தேவகி அண்மையில் காலமானார். திருமணமாகி மூன்றாம் மாதத்தில் இறந்து போன அவரது கணவர் கொடுத்துவிட்டுப் போனது ஒரே மகன். அவரது இறுதி சடங்குகளை செய்யக்கூட நிதி நிலை சரியில்லையாம் அந்தக் குடும்பத்துக்கு. காயத்ரி அறக்கட்டளை எனும் நிறுவனத்தின் உதவியுடன் தான் அது நடந்ததாம். அவரது மகன் அரசு இல்லத்தில் சேர்க்கப்பட்டு வளர்ந்து இப்போது கரண்டிதூக்கி தொழில் நடத்துகிறார். இதற்கும் இந்த குடும்பத்துக்கு எம்.ஜி.ஆர்தான் பொருள் உதவி செய்திருக்கிறார். தேவகியின் பேத்தி பத்தாவதுடன் படிப்பை நிறுத்திவிட்டார். பேரன் காஞ்சியில் வேதம் படிக்கிறார்.
யார் இந்த தேவகி?
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகளின் குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை தேவகி.
கலைகளும், இசையும் கௌரவிக்கப் பட்ட தஞ்சைத் தரணியில் நிலபுலன்களுடன் வாழ்ந்த இந்த இசைக் குடும்பத்தில் அடுத்தடுத்த தலைமுறைகள் தொழில் மற்றும் பிசினஸில் இறங்கி கடன்பட்டு, நொடித்துப் போய் இப்போது இந்த சந்ததியினர் சென்னையில் சிட்லபாக்கத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களது துயர நிலை பற்றி "தி இந்து" நாளிதழில் சமீபத்தில் வந்த செய்தி:
http://www.thehindu.com/2008/05/06/stories/2008050660511100.htm
சந்ததியினர் சங்கீதத்திற்கு என்ன செய்தார்கள்? அவர்கள் பட்ட கடனால் தானே இந்த நிலைமை என்றெல்லாம் தர்க்கங்களும், விவாதங்களும் ரசிகர்கள் சந்திக்கும் இணையக் குழுமங்களில் ஒருபக்கம் நடந்து வருகின்றன. (இந்த விவாத இழையில் சியாமா சாஸ்திரி பற்றிய சில வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன)

ஆனால், காபிரைட், ராய்ல்டி போன்ற எந்தச் சிடுக்குகளும் இல்லாத காலத்தில், இசையையே உயிர்மூச்சாக்கி, இசைக்காகவே வாழ்ந்து மறைந்த ஒரு உன்னத கலைஞரின் சந்ததியினருக்கு உதவ சங்கீத வித்வான்களும், ரசிகர்களும் கடமைப்பட்டுள்ளனர் என்பது எனது சொந்த அபிப்பிராயம். சியாமா சாஸ்திரிகளின் ஒவ்வொரு கிருதியையும் பாடும்போது வித்வான்கள் ஒரு 50 ரூபாய் கொடுத்தால் கூட இந்தக் குடும்பம் இந்த கஷ்டதசைக்கு வந்திருக்காது என்று ஒரு ரசிகர் வருத்தப் பட்டிருந்தார்.
இது பற்றிக் கேள்வியுற்று மனம் வருந்திய ரசிகர் வி.வி.சுந்தரம் (அமெரிக்காவின் புகழ்பெற்ற க்ளீவ்லேண்ட் ஆராதனை இசை விழாக் கமிட்டியுடன் தொடர்புடையவர்) உதவிசெய்ய விரும்புபவர்களது நன்கொடைகளைத் திரட்டி ஒருங்கிணைக்க முன்வந்துள்ளளார். இது பற்றிய அனைத்து விவரங்களும் ஆராதனைக்கமிட்டியின்
இணைய தளத்தில் அனைவரும் அறிய வெளியிடப் படும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்த மகானின் கீர்த்தனைகளால் மன அமைதி பெற்றவர்கள் வாழ்வில் வளம்பெற்றவர்கள் எத்தனையோ பேர் இருப்பீர்கள் அவர்கள் இந்த குடும்பத்துக்கு உதவ நினைத்தால்,
வெளிநாடுகளில் இருந்து உதவி செய்ய விரும்புவர்கள், தங்கள் காசோலைகளை Aradhana Committee என்ற பெயரில் அனுப்பவேண்டிய முகவரி:
Aradhana Committee, 4 Cranberry Brook Drive, Millstone, NJ 07726
இந்தியாவில் இருந்து உதவி செய்ய விரும்புபவர்கள் Aradhana Committee என்ற பெயரில் அனுப்பவேண்டிய முகவரி:
Aradhana Committe, 3 Royal Enclave, Adyar, Chennai 600 020
காசோலைகளின் பின்பக்கம் Syama Sastry Family Fund என்று மறக்காமல் குறிப்பிடவும். அதிக விவரங்கள் மேற்குறிப்பிட்ட rasikas.org விவாத இழையில் கிடைக்கும்.
"தருணம் இதம்மா - என்னை ரக்ஷிக்க
தருணம் இதம்மா
கருணாநிதியாகிய காமாக்ஷி ரக்ஷிக்க (தருணம்)"
என்று அன்னை பராசக்தியையே தன் வாழ்நாள் முழுவதும்
பாடிப்பரவிய சியாமா சாஸ்திரிகளின்
கௌளிபந்து ராகக் கீர்த்தனை பின்னணியில் ஒலிக்கிறது.