Thursday, March 27, 2008

இந்து, கிறிஸ்தவ மோதல்கள் (encounters): ஒரு வரலாற்று அறிமுகம்

மூலம்: சீதாராம் கோயல் [1]
மொழியாக்கம்: ஜடாயு

(1)
பதினேழாம் நூற்றாண்டுத் தொடக்க காலத் தமிழ்நாட்டுப் பண்டிதர்கள் முதல் இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திய அருண் ஷோரி வரையிலான இந்துக்கள் கிறிஸ்தவத்தின் அடிப்படை மதக் கொள்கைகளை (dogma) விவாதத்தால் தகர்ப்பதிலும், மிஷநரி செயல்பாடுகள் பழிக்கத் தக்கவை என்று நிறுவுவதிலும் சளைக்காமல் தங்கள் எழுத்துக்களையும், சக்தியையும் செலவழித்திருக்கின்றனர். ஆனால் கிறிஸ்தவ சமயவாதிகளின் (theologians) ஆணவப் போக்கிலும், கிறிஸ்தவ மிஷநரிகளின் தீவிர மனப்பான்மையிலும் இதனால் ஒரு மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

ஏனென்றால் இந்த அடிப்படை மதக்கொள்கை ஒருபோதும் விவாதத்திற்கான பொருளாக இருந்ததில்லை. பொதுவான தர்க்க விதியின்படி, உண்மை என்று நிரூபிக்கப்படாத ஒரு விஷயத்தை மறுக்க முடியாமலும் போகலாம்; அதை நிரூபிக்கவேண்டிய அவசியமும் இல்லை. 33 CEல் (பொது சகாப்தம் 33ஆம் வருடத்தில்) அவ்வளவாகப் பிரபலமாகாத ஒரு யூதரை, யூதேயா எனும் ஊரில் வைத்து, ரோமானிய கவர்னர் ஒருவர் சிலுவையில் அறையச் செய்தாராம். சிலுவையில் அறையப்பட்ட அந்த யூதரே வரப்போகிற எல்லா மனிதர்களின் பாவங்களையும், எல்லா காலங்களிலும் சுமக்கிறாராம். இதை எப்போதாவது, யாராவது நிரூபித்திருக்கிறார்களா? தங்களின் ஒரே ரட்சகர் அந்த மனிதர் மட்டுமே என ஏற்றுக்கொள்பவர்கள் சந்தோஷம் பொங்கும் நிரந்தர சொர்க்கத்திற்குப் பயணிப்பார்கள் என்றும், மற்றவர்களெல்லாம் நிரந்தர நரகத்தில் தீயில் வெந்துகொண்டிருப்பார்கள் என்றும் யாராவது நிரூபித்திருக்கிறார்களா? அப்படி யாரும் நிரூபிக்காவிட்டாலும், (நம்புபவர்கள் சொர்க்கத்திற்கும், மற்றவர்கள் நரகத்திற்கும் போகக் கடவார்கள் என்கிற) இந்த அறைகூவலும், வாக்குறுதியும், அச்சுறுத்தலும் உண்மையில்லை என்று மறுத்துரைப்பது தர்க்கரீதியாக முடியாததாக உள்ளது.

எவ்வளவு தான் அலங்காரமான சமயவாத வளவளா போதனைகளைப் பரப்பினாலும், பெரும் நிறுவனங்களைக் கட்டமைத்து, அவற்றையே ஆயுதமாகச் செலுத்தி, மற்றவர்களை அச்சுறுத்தி ஆக்கிரமிக்கும் மறைமுக உத்தி என்பதற்கு மேல், இந்த மதக்கொள்கையில் வேறு எதுவும் இல்லை என்பது தான் உண்மை. எனவே, இந்த கிருத்துவ மதக் கொள்கைகளுக்கு அவமதிப்பு என்கிற பொருத்தமான நிராகரிப்பை மட்டும் வழங்கிவிட்டு தங்களுக்கிடையே நிலைபெற்றுவிட்ட கிருத்துவ மிஷநரி கட்டமைப்புக்கள் மீதுதான் இந்துக்கள் கவனம் செலுத்தவேண்டும், இப்போதாவது.

இந்தக் கட்டமைப்புகளை இயக்கும் நிறுவனமயமான கிருத்துவத்தின் ஒரே நோக்கம் இந்து சமுதாயத்தையும், கலாசாரத்தையும் அழித்து, இந்துக்களின் தாய்மண்ணாகிய இந்தியாவைக் கைப்பற்ற வேண்டும் என்பதே. இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக சாதகமான, பாதகமான சூழ்நிலைகள் ஒவ்வொன்றிற்கும் ஏற்றவாறு அந்த நிறுவனம் யுக்திகளை வகுத்துக் கொண்டேயிருக்கிறது. காசு தரும் எஜமானர்களுக்காக தங்கள் திறமைகளை விபசாரம் செய்யும், கபடங்களை வார்த்தை ஜாலங்களால் அலங்காரம் செய்யும் அறிவுஜீவி கிரிமினல்களை கணிசமான அளவில் உருவாக்கி, அது வேலை வாங்குகிறது. (இப்படியிருக்கும்) இந்தியச் சூழலில், இந்த குயுக்திகள் சமய விளக்கங்களாக விளம்பரம் செய்யப்படுவதும், இத்தகைய கிரிமினல்கள் சமய அறிஞர்களாக முன்நிறுத்தப்படுவதும், இந்த சமூக விரோதக் கும்பலின் உண்மையான நோக்கங்களைப் புரிந்து கொள்வதிலிருந்து இந்துக்களின் கவனத்தை சிதறடித்து விடக்கூடாது.

இந்துமதமும், கிறிஸ்தவமும் இங்ஙனம் எதிர்ப்படுவதை, மோதிக் கொள்வதை இரு மதங்களுக்கிடையில் நிகழும் உரையாடலாக எண்ணுவது இந்துக்கள் செய்து கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய தவறு. ஏனெனில் கிறிஸ்தவம் ஒரு “மதமாக” என்றுமே இருந்ததில்லை; வேட்டையாடி அழிக்கும் தன்மை கொண்ட எதேச்சாதிகார சக்திகளில் ஈடு இணையற்றது அது என்று அதன் நெடிய வரலாறு நமக்கு உணர்த்துகிறது. அதனால், சிந்தனையாலும் செயல்முறையாலும் ஒன்றை ஒன்று விலக்கக்கூடிய இரண்டு மார்க்கங்களுக்கு இடையேயான போர் என்று தான் இந்த எதிர்ப்படுதலைக் கருத இடமுள்ளது. கீதையின் மொழியில் (அத்தியாயம் 16) சொல்வதென்றால், இது தெய்வத்தன்மைக்கும், அசுரத்தன்மைக்கும் இடையே நிகழும் போர். சம்பிரதாயமான வரலாற்று மொழியில் சொல்வதென்றால், வேத நெறிக்கும் (Vedic), விவிலிய நெறிக்கும் (Biblical) இடையேயான போர்.

இந்த இரு நெறிகளையும், முன் நடத்திச் செல்லும் இவற்றின் மூலங்கள் பற்றிய ஆய்வுக்குள் இப்போது போக வேண்டாம். அது பற்றி வேறொரு இடத்தில் விரிவாக விளக்கியிருக்கிறேன் [2]. அவை எந்த வகையான நடத்தைகள் மற்றும் செயல்முறைகளுக்கு வழிவகுக்கின்றன என்பதை மட்டும் இங்கே சுருக்கமாகப் பார்க்கலாம்.





வேத நெறி, மனிதன் தன்னை அறிதலிலும், உணர்தலிலும் கருத்துச் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. அதாவது அறவழியிலும், ஆன்மிகத்திலும் மேன்மையடைய வேண்டும். இதற்காக தவம், யோகம், தியானம், ஞானம், பக்தி என்று பல வழிமுறைகளை அது வளர்த்தெடுத்திருக்கின்றது. ஒரு சாதகன் தனது தார்மீக, ஆன்மிக மனநிலைக்குப் பொருந்துமாறு (ஆதாரம்), எந்தவொரு வழிமுறையையும் தேர்வு செய்து அதைக் கைக்கொள்ளலாம் (அதிகாரம்). (குணத்தாலும், மனத்தாலும் வேறுபட்டிருந்தாலும்) அனைவருக்கும் ஒரே ஒரு மருந்துச் சீட்டுத்தான் என்பது கிடையாது. (நிறுவனமயமான) ஒரு மத நம்பிக்கையின் கட்டுப்பாட்டிற்குள்ளே (மனிதரை) திணிக்கும் வற்புறுத்தல் மற்றும் ஆசைகாட்டுதல்கள் கிடையாது. மேலும், மற்றவர்களுக்கு எதிராக, தாக்குதலுக்காக அணிதிரள வேண்டும் என்பது நிச்சயம் கிடையாது.





இதற்கு மாறாக, விவிலிய நெறி, நம்பிக்கையாளர்கள் நம்பிக்கையற்றவர்களை திருத்தவேண்டும் என்று போதிக்கிறது. “ஒரே சத்திய வழி”க்கு சாட்சியம் கூறிய மாத்திரத்தில், ஒருவர் உயர்ந்த மனித ஜீவனாக ஆகிவிட்டதாக நம்பப் படுகிறார். அவர் மற்றவர்களது “ரட்சிப்பு”க்கு வழிகாட்டத் தகுதிபெற்றவராகவும் ஆகிவிட்டார்! அதன் பிறகு தேவைப்படும் பயிற்சியெல்லாம் - செயற்குழுக்களையும், கட்டமைப்புக்களையும் உருவாக்கி களத்தில் எப்படி இறங்குவது, மற்றவர்களைநிர்ப்பந்தம், மோசடி உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி எப்படியெல்லாம் மதம் மாற்றுவது, வழிக்கு வர மறுப்பவர்களை எப்படி கொல்லவோ, சீரழிக்கவோ அல்லது கறைபடுத்தவோ செய்வது, இதெல்லாம் தான்.

சனாதன தர்மம் எனப்படும் இந்து மதத்தின் பல சமயத் துறைகளை (schools) வேத நெறியானது உலகிற்கு அளித்திருக்கிறது. இவற்றைப் பின்பற்றுபவர்கள் தங்களுக்குள்ளும் சரி, மற்றும் வேறு மார்க்கங்களைப் பின்பற்றுபவர்களிடத்திலும் சரி, அமைதியையும், சமாதானத்தையுமே கடைப் பிடித்து வந்துள்ளனர். ஆனால் விலிலிய நெறியில் இருந்து உதித்த கிறிஸ்தவம், இஸ்லாம், கம்யூனிசம் மற்றும் நாசிசம் போன்ற சமயங்கள் கொலை மற்றும் அழிப்பையே தங்கள் முக்கிய வழிமுறைகளாகக் கொண்டவை. இவைகள் தங்கள் உட்குழுக்களுக்குள்ளும், தங்களுக்கிடையிலும் மட்டுமல்ல, மனிதகுலத்தின் மற்ற மக்களுடனும் வன்முறை மோதல்களையே உருவாக்கியுள்ளன.

(2)
இந்து கிறிஸ்தவ எதிர்ப்படுதல்களின் வரலாற்றை குறிப்பிட்ட ஐந்து காலகட்டங்களாகப் பிரிக்கலாம். இந்த எல்லா காலகட்டங்களிலும், கிறிஸ்தவ மிஷநரிகள் “கிறிஸ்தவக் கடவுள் ஒருவரே உண்மை, ஏசு ஒருவரே ரட்சகர், இந்துக்கள் இதை ஏற்றுக் கொண்டாக வேண்டும் அல்லது ஏற்றுக் கொள்ள வைக்கப் படவேண்டும்” என்ற அடிப்படை மதக் கொள்கையில் அப்படியே தான் நின்று கொண்டிருக்கின்றனர். ஆனால் வழிமுறைகளையும், சொல்லாடல்களையும், மாறும் சூழ்நிலைகளுக்குப் பொருந்துமாறு மாற்றிக் கொண்டேயிருக்கின்றனர். ஆரம்பத்தில் இந்துமதக் காவலர்கள் கிறிஸ்துவ போதனைக்கும், மிஷநரி வழிமுறைகளுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் பல்வேறு காரணங்களினால், பின்வரும் கட்டங்களில் இந்துக்களின் எதிர்ப்புணர்வு தொய்வடைகிறது அல்லது ஒரேயடியாக மறைந்து விடுகிறது. கிறிஸ்தவம் வெற்றியடைந்து விட்டதாக மார்தட்டிக் கொண்டு முன் நகர்கிறது.





முதல் காலகட்டம் பதினாறாம் நூற்றாண்டில் இந்தியாவிற்குள் போர்ச்சுகீசியக் கொள்ளையர் வருகையில் தொடங்குகிறது. குறிப்பாக, இந்தக் கொள்ளையர்களின் குலகுருவான (patron saint) பிரான்சிஸ் சேவியரின் வருகைக்குப் பின்னர் கிறிஸ்தவம் தனது உண்மையான முகத்துடன் தரிசனம் தருகிறது. அதன் மொழி அதன் ஐரோப்பியத் தாயகத்தில் இருந்தது போன்றே கரடுமுரடாகவும், அதன் வழிமுறைகள் அதே குரூரத்துடனும் இருக்கின்றன. திக்கற்ற இந்துக்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆட்படுகின்றனர். அவர்கள் செய்த புண்ணியம், இந்தக் காலகட்டம் நெடுநாள் நீடிக்கவில்லை. கோவா மற்றும் சில சிறிய மாகாணங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் போர்ச்சுகீசியர்கள் தோல்விடையடைகின்றனர். விதிவிலக்காக பாண்டிச்சேரி மற்றும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட வேறுசில இடங்களில் பிரெஞ்சுக்காரர்களின் குறுகிய காலச் செயல்பாடுகள் தவிர்த்து, பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஐரோப்பிய அரசுகளுக்கு கிறிஸ்தவப் பரப்புதலுக்கு அவ்வளவாக நேரமிருக்கவில்லை.

இரண்டாவது காலகட்டம், 1813ல் மராட்டியர்களின் இறுதித் தோல்விக்குப் பின் பிரிட்டிஷ் அரசு காலூன்றுவதில் தொடங்குகிறது. பிரிட்டிஷார் மிஷநரி செயல்பாடுகளுக்கு மறைமுக ஊக்கம் தந்தாலும், அவர்களது நேரடி வழிமுறைகளை அனுமதிக்கவில்லை. ஆயினும் மிஷனரிகளின் மொழி அதே வக்கிரத்துடன் தான் இருக்கிறது. சிறிது காலம், குறிப்பாக வங்கத்தில் கிறிஸ்தவம் கொஞ்சம் தன்னம்பிக்கையுடன் வாழ்கிறது. மகரிஷி தயானந்தர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் அறைகூவல் மற்றும் இந்து சீர்திருத்த இயக்கங்களின் எழுச்சியுடன் இந்தக் காலகட்டம் முடிவடைகிறது. கிறிஸ்தவம் தீவிர பின்னடைவை சந்திக்கிறது.





மூன்றாவது காலகட்டம் மகாத்மா காந்தியின் பிரவேசத்தைத் தொடர்ந்து, அவரது “சர்வமத சமரசம்” என்ற கோஷத்துடன் தொடங்குகிறது. கிறிஸ்தவ மிஷநரிகள் (தாக்குதல் நிலைப்பாட்டிலிருந்து) தற்காப்பு நிலைப்பாட்டுக்குத் தள்ளப் பட்டு, தங்கள் மொழியை மாற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். வசைச்சொல் வாயர்களாக இருந்த விஷமிகள், நாவில் சர்க்கரை தடவிக் கொண்ட நாகங்களாக மாறுகின்றனர். அழுக்குக் கந்தல் கட்டிய பிச்சைக்காரன் தனது விலையுயர்ந்த ஆடையணிகளை செல்வந்தர்களுக்கு தானம் செய்வதாக வாக்களித்தால் எப்படியிருக்கும்? அதே பாணியில், இப்போது அவர்கள் இந்துக்களிடம் “தங்கள் ஆன்மீகச் செல்வங்களைப் பகிர்ந்து கொள்ளப் போவதாக” (share their spiritual riches) புறப்படுகின்றனர். 1938ல் தாம்பரம் மாநாட்டில், அகில உலக மிஷநரி கவுன்சில் (International Missionary Council) கிறிஸ்தவ இறையியலை இந்திய சூழலுக்காக மாற்றியமைப்பதாக முடிவெடுப்பதுடன் இந்தக் காலகட்டம் முடிவடைந்தது.

சுதந்திரத்தின் வருகையுடன் தொடங்கிய நான்காவது காலகட்டம், கிறிஸ்தவத்திற்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. இந்துக்களை மதமாற்றுவதற்கான கிறிஸ்தவ உரிமை அரசியல் சட்டத்தாலேயே உறுதி செய்யப் படுவதாக சொல்லப் பட்டது. 17 ஆண்டுகளாக தேசிய அரசியலை வியாபித்திருந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒவ்வொரு இந்து விரோத கருத்தியலையும், எல்லா இந்து விரோத இயக்கங்களையும் மதச்சார்பின்மை என்கிற பொய்மைத் திரையிட்டு ஊக்குவித்து வளர்த்தார். அதற்குப் பின்வந்த அரசுகள் “இந்து மதவாதம்” ஒரு பெரும் அச்சுறுத்தல் என்று பயங்காட்டுவதைத் தொடர்ந்து செய்துவந்தன. தங்களது வழிமுறைகளையும், செயல்பாடுகளையும் பற்றி மெல்லிய ஆட்சேபம் தெரிவிப்பவர்களைக் கூட இந்து மதவாதிகள், வெறியர்கள், “இந்து நாசிகள்” என்று கூட கிறிஸ்தவ மிஷநரிகள் வசைபாடக் கூடிய நிலை உருவாயிற்று. எல்லாவிதமான “மதச்சார்பற்றவர்களும்” இந்த கோஷ்டி கானத்தில் இணைய முன்வந்தனர்.

கிறிஸ்தவத்தை பூரணத்துவமாக முன்வைத்தல் (Fulfilment), கிறிஸ்தவத்தை இந்திய மயமாக்குதல் (Indigenisation), பரலோகத்திற்குப் பதிலாக “மோட்சம்” (Liberation), பிற மதங்களுடன் உரையாட முன்வருதல் (Dialogue) இப்படியாகப் பட்ட சமயக் கோட்பாட்டு ஜல்லிகள் “வளர்த்தெடுக்கப் பட்டு” செயலில் இறக்கப் பட்டன. மிஷநரி கட்டமைப்பு பல்கிப் பெருகி எங்கும் நிறைந்ததாயிற்று. இந்தியாவின் சரித்திரம் முழுவதிலும், கிறிஸ்துவத்திற்கு இது போன்றதொரு நல்லகாலம் எப்போதும் வாய்த்ததில்லை. கிறிஸ்தவம் இந்தியாவின் ஒரு தொன்மையான சமயம் போன்று அங்கீகரிக்கப் பட்டு, தனது கூட்டத்தைப் பெருக்கவும், செயல்பாடுகளை அதிகரிக்கவும் முழு உரிமை பெற்றதாக ஆகிவிட்டிருந்தது. இந்தப் பேரிசைக் கூச்சலுக்கு நடுவே ஒலித்தவை ஒருசில சுருதிபேதங்கள் மட்டுமே : 1953ல் லண்டனிலிருந்து வெளிவந்த கே.எம்.பணிக்கரின் “ஆசியாவும், மேற்கத்திய ஆக்கிரமிப்பும்” என்கிற அரிய நூல், 1956ல் மத்தியப் பிரதேச அரசால் வெளிக் கொணரப்பட்ட நியோகி கமிட்டி அறிக்கை, 1978ல் ஓம் பிரகாஷ் தியாகியால் கொண்டுவரப்பட்ட “மத சுதந்திரம்” பற்றிய மக்களவைத் தீர்மானம்.

இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஐந்தாவது காலகட்டம் நாடு தழுவிய இந்து எழுச்சியுடன் தொடங்கியது எனலாம். தமிழ்நாட்டில் மீனாட்சிபுரம் என்ற ஊரில் ஹரிஜனங்கள் இஸ்லாமுக்கு ஒட்டுமொத்தமாக மதமாற்றப் பட்டது, இஸ்லாமிய மதவெறி மற்றும் வன்முறையின் மீட்சி, பஞ்சாபிலும், காஷ்மீரிலும் பாகிஸ்தானின் ஆதரவுடன் வளர்ந்த தீவிரவாதம் இவையே இந்த எழுச்சிக்கு முக்கிய காரணங்கள். பல வருடங்களாக முக்கியமான இந்து சமுதாய பிரசினைகளை ஒருவித உறைந்த மனப்பான்மையுடன் பார்த்துக் கொண்டிருந்த சங்க பரிவாரம் 1984 மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் படுதோல்வியைக் கண்டு திடுக்கிட்டு, தன் இந்து அடையாளத்தை புதுப்பித்துக் கொள்ள முடிவு செய்தது. அதன் விளைவாகத் தோன்றியது ராமஜன்மபூமி இயக்கம். இஸ்லாமிய ஆதிக்க, ஆக்கிரமிப்பு சக்திகளின் பரவலைத் தடுப்பது தான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. கிறிஸ்தவ மிஷன்கள் குறித்து ஒன்றுமே கூறப்படவில்லை. இருப்பினும், இந்த இயக்கத்தைக் கண்டு அதிகமாகக் கவலைப் படவும், கூப்பாடு போடவும் தொடங்கியவை கிறிஸ்தவ மிஷநரிகள் தான்! சக்திவாய்ந்த கிறிஸ்தவ ஊடகங்கள் மேற்குலகம் முழுவதும் இந்துக்கள் சிறுபான்மையினரை இந்தியாவிலிருந்து ஒழித்துக் கட்டி நாசி அரசை அமைக்கப் பார்க்கிறார்கள் என்று கத்திக் கூச்சலிட்டு, பெரும்புயலைக் கிளப்பின. அந்தப் புயலின் தாக்கம் இன்னும் முழுமையாக அடங்கிய பாடில்லை. எப்போது அடங்கும்? யாருக்கும் தெரியாது.

சுட்டிகள்:

[1] 1997ல் எழுதப் பட்ட The Sunshine of Secularism என்ற நீண்ட கட்டுரையின் முதல் பகுதியின் மொழியாக்கம் இது. Pseudo-secularism, Christian Missions and Hindu Resistance என்ற நூலிலிருந்து.

[2] Sita Ram Goel, Defence of Hindu Society, Third revised edition, Voice of India, New Delhi, 1994.

ஆசிரியர் சீதாராம் கோயல் பற்றிய அறிமுகம் இங்கே.

சீதாராம் கோயல்: வரலாற்றாசிரியர், சமூக சிந்தனையாளர்

சீதாராம் கோயல் (1921-2003) சுதந்திர இந்தியாவின் ஒரு முக்கியமான வரலாற்று அறிஞர் மற்றும் சமூக சிந்தனையாளர். 1940களில் தீவிர கம்யூனிச ஆதரளவாக இருந்து 50களில் சோவியத் அரசின் கோரங்கள் பற்றி அறிந்து, அதைத் துறந்து இந்து தர்மம், இந்திய தேசியம் என்ற தன் வேர்களுக்குத் திரும்பினார். இந்து சமுதாய, அரசியல் பிரசினைகள், கம்யூனிசத்தின் கொடூரங்கள், கிறிஸ்தவ மதப் பரவல் மற்றும் மிஷநரிகள், கிறிஸ்தவ மத அடிப்படைகளைத் தகர்க்கும் மேற்கத்திய அறிவியக்கம், இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பின் வரலாறு மற்றும் அதில் இழையோடும் ஜிகாத் வன்முறைக் கோட்பாடு, இவற்றைப் பற்றிய ஆழமான ஆய்வுகள், வரலாற்று உண்மைகளை வெளிக் கொணரும் பல முக்கிய நூல்களை அவர் எழுதியும், தொகுத்தளித்தும் உள்ளார். ஆற்றொழுக்குப் போன்று, அதே சமயம் கூர்மை தெறிக்கும் ஆங்கிலத்தில் 35க்கும் மேற்பட்ட நூல்களையும், குறிப்பிடத்தக்க ஹிந்தி மொழியாக்கங்களையும், பத்திரிகைக் கட்டுரைகளையும் அவர் படைத்திருக்கிறார். கோயலின் இஸ்லாம் தொடர்பான சில வரலாற்று ஆய்வு நூல்களைத் தடைசெய்யுமாறு அராஜக கோரிக்கைகள் எழுந்தன. இரண்டு நூல்கள் குறுகிய காலத்திற்கு தடை செய்யப் பட்டு, பின்னர் நீதிமன்றக் குறுக்கீட்டால் தடை விலக்கப் பட்டது.




நேருவின் அரசியல் கொள்கைகள், எமர்ஜென்சி, போலி மதச்சார்பின்மை இவை பற்றிய மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சீதாராம் கோயல் மறைந்த அரசியல் தலைவர்களான ஜெயப்ரகாஷ் நாராயண், கே.ஆர்.மல்கானி மற்றும் காந்தியவாதி தரம்பால் ஆகியாரின் நெருங்கிய நண்பரும், உடன் பணியாற்றியவரும் கூட. மறைந்த தத்துவ சிந்தனையாளர் ராம் ஸ்வரூப் தொடங்கிய வாய்ஸ் ஆஃப் இந்தியா என்னும் இலாப நோக்கற்ற பதிப்பகத்தைத் தன் இறுதி நாள் வரை நடத்தி வந்த இந்த கர்மயோகி இன்று இந்து எழுச்சி பற்றிய விமர்சனங்களுக்காக அதிகம் கவனிக்கப்படும் கொய்ன்ராட் எல்ஸ்ட், டாக்டர் டேவிட் ஃப்ராலி, அருண் ஷோரி, சுபாஷ் கக் போன்றவர்களுக்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும், பதிப்பாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

சீதாராம் கோயல்: விக்கிபீடியா பக்கம்
India's Only Communalist : சீதாராம் கோயல் பற்றி கொய்ன்ராட் எல்ஸ்ட்
இணையத்தில் சீதாராம் கோயல் நூல்கள்

(பி.கு: அமரர் கோயல் அவர்கள் கட்டுரைகளின் மொழியாக்கங்களை பதிவிடுவதாக உத்தேசம். அவற்றுக்கான ஆசிரியர் குறிப்பு இந்தப் பதிவு).

Friday, March 14, 2008

Power Gurus and Hindutva : "The Week" story

Here is my letter to The Week, regarding their recent cover story "The Power Gurus" .

Dear Editor,

Whatever maybe the motives behind this cover story, please accept my compliments for such a wide coverage. Your story will serve to highligh the need for Hindu Gurus to be concerned not just about the Hindu religion and spirituality, but also the challenges, pains and aspirations of the Hindu society. Needs that cover politics as well as social reforms. This time around, such "alerts" will not make the Gurus and their followers to move away from the social mobilization, as many in the "secular" side would wish, but will hopefully serve as further impetus to get deeper and broader into it.

The interview with Mata Amritanandamayi is a gem. Thank you for publishing the full text version as well. To a leading question on the difference between Hinduism and Hindutva, her answer ".. selflessly serving one's nation and its people is Hindutva" conveys a divine blessing and reassurance for countless Hindutva activists across the world, including those inside and outside the Sangh Parivar.




The perspective of Koenraad Elst that Hindutva does find very many vibrant experssions and is not just confined to the grand old, elephantine organisation called RSS is very refreshing. RSS leadership should take his harsh criticism in the right sprit, as a doctor's prescription, as Elst, the author of "Decolonizing the Hindu mind" deeply knows the symptoms of the diseases that ail the self alienated Hindu society.

Thanks,
Jataayu

Sunday, March 09, 2008

மலேசியாவிலிருந்து ஒரு சந்தோஷ செய்தி!

மலேசியாவில் இருந்து ஒரு நண்பர் அனுப்பிய மடல்:

தொடர்ந்து நீடிக்கும் விரக்திக்கும், கையாலாகாத்தனத்தின் வெறுப்புக்கும்இடையே, சில சந்தோஷங்கள், சின்ன சின்ன சந்தோஷங்கள் கிடைத்துவிடுகின்றன. அதை தெரிந்தவர், தெரியாதவர்களுக்கிடையே பகிர்ந்து கொள்வதிலும் ஒருசந்தோஷம். இன்று காலைச் செய்தி, டத்தொ சாமி வேலு, மலேசிய அரசின் ஒரே தமிழ் மந்திரி, தேர்தலில் தோற்றுப் போனது தான். தன் சுகத்துக்காக, பதவிக்காக, தன் மக்களைக் காட்டிக் கொடுக்கும் துரோகப் பரம்பரையை அன்றைய ஜஸ்டீஸ் பார்ட்டியில் பார்த்தோம். இன்றைய கழகங்கள், தமிழ் நாட்டு கம்யூனிஸ்ட் வகையறாக்களிடம் பார்த்தோம் பார்த்து வருகிறோம். இவர்களுக்கு அழிவு காலம் வராது போலிருக்கிறது. ஆனால், சாமி வேலு தோற்றதில் எனக்கு பரம சந்தோஷம். அவருக்கு தமிழ் நாட்டில் மரியாதை தொடுத்தது அங்குள்ள உலகத் தமிழ் ஈனத்தலைவர் :))

Friday, March 07, 2008

சிதம்பர விவகாரம்: ஆன்மிகத்துக்கு விடுக்கப்பட்ட சவால் - அர்ஜுன் சம்பத்

சமீபத்திய சிதம்பரம் நிகழ்வுகளின் பின்னணியில் திரு. அர்ஜுன் சம்பத் இன்றைய தினமணி நாளிதழில் எழுதியிருக்கும் ஒரு அருமையான கட்டுரையை இங்கு மீள்பதிப்பிக்கிறேன்.

தமிழகத்தில் இந்து எழுச்சியின் நாயகர்களில் ஒருவரான அர்ஜுன் சம்பத் அவர்களின் கருத்து, தெய்வ நம்பிக்கை உள்ள அத்தனை தமிழர்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.

ஆன்மிகத்துக்கு விடுக்கப்பட்ட சவால் -
அர்ஜுன்சம்பத் - தலைவர் - இந்துமக்கள் கட்சி





சைவத்தின் தலைநகரம் என்று போற்றப்படும் சிதம்பரத்தில் தமிழுக்கும், சைவத்துக்கும் ஒரு மிகப் பெரிய இடைவெளியை உருவாக்கும் சதித் திட்டம் திட்டமிட்ட ரீதியில் அரங்கேறியுள்ளது. சமீபத்தில் சிதம்பரம் கோயிலில் நடைபெற்ற தேவாரம் சர்ச்சையின் நோக்கம், ஆன்மிகமாக இல்லாமல் நாத்திகவாதிகளின் கீழ்த்தரமான சதியாக இருப்பதுதான் கவலை அளிக்கிறது.

சிதம்பரம் திருக்கோயில் மனித உடலையொத்த வடிவமைப்பு உடையது. முதுகுத் தண்டு கொடி மரமாகவும், கோபுரம் இறைவனின் திருப்பாதமாகவும், சிற்சபை (நடராஜப் பெருமான் திருநடனம் ஆடுகின்ற பகுதி) இதயப் பகுதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடராஜர் தத்துவம் அணு தத்துவங்களோடு பொருந்திப் போகிறது. சிவதாண்டவம் என்னும் நடராஜரின் நடன அசைவு உலக இயக்கமாகக் கருதப்படுகிறது.


இந்தத் தில்லை வனத்தில் யோக சாஸ்திரத்தில் நிபுணத்துவம் பெற்ற பதஞ்சலி முனிவருக்கும், ஆன்மிகத்தில் பெரும் நிபுணத்துவம் பெற்ற வியாக்ரபாதருக்கும் (புலிக் கால் முனிவர்) இறைவன் தனது திருநடனக் காட்சியை அருளியிருக்கிறான் என்கிறது தலபுராணம்.


சந்தானக் குரவர்கள் நால்வரும் சமய உண்மைகளையும், ஆன்மிக வழிமுறைகளையும் இங்கே வடிவமைத்து வைத்துள்ளனர். மூவர் பாடிய தேவாரம் இந்தத் திருக்கோயிலில் உள்ள ஓர் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. மாமன்னன் ராஜராஜ சோழன், நம்பியாண்டார் நம்பிகள் துணையோடு தில்லைவாழ் அந்தணர்களின் சம்மதத்தோடு தேவார பதிக ஓலைகளை மீட்டெடுத்து தமிழ்கூரும் நல்லுலகம் எங்கும் பரவச் செய்தான்.

சைவ சமய குரவர்கள் நால்வருக்கும், தில்லைவாழ் அந்தணர்களுக்கும் எப்போதும் எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. தில்லைவாழ் அந்தணர்கள் சிவபெருமானின் அம்சமாகக் கருதப்படுபவர்கள். எனவேதான் சுந்தரமூர்த்தி நாயனார் "திருத் தொண்டர் தொகை' பாடுகிறபோது தொண்டர்தம் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் இறைவனே "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்' என அடியெடுத்துக் கொடுக்கிறார்.

தில்லைவாழ் அந்தணர்கள் சைவத்துக்கும், தமிழுக்கும் பெரும் தொண்டு புரிந்தவர்கள். ஆதிசைவ அந்தணர் மரபில் தோன்றிய இவர்கள் சுத்த தமிழர்கள் ஆவார்கள். சந்தானக் குரவர் நால்வரில் கொடிக் கவி பாடி சிதம்பரத்தில் கொடியேற்றிய உமாபதி சிவம் தில்லைவாழ் அந்தணர் குடும்பத்தைச் சார்ந்தவர்.


பொதுவாக அந்தணர்கள் (பிராமணர்கள்) வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்பது ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் வெளிப்பாடாகும். இந்தியத் திருநாட்டின் ஆன்மா சமயத்தில் உள்ளது. சமயத்தைப் பேணுபவர்கள் அந்தணர்கள். ஆகவே அந்தணர்களை சமுதாயத்தில் இருந்து தனிமைப்படுத்திவிட்டால் இந்தியாவை எளிதாக அடிமைப்படுத்தி விடலாம் என்கிற காரணத்தால் பிராமணர்களுக்கு எதிரான கருத்துகளை வரலாற்றில் புகுத்தியுள்ளனர் ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள்.

இப்போதும் மெக்காலேயின் வாரிசுகளும், திராவிட இயக்கத்தினரும், கம்யூனிச இயக்கவாதிகளும் மேற்கண்ட பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகி பிராமணர்கள் வேறு, தமிழர்கள் வேறு என பிரசாரம் செய்துவருகின்றனர்.


கடவுள் இல்லை என்று சொல்கிற நாத்திகர்கள், சிதம்பரம் கோயில் வழிபாட்டு முறைகளில் சீர்திருத்தம் செய்ய முயற்சிப்பது நமது சமய நம்பிக்கைகளை அழிக்கும் முயற்சியாகும்.

சிதம்பரம் கோயிலில் சிற்சபை (சிற்றம்பலம்) என்பது இறைவனின் கருவறையாகும். சிற்சபைக்கு முன்பு பொற்சபை (பொன்னம்பலம்) உள்ளது. வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத வகையில் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மட்டும்தான் அனைவரும் சாதிபேதமின்றி கருவறை (சிற்சபை) வரை சென்று இறைவனை வழிபடலாம்.

பாரம்பரியமாக தேவாரம் பாடுவதற்கு அங்கே இடமிருக்கிறது என்பது மட்டுமல்ல, தேவாரம் தினசரி பாடவும்படுகிறது. காசி திருப்பனந்தாள் திருமடத்திலிருந்து ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு திருமுறை பாராயணம் நடைபெறுகிறது என்பது அன்றாடம் நடைபெறும் உண்மையாகும்.
ஆனால் தற்போது சிதம்பரம் திருக்கோயிலில் தேவாரம் பாடுவதற்குத் தடை இருப்பது போலவும், சிதம்பரம் தீட்சிதர்கள் தமிழுக்கு எதிரானவர்கள் போலவும் சித்திரிக்கப்படுகிறது. சிற்றம்பல மேடை என்கிற பெயர் சிற்சபைக்கு சமீப காலத்தில் திராவிட இயக்கங்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளால் ( மகஇக) சூட்டப்பட்ட பெயராகும்.


நீண்ட காலமாகவே திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கோயில்களை அவமதிக்கும் நோக்கத்தோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள், "தில்லை நடராஜரையும், ஸ்ரீரங்கநாதரையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ, அந்நாளே தமிழகத்தின் பொன்னாள்' என்று சொல்லி இறை துவேஷத்தையும், பிராமண துவேஷத்தையும் வளர்த்து வருகிறார்கள். கடந்த 25 ஆண்டுகளாக சிதம்பரம் நடராஜர் கோயிலிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் கருவறை நுழையும் போராட்டம் என அறிவித்து ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து ரங்கநாதருக்கு செருப்பு மாலை போட்டு அசிங்கப்படுத்தி அருவெறுக்கத்தக்க செயலைச் செய்தவர்கள் இவர்கள்.

இப்படிப்பட்ட மகஇகவினரும், திராவிட கழகத்தினரும் மீண்டும் கருவறைக்குள் நுழைந்து இறைவனை அவமதிக்கும் உள்நோக்கத்தோடுதான் ஆறுமுகசாமி என்கிற ஓர் ஆன்மிகவாதியை முன்னிறுத்தி சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடவேண்டும் என்கிற போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றக் கூடிய மரபுகளையும், சமய நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் மீற வேண்டும் என்பது இவர்கள் நோக்கம். குறிப்பாக ஹிந்துக் கோயில்களை சர்ச்சைக்குரிய இடங்களாக மாற்றுவது இவர்களின் குறிக்கோள். அதற்கு ஆறுமுகசாமி உள்ளிட்ட சில ஆன்மிகவாதிகளும் பலியாகியுள்ளனர். ஊடகங்கள் போராட்டம் நடத்தும் மகஇகவினரையும், திராவிட இயக்கத்தவரையும் சிவனடியார்கள் எனக் குறிப்பிடுவதுதான் வேடிக்கை.

இறைமறுப்புக் கொள்கை உடையவர்களும், மத நம்பிக்கை இல்லாதவர்களும் ஆன்மிக விஷயங்களில் தலையிட வேண்டிய அவசியம் என்ன? தமிழுக்காக என்கிற கோஷம்தான் காரணம் என்றால், ஏனைய மதங்களிலும் தமிழில்தான் வழிபாடு என்று சொல்லித் தட்டிக் கேட்கும் தைரியம் இவர்களுக்கு இருக்கிறதா?


சொல்லப்போனால், தமிழுக்கு மிகப்பெரிய தொண்டாற்றியிருப்பது இந்து மதம்தான். தில்லை நடராஜரை பீரங்கி வைத்துப் பிளக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பவர்கள், சிவபெருமான் புகழ்பாடும் தேவாரத்துக்கு வக்காலத்து வாங்குவது, ஆடு நனைகிறதே என்று ஓநாய் கண்ணீர் விட்ட கதையை நினைவுபடுத்துகிறது.

சிதம்பரம் திருக்கோயிலின் பூஜை உரிமைகள் தில்லைவாழ் அந்தணர்களுக்கு (தீட்சிதர்) பாரம்பரியமாக உரியதாகும். அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், அவர்களை மிரட்டி பணிய வைக்கும் முறையிலும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதுதான் உண்மை.

தில்லைவாழ் அந்தணர்களின் பாரம்பரிய உரிமையான சிதம்பரம் நடராஜர் கோயிலை, அறநிலையத்துறையின் கண்காணிப்பில் கொண்டுவர வேண்டும் என்கிற முயற்சி, திமுக ஆட்சிக்கு வந்ததுமுதலே தொடங்கியது. நகரத்தார்களின் நன்கொடைகளும், பக்தர்களின் காணிக்கையும்தான் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் பராமரிப்புக்கு உதவுகின்றன. தில்லைவாழ் அந்தணர்களின் வாழ்வும் இந்த ஆலயத்துடன் பின்னிப் பிணைந்துதான் தொடர்கிறது. இவர்களிடமிருந்து ஆலய நிர்வாகம் அரசின் பொறுப்பில் வந்தால்தான் அரசியல்வாதிகளுக்குப் பிழைப்பு நடக்கும் என்பதால், அரசியல் கட்சிகளும் இந்தப் பிரச்னையைப் பெரிதுபண்ணி தங்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள முயல்கின்றன.

சிதம்பரம் திருக்கோயிலும், தில்லைவாழ் அந்தணர்களும் தமிழர்களின் ஆன்மிக அடையாளங்கள். தீட்சிதர்களின் தாய் மொழி தமிழே. சோழ மன்னர்களுக்கு முடிசூட்டும் உரிமை தில்லைவாழ் அந்தணர்களுக்கே உரியது.


ஒருமுறை போரில் சோழ மன்னர்கள் தோற்று நாட்டை இழந்தபோது, வென்ற அன்னிய மன்னனுக்கு முடிசூட்ட மறுத்து தமிழ் மண்ணுக்கு விசுவாசம் காட்டியவர்கள் இந்தத் தில்லைவாழ் அந்தணர்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அதைப்பற்றி இவர்கள் ஏன் பேசுவதில்லை?

ஆட்சியாளர்களுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ, அதிகாரிகளுக்கோ சமய விஷயங்களில் உத்தரவு போடுவதற்கு உரிமை கிடையாது. அப்படியே பூஜை முறைகளிலும், ஆலய நிர்வாகங்களிலும் ஏதேனும் மாற்றம் செய்யவேண்டும் எனில் சமயத் தலைவர்களும், குருமார்களும், மடாதிபதிகளும், ஆதீனங்களும் கூடி முடிவெடுக்கலாம். அதுதான் முறை. இறை நம்பிக்கையற்றவர்கள், இறை வழிபாடு பற்றிப் பேசும் அருகதையற்றவர்கள்.

தமிழின் பெயரால், தேவாரத்தின் பெயரால் சிதம்பரம் கோயிலை சர்ச்சைக்குரியதாக மாற்றி வருகிறார்கள். இது இறை நம்பிக்கைக்கு விடுக்கப்பட்ட சவாலே தவிர தில்லைவாழ் அந்தணர்களுக்கு எதிரானது என்று நினைத்தால் தவறு. இந்த விஷயத்தில் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ஒன்றுபட்டு செயல்பட்டாக வேண்டும்.

திருச்சிற்றம்பலம்.

Monday, March 03, 2008

சிதம்பரம் கோயில் விவகாரம்: உண்மை என்ன?

பூலோக கைலாசம் என்றும் பெரிய கோவில் என்றும் ஆகாச ஸ்தலம் என்றும் அழைக்கப் படும் பெருமை வாய்ந்த சிதம்பரம் திருக்கோயிலில் நேற்று நடந்த அமளி, ரகளைகள் மிகவும் வருத்தம் தருகின்றன.

நேற்றும் இன்று காலையும் ஜெயா டிவியில் வந்த செய்திகளில் போலீசாருக்கும் ஆறுமுகச்சாமி ஆதரவாளர்களுக்கும் இடையில் தான் தகராறு என்றூ சொன்னார்கள். இப்போது தான் இந்தச் செய்திகளை விவரமாகப் படித்தேன் -

தினமலர்:
http://dinamalar.com/2008MAR03/frontpage-news.asp?newsid=3

தட்ஸ் தமிழ்:
http://thatstamil.oneindia.in/news/2008/03/03/tn-chidambaram-temple-issue-12-dheeksidars-arrest.html

முதலில் "தமிழுக்கு அவமரியாதை" போன்ற சொல்லாடல்கள் நகைப்பை வரவழைக்கின்றன.. .. கனகசபை மேல் நின்றுகொண்டிருக்கும் தீட்சிதர்கள் எல்லாருமே அவர்களுக்கிடையிலும், அங்கு வரும் சட்டை கழற்றிய பக்தர்களிடமும் தமிழில் தானே பேசுகிறார்கள்? தமிழில் வாங்க போங்க என்ற சாதாரணப் பேச்சே அங்கே சகஜமாக இருக்கும் போது தெய்வத் தமிழ்ப் பாசுரங்கள் பாடத் தடை இருக்கிறது என்பது பிதற்றலாக இல்லையா?

போன ஆகஸ்டு மாதம் ஆனித் திருநாளின் போது சிதம்பரத்தில் இருந்தேன்.
"சிதம்பர ரகசியம்" திரை விலக்கிக் காண்பித்த தீட்சிதர் "இதோ பாருங்கள் தங்க வில்வமாலை.. மாணிக்கவாசகர், நந்தனார் இந்த மகான்கள் எல்லாம் முக்தி பெற்ற இடம் இது தான்.. தரிசனம் செய்து கொள்ளுங்கள்" என்று அழகான தமிழில் தான் விளக்கினார்.. புனிதமான கனகசபை மீது 10 நிமிடம் நின்று சில சுலோகங்களையும் தேவாரப் பாடல்களையும் வாய்விட்டுப் பாடிக் கொண்டிருந்தேன்.. எந்த தீட்சிதரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.

பிறகு இந்த ஆறுமுகச்சாமியை மட்டும் ஏன் தடுக்க வேண்டும்? இதில் ஏதோ சூது இருக்கிறது.. இந்த ஆ.மு.சாமி உண்மையான பக்தராக இருந்தால் பக்தர்களை அல்லவா துணைக்கழைத்துக் கொண்டு போக வேண்டும்? இந்து விரோத, நாத்திக, மனித உரிமை ஆசாமிகளுக்கு தில்லைச் சிற்றம்பலத்தில் என்ன வேலை?




மேலும், இந்த கனகசபை என்பது ஒரு மண்டப மேடை போன்று இருக்கும். இதன் மேற்கூரையில் பொன் ஓடுகள் வேயப் பட்டு, சிற்றம்பலம் (சிறிய கோவில்) என்றும் அழைக்கப் படுகிறது. இங்கு 10-12 பேருக்கு மேல் நிற்கமுடியாது.. கனகசபையின் கீழிருந்து பார்த்தாலும் நடராஜரை தரிசனம் செய்யலாம். இங்கு அதிக நேரம் ஒரு குழுவினரே நின்று பாடல்கள் பாடுவது மற்ற பக்தர்கள் சபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு இடைஞ்சல் என்பதாலும் ஆ.மு.சாமி குழுவினர் அங்கு பாட அனுமதி மறுக்கப் பட்டது என்றும் கூறப்படுகிறது.

நேற்றைய சம்பவங்கள் பற்றி தீட்சிதர் ஒருவரிடம் கேட்ட போது, "ஆறு கால பூஜையின் போது நாங்களே தவறாமல் தேவாரம் பாடுகிறோம்.. தமிழ்நாட்டுல பல ஜாதிக்காரா வேற பாஷையெல்லாம் பேசறா... ஆனா வேதமந்திரம், அதன் பிறகு மற்ற எல்லாத்துக்கும் எங்களுக்குத் தாய்மொழி தமிழ் தான். எங்கள் சமூகத்திலேயே தமிழ்ப் புலவர் பட்டம் வாங்கினவா 6 பேர் இருக்கா. ஆனால் செய்திகளில் எல்லாம் இப்படி சித்தரிக்கிறாளே" என்று மனம் குமுறி ஆற்றாமையுடன் குறிப்பிட்டார்.

நேற்று ஆ.மு.சாமி தலைமையில் கனகசபைக்குள் நுழைந்த ஐந்தாறு பேர் "சாமி வாழ்க! தீட்சிதர்கள் ஒழிக!" என்று கோஷம் போட்டு அந்த தெய்வ சன்னிதியில் சில கெட்ட வார்த்தைகளையும் பேசி ஏசினர் என்றும் துக்கம் தொண்டை அடைக்கக் குறிப்பிட்டார் அவர். அரசு வக்கீல்கள் நீதிமன்ற ஆணையைக் காண்பித்ததும், அதனை ஏற்று "ஆ.மு. சாமி மற்றும் அவருடன் சிலர் வந்து பாடிக் கொள்ளட்டும், பெருங்கூட்டம் வந்தால் ஏதாவது அசம்பாவிதம் நிகழலாம்" என்று அரசு ஆணையை மதித்து தீட்சிதர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் ஏளனச் சிரிப்புடன் இந்தக் கும்பல் நுழைவது கண்டு பொறுக்காத முதிய தீட்சிதர் ஒருவர் அவரைத் தடுக்கப் போகத் தான், காவலர்கள் குண்டுக் கட்டாக தீட்சிதர்களைத் தூக்கி வெளியேற்றப் போய் அமளியாயிற்று.

ஆனால் காவல்துறை அடாவடி செய்த ஆ.மு.சாமி ஆதரவாளர்களோடு 10 தீட்சிதர்களையும் கைது செய்து கடலூர் சிறையில் வைத்துள்ளது. இது அராஜகத்தின் உச்சகட்டம். பழந்தமிழ் மன்னர்கள் அனைவரும் மதித்துப் போற்றிய சமயப் பெருந்தகைகளின் சந்ததியினரை மக்கள் விரோத, பாசிக கருநாநிதி அரசின் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.




"தில்லை வாழ் அந்தணர்கள் அடியார்க்கும் அடியேன்" என்று சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய காலத்திற்கும் முன்பிருந்தே, 1500 ஆண்டுகளுக்கும் மேலாக தில்லை நடராஜப் பெருமானுக்கு அடிமை செய்து வருபவை தீட்சிதர் குடும்பங்கள்.

தனது நூலின் முதல் புராணத்திலேயே சேக்கிழார் பெருமான் தில்லை வாழ் அந்தணர்களின் பெருமையைப் பலவாறு எடுத்துக் கூறுகின்றார் -

போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர் திறம் புகலல் உற்றேன்
நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக்கு உரிய தொண்டாம்
போற்றினார் பெருமைக்கு எல்லை ஆயினார் பேணி வாழும்
ஆற்றினார் பெருகும் அன்பால் அடித்தவம் புரிந்து வாழ்வார்

வரு முறை எரி மூன்று ஓம்பி மன்னுயிர் அருளால் மல்க
தருமமே பொருளாக் கொண்டு தத்துவ நெறியில் செல்லும்
அருமறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று வல்லார்
திரு நடம் புரிவார்க்கு ஆளாம் திருவினால் சிறந்த சீரார்

செம்மையால் தணிந்த சிந்தைத் தெய்வ வேதியர்கள் ஆனார்
மும்மை ஆயிரவர் தாங்கள் போற்றிட முதல்வனாரை
இம்மையே பெற்று வாழ்வார் இனிப் பெறும் பேறு ஒன்று இல்லார்
தம்மையே தமக்கு ஒப்பான நிலைமையால் தலைமை சார்ந்தார்

(பெரிய புராணம், தில்லை வாழ் அந்தணர் புராணம், 2.1.3, 2.1.5, 2.1.8)

செங்கோல் மன்னனான ராஜராஜ சோழன் நம்பியாண்டார் நம்பிகளின் துணையோடு சென்று தில்லையில் ஓர் அறையில் வைத்துப் பூட்டப் பட்டிருந்த தேவார ஏடுகளை வேண்ட, தில்லைவாழ் அந்தணர்கள் அதனை இயற்றிய மூவர் வந்தாலன்றி அவற்றைத் தரமாட்டோம் என்று இயம்பினர். மாமன்னனான ராஜராஜன் உடனடியாக அரசாணை பிறப்பித்தானா? இல்லை, அவர்கள் சொல்லை ஏற்று அப்பர்,சுந்தரர், சம்பந்தர் திருமேனிகளை உருவாக்கி எடுத்துவந்து அவர்கள் முன் எழுந்தருளிச் செய்ய, அதனை ஏற்ற தில்லை வாழ் அந்தணர்கள் மனமுவந்து திருமுறைச் சுவடிகளை மன்னனுக்கு அளித்தனர்.

சேக்கிழார் காலத்தில் மூவாயிரராக இருந்த இந்த சமூகம் காலவசத்தால் குறுகித் தேய்ந்து இப்போது 100 குடும்பங்களே இருக்கின்றன. சிதம்பரம் திருக்கோயிலின் ஆகம விதிகளின் படி பூஜைகள், மற்ற மரபுகளை நாள்தவறாமல் நடத்தி வைத்து வருவது மட்டுமே இவர்களது முழு நேர வாழ்க்கைப் பணி.

தில்லைத் திருக்கோயில் தீட்சிதர்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பது இந்து விரோதிகள், கோவில் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதை தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் வெற்றிகரமாக நடத்திய திமுக கட்சி ரவுடிகள், திராவிட இயக்க பாசிஸ்டுகள் இப்படிப் பலரது கண்களையும் உறுத்திக் கொண்டிருக்கிறது. இத்தகைய சம்பவங்கள் மூலம் தீட்சிதர்கள் பற்றிய ஒரு வெறுப்புணர்ச்சியையும், காழ்ப்புணர்வையும் உருவாக்கி பின்னர் இதைக் காரணம் காட்டி சிதம்பரம் கோயிலை அரசு கையகப் படுத்தும் சூழலை உருவாக்குவதற்கான சதித்திட்டத்தின் ஒரு அங்கம் தான் இது. இப்படி அரசு கட்டுப்பாட்டுக்குள் வந்து சீரழிந்த கோவில்கள் பற்றிய பல உதாரணங்கள் நம்மிடையே உள்ளன.

எனவே, உலகெங்கும் வாழும் தில்லைக் கூத்தனின் பக்தர்களும், சைவ அன்பர்களும், இந்துமத அபிமானிகளும், இந்து இயக்கங்களும், சிதம்பரம் நகர மக்களும் இந்த சதித் திட்டத்தை எதிர்த்து முறியடிக்க வேண்டும்.

மேலும், ஒரு சில தீட்சிதர்களின் ஒரு சில நடவடிக்கைகள் (பான் பராக் போடுவது, பணக்காரர்களிடம் ஓவராகக் குழைவது இப்படி) கோயிலுக்கு வரும் பக்தர்களின் மனதில் அவர்கள் மேல் உள்ள மரியாதையைக் குறைக்கும் விதமாக உள்ளன. இதனைக் கண்ணுறும் உள்ளூர் மக்களுக்கும் அவர்கள் மேல் மதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது. அந்த சமூகத்தின் பெரியவர்கள் தங்கள் பாரம்பரியத்தைக் கருத்தில் கொண்டு இது போன்ற அதிருப்தி அலைகள் உருவாகாத வண்ணம், கோயிலுக்கு வரும் எல்லா பக்தர்களின் நன்மதிப்பையும் பெறும் முறையில் நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்களும் அப்போது தான் அவர்கள் சம்பந்தப் பட்ட பிரசினைகளில் தீட்சிதர்களுக்குத் துணை நிற்பார்கள்.

கோவில், பூஜை, சம்பிரதாயம் என்பதிலேயே மூழ்கி, தங்கள் வாழ்வுரிமையும், கலாசார உரிமைகளும் பறிக்கப் படுவதைக் கூட புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கிறது தீட்சிதர்கள் சமூகம். இந்நிலையில் இந்த இந்த விவகாரத்தில் அவர்கள் தரப்பு நியாயத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் கடமை ஊடகங்களுக்கு உள்ளது. அவை தங்கள் கடமையை நிறைவேற்றுமா?

பிற்சேர்க்கை:

சிதம்பரம் விவகாரத்தில் தீட்சிதர்கள், கோயில்களில் பக்தியுடன் வழிபடும் இந்துக்கள் இவர்கள் தரப்பில் சரிவர நீது வழங்கப் படவேண்டும் என்று கோரி உயர்நீதி மன்றத்திற்கு ஒரு மனு சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.

இந்தப் பதிவைப் படிப்பவர்கள் தயவு செய்து இணையம் மூலம் இந்த மனுவில் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் - http://www.petitiononline.com/Rudhram/petition.html.