பதினாறு பேறுகள் பற்றிய அழகிய பாடல்..
"பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என்று நம் மரபில் பெரியோர்கள் வாழ்த்தி வருகிறார்கள். இது பற்றிக் கூறும் பாடலைப் பற்றி தமிழ் அறிஞர் ஹரிகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டேன். அவர் தந்த அந்தப் பாடலும், விளக்கமும் இதோ -
.. அது அபிராமி அம்மை பதிகத்தின் முதல் பாடல். அபிராமி அம்மை பதிகத்தின் பதினோரு பாடல்களும் இங்கே கிடைக்கின்றன:
http://www.tamil.net/projectmadurai/pub/pm0026/abipatsc.html
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கவடுவா ராத நட்பும்
.....கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணிஇ லாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
தவறாதசந் தானமும்
.....தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள்வா ராதகொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில் லாத வாழ்வும்
.....துய்யநின் பாதத்தில் அன்பும்உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே
....அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!
வாய்விட்டுப் படித்தால் கண்ணில் நீர் அரும்பும்.
பொருள் தேவைப்படுமோ? சொல்லிவிடுகிறேன். கல்வி, நீண்ட ஆயுள், கபடில்லாத நட்பு, நிறைந்த செல்வம், எப்போதும் இளமை, பிணி இல்லாத ஆரோக்கியமான உடல், சலிப்பு வராத மனம், அன்பு நீங்காத மனைவி, புத்திர பாக்கியம், குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான அருகதை, எந்தத் தடையும் ஏற்படாத கொடை(அளித்தல்), செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசன், துன்பமில்லாத வாழ்வு, உன் பாதத்தின்மேல் பக்தி, இந்தப் பதினாறுக்கும் அப்பால் உன் தொண்டர்களை என்றும் பிரியாத கூட்டு. இவற்றை அருள வேண்டும்.
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
எனக்கு ஏற்கனவே பரிச்சயமான பாடல் தான் இது.. ஆனால் 16 செல்வங்கள் என்பவை இவை தான் என்று அறிந்திருக்கவில்லை. ஹரியின் விளக்கத்திற்குப் பிறகு இன்னொரு முறை படித்துப் பார்க்கும்போது இந்த பாடலில் அற்புதமான சொல்லாட்சியும், மேலும் சில நயங்களும் அனுபவிக்கக் கிடைக்கின்றன..
"கபடு வாராத நட்பும்" என்பதை என் நண்பர்கள் மீது நான் கொள்ளும் நட்பில் கபடு வராமல் இருக்கவேண்டும் என்று விழைவதாகவும் கொள்ளலாம். "அன்பகலாத மனைவியும்" என்கையில் என்மீது அவள் அன்பும், அவள் மீது என் அன்பும் இரண்டும் அகலாதிருக்கட்டும் என்ற பொருள் தொக்கி நிற்கிறது.
"தவறாத சந்தானமும்" என்பதை "என் சொல் பேச்சுக்குத் தவறாத குழந்தைகள்" என்று அல்ல, தங்கள் ஒழுக்கத்திலும், நன்னடத்தையிலும் தவறாத குழந்தைகள் என்றே நான் கொள்கிறேன். "தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும்" என்னும் வள்ளுவர் மொழிக்கேற்ப இதற்கும் பொறுப்பாளி நான் தான் என்பதை நினைவூட்டுகிறது இது.
சொல்லப் போனால் இந்த செல்வங்களுக்கெல்லாம் பிறப்பிடம் வெளியில் இல்லை, என்னிடத்திலேயே உள்ளது. அதை நான் அகத்தில் உணர்ந்து நடந்தால் அதன் பிரதிபலிப்பாக இந்த செல்வங்கள் நம்மைத் தேடி வந்து அடைகின்றன. அதை உணரும் தன்மையை வேண்டி அபிராமி அன்னையிடம் கசிந்துருகி வேண்டுகிறது இந்த அழகிய பாடல்.
4 comments:
அன்புள்ள ஜடாயு,
பொருளில் ஒரு சின்ன திருத்தம் தேவைப்படுகிறது. இந்த வாக்கியத்தை:
"துன்பமில்லாத வாழ்வு, உன் பாதத்தின்மேல் பக்தி, இந்தப் பதினாறுக்கும் அப்பால் உன் தொண்டர்களை என்றும் பிரியாத கூட்டு"
"....இவற்றுடன் உன் தொண்டர்களை என்றும் பிரியாத கூட்டு" என்று திருத்திக் கொள்ளவும். அம்மையின் அன்பர்களோடு நிலவும் கூட்டு என்பதையும் சேர்த்தே பதினாறு ஆகிறது.
என் அம்மா "அன்பு அகலாத கணவனும்" எண்று சொல்லுவார். சிறு வயதில் நானும் அதே போல் சொல்லுவேன்.
"தனம் தரும் கல்வி தரும்..."
பாடலும் நான் தினம் ஜபிக்கும் பாடல்.
நல்ல பதிவு.
--மது
நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்..
I have copied and added in my blog also. I have sent to all my friends They like your blog.
Thanks once again.
K.Balu
மிகவும் அருமையான பதிவு...பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்தல் என்றால் 16 பிள்ளைகள் என்று தவறான கருத்து கொண்டு பலர் இன்னும் இந்த மொழியை கேலி செய்து வருகின்றார்கள். இன்று இதற்கு சரியான விளக்கம் கிடைத்தது...
Post a Comment