வேதங்கள், உபநிஷதங்கள், சனங்கள்
சாரு நிவேதிதாவின் தடாலடி சாய்பாபா சந்திப்பு பரவசத்தை முன்வைத்து நேசகுமார் எழுதியிருந்தது மிகவும் ரசிக்கும்படியாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருந்தது. சில விமரிசனங்கள்.
// வேதத்தின் முடிவு, சிகரம் என்றெல்லாம் புகழப்படும் வேதாந்தத்தின் மீது எனக்கு அபரிதமான மரியாதை உண்டு. ஆனால், வேதங்கள்? அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்ததில் எனக்கு இது நமக்கு விளங்காத விஷயம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். //
நேசகுமார், இதை நீங்கள் சொல்வது எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. குரானையும், ஹதீஸ்களையும், பற்பல இஸ்லாமிய இலக்கியங்களையும் சளைக்காமல் படித்துக் கரைத்துக் குடித்திருக்கும் நீங்கள் இந்த முயற்சியில் அயர்ந்து விட்டீர்களா? ஒருவேளை மேற்சொன்ன நூல்கள் போன்று “வெட்டு ஒன்று துண்டு இரண்டு” (literally) என்று உள்ள சமாசாரங்களை நீங்கள் மிக அதிகமாகப் படித்துவிட்ட பழக்க தோஷத்தால், பல தளங்களையும், பற்பல படிமங்களையும், பல்வேறு அதீத உருவகங்களையும் உள்ளடக்கிய ஆகத் தொன்மையான வேத இலக்கியத்தை நிதானமாகப் படிக்கப் பொறுமை இல்லாமல் போய்விட்டதோ?
// சாருவைப் போன்று வேதங்களை திட்டத் தோன்றாததற்குக் காரணம் – உபநிஷத்துக்கள். வேதத்தின் சாரமென்று சொல்கிறார்களே அந்த உபநிஷத்துக்கள் உன்னதமானவை, இந்த பூமியில் என்றோ இத்துனை உயர் கருத்துக்களை சிந்தித்து போதித்துள்ளார்களே, அந்த முன்னோர்களை , மகான்களை நினைத்து பெருமைப்படுகின்றேன். அதே சமயம், வேதத்தின் பக்கம் போக வேண்டாம். உபநிஷத்துக்களுடன் நமது தேடலை நிறுத்திக்கொள்வோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். //
உபநிஷதங்களும் வேதத்தின் பகுதி தான் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்கள். அதனால் இங்கே ‘வேதங்கள்’ என்று நீங்கள் சொல்ல வருவது சடங்குகள் மற்றும் தேவதைகள் பற்றிப் பேசும் கர்மகாண்டப் பகுதியை என்று எடுத்துக் கொள்கிறேன்.
நான்கு வேதங்களிலும் சம்ஹிதா (துதிப் பாடல்கள்), பிராமணம் (யாக செயல்முறைகள்), ஆரண்யகம் (விளக்கங்கள்), உபநிஷத் (தத்துவம்) என்ற எல்லா பகுதிகளும் உள்ளன. மந்திரங்கள் ரிஷிகளின் மெய்யுணர்வில் உதித்த காலத்தில் இந்த எல்லாப் பகுதிகளிலும் உள்ள பாடல்கள் ஒன்று கலந்தே வந்தன. இத்தகைய பகுப்புகள் பின்னால் வேதவியாசரால் உருவாக்கப் பட்டவை.
உபநிஷதம் ஓரளவு படித்தவர்கள் கூட அது வேத கர்மகாண்டத்தினின்றும் வேறானது அல்ல, மாறாக அதன் தொடர்ச்சி, வளர்ச்சி, முதிர்ச்சி என்ற முடிவுக்குத் தான் வரமுடியும். சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர் இருவருமே இக்கருத்தைக் கூறியுள்ளனர். சுவாமி விவேகானந்தர் வேத சம்ஹிதைப் பகுதியில் இருக்கும் ஒரு பகுதியில் உள்ள வாசகத்தினை சுழுமுனைக்கு குறியீடாக தமது இறுதி நாளில் சீடரிடம் பேசினார். ஸ்ரீ அரவிந்தர் இன்னும் ஒருபடி மேல் சென்று சம்ஹிதை மந்திரங்களில் எல்லாம் கூட அடிநாதமாக இருப்பது உபநிஷதங்களின் வேதாந்தம் தான் என்கிற கருத்தை மிக அழுத்தமாகக் கூறுகிறார். இந்த கருத்து அடங்கிய அவரது “Hymns to the Mystic fire” என்ற நூல் மிகவும் புகழ்பெற்றது.
உதாரணமாக, உபநிடதத்திலேயே மிகவும் அழகான இரட்டைப் பறவை படிமம் ரிக் வேதத்திலேயே (ரிக், 1.164) கூறப்பட்டுள்ளது. “அரச மரத்தில் அமர்ந்திருக்கும் ஒரே மாதிரியான இரு பறவைகள்: ஜீவன் மற்றும் பரமாத்மா” என்ற இந்த வேதப் படிமமே முண்டக உபநிஷதத்தில் இன்னும் அழகாக வளர்த்தெடுக்கப் படிகிறது : இவற்றில் ஒரு பறவை இனிப்பும், கசப்புமான பழங்களைத் தின்று கொண்டிருக்கிறது, இன்னொன்று அமைதியாக உட்கார்ந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இதை முழுதாக உணர்வதற்கு சம்ஹிதை மந்திரங்களின் கவிதைகளில் பொதிந்துள்ள குறீயீடுகளுடன் பரிச்சயம் வேண்டும். இது இல்லாவிட்டால் பல ஆரம்பகால ஐரோப்பிய மொழிபெயர்ப்பாளர்கள் பல வேத சம்ஹிதை மந்திரங்களுக்கு அபத்தமும், அனர்த்தமும், அதிபயங்கர ஊகங்களும் கலந்து அளித்தது போன்ற, பல சமயம் சம்பந்தமே இல்லாத, மேம்போக்கான பொருள் தான் இருப்பதாகத் தோன்றும்.
கீதை உபநிஷதங்களின் சாரம். யோகம் பற்றிய மிகத் தெளிவான சித்திரத்தை அது அளிக்கிறது. இதே கருத்துக்கள் உபநிஷதங்களில் பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன, சில நேரிடையாக இல்லாமல் மறைபொருளாக உள்ளன. இதை அப்படியே நாம் உபநிஷதங்களின் முன்னோடியான வேத சம்ஹிதைகளுக்கும் பொருத்தலாம். துதிப் பாடல்களால் ஆன ரிக்வேதம் பக்தியோகத்தையும், யாக யக்ஞங்கள் பற்றி அதிகம் பேசும் யஜுர்வேதம் கர்மயோகத்தையும், இசைவடிவான சாம வேதம் ஞான யோகத்தையும் குறிப்பதாக சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்
// திருவிடைமருதூர் கோவில் வாயிலில் பிரம்மஹத்தி உட்கார்ந்து கொண்டிருக்கும். நமது கண்ணுக்குப் புலப்படா தலித்ஹத்திகள் ஒவ்வொரு கோவில் வாயிலிலும் அமர்ந்து கொண்டிருக்கின்றன. பிராம்மணக் கொலைகளுக்காக பிரம்மஹத்திகள் நம்மை பிடிப்பது பொய்யாகக் கூட இருக்கலாம், ஆனால் இந்த தலித்கத்திகள் இருப்பது நிஜம். தலித்ஹத்திகள் நம்மை விரட்டுமுன், நாமே முன்வந்து மாற்றங்களைச் செய்தல் நலம்.//
மிக அழகான ஒப்புமை. “தலித்ஹத்தி” என்ற பதப் பிரயோகத்தை மிகவும் ரசித்தேன். உங்கள் கருத்துடன் முற்றிலும் உடன்படுகிறேன்.
// இந்து மதத்தில் இதுதான் பிரச்சினை. வேதத்தில் என்ன ரகசியம் வேண்டிக்கிடக்கிறது? எதற்கு ஒரு ஜாதி மட்டுமே படிக்க வேண்டும், பாராயணம் செய்ய வேண்டும்? … பெருவாரியான சனங்களுக்கு போய்ச்சேராத வேதங்களும், ஆகமங்களும், உபநிஷத்துக்களும், அறுவகைத்தத்துவங்களும் இருந்தால் என்ன, இல்லாவிட்டால்தான் என்ன. //
இங்கு மறுபடியும் தவறு செய்கிறீர்கள் நேசகுமார். ஒரு உணர்ச்சி மேலீட்டில் இதை எழுதிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
வேதம் ஒரு குறிப்பிட குழுவுக்கு மட்டும் உரியது என்ற கருத்து வேதங்களில் எங்குமே இல்லை. வேலைக்காரப் பெண்ணுக்குப் பிறந்த சத்யகாம ஜாபாலன் கதையை உபநிஷதத்தில் படித்திருப்பீர்கள். வேதங்களைத் தொகுத்த வியாசரே மீனவப் பெண்ணின் மகன் தான். சுக்ல யஜுர் வேதத்தின் இந்த மந்திரத்தை எடுத்துக் காட்டி சுவாமி விவேகானந்தர் இதனை அழகாக விளக்குகிறார்.
"yathA-imAm vAcham kalyaNIm AdadAmi janebhyah;
Brahma-rAjanyAbhyAm sUdrAya cha AryAya cha svAya-chAraNAya cha"
Just as I am speaking these blessed words tothe people,
in the same way you also spread these words among all men and women -
the Brahmanas, kshtriyas, vysayas, Sudras andall other,
whether they are our own people or aliens.
வேத ரிஷி கூறுகிறார் - “(சீடர்களே) நான் உங்களிடம் இந்த நலம் பயக்கும் வேத மந்திரங்களைக் கூறியது போலவே, நீங்களும் பிராமணர், அரசர், வைசியர், சூத்திரர் எல்லா மக்களிடத்திலும் இவற்றைப் பரப்புங்கள். நம் மக்களாயினும் சரி, வேறு மக்கள் ஆயினும் சரி, எல்லாரிடமும் இச்சொற்களைப் பரப்புங்கள்"
செவிவழியாகவே கற்றுக்காக்க வேண்டிய கட்டாயத்தால் காலப்போக்கில் அது ஒரு குழுவின் சொத்தாகிப் போயிருக்கலாம். வேதத்தை முதல் மூன்று வர்ணங்களுக்கு மட்டும் என்று பிறகு வந்த மனு ஸ்மிருதி ஒதுக்கிற்று, பின்னர் காலத்தின் கோலத்தால் அது ஒரு ஜாதியில் உள்ள சிலருக்கு மட்டும் என்று ஆயிற்று. ஆனால் அதன் நுட்பங்கள், மெய்ஞானம், கருத்தியல் யாவும் பெருவாரி மக்களைப் பல விதங்களில் சென்று சேர்ந்தே இருக்கிறது. திருவைந்தெழுத்து மந்திரம் போதும், அதைவிடப் பெரியது வேதத்தில் என்ன இருக்கிறதென்று சில அரைகுறைச் சைவர்கள் கேட்கலாம். ஆனால் முழுதுணர்ந்த சைவர்கள் வேதரத்தினமான பஞ்சாட்சரம் கிருஷ்ண யஜுர்வேதத்தின் ரத்தினமான ஸ்ரீருத்ரம் என்ற துதியின் மையத்தில் ரத்தினம் போன்று திகழ்கிறது என்று அறிவார்கள். கார்காத்த வேளாளர் நற்குடியில் அவதரித்த அப்பர் பெருமான் இந்த ஸ்ரீருத்ரம் என்ற உத்தமமான துதியின் சாரத்தையே நின்ற திருத் தாண்டகமாகப் பாடினார்.
வேதக் கருத்துக்கள் அவரவர்களது மொழிகளில் மக்களைச் சென்று அடைந்திருக்கின்றன எனபதே உண்மை. பல இந்திய மொழிகளிலும் உள்ள பக்தி இலக்கியம் உள்ளிட்ட பல பழைய, புதிய இலக்கியங்களை நான் படிக்கையில் இந்த எண்ணம் வலுப்பெற்றுக் கொண்டே தான் வருகிறது. பிராமணர்களது ஆதிக்கத்தையும், சாதி வெறியையும் முனைந்து எதிர்த்த கன்னட வீரசைவ பசவேஸ்வரர் கூட தத்துவம் என்று வருகையில் முழுக்க முழுக்க உபநிஷதங்களின் உபதேசத்தையே சொல்கிறார், வேதங்களை எதிர்த்தாரில்லை. திருமந்திரமும், சித்தர் பாடல்களும், வள்ளலாரும், தாயுமானவரும் அப்படியே.
சொல்லப் போனால் இப்படி நீங்கள் பேசுவதும் உங்களுடைய மேட்டிமை சிந்தனை என்பேன். ஓஷோ யோகம் பயிலும் போது தாம் தொடக்க நிலையில் சமாதி அடைந்த போது தம் உயிர் போகாமல், அவர் என்ன நிலையில் இருக்கிறார் என புரிந்து கொண்டு ஒரு மாடு மேய்க்கிற பெண் காப்பாற்றியதை குறிப்பிடுகிறார். இந்த யோக முறை குறித்து அந்த பெண்ணுக்கு தெரிந்திருந்தது குறித்து ஆச்சரியமடைகிறார். அதே போல பஞ்சாட்சர மந்திரம் சொல்லி விபூதி அணிவதால் விபூதிக்கே பஞ்சாட்சரம் என்று ஒரு பெயர் உண்டு. பல பண்டிதர்களுக்கே தெரியாத விசயம் இது. திருமுருக கிருபானந்த வாரியார் ஒருமுறை ஒரு கோவிலுக்கு போய்கொண்டு திரும்பிக்கொண்டிருந்த போது ஒரு தலித் பெண்மணி அவரிடம் சர்வ சாதாரணமாக "ஓய் சாமி எனக்கு பஞ்சாட்சரம் கொடுத்துட்டு போ" என்றாராம். வாரியார் சுவாமிகள் திக்கித்து போய் நின்றுவிட்டாராம். பிறகு திருநீறு கொடுத்துவிட்டு வந்தாராம். தமது சுயசரிதையில் கூறுகிறார். ஐயா வைகுண்டர் எந்த வேதமும் படிக்கவில்லை ஆனால் அவருடைய பல வாசகங்களில் வேத எதிரொலியை காணமுடியும். நாராயணகுரு மருத்துவ ஈழவ (நாவிதர்)குலத்தை சேர்ந்தவர் ஆனால் அவருக்கு எளிதாக (அந்த சாதீய அமைப்பிலும் அதற்கு எதிர்ப்பு இருக்கவில்லை) ஆறுவகை தத்துவங்களையும் வேதோபநிடதங்களையும் பயில முடிந்ததே!
ஆன்மிகத் தளத்தில் மட்டுமல்ல, இந்தியப் பண்பாட்டின் அடித்தளத்திலும் இருப்பவை வேதக் கருத்துக்களே அல்லவா? “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்று குழந்தைகளுக்கு இயல்பாகவே ரத்ததோடு ஊறி வரும் கருத்தின் முதல் துடிப்பு எது? “மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ” என்ற வேத வாசகங்களே அல்லவா? “தாய் மண்” (இந்தச் சொல் கண்டிப்பாக அரபியில் இருக்காது என்று சொல்லலாம்) என்று நம் மொழியிலேயே கலந்து விட்ட அந்த உணர்வு எங்கேயிருந்து வந்தது? “மாதா பூமி: புத்ரோஹம் ப்ருதிவ்யா” (இந்த பூமி என் தாய், நான் அவள் அன்பு மகன்) என்ற வேத ரிஷியின் வாக்கு தானே அது?
நமக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தவர் செய்வது போல வழவழ கண்ணாடி பேப்பரில் வேதத்தை பிரிண்ட் போட்டு கொடுக்க முடியவில்லையாக இருக்கலாம். ஆனால் எத்தனை எத்தனையோ மகான்கள், சித்த புருசர்கள், கோவில் சிலைகள் முதல் தெருவோர சாந்து பூசிய கம்பங்கள் வரை மாலையிட்ட சுமைதாங்கிகள் வரை வேதத்தினை, வேதத்தின் சாறினை, வேத முடிவில் நடம் நவிலும் விமலத்தை நம் 'பாமர' மக்களுக்கு அளித்துக்கொண்டுதான் வருகின்றன.
இவ்வளவும் சொன்னது எப்படி வேதக் கருத்துக்கள் தாமாகவே பல வடிவிலும் மக்களைச் சேர்ந்தடைந்துள்ளன என்று காட்டுவதற்காகத் தான். வேதத்தை அதன் மூல வடிவிலேயே பலதரப் பட்ட மக்களும் பயில்வதும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது, இது மேன்மேலும் பெருக வேண்டும். எல்லாத் தரப்பினரும், வேத ஞானத்தின் பங்கு தாரர்கள். வேத ஞானம் உலகம் முழுவதற்கும் உரியது, தேவையானதும் கூட.
(இங்கே பயன்படுத்தியுள்ள சில குறிப்புக்களைத் தந்து உதவிய, தங்கள் பெயர்களைக் குறிப்பிட விரும்பாத இரு இணைய நண்பர்களுக்கு மிக்க நன்றி).
16 comments:
அன்பின் ஜடாயு,
மிக்க நன்றி. இது குறித்த எனது விரிவான கருத்துக்களை விரைவில் பகிர்ந்து கொள்கின்றேன். நான் நன்றி சொல்ல விழைவது, இக்கட்டுரையின் தரத்துக்கு. எனக்குத் தெரியாத பல தகவல்களைத் தந்தது இந்தக் கட்டுரை. மீண்டும் நன்றி.
உங்கள் பதிவில் மற்ற மதத்தினரைப்பற்றிய சில விமரிசனங்கள் தேவையற்றது. அதை நீங்கள் தவிர்த்திருக்கலாம்.
மற்றபடி வேதத்தைப்பற்றி நான் தெரிந்து வைத்திருக்கிற, நேசக்குமார் சொல்லிய, நீங்கள் எழுதிய விசயங்கள் அனைத்தும் மிகச்சிலவே. அவையே எனக்குள் வேதத்தைப்பற்றிய மிகப்பெரிய பிம்பதை தோற்றுவிக்கின்றன. நானறிந்த வரையில் அத்வைதம் என்பது நாத்திகத்தின் முதிர்ச்சி அடைந்த நிலை என்று நினைக்கிறேன். நாத்திகர்கள் (நாத்திகர்கள் என்று நான் சொல்வது பார்ப்பன எதிர்ப்பு எண்ணங்களினால் உருவாகாத உண்மையான கடவுள் மறுப்பாளர்கள்) இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்திக்க ஆரம்பித்தார்கள் என்றால் முடிவில் அவர்கள் அத்வைத என்ணங்களையே கொண்டிருப்பார்கள்.
நீஙகள் எழுதும் சில விசயங்களில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. இதைப்போன்று நீங்கள் அல்லது வேறு யாராவது தொடர்ந்து எழுதினால் நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள முடியும்.
I really appreciate you for the nice article.
In this materials world, India as well its knowledge are kept in the dark over thousand years.
I am now seeing everywhere light, confidence and courage. Yes, the time has come to understand the real truth.
I pray 'Bharat Matha' for you.
மிக்க நன்றி நேசகுமார்.
// இது குறித்த எனது விரிவான கருத்துக்களை விரைவில் பகிர்ந்து கொள்கின்றேன். //
இன்னொரு அருமையான கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.
// நானறிந்த வரையில் அத்வைதம் என்பது நாத்திகத்தின் முதிர்ச்சி அடைந்த நிலை என்று நினைக்கிறேன். (நாத்திகர்கள் என்று நான் சொல்வது பார்ப்பன எதிர்ப்பு எண்ணங்களினால் உருவாகாத உண்மையான கடவுள் மறுப்பாளர்கள்) இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்திக்க ஆரம்பித்தார்கள் என்றால் முடிவில் அவர்கள் அத்வைத என்ணங்களையே கொண்டிருப்பார்கள். //
உமாசங்கர், வேதாந்தத்தின் ஆன்மத் தேடலில் ஒவ்வொரு தளத்திலும் "இல்லை இல்லை" (நேதி நேதி) என்று கண்டு செல்லும் தியான, தத்துவ ஆராய்ச்சி முறை உண்டு. "அன்று அன்று என விட்டு" என்று இதைத் தான் மெய்கண்டார் குறிப்பிடுவார். ஆனால் இந்தத் தேடலின் இறுதி சூனியமல்ல, சச்சிதானந்த ரூபமான தன் சுய வடிவையே ஆன்மா கண்டுகொள்கிறது என்று அத்வைதம் கூறும்.
நீங்கள் இதை நாத்திகம் என்று பொதுவாக அறியப் படும் சாதாரண கடவுள் மறுப்புக் கொள்கையோடு குழப்பிக் கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இத்தகைய நாத்திகம் பௌதிக உலகுக்கு அப்பால் போவதில்லை. அது முழுக்க புறவயப் பட்டது. அகவயப் பட்ட தேடலே இல்லாத போது அது அத்வைதம் பக்கம் அல்ல, த்வைதத்திற்குக் கூட வராது!
// உங்கள் பதிவில் மற்ற மதத்தினரைப்பற்றிய சில விமரிசனங்கள் தேவையற்றது. அதை நீங்கள் தவிர்த்திருக்கலாம். //
இவை சொல்ல வந்த விஷயத்துடன் தொடர்புடையவையே என்று நான் கருதுகிறேன். வேண்டுமென்றே இந்த விமரிசனங்களை நான் வைக்கவில்லை.
// நீஙகள் எழுதும் சில விசயங்களில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. இதைப்போன்று நீங்கள் அல்லது வேறு யாராவது தொடர்ந்து எழுதினால் நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள முடியும். //
மிக்க நன்றி உமாசங்கர். முயற்சிக்கிறேன்.
// I really appreciate you for the nice article. //
நன்றி அனானி.
// I pray 'Bharat Matha' for you. //
The real prayer to Bharatmata is to work for her awakening, to work for the betterment of her people. Lets unite in it.
அருமையான பதிவு,
முன்பொருமுறை, நேசகுமார் அவர்களின் ஒரு பதிவிற்கான பின்னூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருன்தேன். //நம்மிடம் உள்ள நல்ல விஷயங்களை நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லாததை நம் சமூகத்தின் மிகபெரிய குறையாக நான் கருதுகிறேன். அவ்வாறு நட ந்திருக்குமேயானால், இன்று நம்மிடம் உள்ள அனேக சமூகக்கொடுமைகளை நாம் கேட்டிறோம்.//
நம்முடைய கலாசாரம் பற்றிய பெருமித உணர்வின்மையே இதற்கு காரணம். கிருஸ்துவ மிஷினரிகள் நம்மிடம் உள்ள ஏற்றத்தாழ்வுகளை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளன என்பது நிஜம். போதாத குறைக்கு தலித்துக்கள் இ ந்துக்கள் அல்ல என்று நிறுவ முயற்சி நடைபெறுகிறது.
இதற்கு ஒரே வழி, நம் மதத்தைப்பற்றி நம்பிக்கை வரும் அளவிற்காகவாவது பயிலுவது அவசியமாகிறது. மாற்று மதத்தினர் நம் மதத்தைப்பற்றி கேட்கும் மிக அடிப்படையான கேள்விகளுக்கு கூட விடையளிக்க முடியாமல் தவிக்க வேண்டியுள்ளது.
தங்கள் நல்முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். வேதங்கள் உப நிஷத்துக்களைப் பற்றி அறி ந்து கொள்ள உதவும் பொருட்டு, இணைய சுட்டிகள்(புத்தகங்கள் கூட (தமிழில்)) ஏதேனும் இரு ந்தால், தெரிவிக்கவும். நன்றி.
// இதற்கு ஒரே வழி, நம் மதத்தைப்பற்றி நம்பிக்கை வரும் அளவிற்காகவாவது பயிலுவது அவசியமாகிறது. மாற்று மதத்தினர் நம் மதத்தைப்பற்றி கேட்கும் மிக அடிப்படையான கேள்விகளுக்கு கூட விடையளிக்க முடியாமல் தவிக்க வேண்டியுள்ளது. //
ariyadhavan, இந்து இயக்கங்கள் மற்றும் பல ஆன்மீக இயக்கங்கள் சமய வகுப்புகளை நடத்தி வருவது இதற்காகத் தான். இந்த முயற்சிகள் மேலும் பெருக வேண்டும். கோயில்களில் பூஜை, பஜனை, வழிபாடு போன்ற செய்ல்முறை அம்சங்களோடு மட்டும் நின்று விடாமல் வேதங்கள், திருமுறைகள், திவ்வியப் பிரபந்தம் முதலான நம் ஆன்மிக நூல்கள் பற்றிய அறிவைக் கொண்டு செல்லவும் வேண்டும்.
// தங்கள் நல்முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். வேதங்கள் உப நிஷத்துக்களைப் பற்றி அறி ந்து கொள்ள உதவும் பொருட்டு, இணைய சுட்டிகள்(புத்தகங்கள் கூட (தமிழில்)) ஏதேனும் இரு ந்தால், தெரிவிக்கவும். நன்றி. //
மிக்க நன்றி.
"தமிழ் உபநிஷத நூல்கள்" பற்றிய எனது பழைய பதிவு ஒன்று. இதில்
http://jataayu.blogspot.com/2006/09/blog-post_115838522757044930.html
இதில் பல விவரங்கள் அளித்துள்ளேன்.
சம்ஹிதை மந்திரங்கள் குறித்த எளிய தமிழ் நூல்கள் அவ்வளவாக இல்லை. இதே ஆசிரியர் எழுதிய "வேத மந்திரங்கள்" என்ற நூலில் சில முக்கியமான வேத சூக்தங்கள் பற்றிய அழகிய மொழிபெயர்ப்பும், விளக்கமும் உள்ளது.
//ஆனால் இந்தத் தேடலின் இறுதி சூனியமல்ல, சச்சிதானந்த ரூபமான தன் சுய வடிவையே ஆன்மா கண்டுகொள்கிறது என்று அத்வைதம் கூறும்.//
நானும் இதைத்தான் சொல்ல நினைத்தேன்.
அந்த தேடலின் முடிவு
"நீயே அது"
>> வேதங்கள் உப நிஷத்துக்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் பொருட்டு, இணைய சுட்டிகள்(புத்தகங்கள் கூட (தமிழில்)) ஏதேனும் இரு ந்தால், தெரிவிக்கவும்
'தெய்வத்தின் குரல்' - ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் உபந்யாஸங்களின் தொகுப்பு. மொத்தம் 6 பாகங்கள். இரண்டாம் பாகம் முழுவதும் வேதங்களைப் பற்றி. வானதி பதிப்பகத்தார் வெளியீடு.
தமிழில் வேதங்களைப் பற்றிப் படிக்க இதை விடச் சிறந்த source இருக்குமா என்று தெரியவில்லை.
There is also an English translation of this volume alone (out of the total six volumes) - titled 'The Vedas', from 'Bhavan's book university' - Bharatiya Vidya Bhavan. This book was available in Motilal Banarsidas book shop.
There is a translation of Upanishads into English by Eknath Easwaran - titled 'the Upanishads' - Nilgiri Press.
Dear friends
To awaken the Nation, there are two ways - one is outside ( speaking, writing, working etc.) as well inside (psychological)of each person. In my humble opinion, inside is more powerful.
To awaken the inside, the easy method is:
1. Bharat Mata photo should kept each family in the pooja room. I hope that it will slowly transit the mind set of people. To achieve this, group/people/organizations collectively need to work. For example, in any family functions (marriage etc.), we should give Bharat Mata photo with 'Tambulam' bag. Another method is give photo which contains all the famous religious place in Bharath map.
//'தெய்வத்தின் குரல்' - ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் உபந்யாஸங்களின் தொகுப்பு. //
// தமிழில் வேதங்களைப் பற்றிப் படிக்க இதை விடச் சிறந்த source இருக்குமா என்று தெரியவில்லை.//
Reason, நீங்கள் குறிப்பிட்ட புத்தகம் பொதுவான சமய,ஆன்மிகக் கருத்துக்களை விளக்க முற்படுகிறது. அதன் மொழி வெகுஜன சொற்பொழிவின் மொழி, ஒரு வாசகனுக்கான மொழி அல்ல என்பதும் என் அபிப்பிராயம். மூல நூல்களில் இருந்து சில மேற்கோள்கள் மட்டுமே இந்த நூலில் உள்ளன, சூக்தங்களின் முழுமையான மொழிபெயர்ப்போ, விளக்கங்களோ இல்லை.
அதனால் இங்கு மாறுபடுகிறேன். நான் குறிப்பிட்ட ராமகிருஷ்ண மடம் நூல்கள் மந்திரங்களின் நேரடியான மூல வடிவத்தை தருகின்றன, பெரும்பாலும் எளிய மொழிபெயர்ப்பு மற்றும் எளிய விளக்கங்கள் மூலம். இது தவிர, சுவாமி சித்பவானந்தர் (ராமகிருஷ்ண மடம், திருப்பராய்த்துறை) அருமையான வேத, உபநிஷத நூல்கள் எழுதியுள்ளார். இவை மிகவும் பொருத்தமான source.
Jatayu,
If reading a complete translation of the vedas or upanishads was the goal, I would look to read a literal translation like you have suggested.
I must admit I haven't read the Ramakrishna mutt books you suggested. Though it appears like those titles are related to Upanishads and not to the vedas themselves.
The reason I suggested Sri Chandrasekarendra Saraswati's book was - it answers the common questions (that may be asked without even a partial reading of the vedas and vedanta) like 'why bother with the vedas, instead go straight to the vedanta, the vedas only talk about meaningless rituals' - these questions ofcourse are not new and existed at the time of Buddha himself. Or other (atheist-like) questions like 'why bother with Vedanta or a Iswara/existence of Iswara, when performing karmas as ordained in the vedas is enough'. That was the meemaamsas who existed before Adi Shankara.
Sri Chandrasekarendra Saraswathi's speeches address these questions. In the book 'The Vedas' that I referred to, there is a section titled 'Do veda and vedanta clash'. And another section on 'Meemaamsa'. Those provide a lot of arguments - the Acharya says they are not his own but of Adi Shankara's.
Merely reading translation of vedas and upanishads might not answer these questions - given our general lack of understanding of the religion in the first place. Without reading material like this, an argument that treats atheism as similar to Upanishadic thought might even sound logical.
// Merely reading translation of vedas and upanishads might not answer these questions - given our general lack of understanding of the religion in the first place. //
ரீஸன், நான் குறிப்பிட்ட ராமகிருஷ்ண மடம் நூல்களில் மொழிபெயர்ப்போடு கூட, அருமையான விளக்கங்கள், முன்னுரைகள் உண்டு. அவை மந்திரங்களின் பொருளைத் தெளிவாக்கும்.
நீங்கள் குறிப்பிட்ட நூலும் இவ்வகையில் மிகச் சிறப்பாக உதவும் தான். சந்தேகமில்லை.
நல்ல பதிவு!
Post a Comment