Saturday, February 10, 2007

ராக ராஜேஸ்வரி: எஸ்.சௌம்யா இசை மழை

சரணத்தில் நறுமலர்களை மாலையாகக் கோர்த்த மாயாமாளவகௌள ராகக் கிருதி நான் அரங்கத்திற்கு உள்ளே நுழையும்போது ஓடிக் கொண்டிருந்தது.

"ஸரஸீருஹ புன்னாக சம்பக பாடல குரவக
கரவீர மல்லிகா சுகந்த ராஜசுமன..."

"இந்த மலர்களெல்லாம் கூட வேண்டாம், துளசி இலை ஒன்றே போதும் அவனை மகிழ்விக்க" என்பதாகத் தொடங்கும் "துளஸீதளமுலசே ஸந்தோஷமுகா.." என்ற தியாகராஜரின் இந்த அழகிய கிருதியை சில துடிப்பான கல்பனா ஸ்வரங்களுடன் பாடிக் கொண்டிருந்தார் எஸ்.சௌம்யா.


சிவராத்திரியை முன்னிட்டு நடந்து வரும் "கலோத்ஸவ் 2007" தொடரில் நேற்று (வெள்ளிக் கிழமை) எஸ்.சௌம்யா இன்னிசைக் கச்சேரியைக் கேட்டது ஆனந்த அனுபவம். கச்சேரி நடந்த இடம் பெங்களூர் அல்சூர் ஏரி அருகே உள்ள ஒடுக்கத்தூர் மடம் முருகன் கோவில் அரங்கம்.

அடுத்ததாக "பாகாயனய்யா" சந்திரஜ்யோதி ராகத்தில் உருக்கமான கிருதி. பின்னர் துள்ளலுடன் குந்தலவராளியில் "போகீந்த்ர சாயினம்" சுவாதித் திருநாள் பாடலை விறுவிறுப்பான ஸ்வரங்களுடன் பாடினார். அப்புறம், கொஞ்சம் விரிவான ஆலாபனையோடு தியாகராஜரின் "சலித்தோடித் தேவே, ஓ மனஸா" என்ற கிருதி. தன் மனத்தைப் பார்த்துப் பேசும் இந்தப் பாடலில் "பதிதுலு ப்ரோசே பட்டாதிகாரிணி" ("பட்டத்து அதிகாரம் இழிந்தோரிடம் செல்வதா" என்பது தான் இதன் பொருள் என்று ஊகிக்கிறேன் - ரொம்ப அர்த்தபுஷ்டியுள்ள வரிகள்) என்ற சரணத்தின் முதல் அடியை அற்புதமாக நெரவல் செய்தார்.

அடுத்தது "சர்வேசா அடிமையை நீ உதறித் தள்ளாதே, சங்கர சதாசிவனே.. " என்ற பாபநாசம் சிவன் கிருதி. கருணை ரசம் பிரதானமாக உள்ள இந்தப் பாடலை கம்பீரத்திற்கும், மகிழ்ச்சிக்கும் உரிய பிலஹரி ராகத்தில் சிவன் அமைத்திருப்பது இன்னும் ஒரு அழகு என்று சௌம்யா பாடியபோது புரிந்தது. சொற்களின் பாவத்தை ராகத்தில் குழைத்த விதம் வெகு நேர்த்தி. இதைத் தொடர்ந்து "சுதா... மாதுர்ய பாஷண... சுதாகரானனா... " தியாகராஜரின் துரிதகதியில் அமைந்த பாடல். "சிந்துராமக்ரியா" என்ற ராகத்தில் அமைந்த இந்தப் பாடலை பாலமுரளிகிருஷ்ணாவின் குரலிலேயே கேட்டுப் பழகியிருந்த எனக்கு, சௌம்யாவின் குரலில் கேட்டது இன்னும் செவிகளில் இனித்துக் கொண்டிருக்கிறது.


கச்சேரியின் பிரதான அம்சத்தை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தேன்.. வந்தது வரம் - கிறங்க அடித்த பைரவி ஆலாபனை. அதி நிதானமாக ஆலாபனையைத் தொடங்கி பைரவிக்கு சகல அலங்காரங்களும் செய்து அந்த ராக தேவதையைக் கண்முன் நிறுத்தினார் சௌம்யா. ராகத்தின் முழு உருவத்தையும் பிரத்தியட்சமாகப் பிசிறு இல்லாமல் காட்டிய அழகிய ஆலாபனை. பிறகு பாடியது சியாமா சாஸ்திரிகளின் அதி உன்னதமான பைரவி ராக ஸ்வரஜதி - "கா..மா.. க்ஷீ அம்பா.... அனுதினமு மரவகனே....". பாடப் பாடத் தெவிட்டாத தேவியின் சுந்தர ரூபத்தையும் அவளது காருண்யத்தையும் விவரிக்கும் ஸ்வரஜதி. ஒவ்வொரு வரிக்கும் உள்ள ஸ்வரங்களை ஆற அமர சௌம்யா பாடியதைக் கேட்டது தேவியே வந்து பாடியது போல் இருந்தது.

வயலின் வாசித்த பெண்மணி நளினா மோகன், பாடகரை வில்லில் அற்புதமாகப் பின் தொடர்ந்தார், ஸ்வர வாசிப்புகளும் அருமையாக இருந்தன. கடம் சுகன்யா ராஜகோபால், தாள வாத்தியம் வாசிக்கும் அபூர்வப் பெண் வித்வாம்சினி, அதற்கு உரிய எனர்ஜியோடு நன்றாக வாசித்தார். இந்த மூன்று தேவியரையும் அரங்கில் பார்த்ததும் எனக்கு ரவிவர்மாவின் ராஜராஜேஸ்வரி சித்திரம் தான் நினைவுக்கு வந்தது. லட்சுமி தேவி தாள வாத்தியம் இசைக்க, சரஸ்வதி வீணை வாசிக்க, அன்னை பராசக்தி நடுவில் கொலுவிருக்கும் கோலம்! தீட்சண்யமான கண்களும், வசீகரப் புன்னகையும் கலந்த சௌம்யாவின் அழகிய முகமண்டலம் அவரது இசைக்கு ஒளியூட்டுகிறது என்றால் மிகையில்லை.


அவ்வப்போது வயலின், மிருதங்க வித்வான்களைப் பார்த்து அர்த்தபுஷ்யுடன் செய்த புன்சிரிப்புக்கள் ரசிக்கும்படியாக இருந்தன. மிருதங்க வித்வான் ஹெ.எஸ். சுதீந்திரா முதலில் கொஞ்சம் சலிப்பூட்டுவது போல இருந்தாலும் கச்சேரி சூடு பிடித்ததும் கலக்கினார். சௌம்யா தவிர, மற்ற கலைஞர்கள் அனைவரும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
இந்த ஸ்வரஜதியில் பெரும்பாலும் வித்வான்கள் நிரவல் செய்வது கடைசி அடி "சியாம க்ருஷ்ண ஸ்ஹோதரீ.... சிவ சங்கரீ... பரமேஸ்வரீ.." என்பது. சௌம்யா இடையில் வரும் "பக்தஜன கல்பலதிகா.. கருணாலயா.. ஸதயா" என்ற ரசம் நிறைந்த அடியை எடுத்துக் கொண்டது சிறப்பு.

இது முடிந்ததும் சபா காரியதரிசி ஒருவர் பாலக்காட்டுத் தமிழும், பாலக்காட்டு ஆங்கிலமும் கலந்த மொழியில் ஒரு சிறிய பேச்சுக் கச்சேரி செய்தார்.

பிறகு வந்த துக்கடாக்கள் ஒவ்வொன்றும் மணிகள். "லோக ஹரனே க்ருபாசாகரா" என்ற ராகவேந்திரசுவாமி மீதான வாகதீஸ்வரி ராகப் பாடல். கோபால கிருஷ்ண பாரதியின் "சிதம்பரம் போகாமல் இருப்பேனோ?", மகாகவி பாரதியின் "காதலெனும் தீவினிலே ராதே ராதே".. "சென்னிக்குள நகர் வாசன்" என்ற காவடிச் சிந்து - இதன் ஒவ்வொரு சரணத்தையும் வேறுவேறு விதமாகப் பாடியது அருமை.. கடைசியாக வந்த பிஹாக் தில்லானாவில் வரும் பல்லவி "தஞ்சபுரி ப்ருஹதீஸ்வருனி ராணி.." ! அற்புதமான இந்த தெய்வ சங்கீதத்தைக் கேட்காமலும், ரசிக்காமலும், தெரிந்து கொள்ள எந்த முயற்சியும் செய்யாமலும் சும்மா "தமிழிசை, கிமிழிசை" என்று கிழிப்பவர்களைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது - "தஞ்சபுரி" (thanchapuri) என்று என்ன அழகாகத் தஞ்சையின் பெயரைத் தெலுங்கு உச்சரிப்பில் வைத்துப் பாடியிருக்கிறார் பாருங்கள் தில்லானா இயற்றியவர்!

இவ்வளவு சிலாக்கியமான கச்சேரிக்கு வந்த கூட்டம் மிகவும் குறைவு. இது போன்ற கச்சேரி சென்னையின் நடந்தால் எள்விழ இடமில்லாமல் கூட்டம் இருக்கும். இங்கே கால்வாசி அரங்கத்திற்கு மேல் காலியாக இருந்தது. கர்நாடகத் தலைநகரம் கர்நாடக சங்கீதத்தை வெகுஜன அளவில் ரசிக்க இன்னும் கூடக் கொஞ்ச நாள் பிடிக்கும் போலிருக்கிறது!

5 comments:

பத்மா அர்விந்த் said...

நல்ல அருமையான விமரிசனம். நேரில் சென்று கேட்டது போல இருந்தது.

துளசி கோபால் said...

படிக்கவே அருமையாக இருக்கிறது. கொடுத்துவைத்தவர்தான் நீங்கள்.

Anonymous said...

Excellent report on the event. Good punch in the last line. Gangadhar

ஜடாயு said...

பத்மா, துளசி, கங்காதர்..

உங்கள் பின்னூட்டங்களுக்கு மிகவும் நன்றி ரசிக சிரோமணிகளே.

jeevagv said...

விமர்சனம் அருமை.
நேரடியாக கேட்க பாக்கியம் செய்திருக்க வேண்டுமல்லவா!

//சங்கீதத்தைக் கேட்காமலும், ரசிக்காமலும், தெரிந்து கொள்ள எந்த முயற்சியும் செய்யாமலும் சும்மா "தமிழிசை, கிமிழிசை" என்று கிழிப்பவர்களைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது //
:-) முற்றிலும் சரியே.

மேலும் இந்த தளத்தைப்பற்றி அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்:
http://www.udbhava.com