Friday, April 25, 2008

திராவிட இயக்க திருக்குறள் பார்வைகள் குறித்து

கிறிஸ்தவ இறையியலில் Dehellenization என்று ஒரு கருதுகோள் உண்டு. “ஹெலன் இல்லாமல் ஆக்குவது” என்ற பொருள் தொனிக்கும் இந்தப் பதத்தின் உண்மைப் பொருள் “கிரேக்கத் தாக்க நீக்கம்” என்பதாகும் (நன்றி: அருணகிரி) 16ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க சர்ச்சின் எதேச்சாதிகாரத்தை எதிர்த்து பிராட்டஸ்டண்ட் இயக்கம் எழுந்தபோது இந்தக் கருத்தியல் உருவானது. கிறிஸ்தவ மதக் கொள்கை, அதன் சின்னங்கள், சமய இலக்கியம் இவற்றில் இழையோடிக் கொண்டிருப்பதாகக் கருதப்பட்ட கிரேக்க தத்துவ ஞானம், கிரேக்க புராண, உருவவழிபாட்டு “பாகன்” மத தாக்கங்கள் இவற்றைத் திட்டமிட்டு நீக்கி, கிறிஸ்தவத்தை “சுத்திகரிக்க” வேண்டும் என்ற எண்ணத்துடன் பைபிள் முழுவதும் இந்தப் பார்வையில் வாசிக்கப்பட்டு அதன் கருத்துக்களுக்கு விளக்கமளிக்கும் “பண்டிதர்கள்” உருவானார்கள். ஆனால், மதிப்பீடுகள் மாறிவரும் நவீன காலகட்டங்களில் கிரேக்க தத்துவ தரிசனத்துடன் பைபிளும், கிறிஸ்தவமும் தொடர்புடையது என்று நிறுவுவதும் ஒருவகையில் சாதகமான நிலைப்பாடு தான் என்றும் கருதப் பட்டது. இன்றும் வாத்திகன் மற்றும் ஏனைய கிறிஸ்தவ வட்டாரங்களில் இதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பான குரல்கள் எழுந்துவருகின்றன. சர்ச்சையைக் கிளப்பிய தனது சமீபத்திய 2006ம் ஆண்டு உரையிலும் போப் இதுபற்றிக் குறிப்பிட்டார் (இந்த உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு)

முனைவர் மு.இளங்கோவன் என்பவர் திண்ணையில் சென்ற இரு வாரங்களாக எழுதி வந்த “திராவிட இயக்க திருக்குறள் பார்வைகள்” கட்டுரையைப் படிக்கும்போது இந்தச் சொல் என் நினைவில் தோன்றி மறைந்தது. பழந்தமிழ் இலக்கியங்கள், கலை மற்றும் கலாசார விஷயத்தில் DeHinduization (இந்துத்தன்மை நீக்கம்) என்கிற “சுத்திகரிப்பு” வேலையைத் தானே முதலில் தமிழகத்திற்கு வருகை புரிந்த கிறிஸ்தவ மிஷநரிகளும், பின்னர் அவர்களால் போஷிக்கப் பட்டு வரும் திராவிட இயக்கமும் செய்து வந்திருக்கின்றன?

ஆனால் இரண்டிற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. சர்ச் கிரேக்கத் தாக்கநீக்க வேலையை ஆரம்பித்த காலகட்டத்திற்கு ஒரு பன்னிரண்டு நூற்றாண்டுகள் முன்பே கிரேக்க மதமும், தத்துவமும், கலாசாரமும் கிறிஸ்தவத்தின் வன்முறைப் பரவலால் வேரறுக்கப் பட்டுவிட்டன. அதை வெளிப்படையாகக் கடைப் பிடிப்போர் யாருமில்லை. அவற்றின் ஒளியை தரிசிக்க விரும்பிய ஐரோப்பிய மறுமலர்ச்சிக் கால ஆரம்ப சிந்தனையாளர்கள் கூட சர்ச் அதிகார அமைப்பால் வேட்டையாடப் பட்டனர். பின்னர் கிரேக்கத் தத்துவம் போற்றுதலுக்கு உரியதாக மாறிவந்ததும், சர்ச் அதன் ஒளியில் தானும் குளிர்காயத் தொடங்கியது.

ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த “சுத்திகரிப்பு” தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககாலத்தில் இந்துமதம் இன்று போலவே உயிர்த்துடிப்புடன் வாழ்ந்து வந்தது. இந்திய தேசிய எழுச்சியின் நாயகர்களான விவேகானந்தர், திலகர், லாஜபத்ராய், அரவிந்தர், மகாகவி பாரதி, வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட தலைவர்கள் இந்து கலாசார அடித்தளத்தின் மீதே தேசிய எழுச்சிக்கான கருத்தியல்களைக் கட்டமைத்தனர். தமிழ்ப் பண்பாடு உள்ளிட்ட பாரத நாட்டின் அனைத்து சமுதாய வாழ்க்கை முறைகளிலும் இழையோடிக் கொண்டிருந்ததும் இந்தக் கலாசாரத்தின் கூறுகள் தாம் என்றும் அவர்கள் நாடெங்கும் எடுத்துரைத்தனர்.

ஆனால், இந்த தேசிய நீரோட்டத்திற்கு மாறாக “தமிழ்ப் பழம்பெருமை”, “நாத்திகம்/பகுத்தறிவு” என்ற இரண்டு தொடர்பேயில்லாத சண்டிக் குதிரைகள் மீது சவாரி செய்ய விரும்பியது திராவிட இயக்கம். ஒரு மிகப்பெரிய நகைமுரணாக, “நவீன” சித்தாங்களின் அடிப்படையில் எழுந்ததாகத் தன்னை சொல்லிக் கொண்ட இந்த இயக்கம் வெறித்தனமான மரபு வழிபாட்டு, இனப்பெருமைக் கொள்கைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது, அவற்றை வளர்த்தெடுத்தது. பண்டைக் கலாசாரத்தின் கூறுகளை முழுமையாக மறுக்கும் “தூய” பகுத்தறிவுவாதம் தமிழ்மண்ணில் சுத்தமாக எடுபடாது என்பதை இந்தப் பகுத்தறிவுப் பகலவன்கள் அறிந்தே இருந்தனர்.

ஆனால் கோயில்களும், சிற்பங்களும், பேரிலக்கியங்களும், பாரம்பரிய இசை, நடனக் கலைகளும், சைவ, வைணவ சமயங்களும் இல்லாமல் “தமிழ்ப் பழம்பெருமை” என்று ஒன்று இருக்கவே முடியாதே, என்ன செய்வது? இந்த ஓட்டையை இட்டு நிரப்பத் தோதாகக் கிடைத்தது கால்டுவெல் பாதிரியார் உருவாக்கிய போலியான ஆரிய-திராவிட இனவாதக் கொள்கை. அதிலிருந்து முளைத்தவையே பிராமண வெறுப்பு, இந்துமத எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு, வட இந்திய வெறுப்பு, சம்ஸ்கிருதக் காழ்ப்புணர்ச்சி எல்லாம்.

இந்தச் சட்டகம் இறுதி வடிவம் அடைந்ததும், தங்கள் கையில் கிடைத்த பழந்தமிழ் இலக்கியங்களையும், கலாசாரப் பிரதிகளையும் இந்தப் பார்வையில் திரித்து, உருமாற்றி, சிதைத்து புதுப்புது விளக்கங்கள் அளிப்பது திராவிட இயக்க குடிசைத்தொழில் போன்று ஆகியது. ஒப்பீட்டளவில் “கிரேக்கத்தாக்க நீக்கம்” செய்த பாதிரிகளுக்கு இருந்த ஆழ்ந்த புலமையில் சிறிதளவும் தேராத “புலவர்”களும், பாவலர்களும், நாவலர்களும், தமிழ்க் காவலர்களும், அரசியல் ஏவலர்களும் கூட இதில் புகுந்து விளையாடினர். “சீரங்க நாதனையும் தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளக்க” ஒருவர் அறைகூவுவார். இன்னொருவர் வானளவாவ உயர்ந்த கோபுரங்களையும், அணிமாடக் கோயில்களையும் கட்டிய தமிழனின் சிற்பக் கலை உன்னதத்தைப் பற்றி அடுக்குமொழியில், துடுக்கு நடையில் உரையாற்றுவார்!

இந்தக் கட்டுரை தரும் திராவிட இயக்க திருக்குறள் உரைப் பட்டியலில் வ.சுப.மாணிக்கம் போன்று ஒரு சில உண்மையான அறிஞர்களின் உரைகள் தவிர்த்து, பெரும்பாலான உரைகளை இன்று படித்துப் பார்க்கும், ஓரளவு இலக்கியப் பிரக்ஞையும், கொஞ்சம் மரபிலக்கியப் பயிற்சியும் உள்ள எந்தத் தமிழ் வாசகனும் அவை எவ்வளவு போலித்தனமாகவும், அறிவுசார் நேர்மை இன்றியும், குருட்டாம்போக்கிலும் எழுதப்பட்டுள்ளன என்பதை உணரக் கூடும்.



பரிமேலழகர் காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில் பட்டாச்சாரியாராக இருந்தவர் என்பது மரபு

திருக்குறள் தமிழிலக்கியத்தின் ஒரு சிகரம் என்றால், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப் படும் ஈடு இணையற்ற உரையாசிரியர் பரிமேலழகர் அதற்குச் செய்த உரையை தமிழிலக்கியத்தின் சிகர தீபம் என்பதே சரியாக இருக்கும். எல்லா பழம் நூல்களையும் போல, காலம் கடந்து நிற்கும் இவ்வுரையும் சிற்சில இடங்களில் தன் காலத்தைப் பிரதிபலிப்பதாகவே இருப்பது புரிந்துகொள்ளக் கூடியதே (திருக்குறளும் இதற்கு விதிவிலக்கல்ல). ஆனால் பரிமேலழகரின் உரையில் “ஆரிய சதிவேலை”யைத் தோண்டித் துருவிக் கண்டுபிடித்துப் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருக்கும் இந்த உரையாளர்களுக்கு, அதை இன்னும் கொஞ்சம் நீட்டித்தால், அதே “ஆரிய சதிவேலை”யைத் திருக்குறளின் உருவாக்கத்திற்கே கூட மிக எளிதாகப் பொருத்திவிடலாம் என்ற அடிப்படைத் தர்க்கம் கூட புரியாமல் இருந்தது ஆச்சரியம் தான்! (திருக்குறளில் வேதநெறி பற்றிய பல குறிப்புகளை இந்தத் திண்ணைக் கட்டுரையில் காணலாம்)


திருவள்ளுவ நாயனார், திருமயிலை

இத்தகைய தர்க்க ஓட்டைகளை அடைப்பதற்கு, திருக்குறளில் வரும் சில சொற்களுக்கு இவர்கள் பொருள் கொள்ளும் விதம், உலக மொழியாராய்ச்சிகளின் ஓட்டைச் சித்தாந்தங்கள் (crack pot theories) எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு விடும்! ‘அமிழ்தம்’ என்பதன் பொருள் பாற்கடல் அமிர்தம் அல்ல, அது அம்மா ஊட்டும் “அம்ம”மாம். ஆனால் சங்கநூல் புறநானூற்றில் “இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும்..” என்று வருகிறது, சிலப்பதிகாரம் “அலையிடைப் பிறவா அமிழ்தே” என்கிறதே என்று ஒரு சாதாரண ஆள் கூடக் கேட்கலாம். ஆனால் அதற்கெல்லாம் திராவிட அகராதியில் பதில் கிடையாது. இதை இப்படியே நீட்டி “கருமம்” என்பதற்கு “கரு மம்மம்” அதாவது கரிய சோறு (வெள்ளைச் சோறு ஆரிய உணவு!) என்றும் தனித்தமிழ்ப் பொருள் தரலாம். திருக்குறளின் “வேள்வி”யும் “வேட்ட”லும், திராவிட உரைகளில் வேட்டைக் காரனில் இருந்து வேட்டி வரை என்ன வேண்டுமானாலும் ஆகலாம். சரி, புறநானூற்றின் “இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி” யாகம் தானே செய்தான் என்றால் அதற்கும் அதிர்ச்சிகரமான பல திராவிட உரைவிளக்கங்கள் வரலாம்! தேவர்களாக இருந்த “புத்தேளி”ரை திராவிடர்கள் “புதிய தேள்”களாகக் கூட ஆக்கி விடுவார்கள்! இந்த உரைகள் எழுதப்பட்ட காலத்தில், உலகத்திலேயே அதிக அளவு மொழிக் கோமாளிகள் தமிழ்நாட்டில் தான் இருந்திருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியும். இவர்களின் தலைவரை மொழிஞாயிறு என்றும் அழைத்து தமிழக அரசு கௌரவப் படுத்தியது. இன்றும் மெரீனா கடற்கரையில் அமாவாசை தினங்களில் நடு இரவில் சில பிசாசுகள் வந்து இதுபோன்ற தனித்தமிழ்ச் சொல்லாராய்ச்சிகள் செய்துகொண்டிருப்பதாகக் கேள்வி.

“செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென” என்னும் மணிமேகலையையும் “ஊரவர் கவ்வை எருவாக, அன்னைசொல் நீர்மடுத்து” என்ற திருவாய்மொழியும் போன்று, திருக்குறளின் சொற்களையும், பொருள்களையும் அதற்குப் பின்வந்த பல நூல்கள் பல இடங்களில் நேரடியாகவே எடுத்தாண்டுள்ளன. அதனால் திருக்குறளில் புழங்கும் இத்தகைய பழம்சொற்கள் ஏதோ உறைந்து கிடந்ததாக எண்ணி, அவற்றுக்குப் “புதுமைப்” பொருள் கூற முயன்ற செயல், இத்தகைய உரையாளர்களின் இலக்கிய, மொழியியல் அறியாமையையே காட்டுகிறது. கி.வா. ஜகன்னாதன் பதிப்பாசிரியாராக இருந்து கொணர்ந்த “திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு” ஒவ்வொரு குறளுக்கும், இத்தகைய மேற்கோள்களைத் தேடித் திரட்டித் தொகுத்திருக்கின்றது (இந்த நூல் பற்றிய எனது திண்ணைப் பதிவு)

மொத்தத்தில், திராவிட இயக்கம் நிகழ்த்த முயன்ற இந்தக் கலாசார அழிப்பு வேலையில் தமிழரின் உன்னத அறிவுக் கருவூலமான திருக்குறளும் தப்பவில்லை என்பதையே ஒரு இரங்கற்பா போன்று அந்தக் கட்டுரை சொல்லிச் செல்வதாக எனக்குத் தோன்றுகிறது.

7 comments:

சுழியம் said...

வீரவேல் ! வெற்றி வேல் !

மிக அழகான, அமைதியான கட்டுரை.

தெளிவான வாதங்கள்.

ஜடாயுவின் கட்டுரைகளைப் படிப்பதே மகிழ்ச்சியான் அனுபவம்.

எம்பெருமானே, இப்படிப்பட்ட அறிஞருக்கும், அவருக்குப் பிரியமானவர்களுக்கும் அனைத்து வளங்களையும் மேலும் மேலும் அளிப்பாயாக.

வந்தே மாதரம் !

Anonymous said...

ஜடாயு, பாவாணரின் சில கருத்துக்கள் பிழையே! (ஆனால் அதையும் அக்கால விஞ்ஞான அறிவின் அடிப்படையில் பார்க்க வேண்டும், அதை இக்கால விஞ்ஞான அறிவின் அடிப்படையில் பார்க்க கூடாது. உதாரணம் - குமரி). ஆனால் அதற்காக அவரின் அணைத்து தமிழ் ஆராச்சியையும் பிழையென சொல்லல் அகாது.

ஜடாயு said...

சுழியம் ஐயா, தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

ஜடாயு said...

// அதற்காக அவரின் அணைத்து தமிழ் ஆராச்சியையும் பிழையென சொல்லல் அகாது. //

அனானி, தேவநேயப் பாவாணரது தமிழ் "ஆராய்ச்சி" முழுவதுமே ஒரு சட்டகத்தை வைத்துக்கொண்டு அதற்குத் தேவையான ஆதாரங்கள் இருப்பதாகக் காட்டுவதாகத் தானே இருந்தது. அதில் புலமை, நேர்மை, உண்மையறியும் ஆவல் எங்கே இருந்தது?

லெமூரியா, குமரிக்கண்டம் முற்றிலும் எந்த ஆதாரமும் அற்றது என்றூ நிரூபிக்கப்பட்டுவிட்டதாக நீங்களே கூறுகிறீர்கள். ஆனால் அவர் எழுதிய எல்லா நூல்களிலும் இந்த விஷயத்தை அடிப்படையாக வைத்துத் தான் மற்ற எல்லாவற்றையுமே நிறூவ முயல்கிறார் - தமிழ் உலகின் முதல் மொழி, தமிழில் இருந்து சம்ஸ்கிருதத்திற்குச் சென்ற சொற்கள், தமிழ் மன்னரை 2000 வருடம் முன்பு "அடிமை"ப் படுத்திய ஆரியர் இத்யாதி இத்யாதி. முதல் கோணல் முற்றும் கோணல்.

இன்றைக்கு நாம் தமிழிலக்கியம் என்று போற்றும் எதுவுமே லெமூரியர்களால் எழுதப் பட்டது கிடையாது, தொல்காப்பியம்,திருக்குறள், சங்க இலக்கியம் எதுவும். எல்லாமே ஆரியசதி.ஆனால் இந்த இலக்கியங்கள் தான் தமிழின் பெருமைக்குக் காரணம் !!! இதை self defeating logic என்று சொல்வார்கள்.

அவர் ஆங்கிலத்தில் எழுதிய The Primary Classical Language of the World என்ற நூலைப் படித்த எனது நண்பரான ஒரு மதிப்புக்குரிய பேராசிரியர் அதிர்ந்து போனார். இதையெல்லாம் கூட ஆராய்ச்சி என்று தமிழ்நாட்டில் கொண்டாடுகிறார்களா என்று அதிசயித்தார். language clown என்று அவர் குறிப்பிட்டதைத் தான் "மொழிக்கோமாளி" என்று இங்கே எழுதியிருக்கிறேன்.

அந்த நூலின் முன்னுரையில் சில வரிகள் -

There is no other language in the whole world as Tamil, that has suffered so much damage by natural and human agencies, and has been done so much injustice by malignant foreigners and native dupes....

(இது உண்மை என்றால் எப்படி இந்த 2000 வருடத்தில் உலகம் போற்றும் இலக்கியம் தமிழில் வளர்ந்தது?)

Tamil is a highly developed classical language of Lemurian origin, and has been, and is being still, suppressed by a systematic and co-ordinated effort by the Sanskritists both in the public and private sectors, ever since the Vedic mendicants migrated to the South, and taking utmost advantage of their superior complexion and the primitive credulity of the ancient Tamil kings, posed themselves as earthly gods (Bhu-suras) and deluded the Tamilians into the belief, that their ancestral language or literary dialect was divine or celestial in origin.

Anonymous said...

ஜடாயு, அவருடைய குமரி கூற்று, முதல் மொழி மற்றும் சமஸ்கிரத பார்வை ஆகியவற்றை தவிர்த்து அவருடைய சொல்லாராச்சியை பார்க்க வேண்டும். அப்படி தான் நான் பார்க்கிரேன், அப்படி பார்த்தால் அவருடைய சொல்லாராச்சிகள் சிறந்தவையே.

ஒருமுறை அண்ணல் காந்தி கப்பலில் செல்லும் போது ஒரு பிரிதானியர் அவரிடம் ஒரு பைபிலை கொடுத்தார், காந்தி அந்த பைபிலில் இருந்த ஒரு குண்டூசியை மட்டும் எடுத்து விட்டு பைபிலை குப்பை தொட்டியில் போட்டதாக வரலாறு. இப்படி தான் அவருடைய சொல்லாராச்சியை பார்க்க வேண்டும். பிழைகளை தவிர்த்து நல்லவற்றை ஏற்க வேண்டும். ஒருவருடைய ஒரு கருத்தை நாம் பிழைப்பதற்காக எல்லாவற்றையும் ஒதுக்ககூடாது.

1950' "Plate Tectonics" இருக்கவில்லை அதனால் பொதுவாக குமரி கண்டம் இருந்தது ஆக விஞ்ஞானத்தால் நம்பப்பட்டது. இப்போது "Plate Tectonics" முலம் கண்டம் தாழ்வது முடியாத காரியம் என விஞ்ஞானம் கண்டரிந்துள்ளது. ஆகவே அவரது குமரி கருத்துகளை அக்கால விஞ்ஞான அறிவின் அடிப்படையில் பார்க்க வேண்டும், அதை இக்கால விஞ்ஞான அறிவின் அடிப்படையில் பார்க்க கூடாது. இது ஒரளவு அவரது சிந்து நாகரிக கருத்துகளுக்கும் பொருந்தும்.

Anonymous said...

ஜடாயு, மேலே நான் சொன்னதுபோல் பாவாணர் பற்றிய உங்கள் கருத்தை தவிர உங்களது இந்த கட்டுரை அற்புதம். தமிழருக்கு இந்த பேய்களிடம் இருந்து விரைவாக விடுதலை கிடைக்கும் என நம்புவோம்.

ஜடாயு said...

// Anonymous said...
ஜடாயு, மேலே நான் சொன்னதுபோல் பாவாணர் பற்றிய உங்கள் கருத்தை தவிர உங்களது இந்த கட்டுரை அற்புதம். //

அனானி, நன்றி. தேவநேயப் பாவாணரின் அனைத்து நூல்களையும் நான் படித்ததில்லை. படித்த சில அதற்கு மேல் செல்லும் ஆவலை உண்டாக்காததால்.

தாங்கள் சொல்வது போன்று அவரது படைப்புகளில் சில பயனுள்ளவைகளும் இருக்கலாம் என்ற சாத்தியத்தை ஒத்துக் கொள்கிறேன்.

தங்கள் பொறுமையான புரிதலுக்கு மீண்டும் நன்றிகள்.