Thursday, March 27, 2008

சீதாராம் கோயல்: வரலாற்றாசிரியர், சமூக சிந்தனையாளர்

சீதாராம் கோயல் (1921-2003) சுதந்திர இந்தியாவின் ஒரு முக்கியமான வரலாற்று அறிஞர் மற்றும் சமூக சிந்தனையாளர். 1940களில் தீவிர கம்யூனிச ஆதரளவாக இருந்து 50களில் சோவியத் அரசின் கோரங்கள் பற்றி அறிந்து, அதைத் துறந்து இந்து தர்மம், இந்திய தேசியம் என்ற தன் வேர்களுக்குத் திரும்பினார். இந்து சமுதாய, அரசியல் பிரசினைகள், கம்யூனிசத்தின் கொடூரங்கள், கிறிஸ்தவ மதப் பரவல் மற்றும் மிஷநரிகள், கிறிஸ்தவ மத அடிப்படைகளைத் தகர்க்கும் மேற்கத்திய அறிவியக்கம், இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பின் வரலாறு மற்றும் அதில் இழையோடும் ஜிகாத் வன்முறைக் கோட்பாடு, இவற்றைப் பற்றிய ஆழமான ஆய்வுகள், வரலாற்று உண்மைகளை வெளிக் கொணரும் பல முக்கிய நூல்களை அவர் எழுதியும், தொகுத்தளித்தும் உள்ளார். ஆற்றொழுக்குப் போன்று, அதே சமயம் கூர்மை தெறிக்கும் ஆங்கிலத்தில் 35க்கும் மேற்பட்ட நூல்களையும், குறிப்பிடத்தக்க ஹிந்தி மொழியாக்கங்களையும், பத்திரிகைக் கட்டுரைகளையும் அவர் படைத்திருக்கிறார். கோயலின் இஸ்லாம் தொடர்பான சில வரலாற்று ஆய்வு நூல்களைத் தடைசெய்யுமாறு அராஜக கோரிக்கைகள் எழுந்தன. இரண்டு நூல்கள் குறுகிய காலத்திற்கு தடை செய்யப் பட்டு, பின்னர் நீதிமன்றக் குறுக்கீட்டால் தடை விலக்கப் பட்டது.




நேருவின் அரசியல் கொள்கைகள், எமர்ஜென்சி, போலி மதச்சார்பின்மை இவை பற்றிய மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சீதாராம் கோயல் மறைந்த அரசியல் தலைவர்களான ஜெயப்ரகாஷ் நாராயண், கே.ஆர்.மல்கானி மற்றும் காந்தியவாதி தரம்பால் ஆகியாரின் நெருங்கிய நண்பரும், உடன் பணியாற்றியவரும் கூட. மறைந்த தத்துவ சிந்தனையாளர் ராம் ஸ்வரூப் தொடங்கிய வாய்ஸ் ஆஃப் இந்தியா என்னும் இலாப நோக்கற்ற பதிப்பகத்தைத் தன் இறுதி நாள் வரை நடத்தி வந்த இந்த கர்மயோகி இன்று இந்து எழுச்சி பற்றிய விமர்சனங்களுக்காக அதிகம் கவனிக்கப்படும் கொய்ன்ராட் எல்ஸ்ட், டாக்டர் டேவிட் ஃப்ராலி, அருண் ஷோரி, சுபாஷ் கக் போன்றவர்களுக்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும், பதிப்பாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

சீதாராம் கோயல்: விக்கிபீடியா பக்கம்
India's Only Communalist : சீதாராம் கோயல் பற்றி கொய்ன்ராட் எல்ஸ்ட்
இணையத்தில் சீதாராம் கோயல் நூல்கள்

(பி.கு: அமரர் கோயல் அவர்கள் கட்டுரைகளின் மொழியாக்கங்களை பதிவிடுவதாக உத்தேசம். அவற்றுக்கான ஆசிரியர் குறிப்பு இந்தப் பதிவு).

3 comments:

கால்கரி சிவா said...

உங்கள் மொழிபெயர்ப்பை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்

Anonymous said...

Its good your translating his books into tamil. I will print out and bind it as a book.
Thank you.

Unknown said...

திரு.ஜடாயு அவர்களே, தங்களின் காபா முன்பு சிவாலயமாக இருந்ததா? கட்டுரை புத்தகமாகவோ அல்லது PDF -ல் வடிவில் கிடைக்குமா? முக்கியமாக தமிழில். தங்களின் தமிழ்ஹிந்து.காம் பக்கம் இயங்கவில்லை. புத்தக விலை என்னவென்று சொன்னால் வாங்கிகொள்கிறேன். Will do Google pay.