Thursday, April 16, 2009

சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் - 2


முந்தைய பகுதி

சமயம்:

அக்காலகட்டத்தில் வேத நெறியையும், சைவ சமயத்தையும் பின்பற்றும் மக்களுக்குப் பலவிதமான இடையூறுகள் ஏற்பட்டன என்பதைக் கூறும் பல இலக்கியச் செய்திகள் உள்ளன.

களப்பிரர் காலத் தொடக்கத்தில் எழுந்த திருக்குறள் மறப்பினும் ஓத்துக் கொளலாகும், பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்என்று கூறும். இதில் “மறப்பினும்என்ற சொல்லுக்கு உரையாசிரியர்கள் பொருள் கூறுகையில், வேதம் ஓதும் அந்தணர் அவர் கற்ற வித்தையை ஒருபோதும் மறப்பதில்லை. அவர் வாயை விட்டு வேதம் அகல்வதே இல்லை என்ற கருத்து தொனிக்கிறது. ஆனால், இனியவை நாற்பது என்ற பிற்கால நூல் அதற்கே உரிய அங்கதத் தொனியில் அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே”, அதாவது வேதம் ஓதத் தெரிந்த அந்தணர் கிடைப்பது எவ்வளவு இனிது!என்கிறது. வேதம் ஓதுதல் அவ்வளவு அரியதாகி விட்ட்து என்ற வரலாற்றுச் செய்தியையே இது கூறுகிறது. திருஞானசம்பந்தர் புராணத்திலும், அவரது தந்தையார் யாகம் செய்வதற்குப் பொருள் இல்லாமல் தவிக்க, இறைவனை வேண்டி சம்பந்தர் பொற்கிழி பெறுவதாக வருகிறது. வேதநெறி புழக்கத்திலிருந்த சோழநாட்டிலேயே யாகத்திற்குப் பொருள் கொடுப்பவர்கள் மிகுதியும் இல்லாமல் போய்விட்டனர் என்பதையே அந்த அற்புதச் செயல் உணர்த்துகிறது.

தண்டி நாயனார் புராணத்தில், அவர் கோயில் குளத்தைத் தூரெடுக்கும் பணியில் ஈடுபடுகையில், அதில் உள்ள உயிரினங்கள் அழியும் என்று விதண்டாவாதம் செய்து சமணர் ஆட்சேபிக்கின்றனர். நமிநந்தி நாயனார் புராணத்தில், அவர் விளக்கேற்ற எண்ணெய் வேண்டும் என்று சமணர் வீடுகளில் கேட்க, அவரது சமய நம்பிக்கையை சமணர்கள் கேலி செய்கின்றனர்.

சம்பந்தருக்கு நூறாண்டுகள் முன்பு வாழ்ந்தவர் காரைக்கால் அம்மையார். அம்மையார் தெய்வப் பெண் என்று அவர் கணவர் உணர்ந்து கொண்ட பின், அவர் மதுரைக்கு வருகிறார். ஆனால் அங்கே இருக்கமுடியாமல், பேய் உருக்கொண்டு வடக்கு நோக்கிச் சென்றார் என்பது புராணம். சிவபக்தியுள்ள ஒரு சைவப்பெண், பாண்டி நாட்டில் அந்தக் காலகட்டத்தில் வாழவே முடியாத நிலை இருந்தது என்ற வரலாற்றுச் செய்தியைத் தான் அது கூறுகிறது.

சைவ, வைணவ சமயங்களின் முதல் குருமார்களில் பாண்டிநாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. நாயன்மார்களில் 8 பேர் தொண்டை நாட்டினர். 30-40 பேர் சோழ நாட்டினர். நடுநாடு, மலைநாடு, சேரநாட்டிலும் நாயன்மார் தோன்றியிருக்கின்றனர். ஆனால் தொன்மையான பண்பாட்டுப் பாரம்பரியம் உடைய, சங்கம் வைத்துத் தமிழ்வளர்த்த தென்பாண்டி நாட்டில் தோன்றியவர் நால்வரே. இதில் மூவர் - மங்கையர்க்கரசியார், குலச்சிறையார், நின்றசீர் நெடுமாறனாக மாறிய கூன்பாண்டியன் ஆகியோர் சம்பந்தருடைய தொடர்பாலேயே நாயன்மார்களானவர்கள். மூர்த்தி நாயனார் மிகக் குறுகிய காலம் அரசாண்ட ஒரு சைவக் குறுநிலமன்னர். வைணவத்திலும் முதலாழ்வார் மூவர் தொண்டை நாட்டினர், பிறர் சோழநாட்டினர்.

சம்பந்தரது காலத்திற்குப் பின்பு தான் வேத நெறியும், சைவ வைணவ சமயங்களும் பாண்டி நாட்டில் புத்தெழுச்சி பெறுகின்றன. மாணிக்கவாசகர், நம்மாழ்வார், பெரியாழ்வார் ஆகிய அருளாளர்கள் அங்கு தோன்றுகின்றனர்.

மதக் காழ்ப்பா?

சம்பந்தரது தேவாரப் பாடல்களில் மதக் காழ்ப்பு அதிகம் இருக்கிறது என்று தற்போதைய இலக்கியவாதிகள் கூறுகிறார்கள். சம்பந்தரின் ஒவ்வொரு பதிகத்திலும் “திருக்கடைக்காப்புஎன்று சொல்லப்படும் கடைசிப் பாடலுக்கு முந்தைய பாடலில் புத்த,சமண மதங்களாகிய பொய்நெறிகள் அகலவேண்டும் என்று இறைவனிடம் வேண்டும் பகுதி வருகிறது. “தோடுடைய செவியன்என்ற தனது முதல் திருப்பதிகத்திலேயே “புத்தரோடு சமணும் பொறியில் புறம்கூற நெறிநில்லாஎன்று ஆரம்பித்து விடுகிறார். பாண்டி நாட்டுக்குக் கிளம்பும்போது பாடிய கோளறு பதிகத்தில் “புத்தரோடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்என்கிறார். இப்படி ஒவ்வொரு பதிகத்திலும் அவர் கூறவேண்டியதற்கான சமூக, வரலாற்றுப் பின்னணி என்ன என்பதை நாம் மேற்சொன்ன செய்திகளால் ஒருவாறு ஊகிக்கலாம். சமணத் துறவிகள் அரசு ஆதரவு பெற்று, பொதுமக்களில் ஏராளமானோர் தங்கள் சைவ நெறியைத் துறந்து வந்தபோது, அதனை மீண்டும் மீண்டும் நினைவுறுத்தவே அவ்வாறு கூறுகிறார் என்பது தெளிவு.

சீக்கிய புனித நூலான “குரு கிரந்த சாகிப்என்ற நூலில், குரு அங்கதர், குரு தேக் பகதூர், குரு அர்ஜுன், குரு கோவிந்த் சிங் ஆகியோர் இயற்றிய பாடல்களில் அப்போதைய முகலாய ஆட்சியாளர்களின் கொடூரங்கள் பற்றிய செய்திகளும், அந்த ஆட்சியாளர்களின் மதத்தைக் கண்டனம் செய்யும் பகுதிகளும் உள்ளன. இவை முக்கியமான வரலாற்றுச் செய்திகளைச் சொல்கின்றனவே அன்றி குருட்டுத்தனமான மதக் காழ்ப்புடன் எழுதப் பட்டவை அல்ல. சம்பந்தரது பதிகங்களையும் அவ்வாறே நாம் மதிப்பிடவேண்டும்.

குறிப்பாக, சமண சமயத்தைப் பொறுத்த வரையில், துறவிகளே முழுமையாக அந்த சமயத்தைச் சார்ந்தவர்களாக அறியப் பட்டார்கள். அவர்களுக்கு ஆதரவு அளித்து வந்த குடும்பத்தார்கள், மன்னர்கள் உட்பட அந்த சமயத்தின் புரவலர்களே அன்றி, சமண சமயத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. ஒருவிதத்தில் பார்த்தால், இந்த்த் துறவிகள் கருத்து ரீதியாக தங்களை ஆதரித்துவந்த பொதுமக்கள் மீது ஆதிக்கம் செலுத்தினர் என்றே சொல்லவேண்டும். மேலும் சம்பந்தரது கண்டன்ங்கள் அனைத்தும், சமண தெய்வங்களை அல்ல, சமணத் துறவிகளின் நடவடிக்கைகளைக் குறிப்பதாகவே உள்ளதையும் நோக்கவேண்டும்.

வேதாந்தத்தை மூலமாகக் கொண்ட சைவ சமயத்தில், தத்துவ அளவில் முற்றாகிய தீமை என்ற கருத்தும் அதனின்று பெருகும் துவேஷ உணர்வும் கிடையவே கிடையாது. அனைத்தும் பரம்பொருளின் விளையாட்டே, அந்த பிரபஞ்ச லீலையின் ஒரு அங்கமே எனும்போது, நன்மையும், தீமையும், இந்தச் சமயங்களும், அவற்றைப் பின்பற்றுபவர்களும் கூட அதன் ஒரு பகுதியே தான் அல்லவா?

அதனால் தான், வேதங்களை ஆக்கியவனும் அவனே, உலகை மயக்குவதற்காக சமண, சாக்கிய மதங்களையும் அவனே ஆக்கினான் என்ற கருத்தையும் மிகத் தெளிவாகவே சம்பந்தர் கூறுகிறார் -

இணையில் இரும்பூளை இடங்கொண்ட ஈசன்

அணையில் சமண் சாக்கியம் ஆக்கியவாறே”.

வாக்கினால் மறை ஓதினாய், அமண்

தேரர் சொல்லிய சொற்களான பொய்

ஆக்கி நின்றவனே, அடைந்தார்க்கருளாயே”.

எனவே சம்பந்தரின் கண்டனங்கள் அனைத்தும், உள்ளார்ந்த வெறுப்புணர்வால் அல்ல, சமணர் நிகழ்த்திய சமூகச் சீரழிவினைக் கண்டு மனம் நொந்து கூறியது என்றே கொள்ள இடமிருக்கிறது. இது காந்தியடிகளும், பாரதியாரும் கடும் சொற்களால் பிரிட்டிஷ் அரசின் அராஜகத்தை விமர்சித்ததற்கு இணையான செயலே ஆகும்.

கழுவேற்றம்:

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய வரலாற்றை எழுத ஆரம்பித்த சில பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள், மதப்பூசலும், ரத்தம் பெருக்கெடுத்து ஓடி, சிலுவைப் போர்களால் நிரம்பிய மத்திய கால ஐரோப்பா பற்றிய அதே கருத்துச் சட்டகத்துடன், இந்தியாவிலும் இது போன்ற மதப்போர்கள் நடந்திருக்கும் என்று கற்பனை செய்தார்கள். இது அவர்களது பிரித்தாளும் கொள்கைக்கு வலு சேர்ப்பதாகவும் இருந்தது. இதன் தொடர்ச்சியாகவே, சுதந்திரத்திற்குப் பின் இந்திய வரலாற்றை எழுதிய இடதுசாரி வரலாற்றாசிரியர்களும், அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் சில தகவல்களைச் சேர்த்து ஆதாரமற்ற மதப்போர்களை உற்பத்தி செய்ய முற்படுகிறார்கள்.

இன்றைக்கு தமிழில் நவீன இலக்கிய ஏடுகள், சிற்றிதழ்கள், அறிவுஜீவித்தனமான சஞ்சிகைகள் இவற்றில் திரும்பத்திரும்ப திருஞானசம்பந்தர் வரலாற்றில் வரும் சமணர் கழுவேற்றம் பற்றி ஏராளமான ஜோடனைகளுடன் யாராவது ஒருவர் எழுதிக் கொண்டே இருக்கிறார். மதுரைக் கருகில் ஒரு ஊரில் எண்ணாயிரம் சமணர்களின் எலும்புகள் குவிந்துள்ளன, அவர்களை எரித்த சாம்பல் கூட இருக்கிறது என்றெல்லாம் சிறிது கூட அறிவியலுக்கும், பொதுப் புத்திக்கும் ஒவ்வாத வகையில் எழுதுகிறார்கள். எண்ணாயிரம் சமணர்களைக் கொன்று குவித்து, அந்த வன்முறை மூலம் வேத நெறியும், சைவ சமயம் பரவியதாக திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமே அதில் ஏதேனும் உண்மை இருக்குமோ என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்.

இதற்கு இன்னொரு உள்நோக்கமும் இருக்கலாம். ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்தவம், இஸ்லாம் இவற்றின் வரலாறு முற்றாக வன்முறையும், போர்களும் நிறைந்தது. ஆரம்பகாலத்தில் அதற்கு முன்பிருந்த புராதன மதங்களையும், இயற்கை வழிபாட்டாளர்களையும் கிறிஸ்தவம் வன்முறை மூலமே அழித்தொழித்தது. அதன் பின் ஐரோப்பிய காலனியாதியாக்கமும், கிறிஸ்தவ மிஷன்களும் இணைந்து ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் உலகின் பல பகுதிகளில் பழங்குடிகளை ஈவிரக்கமின்றிக் கொன்றார்கள். அரேபியப் பாலைவனத்தில் இஸ்லாமிய மதம் தோன்றியவுடன், ரத்தவெறி கொண்ட போர்கள், கொள்ளைகள், கட்டாய மதமாற்றங்கள் ஆகிய வன்முறைச் செயல்கள் மூலமே பெரும்பாலும் பல பகுதிகளில் பரவியது. இந்த மனிதப் படுகொலைகள் தெளிவாக வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ள. வரலாறு இந்த மதங்கள் மீது ஏற்றிவைத்துள்ள சுமை இது. எனவே, “மதச்சார்பற்றவரலாற்றில், இதனை ஈடுசெய்வதற்காக, இந்திய மண்ணிலும் பெரிய மதப்போர்கள் நடந்திருப்பதாக, வேண்டுமென்றே பொய்களையும், தங்கள் காழ்ப்புணர்வுகளையுமே வரலாறு என்ற பெயரில் திரித்துக் கூறுகிறார்கள்.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

பாரத நாட்டில் சமய விவாதங்கள் தொன்று தொட்டு நிகழ்ந்து வந்தன. வேத, உபநிஷதங்களிலும் சரி, புராண, இதிகாச இலக்கியங்களிலும் சரி, சமண, பௌத்த சமய நூல்களிலும் சரி, ஏராளமான உரையாடல்களையும், வாத விவாதங்களையும் நாம் பார்க்கிறோம். இன்றைக்கு இந்து மதத்தின் முக்கியமான தத்துவ நூலான விளங்கும் பகவத்கீதை இத்தகைய ஒரு உரையாடல் வடிவிலேயே உள்ளது. இந்திய கலாசாரம் இன்று வரை பல கட்சிகள் ஜன்நாயக முறையில் உரையாடும், ஓயாது தர்க்கம் செய்யும் இயல்பை இத்தகைய சமய விவாதங்கள் மூலமே பெற்றது என்பது தெளிவு. நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதையான பேராசிரியர் அமர்த்யா சென் Argumentative Indians என்ற தமது நூலில் இதனை மிக விரிவாகவே குறிப்பிடுகிறார். எனவே பண்டைய இந்திய வரலாற்றில் மத மோதல்கள், பூசல்கள் பற்றிய எல்லா சித்திரங்களும், கருத்துத் தளத்தில் நிகழ்ந்தவற்றையே குறிக்கின்றன. இந்த வாதங்கள் முற்றி, சிறிய அளவில் நேரடி வன்முறையாக சிற்சில இடங்களில் நடந்திருக்கலாம். ஆனால் மதப் போர்களும் பெரும் வன்முறையும் நடந்த்தற்கான ஆதாரங்கள் இல்லவே இல்லை.

தமிழக சமணத்தின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் சம்பந்தர் காலத்தில் அது தனது வலுவிழந்த, சீரழிந்த நிலையில் இருந்தது எனலாம். அதனால் தான் சம்பந்தர் அதனை வாதத்தில் எளிதாகவே வென்று விட முடிந்தது. சமணத் துறவிகள் சமூகத்தில் இருந்து மேலும் மேலும் விலகிச் சென்று தனிமையை (seclusion) நாடினர். காலப் போக்கில், இந்தத் தனிமைச் சூழல் பல மாந்திரீக, தாந்திரீக முறைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் வழிவகுத்தது. பிற்காலச் சமணத்தில் தீர்த்தங்கரர் வழிபாட்டை விட அதிகமாக பரிவார தேவதைகள் மற்றும் யட்சிகள் வழிபாடு வலியுறுத்தப் பட்டது. இந்த தேவதைகள் மோட்சத்திற்காக அல்ல, லௌகீக வாழ்க்கைப் பலன்களுக்காகவே வணங்கப் பட்டனர். தமிழகத்தின் பல சமணக் கோயில்களில் பத்மாவதி, லலிதாட்சி ஆகிய யட்சிகளின் அழகு கொஞ்சும் சிலைகளை இன்றும் காணலாம். தமிழகத்தில் சமணம் வாழும் இன்றைய வடிவத்திலும், தீபங்குடி (தஞ்சை மாவட்டம்) போன்ற ஊர்களில் வாழும் சமணக் குடும்பங்கள் பெண்தெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள்.

சமணர்களின் செயல்களாகப் பெரியபுராணம் கூறும் செய்திகள் மூலம் இது மேலும் உறுதியாகிறது. சம்பந்தர் பாண்டிநாட்டிற்கு வந்து சைவமடத்தில் தங்கியிருக்கையில், மந்திரத்தால் தீவைக்க முயன்றனர். பின்னர் அது பலிக்காமல் போகவே, உண்மையிலேயே தீமூட்டினர். மன்னனுக்கு வெப்பு நோய் பீடிக்க, பின்னர் மன்னன் நோய்தீர்ப்பவர் வெல்வார் என்ற போட்டிக்கும், பிறகு அனல் வாதம், புனல் வாதம் இவற்றிற்கும் சமணர் அறைகூவுகின்றனர். இதன் மூலம் ஆழ்ந்த சமய, தத்துவ விவாதத் தளத்திலிருந்து சமணம் வெகுவாக நகர்ந்து விட்டது புலனாகிறது. அதனால் தான், சைவம் மிக எளிதாகவே அதனை வென்று விட முடிந்தது.

பெரியபுராணத்தின் படி, வாதத்தில் தோற்றால் தங்களை வேந்தன் கழுவேற்றட்டும் என்று சமணர் தாமாகவே கூறுகின்றனர்.

அங்கது கேட்டு நின்ற அமணரும் அவர்மேற் சென்று
பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமேயாகத்
தங்கள் வாய் சோர்ந்து - தாமே தனிவாதில் அழிந்தோமாகில்
வெங் கழுவேற்றுவான் இவ்வேந்தனே என்று சொன்னார்.

அவர்கள் வாதத்தில் தோற்றவுடன், மன்னன் மந்திரியாகிய குலச்சிறையாரைப் பார்த்து, இவர்கள் மடத்திற்குத் தீவைத்த குற்றமும் புரிந்தவராதலின், தண்டிக்கப் படவேண்டியவர்கள், அதனால் இவர்களைக் கழுவில் ஏற்றுக என்று ஆணையிடுகிறான். அரச நீதியில் தலையிடுவது முறையாகாது என்று கருதி சம்பந்தர் திருவருளைச் சிந்தித்து, வாளாவிருந்தார், அதாவது அமைதியாக இருந்தார். குலச்சிறையார் அரசன் இட்ட ஆணையை நிறைவேற்றினார். புராணம் சொல்வது இது தான்.

இதில் “எண்ணாயிரவர்என்பது எண்ணிக்கையை அல்ல, ஒரு குழுவினரைக் குறிக்கிறது என்றே கொள்வதற்கு ஆய்வு நோக்கில் இடமிருக்கிறது. எண்ணாயிரவர், நாலாயிரவர், மூவாயிரவர் என்று வணிகர் கூட்டஙக்ளுக்குப் பெயர்கள் இன்றளவும் உள்ளன. கேரளத்தில் மூவாயிரவர் என்ற குடும்ப்ப் பெயரில் இன்று நான்கைந்து குடும்பங்களே உள்ள சமூகக் குழுக்கள் இருக்கின்றன. இத்தகைய ஒரு குழுவைச் சேர்ந்த சமண குருமார்கள் வாதில் தோற்றுப் போயிருக்கலாம்.

மேலும் “கழுவேற்றம்என்பது ஒரு குறியீட்டுச் செயலாகவே இருக்கலாம். வாதம் நடக்கும் ஞான சபையில் ஒரு கழுமரம் இருக்கும். வாத்த்தில் தோற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளும் முகமாக, தங்கள் தோளில் இருக்கும் உத்தரீயத்தைக் கழற்றி அந்தக் கழுமரத்தில் வீசுவார்கள். அதாவது அவர்களது ஞானமும், பாண்டித்யமும் அங்கே வீழ்ந்து விட்டதாக இதற்குப் பொருள். அந்தக் காலகட்டத்துச் சூழலில், கற்றறிந்த ஒரு பண்டிதனுக்கு உயிர்போவதை விட அவமானகரமான ஒரு செயலாக இது கருதப் பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. கேரளத்தில் ஒரு இருநூறு ஆண்டுகள் முன்பு கூட வாத சபைகளில் உத்தரீயத்தைக் கழற்றி வீசும் இந்த மரபு இருந்து வந்திருப்பதாகத் தெரிகிறது.





இன்னும் இரண்டு முக்கியமான விஷயங்கள் கவனத்திற்குரியவை.

ஒன்று, சம்பந்தர் காலத்திற்குப் பின்னும், தமிழகத்தின் பல பகுதிகளில், சமணக் கோயில்களும், மடங்களும் எந்த இடையூறும் இல்லாமல் இன்றுவரை செயல்பட்டு வருகின்றன.

இரண்டு, கழுவேற்றம் பற்றிய இந்தக் குறிப்பு சமணர்களது எந்த நூல்களிலும் இல்லை.

இது பற்றி, தலைசிறந்த எழுத்தாளரும், சிந்தனையாளருமான ஜெயமோகன் கூறுகிறார் -

.... தமிழகமெங்கும் அதன்பின் பலநூறு வருடம் சமணரும் சமணக்கோயில்களும் எந்தவிதமான சிக்கல்களும் இல்லாமல் இருந்திருக்கின்றன. மதுரையைச் சுற்றியுள்ள சமண வழிபாட்டுதலங்கள் தொடர்ந்து இயல்பாகவே இயங்கியிருக்கின்றன. உளுந்தூர்பேட்டையில் அப்பாண்டநாதர் கோயில் இன்றும் நல்ல நிலையில் இருக்கத்தான் செய்கிறது. சமணர்களின் எண்ணிக்கை குறையக் குறைய கோயில்கள் கைவிடப்பட்டு பல நூறு வருடங்களில் பராமரிப்பில்லாமல் மெல்ல மெல்லத்தான் அழிந்திருக்கின்றன. திருநெல்வேலி ஸ்டேட் மானுவல் எழுதிய எச்.ஆர்.பேட்ஸ் வள்ளியூரைச் சுற்றி அப்படி கைவிடப்பட்டு கிடந்த பல சமண ஆலயங்களைப் பற்றிச் சொல்கிறார். பல ஆலயங்கள் பின்னர் இந்து ஆலயங்களாக ஆகியிருமிருக்கலாம். பல ஆலயங்களில் இரு மதவழிபாடும் ஒரேசமயம் நிகழ்ந்திருக்கிறது.

திண்டிவனம் அருகே மேல்சித்தமூரில் இப்போதும் சமணர்களின் தென்னக தலைமை மடம் உள்ளது. பல்லவர் முதல் நாயக்கர் வரை ஆண்டகாலத்தில் அவர்கள் ஜைனக்காஞ்சியில்தான் இருந்தார்கள். நவாப் ஆட்சிக்காலத்தில்தான் மேல்சித்தமூருக்கு மடம் மாற்றப்பட்டது. பிரம்மாண்டமான அழகிய கோயில் இங்கு உள்ளது. எந்தச் சிதைவும் இன்றி. எல்லா மன்னர்களும் நிவந்தம் அளித்திருக்கிறார்கள். திருவிழாக்கள் நடந்திருக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை சமணர்கள் நிறைந்து வாழ்ந்தது இந்த ஊர். இப்போது சமணர் எண்ணிக்கை மிக்க குறைவு. வீடுகள் கைவிடபப்ட்ட வெறும் தெருக்கள்.

நான் அங்கே மடத்துக்குச் சென்று மடாதிபதியிடம் உரையாடியிருக்கிறேன். சமணர் எண்ணிக்கை குறைவது அவர்கள் இந்துக்களாக மாறுவதனாலும் திருமணம் முதலிய சடங்குகளுக்காக அவர்கள் ஊர் விட்டு போவதனாலும்தான் என்றார். தொண்டைமண்டல முதலியார்கள் அனைவருமே சமணர்களாக இருந்து சில நூற்றாண்டுகளுக்குள் மாறிச் சென்றவர்கள் என்று சொன்ன அவர் கழுவேற்ற ஐதீகத்தை கடுமையாக மறுத்தார். அது சைவர்கள் தங்கள் வெற்றிக்காக உருவாக்கிய கதைமட்டுமே என்றார்.

காரணம் அச்சம்பவம் குறித்து தோற்றவர்கள் தரப்பில் ஒரு ஆவணம் கூட இல்லை. இத்தனைக்கும் கல்வியை அடிப்படையாக்க கொண்ட சமணம் விரிவான ஆவணப்பதிவை வழக்கமாக்க கொண்டது. சமணத்தின் வரலாறு அதன் தென்னகத் தலைநகர்களான சிரவணபெலகொளா, மற்றும் முடுபத்ரே மடங்களில் தெளிவாகவே பேணப்படுகிறது என்றார். சமணரைக் கொன்றழித்த கதைகளை எழுதும் எவருக்குமே அதற்காகச் சமணரைப்பற்றி ஒரு ஆய்வுசெய்துபார்க்கலாம் என்ற எண்ணம் இல்லை.

[நன்றி: ஜெயமோகன் இணையதளம்]

தத்துவமும் அது உருவாக்கும் வாழ்வியலும்:

அக்காலகட்டத்தில் பாரத நாடெங்கும் நடைபெற்ற சமய, தத்துவ விவாதங்களில் பிரபஞ்சம், சிருஷ்டி, ஜீவன், ஆன்மா, முக்தி ஆகிய கருத்தாங்கள் குறித்த விரிவான அலசல்கள் நிகழ்ந்தன. இதில் பிரபஞ்சம் தன்னாலேயே ஒரு வெடிப்பு (explosion) மூலம் உருவாயிற்று என்ற சாங்கியக் கோட்பாட்டை முதல் தளத்தில் வேதாந்த, சமண, பௌத்த தரப்புக்கள் அனைத்துமே ஏற்றுக் கொண்டன. அடுத்த தளத்தில், இந்தப் பருப்பொருள் மயமான, ஜடமான இயற்கையில் உயிர்ச்சக்தி (சைதன்யம்) புகுந்தது எவ்வாறு என்ற கேள்வியும் முன்வைக்கப் பட்ட்து. நம்மாழ்வாரின் வரலாற்றில் செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?என்று எழுந்த கேள்வி இந்தத் தத்துவச் சிக்கலை அடிப்படையாகக் கொண்டது தான். அங்கு சமண, பௌத்த தரப்புகள் திணறி நின்றன. ஆனால் வேதாந்தம் பிரம்மம், பரம்பொருள் என்கிற அனைத்துமான ஒரு முழுமைத் தத்துவம் (Absolute) மூலம் இதற்கு விடைகாண முற்பட்டது. “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்என்பதே பதிலாக வைக்கப் பட்டது. வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி, ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்ஆன மெய்ப்பொருள் தர்க்க அறிவினால் அல்ல, உள்ளுணர்வும், அனுபூதியும் கூடிய நிலையில் உணரப் படுகிறது என்றும் வேதாந்தத் தரப்பு சொன்னது. சைவ சமயம், இதனையே சிவனது பிரபஞ்ச லீலையாக, அருள் விளையாட்டாகக் கண்டது.

சமண, பௌத்த தத்துவங்களின் சூனியம் என்ற வெறுமைக் கோட்பாடு மறுப்பும், விரக்தியும் சார்ந்த வாழ்க்கை நெறிகளை நோக்கி இட்டுச் சென்றது. அதற்கு மாற்றாக வேதாந்தமும், சைவ சமயமும் முன்வைத்த “பூரணம்என்ற கோட்பாடு உயர்தத்துவ அளவில் நிறைவானதாகவும், அதே சமயம் வாழ்க்கையின் வர்ணஜாலங்கள் அனைத்தையும் அர்த்தமுள்ளதாக ஆக்குவதாகவும் இருந்து. உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்” ”அலகில் சோதியன்ஆன பரம்பொருளை “நிலவுலாவிய நீர்மலி வேணியன்ஆகவும் “அம்பலத்து ஆடுவான்ஆகவும் காணும் சமய நெறியில், உயர்தத்துவமும், உணர்ச்சிமயமான பக்தியும், கவித்துவமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தன.

“குன்றெலாம் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு

தென்றலார் அடிவருடச் செழுங்கரும்பு கண்வளரும் திருவையாறே

என்பது சம்பந்தர் தேவாரம். இப்படி ஒவ்வொரு திருத்தலத்திலும் நதிகளையும், மலைகளையும், வயல்களையும், சோலைகளையும் உவகை பொங்க அவர் வர்ணித்துச் செல்வதன் காரணம் இவை அனைத்தும் அந்த பூரணத்தின் வெளிப்படுகளாகவே அவருக்குத் தோன்றுகின்றன.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் செல்கதிக்கு யாதுமோர் குறைவிலை

என்று வாழ்க்கையை இம்மை, மறுமை இரண்டிலும் சாரமுள்ளதாக சம்பந்தரின் பாடல் காண்கிறது. இசை, நடனம், சிற்பம் ஆகிய கலைகள், கோயில்கள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், களியாட்டங்கள் ஆகியவற்றால் நிரம்பிய சைவ சமயம் சமூகத்தில் மிகப் பெரிய சக்தியாக ஆனதில் வியப்பே இல்லை. காலப் போக்கில் இதுவே சமணம் தமிழகத்தில் தேய்ந்து மறையவும் காரணமாயிற்று.

எனவே, சமணத்தின் மீதான சைவத்தின் வெற்றி தத்துவச் செழுமையாலும், அது உருவாக்கிய வாழ்வியல் நெறிகளின் முழுமையாலும் தான் நிகழ்ந்ததே அன்றி வன்முறையாலோ, ஆக்கிரமிப்பாலோ நிகழ்ந்தது அல்ல என்று உறுதியாகக் கூறலாம்.

இன்றைக்கு சமண சமயத்தவர்களுக்கிடையிலும், சைவ, வைணவ சமயங்களைச் சேர்ந்த இந்துக்களுடையிலும் எந்தவிதமான மதப் பூசலோ, மோதலோ இல்லை. இந்தியா முழுவதும் சமணர்கள் விநாயகர், லட்சுமி, திருமால் முதலிய தெய்வ வடிவங்களை தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களோடு இணைத்து வைத்துப் பூசிப்பதையும், இந்துக்கள் சமணக்கோயில்களுக்குச் செல்வதையும் சகஜமாகப் பார்க்கிறோம். அகிம்சை, தர்மம், நீதிநெறிகள் ஆகிய துறைகளிலும் இரு மதங்கள் கொண்டும், கொடுத்தும், ஊடியும் வளர்ந்து செழித்திருக்கின்றன. எனவே, இந்தக் கட்டுரையின் நோக்கம் பழைய சமய, வரலாற்றுப் பூசல்களை மீட்சி செய்வதல்ல. மாறாக அவற்றைக் குறுக்கல்வாத நோக்குடனும், அரைகுறை தகவல்களுடனும் சித்தரித்து, அவற்றிலுருந்து ஒரு தீய வெறுப்பியல் களத்தை உருவாக்கும் போக்கினைச் சுட்டிக் காட்டி, அதனை விமர்சிப்பதே ஆகும்.

துணைபுரிந்த நூல்கள்:

[1] பெரியபுராணம் – திருமுருக கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்

[2] The Kalabhras in the Pandiya Country, M Arunachalam. University of Madras, 1979

[3] களப்பிரர், நடன. காசிநாதன், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை, 1981.

சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் - 1

பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் திருஞான சம்பந்தரைப் பல்வேறு அடைமொழிகளால் சிறப்பித்துக் கூறுகின்றார். அதில்

“இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட

வந்த வைதிக மாமணி

என்ற தொடர் மிகவும் அழகானது. தமிழக வரலாற்றில் அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் சமூகம், சமயம், கலாசாரம் ஆகிய அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளிலும் கவிந்திருந்த இருளை சம்பந்தர் அகற்றினார் என்ற முக்கியமான வரலாற்றுச் செய்தியை உள்ளடக்கியதாக இந்தப் புராணக் குறிப்பு உள்ளது.

களப்பிரர் காலம்:

தமிழகப் பண்பாட்டு வரலாறு சங்ககாலத்துடன் தொடங்குகிறது. தமிழ்ச் சங்கங்கள் இலக்கியத்தையும், கலைகளையும் வளர்த்த மதுரை மாநகரே இதன் மையமாக விளங்கியது எனலாம். இதன் பின்னர் இருண்ட காலம் என்று பொதுவாகக் கருதப் படும் களப்பிரர் காலம் நான்கைந்து நூற்றாண்டுகள் நீடிக்கிறது. அதைத் தொடர்ந்து பக்திப் பெருவெள்ளம் இந்த மண்ணிலே பாய்ந்தோடி, சைவ வைணவ சமயங்கள் செழித்து, பெரும் ஆலயங்களும், பேரரசுகளும் உருவாகும் காலகட்டம்.

இதில் களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்று முந்தைய சமூக, அரசியல் வரலாற்றாசிரியார்கள் கூறியதற்கு இக்காலம் பற்றிய முழுமையான சித்திரத்தை அளிக்கும் தெளிவான சான்றுகள் இல்லை என்று அவர்கள் கருதியது காரணம். ஆனால் இலக்கிய வரலாற்றை எழுதிய தமிழறிஞர்கள் வேதநெறியும், சைவசமயமும் மறையும் நிலையிலிருந்து, தமிழ் நூல்கள் உத்வேகத்துடன் எழாத காலமாதலால், இருண்ட காலம் என்று பெயரிட்டார்கள்.

பின்னர் களப்பிரர்கள் பற்றிய விரிவான ஆய்வுகள் செய்யப் பட்டன, அந்தக் காலகட்டத்தைப் பற்றி ஓரளவு நன்றாகவே நாம் இப்போது புரிந்து கொள்ள முடியும். களப்பிரர்கள் தமிழகத்திற்கு வெளியேயிருந்து இங்கே வந்தவர்கள். அவர்களது மூல இருப்பிடம் கர்நாடகத்தின் தற்போதைய மைசூர் பகுதியாக (சிரவணபெளகொளா) இருக்கலாம் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப் படும் கருத்து. 3ம் நூற்றாண்டு தொடங்கி 6-7ஆம் நூற்றாண்டுகள் வரை தொண்டை மண்டலம், சேர, சோழ, பாண்டிய நாடுகள் இவற்றை அவர்கள் கைப்பற்றி ஆண்டனர். அரசு அதிகாரம் மட்டுமின்றி தமிழகத்தின் சமயம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களிலும் இதன் தாக்கம் பெருமளவில் இருந்தது. சமணம், பௌத்தம் இரண்டும் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் பரவின.

களப்பிரர் காலத்தின் தொடக்கத்தில், இந்தத் தாக்கம் மிக ஆக்கபூர்வமாகவே இருந்த்து. திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற உன்னத இலக்கியங்கள் படைக்கப் பட்டன. “பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும், நீலமேனி நெடியோன் கோயிலும், அருகர் பள்ளியும், தவத்தோர் உறைவிடமும், கொற்றவைக் கோட்டமும்அருகருகே அமைந்து அனைத்து சமயங்களும் பெருமளவில் மோதல்கள் ஏதுமின்றி, மிக்க தோழமையுடன் ஒன்றோடொன்று உறவாடி வாழ்ந்த காட்சியை சிலப்பதிகாரம் காட்டுகிறது. சமணரான இளங்கோ “நாராயணா என்னா நாவென்ன நாவேஎன்று எந்த மனத்தடையும் இன்றி உள்ளம் உருகப் பாடிய சூழல் அது.

ஒரு கட்டத்தில் சமணம் அரசு மதம் என்ற அளவில் பல பகுதிகளில் நிலை பெற்றது. மகேந்திர வர்ம பல்லவன், கூன்பாண்டியன் போன்ற மன்னர்கள் மூலம் தனது அதிகாரத்தையும், செல்வாக்கையும் அது நிலைநாட்ட முயன்றது. இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டுச் சமணம், வேதநெறி, பௌத்தம் இரண்டையுமே பின்னுக்குத் தள்ளியிருந்தது. மிக இறுக்கமான தன்மையதாகி, ஒரு வெறித்தனமான போக்கைக் கொண்டதாகவும் ஆகி விட்டிருந்தது. காலத்தால் மூத்த திருக்குறள் தவிர்த்து பெரும்பாலான மற்றைய பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இக்காலத்தில் எழுந்தவை.

சம்பந்தரது காலமான 7ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொண்டை நாட்டில் அப்பர் பெருமானின் பெரும்பணியால் வேதநெறியும், சைவ சமயமும் புத்துயிர் பெறத் தொடங்கியிருந்தன. சோழ நாடு குறுநில மன்னர்களால் ஆளப் பட்டு வந்தாலும், கலாசார ரீதியாக உயிர்த் துடிப்புடன் விளங்கியது. ஆனால் சங்கம் வளர்த்த தமிழ் மதுரையில், தமிழ்ப் பண்பாட்டுத் தொடர்ச்சியே அற்றுப் போகும் நிலை இருந்தது. சைவ நூல்கள் “பரசமய இருள்என்று இந்த நிலையைத் தான் குறிப்பிடுகின்றன. அக்காலத்திய இலக்கியங்களில் இந்த சமூகத் தேக்கம் நேரடியாகவும், குறியீட்டுத் தன்மையுடனும் சொல்லப் படுகிறது. இதனை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

இலக்கியம்:

இறையனார் களவியல் உரை என்ற தமிழின் முக்கியமான உரைநூல் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த உரையின் தோற்றம் குறித்து இதில் வரும் ஒரு கதை முக்கியமானது. “ஒருகால் பாண்டி நாட்டைக் கடும் பஞ்சம் சூழ்ந்தது. மக்கள் உணவின்றித் தவித்தனர். புலவர்களையும், அறிஞர்களையும் போற்றிக் காக்கும் பாண்டிய மன்னன் அவர்களிடம் “புலவர்களே, இந்தப் பஞ்சகாலத்தில்,உங்களைப் புரக்கும் நிலையில் நான் இல்லை. அதனால் நீங்கள் வேறு இடங்களுக்குச் சென்று விடுங்கள். பஞ்சம் அகன்றதும் உங்களைத் திரும்ப அழைத்துக் கொள்கிறேன்என்று வேண்டினான். பன்னிரண்டாண்டுகள் இந்தக் கொடும் பஞ்சம் நீடித்தது. பின்னர் வான்மழை பொழிந்து பஞ்சம் அகன்றது. அப்போது பாண்டிய மன்னன் தமிழகமெங்கும் தன் ஏவலர்களை அனுப்பி புலவர்களையும், நூல்வல்லாரையும் அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டான். எழுத்து, சொல், யாப்பு ஆகிய மூன்று துறைகளிலும் (தொல்காப்பியத்தில் இவை மூன்றும் ஒவ்வொரு அதிகாரங்கள்) வல்லவர்கள் கிடைத்து விட்டனர். ஆனால் பொருள்நூல்வல்ல யாருமே கிடைக்கவில்லை. எழுத்து, சொல், யாப்பு முதலிய மொழியின் அனைத்துக் கருவிகளும் இருப்பதே பொருளை விளக்கும் பொருட்டுத் தானே, அந்தப் பொருள் பற்றிய ஞானமே அழிந்து விடுமோ? என்று மன்னன் துயருற்றான்,

அப்போது ஆலவாய் அண்ணலாகிய சிவபெருமானே பொருளதிகாரத்தை விளக்கும் 60 சூத்திரங்களை அருளி, அவற்றை மன்னனின் பீடத்திற்கடியில் மறைத்து வைத்தார். அந்த ஏடுகளைக் கண்டு அளப்பற்ற மகிழ்ச்சியுற்ற மன்னன், இவற்றிற்குப் பொருள் சொல்வாரைத் தேடுக என்று ஆணையிட இறைவனே உருத்திரசன்மன் (ருத்ர சர்மன்) என்னும் புலவனாய்த் தோன்றி, அந்தச் சூத்திரங்களை விளக்கவும் செய்தான். பொருள் ஆழ்ந்தது, அதனினும் மையமானது காதல் நெறியைப் பேசும் அகப்பொருள், அந்த அகப்பொருளிலும் சாரமானது களவியல் என்பதால் களவியல் உரையாக அது மலர்ந்த்து.

கல்லாடம் (3.10-16) இதனை மிக அழகாகக் கூறும் –

“உலகியல் நிறுத்தும் பொருள் மரபொடுங்க

மாறனும், புலவரும் மயங்குறு காலை

முந்துறும் பெருமான் முளைத்தருள் வாக்கால்

அன்பின் ஐந்திணைஎன்று அறுபது சூத்திரம்

கடலமுதெடுத்துக் கரையில் வைத்தது போல்

பரப்பின் தமிழ்ச்சுவை திரட்டி மற்றவர்க்குத்

தெளிதரக் கொடுத்த தென் தமிழ்க் கடவுள்

இந்தக் கதையில் முக்கியமான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. பொருள்என்று இங்கே குறிப்பிடப் படுபவை வாழ்வியல் நெறிகள், சமூக மதிப்பீடுகள் ஆகியவையே. சங்க காலத் தமிழகம் காதல், வீரம், வேதவேள்விகள், சிவன், திருமால் ஆகிய பெருந்தெய்வ வழிபாடுகள், இயற்கை வழிபாடு, இசை நடனம் முதலான கலைகள், சடங்குகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றைத் தனது மையக் கொள்கைகளாகக் கொண்டது. களப்பிர சமணர்கள் தங்கள் மதக் கொள்கைகளுடன் இவை ஒத்துப் போகாதமையால் இந்த வாழ்வியல் நெறிகளையும், அவற்றைக் கூறும் நூல்களையும் அழித்தனர். அவை இறைவன் அருளால் புத்துயிர் பெற்றன என்பதைத் தான் குறியீட்டுத் தன்மையுடன் இந்தக் கதை விளக்குகிறது.

பதிற்றுப் பத்து, பரிபாடல் போன்ற சங்க நூல்கள் நமக்கு முழுமையாக்க் கிடைக்காமல், சில பகுதிகள் விடுபட்டுப் போயிருப்பதற்கும் இதுவே காரணம். இந்த மீட்சிக்குப் பிறகு எட்டுத் தொகை, பத்துப் பாட்டு என்று தொகுப்புகள் உருவான போது பாரதம் பாடிய பெருந்தேவனார் என்னும் புலவர் இதில் ஒவ்வொரு நூலுக்கும் கடவுள் வாழ்த்துப் பாடலை எழுதி இணைத்தார் என்பர். இந்த வாழ்த்துப் பாடல்களில் அருகரும், புத்தரும் இடம்பெறவில்லை, அவை சிவன், திருமால் ஆகிய தெய்வங்களையே போற்றின என்பது குறிப்பிடத் தக்கது. திருஞான சம்பந்தப் பெருமான், பாண்டி நாட்டில் சமணத்தை வென்று சைவத்தை நிலைநிறுத்தியதற்குப் பின்னர் தான் இந்த மீட்சி ஒரு புதிய உத்வேகத்துடன் நிகழ்ந்தது.

மொழி:

மதுரையில் அந்தக் காலகட்டத்தில் தமிழ் மொழி வழக்கு தொலைந்து அயல் வழக்கே மிகுந்திருந்தது என்று சைவப் புராணங்கள் கூறுவதும் உண்மையான வரலாற்றுக் குறிப்பாகவே இருக்கக் கூடும். பிற்காலச் சமணர் பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் சிலவற்றையும், காப்பியங்களையும் யாத்தனர் ஆயினும் தமிழை உயர்ஞானம் பகர்வதற்கு ஏற்ற மொழியாக அவர்கள் கருதவில்லை. அதனால் தான் சமண சமயத்தின் மையத் தத்துவ நூல்கள் தமிழில் எழுதப் படவே இல்லை, அவை “பாகதம்எனப் பட்ட பிராகிருத மொழியிலேயே கற்கப் பட்டன. (ஒப்பீட்டில் பௌத்தம் தனது தத்துவ வாதத் தரப்பைத் தமிழில் மணிமேகலையில் மிகத் தெளிவாக முன்வைத்தது என்பது குறிப்பிடத் தக்கது).

தமிழ் மட்டுமல்ல, வேதநெறியின் மொழியான சம்ஸ்கிருதமும் சமணர்களால் ஒதுக்கப் பட்டது. “ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா அந்தகர்என்றும்,

“ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமாப்

பாகதத்தொடு இடித்துரைத்த

என்றும் தெளிவாகவே சம்பந்தர் இதனைக் கூறுகிறார். சம்பந்தர் தமது ஒவ்வொரு பதிகத்திலும் “தமிழ் விரகன்”, “தமிழ் முனிவன்தமிழ்ஞானசம்பந்தன் என்று வெளிப்படையாக்க் கூறிக் கொள்வது, தமிழை இழிவாகக் கருதிய சமணர்களுக்கு சவால் விடும் போக்கில் இருக்கிறது என்றே கூறலாம்.

இசை:

வரலாற்றில், நாகரீகத்தில் மேலோங்கிச் செல்லும் சமூகங்கள் எல்லாம் நுண்கலைகளைப் போற்றி வளர்ப்பதைக் காணமுடியும். சங்ககாலத் தமிழகத்தில் இசை மக்களின் வாழ்வில் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது. இசை வல்லுனர்களான பாணர்களும், பாடினிகளும் நிறைந்திருந்தனர். அவர்கள் ஊர்கள் தோறும் சென்று, வள்ளல்களைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்று வந்தனர். பெரும்பாணாற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை என்ற இரு சங்க நூல்கள் பாணர்களின் பெயரைத் தாங்கியுள்ளன. வாழ்க்கையின் இன்பங்களையும் சரி, துயரங்களையும் சரி, பாடல்களாகப் புனைந்ததோடு மட்டுமல்லாமல், யாழ், முழவு (மிருதங்கம்) முதலிய கருவிகளின் துணையோடு அவற்றை இசைக்கும் கலாசாரமும் செழித்து வளர்ந்திருந்தது. இதன் தொடர்ச்சியாகவே, தொடக்க கால சமண காவியமான சிலப்பதிகாரத்தில் இசையும், நடனமும் முக்கிய இடத்தைப் பெறுவதைப் பார்க்கின்றோம்.

ஆனால், வாழ்க்கையைக் கொண்டாட்டமாக அல்லாமல், கர்மவினையின் சுழற்சியாகவே பார்க்கும் தன்மையை மிக அதிகமாக பிற்காலச் சமணம் வலியுறுத்தத் தொடங்கியது. இசை என்கிற கலை மேன்மையான விஷயமாக அல்ல, மேலும் மேலும் வினையில் ஆழ்த்தும் ஒரு பந்தமாக, மனித மனத்தை மயக்கி வீழ்த்தும் விஷயமாகவே சமண இறையியலில் கூறப் பட்டது. அதனால் களப்பிரர் ஆட்சியின் வளர்ச்சி நிகழ்கையில் இசையின் வீழ்ச்சி தொடங்கியது. பாணர்கள் சமூக அடுக்கில் கீழ்நோக்கிச் சென்றனர். பாணர்களை இழிசினர்என்ற கீழ்ச்சாதியினருடன் இணைத்துக் கூறும் ஒரு சங்கப் பாடல் இந்தப் போக்கைக் காட்டுகிறது.

காலப் போக்கில், இசையும், பாணர்களும், பாடினிகளும் தமிழ் மண்ணிலிருந்து ஏறக்குறைய அழிந்தே போகும் தறுவாயிலிருந்தார்கள். நான்மணிக்கடிகை என்ற பதினெண்கீழ்க்கணக்கு நூலில் பண் அமைத்துப் பாடுபவர்கள் இல்லையே, யாழ் இசைப்பவர்கள் இல்லையே என்றெல்லாம், நல்ல இசையைக் கேட்க முடியவில்லையே என்ற ஆதங்கம் தொனிக்கும் வரிகளைக் காணலாம் - “பறை நன்று பண்ணமையா யாழின்”, “பண்ணதிர்ப்பின் பாடல் அதிர்ந்து விடும்”. இன்னா நாற்பது என்ற நூலும், “பண்ணமையா யாழின் கீழ்ப் பாடல் பெரிதின்னாஎன்று புலம்புகிறது. இஸ்லாமியக் கொடுங்கோலன் ஔரங்கசீப் தனது மதநம்பிக்கைக்கு எதிரானது என்று கூறி, தனது ஆட்சிக் காலத்தில் இசையைத் தடைசெய்தான். இசையின் மரணம் (“Death of Music”) என்று வரலாற்று ஆசிரியர்கள் இதைக் குறிப்பிடுவார்கள். சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியின் போதும் இசை வன்முறைக் கோட்பாடுகள் மூலம் தடை செய்யப் பட்டது. இது போன்று வன்முறையும், கொடுங்கோன்மையும், வெறுப்பும் இல்லாத போதும், கருத்தளவிலும், நடைமுறையிலும் களப்பிரர்கள் தமிழிசையை அழித்த செயலை இதற்கு ஈடாகவே கருத இடமிருக்கிறது.

சைவ சமயப் புராணச் செய்திகள் இந்த நிலையிலிருந்து இசை மீண்டெழுந்ததை உறுதி செய்கின்றன.

குழந்தை சம்பந்தர் கையைத் தட்டித் தாளம் போடும்போது அவர் கை நோகும் என்று மனமிரங்கி, அன்னை பார்வதி தங்கத்தால் செய்த “பொற்றாளத்தைஅருளினாள் என்கிறது பெரியபுராணம். அழிந்துகொண்டிருந்த தாளம் பற்றிய இசை ஞானம் இறையருளால் காப்பாற்றப் படுகிறது என்ற வரலாற்றுச் செய்தி இது.

இதே போன்று, திருநீலகண்ட யாழ்ப் பாணர் புராணத்தில், மறைந்து போய்விட்ட யாழிசையை சிவனருளால் தன் குடும்பம் காப்பாற்றி வருவதாக அவர் கூறுகிறார். யாழிசையைக் கேட்க ஆளில்லையே என்று வருந்தி அலைகையில் அவர் சம்பந்தரைச் சந்திக்கின்றார். பின்னர் அவர்கள் இருவரது இறுதிக் காலம் வரை அவர்கள் இணைந்தே தமிழகம் முழுவதும் உள்ள தலங்களுக்குப் பயணிக்கிறார்கள்.

திருநீலகண்ட யாழ்ப்பாணர் மதுரைக் கோயிலுக்குள் சென்று சுருதி மீட்டும்போது தரையின் ஈரப் பதத்தால் சுருதி கலைகையில், இறைவனே தோன்றி அவர் அமரவும், யாழை வைக்கவும் பொற்பலகை இடுமாறு ஆணையிடுகிறான். வேறொரு தலத்தில் புற வாயிலாக வந்து கோயிலுக்குள் வழிபட்டு வந்த யாழ்ப்பாணரை, நேர்வழியாக சம்பந்தர் அழைத்துச் செல்கிறார். திருநீலநக்கர் என்ற வேதியரது இல்லத்திலே சென்று சம்பந்தர் தனது அடியார் குழாத்துடன் தங்குகிறார். அப்போது இழிகுலத்தவராகக் கருதப் பட்டு வந்த யாழ்ப்பாணருக்கு தனது யாகசாலையின் பக்கலிலே இடம்கொடுத்துத் தங்கவைக்கிறார் அந்த வேதியர். அப்போது எரிந்து கொண்டிருக்கும் யாகத்தீயும், அந்தச் செயலை ஆமோதிப்பது போல வலப்புறமாக சுழித்து சுடர்விட்டு எரிகிறதாம்!

இந்தப் புராணச் செய்திகள் அனைத்தும் பாணர்கள் தாங்கள் இழந்த சமூக அந்தஸ்தைத் திரும்பப் பெறுவதையே சுட்டுகின்றன. “வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்கசம்பந்தர் திருஅவதாரம் செய்தார் என்று பின்னாளில் சேக்கிழார் பாடுகிறார். ஆனால் சம்பந்தருக்கு சிலகாலம் கழித்து வந்த சுந்தர மூர்த்தி சுவாமிகள், அவர் இசையையும், தமிழையும் வளர்த்தவர் என்றே பாடுகிறார். நல்லிசை ஞானசம்பந்தனும்என்றும் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்என்றும்

“நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும்

ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன்

தாளம் ஈந்து அவன் பாடலுக்கிரங்கும்

தன்மையாளனை

என்றும் சுந்தரர் தேவாரம் சுட்டுகிறது.

இப்படி மீண்டெழத் தொடங்கிய தமிழிசை மறுபடியும் செழித்து வளர்வதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் பிடித்தன என்றே சொல்லவேண்டும். “திருமுறை கண்ட புராணம்இன்னொரு செய்தியைச் சொல்லுகிறது. இராஜராஜ சோழ மன்னன் காலத்தில் (11-ஆம் நூற்றாண்டு) நம்பியாண்டார் நம்பிகள் தில்லையில் தேவாரப் பாடல்களின் சுவடிகளைக் கண்டெடுத்தபோது அவற்றைப் பாடும் பண்முறைகளை வரையறை செய்ய விரும்பினார். அப்போது தேவாரப் பாடல்களின் பண்முறைகள் அறிந்தவர்கள் இருக்கிறார்களா என்று நாடெங்கும் வலைவீசித் தேடியபோது ஒருவரும் அகப்படவில்லை. பாணர்கள் வேறுவேறு தொழில்களுக்குச் சென்று விட்டனர். மன்னன் மனம் வருந்தி இறைவனை வேண்ட, பண்முறை அறிந்த பாடினி என்ற இளம்பெண் எருக்காத்தம்புலியூர் என்ற தொண்டைநாட்டுச் சிற்றூரில் கிடைத்தாள். இவள் திருநீலகண்ட யாழ்ப்பாணர் வாழ்ந்த அதே ஊரில், அவர் மரபில் வந்தவள். இவள் வந்து தேவாரப் பாடல்களை அவற்றுக்கு உரிய பண்களுடன் பாடினாள். அவையே பின்னர் தேவாரப் பண்முறைகளாக வகுக்கப் பட்டன. இசை, நடன மரபுகள் இதுபோன்று மங்கிவிடக் கூடாது என்ற காரணத்தினாலேயே பின்னர் வந்த சோழமன்னர்கள் இந்தக் கலைகளைப் பாதுகாப்பதற்காக ஏராளமான நிவந்தங்களை வழங்கினார்கள்.




பெண்டிர் நிலை:

வேத நெறி தழைத்த காலத்தில் பெண்கள் கல்வியிலும், ஞானத்திலும் சிறந்து விளங்கினர். இந்துமதத்தின் ஆதார நூல்களான நான்கு வேதங்களில் மிகப் பழமையானது ரிக்வேதம். ரிக்வேத மந்திரங்களை மெய்யுணர்வில் கண்டறிந்த ரிஷிகளை “மந்திர திரஷ்டாஎன்று அழைப்பர், இந்துமதத்தின் ஆதிகுருநாதர்கள் இவர்களே. இறைவாக்கினரான இவர்களில் 26 பேர் பெண் ரிஷிகள். உபநிஷதங்களிலும் கார்கி, மைத்ரேயி என்று பிரம்மவாதினி என்றழைக்கப் படும் ஞானப் பெண்களைக் காண்கிறோம்.

சங்க்காலத் தமிழ் இலக்கியத்திலும் ஔவையார், நன்முல்லையார், ஆதிமந்தியார், நச்செள்ளையார், காக்கை பாடினியார் என்று 30க்கு மேற்பட்ட பெண் கவிஞர்கள் மிகச் சிறப்பாகக் குறிப்பிடப் படுகின்றனர். ஔவை போன்று மன்னர்களுக்கே அறிவுரை கூறும் அளவுக்கு அவர்கள் நிலை இருந்தது. ஆனால் அதைத் தொடர்ந்து வந்த நானூறு ஆண்டுகளில் பதினெண்கீழ்க்கணக்கு உள்ளிட்ட களப்பிரர் கால இலக்கியங்களில் பெண்புலவர் ஒருவர் கூட இல்லை. பெண்களின் நிலையும் இவ்விலக்கியங்களில் அவ்வளவு சிறப்பாகக் குறிப்பிடவில்லை.

இதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால் சமண சமயம் பெண் பிறவியைக் கீழானதாகக் கருதியதே. சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தியடிகள் போன்று விதிவிலக்காக இருந்த சமணப் பெண் துறவியரும் பிற்காலத்தில் இல்லாது போனார்கள். பெண்கள் மோட்சத்திற்கு அதிகாரிகள் அல்லர் என்ற கருத்து மேருமந்தரபுராணம், அருங்கலச்செப்பு, சூளாமணி, சீவகசிந்தாமணி போன்ற சமண நூல்களில் மிகத் தெளிவாகவே குறிப்பிடப் படுகிறது. நல்வினைப் பயனாக அவர்கள் அடுத்த பிறவியில் ஆணாகப் பிறந்து அப்போது தான் மோட்சத்திற்குத் தகுதியுள்ளவர்களாவார்கள்.

இந்த சமயக் கோட்பாட்டின் தாக்கத்தால், நடைமுறையில் பெண்கல்வியும், சமூகத்தில் பெண்களுக்கு இருந்த உயர் இடமும் வீழ்ந்தது என்றே கூறலாம்.

சம்பந்தரது வரலாற்றில் வரும் சில அற்புதச் செயல்களைப் பார்க்கலாம். திருப்பாச்சிலாச்சிரமம் என்ற ஊரில் கொல்லி மழவன் என்ற வணிகனின் மகள் முயலகன்என்ற வலிப்பு நோய் வந்து இறந்து விடுகிறாள். அங்கு வரும் சம்பந்தர் “மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பேஎன்று இறைவனைப் பாடி அந்தப் பெண்மகவை உயிர்ப்பிக்கிறார். திருமருகல் என்ற திருத்தலத்தில், ஒரு வணிகப் பெண், தன் காதலன் பாம்பு கடித்து இறந்ததால் துயருற்று அழுகிறாள். தன் தந்தை வாக்குப் படி மணம் செய்து தராமல் வணிகரை ஏமாற்றியதால், வீட்டைத் துறந்து வணிகரின் வாழ்க்கைத் துணையாக வேண்டி அவருடன் புறப்பட்டு வந்த சுதந்திர உணர்வு கொண்ட பெண் இவள். அவ்வழியாக வரும் சம்பந்தர் இந்தப் பெண்மீது கருணை கொண்டு இறைவனைப் போற்றிப் பாட, வணிகர் உயிர் மீண்டு வருகிறார்.

“சடையா எனுமால், சரண் நீ எனுமால்

விடையாய் எனுமால் வெருமா விழுமால்

மடையார் குவளை மலரும் மருகல்

உடையாய் தகுமோ இவள் உள் மெலிவே

என்று பெண் வருந்துவதை நீ பார்த்திருப்பாயோஎன்று இறைவனிடம் மன்றாடுகிறார் சம்பந்தர்.

பின்னர் திருமயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்த பூம்பாவை என்னும் இளம்பெண்ணை, அவள் சாம்பல் இட்ட குடத்திலிருந்து உயிர்ப்பிக்கும் அற்புத்தையும் நிகழ்த்துகிறார். ஒவ்வொரு மாதத்தின் திருவிழாக்களையும் கூறி, இவற்றைக் காணாமல் “போதியோ பூம்பாவாய்என்று அழைக்கும் இந்த அழகிய பதிகம், வாழ்க்கையின் இன்பங்களைத் துய்க்காமல் இந்தப் பெண் மறைந்து விட்டாளே என்ற ஆற்றாமையையும் உள்ளடக்கியது.

பாண்டி நாடு சென்ற சம்பந்தர், மங்கையர்க்கரசியாரை சந்திக்கிறார். அந்த சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திடப் போகும் பெண் அவள் என்பதை அறிந்து கொள்கிறார். இறைவனையும், அடியார்களையும் வாழ்த்திப் பாடிய தம் தமிழால்,

“மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மடமானி

பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாள்தொறும் பரவ

என்று அரசியைப் பலவாறு சிறப்பித்துக் கூறுகின்றார்.

இந்தப் புராண வரலாறுகள் எல்லாம் பெண் மகவை உயிர்ப்பிப்பதாகவும், பெண்ணின் துயர் தீர்ப்பதாகவும், பெண்ணரசியைப் போற்றுவதாகவும் இருப்பது குறிப்படத்தக்கது. சைவ சமய எழுச்சியில், பெண்மை தான் இழந்த உன்னதத்தை ஓரளவு திரும்பப் பெற்றது என்ற வரலாற்றுச் செய்தியையே இவை கூறுகின்றன.

(தொடரும்)

Friday, April 10, 2009

மதர் தெரசாவின் மகளுக்கு: சில கேள்விகள்

மூலம்: டாக்டர் திருமதி ஹில்டா ராஜா

மொழியாக்கம்: ஜடாயு

மதர் தெரசா நிறுவிய மிஷனரீஸ் ஆஃப் சாரிடி அமைப்பின் பெரும் தலைவராக (சுபீரியர் ஜெனரல்) புதிதாக பொறுப்பேற்றுள்ள சகோதரி பிரேமா (இவர் பிறப்பால் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்) இரண்டு விஷயங்களை பிரகடனம் செய்துள்ளார் – மதமாற்றம் என்பது கடவுளின் பணிஎன்று ஒன்று. எனக்கு தேவ ஆணை கிடைத்தால் நான் கந்தமால் (ஒரிஸ்ஸா) செல்வேன்என்று இன்னொன்று.

மதமாற்றம் செய்வதிலேயே ஊறித்திளைப்பவர்கள் அதனைக் கடவுளின் பணி என்று வர்ணிப்பது வழக்கமான ஜல்லி தான். இஸ்லாத்திற்கு ஜிகாத் எப்படியோ, அப்படி கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம்.

சகோதரி பிரேமா மேலும் சொல்கிறார் – “ஒவ்வொரு மனித உயிருக்கும் தன் நம்பிக்கைகளுடன் வாழ உரிமை உள்ளது, ஒவ்வொரு மனிதனும் சுயகௌரவத்துடன் தான் பிறக்கின்றான். மதமாற்றம் கடவுளின் பணி”. நல்லது. ஆனால், இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் தான் பிரம்மாண்டமாக இருக்கின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் தன் நம்பிக்கைகளுடன் வாழ உரிமை உள்ளதென்றால், அந்த மனிதரை அவருக்கு பிறப்பிலிருந்தே இயல்பாக இல்லாத, புதிய வினோதமான இன்னொரு நம்பிக்கையில் வலிந்து நுழைக்க தேவை தான் என்ன? இயற்கையாக வாய்த்த கடவுளை பேயோட்டுவது போல் துரத்திவிட்டு அந்த இடத்தில் இன்னொரு கடவுளை உட்கார வைப்பது தான், அந்த மனிதருக்கு பிறப்புரிமையாக வரும் சுயகௌரவத்தை உயர்த்துவதா? மதமாற்றம் என்பது முழுக்க முழுக்க இதைத் தானே செய்கிறது சகோதரி?

சுயத்துடன் வாழும் ஒரு ஆணையோ, பெண்ணையோ ஏன் இப்படி ரணப்படுத்த வேண்டும்? சகோதரி என்ன சொல்லவருகிறார் என்றால் - ஒவ்வொரு மனிதரையும் மதம்மாற்ற அவருக்கு உரிமை உள்ளது; ஆனால் அந்த மனிதர் தமது நம்பிக்கைகளுடன் வாழும் உரிமை என்பது சகோதரி பிரேமாவும் அவரது திருச்சபையும் நம்பும் குறிப்பிட்ட கடவுளை அவர் நம்புகிறாரா இல்லையா என்பதைப் பொறுத்துத் தான் தீர்மானிக்கப் படும்! உண்மையில் அவர் கூறுவது இதைத் தான். 2000 வருட வயதே கொண்ட இந்தக் குறிப்பிட்ட கடவுள் ஏன் எப்போதும் மற்றவர்களின் பூமி மீது படையெடுப்பவர்களின் உடனுறைபவராகவே இருக்கிறார் என்ற பரிமாணம் ஒரு தனிக்கதையாக சொல்லவேண்டிய விரிவான விஷயம்.

மதமாற்றம் கடவுளின் பணி என்றால் மறுமதமாற்றம் (அதாவது தாய்மதத்திற்குத் திரும்ப அழைத்து வருவது) யாருடைய பணியாம்? சகோதரி பிரேமாவும் சரி, இந்த கிறிஸ்தவ மிஷனரி சைன்யங்களும் சரி, அவர்களது கடவுளைப் பெரிய அளவில் ஏமாற்றியிருக்கிறார்கள்; கடவுளும் அவர்களை செமத்தியாக ஏமாற்றியிருக்கிறார். அதையும் சொல்லவேண்டும் இல்லையா? மதமாற்றம் உண்மையிலேயே தேவனுடைய பணிஎன்றால் தேவன் மகா சோம்பேறியாகவும், திறமையில்லாதவராகவும் இருந்திருக்கிறார் என்று தான் சொல்லவேண்டி வருகிறது.

கத்தோலிக்க திருச்சபை மிகப் பெரிய கன்யாஸ்திரீகள் மற்றும் பாதிரிகளின் படையை வைத்திருக்கிறது. கிறிஸ்தவ எவேஞ்சலிகல் சர்ச்சுக்களோ அவர்களுக்கே உரித்தான மதப் பிரசாரகர்களை வைத்திருக்கிறார்கள் ; வட இந்தியாவில் மட்டுமே சதர்ன் பாப்டிஸ்டுகள் சுமார் ஒரு லட்சம் பணியாளர்களை வைத்திருக்கிறார்கள். அதுவும் சம்பளம் வாங்கி வேலை செய்யும் உண்மையான தேவ “ஊழியர்கள்”. இருப்பினும் தேவனுக்கு பெரிதாக மகிமை ஒன்றும் உண்டானாற்போலத் தெரியவில்லை.

மேலும், இந்த தேவன் கொஞ்சம் பயந்தாங்கொள்ளி போன்றும் தெரிகிறது. அவர் ஏன் இஸ்லாமிய நாடுகள் பக்கம் திரும்பவே மாட்டேனென்கிறார்? தீவிரவாதிகளுக்கு பயப்படுகிறாரோ? வறுமையில் வாடும் வனவாசிகளும், அமைதி விரும்பிகளான சாது இந்துக்களும் தான் இந்த தேவனுக்கும் அவரது ஊழியர்களுக்கும் இலக்கு போலும்! இவ்வளவு பணபலம், படைபலம் இருந்தும், இந்த தேவன் தன் ராஜ்ஜிய விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்த ஒரு ஏழைத் துறவியைப் படுகொலை செய்ய ஒரு கிறிஸ்தவ நிறுவனத்திற்கு* தனது தேவ ஆசிர்வாதத்தை வேறு வழங்க வேண்டி வருகிறது!

(* : ஒரிஸ்ஸா கந்தமால் பகுதியில் சுவாமி லட்சுமணான்ந்தா படுகொலை தொடர்பாக, வேர்ல்டுவிஷன் என்ற உலகளாவிய கிறிஸ்தவ அமைப்பின் பணியாளர்கள் கைது செய்யப் பட்டிருக்கின்றனர்)

சகோதரி பிரேமா தெரிந்தோ தெரியாமலோ காங்கிரஸ் தலைவர்களின் உளறல்களை அம்பலப் படுத்தி விட்டார். இங்கு மதமாற்றம் நடப்பதே இல்லை என்று ஊடகங்களில் திரும்பத் திரும்பச் சொல்லப் படுகிறது. ஆனால் மதமாற்றம் உலக அளவில் பல வடிவங்களை எடுக்கிறது என்பது தெரிந்த ரகசியம். சேவை, வறுமை ஒழிப்பு என்ற எந்தப் போர்வையில் வந்தாலும் அடிப்படையில் அது ஒரு வன்முறையே. ஆம், ஒரு மனிதரின் பிறப்புரிமை என்று சகோதரி பிரேமா குறிப்பிடும் அந்த “சுய கௌரவத்தைஅவரிடமிருந்து பிரித்து, அவரது மதப் பாரம்பரியத்திலிருந்து அவரை வெட்டி எறிந்து, தன் சமூகத்திலேயே வேற்று மனிதராக்குவது உளவியல் ரீதியாக சித்திரவதை செய்து கொல்வது போன்ற வன்முறையே ஆகும்.

கிறிஸ்தவம், மதமாற்றம் இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதே உண்மை. கிறிஸ்தவம் சென்ற இடங்கள் அனைத்திலும் ரத்த ஆறு தானே ஓடியது? அழிவு, அரசியல் அதிகாரத்தைப் பறிக்கும் மறைமுகத் திட்டம், செல்வக் குவிப்பு, அதிகாரத்திற்குட்பட்ட குடிகளை ஓட்டாண்டியாக்குதல் இதைத் தவிர வேறு என்ன நிகழ்ந்த்து? கென்ய விடுதலை வீரர் எவ்வளவு நிதர்சனமாகச் சொன்னார் – “மிஷநரிகள் இங்கே வரும்போது அவர்கள் கையில் பைபிள் இருந்தது, எங்கள் கையில் பூமி. வந்திறங்கியதும், “கண்களை மூடிப் பிரார்த்தனை செய்வோம்என்றார்கள். செய்தோம். நாங்கள் கண்களைத் திறந்து பார்த்தபோது, எங்கள் பூமி முழுவதும் அவர்களிடம், எங்கள் கைகளில் வெறும் பைபிள் மட்டும்”.

இது ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல, உலகெங்கும் நடந்தது. வாத்திகனின் இரும்புப் பிடியிலிருந்து தங்களை உடைத்துக் கொண்ட கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற தேசங்கள் முன்னேற்றம் அடைந்தன. கத்தோலிக்க அதிகார பீடங்களின் கையில் இருக்கும் ஸ்பெயின், போர்ச்சுகல், மெக்சிகோ, அர்ஜெண்டினா, கியூபா, இத்தாலி ஆகிய தேசங்கள் ராணுவ சர்வாதிகாரத்திலும், சர்ச் கொடுங்கோன்மையிலும் சிக்கித் திணறிக் கொண்டிருக்கின்றன. கிறிஸ்துவம் இன்று அமைதி விழையும், சகோதரத்துவம் வளர்க்கும், கருணை மதமாக பார்க்கப் படவேண்டும் என்று விரும்புகிறது, ஆனால் இந்த விஷயங்களிலிருந்து அது வெகுதூரத்தில் இருக்கிறது. ரத்தத்தில் பிறந்து, ரத்தக் களரியில் தான் கிறிஸ்தவம் வளர்ந்தது என்பது நினைவிருக்கட்டும்.

பல கன்யாஸ்திரீகள், பாதிரியார்கள் போன்று சகோதரி பிரேமாவும் திருச்சபையின் வரலாறு பற்றி அறியாத வெள்ளந்தியாக இருக்கிறார் போலும். இவர்கள் அன்பு, கருணை, சேவை போன்றவற்றைக் காட்டி மூளைச்சலவை செய்யப் பட்டவர்கள். குறிப்பாக இந்தியாவில் இதில் மாட்டிக் கொண்டு பின்னர் மீளமுடியாமல் தவிப்பவர்களே அதிகம். திருச்சபைக்கு இருக்கும் அத்துமீறிய அதிகாரம் பற்றியும், மனச்சாட்சியுள்ள சாதாரணர்களால் அதனுடன் போரிடவே முடியாது என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்களது குரல் காட்டில் எழும் எதிரொலி போல அங்கேயே அமுங்கி விடுகிறது.

தேவ ஆணை கிடைத்தால் கந்தமால் (ஒரிஸ்ஸா) செல்வேன் என்று பிரேமா சொல்கிறார். அவர் முன் ஒரு தேவ விசுவாசம் மிகுந்த பிரார்த்தனையை வைக்கிறேன். கந்தமாலுக்கு பதிலாக, கேரளா சென்று அங்கு முன்னாள் கன்யாஸ்திரீ சிஸ்டர் ஜெஸ்மியைப் போய்ப் பார்த்து, சர்ச் கான்வெண்டிற்குள் அவருக்கு நடந்த பாலியல் அத்துமீறல்களைப் பற்றி விசாரிப்பது தான் உண்மையான, விசுவாசமிக்க செயலாக இருக்கும். அவரது உடனிருக்கும் ஊழியர்களாலேயே நம்பிக்கை துரோகம் இழைக்கப் பட்டு, கூட இருந்த பாதிரியார்களின் பாலியல் வக்கிரங்களுக்கு உடன்படும்படி கட்டாயப்படுத்தப் பட்டு, நிர்வாணமாக்கப் படுவது உட்பட பல சித்திரவதைகளை அனுபவித்திருக்கிறார் அவர். இத்தனைக்கும் சர்ச் வட்டாரங்களில் இது ஒரு புதிய விஷயமோ, அபூர்வமாக நடந்த ஒரு சமாசரமோ இல்லை. கான்வெண்டுகள் மற்றும் சர்ச்களின் மதிள் சுவர்களுக்குள் கற்பழிப்புகளும், கொலைகளும் காலம்காலமாக நடந்து வருவது தான். ஆனால் சர்ச்சுக்கு வெளியில் “கன்யாஸ்திரீ கற்பழிப்புஎன்பது மட்டும் தான் இங்கே பற்றி எரியும் செய்தியாகிறது.

சகோதரி பிரேமா சிஸ்டர் ஜெஸ்மி மற்றும் அவர் போன்று வருந்தும் மற்ற கன்யாஸ்திரீகளின் துயர்துடைப்பதற்காக சர்ச் அதிகார அமைப்பில் தலையிடுவதில் ஏன் தன் “தேவ ஆணையைசெலுத்தக் கூடாது? கன்யாஸ்திரீகள் கருத்தடை சாதனங்கள் உபயோகிப்பது, பிஷப்கள் மற்றும் பாதிரிகளின் குழந்தைகளைச் சுமக்க வேண்டிய நிலைக்கும் ஆளாவது, சிறுவர்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு தருவதற்காக அமெரிக்காவில் சர்ச்சுகள் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யப் படுவது – இதெல்லாம் மிஷனரீஸ் ஆஃப் சாரிடி போன்ற ஒரு புகழ்பெற்ற திருச்சபை அமைப்பின் தலைவருக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும் அல்லவா?

அமெரிக்காவில் ஒரு ஏசுசபை குழுமம் தான் திவாலாகி விட்ட்தாக அறிவித்திருக்கிறது – அதன் பாதிரிகளின் பாலியல் அத்துமீறல்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் அளவுக்கு போதிய பணம் இல்லை என்பதால். ஆனால், சகோதரி பிரேமா போன்ற விசுவாசி கிறிஸ்தவர்களுக்கு இதெல்லாம் ஒன்றுமே இல்லை – ஒரிஸ்ஸாவில் நடப்பது தான் அவர்களது பார்வையை முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறது. சரி, அப்படியே இருக்கட்டும். முதலில் படுகொலை செய்யப்பட்ட சுவாமி லட்சுமணானந்தாவின் ஆசிரமத்திற்குச் சென்று அந்த சம்பவத்தின் பயங்கரத்தால் மிரண்டு போயிருக்கும் அங்கிருக்கும் குழந்தைகளை சகோதரி அன்புவார்த்தைகளால் தேற்றலாமே! இதில் ஈடுபட்ட கொலையாளிகளுக்கு தண்டனையும், பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதியும் கிடைக்க கருணை மிகு சகோதரி நடவடிக்கை எடுப்பாரா?

கடைசியாக ஒரு வேண்டுகோள் – சகோதரி பிரேமா சொல்வது போல, அவரது நிறுவனம் ஏழைகளுக்காகவே பணியாற்றுகிறது என்றால், இந்த நாட்டின் ஏழைகளுக்காக வந்த பணம், ஏன் ரோம் நகரின் (வத்திக்கான்) பணக்கருவூலங்களுக்குப் போகவேண்டும்? மிஷநரிஸ் ஆஃப் சாரிடி அமைப்பின் கணக்குகள் தணிக்கை செய்யப் படுகின்றனவா? சர்ச் நிலங்களும், சொத்துக்களும் ஏன் தணிக்கை செய்யப் படுவதில்லை? ஏன் அவற்றுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும்? இது ஒரு தேசவிரோத செயல் இல்லையா? ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் கையில் இருப்பதால் பணத்தின் மதிப்பு மாறிவிடுமா? அந்தப் பணம் தேசப் பொருளாதாரத்தின் கணக்கில் வரவேண்டும் அல்லவா?

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் அரசு ஊதியம் பெறுகிறார்கள், வருமான வரியும் செலுத்துகிறார்கள். ஆனால் அதே நிறுவனங்களில் பணியாற்றி, அதே ஊதியம் பெறும் பாதிரியார்களுக்கும், கன்யாஸ்திரீகளுக்கும் வருமான வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப் படுகிறது. ஒட்டுமொத்த இந்திய மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் இவர்களுக்கு ஊதியம், பென்ஷன் எல்லாம் கிடைக்கிறது. ஆனால் மற்ற இந்தியமக்கள் செலுத்தும் வரியை மட்டும் இவர்கள் செலுத்தமாட்டார்கள்! இது எந்த வகை நியாயம்? சகோதரி பிரேமாவின் அமைப்பும், அது போன்ற மற்ற மிஷன்களும் நடத்தும் “ஏழைகளுக்கான சேவை அமைப்புகள்மிகப் பெரிய அளவில் பணம் புழங்கும் வர்த்தகங்கள் என்பதே உண்மை.

இந்த கிறிஸ்தவ மொழியைப் புரிந்து கொள்ள ஒரு தனி சிறப்பு அகராதியே உருவாக்க வேண்டும். அதிகாரம் என்பது சர்க்கரை தடவி “சேவைஎன்று சொல்லப் படும். தங்களை எப்போதாவது காயப் படுத்துபவர்களுக்கு இயல்பாக “பாவமன்னிப்பு வழங்குவார்கள், இரக்க குணத்தைக் காண்பிப்பதற்காக. ஆனால் மற்றவர்களைக் காயப் படுத்துவதை மட்டும் நிறுத்தவே மாட்டார்கள். வனவாசிகளையும், ஏழைகளையும் மனிதத் தன்மையற்றவர்களாக சித்தரிப்பதை நிறுத்தவே மாட்டார்கள்.

இவர்கள் ஏன் ஏழைகளை நிம்மதியாக இருக்கவிடக் கூடாது? இந்த அளவுக்குப் பெரும்பணம் வெளிநாடுகளில் இருந்து இந்திய மிஷநரிகளுக்காக வந்து குவிந்திருக்கிறது, வந்துகொண்டேயிருக்கிறது. அரசும் தன் பங்குக்கு பல திட்டங்களைப் போட்டுக் கொண்டிருக்கிறது. சர்வ மகிமை பொருந்திய தேவன் வேறு கூட இருக்கிறார். இருந்தும், வறுமையையும், பசியையும், பற்றாக்குறையையும் சிறிய அளவில் கூடக் குறைப்பதற்கு மிஷநரி முயற்சிகளால் முடியவில்லையே. கொஞ்சம் நின்று நிதானித்து, அடிப்படையில் என்ன தவறு என்று யோசித்துப் பார்க்க வேண்டாமா? யார் யாரைச் சுரண்டுகிறார்கள்? ஏழைகளை ஏழ்மையிலேயே வைத்திருக்கவேண்டும் என்பது தான் தேவ ஆசிர்வாதமா? பிற்போக்குத் தனம் அப்படியே இருக்கவேண்டும் அல்லது வளர வேண்டும் என்பது தான் பிரார்த்தனையா? ஒருவேளை சகோதரி பிரேமா மற்றும் அவர் போன்றவர்கள் அடிப்படை பொதுப் புத்தியுடன் சிந்திப்பதற்குக் கூட “தேவ ஆணைவரவேண்டும் என்று நாம் காத்திருக்கவேண்டுமோ?

ஆசிரியர் குறிப்பு:

டாக்டர் திருமதி ஹில்டா ராஜா இந்திய தேசியம், இந்திய கலாசாரம் மற்றும் இந்திய சமய மரபுகள் மீது மதிப்பும், பெருமிதமும் கொண்ட ஒரு ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் சமூகவியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கத்தோலிக்க கல்வி அமைப்புகள், அரசு வளர்ச்சித் திட்டக் குழுக்கள் ஆகியவற்றின் ஆலோசகராகவும் பணியாற்றியிருக்கிறார். மதமாற்றங்கள் உருவாக்கும் சமூக மோதல்கள் பற்றி கூரிய பார்வையுடன் ஊடகங்களில் தொடர்ந்து எழுதி வருபவர்.