வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 1
போன மாதம், தமிழ்நாட்டில் நன்கறியப் பட்ட ஒரு ஆன்மிகப் பத்திரிகையில் ஒரு கேள்வி- பதில் வந்திருந்தது. அது பற்றிய எனது கீழ்க்காணும் கடிதத்தை பத்திரிகை ஆசிரியருக்கு அனுப்பினேன்.
அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம்.
தங்கள் இதழில் வழக்கமாக வரும் ஆன்மிக கேள்வி பதில்கள் சிறப்பாக இருக்கின்றன. மே மாத இதழில் வந்த கீழ்க்கண்ட கேள்வி-பதில் பற்றி ஒரு விமர்சனம்.
------------
கேள்வி: சித்தாந்தம் - வேதாந்தம்... விளக்கம் தருக.
பதில்: 'அந்தம்' என்ற சொல்லுக்கு, 'முடிவு' மற்றும் 'குறிக்கோள்' என்று இரண்டு அர்த்தங்கள் உண்டு. வேத நூல்களைப் பிரமாணமாகக் கொண்டு, அவை காட்டும் முடிவை ஏற்பது, வேதாந்தம் (வேத அந்தம்- வேதாந்தம்). தன் சித்தத்தின் முடிவுக்கு இசைந்து போகும் பட்சத்தில், வேதப் பிரமாணங்களையும் ஏற்பது அல்லது விடுவது... இந்த தத்துவ நெறிமுறையே சித்தாந்தம். வேதாந்தம் வடக்கின் கொடை; சித்தாந்தம் தெற்கின் கொடை!
--------------
தமிழில் எல்லா உச்சரிப்புகளும் இல்லாத காரணத்தால் Siddha என்பதையும், Chitta என்பதையும் "சித்தம்" என்றே எழுதுகிறோம்.
Siddha = சித்தி (Siddhi) என்கிற இறுதிநிலையை அடைந்தவன்
Chitta = சித்தம், அதாவது எண்ண ஓட்டங்கள் கொண்ட மனம்
சித்தாந்தம் (Siddhanta) என்கிற சம்ஸ்கிருத சொல் Siddhi + anta என்ற சொற்களால் உருவானது. உச்சரிப்புக் குழப்பத்தால் Chitta என்ற சொல்லைக் கொண்டு தவறான பொருள் கூறியிருக்கிறார் விடையளித்தவர். "சித்ததிற்கு இசைந்த வகையில்" என்றால் என்ன - "மனம் போன போக்கில்"?
சித்தாந்தம் என்பதற்கு இறுதியான தர்க்க முடிவுகளை உள்ளடக்கிய சமய தத்துவம் என்று பொருள். பல இடங்களில் சமயம் தவிர்த்த அறிவியலைக் குறிக்கவும் இச்சொல் பயன்டும்: ஜோதிஷ சித்தாந்தம், ரஸாயன சித்தாந்தம், கணித சித்தாந்தம் போல. தமிழ்ச் சூழலில் பொதுவாக "சைவ சித்தாந்தம்" என்கிற சைவ சமயப் பிரிவைக் குறிக்க இச்சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
வேதாந்தம் என்பதற்கு வேதத்தின், மெய்அறிவின் எல்லை என்பது பொருள். இந்து தத்துவங்கள் எல்லாவற்றின் உச்சம், அறுதி நிலை, பிரமாணம், வேதாந்தம் தான். வேதாந்தம் என்கிற தத்துவ அமைப்பின் மீது தான் சைவம், வைணம், சாக்தம், கௌமாரம் ஆகிய எல்லா சமயப் பிரிவுகளும் கட்டமைக்கப் பட்டிருக்கின்றன. அதனால் "வேதப் பிரமாணத்தை விடுவது" என்ற பேச்சிற்கே இந்த சமயப் பிரிவுகள் எவற்றிலும் இடமில்லை. அவை வேதாந்தத்திற்கு முரண்பட்டவை அல்ல.
"வேதாந்த, சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே" என்று இந்த ஒருமையைத் தான் தாயுமானவர் குறிப்பிடுகின்றார்.
மேலும், வடக்கு, தெற்கு என்று இந்தத் தத்துவக் கொடைகளைப் பிரிப்பதும் தவறு. வேதாந்த தத்துவத்தை நாடெங்கும் நிலைநாட்டிய ஆதிசங்கரர் தென்னாட்டில் தான் பிறந்தார். பின்னர் விசிஷ்டாத்வைதம், த்வைதம் என்கிற வேதாந்தப் பிரிவுகளை உருவாக்கிய ஆசாரியார்களும் தென்னாட்டில் பிறந்தவர்களே.
அதே போன்று சைவசித்தாந்தமும் சரி, சித்தர்கள் மரபும் சரி, பாரதம் முழுவதும் வேர்கள் கொண்டது. இமயமலையில் இருந்து வந்த சிவயோகி ஒருவரே மூலன் என்ற இடையன் உடல்புகுந்து திருமூலர் ஆகி திருமந்திரம் என்ற தத்துவக் களஞ்சியத்தை அளித்தார் என்று பெரியபுராணம் கூறும். கோரக்கர் (கோரக் நாத்) உள்ளிட்ட தமிழ்நாட்டு 18 சித்தர்கள் போன்று வடபாரதம் முழுவதும் நவநாத் (Navnath) என்னும் 9 சித்தர்கள் பற்றிய பழைய மரபு உள்ளது.
பத்திரிகைகளில் சுருக்கமாக பதில் எழுதவேண்டும் என்கிற கட்டுப்பாடு உள்ளதைப் புரிந்து கொள்கிறேன். ஆனால் அவை தவறாக இருக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அதுவும், இணையம் என்ற தகவல் களஞ்சியம் நம் கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கும்போது என்ன கவலை?
பிற்சேர்க்கையாக: Cologne Digital Sanskrit Lexicon சம்ஸ்கிருத அகராதியிலிருந்து Vedanta, Siddhanta ஆகிய சொற்களின் பொருள்.
அன்புடன்,
ஜடாயு
இந்தக் கடிதம் அனுப்பி சில நாட்களில் சம்பந்தப் பட்ட சைவ, தமிழ் அறிஞரிடமிருந்து 21 கேள்விகளுடன் ஒரு கடிதம் வந்தது, அவற்றுக்கு உங்களுக்குள்ளேயே விடை தேடுங்கள் என்ற கோரிக்கையுடன். அவருக்கு நான் எழுதிய பதில்களை, அந்த பதில் கடிதத்தில் கூறியவாறே தமிழ் இணைய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சாய்வுக் கோட்டுக் குறிக்குள் (//) இருப்பவை அவரது வினாக்கள். பின் வருபவை எனது பதில்கள்.
// அன்புடையீர், வணக்கம். தங்கள் சம்ப்ரதயமான பாராட்டுக்கு என் நிஜமான நன்றி. //
அன்புள்ள ஐயா,
வணக்கம். அது சம்பிரதாயமான பாராட்டுதல் அல்ல, இந்து தர்மத்தையும், ஆன்மிகத்தையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் தங்களைப் போன்ற ஆன்மிகவாதி ஒருவரிடமும் மிக்க மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன். அந்தப் பாராட்டு ஆத்மார்த்தமானது தான். ஒரு கேள்வி பதிலை வைத்து மட்டும் மதிப்பீடுகளை உருவாக்கும் அளவுக்கு அடியேன் மேம்போக்கானவன் அல்ல என்று சொல்லிக்கொள்ள விழைகிறேன்.
// கடின தத்துவ உண்மைத் தேடல் உலகில் மிகக் குறைவு. அது தங்களிடம் இருப்பதாக அறிகிறேன். அதற்காக நன்றி மலர்கள். தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வேத பிரமாணத்தை விடுவது என்ற பேச்சுக்கே இந்த சமய பிரிவுகள் எவற்றிலும் இடமில்லை என்பது ஓரளவு உண்மை. ஆனால் முழு உண்மையல்ல. எப்படியாவது வேதத்தை மட்டுமே உயர்த்தி பிடிக்க நினைக்கும் வெறி உள்ளவர்கள் அப்படி நினைக்கிறார்கள். விருப்பு வெறுப்பின்றி ஆய்கிறவர்கள் பல நூறு குருமார்களிடம் பழகி பாரதம் முழுவதும் பயணித்து ஓரம் சாராது உள்ளொளியில் உண்மை கண்டவர்கள் இவ்வாறு பேச முடியாது. //
மிக்க நன்றி. என்னிடம் வெறி எதுவும் இல்லை என்று நம்புகிறேன். தாங்கள் கூறுகின்ற உயர் தகுதிகள் எல்லாம் கண்டிப்பாகக் கிடையாது. என் அலுவல் மற்றும் குடும்பப் பணிகளுக்கிடையில் ஏதோ கொஞ்சம் ஆன்மிக, தத்துவ ஈடுபாடும், தமிழார்வமும் இறைவன் அருளால் கிட்டியிருக்கிறது.
// தங்களுக்கு நான் விளக்கமளிப்பதைவிட கீழ்க்கண்ட வினாக்களுக்குத் தாங்கள் விடை தேடினால், என் பதிலின் உண்மைச் சுடர் உங்களுக்கு உரைக்கும்.//
தங்கள் பல்வேறு பணிகளுக்கிடையில் சிரமமும், நேரமும் எடுத்துக் கொண்டு, ஒரு வாசகனைப் பொருட்படுத்தி இத்தனை கேள்விகளைத் தாங்கள் அனுப்பியிருப்பது வியக்க வைக்கிறது. மிக்க நன்றி.
அவற்றில் அனேகமாக எல்லாமே leading questions ஆக இருக்கின்றன என்று நினைக்கிறேன். அதாவது தாங்கள் விரும்பும் விடையை நோக்கி இட்டுச் செல்வது போல. எனக்குத் தோன்றும் விடைகளைக் கீழே எழுதியிருக்கிறேன். தங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
இந்த அருமையான தத்துவ உரையாடல் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதனால் இந்தக் கேள்விகளையும், பதில்களையும் இண்டர்நெட் வலைப் பக்கங்களிலும் பதிப்பிக்கலாமென்றிருக்கிறேன்.
கேள்விகளே வேள்விகள் ஆகும்போது, அங்கே புதிய உபநிஷதம் பிறக்கிறது.
// கேள்வி 1 : வேதத்தில் சொல்லப்பட்ட தெய்வங்கள் எத்தனை? தெய்வம் பற்றி வேதத்தின் கொள்கை என்ன? இதிலிருந்து வேதாந்தத்தின் கொள்கை ஏன் மாறியது? இப்படிப்பட்ட வேதாந்த முடிவை சைவ சித்தாந்தம் ஏற்றுக் கொண்டுவிட்டதா? //
பதில்: வேதம் கூறும் தெய்வம் ஒன்றே. “ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி” (சத்தியம் ஒன்றே; முனிவோர் அதைப் பலவாறாகக் கூறுகின்றனர்) என்று விவேகானந்தர் சிகாகோவில் மேற்கோள் காட்டிய அமுதவாசகம் இந்திரனையும், அக்னியையும், யமனையும் துதிக்கும் ஒரு ரிக்வேத சூக்தத்தில் தான் வருகிறது.
பரம்பொருள் என்றால் என்ன என்று பிரம்ம சூத்ரம் முதல் கீதை வரை கூறும் விளக்கங்கள் அனைத்தின் மூலமும் வேதத்தில் உள்ளது. “சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம” “அஸ்தி, ப்ரீதி, பாதி” (அது என்றும் இருப்பது, அன்பு வடிவானது, ஒளிப்பொருள்) ஆகிய வாசகங்கள் கர்மகாண்டம் எனப்படும் சம்ஹிதை மந்திரங்களிலேயே உள்ளன.
“ஹிந்து, பொய்யிலிருந்து உண்மைக்கல்ல, உண்மையின் ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்குச் செல்கிறான்” என்று விவேகானந்தர் கூறுவதை எண்ணிப் பார்க்கிறேன். மழையிலும், காற்றிலும், இடியிலும், இருளிலும், ஒளியிலும் தெய்வ சக்தியைக் கண்டு போற்றிய ரிஷிகள் அதனூடாகவே இவை அனைத்தின் உள்ளும் உறையும் பொருள் என்பதை அனுபூதியில் கண்டு உணர்ந்தனர்.
“வேதங்கள், உபநிஷதங்கள், சனங்கள்” என்ற எனது பழைய கட்டுரையில் இருந்து ஒரு பகுதியைக் கீழே தருகிறேன்.
“நான்கு வேதங்களிலும் சம்ஹிதா (துதிப் பாடல்கள்), பிராமணம் (யாக செயல்முறைகள்), ஆரண்யகம் (விளக்கங்கள்), உபநிஷத் (தத்துவம்) என்ற எல்லா பகுதிகளும் உள்ளன. மந்திரங்கள் ரிஷிகளின் மெய்யுணர்வில் உதித்த காலத்தில் இந்த எல்லாப் பகுதிகளிலும் உள்ள பாடல்கள் ஒன்று கலந்தே வந்தன. இத்தகைய பகுப்புகள் பின்னால் வேதவியாசரால் உருவாக்கப் பட்டவை.
உபநிஷதம் ஓரளவு படித்தவர்கள் கூட அது வேத கர்மகாண்டத்தினின்றும் வேறானது அல்ல, மாறாக அதன் தொடர்ச்சி, வளர்ச்சி, முதிர்ச்சி என்ற முடிவுக்குத் தான் வரமுடியும். சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர் இருவருமே இக்கருத்தைக் கூறியுள்ளனர். சுவாமி விவேகானந்தர் வேத சம்ஹிதைப் பகுதியில் இருக்கும் ஒரு பகுதியில் உள்ள வாசகத்தினை சுழுமுனைக்கு குறியீடாக தமது இறுதி நாளில் சீடரிடம் பேசினார். ஸ்ரீ அரவிந்தர் இன்னும் ஒருபடி மேல் சென்று சம்ஹிதை மந்திரங்களில் எல்லாம் கூட அடிநாதமாக இருப்பது உபநிஷதங்களின் வேதாந்தம் தான் என்கிற கருத்தை மிக அழுத்தமாகக் கூறுகிறார். இந்த கருத்து அடங்கிய அவரது “Hymns to the Mystic fire” என்ற நூல் மிகவும் புகழ்பெற்றது. உதாரணமாக, உபநிடதத்திலேயே மிகவும் அழகான இரட்டைப் பறவை படிமம்…..”
// கேள்வி 2 : சித்தாந்தமும் வேத மூலத்தையே கொண்டது உண்மை என்றால் வேதாந்தமே போதுமானது. சித்தாந்தம் என்ற ஒரு பிரிவு தோன்ற வேண்டிய அவசியம் என்ன?//
பதில்: நல்ல கேள்வி. சித்தாந்தம் மட்டுமல்ல, ஏன் இத்தனை சமயப் பிரிவுகள் - சைதன்யர், துகாராம், கபீர்தாசர், வள்ளலார், வல்லாபாசாரியார், ராமானந்தர், பசவேஸ்வரர் என்று ஒவ்வொரு அருளாளர்களும் தனி முத்திரை பதிக்கும் வகையில் ஒவ்வொரு பிரதேசத்திலும் வண்ணமயமான, ஒவ்வொரு பக்தி மரபுகள், சமய மரபுகள் பாரதத்தில், இந்து மதத்தில் தோன்ற வேண்டும்? காரணம் மோதல், முரண்பாடு அல்ல; இதைப் புரிந்து கொள்வது அவசியம் என்று நினைக்கிறேன்.
செமிட்டிக் (semitic) மதங்கள் போன்று “இதோ வந்துவிட்டார் தேவகுமாரன், கடவுள் அனுப்பிய தேவதூதர், இவர் சொல்வது எல்லாம் உண்மை, ஒரே வழியும், சத்தியமும், ஜீவனும்” என்றோ “உலகத்தின் *இறுதி* இறைத்தூதர், உலகம் முழுதுக்குமான ஒரே புனிதநூல்” என்றோ திடீரென்று ஒரு குழுத் தலைவர் (cult leader) தோன்றி தன் சமயத்தை நிறுவியதோ, அவரை எதிர்த்தவர்களை வன்முறை, யுத்தம், கொலைகள் மூலம் ஒழித்துக் கட்டி, எல்லாரையும் ஒட்டுமொத்தமாக அந்த மதத்தில் வாள்முனையில் சேரவைத்ததோ பாரத தேசத்தில் நடைபெறவில்லை. மதம் என்ற போர்வையில் ஆதிக்கம், அரசாட்சி, அதிகாரப் பரவல், ஆள்சேர்ப்பு இவற்றைத் தான் உலகெங்கும் இந்த மார்க்கங்கள் நிகழ்த்தின, நிகழ்த்தி வருகின்றன. அவ்வப்போது இந்த நிறுவன மத அமைப்புகளில், சில உண்மையான ஆன்மிகவாதிகளும் தோன்றுகிறார்கள், மறுப்பதற்கில்லை.
ஆனால், இந்திய கலாசாரத்தின் நடைமுறைப் படி, சமய மரபுகளை உருவாக்குபவரும், அதைப் பின்பற்றுபவர்களும் தங்கள் சமயத்தை நிலைநாட்ட வேண்டுமென்றால், ஆள் பலம் அல்ல, அதற்குப் பின் ஆழ்ந்த அனுபூதி, அந்த அனுபூதி பெற்ற ஞானியர் விளக்கும் உறுதியான தத்துவம் இவை இருக்க வேண்டும் என்பது அவசியமாகக் கருதப் பட்டது. ஏனெனில் இந்த சமயங்கள் ஒரு கூட்டத்துடன் பேசவில்லை, ஆன்மிக தாகம் கொண்ட ஒவ்வொரு தனிமனிதனிடமும் அவை பேசின.
தனிமனிதனிடமே இந்த சமயங்கள் பேசியதால், மனிதர்களின் மனப்பாங்கிற்கேற்ப வேறுவேறு விதமான சமய வழிபாட்டு முறைகள் இயல்பாகவே எழுந்தன. இந்த மட்டற்ற சுதந்திரத்தால் பல போலி, ஏமாற்று, துர்மதங்களும் தோன்றின. ஆனால் உண்மையான ஆன்மிகத் தேடல் இல்லாமல் வன்முறைச் சடங்குகள், வக்கிரங்களை முன்வைத்துப் பிழைத்த காபாலிகம், காளாமுகம், பைரவம், வாமமார்க்கம் போன்ற பயங்கர cult மதத்தவர்கள், வேதாந்த தத்துவத்தின் ஒளியால் கனன்ற சைவ, வைஷ்ணவ சமயங்களின் தத்துவ தர்க்கத்திற்கு முன் மண்டியிட்டு தீய ஆசாரங்களை விட்டொழித்தனர். இந்த சன்மார்க்கங்களில் இணைந்தும் விட்டனர்.
உபதேசங்கள் தெளிவாகவும், கட்டுக் கோப்பாகவும் இருக்கவேண்டியிருந்ததால், சமயப் பிரிவுகள் மூலதத்துவத்தை அடித்தளமாகக் கொண்டு தங்களுக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்ட ஒரு தத்துவ அமைப்பை உருவாக்கிக் கொண்டன. இந்தத் தத்துவங்கள் வெறும் நூலறிவால் மட்டும் அல்ல, அனுபூதியையும் மையமாகக் கொண்டவை என்பதால், அந்த சமயப் பிரிவின் முக்கியமான கருவே (உதாரணமாக, பக்தி, சரணாகதி தத்துவம், அடியார்களைப் போற்றுதல்) மையப் படுத்தப் பட்டது, அதனால் தான் எல்லா சமயப் பிரிவுகளிலும், எல்லாவிதமான தத்துவங்களும் இல்லை.
சைவசித்தாந்த சாத்திரங்களே மிகத் தெளிவாக தாங்கள் சாரும் நெறி அத்வைதம் என்று ஐயத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.
“பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும்
எண்ணுஞ் சுவையும்போல் எங்குமாம்-- அண்ணல்தாள்
அத்துவிதம் ஆதல் அருமறைகள் ஒன்று என்னாது
அத்துவிதம் என்று அறையும் ஆங்கு.”
“அத்துவிதம் ஆதல் அகண்டமும் தைவமே
அத்திவிதி அன்பின் தொழு!”
-சிவஞானபோதம்
சைவ, வைணவ நெறிகளை உருவாக்கியவர்கள் எவரும், செமிட்டிக் மதஸ்தாபகர்கள் போன்று “நாங்கள் ஒரு புதிய மதத்தை உருவாக்குகிறோம்” என்று கூவவில்லை. “வாழையடி வாழையென வந்த திருக்கூட்டமதில்” தங்களை இணைத்துக் கொண்டனர். “முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே” என்று திருவாசகம் சொன்னது.
“வேத பிரமாணம்” என்று நாம் கூறுவது உண்மையில் இந்தத் தத்துவ வேர்களுடன் ஒவ்வொரு இந்து சமயப் பிரிவும் தன்னை ஆழப் பிணைத்துக் கொள்ளுவதைத் தான்; வேதம் என்கிற ஒரு பழைய நூலில் உள்ள ஒவ்வொரு சொல்லையும் அதன் நேரடியான அர்த்தத்தில் அப்படியே ஏற்றுக் கொள்வதை அல்ல. அதனால் தான் ஒரே விஷயத்தைப் பற்றிய பல interpretations (வியாக்கினங்கள்) இந்து மதத்தில் உள்ளன. ஒரே கீதைக்கு இத்தனை பேர் உரை எழுதுகிறார்கள். மாறாக, செமிட்டிக் மதங்களில் புனித நூல்களின் வாசகங்கள் நேரடிப் பொருள் கொள்ளப் படுகின்றன, அவற்றில் interpretation என்ற இந்த விஷயம் இல்லை. அதனால் தான் அவை பல சமயங்களில் வெறுப்பையும், வன்முறையையும் வளர்க்கின்றன. உதாரணமாக, ஜிஹாத் என்பது மற்ற மதத்தவர்களுடன் சண்டை போட்டு அவர்களைக் கொல்வது அல்ல, அது உள்மனதில் நிகழும் ஆன்மிக, மனப்போராட்டம் என்று இஸ்லாமிய மௌல்விகளிடம் சொல்லிப் பாருங்கள். எந்த இஸ்லாமிய அறிஞரும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் (தீவிரவாதம் தலைவிரித்து ஆடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்). ஆனால் ஒரு இந்து மனத்திற்கு இத்தகைய விளக்கங்கள் இயல்பாகவே தோன்றும்..
எங்கெங்கோ போய்விட்டேன்..
// கேள்வி 3 : வேதத்தில் சிவலிங்க வழிபாடு பேசப்படுகிறதா? சிவலிங்க வழிபாடு வேதத்திற்கு முந்தியதா? பிந்தையதா? வேதப் பிராமணர்கள் ஸ்ரீ ருத்ரத்தில் குறிக்கும் ருத்ரனே சிவன் என்பதை சித்தாந்திகள் ஒப்புக்கொள்கிறார்களா? மறுக்கிறார்களா? //
பதில்:
(அ) சந்தேகமில்லாமல், கண்டிப்பாகப் பேசப் படுகிறது. “லிங்கம்” என்கிற சம்ஸ்கிருதச் சொல் முதன்முதலில் வேத மந்திரங்களில் தான் வருகிறது. இமயம் முதல் குமரி வரை எல்லா சிவபூஜைகளிலும் தவறாமல் இடம்பெறும் “நிதனபதயே நம:” என்று தொடங்கும் வேத அர்ச்சனையில் “ஊர்த்வாய நம:, ஊர்த்வலிங்காய நம:” முதல் “சிவாய நம: சிவலிங்காய நம:” “பரமாய நம: பரமலிங்காய நம:” வரை லிங்கரூபங்கள் துதிக்கப் படுகின்றன. இம்மந்திரமும், “ஸத்யோஜாதம் ப்ரபத்யாமி” என்று தொடங்கி ஐந்து முகங்களுக்குமான மூலமந்திரங்கள் மற்றும் சிவபூஜையில் ஓதும் சகல மந்திரங்களும் யஜுர்வேதத்தின் ஒரு பகுதியான “தைத்திரிய சம்ஹிதா”வில் இருந்தே தொகுக்கப் பட்டவை.
சிவலிங்க வழிபாட்டின் மூலம் வேத காலத்தில் வேள்விகளில் வணங்கப் பட்ட யூபஸ்தம்பம் (கம்பம்). சுவாமி விவேகானந்தர் மிகத் தெளிவாக இதைக் கூறியுள்ளார் –
“The Swami said that the worship of the Shiva-Linga originated from the famous hymn in the Atharva-Veda Samhit sung in praise of the Yupa-Stambha, the sacrificial post. In that hymn a description is found of the beginningless and endless Stambha or Skambha, and it is shown that the said Skambha is put in place of the eternal Brahman. As afterwards the Yajna (sacrificial) fire, its smoke, ashes, and flames, the Soma plant, and the ox that used to carry on its back the wood for the Vedic sacrifice gave place to the conceptions of the brightness of Shiva's body, his tawny matted-hair, his blue throat, and the riding on the bull of the Shiva, and so on — just so, the Yupa-Skambha gave place in time to the Shiva-Linga, and was deified to the high Devahood of Shri Shankara. In the Atharva-Veda Samhita, the sacrificial cakes are also extolled along with the attributes of the Brahman.
In the Linga Purna, the same hymn is expanded in the shape of stories, meant to establish the glory of the great Stambha and the superiority of Mahdeva.”
From: Complete-Works / Volume 4 / Translations: Prose / The Paris congress
சிவலிங்கம் பழங்குடி ஆண்குறி வழிபாட்டினின்றும் பிறந்தது என்று மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் பலர் கூறியதையும் இதே உரையில் சுவாமிஜி கடுமையாக மறுக்கிறார். பின்னாளில் வாமாசார தாந்திரீகம் ஓங்கியபோது ஆத்மா, ஜீவன், பிரம்மம் என்று எல்லா சமயக் குறியீடுகளுமே ஆண்-பெண் உறவை மையமாக வைத்து விளக்கப்பட்டபோது சிவலிங்கம் பற்றிய உருவகம் இவ்வாறு மாறியதே தவிர அதன் மூலம் அதுவல்ல என்றும் வேறு ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.
(ஆ) வேதத்தில் இல்லாத, ஆனால் அதற்கு முந்தைய வழிபாட்டு முறை என்றால், அதற்கு ஆதாரம் என்ன? இந்தியத் துணைக்கண்டத்தின் மிகப் பழைய நூல் ரிக்வேதம் என்று அனைத்து வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். சிவலிங்க வழிபாடு அதற்கும் முந்தையது என்றால் எந்த நூலில் இருக்கிறது?
(இ) “சிவன் வேறு, ருத்ரன் வேறு; சித்தாந்திகள் ஸ்ரீருத்ரத்தை மறுக்கிறார்கள்” – என்பவை சிறிதும் ஆதாரமற்ற கூற்றுகள்.
சைவத்தின் ஆணிவேரான “நம: சிவாய” என்கிற பஞ்சாட்சரத்தையே தன்னுள் அடக்கிய மகா மந்திரம் அல்லவா ஸ்ரீருத்ரம்!
“வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நாமம் நமச்சிவாயவே” என்று சம்பந்தர் பாடியதன் தாத்பர்யம் என்ன? “வேதங்களின் நடுநாயகமான யஜுர்வேதத்தின் நடுவில், நாலாம் காண்டத்தில் உள்ள ஸ்ரீருத்ரம் என்கிற துதியில், மையமாக உள்ள ஏழாவது அனுவாகத்தில் “நம: சிவாய ச, சிவதராய ச” என்கிற இந்த மாமந்திரம் வேதரத்தினம் போன்று வைக்கப் பட்டுள்ளது” என்று முழுதுணர்ந்த சைவர்கள் உணர்வர். காஞ்சி மகாஸ்வாமிகள், வாரியார் ஸ்வாமிகள் இருவருமே இந்தக் கருத்தைக் கூறியுள்ளனர்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் உருத்திர பசுபதி நாயனார். ருத்ரம் என்கிற மந்திரத்தை தினம்தோறும் ஓதி அதனாலேயே முக்தியடைந்தார் இவர் என்று பெரியபுராணம் கூறுகிறது.
“தள்ளுவெண்திரைக் கங்கைநீர் ததும்பிய சடையார்
கொள்ளும் அன்பினில் உருத்திரம் குறிப்பொடு பயின்றார்”
என்பது சேக்கிழார் வாக்கு.
வேத பிராமணர்கள் மட்டுமே இந்த மகாமந்திரத்தைப் போற்றினர் என்பதும் சரியன்று. கார்காத்த வேளாளர் நற்குடியில் அவதரித்த அப்பர் பெருமான் இந்த உத்தமமான துதியின் சாரத்தையே நின்ற திருத் தாண்டகமாகப் பாடினார். இந்தத் தாண்டகம் ஸ்ரீருத்ரத்தின் நேரடி மொழிபெயர்ப்பு போலவே அமைவது சிறப்பு. இது பற்றி சைவ, தமிழ், வரலாற்று அறிஞரும், ஆராய்ச்சியாளருமான டாக்டர் இரா. நாகசாமி அவர்கள் எழுதியிருக்கும் இந்த அருமையான கட்டுரையைப் படிக்குமாறு வேண்டுகிறேன்.
Vedic Nature of Appar’s Saivism
இந்தக் கட்டுரையின் தொடக்க வரிகள் – “The Saivite saints of Tamil country followed the Vaidika Saiva School, which later on came to be designated as the Saiva Siddhanta Marga. Innumerable references to the Vedas, Vedangas, and the Vedantic concepts in the Tevaram hymns, especially of Appar and Sambandar attest that they chose the Vedic path.."
(தொடரும்)
6 comments:
ஜடாயு,
அருமையான கேள்வி பதில்கள், தெளிவான விளக்கங்கள்.
உங்களுக்கு சைவத் திருமுறைகளில் இவ்வளவு புலமை இருக்கின்றது என்பது வியப்பளிக்கின்றது.
அடுத்த பகுதிகளையும் விரைவில் வெளியிடுங்கள்.
-சந்திரசேகரன்
// தங்கள் சமயத்தை நிலைநாட்ட வேண்டுமென்றால், ஆள் பலம் அல்ல, அதற்குப் பின் ஆழ்ந்த அனுபூதி, அந்த அனுபூதி பெற்ற ஞானியர் விளக்கும் உறுதியான தத்துவம் இவை இருக்க வேண்டும் என்பது அவசியமாகக் கருதப் பட்டது. ஏனெனில் இந்த சமயங்கள் ஒரு கூட்டத்துடன் பேசவில்லை, ஆன்மிக தாகம் கொண்ட ஒவ்வொரு தனிமனிதனிடமும் அவை பேசின.//
It is a profound statement. It is not so obvious for many practitioners of Hindu religion.
The way you have brought in this aspect, perfectly fitting it in the context of answering that question is very nice.
Bring out the other parts soon, sir. This is really very educative.
- Gangadharan
ஜடாயு எண்ணங்கள் பல்துறைகளில் என்னைவிருத்தி செய்துள்ளது. உங்கள் படைப்புக்கள் அனைத்தும் அருமை...
தேவாரங்களிலும் திருவாசகத்திலும் காணப்படும் சைவ சி்த்தாந்த கருத்துக்கள் பற்றி கூறமுடியுமா?
திருமந்திரம் கூறும் சைவமரபுகள் எவை என தெளிவுபடுத்தமுடியுமா?
bosprashanth@yahoo.com
அருமை அருமை ....
இந்திய மதக்கோட்பாடுகளைப் பற்றி எழும் கேள்விகளுகு ஒரு FAQ போல அமைதுள்ளது இந்த இடுகை
வாழ்க 21 கேள்விகள்
வாழ்க முத்து முத்தான பதில்கள்
கழுத்தளவு நீரில் உருத்திரம் படித்த நாயன்மார் கதை கேட்க்கும் போது கண்ணில் நீர் வருகிறது....
அன்புடன்
சுப்பு
திரு ஜடாயு அவர்கள் ஒரு தமிழ் சைவ அறிஞருக்கு அளித்த பதில்களின் முதற்பகுதி கண்டேன். அவற்றில் ஏற்புடையன பல உள ஏலாதனவும் உண்டு.
வேதம் போற்றும் தெய்வம் ஒன்றே பெயர்கள் வேறு என்பது ஏற்புடையது. சித்தாந்தம் என்பது சித்தி(chit)லிருந்துவரவில்லை சித்தி(siddhi) யிலுருந்து தான் வந்தது என்பதும் ஏற்புடையன. அருளாளர் உமாபதி சிவாச்சாரியார் வேதாந்தத்தெளிவாம் சைவ சித்தாந்தம் என்றே கூறுகிறார்.ஆனால் சைவசித்தாந்திகள் அத்வைதிகள் என்பது சரியல்ல. அவர்கள் அத்துவிதம் என்பது முக்தி நிலையில் பசு பரத்தோடு சேர்தல் அன்றி தான் எப்போதும் பிரம்மாக இருப்பதை உணர்தல் அன்று.
வேதத்தில் சிவ வழிபாடு வருகிறதா என்ற கேள்விக்கு ஆம் என்று சரியாக பதில் இறுத்துள்ளீர்கள்.ஆனால் சைவருக்கு ருத்திரனும் சிவமும் ஒன்று என்ற கருத்து சரியல்ல. உண்மையான சைவர் எவரும் சிவபெருமானை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன்,மகேஸ்வரன், மற்றும் சதாசிவன் ஆகியோக்கு மேலான பரம்பொருளாகவே வணங்குதல் காண்க.சைவ சித்தாந்திகள் ஸ்ரீ ருத்ரத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது உண்மையே. சிவபெருமான் மகா ருத்திரன் என்பர் அவர். பஞ்சமூர்த்திகளில் ஒருவர் குணிருத்ரர் எனப்படுவர். தமிழ் சைவர் மட்டுமன்று கருனாடத்து வீரசைவர், ஆந்திரத்து சிவாத்வைதிகள் ஏன் காசுமீரத்து சைவர் யாரும் சிவபெருமானை மும்மூர்த்திகளுல் பெரியவர் என்னாமல் வேறுபட்டவர் என்பர்.
சிவபெருமான் வேதத்தால் சதுர்த்தன் அதாவது ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகியவர்களுக்கு வேறுபட்டு மேலானவன் என்பர் ஆந்திரத்து ஸ்ரீ முடிகொண்ட னாகலிங்க ஆராத்யாயர் அவர்கள்.
திரு ஜடாயு அவர்களின் அடிப்படைக் கருத்தில் அடியேனுக்கு மாறுபாடு இல்லை எனினும் சில செய்திகள் சரியல்ல என்றே இவற்றை எழுதினேன். அவரது இணைய சமய் ஆன்மீகப் பணி சிறக்கவேண்டும்.
படிக்க படிக்க மனம் பெருமையடைகிறது.
Post a Comment