Monday, April 09, 2007

கடவுளின் கண்..

இந்தப் புகைப் படத்தைப் பாருங்கள். அழகிய, செவ்வரியோடிய, கருமையும் நீலமும் அடர்ந்த விழி....?




".. கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய்" என்ற தேவாரத்தை நினைவூட்டும் இந்தப் படம் ஹெலிக்ஸ் நெபுலா என்னும் விண்வெளிப் பொருளின் காட்சி.

உலகின் கண் (ஜகத்-சக்ஷு) என்று சூரியனை வேதம் போற்றுகிறது. ஒருநாள் நம் சூரியனும் இப்படி ஆகலாம்! ஆம், சூரியன் போன்ற பெரிய நட்சத்திரம் ஒன்றின் வாழ்க்கை முடியும்போது உருவாகிய தூசியும், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களும், பிளாஸ்மாவும் கலந்த ஒரு விண்வெளி மேகத் திரள் (interstellar cloud) தான் இந்த பெரிய நெபுலா வகை! ஒரு முடிவில்லாத ஹெலிக்ஸ் வளையம் போன்று தோற்றம் தருவதால் இந்தப் பெயர்.

டெக்னிக்கலாக இது ஒரே புகைப்படம் அல்ல. நாசாவின் விண்வெளியில் சுற்றும் ஹப்பிள் டெலெஸ்கோப் மற்றும் பூமியில் இருந்து படமெடுக்கும் டெலெஸ்கோப் இவை பல கோணங்களில் எடுத்த புகைப் படங்களைக் கொண்டு கட்டமைக்கப் பட்ட நெபுலாவின் கோலம். ஒரிஜினல் புகைப்படத்தில் கொஞ்சம் வண்ணங்கள் அடர்த்தியாய்த் தீற்றி டச் அப்பும் செய்யப்பட்டுள்ளது.

அண்ட வெளியின் அழகுகளுக்கும், ஆச்சரியங்களுக்கும் அளவே இல்லை!

மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்
வான்கண் உள்ள வெளியைச் செய்தாள்
வாழி நெஞ்சில் களியைச் செய்தாள்!

- மகாகவி பாரதி ("மகா சக்தி" என்ற பாடல்)

No comments: