Wednesday, February 28, 2007

யோகா: ஒரு சமுதாயத் தேவை

யோகா என்பது அடிப்படையில் ஒரு தனிமனித ஒழுக்கம், வாழ்க்கை முறை, சுய முன்னேற்ற கருவி, உடல் மற்றும் மன நலம் பேணும் ஒரு அறிவியல் சார்ந்த கலை, ஆன்மிக சாதனம் இப்படித் தான் பொதுவாக எல்லாரும் நினைக்கிறோம். ஆனால், யோகா பயின்று அதைப் பலரும் கடைப் பிடிக்கும் போது சமுதாயத்திற்குக் கிடைக்கும் நன்மை மிகப் பெரியது. இது பற்றிய என் எண்ணங்களின் தொகுப்பு இந்தக் கட்டுரை.

யோகம் என்னும் பரந்த சித்தாந்தத்தில் வேதாந்த தத்துவம் உள்ளிட்ட பலதரப்பட்ட விஷயங்கள் அடங்கும். இங்கே யோகா என்று நான் குறிப்பிடுவது ஆசனங்கள், பிராணாயாமம், தியானம், யோகக் கண்ணோட்டம் (Yogic outlook) இந்த நான்கு அம்சங்கள். நடைமுறையில் யோகம் என்னும் ராஜவீதியில் பயணிப்பவர்கள், நுழைந்திருப்பவர்கள் இந்த அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் பயின்று, கடைப்பிடிப்பது தான் நிறைவை நோக்கி இட்டுச் செல்கிறது என்பதை உணர முடியும்.

ஒரு அனுபவம்:

அண்மையில் பிப்ரவரி-2007 முதல் வாரம் பெங்களூரில் யோக, ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் வாழும் கலை (Art of Living) அமைப்பு நடத்திய நான்கு நாள் “பிராணாயாம தியான முகாம்” (Pranayam Dhyan Shibir) என்ற வெகுஜன யோக வகுப்பில் பங்கு பெற்று பல விஷயங்களைப் பார்வையிட நேர்ந்தது. (சில காலமாக யோகப் பயிற்சிகளை முறையாக செய்து வரும் நான் இது போன்ற பொது நிகழ்ச்சியில் கற்றுக் கொள்வதற்கு புதிதாக ஒன்றும் இல்லை; எனினும் சாதாரண மக்கள் யோகாவில் காட்டும் ஈடுபாடு பற்றி அறிவதற்காகவே பங்கு பெற்றேன்). பலதரப் பட்ட மக்களையும் யோகாவில் ஆர்வம் கொள்ளச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 13,000 பேர் கலந்து கொண்டனர். மென்பொருள் வல்லுனர்கள், அலுவலகப் பணியாளர்கள், சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள், குடும்பத் தலைவியர், மாணவர்கள், முதியவர்கள், பெங்களூரின் புறநகர் மற்றும் சுற்றுப் புற கிராமங்களில் இருந்து வந்திருந்தவர்கள் இப்படி. விசேஷ விருந்தினர் என்று நடிக, நடிகையர் மற்றும் சில பிரபலங்கள். அடிப்படை கட்டணம் ரூ. 350 என்று அறிவித்திருந்தும், ஆர்வமுள்ள பலரை இலவசமாகவே அனுமதித்தனர் என்றும் கேள்வியுற்றேன். சில எளிய ஆசனங்கள் மற்றும் பிராணாயாம முறைகள் (நாடி சோதனா, உஜ்ஜயி, பஸ்திரிகா) கற்பிக்கப் பட்டன. நேரடியாக ஸ்ரீஸ்ரீ அவர்களால் வழிநடத்தப் பட்ட தியானம் (Guided meditation) தினமும் இருந்தது. ஆங்காங்கே நின்று கொண்டிருந்த பயிற்சி பெற்ற தன்னார்வ உதவியாளர்கள் மிகவும் சிரத்தையுடன் தவறுகளைத் திருத்தியும், செய்து காண்பித்தும் பங்குபெற்றவர்கள் சரியாகக் கற்றுக் கொள்ள உதவினர்.





ஒவ்வொரு நாளும் பயிற்சிக்குப் பிறகு வந்த கேள்வி பதில் பற்றும் அனுபவப் பகிர்வுகளில் யோகப் பயிற்சிகள் செய்து வருபவர்கள் தாங்கள் பெற்ற விதவிதமான பயன்களை விவரித்தார்கள்; ஒரு முதிய பெண்மணி நீரிழிவு நோய் கட்டுக்குள் வருகிறது என்றார். இன்னொருவர் தினந்தோறும் அலுவலகத்தில் புத்துணர்வோடு வேலை செய்கிறேன் என்றார். ஒரு மாணவி வீட்டில் சண்டை போடுவது நின்று குதூகலம் பொங்குவதாகக் கூறினார். வேறொருவர் நினைவாற்றல், கவனம் அதிகமாகி இருக்கிறது என்றார். இன்னொருவர் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது என்றார். யோகா மூலம் தங்களது பூஜை மற்றும் வழிபாட்டில் மேலும் தெய்வீகத்தை உணர்வதாக பக்தர்கள் தெரிவித்தனர். கிராமத்தவர்கள் பலர் தியான அனுபவம் தங்களுக்கு மிக ஆழ்ந்த மன நிம்மதியைத் தந்ததாகக் கூறி, எல்லா ஊர்களிலும் இது மாதிரி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். தலைவலி, கை கால் மூட்டு முதுகு வலிகளிலிருந்து விடுபட்டதாகவும் பலர் கூறினர்.

ஒரு விஷயம் வெளிப்படையாகத் தெரிந்தது. யோகா ஒரு காமதேனு. வேண்டியவற்கு வேண்டியது தரும் கற்பக விருட்சம்.

உடல் நலம், மன நலம்:

யோகாசனங்கள் வெளி உறுப்புக்களை மட்டுமல்ல, உடலின் உள் உறுப்புக்களையும், நாடி நரம்புகளையும் உறுதியாக்குகின்றன. மேற்சொன்ன பயிற்சி முகாமில் ஒரு கிராமத்துப் பெண்ணின் அன்றாடப் பணிகளின் ஊடாகவே (நாற்று நடுதல், நீர் இறைத்தல், வீடு பெருக்குதல், உலக்கையால் இடித்தல்) பல விதமான யோக உடற்பயிற்சிகள் எப்படி வந்து விடுகின்றன என்று அழகாக விளக்கினார்கள். இப்படி சமச்சீரான உடல் இயக்கங்கள் தாமாகவே அன்றாட வாழ்க்கை முறையில் அமைந்து விட்டவர்களுக்குக் கூட ஆசனங்கள் உடலை உறுதியாக்க உதவுகின்றன. அப்படியிருக்கும்போது ஓரிடத்திலேயே உட்கார்ந்து வேலை செய்பவர்களாகவும், உடற்பயிற்சிக்கான வாய்ப்பு இல்லாதவர்களாகவும், மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளில் முதுகு ஒடிக்கும் இரு சக்கர வாகனங்கள், இடுப்பு ஒடிக்கும் ஆட்டோக்கள் போன்றவற்றில் அதிகமாகப் பயணம் செய்பவர்களாகவும் நம்மில் பலர் இருப்பதால் அதற்கென்று கண்டிப்பாக நேரம் ஒதுக்கி ஆசனங்கள் செய்தே ஆகவேண்டும்.

சூரிய நமஸ்காரம் போன்று பல ஆசனங்களையும் உள்ளடக்கிய தொடர் பயிற்சிகள் (விந்யாஸ யோகம்) குறைந்த நேரத்தில் செய்ய முடிபவை, நிறைந்த பலன்கள் தருபவை. மற்ற சில உடற்பயிற்சிகள் போன்று விலையுயர்ந்த, எந்த விதமான விசேஷ உபகரணங்களும் தேவையில்லை. ஆட்கள் அகப்பட்டால் கூட்டாகச் சேர்ந்தும் செய்யலாம், இல்லை தனியாகவும் பயிற்சி செய்யலாம்.

“நம் மூச்சின் வசத்தில் தான் வாழ்க்கை முழுதும் உள்ளது; உடலை மனத்துடன் இணைக்கும் நூலிழை மூச்சு தான்; அதனால் சுய உணர்வோடு கூடிய மூச்சின் இயக்கம் உடலை மட்டுமல்ல, மன உணர்வுகளையும் சீராக்குகிறது” என்று யோக தத்துவம் கூறுகிறது. மூச்சுப் பயிற்சிகள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அடுத்த உயர் நிலைக்குக் கொண்டு செல்கின்றன என்றால் மிகையில்லை. உதாரணமாக, உஜ்ஜயி போன்ற ஆக்சிஜனேற்றத்தை அதிகரிக்கும் பிராணாயாமப் பயிற்சியை தினந்தோறும் செய்து வருவது மாசுகளின் (environmental pollution) விளைவுகள் நம்மைத் தாக்காவண்ணம் ஒரு நிரந்தர தற்காப்பு வளையத்தை நம் உடலில் உண்டாக்குகிறது. இதை என் அனுபவத்திலேயே கண்டிருக்கிறேன். வருடாவருடம் குளிர்காலம் ஆரம்பித்தவுடன் தொற்றுகளில் சிக்கி, எப்போதும் இருமி, தும்மிக்கொண்டிருக்கும் நண்பர்கள் பலர் பிராணாயாமம் செய்ய ஆரம்பித்ததும் இந்தத் தொல்லைகளில் இருந்து முழுவதுமாக விடுபட்டிருக்கின்றனர்.

பிராணாயாமப் பயிற்சிகள் மருத்துவ சோதனைக்கு ஆட்படுத்தப் பட்டு அவற்றின் ஆச்சரியகரமான ஆற்றல்களும், விளைவுகளும் நாள்தோறும் பேசப் பட்டு வருவது மனம் நரம்பு இயைந்த தற்காப்பியல் (psycho-neuro immunology) என்ற வளர்ந்து வரும் மருத்துவத் துறையில் முக்கிய சேதி. மன உளைச்சல்கள், மனப் பிரமைகள், மனத் தடைகள் இவற்றை வரவிடாமல் தடுத்தல், குணப்படுத்துதல் இரண்டிலும் பிராணாயாமம் பெருவெற்றி கண்டிருக்கிறது.

செயல் நலம்:

செயல் புரியும் திறனே யோகம் (யோக: கர்மஸு கௌசலம்) - பகவத்கீதை





எல்லா வளர்ந்த நாடுகளிலும் ஊருக்கு ஊர் யோகா பள்ளிகள் பெருமளவு அதிகரித்து வருகின்றன. அரசு மற்றும் பொது நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் யோகா கற்றுக் கொள்வதை வலிய வந்து ஊக்குவிக்கின்றன. ஏனெனில், யோகா தினசரி அலுவல் மற்றும் தொழில் புரிதலில் ஏற்படும் அயற்சியையும், தளர்ச்சியையும் நீக்கி புத்துணர்வு அளிக்கிறது. பணியிடச் சூழலுக்குக் குந்தகம் விளைவிக்கும் ஆக்ரோஷ உணர்வுகள், அசூயை, அகங்காரம் (ஈகோ) இவற்றை பக்குவப்பட்ட, சமச்சீரான நோக்கில் கையாளும் திறனை வளர்க்கிறது. முழு ஈடுபாட்டுடனும் அதே சமயம் பற்றற்ற உணர்வுடனும் கூட செயல்புரியும் கர்மயோகம் நடைமுறையில் வருவதற்கு யோகப் பயிற்சிகள், யோக சிந்தனைகள் உதவுகின்றன. இதன் விளைவாக உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது. நிறுவனங்கள் தங்கள் இலக்குகளை எட்டி, பல சமயங்களில் இலக்குகளைத் தாண்டிச் சென்று சாதனை படைக்கவும் முடிகிறது.

உலகெங்கும், அநேகமாக எல்லா விளையாட்டு வீரர்களின் பயிற்சி வகுப்புகளிலும் யோகாவுக்கு இடம் உள்ளது. யோகா பயிற்சி செய்யும் மாணவர்களின் கற்கும் திறன், சுறுசுறுப்பு, நினைவாற்றல் இவை நன்கு வளர்ச்சியடைவதும் சந்தேகமின்றி நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

சமுதாய நலம்:

மக்கள்தொகை மிகுந்த, தரமான பொது சுகாதார, மருத்துவ வசதிகள் தேவைக்கு மிகக் குறைவாக இருக்கும் இந்திய நாட்டில் யோகா போன்று வருமுன் காக்கும் ஆரோக்கிய முறைகள் ஒரு பெரிய வரப்பிரசாதம். நோய்த் தடுப்பு ஊசிகள், சுற்றுப் புற சுகாதாரம், சத்துள்ள உணவு இவற்றோடு கூட பிராணாயாமம் போன்ற பயிற்சிகளும் எல்லா தரப்பு மக்களையும் சென்றடையச் செய்ய வேண்டும். ஏழை மக்களது தினசரி ஆரோக்கியம் ஒழுங்கு பட்டால் பலவிதமான சாதாரண வியாதிகள் வருவது பெருமளவில் கட்டுப் படுத்தப் படும்.

ஸ்ரீஸ்ரீயின் வாழும் கலை அமைப்பு மகாராஷ்டிரத்தின் பல கிராமங்களில் யோகா மூலம் குடிப் பழக்கத்தை அறவே ஒழித்திருக்கிறது. வடமேற்கு மாநிலங்களில் போதைப் பழக்கங்களில் சிக்கிக் கொண்ட ஏராளமானவர்களை யோகா மூலம் இவற்றினின்று மீட்டிருக்கிறது. மற்ற பலவிதமான சீர்திருத்த முறைகளைக் காட்டிலும் யோகா விரைவில் நல்ல பயன் தருகிறது. பக்க விளைவுகள் இல்லாமல், இத்தகைய பிரசினைகளுக்கு நிரந்தரத் தீர்வு அளிக்கிறது.

சமுதாயத்தில் வன்முறைகள், வக்கிரங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. கல்வி முறையில் நீதிபோதனைக்கான இடம் வெறுமையானது, ஆன்மிகப் பரிமாணம் போதிய அளவு கவனிக்கப் படாமல் இருப்பது, மனித உணர்வுகள் (human values) பற்றிய புரிதல் இல்லாமை இவை இதற்கான முக்கியக் காரணங்கள். ஒரேயடியாக கட்டுப்பாடுகள் போடுதல் மூலமாக அல்லாமல் இந்த விஷயங்களை இயல்பான, அழகான, மென்மையான முறையில் யோகா வாழ்க்கையோடு இணைக்கிறது.

விடலைப் பருவத்து இளைஞர்களும், யுவதிகளும் அந்த வயதைக் கடக்கையில் உடலும், மனமும் பலவித மாற்றங்களுக்கு உட்படுவதால், மிக எளிதாக தீய பழக்கங்கள் மற்றும் பலவிதமான மனப்பான்மைகளுக்கு (complexes) வசப் படுபவர்களாக இருக்கிறார்கள். புரிந்து கொள்ளுதல், புரிந்து கொள்ளப் படுதல் இரண்டுமே அவர்களுக்குப் பிரசினையாக இருக்கின்றன. ஆனால் இந்த வயதிலோ அல்லது இதற்கு வரும் முன்போ யோகா கற்றுக் கொண்டு பயிற்சி செய்யும் இளவயதினர் இந்த பருவத்தின் உற்சாகத்தையும், சவால்களையும் மிகத் தெளிவான, இயல்பான முறையில், தங்கள் இயல்பான புன்முறுவலை இழக்காமல் கையாள்கிறார்கள்! இதை என் அனுபவத்தில் பார்க்கிறேன். பல யோகப் பயிற்சி முகாம்கள் இளமைக் கூட்டங்களால் நிரம்பியிருப்பதில் ஆச்சரியம் இல்லை தான்!

யோகா சமய, சமூக நல்லிணக்கத்தை வளர்க்கிறது என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் கூறலாம். யோகத்தில் ஈடுபடுவர்கள், தியானம் செய்பவர்கள் தாங்கள் பின்பற்றும் சமய, சமூக நம்பிக்கைகளின் எல்லைகளைப் புரிந்து கொள்கிறார்கள். ஆன்மிகத் தேடல் என்பது புத்தகங்களையும், கோட்பாடுகளையும் தாண்டிய சுய அனுபவம் என்றும் தெளிவடைகிறார்கள். இந்த சிந்தனை மூலம் அவர்களது மனம் விசாலமடைகிறது. யோகம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களில் பல சாதிக் காரர்களும் இருக்கிறார்கள், இவர்களை பல சாதிக் காரர்களும் தோழமையுடன் குரு என்பதாகப் பாவித்துக் கற்றுக் கொள்ளவும் செய்கிறார்கள். பாகிஸ்தானில் “வாழும் கலை” அமைப்பு நடத்தும் யோக வகுப்புகளில் கலந்து கொண்டவர்கள் (இவர்கள் சிலரே ஆயினும்) அங்கே சிவசிவ என்று பாடுவதைக் கேட்டு ஜிகாத் செய்ய எண்ணுவதில்லை; கூடப் பாடுகிறார்கள், மனம் மகிழ்கிறார்கள்!

இன்று உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தீவிரவாதத்தின் பல கோர முகங்களை நேர்கொள்வதிலும் யோகா பெரும்பங்கு ஆற்ற முடியும். காஷ்மீர் தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட் குழுக்களுக்கு யோகா பற்றிய அறிமுகம் தர முயற்சிகள் நடந்ததாக செய்திகள் படித்த நினைவு. இன்று யோகாவை உலகெங்கும் எடுத்துச் செல்லும் பேராசான்கள் இது பற்றி மேலும் சிந்திக்க வேண்டும்.

நடைமுறைப் படுத்துதல்:

இந்தியாவைப் பொறுத்தவரை யோகா என்பது பணவசதி உள்ள, மத்திய மற்றும் மேல்தட்டு மக்களுக்கு மாத்திரம் உள்ள சமாசாரம் என்பதான கருத்தே ஒரு பதினைந்து இருபது வருடங்கள் முன்பு வரை நிலவி வந்திருக்கிறது (அதற்கும் முன்பு யோகா என்பது முக்கிய நீரோட்டத்தில் இந்த அளவு கலக்காமல் ஒரு பழம்பெருமை (exotic) விஷயம் மாதிரி மட்டுமே தான் இருந்தது என்பதும் வேதனையான உண்மை). ஆனால் இன்று இந்த நிலைமை மாறி வருகிறது.

உலகப் புகழ் பெற்ற யோக ஆசாரியர் பி.கே.எஸ்.ஐயங்கார் அவர்களிடம் “பல பேருக்கு நீங்கள் யோகா கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். அவர்களில் உங்கள் மனதுக்குப் பிடித்த சீடர்கள் யார்?” என்று கேட்ட போது அவர் சொன்ன ஒரு பெயர் அஜித்குமார். காரணம்? “அஜித்குமார் யோகாவை பாமர மக்களிடம் எடுத்துச் சென்றிருக்கிறார். பட்டி தொட்டிகளில் எல்லாம் ஏராளமான பேரை யோகா செய்ய வைத்திருக்கிறார். எனது சீடரின் இந்தப் பணியை எண்ணிப் பெருமைப் படுகிறேன்” என்று சொன்னார். யார் இந்த அஜித்குமார் என்று தேடிப் பார்த்ததில், இவர் ஒரு மறைந்த சமூக சேவகர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் முழு நேர பிரசாரகராக இருந்து, அந்த இயக்கத்தின் எல்லா தினசரி பயிற்சி வகுப்புகளிலும் யோகாசனங்களை அறிமுகம் செய்தவர். அண்மைக் காலங்களில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், பாபா ராம்தேவ், ஜக்கி வாசுதேவ் போன்ற யோக ஆசான்கள் யோக வாழ்வியலை மாபெரும் சமுதாய இயக்கங்கள் மூலம் முன்னெடுத்துச் சென்று வருகின்றனர். “ஊருக்குழைத்திடல் யோகம்” என்ற பாரதி வாக்குப் படி யோகாவைப் பரப்புவதோடு பெரிய அளவிலான சமூக சேவைப் பணிகளிலும் இந்த இயக்கங்கள் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சி தரும் விஷயம். இப்போதைக்குக் கூட சமுதாயத்தின் எல்லா தரப்பு மக்களையும் இத்தகைய இயக்கங்கள் முழுமையாக ஊடுருவி விடவில்லை. ஆனால் அது கண்டிப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்று கூறலாம்.





கடந்த டிசம்பர் (2006) முதல் வாரம் மத்திய சுகாதார அமைச்சகம் எல்லாக் கல்வி நிலையங்களுக்கும் “கோலா வெளியே, யோகா உள்ளே” என்ற அளவில் ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. உடலுக்குத் தீங்கு தரும் கோகோ கோலா போன்ற காற்றடைத்த பானங்களை மாணவர்கள் அதிகமாகக் குடித்து, பழக்கப் படுத்திக் கொண்டு தங்கள் உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்ற நோக்கத்துடன் வந்த முதல் ஆணையை எந்தப் பள்ளிகளும் முழுதாக நடைமுறைப் படுத்தியதாகக் காணோம். பல பள்ளிகளில் கான்டீனுக்குள் விற்பனையை நிறுத்தியதாகக் கண்துடைப்பு செய்துவிட்டு, வாசலிலேயே கடை போட்டு இந்த பானங்கள் விற்பனை நடப்பதாக செய்திகள் வந்தன. இது இப்படி என்றால் “எல்லா கல்வி நிறுவனங்களிலும் எல்லா மாணவர்களுக்கும் யோகா கற்றுத் தர வழிவகை செய்ய வேண்டும்” என்று வந்த இரண்டாவது அறிவிப்பு பற்றிப் பேச்சே இல்லை! நகர்ப்புறங்களில், உயர் தரமுள்ள பள்ளிகள் அனைத்திலும் இப்போது யோகா பயில வாய்ப்பு, வசதி உள்ளது. யோகா கட்டாயம் என்று இல்லாத போதும் பயன்கள் கருதி பெரும்பான்மை மாணவர்கள் பயில்கிறார்கள். ஆனால், வசதி குறைந்த மாணவர்கள் பயிலும் அரசு மற்றும் அரசுதவி பெறும் பள்ளிகள், கிராமப்புற பள்ளிகள் இவற்றில் உள்ள மாணவர்களுக்கு பெரும்பாலும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. மேற்சொன்ன ஆணையை அமல்படுத்துவதில் அரசு முனைப்பு காட்டுமா என்று தெரியவில்லை.

இன்னொரு முக்கியமான தேவை ஆசிரியர்கள். நல்ல பயிற்சியும், அனுபவமும், கற்பிக்கும் திறனும் வாய்ந்த யோக ஆசிரியர்கள் தேவைக்கு மிக மிகக் குறைவாகவே இருக்கிறார்கள், அதுவும் கூட நகரங்களில் மட்டும் தான். பலர் நல்ல கட்டணம் செலுத்தி யோகா கற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதால், இந்த ஆசிரியர்கள் இதை ஒரு முழு நேரத் தொழிலாகவே கொண்டுள்ளனர் என்பதும் உற்சாகமூட்டும் விஷயம். ஆனால் அடுத்த கட்டமாக யோகாவை எல்லா மக்களுக்கும், கிராமங்களுக்கெல்லாம் கூட எடுத்துச் செல்லும் பணியை சேவை மனப்பான்மை உள்ள யோக இயக்கங்கள் தான் செய்ய வேண்டும். அதற்கு பெருமளவில் ஆசிரியர்கள் தேவைப் படுவார்கள். நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட பெங்களூர் முகாமில் ”எத்தனை பேர் யோகா கற்றுக் கொடுக்க விரும்புகிறீர்கள்?” என்று ஸ்ரீஸ்ரீ கேட்டபோது பல கைகள் உயர்ந்தன! நீங்கள் எல்லாம் உங்கள் பெயர்களைப் பதிவு செய்து விட்டுப் போங்கள். நாங்கள் தொடர்பு கொண்டு உங்களுக்கு மேலும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்கிறோம் என்றும் அவர் கூறினார்.

இத்தகைய பொதுஜன அளவிலான யோக இயக்கங்கள் வெற்றிபெற வேண்டும். கண்டிப்பாக வெற்றி பெறும். ஏனென்றால் யோகா ஒரு சமுதாயத் தேவை.

பெண்ணடிமையை மனுநீதி வலியுறுத்துகிறதா?

சரியான பார்வையில் மனு ஸ்மிருதி : மலர் மன்னன்

ஓரு குலத்துக்கொரு நீதி என்பதுவே மனுநீதி என்று ஓசை நயத்திற்காகப் பேசிப் பேசி, சமுதாயத்தைப் பிளவு படுத்தி, மக்களிடையே ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் பழங்காலத்துப் பிற்போக்கான சட்ட நூல்தான் மனு நீதி என்கிற எண்ணம் நம்மில் பலரிடையே நிச்சயமாகிவிட்டிருக்கிறது. விருப்பு வெறுப்பின்றி, முன்கூட்டியே ஓர் அபிப்பிராயத்துடன் அணுகாமல் ஆராய்ந்து பார்த்தால்தான் மனு நீதி என்கிற மனு ஸ்மிருதி வகுத்திருக்கும் விதிமுறைகள் எத்தகையன என்னும் முடிவுக்கு வரமுடியும்.

முதலில் ஸ்மிருதி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆதியிலிருந்து தொடர்ந்து வருபவை ஸ்ருதி என்கிற செவி வழியாகத் தலைமுறை தலைமுறையாய் மிகுந்த மரியாதையுடன் ஏற்கப்பட்டு வரும் கோட்பாடுகள். நான்மறைகளும் அவற்றின் அடியற்றி வரும் உபநிடதங்களும் இவ்வகையைச் சேர்ந்தவை. கண்ணபிரான் அருளியதாக அறியப்படும் பகவத் கீதையையுங்கூட ஸ்ருதி என்று கூற வியலாதுதான். ஆனால் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு வாய்மொழியாக அது உபதேசிக்கப்பட்டமையால் அதையும் ஸ்ருதியெனக் கொள்வதில் தவறில்லை எனக் கருதுவோர் உண்டு. ஸ்மிருதி எனப்படுபவை ஏட்டில் பதிவு செய்யப்பட்ட விதிமுறைகள். வேத காலத்திற்குப் பின் வெகு காலங் கழிந்த பிறகுதான் இவை உருவாயின. பொதுவாக தர்ம சாஸ்திரங்கள் எனக் கருதப்படுபவைதாம் ஸ்மிருதி என்று அழைக்கப்படுகின்றன. மாறும் காலத்திற்கேற்ப மாற்றங்கொள்பவைதாம் தர்ம சாஸ்திரங்கள். அவ்வாறு மாற்றங்கொள்ளாமல் சில விதிமுறைகள் முரண்டுபிடித்தால் மூலாதாரமான ஸ்ருதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, ஸ்ருதிகள் என்ன சொல்கின்றனவோ அவற்றை ஏற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட ஸ்மிருதியின் கூற்றைத் தள்ளிவிட வேண்டும் என்று தர்ம சாஸ்தரங்களான ஸ்மிருதிகளே அறிவுறுத்தியிருக்கின்றன. ஸ்மிருதிக்கும் ஸ்ருதிக்கும் ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு காணப்படுமானால் ஸ்ருதியில் சொல்லப்பட்டிருப்பதைத்தான் சரியென்று கொள்ளவேண்டும் என மனு ஸ்மிருதியும் தனது இரண்டாவது சருக்கத்தின் பனிரெண்டாவது, பதிமூன்றாவது செய்யுள்களில் தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஆக, ஹிந்து சமுதாயத்திற்கு ஸ்ருதிகளான வேதங்கள்தாம் வழிகாட்டும் அறநெறிகள். மனு ஸ்மிருதியே ஒப்புக்கொண்டுள்ளவாறு, ஸ்மிருதிகள் இரண்டாம் பட்சந்தான். மனு நீதி எனப்படும் மனு ஸ்மிருதியானது ஹிந்து சமுதாயத்தின் ஒரேயரு ஸ்மிருதியல்ல. மொத்தம் உள்ள பதினெட்டு ஸ்மிருதிகளுள் ஒன்றுதான் அது. ஒரு தனி நபர், ஒரு குடும்பம், ஒரு சமுதயம், ஒரு தேசம் ஆகியவை கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகளை, தான் எழுதப்பட்ட காலத்திற்கேற்ப வகுத்துள்ளது, மனு ஸ்மிருதி. விண்ணியல், மருத்துவம் முதலான விஷயங்கள் குறித்தும் அது பேசுகிறது.


மனு ஸ்மிருதி எப்பொழுது எழுதப்பட்டது என்பதற்கு வரலாற்றுப் பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லை. எந்தக் கால கட்டத்தில் அது ஹிந்து சமூகத்தால் வார்த்தை பிசகாமல் அனுசரிக்கப்பட்டது என்பதற்கும் ஆதாரம் இல்லை. ஸ்ருதிகளான வேதங்கள் தோன்றி நீண்ட நெடுங்காலம் கழிந்த பிறகுதான் ஸ்மிருதிகளுள் ஒன்றான மனு ஸ்மிருதி தோன்றியது. மனு ஸ்மிருதிக்குப் புராண அந்தஸ்தை அளிப்பதற்காக அதனை இயற்றியவர் மனு என்கிற ஆதி புருஷன் என்று கற்பிக்கப்பட்டுள்ளது. மொத்தம் பதினான்கு மன்வந்தரங்கள் கொண்டது ஒரு கல்ப காலம் என்றும், ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் ஒரு மனு ஆதியானவர் என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. தற்சமயம் நடப்பது ஏழாவது மன்வந்தரம். இதன் ஆதிபுருஷர் வைவஸ்த மனு என்கிறது, புராணம். இந்த மனு எழுதி வைத்ததுதான் மனு ஸ்மிருதி என்று எவரும் கூறினால் அதை ஏற்பது எளிதல்ல.

வரலாற்றுக் கண்ணோட்டப்படிப் பார்த்தால் சுங்க வம்சத்துப் பேரரசர் புஷ்யமித்திரர் காலத்தில்தான் மனு ஸ்மிருதி என்கிற பெயரில் ஒரு சாஸ்திரம் எழுதப்பட்டது என்று ஒரு தரப்பினரால் கருதப்படுகிறது. ஆனால் இதற்கும் உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. ஆக, புராதன வேத காலத்து ஹிந்து சமுதாயம் இந்த மனு ஸ்மிருதியை அனுசரித்திருக்க வாய்ப்பில்லை. மனு ஸ்மிருதி எழுதப்பட்ட காலம் கி. மு. முதல் நூற்றாண்டு என ஒரு கருத்து நிலவுகிறது.

மனு ஸ்மிருதியைப் பற்றிய பிரதான கருத்துகள் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்தான் வெளிப்படலாயின. இவை பெரும்பாலும் ஹிந்து சமய நம்பிக்கைகளையும் ஹிந்து சமூக நடைமுறைகளையும் இழிவானவை என நிறுவவேண்டும் என்கிற நோக்கத்துடன்தான் தெரிவிக்கப்பட்டன. மேலும் மனு ஸ்மிருதியின் மீதான கடுமையான விமர்சனங்கள் பெரும்பாலும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டுத்தான் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த மொழிபெயர்ப்புகள் ஐரோப்பியர்களால், அவர்களின் கண்ணோட்டத்திற்கும் புரிந்துகொள்ளும் ஆற்றலுக்கும் பயிற்சிக்கும் ஏற்பவே இருக்கும் என யூகிப்பதில் தவறிருக்காது.

மனு ஸ்மிருதியில் மொத்தம் 2031 செய்யுள்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு ஒழுக்க விதியை வலியுறுத்துகிறது. ஆனால் இந்த 2031 விதிமுறைகளும் எந்தக் கால கட்டத்திலேனும் ஹிந்து சமூகத்தால் பாரத தேசம் முழுவதும் ஒட்டுமொத்தமாகக் கடைப்பிடிக்கப்பட்டதாகக் கூறுவதற்கில்லை.
மனு ஸ்மிருதியை ஆதாரம் காட்டிப் பேசப்படுகின்ற விதிமுறைகள் பலவும் அவரவர் கன்ணோட்டப்படியான விளக்கவுரைகளேயன்றி நேரடியான மொழிபெயர்ப்புகள் அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த தலை சிறந்த சமூக சீர்திருத்தத் துறவியும், ஆரிய சமாஜம் என்னும் அமைப்பை உருவாக்கியவருமான சுவாமி தயானந்த சரஸ்வதி மனு ஸ்மிருதிக்கு ஒரு விளக்கம் தந்துள்ளார். மனு ஸ்மிருதியின் செய்யுள்களிலேயே பல ஒன்றுக்கொன்று முரண்படுவதை அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது, ஒவ்வொரு கால கட்டத்திலும் அவ்வப்போதைய வாய்ப்புகளுக்கு இணங்க மனு ஸ்மிருதியில் இடைச் செருகல்கள் நுழைந்து விட்டிருக்கின்றன என்பதுதான். ஒன்றோடொன்று முரண்படும் விதிமுறைகளைக் கண்டறிந்து இன்றைய காலகட்டத்திற்கு எந்த விதிமுறைகள் பொருந்துகின்றனவோ அவற்றை ஏற்றுக்கொண்டு பொருந்தாதவற்றைப் புறக்கணிப்பதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக, மனு ஸ்மிருதியின் இரண்டாம் சருக்கத்தின் தொண்ணூற்றேழாவது செய்யுள் கீழான குணவியல்புகள் உள்ள வர்கள் வேதமெய்ப்பொருளை அறியவியலாது என்று கூறுகிறது. பிறவியின் அடிப்படையில் பேசப்படாமல் குண நலன்களையே வலியுறுத்துவதாக இது இருப்பதால் இதனை ஏற்பதுதான் முறையாக இருக்கும்.
ஆண், பெண் என்கிற பேதமின்றி எல்லாக் குழந்தைகளையும் ஐந்து அல்லது எட்டாவது வயதிலாவது கட்டாயக் கல்வி பெறச் செய்வது பெற்றொருக்கு மட்டுமின்றி அரசுக்கும் நிர்வாக சபைகளுக்கும் கடமை யென்று ஏழாவது சருக்கத்தின் 152 வது செய்யுள் விதிக்கிறது. குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யத் தவறுவது தண்டனைக்குரிய குற்றம் என்றே இச்செய்யுள் எச்சரிக்கிறது. எனவே பெண்களுக்குக் கல்வி அவசியமில்லை என விதிமுறை ஏதும் இருக்குமானால் முரண்பாடான அந்த விதியைத் தூக்கி யெறிந்துவிடலாம்.


திருமணத்தைப் பற்றிப் பேசும்போது, தனது ஒன்பதாவது சருக்கத்தின் தொண்ணூறாவது செய்யுளில் ஒரு பெண்ணுக்கு உரிய பருவத்தில் தன் தகுதிக்கு ஏற்ற கணவனைத் தேர்வு செய்துகொள்ளும் உரிமையை மனு ஸ்மிருதி உறுதிசெய்கிறது. எனவே பாலிய விவாகத்தை அது வலியுறுத்துவதாகக் கருதத் தேவையில்லை.

திருமணப் பொருத்தம் என்பது மனப் பொருத்தம், குண வியல்புகளுக்கியைந்த கருத்தொற்றுமை, உடல் ஆரோக்கியம் ஆகியவைதான் என்று மனு ஸ்மிருதி கூறுகிறது. அவரவர் வகுப்பில் மணம் செய்துகொள்வது அவசியம் என்று கூறுகையில் இவற்றைத்தான் மனு ஸ்மிருதி வலியுறுத்துகின்றதேயல்லாமல் பிறவியின் மூலம் வருகின்ற வகுப்பைக் குறிப்பிடவில்லை.

பெண்களை மிக உயர்வாகப் போற்றும் பல செய்யுள்களை மனுஸ்மிருதியில் காணலாம். மூன்றாவது சருக்கத்தின் அறுபத்திரண்டாவது செய்யுள் மனைவியைக் கணவன் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என விதிக்கிறது. மகிழ்ச்சியில்லாத மனைவி இருக்கிற குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்காது என்று மனு ஸ்மிருதி எச்சரிக்கிறது. பெண்களை தந்தைமாரும் சகோதர்களும், ஏன் கணவனுங்கூட வணங்கக் கடமைப் பட்டிருப்பதாக அது கூறுகிறது. பெண்களுக்குக் குடும்பங்களில் நல்ல உணவு, சிறந்த ஆடையாபரணங்கள் ஆகியவற்றை அளித்து மகிழ்விக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதி விதிக்கிறது. பெண்கள் மதிக்கப் படுகின்ற குடும்பங்களிலும் சமுதாயத்திலும்தான் சிறந்த மனிதர்கள் தோன்றுவார்கள் என்று மனு ஸ்மிருதி அறிவுறுத்துகிறது. பெண்கள் துன்புறும் நிலை இருக்கின்ற குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது என்று அது சொல்கிறது. பெண்களை மதிக்காத சமுதாயத்தில் எத்தனை நல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றால் பயன் விளையாது என்கிறது, மனு ஸ்மிருதி. அதன் மூன்றாவது சருக்கத்தில் ஐம்பத்தைந்திலிருந்து, ஐம்பத்தொன்பது வரையிலான செய்யுள்கள் பெண்கள் நல னையே பிரதானமாக வலியுறுத்துகின்றன.

தகப்பன் பெயர் இல்லையேல் தாயின் பெயரால் பிள்ளைகள் அறியப்படட்டும் என்று சொல்கிற நடைமுறை வேத கால சமுதயத்தில் இருந்திருக்கிறது. பெண்கள் ஆண்களோடு சரி சமானமாக அமர்ந்து தத்துவ விசாரங்களிலும் தர்க்கங்களிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என்பதற்கும் சான்றுகள் உண்டு. எனவே பெண்ணடிமை முறையும், பெண்களை அறிவார்ந் த சபைகளிலிருந்து விலக்கி வைக்கும் போக்கும் இடையில்தான் நுழைந்திருக்கக்கூடும் எனப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்குச் சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனு ஸ்மிருதியில் அதற்கு ஏற்ற இடைச் செருகல்கள் உள்நோக்கத்துடன் நுழைக்கப்பட்டிருக்கலாம் என யூகிக்க முடியும்.
மனு ஸ்மிருதியின் பத்தாவது சருக்கத்தில் உள்ள அறுபத்தைந்தாவது செய்யுள் ஒரு சூத்திரன் பிராமணனின் நிலைக்கு உயர்வதும் அதேபோல் ஒரு பிராமணன் சூத்திரனின் நிலைக்குத் தாழ்வதும் சாத்தியம் என்று சொல்கிறது. சத்திரியர், வைசியர் விஷயத்திலும் இது பொருந் தும் என்று அது மேலும் விளக்குகிறது. இதிலிரு ந்து பிறவியின் பயனாக வர்ணங்கள் அமைவதில்லை, குணநலன்களின் அடிப்படையில்தான் அவை நிர்ணயிக்கப்படுகின்றன என்று மனு ஸ்மிருதி வலியுறுத்துவதாகக் கொள்ளமுடியும்.


மேலும், பிராமணன் ஒரு குற்றம் இழைத்தால் அதற்கு மிக அதிக பட்ச மாகவும், அதே குற்ற்றத்தை இழைத்த சத்திரியனுக்கு அதைவிடச் சிறிது குறைவாகவும் வைசியனுக்கு அந்தக் குற்றத்திற்கு மேலும் குறைவாகவும் சூத்திரனுக்கு மிக மிகக் குறைவாகவும் தண்டனை விதிக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதி நிர்ணயிக்கிறது. காரணம், பிராமணனாக அறிவு நிலையில் உயர்ந்திருப்பவன் தெரிந்தே குற்றம் இழைத்திருப்பான் என்று கொள்ளவேண்டும் என அது விளக்குகிறது. பிற பிரிவினரை ஓரளவுக்கே விவரம் தெரிந்தவர்களாகக் கருத வேண்டுமாதலால் அதற்கேற்பக் குறைவாகவும், சூத்திரன் தனது அறியாமையால் குற்றம் இழைத்திருப்பான் ஆதலால் மிக மிகக் குறைவாகவும் அதே குற்றத்திற்குத் தண்டணை விதிப்பதே பொருத்தம் என்கிறது, மனு ஸ்மிருதி.

மனு ஸ்மிருதியைப் பற்றிய விரிவான பிரஸ்தாபம் காலனி யாதிக்க காலத்தில்தான் தலையெடுத்தது. குறிப்பாக ஹிந்து சமூகத்தைக் குறை கூறி, மேற்கத்திய நாகரிகமும் சம்பிரதாயங்களும்தாம் மேன்மையானவை என்று மனதில் பதிய வைப்பதற்குத்தான் அத்தகைய பிரஸ்தாபம் பயன்படுத்தப் பட்டது. ஆங்கிலக் கல்வியின் வழியாகத் தம் தாயகத்தின் கலாசாரத்தையும் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் காணப் பழகியவர்களுக்கு காலனியாதிக்கக் கல்வியாளர்கள் மனு ஸ்மிருதி பற்றி வெளியிட்ட கருத்துகள்தாம் வேத வாக்காகவும் அமைந்துவிட்டன. அந்த அடிச்சுவட்டில் தொடர்ந்து நடப்பவர்களிடையே மனு ஸ்மிருதியைப் பற்றி ஒருதலைப்பட்சமான கருத்து நிலவுவது இயற்கைதான்.


பின் குறிப்பு:

திண்ணை இதழில் முதுபெரும் எழுத்தாளர் திரு. மலர்மன்னன் எழுதிய கட்டுரை இது. அவர் அனுமதியுடன், அதை இங்கே மீள் பதிப்பிக்கிறேன்.

பெண்கள் பற்றி பொதுவாக மனு மிக உயர்வாகவே கூறிச் செல்கிறார், அவர் பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தவில்லை என்று சுதந்திரமான வாசிப்பில் நானும் புரிந்து கொண்டிருக்கிறேன். அதனால், இது பற்றிய திரு. மலர்மன்னன் கருத்துடன் உடன் படுகிறேன்.

पुराणमित्यॆव न साधु सर्वं, सन्त: परीक्ष्यान्यतरात् भजन्ते ।
तातस्य कूपोयमिति ब्रुवाण:, क्षारम् जलं कापुरुषा: पिबन्ति ॥

இந்த சம்ஸ்கிருத சுலோகம் கூறுகிறது -

தொன்மையானது என்பதாலேயே எல்லா விஷயமும் நல்லது ஆகி விடாது
சான்றோர்கள் நன்கு சோதித்துப் பார்த்தபின்பே ஒரு விஷயத்தைப் போற்றுவார்கள்
முட்டாள்கள் தான் தன் தாத்தா வெட்டிய கிணறு என்பதற்காக
அதில் வரும் உப்புத்தண்ணீரையும் குடித்துக் கொண்டிருப்பார்கள்!

அதனால், வர்ணாசிரமம் பற்றிய மனுஸ்மிருதியின் கருத்துக்கள் பலவும் எனக்கு ஏற்புடையவை அல்ல. சுவாமி விவேகானந்தரையும், டாக்டர் அம்பேத்கரையும், ஸ்ரீநாராயண குருவையும் முன்னோடிகளாகக் கொண்டு, சாதிப் பாகுபாடுகளையும், சாதீயத்தையும் வேரோடு ஒழிக்கப் பாடுபடும் இந்துத்துவ நிலைப்பாடே என்னுடையது.

ஆனால் மனுஸ்மிருதி என்பது முழுக்க ஒரு தீய நூல் போன்றும் மனு ஒரு அரக்கன் போன்றும் கூறும் சித்தரிப்புக்களே தொடர்கின்றன. இதுவும் தவறு என்று நான் கருதுகிறேன். திருக்குறளில் கூடக் காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்கள் உள்ளன. அதற்காக அந்த நூலையே தூக்கிப் போட்டு விடுவதில்லை நாம், அதில் வரும் நல்லவற்றை எடுத்துக் கொள்கிறோம் அல்லவா? அது போன்று தான் மனுஸ்மிருதியும் மதிப்பிடப் படவேண்டும்.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

Friday, February 23, 2007

இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன? - ஜெயமோகன்

சில நாட்கள் கழித்து திண்ணையில் ஜெயமோகன் எழுத்துக்களைப் பார்த்து மகிழ்ச்சி. என்றும் வற்றா ஜீவநதி - இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன? என்ற தலைப்பில் அவர் கல்லூரி மாணவர்களுக்கு ஆற்றிய எளிய உரையின் இந்தக் கட்டுரை வடிவம் இலக்கியத்தில் கொஞ்சம் ஆர்வமுள்ளவர்கள் கூடப் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.

நவீனத்துவம் என்னும் இலக்கிய வடிவத்தின் கூறுகளை எளிமையாக எடுத்துச்சொல்லி, இவ்வகையான இந்திய இலக்கியம் எப்படி மேற்குலக நவீனத்துவ இலக்கியம் போன்று இல்லாமல் "உக்கிரமான வெறுமையின் சாரத்திலும் கனிவைக் காணும்" போக்கை அடைந்தது என்று தனக்கே உரிய பாணியில் விளக்குகிறார்.

..ஓயாது ஒழியாது இன்பத்திற்காக தவித்தபடியே இருக்கிறது மனிதமனம். அழியாத இந்த ஆனந்த வேட்கையே மனதின் இயல்பான நிலை. ஏன் மனம் ஆனந்தத்தை நாடுகிறது? ஏனெனில் மனித மனம் ஆனந்தத்தால் ஆனது. ஆனந்தமே அதன் சகஜ நிலை. எதனாலும் தீண்டபப்டாதபோது அது ஆனந்தமாகவே இருக்கிறது . தன் இயல்புநிலைக்குச் செல்ல அது எப்போதும் ஏங்கியபடியே உள்ளது

ஆனந்தம் ப்ரஹ்மேதி வ்யஜானாத்.. "ஆனந்தமே பிரம்மத்தின் இயல்பு நிலை என்று அறிவாய். ஆனந்தத்திலிருந்து தான் இந்த உயிர்கள் எல்லாம் உண்டாகின்றன. ஆனந்தத்தில் தான் உண்டாகிய உயிர்கள் வாழ்கின்றன. ஆனந்தத்திலேயே அவை சென்று ஒடுங்குகின்றன" (தைத்திரிய உபநிஷத், யஜுர்வேதம்) என்னும் உபநிஷதக் கவிதையின் எதிரொலியாக உள்ளது மேற்சொன்ன ஜெயமோகன் கருத்து. இந்த இந்திய சிந்தனை இழை தான் எவ்வளவு ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது!

ஆம் மனித மனத்தை அதன் திரைகளை விலக்கிப் பார்த்தால் தெரிவது காமம் வன்முறை அகங்காரம் ஆகியவைதான். நம் மரபு இதை 'காமகுரோதமோகம்' என்றது. திரைவிலக்கி அதை காட்டுவதுடன் திருப்தியடைகிறது ·ப்ராய்டியம். ஆனால் அதுவும் ஒரு திரை. அதையும் நாம் விலக்க முடியும். அதர்கும் அப்பால் தெரிவது என்ன?

அருமையான ஒப்பீடு. "மனிதன் ஏன் அனிச்சையாகவே பாவச் செயல்களில் ஈடுபடுகிறான்?" என்று அர்ஜுனன் கேட்கிறான். "காமம் தான், குரோதம் தான், ரஜோகுணத்தில் உண்டான இவைகள் தான் காரணம். நெருப்பை புகை போலும், கண்ணாடியை அழுக்கு போலும் மறைத்திருப்பவை இவை தான்" என்று கண்ணன் கூறி, இவற்றை அறுத்தெறிய வேண்டும் என்று சொல்கிறான். இந்திய ஆன்மிக தத்துவமும், இந்திய இலக்கியமும் ஒன்றுபடும் புள்ளி இது.

இந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிடும் பிரேம்சந்தின் 'லட்டு' என்ற கதையை ஹிந்தியிலேயே படித்திருக்கிறேன். மனித மனத்தின் பாசாங்குகளுக்கும், அழுத்தங்களுக்கும் உள்ளே பொதிந்திருக்கும் அன்பைக் கூறும் இந்தக் கதையை, மனித மனதின் அடித்தளத்தில் தேங்கி நிற்கும் கயமையைக் காட்டும் அவரது கஃபன் (சவசல்லா என்ற பெயரில் தமிழில் வந்துள்ளது) என்ற கதையுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். அருமையான கதைகள் இரண்டும்.

. அந்த ஆனந்தமே இலக்கியத்தின் மையம்.
பல்லாயிரமாண்டுகளுக்கு முன் நம் பேரிலக்கியங்கள் அந்த சாரத்தைக் கண்டுகொண்டன. மீண்டும் மீண்டும் நம் இலக்கியங்கள் அந்த சன்னிதிமுன்னர் சென்று தலைவணங்கி நிற்கின்றன. லட்சியவாதமோ நவீனத்துவமோ பின் நவீனத்துவமோ எதுவானாலும்.


"எத்தனையோ மாற்றங்களுக்கு நடுவிலும் இலக்கியம் படைக்கும் இந்திய மனதில் ஒரு மாறாத்தன்மையும், தொடர்ச்சியும் உள்ளது, இந்திய ஓவியங்களிலும் சிற்பங்களிலும் உள்ளது போன்றே" என்று ஸ்ரீஅரவிந்தர் கூறுவார். (.. "There is a persistence, a continuity of the Indian mind in its literary creation in spite of great changes as consistent as that which we find in painting and sculpture." - Foundations of Indian culture).

பல்வேறு மொழிகள், பிரதேசங்கள், மக்கள் மற்றும் இலக்கியப் போக்குகளின் ஊடாக வாழும் "இந்திய இலக்கியம்" என்பதற்கு ஒரு மையம், சாரம் உள்ளது. அதை மிக அழகாக உணர்த்தியது இந்தக் கட்டுரை.

தமிழும் தனித்தமிழும்! : ஜெயகாந்தன்

தமிழ் ஒரு மொழி. தனித் தமிழ் ஒரு முயற்சி. தனித் தமிழே தமிழ் மொழியல்ல.

இந்தத் தெளிவு எனக்கிருப்பதால் தனித்தமிழ் மீது எனக்கு வெறுப்பில்லை. இந்தத் தெளிவு இல்லாததினால் தனித்தமிழ்ப் பிரியர்கள் தம்மை அறியாமலேயே தமிழை வெறுத்து வருகிறார்கள்.

தமிழனது சமுதாய வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் கலப்புகள் நிகழ்ந்திருக்கிறதோ அப்பொழுதெல்லாம் தமிழ் மொழியில் கலப்பு நிகழ்ந்திருக்கிறது. இவ்விதக் கலப்பினாலேயே அவனது வாழ்க்கை வளமுற்றது போல - அவனது மொழியும் வளம் பெற்றிருக்கிறது.

தனிப்பட்ட சொந்த வாழ்க்கையின் இத்தகைய கலப்புக்களையெல்லாம் தவிர்க்க முடியாமல் ஏற்றுக் கொண்டுவிட்ட சிலர், மொழி மட்டும் தனித்திருக்க வேண்டுமென்று ஆசையுற்று அவ்வித முயற்சியில் இறங்குவது ரசனைக்குரியதே. ஒரு முயற்சி என்ற முறையில் அதிலிருக்கும் பலவீனமான அழகைக் கூட என்னால் ரசிக்க முடிகிறது. எனினும் அதுவே தமிழ் என்பதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அந்தத் தனித்தமிழ் முயற்சியில் சில வியாசங்கள் வரையலாம். நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதிக் கொள்ளலாம். மேடையில் மிகுந்த ஜாக்கிரதையோடு கூடிய ஒரு சமத்காரத்தோடு கூற வந்த விஷயத்தைக் கூற முடியாமலேயே - தமிழின் தனித்துவத்தைக் காப்பாற்றக் கூடிய முயற்சியில் வெற்றியோ, தோல்வியோ பெற்று ஒருவாறு பேசி முடிக்கலாம்.

என்னதான் செய்தாலும் இந்தத் தனித்தமிழில் ஒன்றை மட்டும் செய்ய முடியாது. இலக்கியம் சிருஷ்டிப்பது என்ற மகத்தான காரியத்தைக் கம்பியில் நடப்பது போன்ற இந்தத் தனித்தமிழ் என்கிற 'பாலன்ஸ்' கூத்தின் மூலம் நிறைவேற்றவே முடியாது.

ஒரு மொழியெனின் அதில் இலக்கியம் உருவாக வேண்டும். வாழ்க்கையைப் புறக்கணித்து இலக்கியங்கள் உருவாவதில்லை. இன்றைய தமிழ் இலக்கியம் என்பது - உலக அளவிற்கு உட்பட்ட துறைகளில் உருவாவது, உரைநடையில் நிறைவேறுதல் வேண்டும். உரை நடையென்று செய்யுளுக்கு வந்த உரைபோல அமைதல் கூடாது. எந்த அளவுகு நடைமுறை வாழ்க்கையோடு - அதன் பிரத்தியேக அழகுகளோடு வசனம் இசைந்து உருப்பெறுகிறதோ அந்த இசையையே வசனத்தின் வளர்ச்சியெனக் கொள்ளூதல் வேண்டும். அதற்குமேல் நவீன இலக்கியங்கள் நாம் சந்திக்கின்ற மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

பாத்திரப் படைப்பு என்பது ஒவ்வொன்றும் தனித்தன்மையோடு விளங்க - இது இந்தக் காலத்தை - இந்தச் சூழ்நிலையை - இந்தப் பிரதேசத்தை - இந்த வர்க்கத்தை என்றெல்லாம் சம்பாஷணைகளின் மூலமும் சிந்தனைகளின் மூலமும் ஆசிரியனின் விவரிப்பின் மூலமும் நிலை பெறுதல் வேண்டும்.






இந்தச் சாதனையைத் தனித்தமிழ் என்ற ஒரு சாதாரண முயற்சி சாதிப்பது துர்லபம். ஏனெனில் தனித்தமிழ் என்பது ஒரு வாழ்க்கை உண்மையில்லை; அது ஒரு மனமயக்கம்! அல்லது ஒரு குழுவின் விருப்பம். இதற்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லாதிருப்பதே இதன் சிறப்பு.

(எனவேதான் இதனை ஒரு முயற்சி என்று குறிப்பிட்டேன்.)

இதில் ஒரு வெறியோடு சம்பந்தப்பட்ட சிலர் தங்களது சிந்தனைகளையெல்லாம் மனத்துள் மொழிபெயர்த்து நண்பர்களோடு உரையாடுகையில் பேசிக்கொள்கிறார்கள். இவர்கள் தங்களது கையாலாகாத்தனம் வெளிப்படுகையில் கூட வெட்கப்பட்டு இதனைக் கைவிடுவதில்லை. இவர்கள் உண்மையின் ஒளியின்றி உதட்டால் பேசுவதைக் காணும்பொழுது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளக்கூடிய மாய்மாலக்காரர்களாகவே எனக்குத் தோன்றுகிறது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு இவர்களது அசட்டுத்தனம் மாறிப் போனதை நான் பார்க்கிறேன்.

இந்தத் தனித்தமிழ் இலக்கியம் சமைப்பதாக எண்ணிக் கொண்டு எழுதித் தள்ளிய பேராசிரியர்கள்கூட அந்த வழியினின்றும் இன்று மாறியிருக்கிறார்கள். இன்னும் இலக்கியம் இவர்கள் கையில் உருப்பெறாததற்குக் காரணம் இது ஒன்றுமட்டுமல்ல; தனித்தமிழ் ஒரே மாதிரிதான் இருக்கும். அதிலே பல்வேறுபட்ட நடைகளும் சாத்தியமில்லை.

ஒரு நடைதான் சாத்தியமெனில் அது ஒரு மொழியா?


வேறு மாதிரியான ஒரு நடையே சாத்தியமில்லையெனில் பல்வேறு தரப்பட்ட பாத்திரங்களை சிருஷ்டிப்பது சாத்தியமாகாது.

தனித் தமிழ்தான் தமிழ் எனில் இலக்கியம் படைக்க லாயக்கற்ற மொழி தமிழ் என்றாகும்.

தனித்தமிழ் என்பது ஒரு நினைப்புத்தான். தனித்தமிழ் என்று நினைத்துக் கொண்டிருப்பினும் இவர்களால்கூட அறியாமை காரணமாகப் பிறமொழிச் சொற்கள் உபயோகிக்காமல் இருக்க முடிவதில்லை.

ஆனால் பாவம், இவர்களுக்கு அது தெரியாது. தமிழ் தனியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கும் தனியாக இருக்கிறது என்று நம்புகிறவர்களுக்கும் கூடத் தெரியாமலேயே தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்திருக்கின்றன. தமிழ் பிறமொழிகளில் கலப்பதும் பிற மொழிகள் தமிழில் கலப்பதும் விஞ்ஞானப் பூர்வமான ஒரு விளைவு என்பதனால்தான் இதனை அவ்வளவு சீக்கிரம் பிரித்து விடவும் முடிவதில்லை.

திரு.வி.கே. சூரியநாராயண சாஸ்திரிகள் தமது பெயரைத் தனித்தமிழில் மாற்றிக் கொள்வதாக எண்ணி, சூரியன் - பரிதி, நாராயணன் - மால், சாஸ்திரி - கலைஞன் என, மொழிபெயர்ப்பதாக எண்ணி வேறு சமஸ்கிருதச் சொற்களில் மாற்றி 'பரிதிமாற்கலைஞன்' என்று வைத்துக் கொண்டார் என்பது ரொம்ப ரஸமான விஷயந்தான்.

பரிதி என்பதும், மால் என்பதும் சமஸ்கிருதச் சொற்களே!


ஒரு பொருளைக் குறிக்கப் பல வார்த்தைகளிருப்பது ஒரு மொழியின் செழுமை. அவ்விதம் இருக்கின்ற வார்த்தைகளை மொழி ஆராய்ச்சியாளர்கள் எந்தெந்த வார்த்தைகள், எந்தெந்தக் காலத்தில், எதனெதன் விளைவாய் எந்தெந்த மொழிகளில் இருந்து வந்திருக்கக் கூடுமென்பதை ஆராய்ந்து குறிக்கலாம். இதற்கு உதவுபவை அம்மொழியின் இலக்கியங்களேயாகும்.

அதாவது இத்தகைய கலப்புக்களை அவ்விலக்கியங்கள் பிரதிபலித்திருக்கக் கூடும் என்று கொள்ளுதல் வேண்டும்.

நாவாய் என்ற வார்த்தை தமிழர் நாகரிகம் கடல் கடந்து சென்ற காலத்திற்கு முன்பு தமிழக மண்ணில் யவனர்கள் வாணிகஞ் செய்யும் பொருட்டு வருவதற்கு முன்பு இருந்திருக்க முடியுமா என்பதை ஆராய வேண்டும்.

நாவாய் என்ற சொல் கப்பலைக் குறிக்கின்ற தனித் தமிழ் சொல்லெனக் கருதுதல் வேண்டா. அஃது கிரேக்க மொழியின் 'நோவே' என்ற கப்பலைக் குறிக்கின்ற சொல்லின் திரிபேயாகும்.

இவ்விதம் திரிந்து பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் இவ்வார்த்தை இருத்தல் கூடும். ஆங்கிலத்தில் 'நேவி' என்றிருப்பது போல.

தமிழ் இலக்கியங்களைப் பார்த்தால் ஒவ்வொரு காலத்து இலக்கியமும் அந்தந்தக் காலத்தைப் பிரதிபலிப்பனவையாயிருக்கின்றன. அவையாவும் ஒரே செய்யுள் வடிவில் இருப்பினும் ஒரே மாதிரியாக இல்லை.

தமிழுக்கு சிரஞ்சீவித் தன்மை தந்த தமது முற்காலத்துக் கவிஞர்கள் எல்லாம் வாழ்க்கையில் வந்து கலந்த பிறமொழிச் சொற்களைக் கைவிட முடியாமல் கையாண்டு நமது இலக்கியங்களூக்குச் செழுமை தந்திருக்கின்றனர். அதற்கு இடங்கொடுக்காத இலக்கணத்தை அவர்கள் இழுத்து வளைத்திருக்கிறார்கள். அவர்கள் இழுப்பிற்கு இலக்கணம் வளைந்து கொடுத்தும் இருக்கிறது. அதன் மூலம் அவர்கள் புதிய இலக்கணத்தை உருவாக்கியுமிருக்கிறார்கள்.

அன்று அவர்கள் இலக்கியம் சமைத்திருப்பது செய்யுள் உருவத்தில். அவர்களே இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார்கள் என்றால் - அவர்கள் காலத்தைவிட எத்தனையோ மடங்கு வேகமானதும் விரைவானதுமான, அதிகக் கலப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் கால வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நவீன இலக்கியத்தை உரைநடையின் மூலம் உருவாக்குகின்ற ஒருவன் தனித் தமிழைக் காப்பாற்றுவது எங்ஙனம்?

'அந்தோணி சைக்கிளில் போனான். டயர் பஞ்சராயிற்று' என்ற வாக்கியங்கள் தமிழ் இல்லையென்று யார் சொல்லுவது? இதனை எவ்விதம் தமிழாக்குவது? தனித் தமிழ்வாதிகளூக்கு இந்தச் சொற்றொடரில் இரண்டே வார்த்தைகள் தான் இருக்கின்றன. ஆயிற்று, போனான் என்பதே அவை. ஆவதும், போவதும் தமிழனின் எல்லாக் காலத்திலும் இருந்த ஒரு வினை.

ஆனால் அந்தோணியும், சைக்கிளும், டயரும், பஞ்ச்சரும் ஒரு நவீன காலத்தைப் பிரதிபலிக்கின்ற உண்மைகள் அல்லவா?

இதனை மொழிபெயர்ப்பதன் மூலம் காலமும் இடமும் அற்ற ஒரு கனவு மயக்கத்திற்கு அல்லவா நாம் போய் விடுகிறோம்.

சைக்கிள் என்ற பொருள் நமக்கு வேண்டும். சைக்கிள் என்ற பெயர் நமக்கு வேண்டாம் என்று சிலர் விரும்புவதை வாழ்க்கை எவ்விதம் அனுமதிக்கும்?

எனவேதான் சொல்லுகிறேன்.

தமிழ் ஒரு மொழி.

தனித்தமிழ் ஒரு முயற்சி - ஒரு விளையாட்டு. அது சிருஷ்டிமேதை அவசியப்படாத சில வாத்தியார்களுக்கும், ஒரு தற்காலிகக் கவர்ச்சியை நாடும் சில மாணவர்களூக்கும் ஒரு வேளை உகந்ததாய் இருக்கலாம்.

மொழி என்பது சில வாத்தியார்களிடத்திலும் இல்லை; சில மாணவர்களிடத்திலும் இல்லை. அது வாழ்க்கையில் இருக்கிற்து.

எனவே இந்தத் தனித்தமிழ் யதார்த்தத்திற்கும் ஒத்துவராது; இலக்கியத்திற்கும் ஒத்துவராது; எழுதுபவனுக்கும் ஒத்துவராது.

எனினும் தனித்தமிழ் என்பது ஒரு ரசிக்கத்தக்க முயற்சிதான்!

இந்தத் தனித்தமிழ் மீது நம்பிக்கையில்லாமலேயே சில அரசியல்வாதிகள் இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்களே அதுதான் இதில் உள்ள மகத்தான ஹாஸ்யம்.!

(எழுதப்பட்ட காலம்: 1964)

ஜெயகாந்தன் ஒரு பார்வை - டாக்டர். கே.எஸ். சுப்பிரமணியன், முதல் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை - 600 017.

(நன்றி : இந்தக் கட்டுரையை Tab எழுத்துருவில் இட்டிருக்கும் எனி-இந்தியன் இணையதளத்திற்கு. http://www.anyindian.com/jayakanthan/tamil.htm )

--------------

தனித்தமிழ் பற்றிய மேலும் சில அறிவுபூர்வமான சிந்தனைகள்:

பொருந்தாக் காமம் : பி.கே.சிவகுமார் ('திண்ணை')

தலைப்பைப் பார்த்துவிட்டு, ஏதேதோ கற்பனை செய்தபடி இதைப் படிக்க ஆரம்பித்து முடிவில் ஏமாந்து போனால் அதற்கு நான் பொறுப்பல்ல. தனித்தமிழின்மீது ஒருசிலர் கொண்டுள்ள பிரேமையைப் 'பொருந்தாக் காமம் ' என்று அழைப்பதே பொருத்தமென எனக்குத் தோன்றுகிறது. தனித்தமிழ் என்பது காலத்திற்குப் பொருந்தாதது என்பது என் கருத்து. பொருந்தாத ஒன்றின் மீது பிறக்கும் மோகத்தைப் 'பொருந்தாக் காமம் ' என்று அழைக்கலாம்தானே! .......

தனித்தமிழ் என்னும் போலி (1) : பி.கே.சிவக்குமார் ('மரத்தடி')

தனித்தமிழ் என்னும் போலி (2) : பி.கே.சிவக்குமார் ('மரத்தடி')

Friday, February 16, 2007

சிவ தரிசனம்: பாகம் 1

மொழிக்கும், நினைவுக்கும் எட்டாத பரம்பொருளை காலங்களின், கவிதைகளின், கலைகளின், உணர்வுகளின் ஊடாகக் கண்டு அனுபவித்திருக்கின்றனர், தரிசித்திருக்கின்றனர் ஆன்றோர்கள். இந்த சிவராத்திரி புனித நாளில என் சிந்தையின் நினைவில் தோன்றும் சிவானுபவத் தேன் துளிகளை இங்கே பதிகிறேன், இறைவனே "அம்மா" என்றழைத்த பெருமைக்குரிய தமிழ் மூதாட்டியின் தாள் பணிந்து.



அர்த்தநாரீஸ்வரர்


காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம்
மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல
அரணார் அவித்தழிய வெந்தீ அம்பெய்தான்
சரணாரவிந்தங்கள் சார்ந்து.

(கோல அரணார் : அழகிய முப்புரங்கள், வெந்தீ - வெம்மையான தீ)

- காரைக் காலம்மையார், அற்புதத் திருவந்தாதி


பகலின் ஒளி இரவின் இருளில் அமிழ்கிறது.
ஆகாயத்தில் கலந்து கரைந்துவிட பூமி விரிகிறது.
வெறுமையான இருளில் கிரகணம்
ராகுவை அன்று முளைத்த வெண்ணிலா விழுங்குகிறது
உணர்ந்த உயிர் ஒளிர்கிறது. இதுவே என் சிவ பூஜை.


-
லல்லேஸ்வரி (காஷ்மீர சைவ யோகினி மரபின் அன்னை)

சொல்லும் பொருளுமாய் இணைந்த
உலகின் அம்மையப்பரை
பார்வதி பரமேசுவரரை
வணங்குகிறேன்.
என் சொல்லும், பொருளும் இணைவதாக !


- மகாகவி காளிதாசன் (ரகுவம்சம் முதல் பாடல்)

பூவெப்போ மலரும்
பொழுதெப்போ விடியும்
சிவனெப்போ வருவான்
வரமெப்போ தருவான்

- செவிவழிப் பாடல்

நான் சொல்வதைக் கேள் இல்லைக் கேட்காமல் போ,
உன்னைப் பாடாமல் எனக்கு ஓய்தல் இல்லை.

என்னை ஏற்றுக் கொள் இல்லை ஏற்றுக் கொள்ளாது போ
உன்னைப் போற்றாமல் எனக்கு ஓய்தல் இல்லை.

என்னை நேசி இல்லை நேசிக்காமல் போ
உன்னை அணைத்துக் கொள்ளாமல் எனக்கு ஓய்தல் இல்லை

என்னைப் பார் இல்லை பார்க்காது போ
எல்லை மீறும் ஆதுரத்துடன் உனக்காக ஏங்காமல் எனக்கு ஓய்தல் இல்லை

ஓ சிவனே
வெண் மல்லிகை போன்று அழகனே
சென்ன மல்லிகார்ஜுனா
உன்னை நினைக்கும் ஆனந்தப் பரவசத்தில் தான்
என் களியாட்டம் எல்லாம்.

-
அக்கா மகாதேவி, கன்னட வீரசைவ யோகினி

கோரமற்றவர்களாகவும், கோரமுள்ளவர்களாகவும், கோரத்தினும் கோரமானவர்களாகவும், எல்லாமாகவும், எல்லாத் தீமைகளையும் பொசுக்குபர்களாகவும் திகழும் ருத்திரனின் ரூபங்களுக்கு வணக்கம்.

எந்த ருத்திரன் நெருப்பிலும், நீரிலும், செடிகொடிகளிலும் உறைகிறானோ
எந்த ருத்திரன் உலகம் அனைத்தையும் ஊடுருவி நிற்கிறானோ
அந்த ருத்திரனுக்கே நம் வணக்கங்கள்.

- யஜுர்வேதம் (ஸ்ரீருத்ரம், சிவ மந்திரங்கள்)





ஷிவ்ஜி கி பாராத் - பூதகணங்களுடன் சிவனின் திருமண ஊர்வலம் (பீகார் மதுபனி பாணி கிராம ஓவியம்)


வானவன் காண், வானவர்க்கும் மேலானான் காண்
வடமொழியும், தென்தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண், ஐயைந்தும் ஆடினான் காண்
அத்தன் காண் கையில் அனல் ஏந்தி ஆடும்
கானவன் காண், கானவனுக்கு அருள் செய்தான் காண்
கருதுவார் இதய்த்தே கமலத்து ஊறும்
தேனவன் காண், சென்றடையாச் செல்வன் தான் காண்
சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் காணே

(கானவன் - காட்டுவாசி, ஐயைந்தும் - கொடுகொட்டி முதலான 25 வகை நடனங்கள்)

- திருநாவுக்கரசர்
தேவாரம்

அவருடைய திருப்பெயரின் இரண்டு அட்சரங்களை (சிவ) அறியாமல் மனதால் உச்சரிப்பதும் கூட மனிதர்களை சகல பாவங்களில் இருந்தும் விடுவிக்கிறது. புனிதமான புகழும், அழியா அரசும் உடைய மங்கலத்தினும் மங்கல வடிவினரான (சிவம் சிவேதர:) சிவனிடத்திலா நீர் பகைமை கொள்வது?

-
ஸ்ரீமத்பாகவதம், 4.4.14, (தாட்சாயணி தட்சனிடம் கூறியது)

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்த பின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

- திருமூலர், திருமந்திரம்

கண்டம் கரியதாம் கண்மூன்று உடையதாம்
அண்டத்தைப் போல அழகியதாம் - தொண்டர்
உடலுருகத் தித்திக்கும் ஓங்குபுகழ் ஒற்றிக்
கடலருகே நிற்கும் கரும்பு.

(கண்டம்; கழுத்து, ஒற்றி: சென்னைக்கு அருகிலுள்ள திருவொற்றியூர்)
- பட்டினத்தார்





ஹரப்பா ஹரன்


ராஜயோகம் என்னும் உயர்நிலையைச் சென்ற்டையும் படிகளாக உடலை வலிய வசமாக்கும் ஹடயோகம் என்னும் உயர்ந்த வித்தையை உலகிற்கு உபதேசித்த ஆதிநாதனாகிய சிவனுக்கே நம் வணக்கங்கள் உரித்தாகுக!

- ஹட யோக ப்ரதீபிகா

ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போதும் அருளை மனத்திசைத்துக் கொள்வாய்
வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்

- மகாகவி பாரதி

சிவராத்திரி அடுத்த கால பூஜை,
திருவருளால் தொடரும்...

Thursday, February 15, 2007

யார் தமிழ் எதிரி? எவர் தமிழ் உணர்வற்றவர்?

கலாம் சமஸ்கிருதம் பற்றிய பதிவில் தனித்தமிழ் நடை குறித்து நான் சொன்ன ஒரு கருத்தை வைத்துப் பலரும் கும்மியடிக்கக் காண்கிறேன். என் தமிழ் உணர்வும், தமிழ்ப்பற்றும் பற்றி எனது பதிவுகளையும், இதற்கு முன் திண்ணையில் எழுதிவந்தவற்றையும் படித்தவர்கள் நன்கு அறிவார்கள்.

முதலில் நான் தமிழில் நல்ல கலைச்சொற்களை அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு எதிரானவனில்லை, ஆரவாரமில்லாமல் இத்தகைய சொற்களைப் பயன்படுத்தி வழிகாட்டி வருபவன். (உதாரணமாக, பத்ரியின் சம்ஸ்கிருதம் பற்றிய பதிவில் cryoptology என்பதற்கு நான் முதலில் பயன்படுத்தியிருந்த "குறியீட்டு இயல்" என்ற சொல்லே வந்தது கண்டு மகிழ்ந்தேன்). ஆனால் அதே நேரம் தமிழ்ப்படுத்துகிறேன் என்று பல பெயர்ச்சொற்களை தமிழில் படுத்தும் போக்கை ஏற்காதவன். ஸ்டாலின் என்ற பெயரை இசுடாலின் என்று இங்கே ஒருவர் எழுதுகிறார். இதே போக்கில் ஸ்விட்ஸர்லாண்ட் என்பதற்கு இசுவிச்சர்லந்து என்பதையும் ஸ்பெய்ன் என்பதற்கு இசுபெயின் என்பதையும் என்னால் (கொஞ்சமாவது பொதுப் புத்தியும், அழகியல் பற்றிய பிரக்ஞையும் உள்ள யாராலும்) ஏற்க முடியாது. நான் சொல்ல வந்தது இதைத்தான். தமிழைக் குறித்தோ அதன் தொன்மை குறித்தோ எந்த விமர்சனத்தையும் நான் வைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட 'புனிதப் பசு" பதிவர் ஒருவரது புரியாத நடையைக் கொடுந்தமிழ் நடை என்று சொன்னது மாத்திரம் தான் நான் செய்தது.

இதே அடிப்படையில் தமிழில் இயல்பாகப் புழங்கும் சம்ஸ்கிருதச் சொற்களை வேண்டுமென்றே நீக்கி, அபத்தமான “தனி”த் தமிழ் என்பதாக எழுதுவதையும் எதிர்க்கிறேன். திரு. பத்ரி அவர்களும் இதில் என்னுடன் உடன்படுகிறார்.

இன்றைய காலகட்டத்தில், இந்த வக்கிரமான தனித் தமிழ் கருத்தை தூக்கிப் பிடிக்கும் எண்ணத்தின் பின்னால் ஒளிந்திருப்பவை இந்தத் தவறான புரிதல்கள் தான் -


  • சம்ஸ்கிருதமும், தமிழும் ஒன்றுக்கொன்று எதிரிகள். அவற்றுக்கு இடையே வரலாற்று ரீதியான மோதல் உள்ளது.
  • வட இந்தியர்கள் மற்றும் சம்ஸ்கிருதத்தை எதிர்க்காத அல்லது உயர்வாக மதிக்கும் எல்லா சாதிகளையும் சேர்ந்த எல்லா இந்தியர்களும் பார்ப்பனர்கள். தமிழ் எதிரிகள், துரோகிகள், தமிழர்களை அடிமைப் படுத்தத் துடிப்பவர்கள். (இதன் ஆணிவேர் ஆரிய திராவிட இனவாதத்தில் உள்ளது).
  • சம்ஸ்கிருதம் பிராமணர்களின் மொழி. அதில் நல்லது என்று எதுவுமே இல்லை. அது தீயது. அது அரக்கன். அது பாம்பு.

இவை அனைத்தும் எவ்வளவு பெரிய அண்டப் புளுகுகள், இந்திய தேசிய சிந்தனைக்கு எதிரானவைகள், தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கே எதிரானவைகள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. மொழிப் பாதுகாப்பின்மை பற்றிய ஒரு கேவலமான தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி அதில் கொஞ்ச காலம் வெற்றிகரமாகக் குளிர் காய்ந்த அரசியல் கொள்கைகளின் எச்சங்கள் தான் இவை. இவற்றின் காலம் மலையேறிவிட்டது என்று எல்லாத் தமிழர்களும், குறிப்பாக ஒருங்கிணைந்த, வலுவான இந்திய தேசியத்தின் ஊக்கத்தால் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் உயர்ந்த நிலை அடைந்திருக்கும் தமிழர்கள் உணர வேண்டும். உரத்துச் சொல்ல வேண்டும்.

இரண்டாயிரம் ஆண்டு தமிழ் இலக்கியத்தின் பாரம்பரியத்திற்கே எதிரானது இந்த “தனித் தமிழ்” ஜல்லி. தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலம்பு, திருக்குறள், கம்பராமாயண காலத்திலிருந்து இந்த நூற்றாண்டு வரை ஒரு உயிர்த் துடிப்புள்ள மொழி செய்துவரும் அற்புதமான பரிசோதனைகளின் பரிமாணங்கள் தான் சம்ஸ்கிருத மற்றும் பிற மொழிச் சொற்களின் இயல்பான கலப்புகள். இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாதவர்கள் குருட்டுத் தனமான மொழித் தீவிரவாதிகளே அன்றி மொழியை வளர்ப்பவர்கள் அல்லர்.

என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கி வந்துள்ள பின்னூட்டங்களைப் புறக்கணித்து சில எதிர்க்கருத்துக்களுக்கு மட்டும் இங்கே பதில் சொல்கிறேன். இந்த அரிய தகவல்களில் சிலவற்றை எனக்கு அருளி உதவிய சான்றோர் ஒருவருக்கு நன்றியுடன் கடமைப் பட்டுள்ளேன்.

சம்பந்தர்:

தமிழன் என்பவர் எழுதுகிறார்:

"திருஞானசம்பந்தப் பெருமானே தமிழில் வடமொழி ஆதிக்கத்தைக் கண்டு வெறுப்படைந்தவர்தான். தன்னைப் பல இடங்களில் தமிழ்ஞானசம்பந்தன் என்றே அழைத்துக் கொள்கின்றார்.தனக்கு பூணூல் அணிவித்தபோது கூட காயத்திரி மந்திரம் வேண்டாம் என்று தமிழிலே சைவ வாழ்த்து பாடச்சொல்கிறார்."

இது எப்படி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய், திரிபுவேலை என்று பார்ப்போம். திருஞானசம்பந்தருக்குப் பூணூல் அணிவித்த சடங்கு முடிந்ததும் அங்கே வந்திருந்த வேத பண்டிதர்களுக்குப் பாடியதாகச் சொல்லப்படும் பஞ்சாக்கரப் பதிகத்தில் வரும் இந்தப்பாடல்:

மந்திரம் நான்மறை யாகி வானவர்

சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன

செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்கு

அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே

'நமசிவய' என்ற திருவைந்தெழுத்தே மந்திரங்கள் அனைத்திற்கும் மூலம் என்றும், தீ வளர்த்து ஓம்பியிருக்கும் வேதியர் முப்போதும் ஓதும் சந்தியாவந்தன மந்திரத்திலும் மூலமாயிருப்பது அதுவே என்கிறார். ஏனெனில் ஐந்துமுகம் கொண்ட வேதமாதாவான காயத்ரி தேவியே சதாசிவபத்னியான மனோன்மணி. காயத்ரி அஷ்டோத்திரத்திலே மனோன்மண்யை நம: என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. காயத்ரி தியான மந்திரத்தில் வரும் 'முக்தா, வித்ரும, ஹேம, நீல, தவளம்' என்ற இந்த ஐந்து வண்ணங்கள் பஞ்சபூதங்களையும் சதாசிவத்தையும் சுட்டுகின்றன. மாணிக்கவாசகர் சிவபுராணத்திலே 'நிறங்கள் ஓர் ஐந்துடையாய்' என்றதும் அதனால்தான். இதிலே காயத்ரி மந்திரம் வேண்டாம் என்று எங்கே சொல்கிறார்?




மேலும் 'திருஞானசம்பந்தர் வடமொழி ஆதிக்கத்தைக் கண்டு வெறுப்படைந்தவர்தான்' என்றொரு அடாத பொய்யைச் சொல்லி இருக்கிறார்.
இதையெல்லாம் மிசினரிமார்தான் இட்டுக்கட்டிச் சொல்வார்கள்.

பதிகத்துக்குப் பதிகம் இறைவனை வேத உருவாகக் கண்டவர் 'வேதநெறி தழைத்தோங்க' (சேக்கிழார் வாக்கு) வந்த திருஞானசம்பந்தர். வேதம் என்பதை “மெய்யறிவு” என்பதாக மட்டுமல்ல ரிக், யஜுர், சாம, அதர்வ வேதங்கள் என்ற பொருளிலேயே ஏராளமான பாடல்களில் பாடியுள்ளார் –

“வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாக.. “
“வேதமொடு ஆறங்கம் ஆயினானை.. “
“சாகை ஆயிரம் உடையார்.. “ (ஆயிரம் கிளைகள் உள்ள “ஸஹஸ்ர சம்ஹிதா” என்று ரிக்வேதத்தை குறிப்பிடுவார்கள்)

திருமூலர்:

சம்ஸ்கிருத ஐம்பது எழுத்துக்கள் அடிப்படையில் ஒலிக்குறிப்புகளாகும். இவை பலவித சேர்க்கையில் (combination) அண்டசராசரங்களின் தோற்றத்திற்கும் அடிப்படையாகும். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் ஐந்தெழுத்தின் சூட்சுமத்தையும் புரிந்து கொள்ள முடியும் என்று பாடுகிறார் திருமூலர்.

ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின்
ஐம்பது எழுத்தும் ஐந்தெழுத் தாமே


வள்ளலார்:

வள்ளலாரது திருவடிப் புகழ்ச்சியின் பாடல்களில் பல முழு சம்ஸ்கிருதத்தில் உள்ளன என்று சொல்லியும் சில மூடர்கள் அவர் சம்ஸ்கிருத வெறுப்பாளர் என்று இன்னும் வாதிடுகின்றனர். அந்த நூலின் முதற்பாடல் இதோ –

பரசிவம்சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம்

பரசுகம் தன்மயம் சச்சிதா னந்தமெய்ப் பரமவே காந்தநிலயம்

பரமஞா னம்பரம சத்துவம கத்துவம் பரமகை வல்யநிமலம்

பரமதத் துவநிரதி சயநிட்க ளம்பூத பௌதிகா தாரநிபுணம்

பவபந்த நிக்ரக வினோதச களம்சிற் பரம்பரா னந்தசொருபம்

பரிசயா தீதம்சு யம்சதோ தயம்வரம் பரமார்த்த முக்தமௌனம்

படனவே தாந்தாந்த மாகமாந் தாந்தநிரு பாதிகம் பரமசாந்தம்

பரநாத தத்துவாந் தம்சகச தரிசனம் பகிரங்க மந்தரங்கம்

பரவியோ மம்பரம ஜோதிமயம் விபுலம் பரம்பர மனந்தமசலம்

பரமலோ காதிக்க நித்தியசாம் பிராச்சியம் பரபதம் பரமசூக்ஷ்மம்

இதில் மெய் என்பது தவிர அத்தனையும் செஞ்சம்ஸ்கிருதச் சொற்கள். அற்புதமான ஞான, யோக தத்துவங்கள் அடங்கிய இந்த நூலை இங்கே படிக்கலாம்.





சன்மார்க்கம், சமரசம், அத்துவிதம் போன்ற வடசொற்களைத் தவிர்த்து தனித்தமிழில் அமைக்குமாறு சிலர் சொல்ல 'நிறைமொழி மாந்தர் ஆணையிற்' பிறந்த எல்லாம் மறைமொழிகள்தாம். அதில் மொழி பேதமில்லை, மாற்ற முடியாது என்று வள்ளலார் சொன்னார் என்று படித்திருக்கிறேன்.

இப்போது வள்ளலாரே சமஸ்கிருதச் சொற்களின் கலப்பைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

சன்மார்க்கம் என்ற அடிப்படைக் கலைச்சொல் ஒன்று. அதனோடு இணைக்கும் சமரசம், சுத்தம் என்பனவாகிய சொற்கள். இத்தகைய சொற்களை வள்ளலார் உண்டாக்கவில்லை. இவைகளையெல்லாம் வடமொழி எனத் தள்ளிவிட்டு, பழகுதமிழில் இக்கொள்கையை அமைத்திருக்கலாமே என்பது சிலரின் ஆசை.

மெய்ப்பொருளியற் கலைச்சொற்கள் மக்களாலோ, ஒரு இனத்தாராலோ உண்டாக்கப் பெற்றவை அல்ல. பரநாதத் தலத்தே விளங்கும் பரநாதம், பரவிந்து என்ற இரண்டும் இணைய அவ்விணைப்பின் மூலம் (அனந்த தாத்பர்யங்களை உள்ளடக்கி) பல்வேறு பொருள் நிலைகளை உள்ளடக்கி எழுந்த சொற்களே அவை ஆதலின் அவைகளை மாற்றுதல் இயலாது என்று குறிப்பிடுகிறார். அவைகள் வடமொழிச் சொற்கள் அல்ல, வடலுறு சொற்கள் என்பது வள்ளலார் வழக்கு.

ஆதாரம்: சிதம்பரம் இராமலிங்கரின் சித்திவளாகம் - பக்கம் 26/27.

இந்தப்புத்தகம் வள்ளலாரின் வலைத்தளத்திலேயே இருக்கிறது.

வடலுறு சொற்கள்: வடக்குத் திசையிலிருந்து இங்கே கொண்டு வரப்பட்டவை அல்ல; ஆலவிதை போன்ற பீஜமான சொற்கள்.
வடம் என்றால் ஆலமரம்.

தொழுவூர் வேலாயுத முதலியார்:

சமஸ்கிருதம் ஏதோ பிராமணர்களின் தனிச்சொத்து தனிமொழி என்றொரு பிம்பத்தை உருவாக்கி அதை அழித்துக் கொண்டிருப்பது சமீபத்தில்தான். 19' ம் நூற்றாண்டு வரை சமஸ்கிருதத்தை அனைத்து சாதியினரும் கற்றுத் தேர்ந்திருந்தனர். இதற்குச் சான்றாக சமீபத்தில் என் நண்பர் ஒருவர் மூலம் கிடைத்த ஓர் அரிய புத்தகத்தைக் கீழே பாருங்கள்:






சங்கரவிஜயம் என்ற இந்தப் புத்தகத்தை 1879'ம் ஆண்டில் சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்த்திருப்பவர் தொழுவூர் வேலாயுத முதலியார். வெளியிட்டவர் தண்டலம் ஆறுமுக முதலியார். இந்த தொழுவூர் வேலாயுத முதலியார் சமரச சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்த முன்னோடிகளில் ஒருவர். வள்ளலாருக்கு மிக அணுக்கமானவர். சிதம்பரம் ராமலிங்கம் என்றே தம்மை அழைத்துக் கொண்டவரை வள்ளலார் என்று பெயரிட்டு அழைத்தவரும் இவர்தான்.

வெங்கட் சாமிநாதன் முன்பு சிஃபி.காமில் ஒரு கட்டுரையில் வருந்தியிருந்தார் – “தமிழ் இங்கு வளர்க்கப் படவில்லை, வெறுமனே தமிழ் கோஷப் படுத்தப் பட்டுள்ளது என்று”. ஒரு குறிப்பிட்ட கூட்டத்தின் இந்த எதிர்வினைகள் அதை உண்மையென்று நிரூபிக்கின்றன.

தமிழ் கோஷப் படுத்தப் பட்டது மட்டுமல்ல, வேஷப் படுத்தவும் பட்டுள்ளது. அதனால் நாசப் படுத்தப் படுகிறது. அதைச் செய்பவர்கள் தான் தமிழ் எதிரிகள். தமிழ் உணர்வு இல்லாதவர்கள்.

Saturday, February 10, 2007

சம்ஸ்கிருதம் பற்றி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உரை

மந்திராலயத்தின் அமைதி தவழும் சூழலில் ஸ்ரீகுரு சார்வபௌம சம்ஸ்கிருத வித்யாபீடத்தின் மாணவர்களுடன் உரையாடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். உங்கள் 7, 8 அல்லது 12 வருட பயிற்சியை முடித்த பின்னர் நீங்கள் என்னவாகப் போகிறீர்கள்? ஒரு சிறந்த ஆசிரியராக. நீங்கள் ஆசிரியப் பணிக்கு வேண்டிய தகுதிகளைத் தேடி அடைந்து ராகவேந்திர சுவாமியின் மரபினை முன்னெடுத்துச் செல்லவேண்டும். நீங்கள் எங்கிருந்தாலும், என்ன காரியங்கள் செய்தாலும், பக்தர்கள் உங்களை குரு என்பதாகப் பாவிப்பார்கள். அத்தகைய குருவுக்கான அடிப்படை இந்தக் கல்வி நிலையத்திலிருந்து வருகிறது. நீங்கள் வரும் வருடங்களில் ஆற்றப் போகும் மேன்மையான பணிகளுக்காக உங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களைப் பாராட்டுகிறேன். உங்களுடன் இருக்கையில், ராகவேந்திர சுவாமிகளின் மூல மந்திரத்தை ஓத விரும்புகிறேன்.

"பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்யதர்ம ரதாய ச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே"


சத்தியத்தையும், நன்னடத்தையாகிய தர்மத்தையும் கடைப்பிடித்தவரும், உபதேசித்தவரும் ஆன தெய்வீக ஆத்மாவாகிய குரு ராகவேந்திரசுவாமியைப் போற்றுகிறோம். அவரது "கல்ப விருட்சம்" (அளவற்ற செல்வம் தரும் கற்பக மரம்) என்னும் திருப்பெயரை ஓதுகிறோம்; ஆன்ம ஞானத்தை வாரி வழங்கும் காமதேனுவாகிய அவர் முன் வீழ்ந்து வணங்குகிறோம்.





சம்ஸ்கிருத அறிஞர்களுடன் என் அனுபவம்:

தொடக்கப் பள்ளியிலும், செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் இரண்டு உயர்ந்த ஆசிரியர்களை நான் கண்டிருக்கிறேன். எனது தொடக்கப் பள்ளி அறிவியல் ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர் ஒரு சம்ஸ்கிருத அறிஞர். ஒவ்வொரு நாளும் அவர் மூன்றுமுறை சந்தியாவந்தனம் செய்வார், பாகவதம் படிப்பார். எனக்கு காம்ப்ளெக்ஸ் எண்கள் கோட்பாடுகளைக் கற்றுத் தந்த பேராசிரியர் தோதாத்திரி ஐயங்காரும் ஒரு சம்ஸ்கிருத அறிஞரே.
இந்த இரண்டு உயர்ந்த ஆசிரியர்களுக்கும் அடிப்படை கணிதமும், அறிவியலும். ஆனால் அவர்களது வாழ்க்கையை செதுக்கியது சம்ஸ்கிருத புலமை. இயற்கை வேளாண்மை உட்பட பல விஷயங்கள் பற்றி சம்ஸ்கிருதத்தில் தீவிர ஆராய்ச்சி செய்து வரும், கர்நாடகத்தில் உள்ள மேல்கோடே சம்ஸ்கிருத அகாடமியைச் சேர்ந்த டாக்டர் லட்சுமி தாத்தாச்சாரையும் சமீபத்தில் சந்தித்தேன். இப்படி பல செல்வங்கள் அடங்கியது சம்ஸ்கிருதம். இந்த சம்ஸ்கிருத வித்யாபீடம் இந்த பெருமைமிக்க மொழியைப் பேணிப் பாதுகாக்கிறது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

சம்ஸ்கிருதத்தின் பெருமை:

நான் சம்ஸ்கிருத நிபுணன் இல்லை. ஆனால் என் நண்பர்களில் பலர் சம்ஸ்கிருதத்தில் புலமை உள்ளவர்கள். நமது பண்டைய சம்ஸ்கிருத நூல்களில் உள்ள அறிவுச் செல்வங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதில் பல நாடுகள் முனைந்திருக்கின்றன. வேதங்களைப் பற்றிய ஆராய்ச்சி அவசியம். குறிப்பாக மருத்துவம், விமான அறிவியல், அடிப்படைப் பொருட்கள் பற்றிய அறிவியல் மற்றும் தொடர்புள்ள துறைகள் பற்றி அதர்வ வேதத்தில் பல முக்கிய விஷயங்கள் உள்ளன. சம்ஸ்கிருதம் சரளமாகப் பயன்படுத்தப் படும் இன்னொரு துறை குறியீட்டு இயல் (cryptology).

சம்ஸ்கிருத வித்யாபீடம் செய்யவேண்டியவை:

தனது கல்விப் பணிகளோடு கூட சம்ஸ்கிருத வித்யாபீடம் நாட்டின் பல பகுதிகளில் சிதறியிருக்கும் சம்ஸ்கிருத இலக்கியங்களைக் கண்டுபிடித்து அவற்றை ஆவணப்படுத்தல், பாதுகாத்தல் ஆகிய பணிகளிலும் ஈடுபடவேண்டும். இதற்காக, இந்த நூல்களை ஒளி,ஒலி ஊடகங்களில் பதிவு செய்யும் தொழில்நுட்பத்தின் உதவியோடு ஒரு டிஜிட்டல் நூலகம் போன்று உருவாக்கினால், பல தலைமுறைகளுக்கும், நீண்ட காலங்களுக்கும் இந்தச் செல்வத்தைப் பாதுகாக்கலாம். இதற்காக இந்த நிறுவனம், டிஜிட்டல் நூலகப் பரிசோதன்னைத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர் பாலகிருஷ்ணனுடன் தொடர்பு கொள்ளலாம்.

வால்மீகி, வியாசர், காளிதாசர், பாணினி போன்ற பேரறிஞர்கள், கவிஞர்கள், இதிகாசங்களை உருவாக்கியவர்கள் இவர்களது வாழ்க்கை வரலாறுகளை சம்ஸ்கிருத வித்யாபீடத்தில் நீங்கள் ஆழ்ந்து பயிலவேண்டும். இளைய அறிஞர்களுக்காக இந்திய அரசு வழங்கும் மஹரிஷி பாதராயண் சம்மான் மற்றும் சம்ஸ்கிருதத்தில் மதிப்புச் சான்றிதழ் பெற்ற சில அறிஞர்களை வித்யாபீடம் அழைத்து அவர்கள் மாணவர்களோடு தங்கிக் கலந்துரையாடுமாறு செய்யவேண்டும். இது மாணவர்கள் சம்ஸ்கிருதத்திலும், வேதத்திலும் தங்கள் புல்மையை வளர்த்துக் கொள்ளத் துணைபுரியும்.

ஞானம் பெறுதலும், நிலை நிறுத்துதலும்:

இப்போது, வேதங்களின் முக்கியத்துவத்தையும், வேதங்கள் எவ்வாறு நம் மனம், நினைவுகள், புத்தி இவற்றுக்கு ஊட்டமளிக்கின்றது என்பதையும் விளக்கும் ஒரு ஆடியோ சி.டி.யை ஒலிக்கச் செய்ய விரும்புகிறேன். சென்னை ஓஜஸ் அறக்கட்டளை நிறுவனர் தத்வமஸி தீட்சித் இசைத்தது இது. முதலில் இந்த மந்திரங்கள்:

மந்திரம் (அ): ஓ சூரியதேவனே! எனது நேர்முகமாய் உணரும் திறனை வளர்ப்பாய். வேதக் கல்வியை சந்ததியினருக்காக நிலைநிறுத்தத் துணை புரிவாய்!

மந்திரம் (ஆ): மேதா தேவியையும் (நிலை நிறுத்தும் சக்தி), மனீஷா தேவியையும் (உள்வாங்கும் சக்தி) எனது மனத்தினுள் வீற்றிருக்குமாறு அழைக்கிறேன். நிகழ்பவை பற்றிய ஞானத்தை முழுமையாய் உணரவும், கடந்தகாலம், மற்றும் எதிர்காலத்தின் ஞானத்தை விரித்துரைக்கவும் அவர்கள் அருள் புரியட்டும்.

மேதா மற்றும் மனீஷா ஆகிய சக்திகளிடம் வேண்டுதல் இது. அவைகள் வேண்டுபவனிடம் ஒன்றுகூடி வந்து, நிகழ்காலம் பற்றிய ஞானத்தை கடந்தகாலம், எதிர்காலம் இவற்றோடு தொடர்புபடுத்தி அறியத் துணைபுரிய வேண்டும். நினைவில் நிறுத்திக் கொள்ளும் சக்தி நடந்ததையும், நடப்பதையும் புரிந்து கொள்ளச் செய்கிறது, உள்வாங்கும் சக்தி இந்த அனுபங்களிலிருந்து எதிர்காலத்திற்கான பாடங்களைக் கற்கத் தூண்டுகிறது,

சம்ஸ்கிருதத்தைப் பாதுகாப்பதிலும், வளர்ப்பதிலும் வெற்றியடைய குரு சார்வபௌம சம்ஸ்கிருத வித்யாபீடத்தின் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.

மூலம்: 1-2-2007 அன்று மாண்புமிகு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் மந்த்ராலயத்தில் ஆற்றிய உரை
http://presidentofindia.nic.in/scripts/eventslatest1.jsp?id=1431

ராக ராஜேஸ்வரி: எஸ்.சௌம்யா இசை மழை

சரணத்தில் நறுமலர்களை மாலையாகக் கோர்த்த மாயாமாளவகௌள ராகக் கிருதி நான் அரங்கத்திற்கு உள்ளே நுழையும்போது ஓடிக் கொண்டிருந்தது.

"ஸரஸீருஹ புன்னாக சம்பக பாடல குரவக
கரவீர மல்லிகா சுகந்த ராஜசுமன..."

"இந்த மலர்களெல்லாம் கூட வேண்டாம், துளசி இலை ஒன்றே போதும் அவனை மகிழ்விக்க" என்பதாகத் தொடங்கும் "துளஸீதளமுலசே ஸந்தோஷமுகா.." என்ற தியாகராஜரின் இந்த அழகிய கிருதியை சில துடிப்பான கல்பனா ஸ்வரங்களுடன் பாடிக் கொண்டிருந்தார் எஸ்.சௌம்யா.






சிவராத்திரியை முன்னிட்டு நடந்து வரும் "கலோத்ஸவ் 2007" தொடரில் நேற்று (வெள்ளிக் கிழமை) எஸ்.சௌம்யா இன்னிசைக் கச்சேரியைக் கேட்டது ஆனந்த அனுபவம். கச்சேரி நடந்த இடம் பெங்களூர் அல்சூர் ஏரி அருகே உள்ள ஒடுக்கத்தூர் மடம் முருகன் கோவில் அரங்கம்.

அடுத்ததாக "பாகாயனய்யா" சந்திரஜ்யோதி ராகத்தில் உருக்கமான கிருதி. பின்னர் துள்ளலுடன் குந்தலவராளியில் "போகீந்த்ர சாயினம்" சுவாதித் திருநாள் பாடலை விறுவிறுப்பான ஸ்வரங்களுடன் பாடினார். அப்புறம், கொஞ்சம் விரிவான ஆலாபனையோடு தியாகராஜரின் "சலித்தோடித் தேவே, ஓ மனஸா" என்ற கிருதி. தன் மனத்தைப் பார்த்துப் பேசும் இந்தப் பாடலில் "பதிதுலு ப்ரோசே பட்டாதிகாரிணி" ("பட்டத்து அதிகாரம் இழிந்தோரிடம் செல்வதா" என்பது தான் இதன் பொருள் என்று ஊகிக்கிறேன் - ரொம்ப அர்த்தபுஷ்டியுள்ள வரிகள்) என்ற சரணத்தின் முதல் அடியை அற்புதமாக நெரவல் செய்தார்.

அடுத்தது "சர்வேசா அடிமையை நீ உதறித் தள்ளாதே, சங்கர சதாசிவனே.. " என்ற பாபநாசம் சிவன் கிருதி. கருணை ரசம் பிரதானமாக உள்ள இந்தப் பாடலை கம்பீரத்திற்கும், மகிழ்ச்சிக்கும் உரிய பிலஹரி ராகத்தில் சிவன் அமைத்திருப்பது இன்னும் ஒரு அழகு என்று சௌம்யா பாடியபோது புரிந்தது. சொற்களின் பாவத்தை ராகத்தில் குழைத்த விதம் வெகு நேர்த்தி. இதைத் தொடர்ந்து "சுதா... மாதுர்ய பாஷண... சுதாகரானனா... " தியாகராஜரின் துரிதகதியில் அமைந்த பாடல். "சிந்துராமக்ரியா" என்ற ராகத்தில் அமைந்த இந்தப் பாடலை பாலமுரளிகிருஷ்ணாவின் குரலிலேயே கேட்டுப் பழகியிருந்த எனக்கு, சௌம்யாவின் குரலில் கேட்டது இன்னும் செவிகளில் இனித்துக் கொண்டிருக்கிறது.






கச்சேரியின் பிரதான அம்சத்தை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தேன்.. வந்தது வரம் - கிறங்க அடித்த பைரவி ஆலாபனை. அதி நிதானமாக ஆலாபனையைத் தொடங்கி பைரவிக்கு சகல அலங்காரங்களும் செய்து அந்த ராக தேவதையைக் கண்முன் நிறுத்தினார் சௌம்யா. ராகத்தின் முழு உருவத்தையும் பிரத்தியட்சமாகப் பிசிறு இல்லாமல் காட்டிய அழகிய ஆலாபனை. பிறகு பாடியது சியாமா சாஸ்திரிகளின் அதி உன்னதமான பைரவி ராக ஸ்வரஜதி - "கா..மா.. க்ஷீ அம்பா.... அனுதினமு மரவகனே....". பாடப் பாடத் தெவிட்டாத தேவியின் சுந்தர ரூபத்தையும் அவளது காருண்யத்தையும் விவரிக்கும் ஸ்வரஜதி. ஒவ்வொரு வரிக்கும் உள்ள ஸ்வரங்களை ஆற அமர சௌம்யா பாடியதைக் கேட்டது தேவியே வந்து பாடியது போல் இருந்தது.

வயலின் வாசித்த பெண்மணி நளினா மோகன், பாடகரை வில்லில் அற்புதமாகப் பின் தொடர்ந்தார், ஸ்வர வாசிப்புகளும் அருமையாக இருந்தன. கடம் சுகன்யா ராஜகோபால், தாள வாத்தியம் வாசிக்கும் அபூர்வப் பெண் வித்வாம்சினி, அதற்கு உரிய எனர்ஜியோடு நன்றாக வாசித்தார். இந்த மூன்று தேவியரையும் அரங்கில் பார்த்ததும் எனக்கு ரவிவர்மாவின் ராஜராஜேஸ்வரி சித்திரம் தான் நினைவுக்கு வந்தது. லட்சுமி தேவி தாள வாத்தியம் இசைக்க, சரஸ்வதி வீணை வாசிக்க, அன்னை பராசக்தி நடுவில் கொலுவிருக்கும் கோலம்! தீட்சண்யமான கண்களும், வசீகரப் புன்னகையும் கலந்த சௌம்யாவின் அழகிய முகமண்டலம் அவரது இசைக்கு ஒளியூட்டுகிறது என்றால் மிகையில்லை.






அவ்வப்போது வயலின், மிருதங்க வித்வான்களைப் பார்த்து அர்த்தபுஷ்யுடன் செய்த புன்சிரிப்புக்கள் ரசிக்கும்படியாக இருந்தன. மிருதங்க வித்வான் ஹெ.எஸ். சுதீந்திரா முதலில் கொஞ்சம் சலிப்பூட்டுவது போல இருந்தாலும் கச்சேரி சூடு பிடித்ததும் கலக்கினார். சௌம்யா தவிர, மற்ற கலைஞர்கள் அனைவரும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
இந்த ஸ்வரஜதியில் பெரும்பாலும் வித்வான்கள் நிரவல் செய்வது கடைசி அடி "சியாம க்ருஷ்ண ஸ்ஹோதரீ.... சிவ சங்கரீ... பரமேஸ்வரீ.." என்பது. சௌம்யா இடையில் வரும் "பக்தஜன கல்பலதிகா.. கருணாலயா.. ஸதயா" என்ற ரசம் நிறைந்த அடியை எடுத்துக் கொண்டது சிறப்பு.

இது முடிந்ததும் சபா காரியதரிசி ஒருவர் பாலக்காட்டுத் தமிழும், பாலக்காட்டு ஆங்கிலமும் கலந்த மொழியில் ஒரு சிறிய பேச்சுக் கச்சேரி செய்தார்.

பிறகு வந்த துக்கடாக்கள் ஒவ்வொன்றும் மணிகள். "லோக ஹரனே க்ருபாசாகரா" என்ற ராகவேந்திரசுவாமி மீதான வாகதீஸ்வரி ராகப் பாடல். கோபால கிருஷ்ண பாரதியின் "சிதம்பரம் போகாமல் இருப்பேனோ?", மகாகவி பாரதியின் "காதலெனும் தீவினிலே ராதே ராதே".. "சென்னிக்குள நகர் வாசன்" என்ற காவடிச் சிந்து - இதன் ஒவ்வொரு சரணத்தையும் வேறுவேறு விதமாகப் பாடியது அருமை.. கடைசியாக வந்த பிஹாக் தில்லானாவில் வரும் பல்லவி "தஞ்சபுரி ப்ருஹதீஸ்வருனி ராணி.." ! அற்புதமான இந்த தெய்வ சங்கீதத்தைக் கேட்காமலும், ரசிக்காமலும், தெரிந்து கொள்ள எந்த முயற்சியும் செய்யாமலும் சும்மா "தமிழிசை, கிமிழிசை" என்று கிழிப்பவர்களைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது - "தஞ்சபுரி" (thanchapuri) என்று என்ன அழகாகத் தஞ்சையின் பெயரைத் தெலுங்கு உச்சரிப்பில் வைத்துப் பாடியிருக்கிறார் பாருங்கள் தில்லானா இயற்றியவர்!

இவ்வளவு சிலாக்கியமான கச்சேரிக்கு வந்த கூட்டம் மிகவும் குறைவு. இது போன்ற கச்சேரி சென்னையின் நடந்தால் எள்விழ இடமில்லாமல் கூட்டம் இருக்கும். இங்கே கால்வாசி அரங்கத்திற்கு மேல் காலியாக இருந்தது. கர்நாடகத் தலைநகரம் கர்நாடக சங்கீதத்தை வெகுஜன அளவில் ரசிக்க இன்னும் கூடக் கொஞ்ச நாள் பிடிக்கும் போலிருக்கிறது!

Thursday, February 08, 2007

காவிரி தீர்ப்பு: கர்நாடகத்தின் நிலைப்பாடுகள்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அனேகமாக எதிர்பார்த்தது போலவே வந்தாயிற்று. தீர்ப்பு வந்த அன்று தென் கர்நாடகம் முழுவதும், குறிப்பாக பெங்களூரில் பதட்டம் நிலவியது; சில இடங்களில் போக்குவரத்து தடைபட்டது; ஆனால் எந்த விதமான கலவரங்களும் நடைபெறவில்லை. 1991ல் இது போன்ற தீர்ப்பின் போது தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப் பட்ட வன்முறை போன்று இந்த முறை கண்டிப்பாக நடக்க விடக் கூடாது என்பதில் அரசு மிக உறுதியாக நின்றது. காவல் படைகள் குவிப்பு மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியது இவை மூலம் தற்போதைய ஜனதாதள, பா.ஜ.க கூட்டணி அரசு இதை முழுமையாக சாதித்து விட்டது என்றே சொல்லவேண்டும். பல மாநிலங்களில் கலவரங்கள் அதே இடங்களில் கட்டுக்கடங்காமல் மீண்டும் மீண்டும் முளைத்து வருகையில் கர்நாடக அரசும், மக்களும் உணர்ச்சிக் கொந்தளிப்பு எளிதாக வெளிப்படக் கூடிய இந்தத் தருணத்திலும் கடமை உணர்வுடன் அமைதி காத்தது பாராட்டத் தக்கது. பெங்களூர் கேபிள் தொலைக்காட்சி விநியோகஸ்தர்கள் தமிழ் தொலைக் காட்சி சேனல்களைத் துண்டித்திருப்பதும், திரையரங்குகள் தமிழ்ப் படங்களை நிறுத்தியிருப்பதும் கொஞ்சம் மனக் கசப்பு தரும் விஷயங்கள். ஆனாலும், பெரிய அளவிலான தமிழர் எதிர்ப்பு உணர்வு இப்போது இல்லவே இல்லை என்பது நிம்மதி தரும் விஷயம்.

தீர்ப்பு வந்தவுடன் தமிழக அரசியல்வாதிகள் உடனே “எங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் நியாயமானவை என்று நிரூபிக்கப் பட்டு விட்டது” என்று அகமகிழ்ந்தனர். கர்நாடக அரசியல்வாதிகள் “இந்தத் தீர்ப்பு பெரும் துரோகம் இழைத்து விட்டது” என்று கொதித்தனர். ஆனால், கர்நாடகத்தின் சார்பாக வாதிட்ட இந்தியாவின் தலைசிறந்த சட்ட வல்லுனர் ஃபாலி எஸ். நரிமன், தீர்ப்பு திருப்தி தரும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்டார். பிரபல கலைஞரும், கன்னட எழுத்தாளருமான கிரீஷ் கர்னாட் “நாம் பரஸ்பரம் ஒப்புகொண்டு அமைக்கப் பட்ட இந்த நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஏற்று அமல் படுத்துவது தான் சரியானது” என்று அறிக்கை வெளியிட்டு பல கன்னட இயக்கங்களின் கடுப்பை சம்பாதித்திருக்கிறார். தஞ்சை விவசாயிகள் சங்கத் தலைவர் ரங்கநாதன் “தேவைக்குக் குறைவாக உள்ள காவிரி நீரைப் பங்கிடுவது என்பது பற்றாக் குறை பட்ஜெட் போடுவது போன்ற விஷயம். எல்லாத் தரப்பினரையும் திருப்திப் படுத்துவது சாத்தியமே இல்லை. நாங்கள் கேட்ட அளவு தண்ணீர் கிடைக்காவிட்டாலும் தீர்ப்பை வரவேற்கிறோம்” என்றார். “இரண்டு நாட்கள் எங்கள் வீட்டில் தண்ணீர் வரவில்லை, இதுல தமிழ்நாட்டுக்கு வேற தண்ணி குடுக்கணுமா? இது அக்கிரமம்” என்ற வகையில் இந்தப் பிரசினையின் தலையும் வாலும் புரியாத பெங்களூர் சாஃப்ட்வேரிணிகள் ஆங்கிலத்தில் பொரிந்தார்கள். “பெங்களூரிலேயே ஒரு கன்னடருக்கு மூன்று தமிழ் ஆட்கள் என்கிற மாதிரி இருக்காங்க. கர்நாடகத்துக்கு உரிய தண்ணீரில் பெரும்பங்கையும் அவங்க தான் குடிக்கிறாங்க. விவசாயிக்கு என்ன பிரயோசனம்?” என்று மாண்டியா விவசாயி ஒருவர் குமுறினார்.



காவிரி நதியின் பிறப்பிடம், தலைக்காவேரி

சன் நெட்வொர்க் குழுமத்தை சேர்ந்த கன்னட உதயா டி.வி. ஒருவிதமான தர்ம சங்கடத்திற்கு ஆளாகியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. தீர்ப்பு வந்த திங்கட்கிழமை அன்று “உதயா வார்த்தெகளு” (உதயா செய்திகள்) சேனலில் விவசாய, கிராமத் தலைவர்களைப் பேட்டி கண்டு இந்த தீர்ப்பு எப்படி ஒருதலைப் பட்சமானது என்று ரொம்ப மெனக்கெட்டு விளக்கினார்கள். “ஏற்கனவே கர்நாடக அரசியல் வாதிகள் சாதுரியம் இல்லாமல் இருக்கும் நிலையில் இப்போது மத்தியில் காங்கிரஸ் எதிர்க்கட்சி வேறு. தமிழக அரசியல் வாதிகள் தேசிய அரசியலில் புகுந்து கலக்கும் ஜித்தர்கள். இது தான் இத்தகைய பாரபட்சமான தீர்ப்புக்கு வழிவகுத்தது” என்று பல கன்னட பொதுமக்கள் கருதுகிறார்கள். “ராஜகீய இச்சா சக்தி இல்லா” (அரசியல் முனைப்பு இல்லை) என்று தொலைக்காட்சிகளில் பலர் குறைப் பட்டுக் கொண்டார்கள்.

மொத்தத்தில் கர்நாடகம் ஒரு பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறது. ஐந்து தொகுதிகளும் ஆயிரம் பக்கங்களும் உள்ள இந்தத் தீர்ப்பைப் படித்துப் புரிந்து கொண்டு அதன் ஒவ்வொரு அம்சங்களையும் விளக்கும் கடினமான வேலையே இப்போது தான் ஆரம்பித்திருக்கிறது. அதற்குள் எதிர்ப்பு, மேல்முறையீடு, மறுவிசாரணைக்கான உடனடி கோரிக்கை என்று மும்முரமாக வியூகங்கள் வகுக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. “தமிழகத்துக்கு 410, கர்நாடகத்துக்கு 270 தான்” என்று எண்ணிக்கை விளையாட்டை வைத்து உணர்ச்சிகள் தூண்டப் படுகின்றன. இதுநாள் வரை அமலில் இருந்த இடைக்காலத் தீர்ப்பின் படி வருடத்திற்கு 205 டிஎம்சி கன அடி தண்ணீர் (மேட்டூர் நீர்த்தேக்கத்தில் அளவீடு) கர்னாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று இருந்தது. இப்போது 192 டிஎம்சி கன அடி தண்ணீர் (பில்லி குண்டுலு நீர்த்தேக்கத்தில் அளவீடு) படி வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வந்திருக்கிறது. இடையில் உள்ள 60 கி.மீ நிலப்பரப்பில் சேகரமாகும் 25 டிஎம்சி கன அடி தண்ணீரையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகம் ஏற்கனவே தரக் கடமைப் பட்டுள்ளதை விட அதிகம் தர வேண்டியது 12 டிஎம்சி கன அடி (192+25-205) தண்ணீர் தான்! இதற்குத் தான் இந்தப் பாடு! ஆனால் “கர்நாடகம் கேட்ட 465 கிடைக்கவில்லை, இது அநியாயம்” என்ற ரீதியில் பிரசாரம் நடக்கிறது.

காவிரி நதி பாயும் நிலப் பரப்பு தமிழகத்தை விட கர்நாடகத்தில் அதிகம். ஆனால் நதி நீரால் பயன்பெறும் டெல்டா பிரதேசம் என்று கணக்கிட்டால் கர்நாடகத்தை விட தமிழகத்தில் அதிகம் : “சோழ வளநாடு சோறுடைத்தாகிய” காலங்களிலிருந்து இதற்கு வரலாற்றுக் காரணங்கள் உண்டு. மொத்த நீரை, பயன்பெறும் டெல்டா பிரதேசங்களின் விகிதத்திற்கு ஏற்றபடி பங்கிட வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தான் இந்த தீர்ப்பு தரப் பட்டுள்ளது. தமிழக டெல்டாப் பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் அளவு 128 டிஆம்சி கனஅடியையும் சேர்க்க வேண்டும் (ஆனால் கர்நாடக நிலத்தடி நீர் அளவை சேர்க்க வேண்டாம்!) என்று கர்நாடக விவசாயிகள் தரப்பில் வைத்த வாதம் எடுபடவில்லை. மேலும், இந்தத் தண்ணீரை வைத்துக் கொண்டு குருவை, சம்பா என்று வருடத்திற்கு இரண்டு பயிர் செய்கிறார்கள் என்று கர்நாடக விவசாயிகள் தமிழக விவசாயிகள் மீது புகார் சொல்கிறார்கள். “ஏற்கனவே பெருமளவில் கிடைக்கும் மழைநீரை சேமிக்காமல் தமிழகம் கடலில் கொட்டுகிறது, அதே சமயம் கர்நாடகத்திலிருந்தும் தண்ணீர் வேண்டும் என்று அடம் பிடிக்கிறது. கர்நாடகம் தரும் தண்ணீரில் பெரும்பகுதியும் விவசாயத்திற்கு அல்ல, கடலில் தான் போய்ச் சேரும்” : இந்தக் கருத்தும் பல கர்நாடக விவசாயிகளிடம் உள்ளது. இதற்குத் தீர்வாக, கர்நாடகத்தோடு சண்டை போடுவதை நிறுத்திவிட்டு, கல்லணை என்ற பழைய அணைக்கட்டு மட்டுமன்றி வேறு சிறு அணைகளையும் தமிழ்நாடு உருவாக்கி காவிரி நீர் கடலில் போய் வீணாவதைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள். இதில் உண்மை உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.



கல்லணை, திருச்சி

பதினேழு வருடங்கள் பல வல்லுனர்களின் சிந்தனை மற்றும் விவாதங்களின் அடிப்படையில் வழங்கப் பட்டிருக்கும் இந்தத் தீர்ப்பு, கர்நாடகத்தில் பெரிய அளவு எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு என்ன தான் தீர்வு? “தமிழகத்திற்கு சொட்டுத் தண்ணீர் கூடத் தரவேண்டாம்” என்று தீர்ப்பு வந்தால் தான் கர்நாடகம் முழுமையாகத் திருப்தி அடையும் என்றால், அது மிகவும் கவலைக்குரிய விஷயம். நம்மிடம் இருக்கும் குறைந்த அளவு வளங்களை தேசிய சிந்தனையுடன் இருசாராருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் பங்கிட்டுக் கொள்வது தான் நடைமுறையில் சிறந்த வழி. இந்த நடுவர் மன்றம் அதைச் செய்திருக்கிறது என்று ஒப்புக் கொள்ளத் தடையாக இருப்பது காவிரியை வைத்து கர்நாடகத்தில் பின்னப் பட்டுள்ள வெகுஜன அரசியல் தான்.

இதற்கு தூபம் போடும் வகையில் இது பற்றிய செய்திகளை வெளியிடும் எல்லா ஊடகங்களும் (குறிப்பாக தொலைக்காட்சிகள்) இது ஒரு சமூக வளங்களின் பங்கீடு என்பதாக இல்லாமல், போர் முடிவு போலவும், கிரிக்கெட் ஆட்ட முடிவு போலவும் “பெரும் வெற்றி”, “படுதோல்வி” என்கிற போக்கில் சித்தரித்து வருகின்றன. ஆங்கில செய்தி ஊடகங்களில் இருப்பவர்கள் பெங்களூர் என்ற மாபெரும் உலகத் தொழில் நகரம் பற்றி அறிந்த அளவு தஞ்சை விவசாய பூமி பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த தீர்ப்பு “பெங்களூரின் வளர்ச்சிக்கு எதிராக” இருப்பதாகவும் ஒருவிதமான பிம்பம் உருவாக்கப் படுகிறது, இது துரதிர்ஷ்டவசமானது. பெங்களூர் போன்ற ஒரு வளரும் நகரம் தன் தண்ணீர்த் தேவைகள் அனைத்திற்கும் காவிரியை மட்டுமே நம்பியிருக்காமல், மற்ற பெருநகரங்கள் போல குழாய் கிணறுகள் மற்றும் வேறு பல வழிகளில் தன் நீர்த்தேவைகளை நிறைவேற்ற முயலவேண்டும். தமிழகமும், கர்நாடக விவசாயிகளின் அச்சங்களைப் போக்கும் வகையில் சிறு அணைத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். இத்தகைய முயற்சிகள் தான் இந்தப் பிரசினைக்கு நிரந்தரத் தீர்வு காண வழிவகுக்கும்.

Tuesday, February 06, 2007

காவிரீ...! : கவிதை

நெடுங்காலம் எதிர்பார்த்திருந்த காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வந்து விட்டது. இதற்கு முந்தைய ஒரு இடைக்காலத் தீர்ப்பு வந்த நேரத்தில், அக்டோடர்-1, 2002 திண்ணை இதழில் நான் எழுதி வெளிவந்தது "காவிரீ!" என்ற இந்தக் கவிதை.

இந்தத் தருணத்தில், இந்தக் கவிதையின் விழைவுகள் உண்மையாக வேண்டும் என்ற ஆவலோடு, இங்கே மீள்பதிவு செய்கிறேன்.





காகம் முனிவரின் கமண்டலம் கவிழ்க்க
காட்டாற்று வெள்ளமாய் வந்தவள் நீ எனக்
கதையுண்டு.

காங்கிரஸ் அரசுகள் பல கவிழ்ந்தும்
கழக அரசுகள் பல கழிந்தும்
கழனிகளில் தமிழ் உழவர் முகங்கள்
கவலையில் கவிந்தும்
ஆணையத்தின் அறைகூவல்கள்
அரசுகளின் வன்செவியில் விழுந்தும்
நீதி மன்றங்கள் எம்
நிலை கண்டு நெகிழ்ந்தும்
காலத்தில் சரியளவு
கனமழை பொழிந்தும்
ஒவ்வோர் ஆண்டும் கர்நாடகம் தாண்டி நீ
கால் பாவ முடியவில்லை!

அலைகடல் நாயகனைத் தேடி
ஆசையுடன் பாய்ந்து வரும் உன்னை
அணை போட்டுத் தடுக்கின்றார்
அருகிருக்கும் மாநிலத்தார்.
அரசியல் குறுக்கீடோ ?
அளவுக்கு அதிகமாய்ப் பயிர் செய்ய
ஆசையோ ?
ஆற்றின் மேல் எமக்குத் தான்
அதிகாரம் எனும் நினைப்போ ?
அண்டை வீட்டாருடன் சண்டையிட
ஆவலோ ?
புரியவில்லை.





பொங்கிப் பெருகிப் புரண்டோடும்
பேராற்றை
சொங்கிச் சிறு மனங்கள்
சிறைப்படுத்துவதோ ?
'ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம் ' என
ஊர்க்குளத்துத் தண்ணீரை
உலகம் முழுமைக்கும் சொந்தமாக்கிய
வள்ளுவன் வாய்மொழி
வையகம் மறப்பதோ ?

நீருக்குப் போரிடும் சாக்கில்
நெடுங்கால பந்தத்தை
நெருப்பிட்டுக் கொளுத்துவதோ ?
நாடுகள் பல கூடி நைல் நதி நீரை
நயமாய்ப் பங்கிடும்
நன்னடத்தை கண்டும்
நம் நடத்தை மாறாதிருப்பதோ ?

கன்னடரே, தமிழரே!
கண்மூடித்தனம் ஒழிப்போம்.
அமைதியாய்ச் சிந்தித்து
அறிவார்ந்த முடிவெடுப்போம்.
'இருதரப்பும் வெற்றி! ' என்று
இறுமாப்புடன் உரைப்போம்.
நெல்மணியும் கரும்பும் நிறையும்
காவிரியின் கரைகளில்
நல்லுறவும் நட்பும்
செழித்தோங்கி வளரச் செய்வோம்.

Monday, February 05, 2007

"அம்மா என்றால் அன்பு" : காலில் விழுந்த கருணாநிதி

அகில உலகையும் தன் அன்பால் அரவணைக்கும் அன்னை மாதா அமிர்தானந்தமயின் தமிழக விஜயம் பற்றி பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

நாகப் பட்டினத்தில், ஒரு தனி அமர்வில் தமிழ்க முதல்வர் கருணாநிதி அம்மாவின் காலில் விழுந்து வணங்கினார் என்று செய்தி வந்திருக்கிறது. அவரது துணைவியார் ராசாத்தி அம்மாளும் உடன் இருந்தார். அப்போது அங்கு இருந்த போலீஸ் தலைகள் இதைக் கண்டு பிரமிப்பில் ஆழ்ந்துள்ளன.





கலைஞர் கருணாந்தி பூர்வஜன்மத்தில் செய்த புண்ணியமோ என்னவோ, அன்னையின் அடிகளில் வீழும் பாக்கியம் அவருக்குக் கிடைத்து விட்டது.

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய்! நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய்! என்ன பேறு பெற்றேன்
தாயே! மலைமகளே! செங்கண் மால் திருத் தங்கச்சியே!

என்ற அபிராமி அந்தாதி நினைவுக்கு வருகிறது. "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" என்ற கொள்கை முழக்கத்தில் ஊறிய கருணாநிதி, ஏழைகள் அம்மாவின் சிரிப்பில் இறைவனைக் காண்பதாகப் பேசியுள்ளார். அம்மா பராசக்தி! வாழவைக்கும் உன் புன்னகையின் சக்தி தான் என்னே!

செய்தி: அம்மாவின் சிரிப்பில் கவர்ச்சி: கருணாநிதி

நாகை மாவட்டத்தில் சுனாமி பாதித்த மீனவர்களுக்காக, அமிர்தானந்தமயி மடம் சார்பில், 9 கோடி ரூபாய் செலவில் 450 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. இந்த வீடுகளை அரசிடம் ஒப்படைக்கும் விழா நாகையில் நேற்று நடைபெற்றது. முதலமைச்சர் கருணாநிதியிடம் மாதா அமிர்தானந்தமயி தங்கநிற அடையாள சாவியை வழங்கி,முறைப்படி வீடுகளை ஒப்படைத்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர், கேராளத்தின் கடலோர கிராமத்தில் பிறந்த அம்மா நல்ல தொண்டுகளை செய்து வருகிறார் என்று பாராட்டினார். மேலும் 500 வீடுகளைக் கட்டித்தர மடம் தயாராக உள்ளது என மனு அளிக்கப்பட்டது. அதில், மடம் தயாராக உள்ளது என்பதற்குப் பதிலாக தாயாராக உள்ளது என இருந்ததை முதலமைச்சர் கண்டுபிடித்துவிட்டார். அதை அவர் குறிப்பிட்டு, கடிதத்தில் இருப்பதைப்போல அவர் தாயாராக இருந்து கேரள மக்களைப்போல தமிழக மக்களையும் காப்பாற்றவேண்டும் என்று கூறியது சுவாரஸ்யமாக இருந்தது.

மேலும், அவருக்க்கே உரித்தான பாணியிலும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணுகிறார். இதைப் பார்ப்பதில் எனக்கு மகிச்சி. அவருடைய சிரிப்பில் ஒரு கவர்ச்சி இருக்கிறது. ஏழைகளுக்கு அந்தக் கவர்ச்சி பிடித்திருக்கிறது என்றார் கருணாநிதி.

அகிலம் முழுவதற்கும் தன் அன்புச் சிறகுகளின் நிழலில் ஆறுதல் தரும் அம்மாவின் அன்புக் கரங்கள் பற்றி "Darshan - The Embrace" என்று ஒரு ஆவணப் படத்தை டச்சு இயக்குனர் ஒருவர் எடுத்துள்ளார். (இந்த அருமையான படம் இந்தியாவில் பெரிய அளவில் திரையிடப் பட்டதாகத் தெரியவில்லை - யாருக்காவது தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்). இந்தப் படத்தைப் பார்த்துப் பரவசமடைந்த பிரெஞ்சு பிஷப் ஒருவர் "அம்மாவைக் காண என் மனம் துடிக்கிறது. மேற்குலகில் ஆன்மிகம் என்றால் என்ன என்பதையே நாம் மறந்து விட்டோம். அம்மா தன் அன்பால் அதனை நினைவூட்டுகிறார்" என்கிறார். ஈரானைச் சேர்ந்த ஷயீதா அம்மா ஆசி வழங்கியதும், நெகிழ்ந்து கண்ணீர் விடுகிறார். உலகெங்கும் பக்தர்கள் மணிக்கணக்கில் தவங்கிடந்து நின்று அம்மாவை தரிசிக்கின்றனர்.





அன்னை பராசக்தியின் இந்தத் திருஅவதாரம் கடையர்களையும் தன் கடைக் கண் பார்வையால் கடைத்தேற்றுகிறது. அம்மாவின் அளப்பரிய கருணை உலகத்தில் மறைந்து வரும் மானுடப் பண்புகளுக்கு மறுவாழ்வளிக்கிறது.

உள்ளம் உருகாதோ - பொய் ஆணவ
ஊனம் ஒழியாதோ
கள்ளம் தவிராதோ - அம்மா, பக்திக்
கண்ணீர் பெருகாதோ
வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ
விள்ளற்கரியவளே - அனைத்திலும்
மேவியிருப்பவளே

- மகாகவி பாரதி

Friday, February 02, 2007

வீர ரசம் பொங்கும் ஜடாயு நடனம்: இந்தோனேசியாவிலிருந்து

ராமாயணம் பற்றி யூ-ட்யூபில் தேடிக் கொண்டிருக்கையில் கிடைத்தது இந்த இந்தோனேசியாவின் பாரம்பரிய நடனம் (பாலி / ஜாவா பகுதிகளைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஊகிக்கிறேன்).




எட்டே நிமிடங்களில் ராமகாதையின் ஜடாயு படலத்தை உணர்ச்சி மயமாகச் சித்தரித்திருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் ஜடாயு நுழைந்தவுடன் ஆடும் தாண்டவம் அருமை. தோள்களைக் குலுக்கிக் கொண்டு முகத்தில் கொடூரத்தை வெளிப்படுத்தும் ராவணன்.. சீதையாக வரும் பெண்ணின் முகத்தில் தான் என்ன அழகு, என்ன ஒரு grace! அதுவும் ஜடாயு சிறகொடிந்து விழுந்ததும் அவளது முக பாவங்கள்! யுத்தக் காட்சியில் வீர ரசம் கொப்பளிக்கிறது. ராம லட்சுமணர்கள் ஜடாயுவைக் கண்டதும் ஆற்றாமை பொங்க அவன் சொல்லும் செய்திகளில் ஆழ்ந்த அபிநயங்கள். கடைசியாக ராம-லட்சுமணர்கள் வீழ்ந்த கழுகரசனுக்கு அஞ்சலி செய்து வணங்கும் காட்சி பரவசமூட்டுகிறது.

"கைவழி நயனம் செல்ல, கண்வழி மனமும் செல்ல" என்ற பரத இலக்கணத்தைப் போலவே மிகவும் நுணுக்கமான ஹஸ்த முத்திரைகள் இந்த நடனத்திலும் உள்ளன. நடனம் முழுவதும் discrete பகுதிகளாக இல்லாமல் காட்சிகள் அலை அலையாக தொடர்ந்து வருகின்றன..

ராமாயண பாத்திரங்களின் ஒப்பனைகள் அற்புதம். ராம-லட்சுமணர்கள் அம்பறாத் துணியைச் சேர்த்துக் கட்டியிருக்கும் கம்பீரம்! ஜடாயுவின் சிறகு ஒப்பனையின் கலை நயம் வெகு நேர்த்தி.

இனிமையான பின்னணி இசை இந்திய செவ்வியல் இசையின் சாயலுடன் ஜலதரங்க ஒலியை நினைவூட்டுகிறது. பாடல்கள் மேற்கத்திய ஓபரா போன்று பாடப் பட்டாலும், வார்த்தைகள் மற்றும் பாடல் வரிகளில் சில சம்ஸ்கிருத ஒலிகள் தெளிவாகத் தெரிகின்றன. (ஜாவா, பாலித் தீவின் மொழிகளில் ஏராளமான சம்ஸ்கிருதச் சொற்கள் உள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது).

ராமாயண காவியம் இன்றும் இஸ்லாமிய நாடு என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்தோனேசியாவில் அழியாமல் உயிர்த்துடிப்புடன் இருப்பது பெரிய விஷயம். இந்த நாடகங்களில் நடிப்பதையும், பார்ப்பதையும் அங்குள்ள கலை, கலாசாரத்தில் ஆர்வமுள்ள மக்கள் பெரும் பாக்கியமாகக் கருதுகிறார்கள். இந்த கலாசார பொக்கிஷம் வரும் காலங்களிலும் பாதுகாக்கப் படும் என்றே நம்புவோம்.

Thursday, February 01, 2007

டாடாவின் இரும்புக் கரங்கள்: இந்தியாவின் பெருமிதம்

"என்ன சொல்லுகிறீர்கள்? டாடாக்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் தரத்திற்கு இரும்பு எஃகு தயாரிக்கப் போகிறார்களா? அப்படி நடந்தால், அவர்கள் தயாரிக்கும் ஒவ்வொரு இரும்புத் துண்டையும் சாப்பிடுவேன் என்று பந்தயம் வைக்கிறேன்" என்று 1907ஆம் ஆண்டு சவால் விட்டார் அப்போதைய பிரிட்டிஷ் இந்திய ரயில்வே துறைத் தலைவர் சர் ஃபிரடெரிக் அப்காட். டாடா வணிகக் குழுமத்தைத் தொடங்கிய பாரதத் தாயின் தவப் புதல்வர் ஜாம்ஷ்ட்ஜி டாடா இந்த எள்ளல்களைக் கண்டு அயரவில்லை. இதற்கு முன் 1899ஆம் ஆண்டிலேயே ஒரு பத்திரிகையில் எழுதினார்: “நமது இளைஞர்கள் ஐரோப்பாவின் தலைசிறந்த நிறுவனங்களுக்குச் சமமாக அவர்கள் களத்திலேயே நிற்க வல்லவர்கள் என்று நிரூபித்து வருவகிறார்கள்; அது மட்டுமல்ல, இந்த நிறுவனங்களை வீழ்த்தவும் நம்மால் முடியும்”.





காலச் சக்கரம் சுழல்கிறது, கனவு மெய்ப்படுகிறது. 2006 : இந்தியாவில் பிறந்த லட்சுமி நிவாஸ் மித்தல் தலைமையில் இயங்கும் மித்தல் ஸ்டீல் ஐரோப்பாவின் பிரம்மாண்டமான இரும்புத் தொழில் கம்பெனியான அர்செலர் நிறுவனத்தை பல சர்ச்சைகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் இடையில் வாங்கி கையகப் படுத்தியது. 2007 தொடக்கம்: இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், நார்வே உள்ளிட்ட நாடுகளில் இரும்பாலைகள் கொண்ட “கோரஸ்” என்ற ஐரோப்பாவின் மிகப் பெரிய இரும்புத் தொழில் நிறுவனத்தை டாடா குழுமம் சி.எஸ்.என். என்ற வேறொரு பன்னாட்டு நிறுவனத்தை ஏலத்தில் தோற்கடித்து வாங்கியுள்ளது பற்றிய செய்தியை எல்லாரும் படித்திருப்பீர்கள். இதற்காக டாடா நிறுவனம் தரும் விலை ரூ. 53,000 கோடி மட்டுமல்ல, முதலீட்டாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் தங்கள் நிறுவனத்தின் எதிர்காலம் முழுவதையுமே துணிந்து பணயம் வைத்துள்ளது. சாகசத்தை விழையும் தீரர்களின் வரிசையில் டாடா குழுமத் தலைவர் ரதன் டாடா இணைந்திருக்கிறார். தன்னையும் விடப் பெரிய அளவு உள்ள வணிக நிறுவனத்தை வாங்கும் துணிச்சல், அதை நன்கு நிர்வகித்து நடத்தி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இவற்றால் உந்தப் பட்ட டாடா ஸ்டீல் நிறுவனம் புதிய இந்தியாவின் கனவுகளையும், நம்பிக்கைகளையும் பிரதிபலிக்கிறது.

ஒரு பெரிய சஸ்பென்ஸ் திரைப்பட முடிவு போல பெரும் திகிலுடன் வணிக ஊடகங்களால் பேசப் பட்ட இந்த ஏலத்தின் கடைசிச் சுற்று நேற்று முடிவடைந்தவுடன் டாடா நிறுவன முக்கியஸ்தர்களின் முகத்தில் ஒளிர்ந்த அந்தப் பரவசம். தலைமையகம் பாம்பே ஹவுசிலும், ஜாம்ஷெட்பூர் டாடா நகரிலும், தொழிலாளர்கள் மற்றும் யூனியன்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்! முதலாளித்துவம், வர்க்கப் போராட்டம், புடலங்காய் எல்லாம் காற்றில் கரைய டாடா நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் ஒருவருக்கொர்வர் தழுவிக் கொண்டு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். “டாடா கோரஸ் ஜிந்தாபாத்” என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.

இதன் மூலம் உலகின் முதல் 5 இரும்புத் தொழில் நிறுவனங்களின் பட்டியலில் டாடா-கோரஸ் இடம் பிடிக்கிறது; இந்தியாவின் மிகப் பெரிய வணிகக் குழுமம் என்கிற கிரீடத்தை ரிலையன்சிடமிருந்து டாடா தட்டிப் பரிக்கிறது. பிர்லா, ரிலையன்ஸ் தலைவர்கள் மற்றும் பல தொழிலதிபர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் இந்த வரலாற்று சாதனையைப் பற்றிப் பெருமையுடன் பேசினர். அசூயையோ, பொறாமையோ அல்ல, ஒரு சக இந்தியக் கம்பெனியின் சிகரம் தொடுதலை வாழ்த்தும் பாங்கு அதில் தென்பட்டது.

“இரும்பினால் ஆன தசைகள், எஃகு நரம்புகள், அதனுள் இடியை உண்டாக்கும் இதயம் ; இவையே எதிர்கால இந்தியாவிற்குத் தேவை” என்றார் சுவாமி விவேகானந்தர். டாடா ஸ்டீல் நிறுவனம் மற்றும் டாடா குழுமம் எடுத்திருக்கும் இந்தப் பெரும் முயற்சிகள் ஒவ்வொரு இந்தியனையும் தோள் தட்ட வைக்கின்றன என்றால் மிகையில்லை.

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா!