இந்துமதம் பற்றி காந்திஜி கருத்துக்கள், காந்தி-ஈவேரா (கற்பனை?) உரையாடலின் பின்னணியில்
சென்ற திண்ணை (ஏப்ரல் 5,2007) இதழில் தாஜ் என்பவர், மிகவும் கஷ்டப் பட்டு தேடி எடுத்ததாகக் கூறி காந்திஜி மற்றும் ஈவேராவுக்கு இடையே நடந்த “சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த” உரையாடல் என்பதாக ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
முதலில் இந்த உரையாடலின் நம்பகத்தன்மை பற்றி நிறைய கேள்விகள் உள்ளன. காந்திஜியின் வாழ்க்கைக் குறிப்புக்கள், அவர் எழுதிய தொகுதி தொகுதிகளாக உள்ள நூல்களில் எதிலும் இது பற்றி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. காந்திஜியின் நூல்கள், அவர் வாழ்க்கை பற்றிய மற்ற முக்கிய நூல்கள் பலவும் உள்ள, மும்பை சர்வோதய மண்டல் அமைத்திருக்கும் http://www.mkgandhi.org/ இணைய தளத்தில் EVR, Ramasamy, Ramaswamy, Periyar போன்ற எந்தச் சொல் இட்டுத் தேடினாலும் ஒரு விடையும் கிடைக்கவில்லை.
இது பற்றி காந்திய இலக்கியத் தொகுப்பில் எந்த பதிவும் இல்லாத நிலையில், இந்த சந்திப்பின் காந்திஜி தரப்பு மிக மோசமாக பலவீனப்பட்டிருப்பதாக நினைத்துக் கொண்டு திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள, திரிக்கப்பட்ட பிரச்சார மலினம் இது என்றே தோன்றுகிறது. ஈவேராவின் பகுத்தறிவு சிஷ்யகேடிகள் இத்தகைய பிரசார மலினங்களை தொழில்முறை நிபுணத்துவத்தோடு செய்பவர்கள் என்பதால் இது இன்னும் உறுதியாகிறது.
இத்தகைய பின்னணியுடன் இந்த உரையாடலை நோக்கினால் கூட, எனக்கென்னவோ, காந்தி இந்த உரையாடலை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், ஒரு குழந்தையிடம் (உண்மையில், சமயம் ஆன்மிகம் சமூகம் பற்றிய எந்த சரியான புரிதலும் இல்லாத ஈவேரா என்ற கோமாளியிடம்), விளையாட்டாய் பேசுபவர்போலத்தான் கையாண்டுள்ளதாகத்தான் தெரிகின்றது. அவருடைய கட்டுரைகளில் இருக்கும் ஒரு தீவிரம், தெளிவு இந்த உரையாடலில் இல்லை. அவர் பேசியதாக வரும் கருத்துக்களும் வேறு பல இடங்களில் அவர் சொல்லியிருப்பதுடன் இயைவதாயில்லை.
காந்திஜியின் கருத்துகள் மாறிக்கொண்டிருந்தவை என்பது உண்மையே. அதனால் இங்கு மையமாகப் பேசப் பட்ட இந்துமதம் மற்றும் பிராமணர்கள் பற்றிய அவரது கருத்துக்களின் சில கீற்றுகளையாவது படித்தால் தான் இந்த விஷயத்தில் அவரது நிலைப்பாடு பற்றிய சரியான சித்திரம் கிடைக்கும்.
காந்தீய சூழலில் நான் வளர்ந்த எங்கள் வீட்டில் “கீதா மாதா” புத்தகத்தை மிக மரியாதையாக மேலே வைத்திருப்போம். அந்த புத்தகத்தை திறந்தவுடன் முதல் வரி: “கீதை எனக்கு வெறும் பைபிள் மட்டுமல்ல, வெறும் குரான் மட்டுமல்ல, ஞானத்தை வாரி வழங்கும் அன்னை” (கீதா மேரே லியே கேவல் பாய்பில் நஹி ஹை, கேவல் குரான் நஹி ஹை, வோ க்யானதாயினீ மாதா ஹை). இந்து மதம் பற்றி காந்திஜி கொண்டிருந்த பெருமிதத்திற்கு இந்த ஒரு வாசகமே சான்று.

“சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு இந்துவாகவே என்னை அடையாளப் படுத்திக் கொள்கிறேன். ஏனெனில், வேதங்கள், உபனிஷதங்கள், புராணங்கள் மற்றும் இந்து சாஸ்திரங்களின் பெயரில் எவை உண்டோ அவற்றின் மீதும் மற்றும் அவதாரங்கள், மறுபிறவி மீதும் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். இப்பொழுது வழக்கில் உள்ள திரிக்கப் பட்ட மோசமான வடிவில் அல்லாமல், வேதங்களின் அடிப்படையில் மட்டும் உள்ள வர்ணாசிரம தர்மத்தை நான் மதிக்கிறேன். பசுப் பாதுகாப்பில் முழு நம்பிக்கை உண்டு. உருவ வழிபாட்டிலும் நம்பிக்கை இல்லாமல் இல்லை”
- யங் இந்தியா, ஜூன் 10, 1921
“என் மதம் இந்து மதம். என்னைப் பொறுத்தவரை இது மனிதகுலத்தின் மதம், எனக்குத் தெரிந்த எல்லா மதங்களில் உள்ள ஆகச்சிறந்த கருத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கிய மதம்”
“கிறித்தவத்தின் சில விஷயங்களைப் போற்றினாலும், என்னால் கிறித்துவத்துடன் அடையாளப் படுத்திக் கொள்ள முடியாது. நான் அறிந்த இந்துமதம் முழுவதுமாக என் ஆன்மாவைத் திருப்தி செய்கிறது. என் இருப்புக்கு முழுமை தருகிறது. மலைப்பிரசங்கத்தில் கிடைக்காத ஆறுதல் கீதையிலும், உபநிஷதங்களிலும் எனக்குக் கிடைக்கிறது. மலைப் பிரசங்கத்தில் உள்ள ஒரு ஆழ்ந்த கருத்து தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதல்ல. ஆனால் மனம் திறந்து சொல்கிறேன் : எப்போது ஐயங்கள் என்னை அச்சுறுத்துகின்றனவோ, ஏமாற்றங்கள் என் முகத்தில் அறைகின்றனவோ, தொடுவானில் ஒரு ஒளிக் கீற்றாவது தோன்றும் சாத்தியம் கூட இல்லாது போகிறதோ, அந்தத் தருணத்திலும் கீதையிடம் வருகிறேன், என் மனத்திற்கு அடைக்கலம் தரும் ஒரு சுலோகத்தைக் காண்கிறேன். கட்டுப் படுத்தமுடியாத அந்தத் துயரத்திற்கு நடுவிலும் புன்னகைக்கத் தொடங்குகிறேன். என் வாழ்க்கை முழுவதும் புறத் துயரங்களால் சூழப் பட்டிருந்தும், அவை என்மீது எந்த காயத்தையும், வடுக்களையும் ஏற்படுத்த முடிவதில்லை என்றால், கீதையின் மகத்தான உபதேசங்களுக்குத் தான் இதற்காகக் கடமைப் பட்டுள்ளேன்”
- யங் இந்தியா, 6-8-1925, p274.
“எனது அச்சம் இது தான் – இந்து மதம் பொய் என்று இப்போதைக்கு கிறித்தவ நண்பர்கள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஆனால் அவர்களது மனதில் இந்துமதம் தவறானது, தாங்கள் நம்பும் கிறித்தவ மதமே உண்மை என்ற எண்ணங்களை வளர்த்து வருகிறார்கள். இப்போது நடக்கும் கிறித்தவ (மதமாற்ற) முயற்சிகளையெல்லாம் பார்க்கும்போது, இந்துமதத்தின் அடிப்படையை வேரறுத்துவிட்டு அங்கு வேறு ஒரு மதத்தை நிறுவப் பார்ப்பது தான் அவர்களது நோக்கம் என்பது புரியும்” – ஹரிஜன், மார்ச் 13, 1937.
“என்னிடம் மட்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருந்தால், எல்லா மதமாற்றங்களையும் நிறுத்தி விடுவேன். இந்து குடும்பங்களில் ஒரு மிஷநரியின் வருகை என்பது குடும்பத்தைக் குலைக்கும் செயல்; உடை, ஒழுக்கம், மொழி, உணவு உள்பட கலாசாரத்தையே மாற்றும் செயல் என்றே ஆகிவிட்டிருகிறது”- ஹரிஜன், நவம்பர் 5, 1935.
இந்துமதம் பற்றிய காந்திஜியின் பல கருத்துக்களுக்கும், பார்க்க: http://www.mkgandhi.org/epigrams/h.htm
இதே போன்று, பிராமணர் பற்றியும் காந்திஜி பலவிதமான கருத்துக்களைக் கொண்டிருந்தார்.
“பிராமணர்களின் அழிவில் பிராமணரல்லாதார் உயர்வதை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்” - காந்திஜி படைப்புகள் தொகுப்பு, XXVI-331
“பிராமணீயத்தின் மீது நான் பெருமதிப்பு கொண்டுள்ளேன் – இதன் மூலம் தானாகவே ஏற்றுக் கொள்ளும் வறுமையையும், தெய்வீக அறிவுத் தேடலையும் தலைமுறை, தலலமுறையாக ஒரு குழு பின்பற்றுகிறது அல்லவா?” - டி.ஜி. டெண்டுல்கரின் “மகாத்மா”, 3-195
“பிராமணர்களிடத்தில் வேண்டுமானால் உங்கள் கோபத்தைக் காட்டுங்கள். ஆனால் ஒருபோதும் பிராமணீயத்தின் மீது அல்ல” - டி.ஜி. டெண்டுல்கரின் “மகாத்மா”, 2-283.
பிராமணர், பிராமணீயம் பற்றிய காந்திஜியின் பல கருத்துக்களுக்கும், பார்க்க: http://www.mkgandhi.org/epigrams/b.htm
“இந்து மதத்திலும், இந்திய கலாசாரத்திலும் சாதி முதலிய சீர்கேடுகளைத் தவிர வேறு என்ன உள்ளது?” என்று இங்கே ஈவேரா கேட்டது போலக் காழ்ப்புணர்ச்சியுடன் கேட்பவர்களை காந்திஜி கடுமையாக விமர்சித்திருக்கிறார். இத்தகைய கருத்துக்கள் கொண்டு பின்னாளில் வெளிவந்த பல நூல்களுக்கு முன்னோடியான கேதரின் மாயோவின் “மதர் இந்தியா” (1927) பற்றிய கருத்தைக் கேட்ட போது “சாக்கடையை நோண்டுபவரின் பதிவு” (Drain Inspector's Report”) என்ற ஒரே சொல்லால் அதனை நிராகரித்தார். ஈவேரா எழுதிய எந்தப் புத்தகத்தைக் காட்டியிருந்தாலும், காந்திஜி கண்டிப்பாக இதையே தான் கூறியிருப்பார் , சந்தேகமில்லை. வரலாற்றில் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது, அவ்வளவு தான்.
மொத்தத்தில், “ஆ காந்தியையே மடக்கறாரு நம்ம பெரியாரு” என்று கழகக் கண்மணிகளின் சுய புல்லரிப்புக்கும், இன்னொரு சுய ஏமாற்றத்திற்கும் அல்லாது வேறு எந்த உருப்படியான விஷயமும் இந்த உரையாடலில் இல்லை என்றே கூற வேண்டும்.
இது பற்றிய நண்பர் அருணகிரியின் திண்ணைக் கட்டுரை மிக அழகாக எழுதப் பட்டுள்ளது. ஈவேரா வைத்ததாகக் கூறப் படும் கேள்விகளைக் கேள்வி கேட்கிறது. அதையும் படித்துப் பாருங்கள்.

