Friday, September 28, 2007

"பாரதி நாத்திகனா?" - பதிலடி

பாரதியின் கீழ்க் குறிப்பிட்ட ஒரு கவிதையைக் காட்டி அவர் நாத்திகர் என்று கூறும் ஒரு பதிவைப் பார்த்தேன்.

கடலினைத்தாவும் குரங்கும் வெங்
கனலிடைப் பிறந்த செவ்விதழ்ப் பெண்ணும்
வடமலை தாழ்ந்ததனாலே தெற்கே
வந்து சமன்செய் குட்டைமுனியும்

நதியினுள்ளே மூழ்கிப் போய் அந்த
நாகர் உலகில் ஒரு பாம்பின் மகளை
விதியுறவே மணம் செய்த திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்

ஒன்று மற்றொன்றைப் பழிக்கும் ஒன்று
உன்மையொன்றோதி மற்றொன்று பொய்யென்னும்
நன்று புராணங்கள் செய்தார் அதில்
நல்ல கவிதைகள் பலபல தந்தார்

கவிதை மிக நல்லதேனும் அக்
கதைகள் பொய்யெனத் தெளிவுறக் கண்டோம்

அந்தப் பதிவில் அளித்த மறுமொழியை இங்கே இடுகிறேன் -

கண்ணன்,

மெய்ஞானியும், யோகியும், கவிஞனும் ஆன பாரதியின் கவிதைகளைக் கற்கும் போது அவற்றின் ஆழ்ந்த உட்பொருளைக் கருத வேண்டுமே அல்லாது, மேம்போக்காகப் படித்தால் அர்த்தத்திற்குப் பதில் அனர்த்தம் தான் கிடைக்கும்.

இந்தப் பாடலையே எடுத்துக் கொள்வோம் -

// கனலிடைப் பிறந்த செவ்விதழ்ப் பெண்ணும் //

இது யாகத்தீயிலிருந்து தோன்றிய பாஞ்சாலி என்ற திரௌபதியைக் குறிக்கிறது. பாரதக் கதையும் பாஞ்சாலியும் முழுப் பொய் என்று பாரதி உண்மையிலேயே கருதியிருந்தால், ஏன் நூற்றுக் கணக்கான பாடல்களில் பாஞ்சாலி சபதம் என்ற காவியத்தை எழுத வேண்டும்? அதன் கடவுள் வாழ்த்திலேயே "ஐவர் பூவை திரௌபதி புகழ்க் கதையை" என்று கூற வேண்டும்? பராசக்தியையும், தேச விடுதலையையும் தரிசிக்க ஏன் இந்த அற்புதமான சரிதத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்?

// விதியுறவே மணம் செய்த திறல்வீமனும் கற்பனை என்பது கண்டோம் //

இந்த வீமனையும், அவன் சகோதரன் பார்த்தனையும் தான் எழுச்சி பெற்ற பாரதத்தின் லட்சிய நாயகர்களாகவே பாரதி காண்கிறார் -

"விளையும் மாண்பு யாவையும் பார்த்தன் போல்
விழியினால் விளக்குவாய் வா வா வா"
(பாடல் - ஒளி படைத்த கண்ணினாய்)

"முன்னைப் பார்த்தன் கண்ணன் இவன் நேரா - என்னை
உய்யக் கொண்டருளல் வேண்டும்"
(பாடல் - தேடிச் சோறு நிதம்)

"பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும்
வீமனும் துரோணனும் வீட்டுமன் தானும்
இராமனும் வேறுள இருந்திறல் வீரரும்
நற்றுணை புரிவர் வானக நாடுறும்"
(பாடல் - சிவாஜி தன் சைனியத்திற்குக் கூறியது)


"முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்த வில் யாருடை வில்? - எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல்
ஆரிய ராணியின் வில்"

என்று ராமனை பாரத தேவியின் வடிவமாகவே கண்ட பாரதியா ஸ்ரீராமனை இழித்துரைத்தவன்? என்ன கொடுமை இது!

இங்கு குறிப்பிட்டிருக்கும் பாடல் ஒருவிதமான நிராகரிப்பு மனப்பான்மையில் பாரதி பாடியது, அவ்வளவே. (இதை யோக மொழியில் "நிவ்ருத்தி" என்பர்).

சைவம், வைணவம் முதலான அறுசமயங்களையும் தழைக்கச் செய்து, இவற்றின் இறுதிப் பொருளாக இருங்கும் அருவமான, குணங்களைக் கடந்த அத்வைதப் பரம்பொருளையும் உணர்த்தியவர் ஆதிசங்கரர் - இது தெரிந்த விஷயம். அவரது "ஆன்ம ஷட்கம்" என்ற பிரசித்தமான பாடலில், சில வரிகள்-
"நான் சைவமும் அல்ல, சாக்தமும் அல்ல,
ஐந்து இரவுகள் திருமாலை வழிபடும் வைணவமும் அல்ல,
எனக்கு வேதமும் இல்லை, வேள்வியும் இல்லை,
ஆசாரமும் இல்லை, தவமும் இல்லை
சிதானந்த ரூபம் சிவம் நான் சிவம் நான்"!

இந்த வரிகளை மட்டும் தனியாகக் காட்டி சங்கரர் சைவத்திற்கும், வைணவத்திற்கும் எதிரி என்று பிதற்றுவது சரியா? அது போன்றது இங்கு சொல்லியிருப்பது.

பாரதியின் ஆன்மிக, தேசிய, சமய தரிசனங்களை முழுமையான கருத்தாக்கங்களாக நாம் பார்க்க வேண்டுமே அல்லாது ஏதோ ஒரு கவிதையில் இருந்து ஒன்றிரண்டு வரிகளை மேற்கோள் காட்டி அவர் "நாத்திகர்" என்றெல்லாம் பேசுவது பகுத்தறிவின்மையையே காட்டுகிறது. குறிப்பாக எதையுமே உருப்படியாகவும், ஆழமாகவும் ஆராயாமல் பிதற்றும் திராவிட இயக்க அறியாமையை.

இந்த வார விகடன் "ஓ பக்கங்கள்" பகுதியில் ஞாநி இதே பாடலை வைத்துக் கொண்டு இதே மாதிரி ஜல்லியடித்திருக்கிறார்.

இவர் பாரதியைப் படித்த லட்சணம் இது தானா? இந்த அக்ஞானி எழுதிய கட்டுரையை மட்டும் பாரதி படித்தால், "நீ படித்த என் கவிதைகள் எல்லாம் மறந்து போகக் கடவது" என்று பரசுராமர் மாதிரி சாபமிட்டிருப்பார்.

புராணங்கள் பற்றி பாரதி சொல்லும் இந்த ஒரு பாடலை மட்டும் காட்டிச் செய்யும் புரட்டுக்கள், விஷமத்தனம் தொடர்வதால், இந்தப் பதிவில் இன்னும் கொஞ்சம் சேர்க்கிறேன்:

இந்து சமய நூல்களின் மேன்மையை நேரிடையாகப் புராணங்கள், சாத்திரங்கள் என்ற சொற்களையே இட்டு பாரதி புகழ்ந்துரைக்கும் இரண்டு பாடல்களை இங்கே தருகிறேன். இதன்றி, புராணக் கதை மாந்தர், கருப்பொருள், அவை கூறும் நீதிகள் இவற்றை எத்தனையோ பாடல்களில் அவர் எடுத்தாண்டுள்ளார் என்பதை பாரதியை ஓரளவாவது கற்றவர்கள் புரிந்து கொள்வர்.

பாடல் 1: வீரர் முப்பத்திரண்டு கோடி" எனத் தொடங்கும் "பாரத மாதா நவரத்தின மாலை"யிலிருந்து

அன்னையே அந்நாளில் அவனிக் கெல்லாம்
ஆணிமுத்துப் போன்றமணிமொழிக ளாலே
பன்னிநீ வேதங்கள், உபநிட தங்கள்
பரவுபுகழ்ப் புராணங்கள், இதிகா சங்கள்
இன்னும்பல நூல்களிலே இசைத்த ஞானம்
என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்?
மின்னுகின்ற பேரொளிகாண்! காலங் கொன்ற
விருந்துகாண்! கடவுளுக்கோர் வெற்றி காணே.

இப்பாடலில் பாரத ரிஷிகளின் ஞான ஒளி காலத்தை வென்று நிற்கிறது என்று பெருமிதம் கொள்கிறார் மகாகவி.

பாடல் 2: "மண்ணுலகின் மீதினிலே" என்று தொடங்கும் ஹிந்து மதாபிமான சங்கத்தார் மீது வாழ்த்துப் பாக்கள்

எப்போதும் ஆனந்தச் சுடர்நிலையில்
வாழ்ந்துயிர்கட் கினிது செய்வோர்
தப்பாதே இவ்வுலகில் அமரநிலை
பெற்றிடுவார்; சதுர்வேதங்கள்
மெய்ப்பான சாத்திரங்கள் எனுமிவற்றால்
இவ்வுண்மை விளங்கக் கூறும்
துப்பான மதத்தினையே ஹிந்துமத
மெனப்புவியோர் சொல்லு வாரே.

பாரதி யோக நிலையில் நின்று புராணம், சாத்திரம் எல்லாம் கதைகளே என்று கூறுகிறார் என்பதை முன்பே விளக்கியிருக்கிறேன்.

தனது கட்டுரையில் புராணங்கள் எல்லாம் குப்பைகள் என்று ஈவேரா, கருணாநிதி மற்றும் தான் கூறுவது போன்றே பாரதியும் கூறுகிறார் என்று ஞாநி சொல்ல வந்திருப்பது எப்படியிருக்கிறது?

சுவாமி விவேகானந்தர் சொல்லுகிறார் - "பல சமயங்களில் மிக ஆழ்ந்த மூடத்தனத்தில் இருப்பவர்கள், சில புறத்தோற்றங்களைக் கண்டு தாங்கள் ஆன்மிக உயர்நிலை அடைந்து விட்டதாகக் கருதிக் கொண்டு மனம் பிறழ்வார்கள். மாமன்னரின் மகனான புத்தர் சகல செல்வங்களையும் துறந்து ஓர் இரவில் வீட்டை விட்டுச் செல்கிறார். அடுத்த வேளை உணவுக்கு அல்லாடும் பிச்சைக் காரன் ஒருவன் "புத்தர் தான் செய்யக் கூடுமா? நான் எல்லாவற்றையும் துறக்கிறேன்" என்று சொல்வானானால் அது எவ்வளவு முட்டாள் தனம்! இழப்பதற்கு என்ன இருக்கிறது இவனிடம்?"

அப்படித் தான் இருக்கிறது.

25 comments:

ENNAR said...

தங்களது துணிவை பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் நன்றி

Anonymous said...

//
ராமனை பாரத தேவியின் வடிவமாகவே கண்ட பாரதியா ஸ்ரீராமனை இழித்துரைத்தவன்? என்ன கொடுமை இது!
//

Fantastic post !

Hariharan # 03985177737685368452 said...

ஜடாயு,

பகுத்தறிவுகளுக்கு எதன் மீதும் ஆழமான அறிவு கிடையாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் மட்டையடி மட்டுமே.

இவர்களது சமீபத்திய ராமர்சேது பகுத்தறிவு போதைக்கு பாரதியையே நாத்திக ஊறுகாயாகப் பயன்படுத்தும் அளவுக்கு இந்து துவேஷ போதை தலைக்கேறி இருக்கிறது.

தெளிவான பதிவிற்கு நன்றி!

ஜடாயு said...

என்னர், ஸ்ரீகாந்த், ஹரிஹரன், மறுமொழிக்கு மிக்க நன்றி.

அரவிந்தன் நீலகண்டன் said...

அருமையான பதிவு ஜடாயு. ஒரு அடிப்படையான புரிதல் இல்லாமல் பாரதியை திரித்து பேசும் பொய்யர்களுக்கு சரியான சவுக்கடி அளித்துள்ளீர்கள். ஆனால் இதெல்லாம் அந்த ஜன்மங்களுக்கு உறைக்கும் என்கிறீர்கள். நாணயக்கேடும் நாணமின்மையும் கொண்ட ஞாநி போன்ற கயமைவாதிகள் அடிப்படை மானுட நேர்மையை அரசியல் சூதாட்டத்தில் அடகு வைத்துவிட்டவர்கள் போலி மதச்சார்பின்மை மற்றும் இந்து விரோதம் எனும் போதை சரக்கை விற்று பிழைப்பு நடத்தும் இந்த கலப்பட வியாபாரிகளுக்கு எந்த பொய்யும் கை வந்த கலை,

Anonymous said...

Excellent... Keep up your good work.

Unknown said...

Bhakitinal varum nanmaigal keladi enru Bharati paadirupadu everaku theriyamal poivittede. Kakai siraginele nandalala enru padiyavanai naatigan enru solvadu thamshaga ulladu.

Anonymous said...

dear jatayu , you have distorted my view and analysis to suit your hindutva views and the continuing sangh parivar efforts to use bharathi as a rss member. i did not at all say that bhrathi is an athiest in my article. i have only said he is a great devotee of god. and i did not say that bharathi called all mythologies as garbage. you are using such expressions in the guise of my quotes which is ususal sangh parivar's clever distortion. i have only said bharathi described mythologies as fiction and not reality. i can quoite more of bharathi to prove that his devotion to god and belief in god is different from what you fellows are trying to project as devotion. gnani

ஜடாயு said...

அன்புள்ள ஞாநி, மறுமொழிக்கு நன்றி.

// you have distorted my view and analysis to suit your hindutva views and the continuing sangh parivar efforts to use bharathi as a rss member. //

இல்லை, நான் இந்துத்துவம் என்ற சொல்லைக் கூட இந்தப் பதிவில் பயன்படுத்தவில்லை. உங்கள் கருத்துக்களைத் திரிக்கவும் இல்லை. "புராணங்கள் கட்டுக்கதைகள்" என்று பாரதி கூறியதாக முடிந்த முடிபாக நீங்கள் எழுதியதையே தவறு என்று கூறுகிறேன்.

// that his devotion to god and belief in god is different from what you fellows are trying to project as devotion //

இதுவும் குழப்பமாக இருக்கிறது. பாரதி பக்தர் தான், ஆனால் வேறுமாதிரியான பக்தரா?

"முன்னை இலங்கை" பாடலில் இராமன், கண்ணன், அர்ச்சுனன், வேதங்கள், கீதை எல்லாம் பாரதத் தாயின் பெருமைகளாகவே பாரதி கூறுகிறார் - அதைத் தானே இந்துத்துவம் கூறுகிறது?

வீர சிவாஜி, குரு கோவிந்தர், ரஜபுத்ர வீரர்கள் இவர்களை தேசிய நாயகர்களாக பாரதி போற்றுகிறார், அதைத் தானே இந்துத்துவம் செய்கிறது?

"நாவினில் வேதமுடையவள், கையில் நலந்திகழ் வாளுடையாள்" என்று பாரதத்தாயை வர்ணித்து "வந்தே மாதரம்" என்பது தேசிய கீதம் மட்டுமல்ல இந்திய இனத்தின் "ஜாதீய கீதம்" என்று பாரதி சொன்னார். இந்துத்துவம் அதைத் தானே வலியுறுத்துகிறது?

சொல்லப் போனால், நீங்களும், உங்களைப் போன்றவர்கள் சிலரும் தான் பாரதியின் இத்தகைய சிந்தனைகளை மறைத்தும், திரித்தும் வருகிறீர்கள்.

Anonymous said...

I don't know what Thiru.Gnani wants to convey here. In what way Bharathi's devotion is different from others? Even if he claims that it is different, does he accept Bharathi's way of devotion? Has he read Bharathi's Gita translation in which Bharathi adores AdiSankara? Does Gnani accept that too? Bharathi never believed in 'Aryan race' and 'Dravidian race'. What is Gnani's view on this?
Regards,
Muruganathan

வஜ்ரா said...

The "intellectuals" of the main stream media are the ones who are trying to distort bharathi to suit their "pseudo-secular" view points. Gnani before accusing Jataayu of using Bharathi as RSS icon, should realize this.

Bharathi was not be an RSS member, But RSS is the organization that is doing what Bharathi envisaged. Its precisely this reason why left leaning "intellectual" elite are irritated for.

Anonymous said...

Bharathi's devotion is that of a typical Smartha Advaitin. Worship all forms as One and ultimately realize Tat Twam Asi!

He very clearly mentions this in this verse:
http://thatstamil.oneindia.in/art-culture/2001/04/25/bharathi.html

Does Gnani believe in Advaita?

- Jiva

அரவிந்தன் நீலகண்டன் said...

ஞாநி கூறுவது கயமையின் உச்ச கட்டம். வந்தேமாதரத்தை உயிர் மூச்சாக கொண்ட பாரதியை வந்தேமாதரம் மதரீதியானது என எழுதிய ஞாநிக்கு மேற்கோள் காட்டக்கூட தகுதி கிடையாது

யோசிப்பவர் said...

//பல சமயங்களில் மிக ஆழ்ந்த மூடத்தனத்தில் இருப்பவர்கள், சில புறத்தோற்றங்களைக் கண்டு தாங்கள் ஆன்மிக உயர்நிலை அடைந்து விட்டதாகக் கருதிக் கொண்டு மனம் பிறழ்வார்கள். மாமன்னரின் மகனான புத்தர் சகல செல்வங்களையும் துறந்து ஓர் இரவில் வீட்டை விட்டுச் செல்கிறார். அடுத்த வேளை உணவுக்கு அல்லாடும் பிச்சைக் காரன் ஒருவன் "புத்தர் தான் செய்யக் கூடுமா? நான் எல்லாவற்றையும் துறக்கிறேன்" என்று சொல்வானானால் அது எவ்வளவு முட்டாள் தனம்! இழப்பதற்கு என்ன இருக்கிறது இவனிடம்?"
//

ஆம். ஒரு வகையில் இவர்களிடம் வாதம் செய்வது கூட வீண்தான்.

திரு ஞானியின் பதில் தெளிவாக இல்லை. வீண் சப்பை கட்டு கட்டுவது போல்தான் உள்ளது.

Anonymous said...

ஜடாயு

ஞாநிக்கு எதைப் பற்றியும் ஆழமான அறிவோ பாண்டித்தியமோ கிடையாது. மேற்போக்காகப் படித்து விட்டு தன்னை ஒரு அறிவு ஜீவி போல போலிப் பிம்பம் ஏற்படுத்திக் கொள்பவர். உங்களைப் போன்ற தமிழறிஞர்களின் அருகே கூட நிற்கத் தகுதியற்ற ஒரு போலி.


ஒரு அஞ்ஞாநியைத் தூக்கி வைத்துக் கொண்டு விகடன் ஆடுகிறது. என் நண்பர் ஒருவர் சொன்னது போல இவர் ஞாலத்தின் நிர்மூடன் என்பதைச் சுருக்கி ஞாநி என்று வைத்துக் கொண்டுள்ளார். அணு விஞ்ஞானம் போன்ற அறிவியல் துறைகளில் முறையான அறிவு இல்லாத தற்குறியான இந்த ஞாநி அதைப் பற்றி பெரிய நிபுணர் போன்ற போலித் தோரணையில் எழுதுவது ஏமாற்று வேலை. திண்ணையில் அணு விஞ்ஞானி ஜெயபாரதன் அவர்கள் இதற்கு முன்பாகவே ஞாநியின் இந்த அறிவுப் பற்றாக்குறையையும் போலித்தனத்தையும் கடுமையாகச் சாடியுள்ளார். ஞாநியும் விகடனும் துறை அறிவில்லாமல் பல விஷயங்களில் உளறிக் கொட்டுகின்றன.



இதே ஞாநி முன்பு பாய்ஸ் படப் பிரச்சினையில் சுஜாதா ஏன் இன்னும் சாகவில்லை, செத்துத் தொலைய வேண்டியதுதானே என்று கேள்வி எழுப்பினார். அப்படிப் பட்ட வக்கிரம் பிடித்த மனநோயாளி இந்த அஞ்ஞாநி. ஆக இவர் வக்கிரமமாக எழுதுவது இது முதல் முறையல்ல. எம் எஸ் சுப்புலட்சுமி அவர்கள் இறந்த பொழுது மிகவும் ஆபாசமான முறையில் கீழ்த்தரமாகக் கட்டுரை எழுதியவர் இந்த ஞாநி. பத்திரிகை சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசும் இந்த வக்கிரம் பிடித்த மனிதர் திண்ணையில் இவரைக் கேள்வி கேட்ட மாயவரத்தான் மீதும் திண்ணை மீதும் கேஸ் போடுவேன் என்று பேட்டை ரவுடி போலக் கீழ்த்தரமாக மிரட்டியவர். இவர் ஒரு போலி. இவருக்கு எதைப் பற்றியும் ஆழமான அறிவோ, ஞானமோ கிடையாது. இவர் ஏன் இப்படி வக்கிரம் பிடித்து அலைகிறார் என்பதற்கான மூல காரணம் இவரைப் பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும்,. அதை பொதுவில் சொல்லி ஞாநி அளவுக்கு கீழ்த்தரமாகப் போக நான் விரும்பவில்லை.

ஞாநி போன்ற போலி அறிஞர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளீர்கள். இந்த பாரதியின் மேற்கோளும் ஞாநிக்கு முதலில் தெரியாது. இணையத்தில் ஒரு ஆபாசப் பதிவில் வந்ததைப் படித்து விட்டு ஏதோ பாரதியைக் கரைத்துக் குடித்தவர் போல விகடனில் எழுதி விட்டார் சொந்தமாகச் சிந்திக்கத் தெரியாத இந்த ஞாநி. அதையும் முழுக்கப் படிக்காமல் அரைகுறையாக உளறியதால் இப்பொழுது மாட்டிக் கொண்டு உங்களிடம் வழிகிறார். இவர் பதிலில் பாரதியார் பக்தர் என்று சொல்லும் இதே ஞாநி விகடனில் பாரதியார் ஒரு நாத்திகர் என்று பொருள் வரும் வண்ணம் எழுதி விட்டுச் சமாளிக்கிறார். அரை வேக்காடுகள் எழுதினால் இப்படித்தான் மாட்டிக் கொள்ளும். இவருக்கு பாரதியை மட்டும் அல்ல, எந்த இலக்கியம் குறித்தும் உரிய அறிவு கிடையாது. ஒரு வெத்து வேட்டு, அரை வேக்காடு. ஒரு சில விஷயங்களில் (குப்பை மாட்டர் போல) இவர் நியாயமாக எழுதுவது இவருக்கு ஒரு அங்கீகாரத்தைக் கொடுக்கிறது. அந்த அங்கீகாரத்தை வைத்துக் கொண்டு இந்து மதத்தின் மீது சேற்றை வாரி இறைக்கும் இழி செயலை இவர் செய்து வருகிறார்.

இவருக்கு விகடன் இடம் கொடுக்கும் வரையில் விகடனை இந்து மதத்தின் மீது நம்பிக்கையுள்ள அத்தனை ஆஸ்திகர்களும் பிராமணர்களும் புறக்கணிக்க வேண்டும்., அப்படிச் செய்தால் விகடன் இவரைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும். விகடனின் ஆதார வாசகர்களான பிராமணர்களுக்கு நிஜமாகவே உணர்வு இருக்குமானால் அவர்கள் நம்பிக்கையை இழிவு செய்யும் இந்த ஞாநிக்கு இடம் கொடுக்கும் விகடனை பகிஷ்கரிக்க வேண்டும்.

Anonymous said...

ஞானி சொல்லுவது இது - "பாரதி சொல்லுகிற பக்தியும், இந்துத்துவவாதிகள் சொல்லுகிற பக்தியும் வேறுபட்டவை".

பாரதி, இந்துத்துவத்தை ஆரம்பித்துவைத்த விவேகானந்தரின் வழியைப் பின்பற்றுபவர். அந்த "நடைமுறை வேதாந்த" நிலையில் இருந்துகொண்டு, புராணங்களை எள்ளல் செய்கிறார். புராணங்கள் மட்டுமல்ல, எந்த கருத்துருவாக்கத்தையும் எள்ளல் செய்யும் போக்கு, சுதந்திரம் ஹிந்து மதங்களுக்கு மட்டுமே உண்டு. அந்த அடிப்படையில் கோல்வல்கர்கூட புராணங்களைப் பற்றியும், பாமர மக்களின் தவறான புரிதல்களால் வந்த பழக்கங்களைப்பற்றியும்கூட எங்கேனும் எள்ளல் செய்திருக்கலாம். அதை வைத்துக்கொண்டு கோல்வல்கர் சொல்லுகிற பக்தியும், இந்த இந்துத்துவவாதிகள் சொல்லுகிற பக்தியும் வேறு வேறு என்று ஞானி ஆதாரம் காட்டிப் பேசலாம்.

"இந்துத்துவம் சொல்லுகிற பக்தி எது?" என்பது குறித்து ஞாநி தன்னுடைய புரிதலை வெளியிட்டால்தான் பாரதியுடைய பக்தி அதிலிருந்து எங்கனம் மாறுபட்டது என்று ஞாநி சொல்லவருகிறார் என்று புரிந்துகொள்ளமுடியும்.

ஹிந்து மதங்களும், ஹிந்து தத்துவங்களும் சொல்லுகின்ற கருத்திற்கு எதிரானதாக ஹிந்துத்துவவாதம் இருக்கிறது என்று ஞாநி சொல்லவருகிறாரா?

அப்படித்தான் சொல்லுவதாக ஞாநி சொன்னாரென்றால், ஹிந்துத்துவவாதம் தவறு. ஆனால், ஹிந்துமதங்களும், தத்துவங்களும் உயர்ந்தவை என்றாகிறது. இது ஞாநியின் போஷகர்களுக்கு பிடிக்காது. எனவே, ஞாநி இதுகுறித்து மழுப்பலாக மட்டுமே எழுதுவார். அவருடைய ஆதரவாளர்களின் மகிழ்ச்சிக்காக வெறுமே குட்டையை மட்டுமே குழப்புவதுதான் அவரால் முடிந்தது. ஐயோ, பாவம்.

அதனால், ஜடாயு, ஞாநி தங்களுடைய கேள்விகளுக்குப் பதிலளிக்கப்போவதில்லை. கருத்துப் பரிமாறலின் அடிப்படை விதிகளான, தர்க்க அடிப்படையில் கருத்துக்களை முன்வைத்து, அடுத்தவரின் வாதங்கள் எங்கனம் தவறானவை என்று நிறுவவும் போவதில்லை.

அவர் செய்யக்கூடியதெல்லாம், உங்களுடைய ப்ளாக்கில் ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு, அந்த பின்னூட்டமே அனைத்து கேள்விகளுக்கும் பதிலாக அமைந்துவிட்டது என்று கண்டுகொள்ளாமல் இருப்பதுதான். ஆபிரகாமிய கொள்கைகளுக்கேயான, "புனிதநூல் புத்தி" இது. ஆபிரகாமிய புனித நூல்கள் போல ஞாநி இட்டிருப்பது ஒரு "புனித பின்னூட்டம்" - எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்கும் பின்னூட்டம். (விடை இந்த பின்னூட்டத்தில் இல்லை என்றால், அப்படி சொல்லுபவர்கள் "இந்துத்துவவாதி" - காஃபிர், பாகன், பூர்ஷ்வா போல இந்துத்துவவாதி என்பது இந்தியாவிலுள்ள வெறுப்பியல்வாதிகளால் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை.)

ஞாநி தன்னுடைய புனிதநூலான மார்க்கஸீயத்தில் இல்லாததை ஏற்றுக்கொள்ளுவதில்லை. மற்ற மார்க்கஸீயர்களும் ஞாநியை ஒரு மார்ர்கஸிஸ்ட்டாக ஏற்றுக்கொள்ளுவதில்லை. (எந்த ஒரு மார்க்கஸிஸ்ட்டும் அவனைத் தவிர மற்றவனை மார்க்கஸிஸ்ட்டாக எப்போதும், நிரந்தரமாக, நடைமுறையில் ஏற்றுக்கொள்ளுவதில்லை).

எனவே, ஞாநி செய்யப்போவதெல்லாம், தன்னுடைய ஒரு பின்னூட்டமே அத்தனை கேள்விகளுக்கும் பதிலளித்துவிட்டது என்றோ, தங்களுக்கு மட்டுமே புரியக்கூடியது உங்களுக்கெல்லாம் புரியாது என்கிற கம்யூனிஸ எலைட்டிஸம் காட்டியோ, அல்லது எப்போதுமே இந்த குழுக்கள் செய்கிற முத்திரை குத்துவதே பதிலளிப்பது என்றோ போய்க்கொண்டே இருக்கலாம்.

அப்படிப்போவது, ஞாநியிடம் இல்லாத மார்க்கஸீய தாடியில் மண் ஒட்டவில்லை என்கிற கௌரவத்தை அவருக்கு அளிக்கும்.

Badri Seshadri said...

புராணங்கள் (ஸ்மிருதிகள்) கட்டுக்கதை என்றால் அவன் நாத்திகன் ஆகிவிடுவதில்லை. பாரதி எந்தப் பாடலை எப்பொழுது எழுதியிருப்பான் என்று பார்க்கவேண்டும்.

கவிதை பழகும் காலத்தில் கடவுள்கள் மீது வெண்பாவும் விருத்தமும் பாடிப் பழகுவது வழக்கம். சுப்புரத்தினம் என்னும் பாரதிதாசன் கூட விநாயகர் மீது கவிதை பாடியதைப் பார்க்கலாம். ஆனால் அதனைக் காரணம் காட்டி பாரதிதாசன் பக்திமான் என்று யாராவது சொல்லமுடியுமா?

உபநிடதங்களைப் படிக்கப் படிக்க, அவை காட்டும் தரிசனங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பாரதிக்கு புராணங்கள், இதிஹாசங்கள் சொல்வன எல்லாம் கட்டுக்கதைகள் என்று தோன்றியதில் வியப்பில்லை.

ஆனால் காவியம் என்று படைக்க விரும்பியபோது பாஞ்சாலி சபதத்தினை எடுத்துக்கொண்டதிலும் குழப்பம் ஏதுமில்லை. காவியம் இயற்ற விரிந்து பரந்த கேன்வாஸ் தேவை. புராண, இதிஹாசப் புனைகதைகளை மட்டுமே அதற்கெனத் தேர்ந்தெடுத்திருக்க முடியும்.

பாரதியின் காலவரிசைப்படுத்தப்பட்ட படைப்புகளைப் பார்க்கும்போது இதுபற்றிய உண்மை விளங்கும். காலம் செல்லச் செல்ல பாரதியின் எண்ணங்கள் எவ்வாறு மாற்றம் அடைந்தன என்பதும் புரிய வரும்.

ஜடாயு said...

பத்ரி, மறுமொழிக்கு நன்றி.

// உபநிடதங்களைப் படிக்கப் படிக்க, அவை காட்டும் தரிசனங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பாரதிக்கு புராணங்கள், இதிஹாசங்கள் சொல்வன எல்லாம் கட்டுக்கதைகள் என்று தோன்றியதில் வியப்பில்லை. //

இது ஒரு பொது விதி என்பது போல கூறுகிறீர்கள்.

பாரதி எல்லாக் காலங்களிலும் எழுதிய துதிகள், தோத்திரங்கள், பக்திப் பாடல்கள் எல்லாவற்றிலுமே வேதாந்த சிந்தனை இழையோடுகிறதே, அதை எப்படி விளக்க முடியும்? விநாயகர் நான்மணி மாலையின் தத்துவ முத்துக்கள ஒரு உதாரணம்.

இதே போக்கில், காலவரிசைப் படி பாரதி பின்னாளில் எழுதியதாகச் சொல்லும் (இதை நான் சரி பார்க்க வேண்டும்) தத்துவப் பாடல்களில் எல்லாம் புராணங்களை நினைவுறுத்தத் தவறவில்லையே? "காலா உனைச் சிறு புல்லென" பாடலில் மார்க்கண்டேயனையும், கஜேந்திர மோட்சத்தையும் குறிப்பிடுகிறார். "சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே" என்று ஆழ்ந்த தத்துவ விசாரத்தின் நடுவில் கேட்கிறார்.

இந்து ஆன்மிகத்தின் படி ஒரு ஞானி, யோகி, தத்துவவாதி என்பதன் ஒற்றைப் பரிமாணத்தில் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை - அப்படிப் பட்டவன் வறட்டு வேதாந்தி. சுவாமி விவேகானந்தர் தன் அமெரிக்க வேதாந்த சொற்பொழிவுகளோடு ராமாயணம், பாரதம், புராணங்கள் இவற்றின் கதைகளையே சொற்பொழிவுகளாக மேற்குலகில் நிகழ்த்தியிருக்கிறார் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

கபிலர் தன் அன்னைக்கு சாங்கிய தத்துவம் உபதேசித்தது, ஜடபரதர், தத்தாத்ரேயர், அஷ்டாவக்கிரர் ஆகிய தத்துவ ஞானிகளின் வரலாறு, உபதேசங்கள் இவை எல்லாம் புராணங்களில் தானே வருகின்றன? இவை இன்றி நாம் உபநிஷதங்களின் செய்தியை சரியாகப் புரிந்து கொள்ளவே முடியாது.

பாரதி இதை நன்கு அறிந்தவர் என்பது அவரது பாடல்கள், கட்டுரைகள் இரண்டின் மூலமும் புலனாகிறது.

ஜடாயு said...

இங்கே மூன்று நிலைப் பாடுகளைப் பார்க்கிறோம் -

பாரதி இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருந்தால். ஈவேராவின் கொள்கைகள் எல்லாவற்றையுமே கூட ஏற்றுக் கொண்டிருப்பார் என்ற ரீதியில் முன்பு ஞாநி ஒரு 'ஓ பக்கக்' கட்டுரையில் எழுதியிருந்தார். இது மகா அபத்தம்.

பத்ரி பாரதி எழுதிய பக்திப் பாடல்கள் எல்லாம் "பழகுவதற்காக" எழுதியவை என்கிற மாதிரி சொல்ல வருகிறார். அதாவது அவர் "மெய்ஞானம்" பெறுவதற்கு முன்பு எழுதியவை - அவர் ஆத்திகனாக் இருந்து பின் நாத்திகர் ஆகியிருக்க மிக மெல்லிய வாய்ப்பிருக்கலாம் என்கிறார்.

நான் சொல்ல வருவது என்னவென்றால் - பாரதியின் *எல்லா* காலகட்டக் கவிதைகளிலுமே ஞானம், யோகம், பக்தி, இதிகாசம், புராணங்கள் எல்லாம் விரவி வருகின்றன.. இது குழப்படியும் அல்ல, இந்து ஆன்மிகத்தில் புதிய விஷயமும் அல்ல, மாணிக்கவாசகர், தாயுமானவர் முதல் ராமகிருஷ்ணர் வரை இந்த சமரச, சமன்வய பாவம் இருந்திருக்கிறது. இருமைகளின் அடிப்படையிலேயே விஷயங்களை நோக்குபவர்கள் புரிந்து கொள்ளக் கடினமான விஷயம் இது.

பத்ரி எழுப்பிய ஐயப்பாட்டைத் தீர்க்க, பாரதியின் இந்தப் பாடல் ("கடலினைத் தாவும்") எப்போது எழுதப்பட்டது என்பதை எடுத்துக்கொண்டு, அதற்குப் பிறகு எழுதப்பட்ட பாடல்களில், எப்போதெல்லாம் அவர் இறைவனையும் இந்து மதத்தையும் போற்றினார் என்று எளிதாக நிறுவி விட முடியும். பாரதி அறிஞர்கள் ஏற்கனவே இதைச் செய்திருப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.

அரவிந்தன் நீலகண்டன் said...

பாரதியின் ஒட்டுமொத்த இலக்கியத்திலும் புராணங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதனைக் காண வேண்டும். சித்தர் இலக்கியங்களில் தொன்மங்கள் கையாளப்பட்டுள்ள விதத்தையும் சிந்திக்க வேண்டும். இன்றைக்கு சேது பந்தன விவகார சூழலில் பாரதியின் தொன்மத்தின் மீதான நேரடி நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும் வரிகளை அளிக்கிறார் ஞாநி. இதன் உட்பொருள் தெளிவானது. இராமயணத்தின் வரலாற்றுத்தன்மையை உதாசீனப்படுத்தி அகவயப்பார்வையை மேற்கொண்டவர் மகாத்மா காந்தி. ஆனால் அவரே ஹிந்த் சுவராஜ்ஜியத்தில் சேதுபந்தனத்தை தேசிய கலாச்சார ஒற்றுமையின் சின்னமாக போற்றுவதை காண்கிறோம். முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள் எனக் கூறிய திருமூலரே தம் திருமந்திரப்பாடல்களில் புராணத்தரவுகளை கையாண்டுள்ளதையும் காணலாம். அவ்வாறே சிவவாக்கியரும். எனவே ஒரு முழுமைப்பார்வை இல்லாமல் காலக்கிரமத்தில் ஏற்பட்ட கவிஞனின் பார்வை வளர்ச்சி என்பது கவைக்குதவாத வாதம்.

Anonymous said...

"பாரதியின் காலவரிசைப்படுத்தப்பட்ட படைப்புகளைப் பார்க்கும்போது இதுபற்றிய உண்மை விளங்கும். காலம் செல்லச் செல்ல பாரதியின் எண்ணங்கள் எவ்வாறு மாற்றம் அடைந்தன என்பதும் புரிய வரும்."


எவ்வாறு மாற்றம் அடைந்தன? சொல்லவில்லையே! அத்தச் சொல்லுங்கணோவ்!

கால வரிசையும் கருத்து வளர்ச்சியும் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் பொருத்திப் பார்க்க முடியாத ஒன்று. நேத்திக்குச் சொன்னது இன்னிக்கு மாறிப் போச்சு என்று அனுமானிக்க முடியாத ஒன்று.

பாரதி எழுதிய கடைசி scrap of paper என்று கருதப்படும் காகிதத் துணுக்கில் இரணியனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதம் கவிதையாக எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே, பாரதியின் கடைசிக் கருத்து இரணியன் வதை என்ற புராணக் கதையை உண்மை என்று நம்பியது என்று தீர்ப்பளித்து விடலாமா?

இதைப் பற்றி இன்னொன்றும் சொல்லவேண்டும். பாரதியின் காலவரிசைப்படுத்தப்பட்ட படைப்புகள் இப்போதுதான் ஏழுதொகுதிகளையும்; 1913ஆம் ஆண்டு காலகட்டத்தையும் அடைந்திருக்கின்றன. The most productive years of Bharati have just begun. இதுவரையில் வெளிவந்திருக்கும் அளவுக்குச் சமமான இன்னொரு பெரிய தொகுதி இன்னமும் எட்டாண்டு கால எழுத்தில் இடம்பெறும்.

இப்படி முழுமை அடையாத ஒரு தொகுதியை வைத்துக்கொண்டு என்ன முடிவுக்கு வந்துவிட முடியும்? எனக்குத் தெரியவில்லை. பத்ரி சார் சொன்னா தெரிஞ்சுக்கறேன்.

-மெய்பாரதிதாசன்

Anonymous said...

பாரதியை யானை தாக்க வந்தது பார்த்தசாரதி கோயிலில். பார்த்தசாரதி கோயிலுக்கு ஏன் பாரதி சென்றார்? நாத்திகக் கருத்தைப் பரப்பவா?

வஜ்ரா said...

badri,

If you believe that Bharathi changed his views as time passed, the onus of proving it rests with you.

sorry, can't take your 'guess' as final word.

All you left leaning people think certain points in mind and start beleiving it, then cherry pick real facts to suit your beleif system.

Anonymous said...

திரு.ஞாநி அய்யா அவர்கள் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கும் பேருண்மையினை ஏற்றுக் கொண்டு இனியாவது இந்துத்துவத் தோழர்கள் பாரதி கும்பிட்ட காளி, கண்ணன் போன்ற தெய்வ வடிவங்களைப் புறக்கணிக்க வேண்டும். அவர் கடைசியாய் சாமி கும்பிடப்போன பார்த்தசாரதிக் கோயிலுக்குப் போவதைக் கூடத் தவிர்க்க வேண்டும்.

மிக்க நன்றி ஞாநி அய்யா!

Sundararaman said...

I have created a related blog. If you find it useful you can translate/ publish it here also. The blog address is
http://sundartheargumentative.blogspot.com/