Tuesday, April 10, 2007

தலித் கிராமத்தில் தங்கினார் திருப்பதி பெருமாள்!

காலம் காலமாக வழக்கில் இருந்த வீண் சம்பிரதாயத்தை உடைத்தெறிந்து விட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் ஸ்ரீநிவாச கல்யாண வைபவம், நேற்று திருப்பதியிலிருந்து 12 கிமீ. தூரத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வேமூரு என்ற தலித் கிராமத்தில் நடந்தேறியது. திருமலை சுற்றுப் புறங்களில் உள்ள தலித் கிராமத்தில் பெருமாள் உலா வருவது இதுவே முதல் முறை என்று கூறப் படுகிறது.

(செய்தி : இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கன் க்ரோனிக்கில்)

வழக்கமாக கல்யாண உத்சவங்களில் எழுந்தருளும் உற்சவ மூர்த்திகள் இந்த கிராமத்தின் எல்லா தெருக்களிலும் உலா வந்தனர். கிராமம் முழுவதிலும் உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பெரும் ஆரவாரத்துடனும், ஆர்வத்துடனும் பெருமாளை வழிபட்டனர். நேற்றிரவு கிராமத்தில் அமைக்கப் பட்ட விசேஷ பந்தலில் பெருமாள் தங்கினார், விசேஷ பூஜைகள், பஜனைகள் நடந்தேறின. வழக்கமாக வி.ஐ.பிக்கள் மற்றும் பிரமுகர்களுக்கென்று நடத்தப் படும் "வேத ஆசிர்வாதம்" என்ற நிகழ்ச்சியும் இந்த கிராமத்தில் செவ்வாய்க் கிழமை நடத்தப் படும் என்றும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வரும் திரு. கருணாகர ரெட்டி கூறினார்.




"உண்மையான சனாதன தர்மமும், வேத நெறியும் சாதி வேறுபாடுகளுக்கு எதிரானவை, இதை நடைமுறையில் உணர்த்தவே நாங்கள் முனைந்து இத்தகைய உற்சவத்தை நடத்துகிறோம்" என்று தேவஸ்தான அதிகாரி குறிப்பிட்டார். தலித் மக்களுக்காக "தலித கோவிந்தம்" என்றொரு திட்டத்தையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பெரிய அளவில் செயல் படுத்தப் போவதாகவும் அவர் கூறினார். சமய, ஆன்மிக விழிப்புணர்வோடு, தலித் மக்களுக்கு உதவு புரியும் வகையில் கல்வி, சுகாதார சேவைகளையும் இந்தத் திட்டம் எடுத்துச் செல்லும் என்று எதிர்ப்பார்ப்போம்.

ஆந்திராவின் கிராமப் புறங்களில் கிறித்தவ மதமாற்றம் வெறித்தனமான அலவில் நடந்து வருகிறது. திருமலைக்கு உள்ளேயே சர்ச் கட்ட மிஷநரிகள் திட்டம் தீட்டியதும், ஆந்திர முதல்வர் ஒய். சாமுவேல் ராஜசேகர ரெட்டி கோவில் சொத்துக்களை கிருத்துவ மிசநரிகளுக்கு தாரை வார்க்கும் விஷயங்களும் (பார்க்க திண்ணை கட்டுரை) சில காலம் முன்பு அம்பலப் படுத்தப் பட்டன. இத்தகைய சூழலில் இந்துக் கோயில்களும், ஆன்மிகத் தலைவர்களும் முனைப்புடன் செயல்பட்டு தலித்களுக்கு சமூக அங்கீகாரங்களை வழங்கி, அவர்கள் முன்னேற்றத்திற்குத் துணைபுரியும் செயல்களில் ஈடுபடுவது மிக முக்கியமானது.




".. சண்டாள வாருலகு சரி பூமி ஒகடே" (பிராமணன் வாழ்ந்து மடிவதும் இந்த ஒரே பூமி தான், சண்டாளனுடையதும் இந்த ஒரே பூமி தான்) என்று பாடிய வேங்கடவனின் தலைசிறந்த பக்தர் அன்னமாச்சாரியார் என்று அழைக்கப் படும் அன்னமய்யாவுக்கு (இவரும் தலித் சமூகத்தை சார்ந்தவரே) செலுத்தும் உண்மையான காணிக்கையும், அஞ்சலியும் இதுவாகவே இருக்கும்.

பாதியாய் அழுகிய கால் கையரேனும்
பழிகுலமும் இழி தொழிலும் படைத்தோரேனும்
ஆதியாய் அரவணையாய் என்பாராகில்
அவரன்றோ யாம் வணங்கும் அடிகளாவார்
சாதியொழுக்கத்தால் மிக்கோரேனும்
சதுர்மறையால் வேள்வியாற் றக்கோரேனும்
போதில் நான்முகன் பணியப்பள்ளி கொள்வான்
பொன்னரங்கம் போற்றாதார் புலையர்தாமே

- திருவரங்கக் கலம்பகம்

15 comments:

Dr.N.Kannan said...

நல்ல பதிவு. எனது வலைத்தளத்தில் இது குறித்து விவேகாநந்தர் 19ம் நூற்றாண்டில் ஒரு தமிழருக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளேன். வாசிக்கவும். சாதீயம் என்பது சமூகக் கோளாறு. சமயம் என்பது இதற்கு அப்பாற்பட்டது. இதை அழுத்தமான குரலில் சொன்னவர்கள் ஆழ்வார்கள். ஆ.மார்க்ஸ் நடத்திய ஒரு பட்டறையில் வைணவம் தலித் சமயம் என்ற கட்டுரை வாசிக்கப்பட்டுள்ளது. விவேகாநந்தர் சொல்வது போல் குழந்தை அழுகிறது என்பதற்காக தொட்டிலோடு எறிந்துவிட முடியாது. சீர்திருத்தமும், சரியான புரிதலும் என்றும் நமக்குத்தேவை.

ஜடாயு said...

கண்ணன், சுவாமி விவேகானந்தர் கடிதம் படித்தேன். அதை வெளியிட்டதற்கு நன்றி.

// ஆ.மார்க்ஸ் நடத்திய ஒரு பட்டறையில் வைணவம் தலித் சமயம் என்ற கட்டுரை வாசிக்கப்பட்டுள்ளது//

சந்தோஷம் தரும் விஷயம்.

// சீர்திருத்தமும், சரியான புரிதலும் என்றும் நமக்குத்தேவை. //

ஆம். மிக முக்கிய ஆலயமான திருப்பதி மேன்மேலும் இத்தகைய செயல்கள் மூலம் மற்ற ஆலயங்களுக்கு வழிகாட்டும் என்று நம்புவோம்.

Anonymous said...

nice post,excellent work done by Thirumalai devasthanam

துளசி கோபால் said...

சாமிக்கு எல்லாரும் ஒண்ணுதானே? அவருக்கு ஏது ஜாதி?

நல்லதே நடக்கட்டும் எம் பெருமா(ளி)னின் அருளோடு.

Anonymous said...

ஜாதி மற்றும் மத வெறி இல்லாமல் வெளிவரும் உங்கள் பதிவுகளை பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டும்..

உங்கள் பதிவுகளை வெகுசன ஊடகங்கள் வெளியிட்டால் சாதி மதம் பற்றிய துவேஷம் எங்கும் கிளம்பாது...

***********

அட பண்ணாடை, சாதி மதம் போன்ற விஷயங்களை தொடர்ந்து எழுதி மனங்களில் உறங்கிக்கொண்டிருக்கும் துவேஷங்களை உசுப்பி விடும் பணியை நீ எப்போது நிறுத்தப்போகிறாயோ...!!!

ஜடாயு said...

செந்தழல் ரவி,

உங்கள் கலவையான விமரிசனத்திற்கு நன்றி.

போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே.

ஜடாயு said...

// துளசி கோபால் said...
சாமிக்கு எல்லாரும் ஒண்ணுதானே? அவருக்கு ஏது ஜாதி? //

ஆமாங்க துளசி. சாமிக்கு ஏற்கனவே தெரியும், பூசாரிக்கும் இது தெரிய வேண்டும், புரிய வேண்டும்.

// நல்லதே நடக்கட்டும் எம் பெருமா(ளி)னின் அருளோடு. //

வாழ்த்துக்களுக்கு நன்றி துளசி அம்மா.

ஜடாயு said...

// செந்தழல் ரவி said...
அட பண்ணாடை, சாதி மதம் போன்ற விஷயங்களை தொடர்ந்து எழுதி மனங்களில் உறங்கிக்கொண்டிருக்கும் துவேஷங்களை உசுப்பி விடும் பணியை நீ எப்போது நிறுத்தப்போகிறாயோ...!!! //

ரவி, எல்லார் மனங்களிலும் இயல்பாக அன்பு தான் உள்ளது, துவேஷம் இல்லை என்று நம்புபவன் நான். இந்து ஆன்மிகமும், இந்தியப் பண்பாடும் அப்படித் தான் கற்றுக் கொடுக்கிறது.

மனத்தில் குரோதமும், துவேஷமும் தான் உறங்குகிறது என்பது ஃப்ராய்டிய சிந்தனை.

இது பற்றி இலக்கிய நோக்கில் மேலும் அறிய இந்தப் பதிவைப் பாருங்க.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஜடாயு சார்.

சரியான நேரத்தில் சரியான பதிவு.
ஆலயங்களில் மிகப் பிரபலமான திருமலை திருப்பதியில் இவ்வாறு செய்யும் போது, வெகு எளிதில் பல பேரைச் சென்று அடைகிறது!
இதைப் பின்பற்றி மற்ற ஆலயங்களும் இவ்வாறு செய்யலாமே என்ற சிந்தனையை மற்றவர்க்கும் தூண்ட ஏதுவாய் அமைகிறது!

நல்ல தலைமை அமைந்தால், நல்ல செயல்கள் சட்டென்று பரவிடாதோ!
திரு கருணாகர ரெட்டி, திரு ஏபிவிஎன் சர்மா என்ற இரு அதிகாரிகளும் சமூகம் தழுவிய இறைப்பணிக்கு நல்ல துவக்கங்கள் செய்துள்ளனர். வளர்க இது போன்ற அறங்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திருமலை சுற்றுப் புறங்களில் உள்ள தலித் கிராமத்தில் பெருமாள் உலா வருவது இதுவே முதல் முறை என்று கூறப் படுகிறது//

இதற்கு முன்பு இராமானுஜர் காலத்திலும், பின்பு மாமுனிகள் காலம் தொட்டு இன்றும் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளை, வேடுவர் சேரிக்கு, வேடு பறிக்காக எழுந்தருளப் பண்ணும் வழக்கம் இருக்கிறது!

என்ன, இதை உரக்கச் சொல்லாததால், பல பேர் அறியாமால் போய் விட்டார்கள்!

//பழிகுலமும் இழி தொழிலும் படைத்தோரேனும்
ஆதியாய் அரவணையாய் என்பாராகில்
அவரன்றோ யாம் வணங்கும் அடிகளாவார்//

அருமை அருமை!

Hariharan # 03985177737685368452 said...

நல்ல விஷயம் மீண்டும்ஆரம்பமாகி இருப்பது பாராட்டப்பட வேண்டியது.

வெங்கடாஜலபதியின் இந்த அரவணைப்பு நிச்சயம் பெரிய முன்மாதிரியை ஏற்படுத்தித் தரும்.

இபோது மிக அவசியம் இது. சமூக சமய அங்கீகாரம் மாதிரி ஊக்கம் தந்து இணக்கத்தை எல்லோரிடமும் வேறு ஏதும் ஏற்படுத்தித் தராது!

இமானுவேல் ராஜசேகர ரெட்டி + சோனியா கூட்டாக ஏழுமலையை வளைப்பதைப் பெருமாளே நேரடியாகக் களம் காண இறங்கி இருக்கிறார் என எடுத்துக்கொள்ளலாம்!

ஜடாயு said...

// இன்றும் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளை, வேடுவர் சேரிக்கு, வேடு பறிக்காக எழுந்தருளப் பண்ணும் வழக்கம் இருக்கிறது!//

அப்படியா? தெரியாத செய்தி இது. எல்லா ஊடகங்களிலும் வரலாற்றில் முதன்முறையாக என்கிற மாதிரி செய்தி தருகிறார்கள்.

// என்ன, இதை உரக்கச் சொல்லாததால், பல பேர் அறியாமால் போய் விட்டார்கள்! //

உண்மை. இனிமேலும் சும்மா இருக்கக் கூடாது, உரக்கக் கூறுவோம்.

ஜடாயு said...

// இமானுவேல் ராஜசேகர ரெட்டி + சோனியா கூட்டாக ஏழுமலையை வளைப்பதைப் பெருமாளே நேரடியாகக் களம் காண இறங்கி இருக்கிறார் என எடுத்துக்கொள்ளலாம்! //

ஆமாம் ஹரிஹரன். திருமலையில் அப்பட்டமான அரசு ஆதரவுடன் நடந்து வரும் கிறித்தவ ஆக்கிரமிப்பு முயற்சிகள் பற்றி இப்போது ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் சங்க பரிவார் உள்ளிட்ட இந்து இயக்கங்கள் எவ்வளவு வேலை செய்ய வேண்டி இருந்தது என்பதை நான் அறிவேன். இப்போது ஆந்திராவின் பல முக்கியஸ்தர்களும், பிரமுகர்களும் திருமலை திருப்பதி சம்ரக்ஷண சமிதியில் இணைந்துள்ளார்கள்.

Anonymous said...

கலிநாளுக் இரங்கி கல்லிலே இறங்கிய
மறை மூர்த்தி கண்ணன்
காசினி காக்கப் புறப்பட்டு விட்டார்.

கோவிந்தா! கோவிந்தா!!

சீனு said...

//நல்ல விஷயம் மீண்டும்ஆரம்பமாகி இருப்பது பாராட்டப்பட வேண்டியது.//

மீண்டும் ஆரம்பிக்கிறதுன்னா இதுக்கு முன்னாடி நிறுத்தப்பட்டிருக்கிறது என்று தானே அர்த்தம். இந்த முறையாவது இனி வருபவரும் எடுத்து செல்லட்டும்.