Thursday, May 08, 2008

ஒரு மணப்பெண்ணும், தேவதைகளும், திராவிட பகுத்தறிவும்

திராவிட இயக்கத்தைச் சேர்ந்த வெறியர்கள் இந்து சடங்குகளையும், நம்பிக்கைகளையும் கண்மூடித்தனமாக வசைபாடுவது தெரிந்த விஷயம் தான். சில சமயங்களில் பித்தம் தலைக்கேறி ஏதாவது ஒரு வேதமந்திரத்தையோ அல்லது வேத இலக்கியத்தில் உள்ள படிமத்தையோ எடுத்துக் கொண்டு, அதற்குப் “பொருள் கூறி” அது உலகத்திலேயே அருவருப்பான விஷயம் என்றெல்லாம் பிரசாரம் செய்வார்கள்.

உதாரணமாக, பாணிக்ரஹணம் எனப்படும் கைத்தலம் பற்றும் சடங்கின் போது மணப்பெண்ணை நோக்கிச் சொல்லப் படும் ஒரு மந்திரம்:

सोम: प्रथम: विविदे गन्धर्वो विविद उत्तर: ॥
तृतीयो अग्निस्ते पति: तुरीयास्ते मनुष्यजः ॥

ஸோம: ப்ரதம: விவிதே கந்தர்வோ விவித உத்தர:
த்ருதீயோ அக்னிஸ்தே பதி: துரீயாஸ்தே மனுஷ்யஜ:
(ரிக்வேதம் 10.85.40)


“முதலில் சோமனும், இரண்டாவதாகக் கந்தர்வனும், மூன்றாவதாக அக்னியும் உன்னை சுவீகரித்தனர். பெருமைக்குரிய தேவர்களால் சுவீகரிக்கப் பட்ட உன்னை, இறுதியாக மனிதனாகிய நான் வரிக்கிறேன்”

பார்ப்பனர்களின் இந்த மந்திரம் பெண்மையை இழிவு செய்கிறது, இழிவான பெண்ணை தூய்மைப் படுத்துவது என்பது தான் இதன் பொருள் என்று ஒரு அவதூறு. “மூன்று பேர் மணந்த பென்ணை நாலாவதாக மணக்கிறேன் என்று சொல்கிறான், எந்த மானமுள்ள ஆண்மகனாவது இப்படிச் செய்வானா?” என்பது “கற்பு என்பதே ஒரு பொய்க் கற்பிதம்” என்று பேசுவதாகச் சொல்லிக் கொண்ட இந்த இயக்கத்தின் இன்னொரு அவதூறு.

முதலில் இந்த மந்திரத்தின் தாத்பர்யம் என்ன? பிறந்தது முதல் தேவர்களின் ஆசிர்வாதத்தாலும், அனுக்ரஹத்தாலும் வளர்ந்த பெண்ணை, அவர்கள் ஆசியுடன் மனிதன், அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஏற்றுக் கொள்வது என்பது.

எல்லா வேதமந்திரங்களையும் போல, இதிலும் “தேவர்கள்” என்பவர்கள் ஆசாமிகள் அல்லர். அகமும், புறமும் உள்ள தெய்வ சக்தியின் குறியீடுகள். “சோமன்” என்பது எல்லா உயிர்களிலும் அடங்கியிருக்கும் பரம்பொருளின் ஸ்வரூபமான ஆனந்தம் என்ற தத்துவத்தைக் குறிப்பது, கந்தர்வன் என்பது மனத்தில் காமம் என்ற விதையை ஊன்றும் இச்சா தத்துவம். அக்னி என்பது தெய்வீக சக்தி ஓங்கி வளர்ந்து தன் உன்னத நிலையை எய்துவதன் குறியீடு. இந்த தெய்வ சக்தியே இகம்,பரம் என்ற இரண்டு விதமான சுகங்களையும் நோக்கி மனிதனை இட்டுச் செல்கிறது.

இதை ஒரு அழகிய கவிதையாகக் கண்டு அனுபவிக்கவும் இடமிருக்கிறது,

“சிறுமியாக இருக்கையில் முதலில் நீ நிலவைக் கண்டு மையல் கொண்டாய்
பின்னர் மேகங்களில் வழிந்தோடும் இசையில் மனம் பறிகொடுத்தாய்
பின்னர் ஆசைத் தீ உன்னைப் பற்றியது.
ஓ பெண்ணே
நான்காவதாக மனிதனாகிய நான் உன்னை வரிக்கிறேன்.
ஏற்றுக் கொள்.”

சோமன், நிலவு, மனம், ஆனந்தம் இவை அனைத்தும் வேதப் படிமத்தில் தொடர்புடையவை. கந்தர்வர்கள், இசை, கலைகள், மேகங்கள் இவையும்.

தத்துவமும், கவித்துவமும் ததும்பும் அழகிய மொழியில் சொல்லப் பட்ட இந்த மந்திரத்தில் அருவருப்பைக் காணும் திராவிட பகுத்தறிவு ஒருவிதமான மனப்பிறழ்வு நிலை என்று தான் கூற வேண்டும்.

பெண் இழிவானவள் என்று கூறவந்தால் தேவர்கள் அவளைத் தள்ளினார்கள் என்றல்லவா இருக்கவேண்டும்? ஆனால் இங்கே ஸ்வீகரித்தார்கள் என்று வருகிறது. மேலும் இந்த ஒற்றை மந்திரத்தை வைத்து ஒன்றும் சொல்ல முடியாது. திருமணச் சடங்கில் உள்ள எல்லா மந்திரங்களும் பெண்ணை மிக உயர்வாகக் கூறுகின்றன.


“பெண்ணே, அர்யமாவும் பகனும் உன்னை ஆசிர்வதிக்கட்டும், என் குலம் விளங்க வரும் வரப்பிரசாதம் நீ”

“வேதத்தை அறிந்த பகன் முதலியோர், இல்லறம் என்ற புனிதமான விரதத்தை ஏற்றனர். உன் கரம் பிடித்த நானும், அந்த வம்சத்தைச் சேர்ந்தவனானேன்.”

“ஏழு அடிகள் என்னுடன் நடந்துவந்த நீ என் உயிர்த் தோழியாகி விட்டாய். நீ ரிக், நான் சாமம். நீ பூமி, நான் ஆகாயம். நீ சொல், நான் பொருள். நீ ஆத்மா, நான் மனம். இனிய சொற்களை உடையவளே, என்னைப் பின் தொடர்ந்து வந்த நீ என் வம்சத்தை விருத்திசெய்வாய்”

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

சில வருடங்கள் முன்பு, சேலத்தில் அதிகமாக வசிக்கும் ஒரு சமூகத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். திருமணத்திற்கு முந்தைய நாள் நிச்சயதார்த்தத்தின் போது ஒரு சடங்கு. சமூகப் பெரியவர் நடுவில் வந்து அமர்ந்தார். மணமகன், மணமகள் வீட்டார் இருபுறமும். சடங்கு ஆரம்பித்தது. மணமகனின் தந்தை மகளின் தந்தையிடம் ஒரு ரூபாய் கொடுத்தார், அதை அவர் மகளின் தாயிடம் கொடுத்தார், பெரியவர் சொன்னர் “இது மகளைப் பெற்று வளர்த்ததற்காக”. அடுத்தது இன்னொரு ரூபாய், “இது பாலூட்டியதுக்காக”. அப்புறம் ஒரு ரூபாய் “இது சீராட்டியதற்காக”. இப்படி ஒரு பதின்மூன்று ரூபாய் வரை போயிற்று. இந்தப் பரிமாற்றம் முடிந்ததும் பத்திரிகை வாசிக்கப் பட்டது. பக்கத்தில் இருந்த பெரிசு ஒருவர் “அந்தக் காலத்தில பதிமூணு பணம் அப்படின்னு குடுப்பாங்க, பெரிய தொகை அது.. மகளைப் பெத்துத் தந்ததுக்கான கடனைத் தீர்க்கணும் இல்லையா” என்று பேசிக் கொண்டிருந்தார்.

கிறிஸ்தவ திருமண நிச்சயதார்த்தங்களில், மணப்பெண் கையில் அணியும் மோதிரம் எதைக் குறிக்கிறது? அவள் முதலில் கர்த்தருக்கு மணமுடிக்கப் பட்டு பின்பு மனிதனுக்கு மனைவியாக வருகிறாள் என்று சொல்லுவார்கள். கிறிஸ்தவ கன்யாஸ்தீரிகள் தங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளும் சடங்கின் போது ஏசுவின் மணமகள்கள் (Brides of Jesus) ஆவதாகவே கூறுவார்கள்.

இது போன்ற பல சடங்குகள் தமிழ்நாட்டின் பல சமூகங்களின் திருமணங்களில் உள்ளன. இதில் எல்லாம் எந்த அருவருப்பும் தென்படவில்லையா? ஆரிய, வந்தேறி குணங்கள் எதுவும் தென்படவில்லையா? பகுத்தறிவுப் பகலவனுக்கே வெளிச்சம்.

(இணையத்தில் பதிப்பிக்கப் படாத எனது பழைய கட்டுரை ஒன்றின் மீள்பதிவு இது)

3 comments:

கால்கரி சிவா said...

//இது போன்ற பல சடங்குகள் தமிழ்நாட்டின் பல சமூகங்களின் திருமணங்களில் உள்ளன. இதில் எல்லாம் எந்த அருவருப்பும் தென்படவில்லையா? ஆரிய, வந்தேறி குணங்கள் எதுவும் தென்படவில்லையா//


நல்ல கேள்விகள் ஜடாயு. பதில் வராது. திராவிட பெண்களின் நிலை என்ன சற்று பார்த்தால் ஆயாசமாக இருக்கும். இந்த திராவிடர்கள் பெண்களை போகப் பொருளாகத்தான் பார்க்கிறார்கள். பலபெண்களை மணப்பது, மனைவியின் தங்கைகளை காமக் கண் கொண்டு பார்ப்பது திராவிடர்களின் வாடிக்கை. இத்தகைய கயவர்களிடமிருந்து பதில் வருமென்றா நினைக்கிறீர்கள்?

Anonymous said...

Wearing ring during christian marriages is just for identification. Depending on the local culture ring or chain may be used. In fact this is just a custom and is not mandatory. Do not spit venom by saying that the bride is wedded to God.

ஜடாயு said...

// Do not spit venom by saying that the bride is wedded to God. //

Anon, it is a Christian friend of mine who had told me of such a belief. Maybe it is there is some sect/group.

Anyway, nuns calling themselves as "brides of Jesus" is a well known custom and has a great spiritual significance.

Please note that I did not call any of these Christian beliefs as bad or uncultured. Being a religious Hindu, I can only appreciate the beauty of such rituals, not abuse them.

My only point of mentioning this was to expose the clear anti-Hindu bias of DK movement which was clothed in the name of "rationality".