Tuesday, May 15, 2007

யோக ஞானத்திற்குக் காப்புரிமை (patent) கேட்கும் அமெரிக்கர்கள்!

ஜாக்கிரதை! அடுத்த தடவை புஜங்காசனம் செய்வதற்கு முன்னால் நீங்கள் அதற்கான உரிமை பெற்றிருக்கிறீர்களா என்று ஒரு தடவை சரிபார்த்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால் அந்த ஆசனத்துடன் அப்படியே உங்களைத் தூக்கிக் கொண்டு போய் அமெரிக்கச் சிறைகளில் போடும் சாத்தியம் உள்ளது.

"அமெரிக்க காப்புரிமை மற்றும் ட்ரேட் மார்க் நிறுவனம் இதுவரை யோக சாதனங்கள் தொடர்பான 134 காப்புரிமைகள் (patents), 150 காபிரைட் உரிமைகள் மற்றும் யோகா தொடர்பான 2315 ட்ரேட் மார்க் உரிமைகள் இவற்றை வழங்கியிருக்கிறது" என்று சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் மற்றும் இன்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிபியூன் பத்திரிகைகளில் சுகேது மேத்தா எழுதியுள்ள இந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.

நவம்பர் 2006-ல் பிட்ஸ்பர்க் நகரத்தைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவின் எல்லா யோகா பள்ளிகளுக்கும் ஒரு அறிக்கை அனுப்பினார் - "ஓம்" என்ற மந்திரத்திற்கு அவர் ட்ரேட் மார்க் வாங்கிவிட்டதாகவும், அதனால் இந்த மந்திரத்தை ஓதுவதற்கும், ஓம் படங்களைப் பயன்படுத்துவதற்கும் அவரிடம் அனுமதி பெற வேண்டும் என்பதாக. யோகா காப்புரிமைகளைக் கண்டு கடுப்படைந்த ஒருவரது கற்பனை இது!

ஆயிரமாயிரம் வருடங்களாக பாரதத்தின் ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் உலக நன்மைக்காக உருவாக்கிய இந்தக் கலையை இன்று அமெரிக்காவின் சந்தைப் பொருளாதாரம் ஒரு பெரும் வியாபாரம் என்ற அளவிலும் கொண்டுவந்திருக்கிறது. யோக வகுப்புகள், பயிற்சிகள், புத்தகங்கள், வீடியோக்கள், உபகரணங்கள் இவை எல்லாம் அடங்கிய "யோகா சந்தை"யின் மதிப்பு ஆண்டு ஒன்றுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. யோகம் எந்த அளவிற்கு சமுதாயத்தில் ஊடுருவி உள்ளது என்பதை உணர்த்தும் நல்ல விஷயம் தான் இது. மேலும் தங்கள் உழைப்பிற்கும், திறமைக்குமான ஊதியத்தை யோகம் கற்றுத் தருபவர்கள், அந்த நிறுவனங்கள் எதிர்பார்ப்பதும் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், இதிலும் போட்டி மனப்பான்மையாலும், பேராசையாலும் உந்தப் பட்டு தங்கள் லாபங்களை மட்டும் பெருக்கிக் கொள்ள சிலர் தேர்ந்தெடுக்கும் வழிகள் தான் இந்த காப்புரிமை சமாசாரங்கள். இவர்கள் யோகா கற்றுக் கொண்டு, கற்றுக் கொடுத்து என்ன பயன்?

இந்து ஆன்மிக மரபில் வழிவழியாக வரும் கலை தான் யோகம் என்பது இன்று உலகறிந்த விஷயம். இப்படியிருக்கையில், காப்புரிமை கோரி விண்ணப்பம் செய்பவர்களுக்கு எந்த அடிப்படையில் அமெரிக்க அரசு நிறுவனம் அந்த உரிமையை வழங்குகிறது என்பது புரியாத வேடிக்கையாக உள்ளது. இத்தகைய வியாபார சுறாக்களிடமிருந்து பாதுகாப்பு வேண்டியிருப்பதால் பாரதத்தின் ஆன்மிகப் பாரம்பரியத்தில் வந்த யோக குருமார்களும் தங்கள் யோக முறைகளைக் காப்புரிமை செய்யும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள் - ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் "சுதர்ஷன க்ரியா" என்ற பிராணாயாம முறை, மகரிஷி மகேஷ் யோகியின் "ஆழ்நிலைத் தியானம்" இவற்றுக்கும் அமெரிக்காவில் காப்புரிமை உள்ளது.




இந்திய கலாசாரத்தில் ஞானம் என்பது கடைச் சரக்கல்ல என்ற கருத்து பண்டைக் காலம் முதலே வேரூன்றி உள்ளது. "ஷ்ருண்வந்து ஸர்வே அம்ருதஸ்ய புத்ரா:" (அமுதத்தின் புதல்வர்களே! எல்லாரும் கேளுங்கள்) என்று அறைகூவிய ரிஷிகள் இந்த ஞானத்தை உலகம் முழுவதற்கும் வாரி வழங்கியிருக்கின்றார்கள். இவற்றுக்கு விலை வைப்பது என்பது யோகத்திற்கு செய்யும் பெரும் அவமதிப்பு அன்றி வேறில்லை.

இந்தியாவின் எல்லா கிராமங்களிலும் அறியப் பட்ட பாட்டி வைத்திய மஞ்சள் மருத்துவமுறைகளுக்கு இதற்கு முன்பு காப்புரிமை வழங்கப் பட்டபோது தான் இந்த பிரசினையின் தீவிரம் நமக்கு உறைத்தது. இந்த வழக்கில் பல பழைய சமஸ்கிருத ஆயுர்வேத நூல்களை எல்லாம் ஆதாரம் காட்டி நாம் வெற்றி பெற்றோம். பிறகு விழித்துக் கொண்ட அரசு சம்ஸ்கிருதம்,பிராகிருதம், பாலி, தமிழ் மொழிகளில் உள்ள பழைய நூல்களில் இருக்கும் யோகம், ஆயுர்வேதம் பற்றிய விவரணங்களை வகைப் படுத்தி இவற்றை டிஜிட்டல் உருவில் கொணர்ந்து வரும் தலைமுறைகளுக்காக பாதுகாக்கும் திட்டத்தைத் தொடங்கியது. இந்தத் திட்ட செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போதே, இது போன்ற காப்புரிமைகள் வளரும் நாடுகளில் வழங்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது தான் சோகம்.

இந்தியாவில் "அறிவுக் கொள்ளை" (intellectual piracy) பெரிய அளவில் நடந்து வருகிறது என்று வளரும் நாடுகள் முறையிடுகின்றன. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் உள்ளிட்ட திருட்டு மென்பொருள்கள், ஹாலிவுட் திரைப்பட திருட்டு சி.டிக்கள் முதல் பிளாட்பாரக் கடைகளில் கிடைக்கும் உலக எழுத்தாளர்களின் நூல்கள் வரை காப்புரிமை பெற்ற பல பொருட்கள் திறந்த வெளியில் திருடப் படுகின்றன என்பது உண்மையே - ஒரு வளரும் நாட்டின் அடக்க முடியாத தாகத்தை இவை தணிக்கின்றன. ஆனால் இவை அனைத்தும் சட்டத்திற்கு எதிராகத் தான் நடக்கின்றன. இவை போக, உரிய விலை கொடுத்து இந்தப் பொருட்களை வாங்கும் இந்திய மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது இதனால் வரும் லாபக் குறைச்சலை ஓரளவுக்கு சரிக் கட்டுகிறது என்றும் சொல்லலாம்.

இந்த நிலையில் தங்கள் பாரம்பரிய ஞானத்தை வளரும் நாடுகள் திருடுவதாக இந்தியா கோபப் படுவது நியாயமா என்று கேட்கப் படுகிறது.

பல உயிர்காக்கும் மருந்துகள் பன்னாட்டு மருத்துவக் கம்பெனிகளால், இந்தியர்களின் ஆராய்ச்சி மற்றும் உழைப்பு மூலம் இந்தியாவிலேயே தான் கண்டுபிடிக்கப் படுகின்றன. இவற்றுக்கு காப்புரிமை பெற்று, இந்தியா உட்பட உலகெங்கும் விற்று கோடி கோடிகளாக வருமானம் ஈட்டும் இந்த கம்பெனிகள் அது போதாதென்று, பாரத மக்களின் பாரம்பரிய ஞானத்திற்கும் வியாபார உரிமை கோருவது எந்த வகை நியாயம்?

".. மருந்துகள், யோகா இரண்டின் தேவையும் ஆரோக்கிய வாழ்வு அளிப்பது தான். இந்தியா உலகம் முழுவதற்கும் யோகாவை இலவசமாகவே அளித்துள்ளது. அதனால் அதற்கு பிரதி உபகாரமாக உலகம் உயிர்காக்கும் மருந்துகளை குறைந்த விலையில் இந்தியாவுக்கு வழங்க வேண்டும், அல்லது குறைந்த பட்சம் இந்தியக் கம்பெனிகள் இவற்றின் குறைந்த விலை வகைகளை (cheap generics) தயாரிக்க அனுமதியாவது வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு?

பத்மாசனம் மனித குலம் முழுவதற்கும் சொந்தமானது என்றால், லூகோமியாவிற்கான "க்ளீவெக்" (Gleevec) மருந்துக்கான பார்முலாவும் அப்படித்தான். பின் ஏன் இந்த மருந்துக்கான பிரத்தியேக காப்புரிமையைக் கேட்டு ஒரு சுவிஸ் நாட்டு மருந்துக் கம்பெனி இந்திய அரசின் மீது உலக வர்த்தக நிறுவனத்திடம் வழக்குத் தொடுக்க வேண்டும்?"


மேற்சொன்ன கட்டுரையில் ஆசிரியர் வைக்கும் இந்தக் கேள்வி சிந்தனைக்குரியது.

Thursday, May 10, 2007

தமிழ் நாட்டில் பற்றி எரியும் குடும்பச் சண்டை

நேற்று மதுரையில் ஒரு பிரிவு திமுக ரவுடிகளால் தினகரன் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட அச்சு அசல் திராவிடத்தனமான வன்முறையில் இரண்டு மென்பொருள் பணியார்கள் மற்றும் ஒரு பாதுகாவலர் என மூன்று அப்பாவித் தமிழர்கள் பலியாகியிருக்கின்றனர். இந்த செய்தியை இன்று காலை படித்துக் கொண்டிருக்கும்போதே நண்பர் ஒருவரிடமிருந்து இந்த மின் அஞ்சல் வந்தது.. நான் எழுத நினைத்ததை இன்னும் நன்றாகப் பிரதிபலித்த அந்த மின் அஞ்சலை அப்படியே தருகிறேன்-

நண்பர்களே,

மதுரை நேற்று பற்றி எரிந்திருக்கிறது. எரித்தவர் கண்ணகி அல்ல. கண்ணகிக்கு சிலை வைத்தவரின் அக்னிக் குஞ்சு. தி மு க ஆட்சிக்கு வந்தால் வழக்கமாக எதிர்க் கட்சியினரரயும் எதிர்க்கும் பத்திரிகைகளையும் எரிப்பார்கள். இன்றைக்கு இவர்கள் குடும்பத்துக்குள் சண்டை, தமிழ் நாட்டையை விலைக்கு வாங்கும் அளவுக்கு பண பலம் ஒரு புறம், தமிழ் நாட்டையே தீ வைத்து எரிக்கும் அளவுக்கு ரவுடிகள் ஆட்சி மறுபுறம். ஐம்பதுகளில் சென்னையில் இருந்து சேலத்துக்கு கள்ள ரயில் ஏறிச் சென்றவருக்கு இன்றைக்கு இவ்வளவு சொத்து, பணபலம், அராஜகம், ஆட்சி அதிகாரம், பேய்கள் ஆட்சி செய்ய பிணம் தின்னும் சாத்திரங்கள்.

இதில் சம்பந்தப் படாத அப்பாவி மக்கள் கொளுத்தப் படுகிறார்கள் என்றும் சொல்ல முடியாது, "ஜனநாயக" தர்ம நியாயப் படிப் பார்த்தோமானால் இந்த அராஜகவாதிகளுக்கு ஓட்டுப் போட்டப் பாவத்துக்கு அப்பாவி மக்கள் உயிரோடு கொளுத்தப் படுகிறார்கள். அன்று சிதம்பரத்தில் ஒரு உதய குமாரன், க்ளைவ் ஹாஸ்டல் மாணவர்கள், கீழ வெண்மணி உழவர்கள், தர்மபுரியில் விவசாயக் கல்லூரி மாணவிகள், தரரசு ஊழியர்கள், இன்று அப்பாவி பத்திரிகை ஊழியர்கள். இந்த அரக்கர்கள் இன்னும் எத்தனை வருடங்கள் ஆண்டு இன்னும் எத்தனை பேர்களை உயிரோடு எரிக்கப் போகிறார்கள் ?

இப்படியாகப் பட்ட ஒரு கட்சி, ஒரு தலைவன், ஒரு ஆட்சி, இவர்களுக்கு ஒரு டி வி, அதில் வரும் ஆபாச அபத்தங்களைக் கண்டு கழித்து மூளை மழுங்கடிக்கப் பட்ட மக்கள், மரத்தை வெட்டும் எதிர்க்கட்சி, வேட்டியை கிழிக்கும் காங்கிரஸ் மொத்தத்தில் தமிழ் நாடே ஒரு அருவருப்பான பிரதேசமாக மாறி விட்டது.

இந்த குடும்ப சண்டையில் நாளைகே ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள் மாஃபியா கும்பல்கள், இதன் பின்புறம் உள்ள அரசியலையும் அதனால் தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் நேர விருக்கும் சாதக பாதகங்களையும் அரசியல் பார்வையாளர்கள் எந்த விதமான பயமும், மாச்சரியமும் இன்றி எடுத்துரைக்க வேண்டும். செய்வார்களா?