Tuesday, May 06, 2008

கீதை இந்துமதநூலா, தத்துவநூலா?: எதிர்வினை

கீதைவெளி என்ற தனது சமீபத்திய பதிவு ஒன்றில் "கீதை எக்காலத்திலும் ஒரு மத நூலாகக் கருதப் படக் கூடாது. தத்துவ நூலாகவே கருதப் பட வேண்டும்" என்ற கருத்தை முன்வைத்து ஜெயமோகன் எழுதியிருந்தார்.

இது பற்றி கற்றறிந்த நண்பர்கள் சிலர் விவாதிக்க நேர்ந்தது. அவர்கள் முன்வைக்கும் சில முக்கிய கேள்விகளையும், விஷயங்களையும் இங்கு பதிவு செய்கிறேன். இதனை ஒரு கடிதமாக ஜெயமோகனுக்கும் அனுப்பியிருக்கிறேன்.

ஹரி கிருஷ்ணன்:

// ஜெ.மோ: புத்தகத்தின் மீது மரியாதை உள்ள கீழைநாட்டினன்தான் நானும்" என்று கூறும் நடராஜ குரு, "அதன் முதல்வரியைப் படி" என்கிறார். நித்யா படிக்கிறார். "கீதை இந்துமதத்தின் புனித நூல்" என்று முதல்வரி. நடராஜகுரு "பிரஸ்தானத் திரயம் என்றால் என்ன தெரியுமா?" என்று நித்யாவிடம் கேட்கிறார். நித்யா, "உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், கீதை" என்கிறார். "இப்போது நீயே கூறினாய் கீதை மூன்று தத்துவ நூல்களில் ஒன்று என்று. அது மத நூல் என்று இவர் கூறுகிறார். மதநூலா தத்துவநூலா, எது சரி?" //

தெளிவான குழப்பம்.

பிரஸ்தான திரயம் என்றால் என்ன தெரியுமா என்று கேள்வி. உபநிடதம், பிரம்ம சூத்திரம், கீதை என்று பதில். 'உபநிடதம், பிரம்ம சூத்திரம், கீதை ஆகிய மூன்றும் பிரஸ்தான திரயம்' என்பது ஒரு விடை. அந்த விடை 'பிரஸ்தான திரயம்' என்றால் என்ன என்பதற்கான முழுமையான விடையாகாது. திரயம் என்றால் மூன்று. பிரஸ்தானம் என்ற சொல்லுக்கு என்ற பொருள் என்கின்ற டெஃபனிஷன் (அவர் பார்வையின்படி) சொல்லப்படவில்லை. இதைச் சொன்னால்தான் வாதத்தின் அடுத்த நிலைக்கே போகமுடியும். பிரஸ்தானம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்? அதைச் சொல்ல வேண்டாமா?

பிரம்ம சூத்திரத்துக்கு எழுதிய முன்னுரையில் டிஎம்பி மகாதேவன் இவ்வாறு சொல்கிறார். "The three basic texts of Vedanta are te Upanisads, the Bhagavad-gita and the Brahma-sutra. Together they are referred to as prasthana-traya, triple canon of Vedanta".

இந்த அடிப்படையில் பார்த்தால், கீதை ஒரு மதநூல் ஆகாது என்றால், வேதாந்தத்துக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை; வேதாந்தத்துக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை என்றால் வேததத்துக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை. பேஷ்!

(ஜடாயு: இதே canon என்ற சொல்லை மூலநூல் என்பதைக் குறிக்க முதலில் பயன்படுத்தும் ஜெ.மோ, பின்னர் கீதை "பிரஸ்தானத்ரயங்களில்" ஒன்று, ஆனால் canon அல்ல என்கிறார்.)

// ஜெ.மோ: "டாக்டர் ராதாகிருஷ்ணன் அப்படிச் சொல்லியிருக்கிறார் என்றால் உரிய காரணம் இருக்கும்" என்கிறார் நித்யா. பின்னர் டாக்டர் ராதாகிருஷ்ணனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு நித்யாவுக்கு கிடைக்கிறது. சென்னை விவேகானந்தா கல்லூரியில் அவர் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றும் காலகட்டம் அது. அக்கேள்வியை ராதாகிருஷ்ணனிடமே கேட்கிறார். அவரால் பதில் கூறமுடியவில்லை. பதிப்பாளர் அவசரப்படுத்தியதனால் எழுதிய நூல் அது என்று கூறி நழுவுகிறார். நடராஜ குருவிடம் இதைக் கூறிய போது நடராஜகுரு "கவனமில்லாது எழுதப்படும் நூல்கள் ஆபத்தானவை" என்கிறார். //

உட்டாலக்கடி. எழுப்பப்பட்ட கேள்வி முன்னுரையில் ஒரு வரியைப் பற்றியது. ராதாகிருஷ்ணன் சொன்ன பதிலோ அந்த ஒருவரியைப் பற்றியது. அளிக்கப்படும் தீர்ப்போ, ராதாகிருஷ்ணன் எழுதிய முழு உரையுமே அவசரத்திலும் கவனமில்லாமலும் எழுதப்பட்டது' என்பது போன்ற ஒரு தோற்றம். டாக்டர் ராதாகிருஷ்ணனுடைய உரை காரிலிருந்து வெளியே வீசப்படவேண்டிய ஒன்று. ஏனென்றால் அது கீதையை இந்து மதத்தின் புனித நூல் என்று முன்னுரையில் ஓரிடத்தில் குறிக்கிறது. ஆகவே நாம் என்ன முடிவுக்கு வரவேண்டும்? கீதை ஒரு மதநூல் அல்ல என்றுதானே?
பிறகு, ஜெயமோகன் எழுதியிருக்கும் இந்த வரிக்கு என்ன பொருள்?

// ஜெ.மோ: மாறாக 'என்னைப்பற்றி விவாதிப்பாயாக' என்று அறைகூவும் மதநூலாக நிற்கிறது கீதை. இந்து மன அமைப்பும் சரி, இந்திய சட்டமும் சரி, அதை ஆதரிக்கின்றன. //

இப்ப இந்தக் கட்டுரையைக் காரிலிருந்து வெளியே எறியவேண்டுமானால் எறிந்துவிடலாம். கம்ப்யூடரிலிருந்து வெளியே எறிய முடியவில்லை. எப்படி அதைச் செய்வது என்று ஜெமோ சொல்லட்டும்.
மதநூலுக்கும் தத்துவ நூலுக்கும் உள்ள வேறுபாடு என்ன? தத்துவம் என்ற சொல்லுக்கு என்ன வரையறை? Philosophy, philosophical போன்ற எல்லாச் சொற்களுக்கும் தத்துவம் என்ற சொல் இணையாகுமா? தத்-துவம் (நீ அது) என்று சொல்லும்போதே அதற்குள் இந்து மதம் வந்துவிடுகிறதே, அதன்பிறகு, தத்துவநூல் என்று அதைச் சொன்னால் 'அது இந்து மதத்தின் புனிதநூல்' என்ற ஒரே வரியில் தரநிர்ணயம் செய்யப்பட்டு வெளியில் வீசப்பட்ட உரையின் கதிக்கு இதுவும் ஆளாகாதா?

அது ஒருபக்கம். தத்துவம் என்ற சொல்லைப் பொதுவான ஒன்றாகவே வைத்துக் கொள்வோம். திருக்குறள் தத்துவநூல் என்றால் புரிந்துகொள்ள முடிகிறது. பல குறட்பாக்களுக்கு மதம் சாராமல் விளக்கம் தரமுடியாது என்றபோதிலும். விதுரநீதி, அர்த்த சாஸ்திரம், Art of War எல்லாமும் தத்துவங்களை, மதம் கடந்த தத்துவங்களை, எடுத்துச் சொல்கின்றன என்று சொன்னால்கூட புரிந்துகொள்ள முடிகிறது. கீதையோ 'எல்லா தர்மங்களையும் விட்டுவிட்டு என்னையே சரண்புகு' என்று சொன்ன நூல். அப்படியானால், கடவுளுக்கும், கடவுளைச் சரண்புகுவதற்கும் மதத்துக்கும்--மிகக் குறிப்பாக இந்து மதத்துக்கும்--சம்பந்தமில்லை என்று சொல்லலாம்.

// ஜெ.மோ: தினம் காலை ஒரு சுலோகம் படித்து கும்பிடும் பக்தர்கள் தவிர வேறு எவரும் கீதையைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கும் போதே இந்த பிரம்மாண்டமான விவாதப்பரப்பில் ஒரு குரலாக ஆகிவிடுகிறார்கள். //

இதுவும் எனக்குப் புரியவில்லை. பகவத் கீதையை யாராவது வழிபடுகிறீர்களா? அன்றாடமோ அல்லது வாரம் ஒருமுறையோ அதிலிருந்து பாராயணம் செய்து, தூப தீபம் காட்டி, கீதையை யாராவது கும்பிடுகிறீர்களா? அது என்ன குரு கிரந்த ஸாஹிபா? 'கீதையின்மேல் ஒரு வழிபாட்டு உணர்வு இருக்கக் கூடாது' என்றும், 'கீதையை அன்றாடம் வழிபடும் மக்கள்'என்றும் கட்டுரையில் வேறு இடங்களில் சொல்கிறார். என்னிடம் கீதைக்கு ஆறு வேறுவேறு உரைகள் இருக்கின்றன. நான் அவற்றைப் படிக்கத்தான் பயன்படுத்துகிறேன். வழிபடுவதில்லை. எனக்கு அனுபவமில்லாத காரணத்தால் கேட்கிறேன். உங்களில் எத்தனை பேர் கீதைக்கு ஊதுவத்தி ஏற்றிவைத்து, கற்பூரம் காட்டி கன்னத்தில் போட்டுக்கொண்டு விழுந்து விழுந்து நமஸ்கரிக்கிறீர்கள்?

(ஜடாயு: கீதை மட்டுமல்ல, எல்லா நூல்களையும் கலைமகளின் வடிவமாகக் கருதி சரஸ்வதி பூஜையன்று வழிபடும் மரபு உள்ளது. இந்தக் கலாசாரத்தைப் பற்றி இங்கு ஜெ.மோ குறிப்பிடவில்லை, அதனை அவர் ஏளனம் செய்யவும் மாட்டார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நாவில் சரஸ்வதி உறைவது என்ற படிமம் பற்றி ஒரு ரிக்ஷாக் காரனுக்கு இருந்த புரிதல் கூட ஈவேராவுக்கு இல்லை என்று இன்னொரு கட்டுரையில் எழுதியிருந்தார்)

சேதுபதி:

சாரே, என் குழப்பமும் இதுதான்.. ஏன் தத்துவத்தையும், மதத்தையும் மிகத் தெளிவாக, தனியாகப் பிரித்து வைத்துவிட முடியுமா? 'புல்லாகிப் பூடாகி புழுவாகி,மரமாகி' என்று மாணிக்கவாசகர் உருகுவது மதம் என்றால் அப்படிப்பட்ட மதமும், பக்தி உணர்வும், ஒரு தத்துவ விசாரம் இல்லாமல் தனியாக எங்கோகாற்றிலிருந்து வருமா? எந்த வித விசாரமும் இல்லாமல் கடவுளே கதி என்றுகாலில் விழுந்து கிடப்பதற்கும் சரணாகதித் தத்துவம் என்கிறார்களே? இப்படிப்பட்ட அமைப்பு சார்ந்த சாய்வை எதிர்த்துதானே எக்ஸிஸ்டென்ஷியலிஸம் என்ற **தத்துவம்** ஒன்று கிளம்பி ஊரெல்லாம் வெறுமை பரப்பிச் சென்றது?

சரி, கீதையை மதநூல் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒரு தத்துவம் என்றுமட்டுமே வைத்துக் கொள்வோம். அப்படி கீதை மதநூல் இல்லை என்று டிக்ளேர்செய்தபின் என்ன செய்ய வேண்டும்? முதலில் அதை பக்தி நூல் ஷெல்ஃபில் இருந்து தத்துவ நூல் ஷெல்ஃபில் வைத்துவிட வேண்டுமா? என்னிடமிருக்கும் ஷெல்ஃபில் ரமணரும், சார்த்தரும் அருகருகே இருக்கிறார்கள். இனிமேல்தான் பிரிக்க வேண்டும் :-)
இப்படி வகைப்படுத்துவதன் நோக்கம் என்னவென்று எனக்கு இன்றுவரை
புரியவில்லை.

1) கீதை மத நூல் இல்லை என்று டிக்ளேர் செய்துவிட்டால் எல்லா மதத்துக்குக்காரர்களும் அதைப் படிப்பார்கள் என்ற நல் எண்ணமா?

2) கீதை போன்ற **தத்துவங்கள்** தேவைப்படும் மதம் சாராத எழுத்தாளர்கள்ஒளிந்து ஒளிந்து கீதை படிப்பதிலிருந்து விடுதலை கிடைக்கும் என்பதாலா?

3) இல்லை இப்போது டிக்ளேர் செய்துவிட்டால் இன்னும் ஐம்பது வருடங்களில்மொத்தமாக கீதை உருவானதே பைபிளிலிருந்துதான் என்று சொல்லிவிடலாம் என்பதாலா?

யாருக்காவது பிரிந்தால் விளக்குங்கள்.

பி.கு: அடுத்து ஜெமோ எது இந்து மதத்தோடு தொடர்பில்லை என்று சரியாகக் கண்டுபிடித்து 65656 என்ற நம்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புபவர்களுக்கு 'பதஞ்சலி யோக சூத்திரத்தில் நாட்டார் வழிபாடுகளின் கூறுகள்' என்ற புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

ஆனந்தர்:

ஜெயமோகன் கம்யூனிஸ்ட்டுகள் பல காலமாகச் சொல்லிவருவதைத்தான் சொல்லுகிறார்.ஹிந்து தத்துவம் என்ற ஒன்று கிடையாது. ஹிந்து மதம் என்கிற பார்ப்பனீய கருத்துமுதல்வாதம் மட்டுமே உண்டு. (ஆனால், அதே கம்யூனிஸ்ட்டுகள் பௌத்த தத்துவம் என்று பேசுவார்கள்.)
ஹிந்து மதத்தின், ஏன், கீழை நாட்டு பாகன் மதங்களின் சிறப்பே அவை அனைத்தும் தத்துவத்தின் பிண்ணணியில் இருந்து எழுந்தவை என்பதுதான். இந்து, பௌத்த, சமண, டாவோ, ஷிண்டோ, கன்ஃபூஷிய என்று அனைத்து மதங்களுமே தத்துவத்திலிருந்து எழுந்தவை. இதுதான் ஆபிரகாமிய மதங்களுக்கும் (இஸ்லாம், கிறிஸ்தவம், யூதம்), ஏனைய அறநெறிகளுக்கும் உள்ள வித்தியாசம். இது மிகவும் அடிப்படையான விஷயம். ஆனால், ஜெயமோகன் ஏன் இந்த அடிப்படையான உண்மையை அறியாதவர் போல் எழுதவேண்டும்?

ஏனென்றால், இந்த தத்துவத்தின் தொடர்பை எடுத்துவிட்டால் இருப்பது வெறும் புராணங்களும், சடங்குகளும் மட்டுமே, ஆபிரகாமிய மதங்கள் போல. அப்படிப்பட்ட குறுகிய கட்டமைப்பாக ஹிந்து மதத்தை மாற்றுவதில், மற்ற ஆபிரகாமியர்களுக்கு பல லாபங்கள் உள்ளன. தத்துவத்தின் ஆதாரம் இல்லாவிட்டால் ஹிந்து மதத்தை எளிதாக அழித்துவிடலாம். மேலும், தத்துவங்கள் இல்லாத ஹிந்து மதத்திற்கும், கிருத்துவ இஸ்லாமிய மதங்களுக்கும் வேறுபாடு இல்லை என்றும் நிறுவுவதை இது எளிதாக்கலாம்.

எனவே, ஹிந்துக்கள் மதம் மாறுவதால் எதையும் இழந்துவிட்டதாக உணரப்போவதில்லை. இது மதம் மாறுபவர்களுக்கு மிக அவசியத் தேவை. இந்த தேவையை பூர்த்தி செய்ய ஜெயமொக்கன் துணைபோகிறாரோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை .

புத்திசாலித்கனமாக, கம்யூனிஸ்ட்டுகள் செய்கின்ற அதே காரியத்தை செய்கிற ஜெயமோகன், கம்யூனிஸ்ட்டுகளை எதிர்க்கத் தேவையான காரணிகளையும் ஆதரித்துவிடுகிறார். இதுதான் ஜெயமோகன ஜாலம். மீனுக்குத் தலையை காட்டு, பாம்புக்கு வாலை காட்டு என்கிற புத்திசாலித்தனம்.
கீதையை விமர்சிப்பவர்கள் மற்ற மத நூல்களை ஏன் விமர்சிப்பதில்லை என்ற கேள்வியின் மூலம் அவர் கீதையை மதிக்கும் ஹிந்துக்கள் முக்கியமாக ஹிந்து தத்துவவாதிகளின் தேவையை பூர்த்தி செய்துவிடுகிறார். அவர்களது கண்கள் அவர் கண்காட்டி வித்தையினால் மறைக்கப்படும் மற்ற திருகுத்தாளங்களில் இருந்து மறைக்கப்படுகின்றன.

ஹிந்து தத்துவக் குழந்தைக்கு லாலிபாப் வாங்க காசு கொடுத்து வெளியே அனுப்பிவிட்டு, ஆபிரகாமிய காதலியின் கால்பிடிக்க ஜெயமோகன் போடுகிற வெற்றிகரமான ஜெயமொக்கைதான் ஹிந்து மதத்திற்கு தத்துவங்களோடு தொடர்பற்றவை என்கிற கருத்துக்களும்.

ஜடாயு:

// ஜெ.மோ: கீதை மூலநூல் என்றால் கீதையை முழுமையாக எதிர்க்கும் ஒர் இந்து ஞானமரபை எங்கே கொண்டு சேர்ப்பது? பல்வேறு ஆதிசைவ மதங்களுக்கும் சாக்தேய மதப்பிரிவுகளுக்கும் கீதை ஏற்புடைய நூல் அல்ல. //
// ஜெ.மோ: இன்று கீதையைப் பற்றிய ஒரு விளக்கமாவது எழுதாத ஒரு இந்து அறிஞர் இல்லை என்று கூறுமளவுக்கு கீதை விளக்கங்கள் கிடைக்கின்றன. //

இந்த இரண்டு இடங்களிலும் சொல்லவருவது முரணாக உள்ளதே! இல்லாத கற்பனை இந்து ஞானமரபைப் பற்றிக் கூட ஜெ.மோ கவலைப் படுகிறார் போலிருக்கிறது!

நிற்க. கீதையை எந்த இந்து மரபும் தத்துவ அளவில் முழுமையாக எதிர்க்காது, எதிர்க்கவும் முடியாது. "உபநிஷதங்கள் பசுக்கள், அவற்றின் பாலைக் கறந்து தருபவன் கோபாலன்" என்று கீதைப் பாயிரம் கூறுகிறது. அதனால், உபநிஷதங்களின் சாரமான கீதையை *முழுமையாக* மறுக்கும் மரபு, சுருதியாகிய வேதத்தையே கருத்தளவில் மறுத்ததாகும். சுருதியை மறுப்பது இந்து மரபே அல்ல.

முரண்பாடுகள் பெரும்பாலும் சமய சம்பிரதாயங்கள் தொட்டே இருக்கும். கிருஷ்ணனை விஷ்ணு அவதாரம் என்னாமல் வேதாந்தத்தை எடுத்துரைத்த ஜகத்குருக்களில் ஒருவன் என்று கொண்டால் அந்த முரணும் கிடையாது.

சைவ தத்துவங்கள் பெரும்பாலும் கீதையுடன் இயைந்தே உள்ளன. ஜெயமோகன் குறிப்பிடும் அதே சுவாமி சித்பவானந்தர் தமது புகழ்பெற்ற திருவாசக உரையில் ஏராளமான கீதை சுலோகங்களை இயைபுக்காக மேற்கோள் காட்டுகிறார். திருமந்திரத்தையும், தாயுமானவர் பாடல்களையும் எடுத்துக் கொண்டால் அவை கூறும் எல்லா யோகசாதனை முறைகளும் அடிப்படையில் கீதை கூறுபவையே.

சாக்தம் சங்கரரின் அத்வைத வேதாந்தத்தை முற்றிலுமாக ஏற்றுக்கொண்ட ஒரு சமயமரபு. அது எவ்விதம் கீதையுடன் முரண்படும்? ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள "அண்ணா" அவர்கள் எழுதிய அழகிய கீதை உரையில் பல இடங்களில் தேவாரம், திருமுறைகள், சக்தி தந்திரங்களில் இருந்தும் மேற்கோள்கள் உள்ளன. தட்சிணாசாரம் என்றும் சாக்த மரபில் தோய்ந்த தேவி உபாசகர் அண்ணா. அவர் லலிதா சகஸ்ர நாமத்திற்கு எழுதிய உரையிலும் பல இடங்களில் கீதை மேற்கோள்கள் உள்ளன.

சேஷாசலம்:

என் கேள்வி எளிமையானது. ஏன் அது ஒரு மத நூலாகவும் அதே நேரத்தில் தத்துவ நூலாகவும் இருத்தல் கூடாது? மத நூல் என்று அறிவித்தால் அதில் தேடல் போய் விடும், பக்தி நிலைத்து விடும் எதிர்ப்பு அதிகரிக்கும் என்கிறார். ஏன் பக்தியுடன் தத்துவச் சாரத்தை அறியக் கூடாது??நம்மாழ்வாரை அப்படி அணுகுவதில்லையா? இதே லாஜிக்கின் படி நம்மாழ்வாரின் பாசுரத்திற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை, பக்திக்கும் சம்பந்தம் இல்லை .. இப்படியே போனால், ஜெயமோகனிடமிருந்து பின்வரும் பொன்மொழிகளை எதிர்பார்க்கலாம்.

1. கோவில் கட்டிடக் கலை, சிற்பக் கலைக்கும் இந்துமதத்திற்கும் தொடர்பு கிடையாது
2. குல தெய்வங்களுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது
3. இயற்கை வழிபாட்டிற்கும் இந்து மதத்திற்கும் தொடர்பு கூடாது
4. கோவில் பூஜைகளுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது
5. விபூதி, நாமம் ஆகியவற்றுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது
6. கோவில் பிரசாதத்திற்கும் கோவிலுக்கும் சம்பந்தம் கிடையாது
7. கோவிலுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது
8. கணவனுக்கும் மனைவிக்கும் சம்பந்தம் கிடையாது
9. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் தொடர்பே கிடையாது
10. மழைக்கும் நீருக்கும் சம்பந்தம் கிடையாது

16 comments:

Anonymous said...

ஜடாயு அவர்களே

ஆணித்தரமான கேள்விகள். நிச்சயம் ஜெயமோகன் இவற்றிற்கு நேர்மையுடன் பதில் அளிப்பார் என்று நம்புகிறேன்.

சமீபகாலமாக அதுவும் ஜெயமோகன் வலைப்பதியத் தொடங்கியதில் இருந்தே இந்து மதத்திற்கு எதிராக ஒரூ மறைமுகப் பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டு வருவதை யாரும் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும். இந்து மதத்தின் அடித்தளங்களான இந்து மதத்தின் வேர்களை அதனிடம் இருந்து பிரித்து அந்த வேருக்கும் அதன் கிளைகளுக்கும் தொடர்பில்லை என்று தீர்மானமாக நிரூபிக்க முயல்கிறார். அதற்கு ஏதேனும் மறைமுகமான உள்நோக்கம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் அவர் அதை வலியுறுத்தும் பொழுது அவர் நோக்கத்தின் மீது எழுத்தின் மீது சந்தேகத்தின் பார்வை விழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. யோகம், தியானம், பிரார்த்தனை, கோவில்கள், சிற்பங்கள், கீதை, பாசுரம், தேவாரம் என்று எந்தவிதமான இந்து மதத்தின் அடிப்படைகளுக்கும் அந்த மதத்திற்கும் சம்பந்தமேயில்லை என்று நிறுவதில் குறியாக இருக்கிறார். இதே வழிமுறையை ஒரு ஸ்டிராடச்ஜியாக பல மிஷநரிகள் காலம் காலமாகச் செய்து வருவதை நாம் அறிவோம். யோகம், கீதை, உபநிடதம், வேதம், பரதம், சிற்பம், ஆகியவற்றை நீக்கி விட்டால் இந்து மதமும் எந்த வித அடிப்படையும் இல்லாத காலி டப்பா என்று நிறுவுவதில் கிறிஸ்துவ மிஷநரிகளுக்கு நிறைய அனுகூலங்கள் உள்ளன.குல தெய்வங்களை நாட்டார் தெய்வம் என்று அழைத்து அதை இந்து மத நம்பிக்கைகளின் அடிப்படையில் இருந்து பிரிக்க முயல்வதும், இந்துக் கோவில்களையெல்லாம் பொளத்த, ஜைனர் கோவில்கள்தான் என்று நிரூபிக்க முயல்வதும் மற்றொரு சதித் திட்டம், இதை பல போலி வரலாற்று அறிஞர்களும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். இப்பொழுது அந்த கும்பலில் புதிதாக மிஷநரிகளுக்கு ஒரு புதிய ரெக்ரூட் கிடைத்திருக்கிறது போலத் தெரிகிறது.

மரத்தில் இருந்து வேரை நீக்க வேண்டும் என்கிறார், நீரில் இருந்து ஆக்சிஜனைப் பிரிக்க வேண்டும் என்க்கிறார், உடம்பில் இருந்து உயிரைத் தனியாக எடுக்க வேண்டும் என்கிறார், கடலில் இருந்து நதியை விலக்க வேண்டும் என்கிறார், ஏன் இந்தப் பிடிவாதம் இதன் நோக்கம் என்ன?

சில தினங்களுக்கு முன்பாக சிறில் அலெக்ஸ் என்னும் கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவர் தனது ப்ளாகில் தாய் மதம் திரும்பும் முயற்சியை அதாவது கிறிஸ்துவராக மாறிய இந்துக்கள் தங்கள் தாய் மதம் திரும்பியதைக் கடுமையாகக் கண்டித்துக் கேள்வி எழுப்பியிருந்தார். எது தாய் மதம் என்று. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இவர்கள் செய்து வந்த இழிசெயலான மதமாற்றத்தை ஒரு அர்ஜ்ஜுன் சம்பத் தடுக்கக் கிளம்பியவுடன் வந்த ஆத்திரத்தில் எது தாய் மதம் என்று கேட்டிருந்தார். அதே பதிவில் இந்து மதத்தின் பின்னணியில் இருந்து தத்துவங்கள் தனியே கொணரப் பட வேண்டும் என்றும் தன் ஆசையைக் கூறியிருந்தார். அதே விஷயத்தைத்தான் ஜெயமோகனும் மீண்டும் மீண்டும் அழுத்தி அழுத்திக் கூறுகிறார். யோகம் பிரார்த்தனை, கீதை என்ற எதுவுமே இந்து மதத்தின் அடையாளம் கிடையாது என்றூ நிரூபிக்கத் தலைகீழாய் நின்று முயல்கிறார். பாதிரியாரான சிறில் அலெக்ஸ் சொல்வதை வழிமொழிகிறார்.

எப்படீ கீதைக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் இல்லையோ, எப்படி யோகாவுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் இல்லையோ, எப்படி ஆழ்வார்களுக்கும் வைணவத்திற்கும் சம்பந்தம் இல்லையோ எப்படி நாகர்கோவிலில் உள்ள கோவிலுக்கும் இந்துவிற்கும் சம்பந்தம் இல்லையோ அதே போல பாதிரியார் சிறில் அலெக்ஸ் உருவாக்கிக் கொடுத்த இணைய தளத்தில் எழுதும் ஜெயமோகனின் கருத்துக்களுக்கும், கிறிஸ்துவ மிஷநரிகளுக்கும் அவர்கள் நோக்கத்திற்கும் சம்பந்தம் இருக்காது என்று நாமும் நம்புவோமாக.

ஆமென்.

Anonymous said...

ஜடாயு, நல்ல கேள்விகள்.

ஜெயமோகனின் இன்னொரு கருத்தும் தவறு என்பதை சுட்டிக் காட்ட விழைகிறேன்.

//கீதை ஒரு ஞான நூலாகவும் தியான நூலுமாகவும் மட்டுமே நீண்ட நாட்களாகக்
கருதப்பட்டு வந்தது. ஆகவே அது ஞானத்தேடல் இல்லாதவர்களின் பொதுக்
கவனத்திற்குக்
கொண்டுவரப்படவில்லை.கீதையை அப்படி கவனத்திற்குக் கொண்டுவந்தவர்கள்
ஜரோப்பியர்களே.//

இது வரலாற்று ரீதியாக தவறான கருத்தாகும். 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில்
ஞானேஸ்வர் கீதையை மிக விரிவாகவும் இனிய இசையோடும் மக்களின் புழங்கு
மொழியில் (மராட்டி) மொழி பெயர்த்துமக்களிடம் கொண்டு சென்றார். ஞானேஸ்வரியே பக்தி
இயக்கத்துக்கு மிகவும் பலமான ஞான அஸ்திவாரமாக விளங்கியது. ஞானேஸ்வரி-
ஏக்நாதரின் பாகவதம் துகாராமின் அபங்கம் ஆகியவை பக்தி இயக்கத்தின் பிரஸ்தான
த்ரயமாக விளங்குகின்றன. அதாவது பக்திக்கும் அது சமுதாய இயக்கமாக
செயல்படுவதற்கும் ஞானத்தூக்குமான அடிப்படை பாலமாக ஞானேஸ்வரி எனும் கீதை
விளக்க நூலே விளங்கியுள்ளது. எனவே 'பகவத் கீதை ஒரு தத்துவ நூல் அது
ஐரோப்பிய காலனிய காலகட்டத்தில் நவீன இந்து மதம் கட்டமைக்கப்படும் போது
பைபிள் போல ஒரு ஆதார நூலாக ஆக்கப்பட்டது. அதிலிருந்துதான் பொது
பிரக்ஞைக்குள் நுழைந்தது'என்பது தவறானது. (துகாராம் தமது பல அபங்கங்களில்
ஞானேச்வரிலிருந்து வாக்கியங்களை, கருத்துக்களை உருவகங்களை கையாள்கிறார்.)

Anonymous said...

// கீதையை அப்படி கவனத்திற்குக் கொண்டுவந்தவர்கள்
ஜரோப்பியர்களே.//

தவறு.

கீதை மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், இது மிக உயரிய கவனம் பெற்ற நூலாகவே பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. கீதைக்கு ஒரு தியான ஸ்லோகம் உண்டு. சின்மயாநந்தர் உரைகளைக் கேட்பவர்களுக்கு இது கட்டாயம் தெரிந்திருக்கும். மற்றவர்களுக்குத் தெரியாது என்று சொல்லவரவில்லை. சின்மயாவைக் குறிப்பிடக் காரணம், இந்த தியான சுலோகத்தைச் சொன்ன பிறகுதான் சின்மயாவின் சொற்பொழிவே தொடங்கும் என்பதனால். தியான சுலோகத்தில் இந்தக் குறிப்பிட்ட பகுதியைப் பார்க்கவும்:

ஸர்வோ பநிஷதோ காவோ தோக்தா கோபால நந்தன:
பார்த்தோ வத்ஸ: ஸுதீர்போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத்

எல்லா உபநிஷதங்களும் பசுக்களாகவும், அவற்றின் மேய்ப்பன் கோபாலனாகவும், கன்று அர்ஜுனனாகவும், கறந்த பால் கீதை என்ற அமுதமாகவும் (உள்ளன).

பசுக்கூட்டங்களிடமிருந்து பாலைக் கறக்க, அவற்றின் கன்று அருகில் இருந்தால்தான் ஆகும் என்பதைப் போல், அர்ஜுனனை ஒரு சாக்காக வைத்து கோபாலன் இந்த கீதையாகிய பால் அமுதத்தை நமக்கு எல்லா உபநிஷதங்களிடமிருந்தும் கறந்து தந்திருக்கிறான்.

இந்த தியான ஸ்லோகத்தை மதுசூதன சரஸ்வதி இயற்றியதாக சின்மயா சொல்வார். இவருடைய காலம் எனக்குத் தெரியாது. ஆனால் இந்த தியான சுலோகத்தைப் பாராயணம் செய்யும் பழக்கம் ராமகிருஷ்ண மடத்திலும் உண்டு.

இப்படி, எல்லா உபநிஷதங்களின் சாரம் என்று மிகப் பன்னெடுங்காலமாக இந்த மண்ணில் சொல்லப்பட்டு வரும் ஒன்றை, 'மதத்துக்குத் தொடர்பில்லாத தத்துவ நூல்' என்று சமஸ்கிருதத்தை நன்கு படித்தறிந்தவரான ஜெயமோகன் சொல்கிறார். படித்தவர் பிழைபடப் பேசுவது, அல்லது, வேறொரு தோற்றம் ஏற்படும்படியாக, உணர்ந்தோ உணராமலோ எழுதுவது பொதுத் தளங்களில் தவறான விளைவையே ஏற்படுத்தும்.

பகவத் கீதையை முதல் கட்டமாக மதத்திலிருந்து விலக்கிவிடுவோம். அடுத்த கட்டமாக என்ன நேரும்? அது எதனுடைய சாரம் என்று கருதப்படுகிறதோ அந்த உபநிடதங்கள் விலக்கப்படும். உபநிடதங்கள் எவற்றினுடைய அந்தம் என்று கருதப்படுகின்றனவோ அந்த வேதங்கள் மதத்திலிருந்து விலக்கப்படும். அதுதான் இந்த திசையில் அடிஎடுத்து வைப்பதன் விளைவாக இருக்கும்.

I am not attributing motives to Jeyamohan or anyone else. This would be the effect of this cause. அதை மட்டும்தான் சொல்கிறேன். நான் துல்லியமாகக் கணித்துச் சொல்கிறேன் என்று க்ளெய்ம் செய்துகொள்ளவில்லை. இது இப்படி நடக்கும் வாய்ப்பு இருக்கிறது என்ற அனுபவமொழி. அதைப் பகிர்ந்துகொள்கிறேன்.

- ஹரி கிருஷ்ணன்

Venkattan said...

எல்லாம் சரி. எத்தனை லட்சம் வீரர்கள் மத்தியில் இந்தப் பெரிய புத்தகத்தை பகவான் அருளும் போது எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் அதுமட்டும் அவ்வவளவு வீரர்களும் என்ன புடுங்கிக்கொண்டு இருந்திருப்பார்கள்?
இந்து மதத்தை முஸ்லிம் கிருஸ்தவ மதம் போல் ஒரு மத வெறி கொண்ட மதமாக மாற்ற வேண்டாம்.

ஜடாயு said...

// Venkattan said...
எல்லாம் சரி. எத்தனை லட்சம் வீரர்கள் மத்தியில் இந்தப் பெரிய புத்தகத்தை பகவான் அருளும் போது எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் அதுமட்டும் அவ்வவளவு வீரர்களும் என்ன புடுங்கிக்கொண்டு இருந்திருப்பார்கள்? //

குரு�க்ஷத்திர யுத்தம் போல இனியொரு யுத்தம் நடக்கப்போவதில்லை. யுத்தகளம்
என்றால் சாதராண இடமல்ல அது. 70மைல்
நீளம், 30மைல் அகலமுடையது அந்தக்களம். இந்தக்களத்திலே தான் ஒரு நொடியை
ஐந்தாகப் பிரித்து அதன் நான்கு பகுதிக்குள் 18 அத்தியாயங்கள், 700
ஸ்லோகங்கள் கொண்ட பகவத்கீதையை சொல்லி முடித்தார். பகுத்தறிவுள்ள யாராவது
ஒருவன் இதை நம்புவானா எனக் கேட்கலாம்.

இதன் உட்பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும். கேட்பவன் சரியானவனாக இருந்தால்,
சொல்லிக் கொடுப்பவனுக்கு கவலையில்லை. ஆசிரியர் சொல்லித்தரும் பாடத்தை
முதலிலேயே கவனித்து விட்டால், வீட்டில் வந்து படிக்கவே தேவையில்லை.
அப்படியே மனதில் ஆகி விடும். அது போலத்தான் அர்ஜூனன். அவன் மிகப் பெரிய
ஞானி. அந்த ஞானியின் ஞானத்தை கண்ணன் தூண்டி விடுவதற்கான நேரமே இது.மிக
இலகுவாக கண்ணனின் கருத்துக்களை புரிந்து கொண்டான். போரில் வெற்றியும்
பெற்றான்.

மேலே படிக்க, இந்த தினமலர் கட்டுரையைப் பார்க்கவும்:

நொடிக்குள் ஏழு நூறு ஸ்லோகங்கள் உபதேசம் - கீதை கண்ணனின் கின்னஸ் சாதனை

Anonymous said...

> இந்தக்களத்திலே தான் ஒரு நொடியை
> ஐந்தாகப் பிரித்து அதன் நான்கு பகுதிக்குள் 18 அத்தியாயங்கள், 700

ஜடாயு, முதல் எதிரிகள் இப்படிப்பட்ட கோணங்களில் விளக்கங்களை அளிப்பவர்கள். Their
attitude to the question is cryptic and cabalistic while their vision and
validation is extremely esoteric. அடிப்படை இல்லாத, textual backing இல்லாத
இந்த மாதிரியான விளக்கங்கள் நம்பிக்கை உள்ளவர்களின் நம்பிக்கையை பலியிடுவதைத்
தவிர வேறு எதையும் செய்வதில்லை.

விரைவான உரையாடலில் அர்ஜுனனுக்கு, சொன்னதைச் சொன்னவுடனேயே புரிந்து கொள்ளும்
திறன் பெரும் பங்கு வகித்தது என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் இருக்க
முடியாது. ஒரு வினாடியில் ஐந்தில் ஒரு பங்கு நேரத்தில் பதினெட்டு
அத்தியாயங்களை உபதேசித்தார் என்று எந்த அடிப்படையும் இல்லாமல், குறிப்பாக
பாரதம் பாகதவம் போன்ற நூல்களின் அடிப்படை இல்லாமல், இப்படிப்பட்ட மடார் தடார்
முடிவுகளுக்கு வருவதால் எந்தப் பயனும் இல்லை.


பகவத் கீதையை யுத்தரங்கத்தில் உபதேசித்திருக்க முடிந்தது சாத்தியமான
ஒன்றுதான்.

யுத்தரங்கம் என்று சொன்னால் புரியவில்லை என்று சொல்லக்கூடும். 'மாணற்ற
மன்னர்கண் முன்னே, என் வன்மையினால் யுத்தரங்கத்தின் கண்ணே, தொடையைப்
பிளந்துயிர் மாய்ப்பேன்' என்று பாரதி சொன்னால் புரிகிறது அல்லவா, அதுதான் இது.

அன்புடன்,
ஹரிகிருஷ்ணன்

Anonymous said...

மொத்த பகவத் கீதையையும் சொல்லி முடித்திருக்க 30 நிமிடங்களுக்குமேல்
ஆகியிருக்க முடியாது. காரண காரியங்களோடு சொல்லியிருக்கிறேன். இப்போதே இங்கேயே
சொல்லிவிட்டால் சுவாரசியம் போய்விடும். தமிழ் இந்து தளத்தில் இதுபற்றி விரிவாக எழுதுகிறேன்..

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்

சிறில் அலெக்ஸ் said...

அன்புள்ள அனானிமஸ் அவர்களுக்கு,

சிறில் அலெக்ஸ் ஒரு கிறீத்துவ பாதிரியார் அல்ல. பாதிரியார் ஆவதற்கு படிக்கப் போய்விட்டு இதெல்லாம் வேலைக்காவாது என ஓடி வந்தவர்.

அவர் எந்த ஒரு ஐடியாலஜிக்காகவும் உயிரைத் தர விருப்பமுள்ளவரும் அல்ல. கிறீத்துவமதத்தின் குறைகளை ஏற்றுக்கொண்டவர் அவற்றை எழுதியும் உள்ளார். ஒருபோதும் கிறீத்துவம்தான் உலகின் தலை சிறந்த மதம் என அவர் எங்கேயும் கூறிவிடவில்லை.

அவர் ஜெயமோகனுக்கு வலைத்தளம் அமைத்துத் தந்த காலத்தில் ஜெயமோகனை பரவலாக ஆர்.எஸ்.எஸ் ஆள் என்றே சொல்லக் கேள்விப்பட்டுள்ளார் ஆயினும் அதில் அவருக்கு நம்பிக்கை இருந்ததில்லை. அவர் ஒரு சிறந்த எழுத்தாள்ர் என்பததயே ஊணர்ந்திருந்தார்.

ஜெயமோகனின் கருத்துக்களை மறுத்தும் மிக நீண்ட பதிவொன்றை அவர் ஏழுதியுள்ளார் அதை ஜெயமோகனின் தளத்திலேயே காணலாம்.

முதலில் பிறருக்கு பட்டம் கட்டுவதைத் தவிர்த்து அவர்கள் சொல்வதில் ஏதேனும் நியாயம் உள்ளதா என சிந்திக்கலாம் இல்லையேல் அதை மறுத்து உங்கள் கருத்தை எழுதலாம். ஜடாயு, அரவிந்தன் பரவலாக இதைத்தான் செய்கிறார்கள்.

ஜெ.மோ ஆர்.எஸ்.எஸ் காரர் என்பது அப்புறம் அவர் கம்யூனிஸ்ட் என்பது அப்புறம் அவர் மிஷநரி என்பது என பட்டங்கள் அளிப்பது எல்லாவற்றையூம் கறுப்பு அல்லது வெள்ளை என்றே பார்க்கும் மனப்பாங்கு. உலகம் அப்படி இல்லை.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள். மக்கள் தங்களைத் தாமே அடையாளப்படுத்திக்கொள்ளட்டும். அதற்கு மேல் உங்களுக்குத் தோன்றுவதெல்லாம் உண்மை அல்ல உங்கள் கற்பனை மட்டுமே.

அன்புடன்
சிறில் அலெக்ஸ்

பி.கு: ஜடாயு, நான் கிறீத்துவ பாதிரியார் அல்ல என்பது உங்களுக்குத் தெரியாதா?

சிறில் அலெக்ஸ் said...

ஆபிரகாமிய மதங்களில் தத்துவமே இல்லை என்பதுபோல ஒருவர் சொல்லியிருக்கிறார். முற்றிலும் தவறானது. குறிப்பாக இயேசுவின் வார்த்தைகள், கதைகளின் மேல் எழுப்பப்பட்ட தத்துவங்கள் பல.

கீதையை தத்துவ நூலாக படித்து வியந்திருக்கிறேன். நானே எல்லாம் என கிருஷ்ணன் சொல்வதற்கும் நானே வழி என இயேசு சொல்வதற்கும் தொடர்பை உருவாக்குவது எளிது.

ஜடாயு சொல்வதைப்போல கீதை வழிபாட்டு நூலாக வணங்கப்படாமல் இருந்தால், அல்லது கீதை மேலான தத்துவ எதிர் விவாதங்களை ஏற்கும் நிலைகள் இருக்குமேயானால் அதை தத்துவ நூலாகவே கொள்வதில் பிரச்சனையில்லை.

என் கருத்துப்படி கீதையை மத நூலாகப் பாப்பவர்கள் பார்க்கட்டும் அதே நேரம் தத்துவ நூலாக அது உருமாறும் தகுதி உடையது. அப்படி அது உருவாகும்போது அதன் மீது வாதங்களும் விவாதங்களும் கிளை தத்துவங்களும் உலகளாவிய பொருத்துதல்களும் ஒப்பிடலும் அவசியம் நடைபெறும் அதை ஏற்பதற்கு அது மதநூல் எனும் அடையாளம் தடையாயிருக்கக் கூடாது என்பதுதான்.

அப்படி ஒரு தத்துவ நூலாக கீதையை அணுகியிருக்கிறேன்.

ஜடாயு said...

சிறில் அலெக்ஸ், உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

// பி.கு: ஜடாயு, நான் கிறீத்துவ பாதிரியார் அல்ல என்பது உங்களுக்குத் தெரியாதா? //

நீங்கள் ஒரு மொன்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறீர்கள் என்று தான் கேள்விப் பட்ட ஞாபகம்.

இந்த அனானியின் மறுமொழியில் "பாதிரியார்" என்று உங்களை இவர் அழைத்தது உங்கள் பணியைக் குறித்து அல்ல, "பிரசாரம் செய்கிறார்" என்ற அர்த்தத்தில் சொல்ல வந்தது என்றே என்று எனக்குத் தோன்றியது. "marketing evangelist" என்றெல்லாம் சொல்வதைப் போல.

ஜடாயு said...

அன்புள்ள சிறில்,

// என் கருத்துப்படி கீதையை மத நூலாகப் பாப்பவர்கள் பார்க்கட்டும் அதே நேரம் தத்துவ நூலாக அது உருமாறும் தகுதி உடையது. //

அது என்ன "உருமாற்ற" பிசினஸ்? ஆதிகாலம் முதலே கீதை தத்துவநூலாகவும் தான் பார்க்கப் பட்டிருக்கிறது.

எல்லா கீதைப் புத்தகங்களிலும், ஒவ்வொரு அத்தியாத்தின் கடைசியிலும் இப்படி ஒரு வாக்கியம் இருக்கும் -

இதி ஸ்ரீமத்பகவத்கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீகிருஷ்ணார்ஜுன சம்வாதே கர்மயோகோ நாம த்ருதீயோத்யாய: ||

"இங்ஙனம், உபநிஷதமும், பிரம்ம வித்யையும், யோக சாஸ்திரமும் ஆகிய ஸ்ரீமத்பகவத்கீதை என்ற ஸ்ரீகிருஷ்ண-அர்ஜுன உரையாடலில், கர்மயோகம் என்னும் மூன்றாம் அத்தியாயம் முற்றிற்று"

கீதைக்குத் தரப்பட்டுள்ள மூன்று அடைமொழிகளும் மிகத் தெளிவாக இதைச் சொல்கின்றன.

// அதை ஏற்பதற்கு அது மதநூல் எனும் அடையாளம் தடையாயிருக்கக் கூடாது என்பதுதான். //

இது முழுக்க மேற்கத்திய சிந்தனை மற்றும் வரலாற்றுப் பார்வை சார்ந்த அணுகுமுறை. இடைக்காலங்கள் (medieval period) முதல் இன்றுவரை ஐரோப்பாவில் நிறுவன கிறிஸ்தவம் தத்துவத்திற்கு முரணானதாகவும், எதிரியாகவுமே இருந்துவந்துள்ளது. தத்துவ வாதிகளும் மதம் பற்றி எதிர்மறையான கண்ணோட்டத்தையே கொண்டிருந்தனர். அதனால் தத்துவம், மதம் இரண்டும் முரண்பட்டவை என்ற கருத்து ஆழப் பதிந்தது.

ஆனால் இந்திய வரலாற்றில், மதமும், தத்துவமும் ஒருசேரப் பின்னிப் பிணைந்தே ஆதிகாலம் முதல் வந்துள்ளன. Arugumentative Indians என்ற தனது நூலில் அறிஞர் அமர்த்யா சென் அவர்களும் இதனைத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

உபநிஷதங்களில் தத்துவ விவாதம் மையமாக இருந்தாலும், அதற்கும் முந்தைய ரிக்வேத சம்ஹிதையிலேயே அதற்கான விதை ஊன்றப் பட்டு விட்டது.

எனவே, இந்தியச் சூழலை, இந்துமதத்தைப் பொறுத்தவரை இந்தக் கவலை அர்த்தமற்றது. "தத்துவம்" என்ற சொல்லின் மூலம் பற்றி ஹரி கிருஷ்ணன் சொல்வதைப் படித்துப் பாருங்கள்.

"தாயிற் சிறந்த தயாவான தத்துவனே" என்ற திருவாசகத்தை தினமும் ஓதி வழிபடும் மதநம்பிக்கையாளர்களைக் கொண்ட நாடு இது.

சிறில் அலெக்ஸ் said...

//இந்த அனானியின் மறுமொழியில் "பாதிரியார்" என்று உங்களை இவர் அழைத்தது உங்கள் பணியைக் குறித்து அல்ல, "பிரசாரம் செய்கிறார்" என்ற அர்த்தத்தில் சொல்ல வந்தது என்றே என்று எனக்குத் தோன்றியது. "marketing evangelist" என்றெல்லாம் சொல்வதைப் போல.//

சரிதான். இதுக்கு பாதிரியார் என்பதே பரவாயில்லை. :)

வாழ்க வழமுடன்!

கால்கரி சிவா said...

நல்ல விஷயங்களை கபளீகரம் செய்வதில் வெள்ளைகாரர்கள் மாபெரும் கொள்ளைகாரர்கள் ஆயிற்றே.

யோகத்தைப் பற்றி காரசார விவாதங்கள் இணையத்தில் நடந்து கொண்டிருக்கின்றன.

இப்போது கீதையா? என்ன அநியாயம் ஐயா இது..

கீதையை படித்தவர்களும் யோகத்தை செய்தவர்களும் மனதில் தெளிவு பெற்று உடலில் நலம் பெற்று நன்றாக வாழ்கிறார்கள்.

இதைகண்ட சில கிறித்துவ மதவாதிகளுக்கு எங்கயோ எரிகிறது.

யோகம் சாத்தானின் செயல் என கிளப்பிவிடுகிறார்கள்...ம்ம்ம்ம்ம் இவர்களைதாம் ஒரு கன்னத்தில் அறைந்தால் அடுத்த கன்னத்தை காட்டும் அன்புவழி வந்தவர்கள் என நம்பி ஏமாறுகிறோம்

Anonymous said...

Atlast, Jeyamohan has mumbled:

http://jeyamohan.in/?p=476

மதம்,ஆன்மீகம்,அவதூறு:ஒரு கடிதம்
May 22, 2008 – 10:55 am
அன்புள்ள ஜெயமோகன்

நீங்கள் எழுதிய கீதைகட்டுரைகள் குறித்து நிகழும் இந்த விவாதத்தைக் கவனித்தீர்களா? [ கீதை இந்துமதநூலா, தத்துவநூலா?: எதிர்வினை ] உங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளனவே?

ரமேஷ்

அன்புள்ள ரமேஷ்,

உங்கள் ஆதங்கம் புரிகிறது. இணைப்பை வாசித்தேன். அதில் உள்ள மறுமொழிகள் உட்பட அது ஒரு தரப்பின் குரல்.

அதில் சொல்லப்பட்டுள்ள இரு விஷயங்களைப்பற்றி சில சொற்கள்.

மதத்துக்கும் ஆன்மீகத்துக்குமான உறவை இப்போது இந்த கீதை விவாதத்தில் இணைத்துக்கொள்ள போவதில்லை. அதன் ஒருமை கெட்டுவிடும். ஆன்மீகம்X மதம் என்ற கோணத்தில் நான் ஏராளமாக பேசியிருக்கிறேன். ஆன்மீகம் என்ற சொல்லை எப்போதெல்லாம் சொல்கிறேனோ அப்போதெல்லாம் மதம் சார்ந்த பொருளில் அல்ல என்று சொல்வது என் வழக்கம். இதுவரை ஒரு தரப்பினர் கடுமையாக உழைத்து அதை தவறாகபுரிந்துகொண்டு வந்தார்கள். இப்போது அவர்களின் எதிர் தரப்பினர் அதை விட கடுமையான உழைப்புடன் தவறாகக் புரிந்துகொள்கிறார்கள்.

என் நோக்கில் ஆன்மீகம் என்பது ஒரு தேடல். முழுமையான இறுதியான புரிதல், அப்புரிதலை அனுபவமாக்கிக் கொள்ளுதல் என்ற இலக்கை நோக்கியது அது. இந்த இறுதி இலக்கை ‘ ஆத்ம சாட்சாத்காரம்’ [சுயபேறு] என்று அத்வைதம் சொல்கிறது. நிப்பானம் என்று பௌத்தம் சொல்வதன் இன்னொரு விளக்கம்தான் இது. அது மிக அந்தரங்கமான ஒரு ஆழ்பயணம். அதில் புற அமைப்புகளுக்கு பங்கு ஏதும் இல்லை.அறிதல்கள் அனைத்தையும் அந்த இலக்கை நோக்கிக் குவிப்பதையே ஆன்மீகப் பயணம் என்று சொல்கிறேன். கீதை உட்பட உள்ள மெய்ஞான நூல்களை அந்தக் கோணத்திலேயே வாசிக்க வேண்டும் என்பது என் குருமரபு எனக்குக் கற்பித்தது.

மதம் என்பது நம்பிக்கைகள்,சடங்குகள், குறியீடுகள் ஆகியவற்றின் அடிபப்டையிலான ஓர் நிறுவனம். அந்த கூறுகளை விளக்கமளித்து இணைப்பதற்காகவே அங்கே தத்துவம் உள்ளது. அது மரபின் பெரும் சேமிப்புக் கிடங்கு. அதனாலேயே அதை எவரும் நிராகரித்து விடமுடியாது. அதேசமயம் அதைக் கடந்தால் மட்டுமே ஆன்மீகப் பயணம் சாத்தியமாகும். அமைப்புகள் தேவை இல்லை என்றல்ல. அரசியலுக்கு ,கருத்துக்களை நிலைநாட்டவும் பரப்பவும் அவைதேவை. ஆனால் அவை ஆன்மீகமாக பயனற்றவையே.

இதனால்தான் ஆன்மீக ஞானிகளிடமெல்லாம் தெளிவான மத மறுப்பு அம்சத்தை நாம் காண்கிறோம். அவ்வாறு ஆன்மீக ஞானிகள் மதத்தை கடந்து செல்லும்போது மதச்சார்பானவர்கள் கொள்ளும் அதிர்ச்சியும் கொந்தளிப்பும் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. தன் இறுதிநாட்களில் வடலூர் வள்ளலார் சைவ மதத்தை தீர்மானமாக நிராகரித்தார். அதன் சாத்திரங்கள் சடங்குகள் எதிலும் சாரமில்லை என்று தான் கண்டதாகவும் அவற்றை உதறவேண்டும் என்றும் சொன்னார். அந்நாள் வரை அவரை பேணிய முதன்மைச் சீடர் தொழுவூர் வேலாயுத முதலியார் அடைந்த ஏமாற்றமும் சினமும் அடிகளையே நிராகரித்து கைவிடும்படிச் செய்தது அவரை.’கடைவிரித்தேன் கொள்வாரில்லை’ என வள்ளலார் மனம் நொந்தது அதனாலேயே.

நாராயணகுருவை அவரது அக்காலச் சீடர்களில் பெரும்பாலானவர்கள் கைவிடும்படி செய்ததும் குருவின் மத நிராகரிப்பே. தான் உருவாக்கிய அனைத்தையும் உதறி குரு இலங்கைக்கும் பின்னர் மதுரைக்கும் சென்றார். அன்று பெரும் ஆலமரமாக வளர்ந்துவிட்டிருந்த மொத்த நாராயண இயக்கத்தையே கைவிட்டுவிடுவதைப் பற்றி சிந்தனைசெய்தார். பின்னர் நாராயண இயக்கத்தையே இரண்டாகப் பிளந்து தன் மாணவர்கள் கட்டும் அடங்கிய துறவியர் அ¨மைப்பை தனியாக உருவாக்கினார். அங்கும் நில்லாமல் தன் முதன்மைச் சீடரான டாக்டர் நடராஜனிடம் ‘எந்த அமைப்புக்குள்ளும் மதத்துக்குள்ளும் நில்லாதே. பிச்சைக்காரனாக இரு…இவையனைத்தயும் விட்டு விட்டு ஓடு’ என்று வழிகாட்டினார். அவ்வாறு விட்டு விட்டு சென்று இந்தியாவெங்கும் பிச்சை எடுத்து அலைந்து டாக்டர் நடராஜன் நடராஜ குருவாக ஆனார்.

பிரம்மஞான சங்கத்தை விட்டு விலகிய ஜெ.கிருஷ்ணமூர்த்தியை , அவர் தன் கடைசிக் கணம் வரை போதித்த ஆன்மீகத்தை இவ்வாறுதான் புரிந்துகொள்ள முடியும். இவ்வாறுதான் ஓஷோவின் வசைகளையும் நக்கல்களையும் பாலியல்கதைகளையும் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இந்த மதக் குரல் எப்போதும் ஒலிப்பது. அக்குரலுடன் விவாதிப்பது எளிதல்ல. தன் முதன்மை மாணவர் தொழுவூர் வேலாயுத முதலியாரையே வள்ளலாரால் சொல்லிப் புரியவைக்க முடியவில்லையே.

**

இரண்டாவது விஷயம் சிறில் அலெக்ஸ் இந்த இணைய தளத்தை நடத்துவது பற்றியது. அவரது நல்லெண்ணம் நேர்மை ஆகியவற்றை கேள்விக்குரியதாக்குவது. என்னுடைய நேர்மையை ஐயப்படுவது. இதெல்லாம் எல்லா அரசியல் தரப்பினரும் எப்போதுமே செய்வதுதான். இதில் அரசியல்வாதிகள் நடுவே பேதமே இல்லை. அது அரசியலின் ஒரு அங்கீகரிக்கபப்ட்ட வழிமுறை.

எனக்கு கிறித்தவ திருச்சபை பணம் தந்திருக்கிறது என்று வாசித்து மகிழ்ச்சி அடைந்தேன். இதை வாசித்த பிறகாவது அவர்கள் தந்தால் ஒரு புதிய திருச்சபையை நானும் உருவாக்குவேன்- திருச்சபையின் பணம் வாங்கிய போதகர்கள் பெரும்பாலும் செய்துவருவது இதைத்தான்.

இதன் விளைவாக நடக்கப்போவது அனேகமாக ஒன்றுதான். சிறிலை இருபக்கமும் ஐயபப்டுவார்கள். மனம்சலித்து சிறில் விட்டுவிட்டுப் போவார். இந்த இணையதளம் அப்படியே நின்றுபோகும். அப்படிப் போனால் நான் இம்மிகூட கவலைப்படவும் போவதில்லை. இதையெல்லாம் சுமந்தலைவது என் வேலையுமல்ல

http://jataayu.blogspot.com/2008/05/blog-post.html

கீதை அகம்

கீதைவெளி

கீதைத்தருணம்

கீதை இடைச்செருகலா? மூலநூலா?- கடிதம்

நம்மாழ்வார்-ஒரு கடிதம்

Anonymous said...

//ஜடாயு சொல்வதைப்போல கீதை வழிபாட்டு நூலாக வணங்கப்படாமல் இருந்தால், அல்லது கீதை மேலான தத்துவ எதிர் விவாதங்களை ஏற்கும் நிலைகள் இருக்குமேயானால் அதை தத்துவ நூலாகவே கொள்வதில் பிரச்சனையில்லை.
//

பைபிளுக்கு இந்த பிரச்சினையில்லையா?

இவர்களுக்கு ஏன் எப்பொழுதும் இந்து மத சம்பந்தப்பட்ட விசயங்களுக்கு சான்றிதழ் அளிக்க வேண்டும் என்ற அரிப்பு? இவர்கள் பைபிளை படிக்கலாம், கீதையை படிக்கலாம், ஆனால் கீதை மட்டும் ஒரு மத நூல் என்று சொல்ல முடியாதாம்.

வாழ்க வமுடன்!

ஜடாயு said...

அன்புள்ள ஜெயமோகன்,

தங்களது இந்தப் பதிவில் (http://jeyamohan.in/?p=476) "..எனக்கு கிறித்தவ திருச்சபை பணம் தந்திருக்கிறது என்று வாசித்து மகிழ்ச்சி அடைந்தேன்" என்று குறிப்பிட்டிருக்கிறீகள். இந்த விஷயம் எனது பதிவில் பெயரிலியாக ஒருவர் இட்ட மறுமொழியைப் பற்றியது..

அந்த மறுமொழியுடன் நான் சுத்தமாக உடன்படவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக, பிரசுரிக்கமுடியாத unparlimentary words உடன் வரும் மறுமொழிகள் தவிர்த்து, மற்ற எல்லா மறுமொழிகளையும் பதிப்பிப்பது என் வழக்கம், கொள்கை. இந்த மறுமொழி அங்கு இருப்பதன் காரணமும் அதுவே. தங்களுக்கு இதில் ஆட்சேபம் என்றால் அந்த மறுமொழியை நீக்கி விடுகிறேன் - தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். (இதற்கு முன்பும் சில தடவைகள் இத்தகைய மறுமொழி நீக்கங்கள் செய்திருக்கிறேன்).

கருத்துக் கூறியவர்களில் ஹரி கிருஷ்ணன், சேதுபதி அருணாச்சலம் இருவரும் ஓரளவு நன்கறியப்பட்ட இலக்கியவாதிகள். அவர்கள் எந்தத் தரப்பையும் சார்ந்தவர்கள் அல்ல. ஆயினும், முதலில் "அது ஒரு தரப்பின் குரல்" "என்றும், இறுதியில் ஒரு மறுமொழியின் அடிப்படையில் "எல்லா அரசியல் தரப்பினரும் செய்வது தான்" என்றும் நீங்கள் அரசியல்தனமாக முத்திரை குத்தி நிராகரிப்பது மிகவும் வருத்தம் தருகிறது. இதில் பலியாவது அந்தக் கேள்விகள் தான். ஜெயமோகன் போன்ற ஒரு நேர்மையாளரிடம் கேள்வி தொடுத்தவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை.

மேலும், மதம் vs தத்துவம் vs ஆன்மிகம் விவாதம் கீதை பற்றிய அணுகுமுறையில் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். மதநிராகரிப்பு என்ற கருத்தை நீங்கள் முன்வைக்கும்போது கூட ஒரு "குரு மரபு" உங்களுக்குத் தேவைப் படுகிறது. இல்லையா? அந்த குருமரபு என்பதை ஒரு பிரமாணம் ஆக்குவதே இந்து மதம் (அல்லது "ஞான மரபு") தானே? இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூக சூழலில் இது சாத்தியமா?

ஜே.கே, நாராயண குரு மட்டும் அல்ல, ரமண மரிஷியும், நிஸர்கதத்த மஹராஜும் கூட எல்லாவித அமைப்புகளையும் நிராகரித்த அத்வைத ஞானிகள் தான். சிலரை மதம் சார்ந்தவர்களாகவும், வேறு சிலரை மத நிராகரிப்பாளர்களாகவும் பார்க்கத் தூண்டுவது காலத்தின் கட்டாயம் மற்றும் அணுகுமுறைச் சார்புகள் மட்டுமே.

வள்ளலார் இறுதியில் மதத்தை நிராகரித்ததாக நீங்கள் கூறுகிறீர்கள் (இதுவே விவாதத்திற்குரியது). ஆனால் மதம் அவரை நிராகரிக்கவில்லை, அவர் போற்றிய "வாழையடி வாழையடி என வந்த திருக்கூட்டமதில்" தானும் கலந்துவிட்டார்.
நாராயண குருவும் அப்படியே. அவரையும் மதம் நிராகரிக்கவில்லை. சபரிமலை தேவஸ்தானம் போகும் வழியில் உள்ள கடைகளில் எல்லாம் தெய்வச் சித்திரங்களோடு கூட அவர் திருவுருவமும் இருக்கிறது (வழிபாட்டுப் பொருளாகவோ அல்லது விற்பனைப் பொருளாகவோ).

இதில் சூழ்ச்சியையும், சதியையும் பார்ப்பது பிறழ்வு மனப்போக்கு. இத்தகைய "மத நிராகரிப்பாளர்களையும்" நிராகரிக்காமலிருப்பது மட்டுமல்ல, உயரிய இடமும் அளித்துப் போற்றும் "மதம்" ஒன்று இருக்கிறது. அதுவே இத்தகைய நிராகரிப்புகளுக்கான மனப் பாங்கையும், சூழலையும் உருவாக்குகிறது என்பது தான் உண்மை.

உறைவிடம் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் ஊர் ஊராகச் சுற்றும் vagabond களுக்கும், சாதுக்களுக்கும் எப்படி இயல்பாக இந்திய சமூகம் காலம் காலமாக இடம்கொடுத்தது மட்டுமல்ல, அவர்களை அரவணைத்தும் வந்திருக்கிறது என்பதைப் பார்க்கும்போது, இது வியப்புக்குரிய விஷயமாகத் தோன்றாது...

அன்புடன்,
ஜடாயு

பி.கு: இந்தக் கடிதத்தையும் அதே பதிவில் இன்னொரு மறுமொழியாக இடுகிறேன்