Friday, June 20, 2008

வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 2

பகுதி 1 - இங்கே.

// கேள்வி 4 : வேத காலத்தில் கொண்டாடப்பட்ட பிரதான கடவுளாகிய இந்திரனை, சைவசித்தாந்திகள் எந்த இடத்தில் வைக்கிறார்கள்? அப்படி இந்திரனை அவமதிக்கும் புராணங்கள் வேத வழிபாட்டு முறையிலிருந்து ஏன் மாறிப் போயின? இந்தப் புராணங்களை சைவ சித்தாந்தம் ஒப்புக் கொண்டது ஏன்? //




பதில்: முதலில், இது சைவசித்தாந்தம் என்ற பிரிவு மட்டும் கொண்ட தனி நிலைப்பாடு அல்ல. சைவ,வைஷ்ணவ மதங்கள் வளர்ந்தபோது இந்துமதம் முழுவதிலும் ஏற்பட்ட மாறுதல். புராணங்களுக்கு முந்தைய இதிகாசங்களிலேயே (ராமாயணம், மகாபாரதம்) இந்திரன் பின்னுக்குத் தள்ளப் பட்டு தெய்வ அவதாரங்கள் முன்னிலைப் படுத்தப் படுகின்றனர். அதனால் வேதநெறியை அடியொற்றி எழுந்த மற்ற எல்லா மதங்களையும் செய்ததையே சைவ சித்தாந்திகளும் பின்பற்றியிருக்கின்றனர்.

சொல்லப் போனால் வேத இலக்கியத்திலேயே இந்த விரிவாக்கம் ஆரம்பித்து விடுகிறது. சில சம்ஹிதை மந்திரங்களில் இடி,மின்னல் மழை, இயற்கைக் கடவுளாக இருக்கும் இந்திரன் வேறு சிலவற்றில் “இந்திரன் பிரம்மத்தை அறிந்தவர்களில் முதன்மையானவன், அதனால் தான் அவன் தேவர்கள் அதிபதியானான்” (கேன உபநிஷதம், கடைசிப் பகுதி) என்று கூறப்படுகிறான்.

இது சமயத்தின் அக வளர்ச்சி (internal development). (முதல் பதிலில் குறிப்பிட்டபடி, உண்மையின் ஒரு தளத்திலிருந்து இன்னொன்றுக்குப் போவது). வேதம் vs பிற்கால தேவதைகள் வழிபாடு என்கிற இரட்டை நிலைப்பாடு (dichotomy) தவறான புரிதல் சட்டகம் ; வேதத்தின் அடிப்படையில் எழுந்த அக-விரிவாக்கமே பிற்கால இறைவழிபாட்டின் அடிப்படையாகும்.

இதே லாஜிக்கை தமிழ்மரபுக்கும் பொருத்திப் பாருங்கள் – மருதநிலத் தெய்வமான இந்திரன் சங்ககாலத்திலும் பிரதான தெய்வம், இந்திரவிழா பற்றி சிலப்பதிகாரம் விரிவாகக் கூறும். நெய்தல் நிலத் தெய்வம் வருணனும் இவ்வாறே. பிற்காலத் தமிழகத்தில் இவர்கள் எங்கே போனார்கள்? எனவே, வேத, தமிழ் சமயங்களின் பரிணாம வளர்ச்சி ஒரே திக்கில் தான் இருந்திருக்கிறது, வேறுவேறாக அல்ல.

இந்த அகவளர்ச்சி பற்றி ஸ்ரீஅரவிந்தர் கூறும் ஆழமான கருத்து ஒன்றை இறுதியில் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளேன்.

// கேள்வி 5 : சித்தாந்தம் ஆகமத்திற்கு முன்னுரிமை தருகிறதா? வேதத்திற்கு முன்னுரிமை தருகிறதா? //

பதில்: சந்தேகமே இல்லை, வேதத்திற்குத் தான். இறைவன் வேத உருவானவன் என்று கூறும் நூற்றுக் கணக்கான பாடல்களை திருமுறை முழுவதும் காண்கிறோம் (பார்க்க: திரு. நாகசாமி அவர்களின் கட்டுரை).



மேலும், ஆகமம் என்பது வேதத்தினின்று மாறுபட்டது அல்ல. வேத, வேதாந்த ஞானத்தின் அடிப்படையில் நடைமுறை சமயத்தைக் கட்டமைப்பவையே ஆகமங்கள். அதனால் தான் அவற்றில் தத்துவ விவாதங்கள் பெரிதாக இல்லை. சரியை, கிரியை, யோகம் என்பனவற்றில் அடங்கும் தீட்சை, பூஜைமுறை, ஆசாரம், கோயில் பிரதிஷ்டை, தெய்வ மூர்த்தங்கள், விழாக்கள், விரதங்கள் இவற்றைப் பற்றியே வெகுவாகக் கூறப்படுகிறது. அடிப்படையான கேள்விகளான பிரபஞ்சம், பரம்பொருள், கர்மா, மறுபிறவி, முக்தி ஆகியவற்றைப் பேசும் “ஞான பாதம்” நேரடியாக வேதஞானத்தையே எடுத்துரைக்கிறது.

திருமந்திரத்தில் முதலில் வருவது வேதச் சிறப்பு. அதன்பின் வருவது ஆகமச் சிறப்பு.

“வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உள; தர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே.”


சேக்கிழார் பெருமான்,

“மந்திரங்கள் ஆன எல்லாம் அருளிச் செய்து
மற்று அவற்றின் வைதிக நூல் சங்கின் வந்த
சிந்தை மயக்குறும் ஐயம் தெளிய எல்லாம்

செழு மறையோர்க்கு அருளி” (2164, பெ.பு)

என்கிறார். இறைவனே வேத மந்திரங்களையும் அருளி, அவற்றில் விளையும் ஐயங்களைத் தெளிவிக்கப் பின்னர் ஆகமங்களையும் அருளினான் என்றவாறு. எனவே முன்னுரிமை, பின்னுரிமை போன்ற கேள்விகளுக்கு இடமில்லை.

// கேள்வி 6 : ஆகமமே வேதங்களை அடியொற்றியது என்று ஏற்றுக் கொள்வதானால் வேதாந்தத்தை அத்வைத பரமாக நிறுவி ஸ்தாபித்த ஆதி சங்கரர் ஆகமங்களைத் தமது உரை விளக்கங்களில் ஆதாரங்களாக ஏற்கிறாரா? இல்லையா? //

பதில்: முதலில் ஆகமங்கள் என்று சைவசித்தாந்தத்தில் வழக்கமாகச் சொல்லப் படும் நூற்தொகுதிகள் பற்றிக் கொஞ்சம் சொல்வது அவசியம்.

திருமந்திரம் கூறும் எண்ணிறந்த சைவ ஆகமங்களில் இருபத்தெட்டு பிரசித்தி பெற்றவை. இவை ஒவ்வொன்றிலும் லட்சக் கணக்கான சுலோகங்கள் உள்ளதாக வழக்கு உள்ளது (கரண ஆகமத்தில் ஒரு கோடி!). இவை மிகைக் கூற்றுகள் என்பதில் ஐயமில்லை (அல்லது லட்சம் என்பது வேறு ஒரு சிறிய எண்ணைக் குறிக்கும் குறியீடாகவும் இருக்கலாம்).

சைவாகமங்களின் பட்டியல்

இவற்றில் எந்த ஆகம நூலும் இத்தனை சுலோகங்களுடன் முழுமையாகக் கிடைக்கவில்லை. கிடைத்தவற்றிலும் நூல்வடிவில் கற்கத்தகுமாறு பதிப்பில் உள்ளவை மிகமிகக் குறைவு. பிரசுரிக்கப் பட்ட சில நூல்களும் முழு ஆகமத்தை அல்ல, சில குறிப்பிட்ட பூஜை முறைகளைப் பற்றி மட்டுமே கூறுகின்றன.

ஆகமங்கள் பற்றிய நூல்களின் பட்டியல்

இதில் முக்தாகமம் போன்ற சில நூல்கள் காசியிலிருந்து சம்ஸ்கிருத பண்டிதர்கள் பிரசுரித்து வெளிவந்திருக்கின்றன. எனவே ஆகமங்கள் பற்றிய மரபு, சைவசித்தாந்தத்தில் மட்டுமல்ல, வட இந்திய சைவ சமயப்பிரிவுகளிலும் உள்ளது என்பது புலனாகும்.

வழக்கில் உள்ள ஆகம நூல்களில் உள்ள சுலோகங்களின் அமைப்பு, மொழி இவற்றை வைத்துப் பார்க்கையில் இவற்றில் அனேகமாக எல்லா நூல்களின் காலமும் சங்கரருக்குப் பிற்பட்டது என்பது கண்கூடு.

"ஸர்வ வேதாந்த சித்தாந்த கோசரம் தம் அகோசரம்” (“மனத்திற்கும், வாக்கிற்கும் எட்டாத பொருளை வேதாந்தமும், அவற்றின் அடிப்படையில் வந்த சித்தாந்தங்கள் மூலம் தேடும்..”) என்பது சங்கரர் பிரம்மசூத்திர உரையின் முதல் பாடல்.

ஆகமங்கள் பேசும் விஷயங்கள் பற்றி முன்பே பார்த்தோம். சங்கரரின் தத்துவ விளக்க உரைகளில் இவற்றை மேற்கோள் காட்டுவதற்கான தேவையே எழ வாய்ப்பில்லை. மேலும், வேதாந்தம் என்பது சிந்தனை மற்றும் விவேக ஞானத்தின் அடிப்படையிலான தர்க்க, தத்துவ முறை (speculative and contemplative philosophy). உபநிஷத், பிரம்மசூத்ரம், கீதை ஆகிய மூலநூல்கள் (canon) தவிர்த்து, சங்கரரின் பாஷ்யங்களில் புராணங்கள், ஸ்மிருதிகள், அப்போதிருந்த சமய இலக்கியம் ஆகிய நூல்கள் எந்த விதத்திலும் பிரமாணமாகச் சுட்டப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. வேதாந்த தத்துவத்தின் மிகப் பெரிய பலம் இது என்று விவேகானந்தர் குறிப்பிட்டிருக்கிறார்.

“சங்கரர் சரி. சைவாகமங்களை பிரமாணமாகச் சுட்டி வேறு ஏதாவது உரைகள் எழுதப் பட்டிருக்கின்றனவா? எந்த நூல்களுக்கு, யாரால் எழுதப் பட்டிருக்கின்றன?

எனக்குத் தெரிந்து சைவ நோக்கில் வேதாந்த நூல்களுக்கு எழுதப்பட்ட ஒரே ஒரு உரை ஸ்ரீகண்டாசாரியார் எழுதிய பிரம்மசூத்திர பாஷ்யம் மட்டுமே. இந்த உரையிலும் ஆகமங்கள் சான்றாகக் கொள்ளப்படவில்லை (ஏனென்றால் ஆகமங்கள் நடைமுறை விளக்கங்கள், பிரமாணங்கள் அல்ல). வேறு ஏதேனும் உரைகள் இருந்து, தாங்கள் அவற்றைப் பற்றிச் சொன்னால், தன்யனாவேன்.

// கேள்வி 7 : வடகலை, தென்கலை என்கிற வைணவ சம்பிரதாய சொல்லாட்சியில் வடக்கு, தெற்கு என்பது என்ன அர்த்தத்தில் கையாளப்படுகிறது? //

பதில்: வேதாந்தத்தின் மூன்று மூலநூல்களுக்கும் ராமானுஜர் எழுதிய உரைகளின் அடிப்படையில் கட்டுக்கோப்பாக உருவாக்கப் பட்ட சித்தாந்தம் ஸ்ரீவைஷ்ணவம்.

தென்கலை சம்பிரதாயம் வேதங்களையோ, வேதாந்தத்தையோ மறுக்கவில்லை, முழுமையாக ஏற்றுக் கொண்டது – அது தான் இங்கு கவனிக்கப் படவேண்டியது. சம்ஸ்கிருதத்தையும், தமிழையும் கலந்து அற்புதமான மணிப்பிரவாள நடையை உருவாக்கியதும் தென்கலை சம்பிரதாயம் தான், அதனால் சம்ஸ்கிருத வெறுப்பு அதில் இருக்கிறது என்கிற வாதம் ஏற்றுக் கொள்ள முடியாதது.

இந்தப் பிரிவினைக்குக் காரணம் சமூக, வரலாற்றுச் சூழல்கள் மட்டுமே. திருமண், சில சடங்குகள் போன்ற புறச்சின்னங்கள் தவிர்த்து, இரு சம்பிரதாயங்களுக்கும் தத்துவ அடிப்படையில் சிறு வித்தியாசம் கூட இல்லை.

// கேள்வி 8 : சிவனை முன்னிறுத்தும் சைவ சித்தாந்தம் தென்னாடுடைய சிவனே போற்றி என்பதில் தென்னாடு என்பது (தெற்கு) எதைக் குறிக்கிறது? //

பதில்: “ தென்னவன் சேரலன் சோழன் சீர்பதங்கள் வரக்கூவாய்” (திருவாசகம், குயிற்பத்து) என்பதில் தெளிவாக தெற்கு என்பது பாண்டி நாட்டைக் குறிக்கிறது. இங்கும் அதையே குறிக்கலாம். அல்லது தென்கலை என்று தமிழ் அழைக்கப் பட்டதால் தமிழ் பேசும் நாடு என்பதாகவும் கொள்ளலாம். தத்துவார்த்தமான பொருளில் தெற்குத் திசை நோக்கி ஞானோபதேசம் செய்யும் தட்சிணாமூர்த்தியையும் குறிப்பதாகக் கொள்ள இடம் இருக்கிறது.

இது “இவன் எங்கூர்க்காரன்யா” (“திருவொற்றியூரா திருவாலவாயா திருவாரூரா” என்று அப்பர் சொல்வது போல) என்பது போன்ற அபிமானத்தில் சொல்லப் பட்டதுவே அன்றி சிவனை ஒரு பிரதேச தெய்வமாக முன்னிறுத்துவதற்காக அல்ல. “எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்ற அடுத்த அடி இதைத் தெளிவாக்குகிறது.

இப்படி ஒரு எண்ணம் வந்துவிடக் கூடாது என்று தான் “பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே” என்றும் அதே திருவாசகத்தில் வருகிறது. இங்கு ஆரியன் என்பதற்கு மேலோன் என்றும் பொருள் கொள்ளலாம், அல்லது ஆரியாவர்த்தம் என்ற வடநாட்டைச் சேர்ந்தவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

பிற்சேர்க்கை:

ஸ்ரீ அரவிந்தர் அருளிய ‘ரிக்வேத அக்நி ஸுக்தங்கள்' (Hymns to the Mystic fire) முன்னுரையில் ஒரு பகுதி. மொழிபெயர்ப்பாளர் கபாலி சாஸ்திரி. SAKSI பதிப்பகம் வெளியீடு -

“ வைதிகத் தேவதைகள் தம் அகக்கருவி காரியங்களை விரிவுறச் செய்தன;வெளிச் சொரூபத்தை மாத்திரம் திரமாய் நிறுத்திக் கொண்டன.; (இங்ஙனம்) உயர்ந்த உத்தேசத்துடன் புதிய தெய்வ கோஷ்டிக்கு இடம் அளித்தன. ஆதலால் அவை பூர்வ சங்கத்தினின்று விருத்தி பெற்றனவும் உலகனைத்தினிலும் பெருந்தொழில் ஏற்றுக்கொண்டனவும் ஆகிய புராணத்தெய்வங்களுக்கு முதல் இடம் கொடுக்க வேண்டுயதாயிற்றூ. 'விஷ்ணு' 'ருத்திரன்' 'பிரஹ்மா' வேதத்தில் 'பிருஹஸ்பதி' அல்லது 'பிரஹ்மணஸ்பதி'யினின்று மலர்ந்த 'பிரஹ்மா' 'சிவன்' 'லஷ்மி' 'துர்க்கா' இவ்வாறு இந்தியாவில் தேவதைகளின் மாற்றம் முற்றுப்பெறாமல் குறைப்பட்டது. பண்டைத் தெய்வங்கள் பௌராணிக தேவ கோஷ்டியில் தாழ்ந்த தெய்வங்களாயின.

இதற்குப் பெரும்பான்மை காரணம் யாதெனின், பிற்காலத்திலும் ரிக் வேதம் தப்பி பிழைத்ததே எனல் வேண்டும். ஏனெனில் அதனில் தேவதைகளுக்கு அகத்தொழில்களும் புறத்தொழில்களும் ஏககாலத்தில் இருவகைத் தொழில்களும் அமைந்திருத்தலுடன் வலியுறுத்தப்பட்டுள்ளன. இவ்விதமாக கிரேக்க ரோமானிய தெய்வங்களுடைய ஆதி சாயலைக் காத்து பதித்த பழைய இலக்கிய ஆதாரம் யாதும் இருந்திலது. தெய்வங்களின் இம்மாறுபாடு பண்டைக்காலத்திய இம்மக்களின் பயிற்சிச்சிறப்பான் (பண்பாட்டு மலர்ச்சியான்) ஏற்பட்டதென்பது தெளிவாம்.

அவர்கள் நாகரிகத்தில் விருத்தி அடையுங்கால் மென்மேலும் மனவாழ்வு மிகுந்து உடல்வாழில் அமிழ்தல் குன்றியதால் தம் சமயத்தின் பாலும் தெய்வங்கள் பாலும் மேன்மையான நுண்ணிய உந்நத அம்சங்களைக் காண்டல் அவசியமாயிற்று. அங்ஙனம் நுண்ணிய உந்நத அம்சங்களைக் காண்டல் அவர்தம் மேம்பட்ட மதிநிலைக்கேற்ற கருத்துக்களையும் அக்கறைகளையும் ஆதரித்து அவற்றிற்கு உண்மையான சித்துப் பொருளையோ (அசரீர ஆவிப்பொருளையோ) அல்லது ஒரு திவ்யரூபத்தையோ (விண்ணுலக வடிவத்தையோ) ஆதரவாகவும் ஆதாரமாகவும் கண்டு சாதிப்பது ஆம்.

ஆனால் இவ்வகமுகத் திருப்பத்தைத் தீர்மானித்து ஆழ்த்தும் வேலை பெரும்பான்மையான கூடவாதிகளான மறையோருடையது எனல் வேண்டும். ...வேதரிஷிகள் (மந்த்ர த்ரஷ்டா, கவி) இவகையோர் என்பது பரதகண்டத்தில் பண்டைக்காலம் தொட்டு இதுகாறும் வந்து நிற்கும் ஐதீகம். ...மறை பொருளும் மறையோர் அறிவும் 'வேத ரிக்கு'களில் பொதிந்துளவெனும் ஐதிகம் வேதம் எவளவு பழமையானதோ அவ்வளவு பழமையானதென்பது உண்மை.
மேலே ஒளிந்துள்ள உய்ய்ர் ஞான (சித்து) நிலைகளினின்று 'மந்த்ர'ங்கள் அருளாவேசத்தால் பெறப்பட்டனவென்றும் அவற்றில் இந்தக் 'கூடஞாநம்' அடங்கியுள்ளதென்றும் வேதரிஷிகள் விசுவாசித்தனர். வேதபதங்களின் உண்மைப் பொருளை அறுயக்கூடியவன் தானே தத்துவதரிசி (ரிஷி)யாகவோ கூடவேதியனாகவோ இருத்தல் வேண்டும். ...வேத விளக்கங்கள் குறித்து எழுந்த பல பஷங்களை 'யாஸ்கர்' குறிப்பிடுகிறார். வேள்வி விதிக்கேற்ப வேதஹ்தை விளக்க முற்பட்டோர் வேள்வியர் (யாஜ்ஞிகர்); இதிஹாஸமெனும் புராணக் கதை வரலாறுகளான் வேதவுரை கூறுவர் ஒரு சாரார் (ஐதிஹாஸிகர்) ; இலக்கணிகளும் சொல்லிலக்கணத்து ஈடுபட்டோரும் சொல்லமைப்பைக் கொண்டு வேதவிளக்கம் தேடுவோராவார் (நைருத்தர்); அகமுகமாய் நின்ற யுக்திவாதிகள் ஆத்துமபஷமாய் வெதவிளக்கம் நாடுவர் (அதியாத்துமவாதிகள்)”
தொடரும்....

7 comments:

Anonymous said...

அதனால் சம்ஸ்கிருத வெறுப்பு அதில் இருக்கிறது என்கிற வாதம் ஏற்றுக் கொள்ள முடியாதது.//

யார் அப்படி வாதம் பண்ணினார்கள்?

வேதங்கள்தான் இந்துமதத்தின்
ஆணிவேர்.

சமஸ்கிருதம்தான் தேவ பாஷை.

சமஸ்கிருதம் இல்லையென்றால் ஒன்னும் கிடையாது. தமிழ்ல்ல ஒன்னும் கிழிக்க
முடியாது.

வடகலை தென்கலை எல்லாம் சும்மாதான்.

ஒரே கலை, அது வடகலைதான்.

hamaragana said...

அன்புடன் நண்பருக்கு வணக்கம்,
சமஸ்க்ரிதம் தேவ பாஷை .......திருநெல்வேலி மாவட்டம் .சுத்தமல்லி ஊரில் ஒரு தம்பதியருக்கு பிறந்த மகன் ௩ வயது வரை சரியான பேச்சு வரவில்லை . மருத்துவர்கள் பேச்சு பயிற்சி சொல்லி கொடுங்கள் ...பையனின் அம்மா சைவ பெண்மணி சொல்லி கொடுப்பது சம்ச்க்ரித மந்த்ரைன்களாக சொல்லிகொடுபெமே என்று
செயல்பட்டார்கள் ௩ வயது பையன் ஞாபக சக்தி அபாரமாக உள்ளது ...தத்வமசி தீட்சிதர் ..இதுபோல் ஒரு குறுந்தகடு வெளிட்டுள்ளார் அதை கேட்பவர்களுக்கு வலது பக்க மூளை நன்கு செயல்பட்டு ந்ஞபக சக்தி வளரும் . உண்மை ..
தேவாரம் திருவாசகம் ஓதும்போது அதில் குரிபிடபட்டுள்ள ராகத்தில் பாடினால் அதன் பலன் கண்டிப்பாக கிடைக்கும் ...இப்போது பாடும் ஓதுவார்கள் யாராவது அப்படி படிகிரார்களா ???? அந்த சிவா பெருமானிடம் தான் புலம்பி தீர்க்க வேண்டும்
தங்களின் கருத்துரை.& திரு ஜடாயு அவர்களின் பதிவுக்கு நன்றி... .

Sivsri Vibhudhibhooshan said...

போற்றுதலுக்குறிய ஜடாயு அய்யா, வேதனெறியும் மிகு சைவத்துறையும் இசைந்தே உள்ளன என்பதினை நிறுவியுள்ளீர்கள். இதில் எமக்கும் மாறுபாடு இல்லை. ஆனால் ஸ்ரீ நீலகண்ட ஆராத்யாயரின் பிரம்மசூத்திர சைவ பாடியம் ஆகமங்களைக் அடிப்படையாக கொள்ளவில்லை என்ற கருத்து தவரானது.அவர் வேதங்களுக்கும் சம மரியாதை அளித்தவர் என்பதே உண்மை. வேதமும் ஆகமும் போற்றும் லிங்க தாரணம் அவர் போற்றுகிறார். வேதம் மந்திரங்களுக்கும் ஆகமம் கிரியை களுக்கும் மூலமாக ஒன்றையொன்று சார்ந்து விளங்குகின்றன என்பது அவர் வழிவந்த ஸ்ரீ நாகலிங்க சாஸ்திரிகள் கூறுகிறார்கள். மேலும் விவரம் அறிய srouta saiva siddhanta web site காணவும்.
சைவசித்தாந்தம் வேதங்களையும் ஆகமங்களையும் பிரமாணங்காளாகக் கொண்டாலும் சிறப்பு பெறுவன ஆகமங்களே.
திரு ஜடாயு அவர்களுக்கு மறுமொழியாக தமிழில் ஒன்றும் கூடாது இயலாது என்று ஒருவர் மொழிந்திருக்கிறார். இது தவறானது.
உள்ணோக்கம் கொண்டது. தமிழால் அனைத்தும் கூடும். மரணத்தையும் வென்றது திருமுறை மொழிகளே. பக்தியின் மொழி இது. ஊனையும் உருக்கி உயிரைக் கரைத்து சிவமாக்கும் திருனெறிய தமிழ்.அதன் சிறப்பை மூடரும் கடுவினை சூழ்ந்தோர் அறியார்.

Sivsri Vibhudhibhooshan said...

திரு ஜடாயு அவர்கள் ஹிந்து சமயத்தின் சிறப்புக்களை இனையத்தில் சிறப்பாக எழுதிவருகிறார். தமிழ் வழிபாட்டினைப் போற்றுபவர்களிள் சிலர் வேத நிந்தனை செய்கிறார்கள். அவர்களின் கேள்விக்கு பதில் கூறும் அவர் முயற்சி நன்று. ஆனால் பிரம்மசூத்திரத்திற்கு எழுதப்பட்ட சைவபாடியமான ஸ்ரீ நீலகண்ட ஆராத்யாயரின் நூலைப்பற்றிய அவரது கருத்து தவறு. ஸ்ரீ ஆராத்யாயரின் சிவாத்வைதம் வேதங்களையும் சிவாகமங்களையும் சமமாகப் போற்றுகிறது என்பதே உண்மை. இந்தக்கருத்தை ஏற்கனவே மறுமொழியாக இட்டேன். ஆனால் அது பதிப்பிக்கப் படவில்லை. இது சரியல்ல. அழகல்ல முறையுமல்ல.

ஜடாயு said...

அன்புள்ள சிவஸ்ரீ விபூதிபூஷண் அவர்களுக்கு,

இந்த வலைப்பதிவில் நான் தொடர்ந்து இப்போது எழுதுவதில்லை என்பதைக் கவனித்திருப்பீர்கள்.

மறுமொழிகள் என் மின் அஞ்சல் பெட்டியில் சேர்ந்ததை இப்போது தான் கவனிக்கிறேன்.

அதனாலேயே தங்கள் முதல் மறுமொழியைப் பதிப்பிக்க தாமதம் ஆயிற்று. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

ஜடாயு said...

பெருமதிப்பிற்குரிய சிவஸ்ரீ விபூதிபூஷண் அவர்களுக்கு,

// ஸ்ரீ ஆராத்யாயரின் சிவாத்வைதம் வேதங்களையும் சிவாகமங்களையும் சமமாகப் போற்றுகிறது என்பதே உண்மை. //

இஃது எனக்கும் ஏற்புடையதே. சிவாத்வைதம் என்ற தத்துவப் பிரிவு குறித்து எனக்கு அதிக பரிச்சயம் இல்லை. நீலகண்டர் இயற்றிய மூலநூல்களையும் நான் கற்றதில்லை. நான் கூறவந்ததெல்லாம் அந்தத் தத்துவப் பிரிவு வேத விரோதமானது அல்ல என்பதையே. தாங்களும் அதில் உடன்படுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

சிவாத்வைதம் குறித்த விரிவான, விளக்கமான கட்டுரை ஒன்றைத் தாங்கள் தமிழ்ஹிந்துவில் எழுதினால் என்ன? பலருக்கும் அது தெளிவைத் தருவதாக இருக்கும்.

பணிவன்புடன்,
ஜடாயு

Sivsri Vibhudhibhooshan said...

திரு ஜடாயு அவர்களுக்கு
நன்றி உங்களது பதில் மொழி கண்டேன். மகிழ்ச்சி. தமிழ் ஹிந்துவில் கட்டுரை எழுத கூறினீர்கள். நன்றி. நிச்சயம் முயற்சி செய்கிறேன். தமிழில் காசிவாசி சாம்பவஸ்ரீ செந்திநாதையர் அவர்கள் ஸ்ரீ கண்டாராத்யாயரின் சிவாத்வைத பாடியத்தில் மொழிபெயர்த்து 1930 களிலே வெளியிட்டுள்ளார். அதை சமீபத்தில் தஞ்சையை சேர்ந்த சேக்கிழார் அடிப்பொடி சிவத்திரு. T.N .ராமச்சந்திரன் வெளியிட்டுள்ளார். அவரது முகவரியை அய்யா கோ. ந. முத்துக்குமாரசுவாமி வைதீக சைவம் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தமிழ் ஹிந்து கட்டுரை மறுமொழி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து சேக்கிழார் அடிப்பொடி ஐயா அவர்கலத்தொத்தொடர்பு கொண்டதின் மூலம் சாம்பவஸ்ரீ அய்யர் அவர்களின் மாபாடிய உரை மட்டுமன்றி, தேவாரம் வேதசாரம், சிவஞானபோத வசனாலங்கார தீபம் ஆகியவற்றைப் பெற்று படித்துவருகிறேன்.
சிவாத்வைதம் இன்னும் ஆந்திரத்தில் ஆராத்யாய சைவர்களால் பின்பற்றப்படும் சைவமாகும்.
அந்த குடியில் தோன்றிய பெருமகன் ஸ்ரீ. நீலகண்டாராத்யாயர். இலிங்க தாரணமும் பூணுலும் கொண்டு விளங்குபவர்கள். இந்த சைவர்கள். 1930 -40 களில் வாழ்ந்த ஸ்ரீ முடிகொண்ட நாகலிங்க ஆராத்யாயர் பற்றி கீழ்கண்ட இணைய தளத்தில் காணலாம்.
http://sroutasaivasiddhanta.com/
ஸ்ரீ நாகலிங்க அராத்யாயர் பல சமஸ்கிருதத்தில் நூல்களை எழுதி சிவாத்வைதத்தையும்
சைவத்தின் வைதீகத்தன்மையையும் நிலை நாட்டியுள்ளார். வேதம் காட்டும் பரம்பொருள் சிவம் இலிங்கதாரணம், விபூதி தாரணம், ருத்ராட்ச தாரணம், சிவநாமம், விலவார்ச்சணம் ஆகியன வேதத்தில் விதிக்கப்படுவன என்கிறார் ஸ்ரீ நாகலிங்க ஆராத்யாயர்.
இன்றைக்கு ஸ்ரீ செந்தினாதையார்( தேவாரம் வேத சாரம், திருவாசகம் உபநிடத சாரம்) என்று நிருபித்துள்ளது நமக்கு வேத நிராகரணம் செய்பவர்களை மறுக்கப் பயன்படுகிறது. சைவம் முழுமையாக வைதீகம் என்றகருத்துக்கு ஸ்ரீ நாகலிங்க ஆராத்யாயரின் நூல்களும் உரம் சேர்க்கும்.
நீங்கள் நல்லமுறை யில் நமது தர்மம் தழைக்க எழுதி வருகிறீர்கள். அது பாராட்டிற்குரியது. ஆகமங்கள் தமிழ் திருமுறைகள் பற்றி எழுதும் போது அதி ஜாக்கிரதை யாக இருக்கவேண்டும். காரணம் சைவர் அவற்றிற்கு கொடுக்கும் மதிப்பு வேதத்திற்கு ஈடானது. வேததின் கர்மகாண்ட சடங்கு கலை நிராகரிக்கும் வீரசைவரும் போற்றும் சிறப்பு ஆகமங்களுக்கு உண்டு. அது மட்டுமல்ல வேதம் கூறாத ஆனால் இன்று சிறப்புற்று விளங்கும் ஆலயம் பூஜை எல்லாமே ஆகமங்கள் கூறுவனவே என்பதும் உணரப்படவேண்டும்.
தொடர்ந்து விவாதிக்க தில்லைக் கூத்தபெருமான் திருவருள் புரிக.
சிவஸ்ரீ. விபூதிபூஷண்