Thursday, February 15, 2007

யார் தமிழ் எதிரி? எவர் தமிழ் உணர்வற்றவர்?

கலாம் சமஸ்கிருதம் பற்றிய பதிவில் தனித்தமிழ் நடை குறித்து நான் சொன்ன ஒரு கருத்தை வைத்துப் பலரும் கும்மியடிக்கக் காண்கிறேன். என் தமிழ் உணர்வும், தமிழ்ப்பற்றும் பற்றி எனது பதிவுகளையும், இதற்கு முன் திண்ணையில் எழுதிவந்தவற்றையும் படித்தவர்கள் நன்கு அறிவார்கள்.

முதலில் நான் தமிழில் நல்ல கலைச்சொற்களை அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு எதிரானவனில்லை, ஆரவாரமில்லாமல் இத்தகைய சொற்களைப் பயன்படுத்தி வழிகாட்டி வருபவன். (உதாரணமாக, பத்ரியின் சம்ஸ்கிருதம் பற்றிய பதிவில் cryoptology என்பதற்கு நான் முதலில் பயன்படுத்தியிருந்த "குறியீட்டு இயல்" என்ற சொல்லே வந்தது கண்டு மகிழ்ந்தேன்). ஆனால் அதே நேரம் தமிழ்ப்படுத்துகிறேன் என்று பல பெயர்ச்சொற்களை தமிழில் படுத்தும் போக்கை ஏற்காதவன். ஸ்டாலின் என்ற பெயரை இசுடாலின் என்று இங்கே ஒருவர் எழுதுகிறார். இதே போக்கில் ஸ்விட்ஸர்லாண்ட் என்பதற்கு இசுவிச்சர்லந்து என்பதையும் ஸ்பெய்ன் என்பதற்கு இசுபெயின் என்பதையும் என்னால் (கொஞ்சமாவது பொதுப் புத்தியும், அழகியல் பற்றிய பிரக்ஞையும் உள்ள யாராலும்) ஏற்க முடியாது. நான் சொல்ல வந்தது இதைத்தான். தமிழைக் குறித்தோ அதன் தொன்மை குறித்தோ எந்த விமர்சனத்தையும் நான் வைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட 'புனிதப் பசு" பதிவர் ஒருவரது புரியாத நடையைக் கொடுந்தமிழ் நடை என்று சொன்னது மாத்திரம் தான் நான் செய்தது.

இதே அடிப்படையில் தமிழில் இயல்பாகப் புழங்கும் சம்ஸ்கிருதச் சொற்களை வேண்டுமென்றே நீக்கி, அபத்தமான “தனி”த் தமிழ் என்பதாக எழுதுவதையும் எதிர்க்கிறேன். திரு. பத்ரி அவர்களும் இதில் என்னுடன் உடன்படுகிறார்.

இன்றைய காலகட்டத்தில், இந்த வக்கிரமான தனித் தமிழ் கருத்தை தூக்கிப் பிடிக்கும் எண்ணத்தின் பின்னால் ஒளிந்திருப்பவை இந்தத் தவறான புரிதல்கள் தான் -


  • சம்ஸ்கிருதமும், தமிழும் ஒன்றுக்கொன்று எதிரிகள். அவற்றுக்கு இடையே வரலாற்று ரீதியான மோதல் உள்ளது.
  • வட இந்தியர்கள் மற்றும் சம்ஸ்கிருதத்தை எதிர்க்காத அல்லது உயர்வாக மதிக்கும் எல்லா சாதிகளையும் சேர்ந்த எல்லா இந்தியர்களும் பார்ப்பனர்கள். தமிழ் எதிரிகள், துரோகிகள், தமிழர்களை அடிமைப் படுத்தத் துடிப்பவர்கள். (இதன் ஆணிவேர் ஆரிய திராவிட இனவாதத்தில் உள்ளது).
  • சம்ஸ்கிருதம் பிராமணர்களின் மொழி. அதில் நல்லது என்று எதுவுமே இல்லை. அது தீயது. அது அரக்கன். அது பாம்பு.

இவை அனைத்தும் எவ்வளவு பெரிய அண்டப் புளுகுகள், இந்திய தேசிய சிந்தனைக்கு எதிரானவைகள், தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கே எதிரானவைகள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. மொழிப் பாதுகாப்பின்மை பற்றிய ஒரு கேவலமான தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி அதில் கொஞ்ச காலம் வெற்றிகரமாகக் குளிர் காய்ந்த அரசியல் கொள்கைகளின் எச்சங்கள் தான் இவை. இவற்றின் காலம் மலையேறிவிட்டது என்று எல்லாத் தமிழர்களும், குறிப்பாக ஒருங்கிணைந்த, வலுவான இந்திய தேசியத்தின் ஊக்கத்தால் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் உயர்ந்த நிலை அடைந்திருக்கும் தமிழர்கள் உணர வேண்டும். உரத்துச் சொல்ல வேண்டும்.

இரண்டாயிரம் ஆண்டு தமிழ் இலக்கியத்தின் பாரம்பரியத்திற்கே எதிரானது இந்த “தனித் தமிழ்” ஜல்லி. தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலம்பு, திருக்குறள், கம்பராமாயண காலத்திலிருந்து இந்த நூற்றாண்டு வரை ஒரு உயிர்த் துடிப்புள்ள மொழி செய்துவரும் அற்புதமான பரிசோதனைகளின் பரிமாணங்கள் தான் சம்ஸ்கிருத மற்றும் பிற மொழிச் சொற்களின் இயல்பான கலப்புகள். இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாதவர்கள் குருட்டுத் தனமான மொழித் தீவிரவாதிகளே அன்றி மொழியை வளர்ப்பவர்கள் அல்லர்.

என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கி வந்துள்ள பின்னூட்டங்களைப் புறக்கணித்து சில எதிர்க்கருத்துக்களுக்கு மட்டும் இங்கே பதில் சொல்கிறேன். இந்த அரிய தகவல்களில் சிலவற்றை எனக்கு அருளி உதவிய சான்றோர் ஒருவருக்கு நன்றியுடன் கடமைப் பட்டுள்ளேன்.

சம்பந்தர்:

தமிழன் என்பவர் எழுதுகிறார்:

"திருஞானசம்பந்தப் பெருமானே தமிழில் வடமொழி ஆதிக்கத்தைக் கண்டு வெறுப்படைந்தவர்தான். தன்னைப் பல இடங்களில் தமிழ்ஞானசம்பந்தன் என்றே அழைத்துக் கொள்கின்றார்.தனக்கு பூணூல் அணிவித்தபோது கூட காயத்திரி மந்திரம் வேண்டாம் என்று தமிழிலே சைவ வாழ்த்து பாடச்சொல்கிறார்."

இது எப்படி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய், திரிபுவேலை என்று பார்ப்போம். திருஞானசம்பந்தருக்குப் பூணூல் அணிவித்த சடங்கு முடிந்ததும் அங்கே வந்திருந்த வேத பண்டிதர்களுக்குப் பாடியதாகச் சொல்லப்படும் பஞ்சாக்கரப் பதிகத்தில் வரும் இந்தப்பாடல்:

மந்திரம் நான்மறை யாகி வானவர்

சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன

செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்கு

அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே

'நமசிவய' என்ற திருவைந்தெழுத்தே மந்திரங்கள் அனைத்திற்கும் மூலம் என்றும், தீ வளர்த்து ஓம்பியிருக்கும் வேதியர் முப்போதும் ஓதும் சந்தியாவந்தன மந்திரத்திலும் மூலமாயிருப்பது அதுவே என்கிறார். ஏனெனில் ஐந்துமுகம் கொண்ட வேதமாதாவான காயத்ரி தேவியே சதாசிவபத்னியான மனோன்மணி. காயத்ரி அஷ்டோத்திரத்திலே மனோன்மண்யை நம: என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. காயத்ரி தியான மந்திரத்தில் வரும் 'முக்தா, வித்ரும, ஹேம, நீல, தவளம்' என்ற இந்த ஐந்து வண்ணங்கள் பஞ்சபூதங்களையும் சதாசிவத்தையும் சுட்டுகின்றன. மாணிக்கவாசகர் சிவபுராணத்திலே 'நிறங்கள் ஓர் ஐந்துடையாய்' என்றதும் அதனால்தான். இதிலே காயத்ரி மந்திரம் வேண்டாம் என்று எங்கே சொல்கிறார்?




மேலும் 'திருஞானசம்பந்தர் வடமொழி ஆதிக்கத்தைக் கண்டு வெறுப்படைந்தவர்தான்' என்றொரு அடாத பொய்யைச் சொல்லி இருக்கிறார்.
இதையெல்லாம் மிசினரிமார்தான் இட்டுக்கட்டிச் சொல்வார்கள்.

பதிகத்துக்குப் பதிகம் இறைவனை வேத உருவாகக் கண்டவர் 'வேதநெறி தழைத்தோங்க' (சேக்கிழார் வாக்கு) வந்த திருஞானசம்பந்தர். வேதம் என்பதை “மெய்யறிவு” என்பதாக மட்டுமல்ல ரிக், யஜுர், சாம, அதர்வ வேதங்கள் என்ற பொருளிலேயே ஏராளமான பாடல்களில் பாடியுள்ளார் –

“வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாக.. “
“வேதமொடு ஆறங்கம் ஆயினானை.. “
“சாகை ஆயிரம் உடையார்.. “ (ஆயிரம் கிளைகள் உள்ள “ஸஹஸ்ர சம்ஹிதா” என்று ரிக்வேதத்தை குறிப்பிடுவார்கள்)

திருமூலர்:

சம்ஸ்கிருத ஐம்பது எழுத்துக்கள் அடிப்படையில் ஒலிக்குறிப்புகளாகும். இவை பலவித சேர்க்கையில் (combination) அண்டசராசரங்களின் தோற்றத்திற்கும் அடிப்படையாகும். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் ஐந்தெழுத்தின் சூட்சுமத்தையும் புரிந்து கொள்ள முடியும் என்று பாடுகிறார் திருமூலர்.

ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின்
ஐம்பது எழுத்தும் ஐந்தெழுத் தாமே


வள்ளலார்:

வள்ளலாரது திருவடிப் புகழ்ச்சியின் பாடல்களில் பல முழு சம்ஸ்கிருதத்தில் உள்ளன என்று சொல்லியும் சில மூடர்கள் அவர் சம்ஸ்கிருத வெறுப்பாளர் என்று இன்னும் வாதிடுகின்றனர். அந்த நூலின் முதற்பாடல் இதோ –

பரசிவம்சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம்

பரசுகம் தன்மயம் சச்சிதா னந்தமெய்ப் பரமவே காந்தநிலயம்

பரமஞா னம்பரம சத்துவம கத்துவம் பரமகை வல்யநிமலம்

பரமதத் துவநிரதி சயநிட்க ளம்பூத பௌதிகா தாரநிபுணம்

பவபந்த நிக்ரக வினோதச களம்சிற் பரம்பரா னந்தசொருபம்

பரிசயா தீதம்சு யம்சதோ தயம்வரம் பரமார்த்த முக்தமௌனம்

படனவே தாந்தாந்த மாகமாந் தாந்தநிரு பாதிகம் பரமசாந்தம்

பரநாத தத்துவாந் தம்சகச தரிசனம் பகிரங்க மந்தரங்கம்

பரவியோ மம்பரம ஜோதிமயம் விபுலம் பரம்பர மனந்தமசலம்

பரமலோ காதிக்க நித்தியசாம் பிராச்சியம் பரபதம் பரமசூக்ஷ்மம்

இதில் மெய் என்பது தவிர அத்தனையும் செஞ்சம்ஸ்கிருதச் சொற்கள். அற்புதமான ஞான, யோக தத்துவங்கள் அடங்கிய இந்த நூலை இங்கே படிக்கலாம்.





சன்மார்க்கம், சமரசம், அத்துவிதம் போன்ற வடசொற்களைத் தவிர்த்து தனித்தமிழில் அமைக்குமாறு சிலர் சொல்ல 'நிறைமொழி மாந்தர் ஆணையிற்' பிறந்த எல்லாம் மறைமொழிகள்தாம். அதில் மொழி பேதமில்லை, மாற்ற முடியாது என்று வள்ளலார் சொன்னார் என்று படித்திருக்கிறேன்.

இப்போது வள்ளலாரே சமஸ்கிருதச் சொற்களின் கலப்பைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

சன்மார்க்கம் என்ற அடிப்படைக் கலைச்சொல் ஒன்று. அதனோடு இணைக்கும் சமரசம், சுத்தம் என்பனவாகிய சொற்கள். இத்தகைய சொற்களை வள்ளலார் உண்டாக்கவில்லை. இவைகளையெல்லாம் வடமொழி எனத் தள்ளிவிட்டு, பழகுதமிழில் இக்கொள்கையை அமைத்திருக்கலாமே என்பது சிலரின் ஆசை.

மெய்ப்பொருளியற் கலைச்சொற்கள் மக்களாலோ, ஒரு இனத்தாராலோ உண்டாக்கப் பெற்றவை அல்ல. பரநாதத் தலத்தே விளங்கும் பரநாதம், பரவிந்து என்ற இரண்டும் இணைய அவ்விணைப்பின் மூலம் (அனந்த தாத்பர்யங்களை உள்ளடக்கி) பல்வேறு பொருள் நிலைகளை உள்ளடக்கி எழுந்த சொற்களே அவை ஆதலின் அவைகளை மாற்றுதல் இயலாது என்று குறிப்பிடுகிறார். அவைகள் வடமொழிச் சொற்கள் அல்ல, வடலுறு சொற்கள் என்பது வள்ளலார் வழக்கு.

ஆதாரம்: சிதம்பரம் இராமலிங்கரின் சித்திவளாகம் - பக்கம் 26/27.

இந்தப்புத்தகம் வள்ளலாரின் வலைத்தளத்திலேயே இருக்கிறது.

வடலுறு சொற்கள்: வடக்குத் திசையிலிருந்து இங்கே கொண்டு வரப்பட்டவை அல்ல; ஆலவிதை போன்ற பீஜமான சொற்கள்.
வடம் என்றால் ஆலமரம்.

தொழுவூர் வேலாயுத முதலியார்:

சமஸ்கிருதம் ஏதோ பிராமணர்களின் தனிச்சொத்து தனிமொழி என்றொரு பிம்பத்தை உருவாக்கி அதை அழித்துக் கொண்டிருப்பது சமீபத்தில்தான். 19' ம் நூற்றாண்டு வரை சமஸ்கிருதத்தை அனைத்து சாதியினரும் கற்றுத் தேர்ந்திருந்தனர். இதற்குச் சான்றாக சமீபத்தில் என் நண்பர் ஒருவர் மூலம் கிடைத்த ஓர் அரிய புத்தகத்தைக் கீழே பாருங்கள்:






சங்கரவிஜயம் என்ற இந்தப் புத்தகத்தை 1879'ம் ஆண்டில் சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்த்திருப்பவர் தொழுவூர் வேலாயுத முதலியார். வெளியிட்டவர் தண்டலம் ஆறுமுக முதலியார். இந்த தொழுவூர் வேலாயுத முதலியார் சமரச சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்த முன்னோடிகளில் ஒருவர். வள்ளலாருக்கு மிக அணுக்கமானவர். சிதம்பரம் ராமலிங்கம் என்றே தம்மை அழைத்துக் கொண்டவரை வள்ளலார் என்று பெயரிட்டு அழைத்தவரும் இவர்தான்.

வெங்கட் சாமிநாதன் முன்பு சிஃபி.காமில் ஒரு கட்டுரையில் வருந்தியிருந்தார் – “தமிழ் இங்கு வளர்க்கப் படவில்லை, வெறுமனே தமிழ் கோஷப் படுத்தப் பட்டுள்ளது என்று”. ஒரு குறிப்பிட்ட கூட்டத்தின் இந்த எதிர்வினைகள் அதை உண்மையென்று நிரூபிக்கின்றன.

தமிழ் கோஷப் படுத்தப் பட்டது மட்டுமல்ல, வேஷப் படுத்தவும் பட்டுள்ளது. அதனால் நாசப் படுத்தப் படுகிறது. அதைச் செய்பவர்கள் தான் தமிழ் எதிரிகள். தமிழ் உணர்வு இல்லாதவர்கள்.

Saturday, February 10, 2007

சம்ஸ்கிருதம் பற்றி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உரை

மந்திராலயத்தின் அமைதி தவழும் சூழலில் ஸ்ரீகுரு சார்வபௌம சம்ஸ்கிருத வித்யாபீடத்தின் மாணவர்களுடன் உரையாடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். உங்கள் 7, 8 அல்லது 12 வருட பயிற்சியை முடித்த பின்னர் நீங்கள் என்னவாகப் போகிறீர்கள்? ஒரு சிறந்த ஆசிரியராக. நீங்கள் ஆசிரியப் பணிக்கு வேண்டிய தகுதிகளைத் தேடி அடைந்து ராகவேந்திர சுவாமியின் மரபினை முன்னெடுத்துச் செல்லவேண்டும். நீங்கள் எங்கிருந்தாலும், என்ன காரியங்கள் செய்தாலும், பக்தர்கள் உங்களை குரு என்பதாகப் பாவிப்பார்கள். அத்தகைய குருவுக்கான அடிப்படை இந்தக் கல்வி நிலையத்திலிருந்து வருகிறது. நீங்கள் வரும் வருடங்களில் ஆற்றப் போகும் மேன்மையான பணிகளுக்காக உங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களைப் பாராட்டுகிறேன். உங்களுடன் இருக்கையில், ராகவேந்திர சுவாமிகளின் மூல மந்திரத்தை ஓத விரும்புகிறேன்.

"பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்யதர்ம ரதாய ச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே"


சத்தியத்தையும், நன்னடத்தையாகிய தர்மத்தையும் கடைப்பிடித்தவரும், உபதேசித்தவரும் ஆன தெய்வீக ஆத்மாவாகிய குரு ராகவேந்திரசுவாமியைப் போற்றுகிறோம். அவரது "கல்ப விருட்சம்" (அளவற்ற செல்வம் தரும் கற்பக மரம்) என்னும் திருப்பெயரை ஓதுகிறோம்; ஆன்ம ஞானத்தை வாரி வழங்கும் காமதேனுவாகிய அவர் முன் வீழ்ந்து வணங்குகிறோம்.





சம்ஸ்கிருத அறிஞர்களுடன் என் அனுபவம்:

தொடக்கப் பள்ளியிலும், செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் இரண்டு உயர்ந்த ஆசிரியர்களை நான் கண்டிருக்கிறேன். எனது தொடக்கப் பள்ளி அறிவியல் ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர் ஒரு சம்ஸ்கிருத அறிஞர். ஒவ்வொரு நாளும் அவர் மூன்றுமுறை சந்தியாவந்தனம் செய்வார், பாகவதம் படிப்பார். எனக்கு காம்ப்ளெக்ஸ் எண்கள் கோட்பாடுகளைக் கற்றுத் தந்த பேராசிரியர் தோதாத்திரி ஐயங்காரும் ஒரு சம்ஸ்கிருத அறிஞரே.
இந்த இரண்டு உயர்ந்த ஆசிரியர்களுக்கும் அடிப்படை கணிதமும், அறிவியலும். ஆனால் அவர்களது வாழ்க்கையை செதுக்கியது சம்ஸ்கிருத புலமை. இயற்கை வேளாண்மை உட்பட பல விஷயங்கள் பற்றி சம்ஸ்கிருதத்தில் தீவிர ஆராய்ச்சி செய்து வரும், கர்நாடகத்தில் உள்ள மேல்கோடே சம்ஸ்கிருத அகாடமியைச் சேர்ந்த டாக்டர் லட்சுமி தாத்தாச்சாரையும் சமீபத்தில் சந்தித்தேன். இப்படி பல செல்வங்கள் அடங்கியது சம்ஸ்கிருதம். இந்த சம்ஸ்கிருத வித்யாபீடம் இந்த பெருமைமிக்க மொழியைப் பேணிப் பாதுகாக்கிறது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

சம்ஸ்கிருதத்தின் பெருமை:

நான் சம்ஸ்கிருத நிபுணன் இல்லை. ஆனால் என் நண்பர்களில் பலர் சம்ஸ்கிருதத்தில் புலமை உள்ளவர்கள். நமது பண்டைய சம்ஸ்கிருத நூல்களில் உள்ள அறிவுச் செல்வங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதில் பல நாடுகள் முனைந்திருக்கின்றன. வேதங்களைப் பற்றிய ஆராய்ச்சி அவசியம். குறிப்பாக மருத்துவம், விமான அறிவியல், அடிப்படைப் பொருட்கள் பற்றிய அறிவியல் மற்றும் தொடர்புள்ள துறைகள் பற்றி அதர்வ வேதத்தில் பல முக்கிய விஷயங்கள் உள்ளன. சம்ஸ்கிருதம் சரளமாகப் பயன்படுத்தப் படும் இன்னொரு துறை குறியீட்டு இயல் (cryptology).

சம்ஸ்கிருத வித்யாபீடம் செய்யவேண்டியவை:

தனது கல்விப் பணிகளோடு கூட சம்ஸ்கிருத வித்யாபீடம் நாட்டின் பல பகுதிகளில் சிதறியிருக்கும் சம்ஸ்கிருத இலக்கியங்களைக் கண்டுபிடித்து அவற்றை ஆவணப்படுத்தல், பாதுகாத்தல் ஆகிய பணிகளிலும் ஈடுபடவேண்டும். இதற்காக, இந்த நூல்களை ஒளி,ஒலி ஊடகங்களில் பதிவு செய்யும் தொழில்நுட்பத்தின் உதவியோடு ஒரு டிஜிட்டல் நூலகம் போன்று உருவாக்கினால், பல தலைமுறைகளுக்கும், நீண்ட காலங்களுக்கும் இந்தச் செல்வத்தைப் பாதுகாக்கலாம். இதற்காக இந்த நிறுவனம், டிஜிட்டல் நூலகப் பரிசோதன்னைத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர் பாலகிருஷ்ணனுடன் தொடர்பு கொள்ளலாம்.

வால்மீகி, வியாசர், காளிதாசர், பாணினி போன்ற பேரறிஞர்கள், கவிஞர்கள், இதிகாசங்களை உருவாக்கியவர்கள் இவர்களது வாழ்க்கை வரலாறுகளை சம்ஸ்கிருத வித்யாபீடத்தில் நீங்கள் ஆழ்ந்து பயிலவேண்டும். இளைய அறிஞர்களுக்காக இந்திய அரசு வழங்கும் மஹரிஷி பாதராயண் சம்மான் மற்றும் சம்ஸ்கிருதத்தில் மதிப்புச் சான்றிதழ் பெற்ற சில அறிஞர்களை வித்யாபீடம் அழைத்து அவர்கள் மாணவர்களோடு தங்கிக் கலந்துரையாடுமாறு செய்யவேண்டும். இது மாணவர்கள் சம்ஸ்கிருதத்திலும், வேதத்திலும் தங்கள் புல்மையை வளர்த்துக் கொள்ளத் துணைபுரியும்.

ஞானம் பெறுதலும், நிலை நிறுத்துதலும்:

இப்போது, வேதங்களின் முக்கியத்துவத்தையும், வேதங்கள் எவ்வாறு நம் மனம், நினைவுகள், புத்தி இவற்றுக்கு ஊட்டமளிக்கின்றது என்பதையும் விளக்கும் ஒரு ஆடியோ சி.டி.யை ஒலிக்கச் செய்ய விரும்புகிறேன். சென்னை ஓஜஸ் அறக்கட்டளை நிறுவனர் தத்வமஸி தீட்சித் இசைத்தது இது. முதலில் இந்த மந்திரங்கள்:

மந்திரம் (அ): ஓ சூரியதேவனே! எனது நேர்முகமாய் உணரும் திறனை வளர்ப்பாய். வேதக் கல்வியை சந்ததியினருக்காக நிலைநிறுத்தத் துணை புரிவாய்!

மந்திரம் (ஆ): மேதா தேவியையும் (நிலை நிறுத்தும் சக்தி), மனீஷா தேவியையும் (உள்வாங்கும் சக்தி) எனது மனத்தினுள் வீற்றிருக்குமாறு அழைக்கிறேன். நிகழ்பவை பற்றிய ஞானத்தை முழுமையாய் உணரவும், கடந்தகாலம், மற்றும் எதிர்காலத்தின் ஞானத்தை விரித்துரைக்கவும் அவர்கள் அருள் புரியட்டும்.

மேதா மற்றும் மனீஷா ஆகிய சக்திகளிடம் வேண்டுதல் இது. அவைகள் வேண்டுபவனிடம் ஒன்றுகூடி வந்து, நிகழ்காலம் பற்றிய ஞானத்தை கடந்தகாலம், எதிர்காலம் இவற்றோடு தொடர்புபடுத்தி அறியத் துணைபுரிய வேண்டும். நினைவில் நிறுத்திக் கொள்ளும் சக்தி நடந்ததையும், நடப்பதையும் புரிந்து கொள்ளச் செய்கிறது, உள்வாங்கும் சக்தி இந்த அனுபங்களிலிருந்து எதிர்காலத்திற்கான பாடங்களைக் கற்கத் தூண்டுகிறது,

சம்ஸ்கிருதத்தைப் பாதுகாப்பதிலும், வளர்ப்பதிலும் வெற்றியடைய குரு சார்வபௌம சம்ஸ்கிருத வித்யாபீடத்தின் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.

மூலம்: 1-2-2007 அன்று மாண்புமிகு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் மந்த்ராலயத்தில் ஆற்றிய உரை
http://presidentofindia.nic.in/scripts/eventslatest1.jsp?id=1431

ராக ராஜேஸ்வரி: எஸ்.சௌம்யா இசை மழை

சரணத்தில் நறுமலர்களை மாலையாகக் கோர்த்த மாயாமாளவகௌள ராகக் கிருதி நான் அரங்கத்திற்கு உள்ளே நுழையும்போது ஓடிக் கொண்டிருந்தது.

"ஸரஸீருஹ புன்னாக சம்பக பாடல குரவக
கரவீர மல்லிகா சுகந்த ராஜசுமன..."

"இந்த மலர்களெல்லாம் கூட வேண்டாம், துளசி இலை ஒன்றே போதும் அவனை மகிழ்விக்க" என்பதாகத் தொடங்கும் "துளஸீதளமுலசே ஸந்தோஷமுகா.." என்ற தியாகராஜரின் இந்த அழகிய கிருதியை சில துடிப்பான கல்பனா ஸ்வரங்களுடன் பாடிக் கொண்டிருந்தார் எஸ்.சௌம்யா.






சிவராத்திரியை முன்னிட்டு நடந்து வரும் "கலோத்ஸவ் 2007" தொடரில் நேற்று (வெள்ளிக் கிழமை) எஸ்.சௌம்யா இன்னிசைக் கச்சேரியைக் கேட்டது ஆனந்த அனுபவம். கச்சேரி நடந்த இடம் பெங்களூர் அல்சூர் ஏரி அருகே உள்ள ஒடுக்கத்தூர் மடம் முருகன் கோவில் அரங்கம்.

அடுத்ததாக "பாகாயனய்யா" சந்திரஜ்யோதி ராகத்தில் உருக்கமான கிருதி. பின்னர் துள்ளலுடன் குந்தலவராளியில் "போகீந்த்ர சாயினம்" சுவாதித் திருநாள் பாடலை விறுவிறுப்பான ஸ்வரங்களுடன் பாடினார். அப்புறம், கொஞ்சம் விரிவான ஆலாபனையோடு தியாகராஜரின் "சலித்தோடித் தேவே, ஓ மனஸா" என்ற கிருதி. தன் மனத்தைப் பார்த்துப் பேசும் இந்தப் பாடலில் "பதிதுலு ப்ரோசே பட்டாதிகாரிணி" ("பட்டத்து அதிகாரம் இழிந்தோரிடம் செல்வதா" என்பது தான் இதன் பொருள் என்று ஊகிக்கிறேன் - ரொம்ப அர்த்தபுஷ்டியுள்ள வரிகள்) என்ற சரணத்தின் முதல் அடியை அற்புதமாக நெரவல் செய்தார்.

அடுத்தது "சர்வேசா அடிமையை நீ உதறித் தள்ளாதே, சங்கர சதாசிவனே.. " என்ற பாபநாசம் சிவன் கிருதி. கருணை ரசம் பிரதானமாக உள்ள இந்தப் பாடலை கம்பீரத்திற்கும், மகிழ்ச்சிக்கும் உரிய பிலஹரி ராகத்தில் சிவன் அமைத்திருப்பது இன்னும் ஒரு அழகு என்று சௌம்யா பாடியபோது புரிந்தது. சொற்களின் பாவத்தை ராகத்தில் குழைத்த விதம் வெகு நேர்த்தி. இதைத் தொடர்ந்து "சுதா... மாதுர்ய பாஷண... சுதாகரானனா... " தியாகராஜரின் துரிதகதியில் அமைந்த பாடல். "சிந்துராமக்ரியா" என்ற ராகத்தில் அமைந்த இந்தப் பாடலை பாலமுரளிகிருஷ்ணாவின் குரலிலேயே கேட்டுப் பழகியிருந்த எனக்கு, சௌம்யாவின் குரலில் கேட்டது இன்னும் செவிகளில் இனித்துக் கொண்டிருக்கிறது.






கச்சேரியின் பிரதான அம்சத்தை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தேன்.. வந்தது வரம் - கிறங்க அடித்த பைரவி ஆலாபனை. அதி நிதானமாக ஆலாபனையைத் தொடங்கி பைரவிக்கு சகல அலங்காரங்களும் செய்து அந்த ராக தேவதையைக் கண்முன் நிறுத்தினார் சௌம்யா. ராகத்தின் முழு உருவத்தையும் பிரத்தியட்சமாகப் பிசிறு இல்லாமல் காட்டிய அழகிய ஆலாபனை. பிறகு பாடியது சியாமா சாஸ்திரிகளின் அதி உன்னதமான பைரவி ராக ஸ்வரஜதி - "கா..மா.. க்ஷீ அம்பா.... அனுதினமு மரவகனே....". பாடப் பாடத் தெவிட்டாத தேவியின் சுந்தர ரூபத்தையும் அவளது காருண்யத்தையும் விவரிக்கும் ஸ்வரஜதி. ஒவ்வொரு வரிக்கும் உள்ள ஸ்வரங்களை ஆற அமர சௌம்யா பாடியதைக் கேட்டது தேவியே வந்து பாடியது போல் இருந்தது.

வயலின் வாசித்த பெண்மணி நளினா மோகன், பாடகரை வில்லில் அற்புதமாகப் பின் தொடர்ந்தார், ஸ்வர வாசிப்புகளும் அருமையாக இருந்தன. கடம் சுகன்யா ராஜகோபால், தாள வாத்தியம் வாசிக்கும் அபூர்வப் பெண் வித்வாம்சினி, அதற்கு உரிய எனர்ஜியோடு நன்றாக வாசித்தார். இந்த மூன்று தேவியரையும் அரங்கில் பார்த்ததும் எனக்கு ரவிவர்மாவின் ராஜராஜேஸ்வரி சித்திரம் தான் நினைவுக்கு வந்தது. லட்சுமி தேவி தாள வாத்தியம் இசைக்க, சரஸ்வதி வீணை வாசிக்க, அன்னை பராசக்தி நடுவில் கொலுவிருக்கும் கோலம்! தீட்சண்யமான கண்களும், வசீகரப் புன்னகையும் கலந்த சௌம்யாவின் அழகிய முகமண்டலம் அவரது இசைக்கு ஒளியூட்டுகிறது என்றால் மிகையில்லை.






அவ்வப்போது வயலின், மிருதங்க வித்வான்களைப் பார்த்து அர்த்தபுஷ்யுடன் செய்த புன்சிரிப்புக்கள் ரசிக்கும்படியாக இருந்தன. மிருதங்க வித்வான் ஹெ.எஸ். சுதீந்திரா முதலில் கொஞ்சம் சலிப்பூட்டுவது போல இருந்தாலும் கச்சேரி சூடு பிடித்ததும் கலக்கினார். சௌம்யா தவிர, மற்ற கலைஞர்கள் அனைவரும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
இந்த ஸ்வரஜதியில் பெரும்பாலும் வித்வான்கள் நிரவல் செய்வது கடைசி அடி "சியாம க்ருஷ்ண ஸ்ஹோதரீ.... சிவ சங்கரீ... பரமேஸ்வரீ.." என்பது. சௌம்யா இடையில் வரும் "பக்தஜன கல்பலதிகா.. கருணாலயா.. ஸதயா" என்ற ரசம் நிறைந்த அடியை எடுத்துக் கொண்டது சிறப்பு.

இது முடிந்ததும் சபா காரியதரிசி ஒருவர் பாலக்காட்டுத் தமிழும், பாலக்காட்டு ஆங்கிலமும் கலந்த மொழியில் ஒரு சிறிய பேச்சுக் கச்சேரி செய்தார்.

பிறகு வந்த துக்கடாக்கள் ஒவ்வொன்றும் மணிகள். "லோக ஹரனே க்ருபாசாகரா" என்ற ராகவேந்திரசுவாமி மீதான வாகதீஸ்வரி ராகப் பாடல். கோபால கிருஷ்ண பாரதியின் "சிதம்பரம் போகாமல் இருப்பேனோ?", மகாகவி பாரதியின் "காதலெனும் தீவினிலே ராதே ராதே".. "சென்னிக்குள நகர் வாசன்" என்ற காவடிச் சிந்து - இதன் ஒவ்வொரு சரணத்தையும் வேறுவேறு விதமாகப் பாடியது அருமை.. கடைசியாக வந்த பிஹாக் தில்லானாவில் வரும் பல்லவி "தஞ்சபுரி ப்ருஹதீஸ்வருனி ராணி.." ! அற்புதமான இந்த தெய்வ சங்கீதத்தைக் கேட்காமலும், ரசிக்காமலும், தெரிந்து கொள்ள எந்த முயற்சியும் செய்யாமலும் சும்மா "தமிழிசை, கிமிழிசை" என்று கிழிப்பவர்களைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது - "தஞ்சபுரி" (thanchapuri) என்று என்ன அழகாகத் தஞ்சையின் பெயரைத் தெலுங்கு உச்சரிப்பில் வைத்துப் பாடியிருக்கிறார் பாருங்கள் தில்லானா இயற்றியவர்!

இவ்வளவு சிலாக்கியமான கச்சேரிக்கு வந்த கூட்டம் மிகவும் குறைவு. இது போன்ற கச்சேரி சென்னையின் நடந்தால் எள்விழ இடமில்லாமல் கூட்டம் இருக்கும். இங்கே கால்வாசி அரங்கத்திற்கு மேல் காலியாக இருந்தது. கர்நாடகத் தலைநகரம் கர்நாடக சங்கீதத்தை வெகுஜன அளவில் ரசிக்க இன்னும் கூடக் கொஞ்ச நாள் பிடிக்கும் போலிருக்கிறது!

Thursday, February 08, 2007

காவிரி தீர்ப்பு: கர்நாடகத்தின் நிலைப்பாடுகள்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அனேகமாக எதிர்பார்த்தது போலவே வந்தாயிற்று. தீர்ப்பு வந்த அன்று தென் கர்நாடகம் முழுவதும், குறிப்பாக பெங்களூரில் பதட்டம் நிலவியது; சில இடங்களில் போக்குவரத்து தடைபட்டது; ஆனால் எந்த விதமான கலவரங்களும் நடைபெறவில்லை. 1991ல் இது போன்ற தீர்ப்பின் போது தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப் பட்ட வன்முறை போன்று இந்த முறை கண்டிப்பாக நடக்க விடக் கூடாது என்பதில் அரசு மிக உறுதியாக நின்றது. காவல் படைகள் குவிப்பு மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியது இவை மூலம் தற்போதைய ஜனதாதள, பா.ஜ.க கூட்டணி அரசு இதை முழுமையாக சாதித்து விட்டது என்றே சொல்லவேண்டும். பல மாநிலங்களில் கலவரங்கள் அதே இடங்களில் கட்டுக்கடங்காமல் மீண்டும் மீண்டும் முளைத்து வருகையில் கர்நாடக அரசும், மக்களும் உணர்ச்சிக் கொந்தளிப்பு எளிதாக வெளிப்படக் கூடிய இந்தத் தருணத்திலும் கடமை உணர்வுடன் அமைதி காத்தது பாராட்டத் தக்கது. பெங்களூர் கேபிள் தொலைக்காட்சி விநியோகஸ்தர்கள் தமிழ் தொலைக் காட்சி சேனல்களைத் துண்டித்திருப்பதும், திரையரங்குகள் தமிழ்ப் படங்களை நிறுத்தியிருப்பதும் கொஞ்சம் மனக் கசப்பு தரும் விஷயங்கள். ஆனாலும், பெரிய அளவிலான தமிழர் எதிர்ப்பு உணர்வு இப்போது இல்லவே இல்லை என்பது நிம்மதி தரும் விஷயம்.

தீர்ப்பு வந்தவுடன் தமிழக அரசியல்வாதிகள் உடனே “எங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் நியாயமானவை என்று நிரூபிக்கப் பட்டு விட்டது” என்று அகமகிழ்ந்தனர். கர்நாடக அரசியல்வாதிகள் “இந்தத் தீர்ப்பு பெரும் துரோகம் இழைத்து விட்டது” என்று கொதித்தனர். ஆனால், கர்நாடகத்தின் சார்பாக வாதிட்ட இந்தியாவின் தலைசிறந்த சட்ட வல்லுனர் ஃபாலி எஸ். நரிமன், தீர்ப்பு திருப்தி தரும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்டார். பிரபல கலைஞரும், கன்னட எழுத்தாளருமான கிரீஷ் கர்னாட் “நாம் பரஸ்பரம் ஒப்புகொண்டு அமைக்கப் பட்ட இந்த நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஏற்று அமல் படுத்துவது தான் சரியானது” என்று அறிக்கை வெளியிட்டு பல கன்னட இயக்கங்களின் கடுப்பை சம்பாதித்திருக்கிறார். தஞ்சை விவசாயிகள் சங்கத் தலைவர் ரங்கநாதன் “தேவைக்குக் குறைவாக உள்ள காவிரி நீரைப் பங்கிடுவது என்பது பற்றாக் குறை பட்ஜெட் போடுவது போன்ற விஷயம். எல்லாத் தரப்பினரையும் திருப்திப் படுத்துவது சாத்தியமே இல்லை. நாங்கள் கேட்ட அளவு தண்ணீர் கிடைக்காவிட்டாலும் தீர்ப்பை வரவேற்கிறோம்” என்றார். “இரண்டு நாட்கள் எங்கள் வீட்டில் தண்ணீர் வரவில்லை, இதுல தமிழ்நாட்டுக்கு வேற தண்ணி குடுக்கணுமா? இது அக்கிரமம்” என்ற வகையில் இந்தப் பிரசினையின் தலையும் வாலும் புரியாத பெங்களூர் சாஃப்ட்வேரிணிகள் ஆங்கிலத்தில் பொரிந்தார்கள். “பெங்களூரிலேயே ஒரு கன்னடருக்கு மூன்று தமிழ் ஆட்கள் என்கிற மாதிரி இருக்காங்க. கர்நாடகத்துக்கு உரிய தண்ணீரில் பெரும்பங்கையும் அவங்க தான் குடிக்கிறாங்க. விவசாயிக்கு என்ன பிரயோசனம்?” என்று மாண்டியா விவசாயி ஒருவர் குமுறினார்.



காவிரி நதியின் பிறப்பிடம், தலைக்காவேரி

சன் நெட்வொர்க் குழுமத்தை சேர்ந்த கன்னட உதயா டி.வி. ஒருவிதமான தர்ம சங்கடத்திற்கு ஆளாகியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. தீர்ப்பு வந்த திங்கட்கிழமை அன்று “உதயா வார்த்தெகளு” (உதயா செய்திகள்) சேனலில் விவசாய, கிராமத் தலைவர்களைப் பேட்டி கண்டு இந்த தீர்ப்பு எப்படி ஒருதலைப் பட்சமானது என்று ரொம்ப மெனக்கெட்டு விளக்கினார்கள். “ஏற்கனவே கர்நாடக அரசியல் வாதிகள் சாதுரியம் இல்லாமல் இருக்கும் நிலையில் இப்போது மத்தியில் காங்கிரஸ் எதிர்க்கட்சி வேறு. தமிழக அரசியல் வாதிகள் தேசிய அரசியலில் புகுந்து கலக்கும் ஜித்தர்கள். இது தான் இத்தகைய பாரபட்சமான தீர்ப்புக்கு வழிவகுத்தது” என்று பல கன்னட பொதுமக்கள் கருதுகிறார்கள். “ராஜகீய இச்சா சக்தி இல்லா” (அரசியல் முனைப்பு இல்லை) என்று தொலைக்காட்சிகளில் பலர் குறைப் பட்டுக் கொண்டார்கள்.

மொத்தத்தில் கர்நாடகம் ஒரு பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறது. ஐந்து தொகுதிகளும் ஆயிரம் பக்கங்களும் உள்ள இந்தத் தீர்ப்பைப் படித்துப் புரிந்து கொண்டு அதன் ஒவ்வொரு அம்சங்களையும் விளக்கும் கடினமான வேலையே இப்போது தான் ஆரம்பித்திருக்கிறது. அதற்குள் எதிர்ப்பு, மேல்முறையீடு, மறுவிசாரணைக்கான உடனடி கோரிக்கை என்று மும்முரமாக வியூகங்கள் வகுக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. “தமிழகத்துக்கு 410, கர்நாடகத்துக்கு 270 தான்” என்று எண்ணிக்கை விளையாட்டை வைத்து உணர்ச்சிகள் தூண்டப் படுகின்றன. இதுநாள் வரை அமலில் இருந்த இடைக்காலத் தீர்ப்பின் படி வருடத்திற்கு 205 டிஎம்சி கன அடி தண்ணீர் (மேட்டூர் நீர்த்தேக்கத்தில் அளவீடு) கர்னாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று இருந்தது. இப்போது 192 டிஎம்சி கன அடி தண்ணீர் (பில்லி குண்டுலு நீர்த்தேக்கத்தில் அளவீடு) படி வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வந்திருக்கிறது. இடையில் உள்ள 60 கி.மீ நிலப்பரப்பில் சேகரமாகும் 25 டிஎம்சி கன அடி தண்ணீரையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகம் ஏற்கனவே தரக் கடமைப் பட்டுள்ளதை விட அதிகம் தர வேண்டியது 12 டிஎம்சி கன அடி (192+25-205) தண்ணீர் தான்! இதற்குத் தான் இந்தப் பாடு! ஆனால் “கர்நாடகம் கேட்ட 465 கிடைக்கவில்லை, இது அநியாயம்” என்ற ரீதியில் பிரசாரம் நடக்கிறது.

காவிரி நதி பாயும் நிலப் பரப்பு தமிழகத்தை விட கர்நாடகத்தில் அதிகம். ஆனால் நதி நீரால் பயன்பெறும் டெல்டா பிரதேசம் என்று கணக்கிட்டால் கர்நாடகத்தை விட தமிழகத்தில் அதிகம் : “சோழ வளநாடு சோறுடைத்தாகிய” காலங்களிலிருந்து இதற்கு வரலாற்றுக் காரணங்கள் உண்டு. மொத்த நீரை, பயன்பெறும் டெல்டா பிரதேசங்களின் விகிதத்திற்கு ஏற்றபடி பங்கிட வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தான் இந்த தீர்ப்பு தரப் பட்டுள்ளது. தமிழக டெல்டாப் பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் அளவு 128 டிஆம்சி கனஅடியையும் சேர்க்க வேண்டும் (ஆனால் கர்நாடக நிலத்தடி நீர் அளவை சேர்க்க வேண்டாம்!) என்று கர்நாடக விவசாயிகள் தரப்பில் வைத்த வாதம் எடுபடவில்லை. மேலும், இந்தத் தண்ணீரை வைத்துக் கொண்டு குருவை, சம்பா என்று வருடத்திற்கு இரண்டு பயிர் செய்கிறார்கள் என்று கர்நாடக விவசாயிகள் தமிழக விவசாயிகள் மீது புகார் சொல்கிறார்கள். “ஏற்கனவே பெருமளவில் கிடைக்கும் மழைநீரை சேமிக்காமல் தமிழகம் கடலில் கொட்டுகிறது, அதே சமயம் கர்நாடகத்திலிருந்தும் தண்ணீர் வேண்டும் என்று அடம் பிடிக்கிறது. கர்நாடகம் தரும் தண்ணீரில் பெரும்பகுதியும் விவசாயத்திற்கு அல்ல, கடலில் தான் போய்ச் சேரும்” : இந்தக் கருத்தும் பல கர்நாடக விவசாயிகளிடம் உள்ளது. இதற்குத் தீர்வாக, கர்நாடகத்தோடு சண்டை போடுவதை நிறுத்திவிட்டு, கல்லணை என்ற பழைய அணைக்கட்டு மட்டுமன்றி வேறு சிறு அணைகளையும் தமிழ்நாடு உருவாக்கி காவிரி நீர் கடலில் போய் வீணாவதைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள். இதில் உண்மை உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.



கல்லணை, திருச்சி

பதினேழு வருடங்கள் பல வல்லுனர்களின் சிந்தனை மற்றும் விவாதங்களின் அடிப்படையில் வழங்கப் பட்டிருக்கும் இந்தத் தீர்ப்பு, கர்நாடகத்தில் பெரிய அளவு எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு என்ன தான் தீர்வு? “தமிழகத்திற்கு சொட்டுத் தண்ணீர் கூடத் தரவேண்டாம்” என்று தீர்ப்பு வந்தால் தான் கர்நாடகம் முழுமையாகத் திருப்தி அடையும் என்றால், அது மிகவும் கவலைக்குரிய விஷயம். நம்மிடம் இருக்கும் குறைந்த அளவு வளங்களை தேசிய சிந்தனையுடன் இருசாராருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் பங்கிட்டுக் கொள்வது தான் நடைமுறையில் சிறந்த வழி. இந்த நடுவர் மன்றம் அதைச் செய்திருக்கிறது என்று ஒப்புக் கொள்ளத் தடையாக இருப்பது காவிரியை வைத்து கர்நாடகத்தில் பின்னப் பட்டுள்ள வெகுஜன அரசியல் தான்.

இதற்கு தூபம் போடும் வகையில் இது பற்றிய செய்திகளை வெளியிடும் எல்லா ஊடகங்களும் (குறிப்பாக தொலைக்காட்சிகள்) இது ஒரு சமூக வளங்களின் பங்கீடு என்பதாக இல்லாமல், போர் முடிவு போலவும், கிரிக்கெட் ஆட்ட முடிவு போலவும் “பெரும் வெற்றி”, “படுதோல்வி” என்கிற போக்கில் சித்தரித்து வருகின்றன. ஆங்கில செய்தி ஊடகங்களில் இருப்பவர்கள் பெங்களூர் என்ற மாபெரும் உலகத் தொழில் நகரம் பற்றி அறிந்த அளவு தஞ்சை விவசாய பூமி பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த தீர்ப்பு “பெங்களூரின் வளர்ச்சிக்கு எதிராக” இருப்பதாகவும் ஒருவிதமான பிம்பம் உருவாக்கப் படுகிறது, இது துரதிர்ஷ்டவசமானது. பெங்களூர் போன்ற ஒரு வளரும் நகரம் தன் தண்ணீர்த் தேவைகள் அனைத்திற்கும் காவிரியை மட்டுமே நம்பியிருக்காமல், மற்ற பெருநகரங்கள் போல குழாய் கிணறுகள் மற்றும் வேறு பல வழிகளில் தன் நீர்த்தேவைகளை நிறைவேற்ற முயலவேண்டும். தமிழகமும், கர்நாடக விவசாயிகளின் அச்சங்களைப் போக்கும் வகையில் சிறு அணைத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். இத்தகைய முயற்சிகள் தான் இந்தப் பிரசினைக்கு நிரந்தரத் தீர்வு காண வழிவகுக்கும்.