் மாநில செயலாளர்.

அரவிந்தன் நீலகண்டன் said...

அருமையான பதிவு இது ஜடாயு. உண்மையில் ஒரு ஆழமான 'clash of civilizaions'ஐ இங்கே காண்கிறோம். மெய்ஞானம் மட்டுமல்ல பௌதீக விஞ்ஞான புலத்திலும் கூட இது இருக்கிறது. உலகின் முக்கியமான அறிவியல் மையமான ஜகதீஷ் சந்திர போஸ் நிறுவிய போஸ் அறிவியல் மையம் - தனது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவதில்லை என்பதனை ஒரு கொள்கையாக கடைப்பிடிக்கிறது. நீங்கள் கூறிய விசயத்தில் ஒரு மோசமான அம்சம் சில இந்தியர்களே கூட யோகமுறைகளுக்கு காப்புரிமை வாங்குவதுதான். மிகவும் வருத்தத்துக்குரிய விசயம் இது. அண்மையில் தமிழ்நாடெங்கும் படுவேகத்தில் பிரபலமான கண்திருஷ்டி விநாயகரும் காப்புரிமை பெற்ற விசயம்தான். மேற்கத்திய பண்பாட்டு பாதிப்பு எந்த மாதிரி விசித்திர விநோதங்களை உருவாக்குகிறது பாருங்கள்.

Anonymous said...

அமெரிக்கர்களிடமிருந்தும் மற்ற நாட்டவரிடமிருந்தும் நாம் கற்க வேண்டிய விஷயங்கள் பல உள்ளன என்பது உண்மை தான். ஆனால் எதையும் வியாபார நோக்கில் பார்க்கும் இந்த அமெரிக்கர்களின் போக்கு ஒரு கொடிய விஷம். பொருளாதார ரீதியில் முன்னேறியிருந்தாலும் அந்நாட்டில் இன்று காணப்படும் தனிமனித குழப்பங்கள், துப்பாக்கி கலாசாரம் போன்றவற்றிற்கு இந்த வியாபார நோக்கு வித்திடும் சுயநலமே காரணம் என்பது என் தாழ்மையான கருத்து. பல உயர்ந்த தத்துவங்களையும், யோக முறைகளையும், இதிகாசங்களையும், காப்பியங்களையும் எவ்வித சுயநல நோக்கும் இல்லாமல் மக்களின் நன்மைக்காகவே விட்டுச் சென்ற பாரதப் பெரியோர்கள் எங்கே, இந்த சுயநல அமெரிக்க வியாபாரிகள் எங்கே! அமெரிக்காவின் இந்த பணத்தாசை சுயநல வியாதி இந்தியாவை தொற்றிக் கொள்ளாமல் நாம் காக்க வேண்டும்.

ஜடாயு said...

// புகழ் பெறாத ஞானவளமாக இருக்குமானால் அதற்கு வேறு பெயர் கொடுத்து ஒருவித யூரோப்பிய அறிவியல் சாயம் கொடுத்து ஆரம்பத்திலிருந்தே எங்களுடையதுதான் என்று சொல்லிவிடுவார்கள். //

பனித்துளி, ஜெர்மானிய வரலாற்றறிஞர் மாக்ஸ்முல்லர் வேத இலக்கியத்தில் மனம் பறி கொடுத்தவர், அதன் உன்னதம் பற்றி மிகவும் சொல்லியிருக்கிறார். அதனால் தானோ என்னவோ அந்த வேதத்தை எழுதிய ஆரியர்கள் இந்தியாவுக்கு வெளியிலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று அடித்துச் சொன்னார் போலிருக்கிறது!

உங்கள் மறுமொழியில் பல விஷயங்கள் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

ஜடாயு said...

// நீங்கள் கூறிய விசயத்தில் ஒரு மோசமான அம்சம் சில இந்தியர்களே கூட யோகமுறைகளுக்கு காப்புரிமை வாங்குவதுதான். மிகவும் வருத்தத்துக்குரிய விசயம் இது. //

உண்மை. அமெரிக்கப் பிரஜைகளாக ஆகிவிட்ட இவர்கள் தங்கள் கலாசாரம் மூலம் ஏதாவது காசு பார்க்க முடியுமா என்ற எண்ணத்தில் இப்படி இறங்கியிருக்கிறார்கள். வெட்கப் பட வேண்டிய விஷயம்.

// அண்மையில் தமிழ்நாடெங்கும் படுவேகத்தில் பிரபலமான கண்திருஷ்டி விநாயகரும் காப்புரிமை பெற்ற விசயம்தான். //

அப்படியா? இது புதுசா இருக்கே! அப்ப ஒரு குறிப்பிட்ட கம்பெனி தவிர வேறு யாரும் இந்த விநாயகர் உருவத்தை படத்தில் வரைந்து விற்க முடியாதா?

காக்கும் கடவுள் கணேசனுக்கே காப்புரிமையா?

ஜடாயு said...

// அமெரிக்காவின் இந்த பணத்தாசை சுயநல வியாதி இந்தியாவை தொற்றிக் கொள்ளாமல் நாம் காக்க வேண்டும். //

சரியாகச் சொன்னீர்கள் அனானி அவர்களே. "ஊருணி நீர் நிறைந்தற்றே" என்று குளத்துத் தண்ணீரை ஊர் முழுவதற்கும் சொந்தமாக்கியது நம் இந்தியப் பண்பாடு. இதைக் காத்து வளர்க்க வேண்டும்.

Anonymous said...

// யோக வகுப்புகள், பயிற்சிகள், புத்தகங்கள், வீடியோக்கள், உபகரணங்கள் இவை எல்லாம் அடங்கிய "யோகா சந்தை"யின் மதிப்பு ஆண்டு ஒன்றுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. //

Wow! This is cool. Nice to know that the ancient Indian spiritual science has so much economic potential too!

Indian govt. should make Yoga a priority area and start many centers to create certified Yoga teachers. I am sure they are in big demand all over the world.

Anonymous said...

// பத்மாசனம் மனித குலம் முழுவதற்கும் சொந்தமானது என்றால், லூகோமியாவிற்கான "க்ளீவெக்" (Gleevec) மருந்துக்கான பார்முலாவும் அப்படித்தான். பின் ஏன் இந்த மருந்துக்கான பிரத்தியேக காப்புரிமையைக் கேட்டு ஒரு சுவிஸ் நாட்டு மருந்துக் கம்பெனி இந்திய அரசின் மீது உலக வர்த்தக நிறுவனத்திடம் வழக்குத் தொடுக்க வேண்டும்?" //

மிக நியாயமான கேள்வி. யோகா என்ற கலை மூலம் இந்தியாவின் பண்டைய ஞானம் உலகில் எத்தனை மக்களுக்கு உடல் நலம், மன நிம்மதி அளித்து வருகிறது - இதைப் பற்றி நாம் இந்தியாவில் பெரிய அளவில் பேசுவது கூட இல்லை.

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

ஜடாயு said...

யோகாசனங்களுக்கு அமெரிக்க அரசு அலுவலகம் காப்புரிமை வழங்கியதை எதிர்ப்பு அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கு போடப் போவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது - நேற்றைய செய்தி.

சரியான நடவடிக்கை. விழித்துக் கொண்டிருக்கும் இந்திய அரசுக்கு பாராட்டுக்கள்.

Anonymous said...

you got it absolutely wrong.yoga
has not been patented.Yoga as such
can not be patented.

Anonymous said...

யோகசானங்களுக்கு காப்புரிமையா- இது என்ன புது புரட்டு. விசாரித்து, உறுதி செய்து கொண்டா இதை எழுதினீர்கள்.செய்தி தவறு என்று அஞ்சுகிறேன்