கிறிஸ்தவ இறையியலில் Dehellenization என்று ஒரு கருதுகோள் உண்டு. “ஹெலன் இல்லாமல் ஆக்குவது” என்ற பொருள் தொனிக்கும் இந்தப் பதத்தின் உண்மைப் பொருள் “கிரேக்கத் தாக்க நீக்கம்” என்பதாகும் (நன்றி: அருணகிரி) 16ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க சர்ச்சின் எதேச்சாதிகாரத்தை எதிர்த்து பிராட்டஸ்டண்ட் இயக்கம் எழுந்தபோது இந்தக் கருத்தியல் உருவானது. கிறிஸ்தவ மதக் கொள்கை, அதன் சின்னங்கள், சமய இலக்கியம் இவற்றில் இழையோடிக் கொண்டிருப்பதாகக் கருதப்பட்ட கிரேக்க தத்துவ ஞானம், கிரேக்க புராண, உருவவழிபாட்டு “பாகன்” மத தாக்கங்கள் இவற்றைத் திட்டமிட்டு நீக்கி, கிறிஸ்தவத்தை “சுத்திகரிக்க” வேண்டும் என்ற எண்ணத்துடன் பைபிள் முழுவதும் இந்தப் பார்வையில் வாசிக்கப்பட்டு அதன் கருத்துக்களுக்கு விளக்கமளிக்கும் “பண்டிதர்கள்” உருவானார்கள். ஆனால், மதிப்பீடுகள் மாறிவரும் நவீன காலகட்டங்களில் கிரேக்க தத்துவ தரிசனத்துடன் பைபிளும், கிறிஸ்தவமும் தொடர்புடையது என்று நிறுவுவதும் ஒருவகையில் சாதகமான நிலைப்பாடு தான் என்றும் கருதப் பட்டது. இன்றும் வாத்திகன் மற்றும் ஏனைய கிறிஸ்தவ வட்டாரங்களில் இதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பான குரல்கள் எழுந்துவருகின்றன. சர்ச்சையைக் கிளப்பிய தனது சமீபத்திய 2006ம் ஆண்டு உரையிலும் போப் இதுபற்றிக் குறிப்பிட்டார் (இந்த உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு)
முனைவர் மு.இளங்கோவன் என்பவர் திண்ணையில் சென்ற இரு வாரங்களாக எழுதி வந்த “திராவிட இயக்க திருக்குறள் பார்வைகள்” கட்டுரையைப் படிக்கும்போது இந்தச் சொல் என் நினைவில் தோன்றி மறைந்தது. பழந்தமிழ் இலக்கியங்கள், கலை மற்றும் கலாசார விஷயத்தில் DeHinduization (இந்துத்தன்மை நீக்கம்) என்கிற “சுத்திகரிப்பு” வேலையைத் தானே முதலில் தமிழகத்திற்கு வருகை புரிந்த கிறிஸ்தவ மிஷநரிகளும், பின்னர் அவர்களால் போஷிக்கப் பட்டு வரும் திராவிட இயக்கமும் செய்து வந்திருக்கின்றன?
ஆனால் இரண்டிற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. சர்ச் கிரேக்கத் தாக்கநீக்க வேலையை ஆரம்பித்த காலகட்டத்திற்கு ஒரு பன்னிரண்டு நூற்றாண்டுகள் முன்பே கிரேக்க மதமும், தத்துவமும், கலாசாரமும் கிறிஸ்தவத்தின் வன்முறைப் பரவலால் வேரறுக்கப் பட்டுவிட்டன. அதை வெளிப்படையாகக் கடைப் பிடிப்போர் யாருமில்லை. அவற்றின் ஒளியை தரிசிக்க விரும்பிய ஐரோப்பிய மறுமலர்ச்சிக் கால ஆரம்ப சிந்தனையாளர்கள் கூட சர்ச் அதிகார அமைப்பால் வேட்டையாடப் பட்டனர். பின்னர் கிரேக்கத் தத்துவம் போற்றுதலுக்கு உரியதாக மாறிவந்ததும், சர்ச் அதன் ஒளியில் தானும் குளிர்காயத் தொடங்கியது.
ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த “சுத்திகரிப்பு” தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககாலத்தில் இந்துமதம் இன்று போலவே உயிர்த்துடிப்புடன் வாழ்ந்து வந்தது. இந்திய தேசிய எழுச்சியின் நாயகர்களான விவேகானந்தர், திலகர், லாஜபத்ராய், அரவிந்தர், மகாகவி பாரதி, வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட தலைவர்கள் இந்து கலாசார அடித்தளத்தின் மீதே தேசிய எழுச்சிக்கான கருத்தியல்களைக் கட்டமைத்தனர். தமிழ்ப் பண்பாடு உள்ளிட்ட பாரத நாட்டின் அனைத்து சமுதாய வாழ்க்கை முறைகளிலும் இழையோடிக் கொண்டிருந்ததும் இந்தக் கலாசாரத்தின் கூறுகள் தாம் என்றும் அவர்கள் நாடெங்கும் எடுத்துரைத்தனர்.
ஆனால், இந்த தேசிய நீரோட்டத்திற்கு மாறாக “தமிழ்ப் பழம்பெருமை”, “நாத்திகம்/பகுத்தறிவு” என்ற இரண்டு தொடர்பேயில்லாத சண்டிக் குதிரைகள் மீது சவாரி செய்ய விரும்பியது திராவிட இயக்கம். ஒரு மிகப்பெரிய நகைமுரணாக, “நவீன” சித்தாங்களின் அடிப்படையில் எழுந்ததாகத் தன்னை சொல்லிக் கொண்ட இந்த இயக்கம் வெறித்தனமான மரபு வழிபாட்டு, இனப்பெருமைக் கொள்கைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது, அவற்றை வளர்த்தெடுத்தது. பண்டைக் கலாசாரத்தின் கூறுகளை முழுமையாக மறுக்கும் “தூய” பகுத்தறிவுவாதம் தமிழ்மண்ணில் சுத்தமாக எடுபடாது என்பதை இந்தப் பகுத்தறிவுப் பகலவன்கள் அறிந்தே இருந்தனர்.
ஆனால் கோயில்களும், சிற்பங்களும், பேரிலக்கியங்களும், பாரம்பரிய இசை, நடனக் கலைகளும், சைவ, வைணவ சமயங்களும் இல்லாமல் “தமிழ்ப் பழம்பெருமை” என்று ஒன்று இருக்கவே முடியாதே, என்ன செய்வது? இந்த ஓட்டையை இட்டு நிரப்பத் தோதாகக் கிடைத்தது கால்டுவெல் பாதிரியார் உருவாக்கிய போலியான ஆரிய-திராவிட இனவாதக் கொள்கை. அதிலிருந்து முளைத்தவையே பிராமண வெறுப்பு, இந்துமத எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு, வட இந்திய வெறுப்பு, சம்ஸ்கிருதக் காழ்ப்புணர்ச்சி எல்லாம்.
இந்தச் சட்டகம் இறுதி வடிவம் அடைந்ததும், தங்கள் கையில் கிடைத்த பழந்தமிழ் இலக்கியங்களையும், கலாசாரப் பிரதிகளையும் இந்தப் பார்வையில் திரித்து, உருமாற்றி, சிதைத்து புதுப்புது விளக்கங்கள் அளிப்பது திராவிட இயக்க குடிசைத்தொழில் போன்று ஆகியது. ஒப்பீட்டளவில் “கிரேக்கத்தாக்க நீக்கம்” செய்த பாதிரிகளுக்கு இருந்த ஆழ்ந்த புலமையில் சிறிதளவும் தேராத “புலவர்”களும், பாவலர்களும், நாவலர்களும், தமிழ்க் காவலர்களும், அரசியல் ஏவலர்களும் கூட இதில் புகுந்து விளையாடினர். “சீரங்க நாதனையும் தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளக்க” ஒருவர் அறைகூவுவார். இன்னொருவர் வானளவாவ உயர்ந்த கோபுரங்களையும், அணிமாடக் கோயில்களையும் கட்டிய தமிழனின் சிற்பக் கலை உன்னதத்தைப் பற்றி அடுக்குமொழியில், துடுக்கு நடையில் உரையாற்றுவார்!
இந்தக் கட்டுரை தரும் திராவிட இயக்க திருக்குறள் உரைப் பட்டியலில் வ.சுப.மாணிக்கம் போன்று ஒரு சில உண்மையான அறிஞர்களின் உரைகள் தவிர்த்து, பெரும்பாலான உரைகளை இன்று படித்துப் பார்க்கும், ஓரளவு இலக்கியப் பிரக்ஞையும், கொஞ்சம் மரபிலக்கியப் பயிற்சியும் உள்ள எந்தத் தமிழ் வாசகனும் அவை எவ்வளவு போலித்தனமாகவும், அறிவுசார் நேர்மை இன்றியும், குருட்டாம்போக்கிலும் எழுதப்பட்டுள்ளன என்பதை உணரக் கூடும்.
பரிமேலழகர் காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில் பட்டாச்சாரியாராக இருந்தவர் என்பது மரபு திருக்குறள் தமிழிலக்கியத்தின் ஒரு சிகரம் என்றால், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப் படும் ஈடு இணையற்ற உரையாசிரியர் பரிமேலழகர் அதற்குச் செய்த உரையை தமிழிலக்கியத்தின் சிகர தீபம் என்பதே சரியாக இருக்கும். எல்லா பழம் நூல்களையும் போல, காலம் கடந்து நிற்கும் இவ்வுரையும் சிற்சில இடங்களில் தன் காலத்தைப் பிரதிபலிப்பதாகவே இருப்பது புரிந்துகொள்ளக் கூடியதே (திருக்குறளும் இதற்கு விதிவிலக்கல்ல). ஆனால் பரிமேலழகரின் உரையில் “ஆரிய சதிவேலை”யைத் தோண்டித் துருவிக் கண்டுபிடித்துப் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருக்கும் இந்த உரையாளர்களுக்கு, அதை இன்னும் கொஞ்சம் நீட்டித்தால், அதே “ஆரிய சதிவேலை”யைத் திருக்குறளின் உருவாக்கத்திற்கே கூட மிக எளிதாகப் பொருத்திவிடலாம் என்ற அடிப்படைத் தர்க்கம் கூட புரியாமல் இருந்தது ஆச்சரியம் தான்! (திருக்குறளில் வேதநெறி பற்றிய பல குறிப்புகளை
இந்தத் திண்ணைக் கட்டுரையில் காணலாம்)
திருவள்ளுவ நாயனார், திருமயிலை
இத்தகைய தர்க்க ஓட்டைகளை அடைப்பதற்கு, திருக்குறளில் வரும் சில சொற்களுக்கு இவர்கள் பொருள் கொள்ளும் விதம், உலக மொழியாராய்ச்சிகளின் ஓட்டைச் சித்தாந்தங்கள் (crack pot theories) எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு விடும்! ‘அமிழ்தம்’ என்பதன் பொருள் பாற்கடல் அமிர்தம் அல்ல, அது அம்மா ஊட்டும் “அம்ம”மாம். ஆனால் சங்கநூல் புறநானூற்றில் “இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும்..” என்று வருகிறது, சிலப்பதிகாரம் “அலையிடைப் பிறவா அமிழ்தே” என்கிறதே என்று ஒரு சாதாரண ஆள் கூடக் கேட்கலாம். ஆனால் அதற்கெல்லாம் திராவிட அகராதியில் பதில் கிடையாது. இதை இப்படியே நீட்டி “கருமம்” என்பதற்கு “கரு மம்மம்” அதாவது கரிய சோறு (வெள்ளைச் சோறு ஆரிய உணவு!) என்றும் தனித்தமிழ்ப் பொருள் தரலாம். திருக்குறளின் “வேள்வி”யும் “வேட்ட”லும், திராவிட உரைகளில் வேட்டைக் காரனில் இருந்து வேட்டி வரை என்ன வேண்டுமானாலும் ஆகலாம். சரி, புறநானூற்றின் “இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி” யாகம் தானே செய்தான் என்றால் அதற்கும் அதிர்ச்சிகரமான பல திராவிட உரைவிளக்கங்கள் வரலாம்! தேவர்களாக இருந்த “புத்தேளி”ரை திராவிடர்கள் “புதிய தேள்”களாகக் கூட ஆக்கி விடுவார்கள்! இந்த உரைகள் எழுதப்பட்ட காலத்தில், உலகத்திலேயே அதிக அளவு மொழிக் கோமாளிகள் தமிழ்நாட்டில் தான் இருந்திருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியும். இவர்களின் தலைவரை மொழிஞாயிறு என்றும் அழைத்து தமிழக அரசு கௌரவப் படுத்தியது. இன்றும் மெரீனா கடற்கரையில் அமாவாசை தினங்களில் நடு இரவில் சில பிசாசுகள் வந்து இதுபோன்ற தனித்தமிழ்ச் சொல்லாராய்ச்சிகள் செய்துகொண்டிருப்பதாகக் கேள்வி.
“செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென” என்னும் மணிமேகலையையும் “ஊரவர் கவ்வை எருவாக, அன்னைசொல் நீர்மடுத்து” என்ற திருவாய்மொழியும் போன்று, திருக்குறளின் சொற்களையும், பொருள்களையும் அதற்குப் பின்வந்த பல நூல்கள் பல இடங்களில் நேரடியாகவே எடுத்தாண்டுள்ளன. அதனால் திருக்குறளில் புழங்கும் இத்தகைய பழம்சொற்கள் ஏதோ உறைந்து கிடந்ததாக எண்ணி, அவற்றுக்குப் “புதுமைப்” பொருள் கூற முயன்ற செயல், இத்தகைய உரையாளர்களின் இலக்கிய, மொழியியல் அறியாமையையே காட்டுகிறது. கி.வா. ஜகன்னாதன் பதிப்பாசிரியாராக இருந்து கொணர்ந்த “திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு” ஒவ்வொரு குறளுக்கும், இத்தகைய மேற்கோள்களைத் தேடித் திரட்டித் தொகுத்திருக்கின்றது (இந்த நூல் பற்றிய
எனது திண்ணைப் பதிவு)
மொத்தத்தில், திராவிட இயக்கம் நிகழ்த்த முயன்ற இந்தக் கலாசார அழிப்பு வேலையில் தமிழரின் உன்னத அறிவுக் கருவூலமான திருக்குறளும் தப்பவில்லை என்பதையே ஒரு இரங்கற்பா போன்று அந்தக் கட்டுரை சொல்லிச் செல்வதாக எனக்குத் தோன்றுகிறது.