Monday, July 09, 2007

பதினாறு பேறுகள் பற்றிய அழகிய பாடல்..

"பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என்று நம் மரபில் பெரியோர்கள் வாழ்த்தி வருகிறார்கள். இது பற்றிக் கூறும் பாடலைப் பற்றி தமிழ் அறிஞர் ஹரிகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டேன். அவர் தந்த அந்தப் பாடலும், விளக்கமும் இதோ -

.. அது அபிராமி அம்மை பதிகத்தின் முதல் பாடல். அபிராமி அம்மை பதிகத்தின் பதினோரு பாடல்களும் இங்கே கிடைக்கின்றன:

http://www.tamil.net/projectmadurai/pub/pm0026/abipatsc.html

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்

கவடுவா ராத நட்பும்
.....கன்றாத வளமையும் குன்றாத இளமையும்

கழுபிணிஇ லாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்

தவறாதசந் தானமும்
.....தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள்வா ராதகொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு

துன்பமில் லாத வாழ்வும்
.....துய்யநின் பாதத்தில் அன்பும்உதவிப் பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே

ஆதிகட வூரின் வாழ்வே
....அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி

அருள்வாமி அபிராமியே!

வாய்விட்டுப் படித்தால் கண்ணில் நீர் அரும்பும்.

பொருள் தேவைப்படுமோ? சொல்லிவிடுகிறேன். கல்வி, நீண்ட ஆயுள், கபடில்லாத நட்பு, நிறைந்த செல்வம், எப்போதும் இளமை, பிணி இல்லாத ஆரோக்கியமான உடல், சலிப்பு வராத மனம், அன்பு நீங்காத மனைவி, புத்திர பாக்கியம், குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான அருகதை, எந்தத் தடையும் ஏற்படாத கொடை(அளித்தல்), செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசன், துன்பமில்லாத வாழ்வு, உன் பாதத்தின்மேல் பக்தி, இந்தப் பதினாறுக்கும் அப்பால் உன் தொண்டர்களை என்றும் பிரியாத கூட்டு. இவற்றை அருள வேண்டும்.

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.







எனக்கு ஏற்கனவே பரிச்சயமான பாடல் தான் இது.. ஆனால் 16 செல்வங்கள் என்பவை இவை தான் என்று அறிந்திருக்கவில்லை. ஹரியின் விளக்கத்திற்குப் பிறகு இன்னொரு முறை படித்துப் பார்க்கும்போது இந்த பாடலில் அற்புதமான சொல்லாட்சியும், மேலும் சில நயங்களும் அனுபவிக்கக் கிடைக்கின்றன..

"கபடு வாராத நட்பும்" என்பதை என் நண்பர்கள் மீது நான் கொள்ளும் நட்பில் கபடு வராமல் இருக்கவேண்டும் என்று விழைவதாகவும் கொள்ளலாம். "அன்பகலாத மனைவியும்" என்கையில் என்மீது அவள் அன்பும், அவள் மீது என் அன்பும் இரண்டும் அகலாதிருக்கட்டும் என்ற பொருள் தொக்கி நிற்கிறது.

"தவறாத சந்தானமும்" என்பதை "என் சொல் பேச்சுக்குத் தவறாத குழந்தைகள்" என்று அல்ல, தங்கள் ஒழுக்கத்திலும், நன்னடத்தையிலும் தவறாத குழந்தைகள் என்றே நான் கொள்கிறேன். "தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும்" என்னும் வள்ளுவர் மொழிக்கேற்ப இதற்கும் பொறுப்பாளி நான் தான் என்பதை நினைவூட்டுகிறது இது.

சொல்லப் போனால் இந்த செல்வங்களுக்கெல்லாம் பிறப்பிடம் வெளியில் இல்லை, என்னிடத்திலேயே உள்ளது. அதை நான் அகத்தில் உணர்ந்து நடந்தால் அதன் பிரதிபலிப்பாக இந்த செல்வங்கள் நம்மைத் தேடி வந்து அடைகின்றன. அதை உணரும் தன்மையை வேண்டி அபிராமி அன்னையிடம் கசிந்துருகி வேண்டுகிறது இந்த அழகிய பாடல்.

Sunday, July 01, 2007

ஒரு மத அழிப்பு மற்றும் மக்கள் அழிப்பின் கதை

பங்களாதேஷில் இந்துக்களுக்கு தொடர்ந்து இழைக்கப் பட்டு வரும் மனிதத் தன்மையற்ற வன்கொடுமைகள் பற்றி தமிழில் மிகக் குறைவாகவே எழுதப் பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.. இந்த வார திண்ணையில் அருணகிரி எழுதிய கட்டுரை உலக அளவில் மனித உரிமை ஆர்வலர்களால் கூட இந்தப் பிரசினை கண்டுகொள்ளப் படாததன் சோகத்தை விவரிக்கிறது..

அதை இங்கே மீள்பதிவு செய்கிறேன் -


ஒரு மத அழிப்பின் கதை

- அருணகிரி

சில நாட்களுக்கு முன் பள்ளி விழா ஒன்றில் அழகான வங்காள நடனம் ஆடிய ஒரு குழந்தையின் தந்தையான ஒரு பங்களாதேஷி இந்துவுடன் பேசிக்கொண்டிருந்தேன். உலகமே அமைதியாய்ப் பார்த்துக்கொண்டிருக்க, ஐ-நா. அமைதி காக்க திட்டமிட்டு பங்களாதேஷி இந்துக்கள் எப்படி படிப்படியாக அழிக்கப்பட்டார்கள், படுகிறார்கள் என்பதை ஒரு மெலிதான விரக்தி புன்னகையுடன் அமைதியாக ஒரு மணி நேரம் நிதானமாக விளக்கினார். கல்விக்கூடங்களில் discrimination, அரசாங்கத்தில் வேலையை எண்ணிப்பார்க்கக்கூட இயலாத நிலை, வியாபாரம் நடத்தமுடியாமல் terrorize செய்யப்படுவது, நிலங்கள் பறிக்கப்படுவது, இந்தியாவில் மதக்கலவரம் வந்தால், சதாம் உசேன் செத்தால் என்று எல்லாக்காரணங்களை வைத்தும் அடிக்கப்பட்டும், கொல்லப்பட்டும், கற்பழிக்கப்பட்டும் கொடிய மனித இன அழிப்பு தொடர்ந்து நிகழ்ந்த வேளையில் எப்படி மனித நேய அமைப்புகள் என்று சொல்லிக்கொள்ளும் அமைப்புகளும், என்.ஜி.ஓ.க்களும், இந்திய அரசும், ஐ.நா. சபையும் அமைதியாக அதனைப்பார்த்துக்கொண்டு இருந்தன என்பதை உணர்ச்சி வசப்படாமல் விவரித்தார். பிரிவினையில் தொடங்கி, 1971 போரில் பாகிஸ்தானாலும் வங்க ரசாக்கர்களாலும் கொன்று குவிக்கப்பட்டு, பின்னர் இன்று வரை, 30 வருடங்களில் பாதிக்கும் மேற்பட்ட இந்துக்கள் பங்களாதேஷிலிருந்து அழிக்கப்பட்டு விட்ட நிலையை விளக்கினார். கிறித்துவ, புத்த மைனாரிட்டிகள் மக்கள் தொகை அதே நிலையில் இருக்க இந்துக்கள் சதவீதமோ 1990- தொடங்கி பத்து வருடங்களில் 50% குறைந்து விட்டது என்றார். ஒரு பாப்ரி மஸ்ஜித் அழிப்பில் பொங்கி எழுந்த உலக என்.ஜி.ஓ.க்கள், அந்நிகழ்வைத் தொடர்ந்து சிறிதும் பெரிதுமாக நூற்றுக்கணக்கான இந்துக்கோவில்கள் தரைமட்டமாக்கப்படதை எதிர்த்து முணுமுணுப்பு கூட எழுப்பாத அவலத்தைக் குறிப்பிடும்போது மட்டும் அவர் குரல் சற்றே உயர்ந்தது.

அவரது கோபம் கிழக்கு வங்காள முஸ்லீம்களை விட மேற்கு வங்காள இந்துக்கள் மீதே அதிகம் இருந்தது. பங்களாதேஷிலிருந்து உயிர் தப்பி அகதிகளாய் ஓடி வந்த இந்துக்களை, உள்ளூர் முஸ்லீம்களைத் திருப்திப்படுத்த வேண்டி, மேற்கு வங்காள "கம்யூனிஸ்டு" இந்துக்கள், செலக்டிவாக அவமதித்தும், கேவலப்படுத்தியும் , வாழ்நிலை மறுத்தும் அட்டூழியம் செய்வதாக வெதும்பினார். இது பற்றி இந்திய வெகுஜனப்பத்திரிகைகள் கண்டுகொள்ளாமல் மவுனம் காப்பதை விமர்சித்தார். மேற்கு வங்காள கம்யூனிஸ்டு இந்துக்கள் போல இந்து விரோத கேவல கும்பலை இதுவரை தாம் பார்த்ததில்லை என்றார்.

எப்படி இடதுசாரி மற்றும் கிறித்துவ, முஸ்லீம் அமைப்புகளின் உதவியுடன் ஐநா சபையிலும் இந்து-ஆதரவு என்.ஜி.ஓ அமைப்புகள் கம்யூனல் அமைப்புகள் என்று சொல்லப்பட்டு விலக்கப்படுகின்றன என்பதை விவரித்தார். பல முஸ்லீம் மற்றும் கிறித்துவ அமைப்புகள் தததம் நாட்டு அரசின் உதவியுடனும் ஆசியுடனும் ஐநாவில் உதவித்தொகையுடன் உலாவர, இந்து என் ஜி ஓ அமைப்புகளை இந்திய அரசு கைகழுவியது மட்டுமன்றி, அவற்றை எதிர்த்த பிரச்சாரத்திற்கும் (காங்கிரஸ் காலத்தில்) உதவியதாகக் குற்றம் சாட்டினார். பிஜேபியும் சரி, காங்கிரஸும் சரி பங்களாதேஷ் இந்துக்களின் விஷயத்தில் முழுமுயற்சி எடுத்து உதவவில்லை என்று ஆதங்கப்பட்டார்.

கடைசியாகச்சொன்னது மனதில் முள்ளாகத் தைத்து விட்டது: இன்று பங்களாதேஷில் இருக்கும் இந்துக்கள் பரம ஏழைகள்; குரல் எழுப்ப முயன்றால் கொல்லப்படுவோம் என்ற நிலையிலிருக்கும் அவல ஜன்மங்கள். இவர்களுக்கான குரல் வெளியில் இருந்துதான் வர வேண்டும். இந்திய அரசு கைவிட்டு விட்ட நிலையிலும், தொடர்ந்து HRBCM போன்ற பல அமைப்புகள் மூலமும், வலை மூலமும், ஐநா என்ற கல்சுவரில் முட்டிக்கொண்டும், இந்திய அரசு இயந்திரங்களின் மூலமும் முயன்று வருவதாகச் சொன்னார். 'இதனால் எந்த பயனும் விளையுமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது, ஆனாலும் எங்களால் செய்ய முடிவது இதுபோல குரல் எழுப்புவது ஒன்றுதான் என்பதனால், இதை ஒரு பூஜை போல தொடர்ந்து செய்து வருகிறோம் - தோற்கும் போரில்தான் ஈடுபட்டிருக்கிறோமோ என்ற சந்தேகம் இருந்தாலும்..." என்றார் மெல்லிய புன்னகை மாறாமல்.

பங்களாதேஷ் மத அழிப்பின் பின்புல உண்மைகள் சில:

- 1972-இல் விடுதலையடைந்த பங்களாதேஷ் புதிய நாட்டிற்கு அரசியலமைப்புச்சட்டத்தை மதச்சார்பற்றதாகவே இயற்றியது. ஆனால், 1977-இல் "பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்" என்ற இஸ்லாமிய வாசகம் அரசியலமைப்பின் முதல் வாசகமாக சேர்க்கப்பட்டது. இஸ்லாமியர் அல்லாதோர் அரசியலமைப்பின்படி ஜனாதிபதியாக முடியாது. இஸ்லாமிய மதவெறி நாடாக பங்களாதேஷ் உருப்பெறும் இந்த காலகட்டத்தில் முதன்மை ஆதரவு தெரிவித்த மூன்று நாடுகள்: சவுதி அரேபியா, லிபியா, சீனா ஆகியவை. 1988-இல் இஸ்லாம் பங்களாதேஷின் அரசு மதமாக வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டது.

- பங்களாதேஷ் கிழக்கு பாகிஸ்தானாக இருந்தபோது "எதிரிச் சொத்து" என்ற பெயரில் இந்துக்களின் நிலங்கள், வியாபார இடங்கள், பறிமுதல் செய்யப்பட்டன. இந்துக்களும் முஸ்லீம்களும் ஒருங்கே போரிட்டு பங்களாதேஷ் விடுதலையடைந்தபின் ஷேக் முஜிபுர் ரஹ்மான் இதனை மாற்றுவார் என எதிர்பார்க்கப்படது. அவரோ பழைய சட்டத்தை நீக்கி விட்டு ஆனால் அதே ஷரத்துகள் கொண்ட "அர்பிதா சம்பதி" சட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்தார். இந்த சட்டத்தின் மூலம் இந்துக்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன அல்லது அடிமாட்டு விலைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இச்சட்டத்தின் மூலம் கிறித்துவர்களின் நிலங்களோ பவுத்தர்களின் நிலங்களோ இவ்வாறு பறிமுதல் செய்யப்படவில்லை. கடந்த முப்பது வருடங்களில் இவ்வாறு இந்துக்கள் இழந்த நிலத்தின் அளவு ஏறக்குறைய பத்து லட்சத்து நாற்பதாயிரம் ஏக்கர்கள். இன்றைய மதிப்பில் ஏறக்குறைய 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள்.

- பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறைகளில் இந்துக்கள் சேர்க்கப்படுவதில்லை.

- சிறுபான்மையினருக்கு எதிராக சிட்டகாங் பகுதிகளில் பங்களாதேஷ் முஸ்லீம்கள் நடத்தி வரும் பயங்கரவாதத்தில் ரத்தம் வழிய வழிய அடித்தே கொல்வது, வீடு புகுந்து குடும்பத்தினருக்கு எதிரேயே கற்பழிப்பது, கொலைகளை நிகழ்த்துவது ஆகியவை அடங்கும்.

- இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமைகளை எதிர்த்து அரசோ, காவல் துறையோ நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த வன்கொடுமைகளில் கீழ்க்கண்டவை முக்கியமாகக் குறிப்பிடப்படுகின்றன: கொலை, கற்பழிப்பு, மிரட்டிப்பணம் பறித்தல், மிரட்டி ஆக்கிரமித்தல், சொத்துகளை சூறையாடுதல், கோவில்களைக் கொள்ளையடித்தல், விக்கிரகங்களை உடைத்தல், இந்து பண்டிகைகளை நடத்தவிடாமல் கலவரம் செய்தல் ஆகியவை.

- பல முற்போக்கு எண்ணம் கொண்ட பங்களாதேஷ் முஸ்லீம்களே இவற்றை எதிர்த்துப் பேசுகின்றனர் என்பது ஓர் ஆறுதலான விஷயம். ஆனால் இவர்களும் பெரும்பான்மை முஸ்லீம் அடிப்படைவாதிகளால் குறிவைக்கப்படுகிறார்கள். தஸ்லிமா நஸ்ரீன் உயிர் பயத்தில் வெளிநாட்டில் வாழ்கிறார்.

- 2001-இல் பங்களாதேஷ் தேசியக்கட்சி இஸ்லாமிய அடிப்படைவாத கட்சிகளுடன் இணைந்து ஆட்சியைப்பிடித்ததும் இந்துக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

- கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கைதான பல முஸ்லீம்கள் பங்களாதேஷில் பயிற்சி பெற்றதாகக் கூறினர்.

- பாரதப்பிரிவினையின்போது பங்களாதேஷ் மக்கள்தொகையில் இந்துக்கள் எண்ணிக்கை 29% சதவீதமாக இருந்தது; இது படிப்படியாகக்
குறைந்து இன்று 10% சதவீதத்தில் நிற்கிறது. ஒரு நாளைக்கு 500 பங்களாதேஷி மக்கள் அகதிகளாக பங்களாதேஷை விட்டு இந்தியாவுக்கு வருகின்றனர்.

- இந்துக்கள் பங்களாதேஷில் இஸ்லாமிய மதவெறி அரசால் உயிருக்கும், மானத்திற்கும், உடமைக்கும் உத்தரவாதமின்றி வாழும் நிலை உள்ளது. டார்ஃபோர், ருவாண்டா போன்ற ஒரு கொடுமையான அழிவுதான் இது; இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. திட்டமிட்டு ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகவே ஒரு குழுவினர் அழித்தொழிக்கப்படுவது இன்னமும் தொடர்கிறது. ஆனாலும் டார்ஃபோருக்கும், ருவாண்டாவிற்கும் கிடைத்த வெளிச்சம் உலக அளவில் இன்னும் இப்பிரச்சனைக்குக் கிட்டவில்லை.

- முஸ்லீம் ஆதரவு இடதுசாரி என்.ஜி.ஓ.க்களும் சரி, அவர்களின் ஆதிக்கத்திலுள்ள ஐ.நா ஆசீர்வாதம் பெற்ற மனித உரிமைக் குழுக்களும் சரி, மற்ற மேற்கு நாடுகளும் இப்பிரச்சனைக்கு இன அழிப்பு அல்லது குழு அழிப்பு என்ற அளவில் உரிய அழுத்தம் தருவதில்லை. இதே கொடுமை கிறித்துவர்களின்மீதோ அல்லது முஸ்லீம்களின்மீதோ ஒரு நாட்டின் அதிகாரபூர்வ அரசு நடத்துமானால், மேற்சொன்ன அமைப்புகளும் அரசுகளும் 50 வருடங்களுக்கும் மேலாய் அதைப் பார்த்துக்கொண்டிருக்குமா என எண்ணிப்பார்க்கலாம். இந்துக்கள் அரசியல் ரீதியாக அணிதிரளாமல் இருந்தால், இப்படிப்பட்ட விலைபோன "நடுநிலைவாதிகளிடமிருந்தும்" ஆபிரஹாமிய அடிப்படைவாதிகளிடமிருந்தும் எப்படி தம் வாழ்வியல் உரிமையைக் காத்துக்கொள்ள இயலும்?

- பிற என்.ஜி.ஓக்கள் கைவிட்ட நிலையில், விரட்டப்பட்ட பங்களாதேஷிகள் "பங்களாதேஷ் சிறுபான்மையினருக்கான மனித உரிமைக்குழுமம் (HRCBM)" என்று தனியாக அமைத்துப் போராடி வருகிறார்கள். HRBCM வலைப்பக்கம் பங்களாதேஷ் இந்துக்களுக்கெதிரான கொடுமைகளை வெகுவாக முகத்திலறைந்தாற்போல் ஆவணப்படுத்தியுள்ளது-

முஸ்லீம்கள் சேர்ந்து இந்து ஒருவரை ரத்தம் வர வர அடித்தே கொல்லும் இந்தப் புகைப்படம் உட்பட.




http://www.hrcbm.org/(எச்சரிக்கை: இதில் உள்ள பல செய்திகளும் படங்களும் மனத்தை உலுக்குபவை):

Tuesday, May 15, 2007

யோக ஞானத்திற்குக் காப்புரிமை (patent) கேட்கும் அமெரிக்கர்கள்!

ஜாக்கிரதை! அடுத்த தடவை புஜங்காசனம் செய்வதற்கு முன்னால் நீங்கள் அதற்கான உரிமை பெற்றிருக்கிறீர்களா என்று ஒரு தடவை சரிபார்த்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால் அந்த ஆசனத்துடன் அப்படியே உங்களைத் தூக்கிக் கொண்டு போய் அமெரிக்கச் சிறைகளில் போடும் சாத்தியம் உள்ளது.

"அமெரிக்க காப்புரிமை மற்றும் ட்ரேட் மார்க் நிறுவனம் இதுவரை யோக சாதனங்கள் தொடர்பான 134 காப்புரிமைகள் (patents), 150 காபிரைட் உரிமைகள் மற்றும் யோகா தொடர்பான 2315 ட்ரேட் மார்க் உரிமைகள் இவற்றை வழங்கியிருக்கிறது" என்று சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் மற்றும் இன்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிபியூன் பத்திரிகைகளில் சுகேது மேத்தா எழுதியுள்ள இந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.

நவம்பர் 2006-ல் பிட்ஸ்பர்க் நகரத்தைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவின் எல்லா யோகா பள்ளிகளுக்கும் ஒரு அறிக்கை அனுப்பினார் - "ஓம்" என்ற மந்திரத்திற்கு அவர் ட்ரேட் மார்க் வாங்கிவிட்டதாகவும், அதனால் இந்த மந்திரத்தை ஓதுவதற்கும், ஓம் படங்களைப் பயன்படுத்துவதற்கும் அவரிடம் அனுமதி பெற வேண்டும் என்பதாக. யோகா காப்புரிமைகளைக் கண்டு கடுப்படைந்த ஒருவரது கற்பனை இது!

ஆயிரமாயிரம் வருடங்களாக பாரதத்தின் ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் உலக நன்மைக்காக உருவாக்கிய இந்தக் கலையை இன்று அமெரிக்காவின் சந்தைப் பொருளாதாரம் ஒரு பெரும் வியாபாரம் என்ற அளவிலும் கொண்டுவந்திருக்கிறது. யோக வகுப்புகள், பயிற்சிகள், புத்தகங்கள், வீடியோக்கள், உபகரணங்கள் இவை எல்லாம் அடங்கிய "யோகா சந்தை"யின் மதிப்பு ஆண்டு ஒன்றுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. யோகம் எந்த அளவிற்கு சமுதாயத்தில் ஊடுருவி உள்ளது என்பதை உணர்த்தும் நல்ல விஷயம் தான் இது. மேலும் தங்கள் உழைப்பிற்கும், திறமைக்குமான ஊதியத்தை யோகம் கற்றுத் தருபவர்கள், அந்த நிறுவனங்கள் எதிர்பார்ப்பதும் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், இதிலும் போட்டி மனப்பான்மையாலும், பேராசையாலும் உந்தப் பட்டு தங்கள் லாபங்களை மட்டும் பெருக்கிக் கொள்ள சிலர் தேர்ந்தெடுக்கும் வழிகள் தான் இந்த காப்புரிமை சமாசாரங்கள். இவர்கள் யோகா கற்றுக் கொண்டு, கற்றுக் கொடுத்து என்ன பயன்?

இந்து ஆன்மிக மரபில் வழிவழியாக வரும் கலை தான் யோகம் என்பது இன்று உலகறிந்த விஷயம். இப்படியிருக்கையில், காப்புரிமை கோரி விண்ணப்பம் செய்பவர்களுக்கு எந்த அடிப்படையில் அமெரிக்க அரசு நிறுவனம் அந்த உரிமையை வழங்குகிறது என்பது புரியாத வேடிக்கையாக உள்ளது. இத்தகைய வியாபார சுறாக்களிடமிருந்து பாதுகாப்பு வேண்டியிருப்பதால் பாரதத்தின் ஆன்மிகப் பாரம்பரியத்தில் வந்த யோக குருமார்களும் தங்கள் யோக முறைகளைக் காப்புரிமை செய்யும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள் - ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் "சுதர்ஷன க்ரியா" என்ற பிராணாயாம முறை, மகரிஷி மகேஷ் யோகியின் "ஆழ்நிலைத் தியானம்" இவற்றுக்கும் அமெரிக்காவில் காப்புரிமை உள்ளது.




இந்திய கலாசாரத்தில் ஞானம் என்பது கடைச் சரக்கல்ல என்ற கருத்து பண்டைக் காலம் முதலே வேரூன்றி உள்ளது. "ஷ்ருண்வந்து ஸர்வே அம்ருதஸ்ய புத்ரா:" (அமுதத்தின் புதல்வர்களே! எல்லாரும் கேளுங்கள்) என்று அறைகூவிய ரிஷிகள் இந்த ஞானத்தை உலகம் முழுவதற்கும் வாரி வழங்கியிருக்கின்றார்கள். இவற்றுக்கு விலை வைப்பது என்பது யோகத்திற்கு செய்யும் பெரும் அவமதிப்பு அன்றி வேறில்லை.

இந்தியாவின் எல்லா கிராமங்களிலும் அறியப் பட்ட பாட்டி வைத்திய மஞ்சள் மருத்துவமுறைகளுக்கு இதற்கு முன்பு காப்புரிமை வழங்கப் பட்டபோது தான் இந்த பிரசினையின் தீவிரம் நமக்கு உறைத்தது. இந்த வழக்கில் பல பழைய சமஸ்கிருத ஆயுர்வேத நூல்களை எல்லாம் ஆதாரம் காட்டி நாம் வெற்றி பெற்றோம். பிறகு விழித்துக் கொண்ட அரசு சம்ஸ்கிருதம்,பிராகிருதம், பாலி, தமிழ் மொழிகளில் உள்ள பழைய நூல்களில் இருக்கும் யோகம், ஆயுர்வேதம் பற்றிய விவரணங்களை வகைப் படுத்தி இவற்றை டிஜிட்டல் உருவில் கொணர்ந்து வரும் தலைமுறைகளுக்காக பாதுகாக்கும் திட்டத்தைத் தொடங்கியது. இந்தத் திட்ட செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போதே, இது போன்ற காப்புரிமைகள் வளரும் நாடுகளில் வழங்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது தான் சோகம்.

இந்தியாவில் "அறிவுக் கொள்ளை" (intellectual piracy) பெரிய அளவில் நடந்து வருகிறது என்று வளரும் நாடுகள் முறையிடுகின்றன. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் உள்ளிட்ட திருட்டு மென்பொருள்கள், ஹாலிவுட் திரைப்பட திருட்டு சி.டிக்கள் முதல் பிளாட்பாரக் கடைகளில் கிடைக்கும் உலக எழுத்தாளர்களின் நூல்கள் வரை காப்புரிமை பெற்ற பல பொருட்கள் திறந்த வெளியில் திருடப் படுகின்றன என்பது உண்மையே - ஒரு வளரும் நாட்டின் அடக்க முடியாத தாகத்தை இவை தணிக்கின்றன. ஆனால் இவை அனைத்தும் சட்டத்திற்கு எதிராகத் தான் நடக்கின்றன. இவை போக, உரிய விலை கொடுத்து இந்தப் பொருட்களை வாங்கும் இந்திய மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது இதனால் வரும் லாபக் குறைச்சலை ஓரளவுக்கு சரிக் கட்டுகிறது என்றும் சொல்லலாம்.

இந்த நிலையில் தங்கள் பாரம்பரிய ஞானத்தை வளரும் நாடுகள் திருடுவதாக இந்தியா கோபப் படுவது நியாயமா என்று கேட்கப் படுகிறது.

பல உயிர்காக்கும் மருந்துகள் பன்னாட்டு மருத்துவக் கம்பெனிகளால், இந்தியர்களின் ஆராய்ச்சி மற்றும் உழைப்பு மூலம் இந்தியாவிலேயே தான் கண்டுபிடிக்கப் படுகின்றன. இவற்றுக்கு காப்புரிமை பெற்று, இந்தியா உட்பட உலகெங்கும் விற்று கோடி கோடிகளாக வருமானம் ஈட்டும் இந்த கம்பெனிகள் அது போதாதென்று, பாரத மக்களின் பாரம்பரிய ஞானத்திற்கும் வியாபார உரிமை கோருவது எந்த வகை நியாயம்?

".. மருந்துகள், யோகா இரண்டின் தேவையும் ஆரோக்கிய வாழ்வு அளிப்பது தான். இந்தியா உலகம் முழுவதற்கும் யோகாவை இலவசமாகவே அளித்துள்ளது. அதனால் அதற்கு பிரதி உபகாரமாக உலகம் உயிர்காக்கும் மருந்துகளை குறைந்த விலையில் இந்தியாவுக்கு வழங்க வேண்டும், அல்லது குறைந்த பட்சம் இந்தியக் கம்பெனிகள் இவற்றின் குறைந்த விலை வகைகளை (cheap generics) தயாரிக்க அனுமதியாவது வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு?

பத்மாசனம் மனித குலம் முழுவதற்கும் சொந்தமானது என்றால், லூகோமியாவிற்கான "க்ளீவெக்" (Gleevec) மருந்துக்கான பார்முலாவும் அப்படித்தான். பின் ஏன் இந்த மருந்துக்கான பிரத்தியேக காப்புரிமையைக் கேட்டு ஒரு சுவிஸ் நாட்டு மருந்துக் கம்பெனி இந்திய அரசின் மீது உலக வர்த்தக நிறுவனத்திடம் வழக்குத் தொடுக்க வேண்டும்?"


மேற்சொன்ன கட்டுரையில் ஆசிரியர் வைக்கும் இந்தக் கேள்வி சிந்தனைக்குரியது.

Thursday, May 10, 2007

தமிழ் நாட்டில் பற்றி எரியும் குடும்பச் சண்டை

நேற்று மதுரையில் ஒரு பிரிவு திமுக ரவுடிகளால் தினகரன் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட அச்சு அசல் திராவிடத்தனமான வன்முறையில் இரண்டு மென்பொருள் பணியார்கள் மற்றும் ஒரு பாதுகாவலர் என மூன்று அப்பாவித் தமிழர்கள் பலியாகியிருக்கின்றனர். இந்த செய்தியை இன்று காலை படித்துக் கொண்டிருக்கும்போதே நண்பர் ஒருவரிடமிருந்து இந்த மின் அஞ்சல் வந்தது.. நான் எழுத நினைத்ததை இன்னும் நன்றாகப் பிரதிபலித்த அந்த மின் அஞ்சலை அப்படியே தருகிறேன்-

நண்பர்களே,

மதுரை நேற்று பற்றி எரிந்திருக்கிறது. எரித்தவர் கண்ணகி அல்ல. கண்ணகிக்கு சிலை வைத்தவரின் அக்னிக் குஞ்சு. தி மு க ஆட்சிக்கு வந்தால் வழக்கமாக எதிர்க் கட்சியினரரயும் எதிர்க்கும் பத்திரிகைகளையும் எரிப்பார்கள். இன்றைக்கு இவர்கள் குடும்பத்துக்குள் சண்டை, தமிழ் நாட்டையை விலைக்கு வாங்கும் அளவுக்கு பண பலம் ஒரு புறம், தமிழ் நாட்டையே தீ வைத்து எரிக்கும் அளவுக்கு ரவுடிகள் ஆட்சி மறுபுறம். ஐம்பதுகளில் சென்னையில் இருந்து சேலத்துக்கு கள்ள ரயில் ஏறிச் சென்றவருக்கு இன்றைக்கு இவ்வளவு சொத்து, பணபலம், அராஜகம், ஆட்சி அதிகாரம், பேய்கள் ஆட்சி செய்ய பிணம் தின்னும் சாத்திரங்கள்.

இதில் சம்பந்தப் படாத அப்பாவி மக்கள் கொளுத்தப் படுகிறார்கள் என்றும் சொல்ல முடியாது, "ஜனநாயக" தர்ம நியாயப் படிப் பார்த்தோமானால் இந்த அராஜகவாதிகளுக்கு ஓட்டுப் போட்டப் பாவத்துக்கு அப்பாவி மக்கள் உயிரோடு கொளுத்தப் படுகிறார்கள். அன்று சிதம்பரத்தில் ஒரு உதய குமாரன், க்ளைவ் ஹாஸ்டல் மாணவர்கள், கீழ வெண்மணி உழவர்கள், தர்மபுரியில் விவசாயக் கல்லூரி மாணவிகள், தரரசு ஊழியர்கள், இன்று அப்பாவி பத்திரிகை ஊழியர்கள். இந்த அரக்கர்கள் இன்னும் எத்தனை வருடங்கள் ஆண்டு இன்னும் எத்தனை பேர்களை உயிரோடு எரிக்கப் போகிறார்கள் ?

இப்படியாகப் பட்ட ஒரு கட்சி, ஒரு தலைவன், ஒரு ஆட்சி, இவர்களுக்கு ஒரு டி வி, அதில் வரும் ஆபாச அபத்தங்களைக் கண்டு கழித்து மூளை மழுங்கடிக்கப் பட்ட மக்கள், மரத்தை வெட்டும் எதிர்க்கட்சி, வேட்டியை கிழிக்கும் காங்கிரஸ் மொத்தத்தில் தமிழ் நாடே ஒரு அருவருப்பான பிரதேசமாக மாறி விட்டது.

இந்த குடும்ப சண்டையில் நாளைகே ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள் மாஃபியா கும்பல்கள், இதன் பின்புறம் உள்ள அரசியலையும் அதனால் தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் நேர விருக்கும் சாதக பாதகங்களையும் அரசியல் பார்வையாளர்கள் எந்த விதமான பயமும், மாச்சரியமும் இன்றி எடுத்துரைக்க வேண்டும். செய்வார்களா?