Wednesday, February 28, 2007

யோகா: ஒரு சமுதாயத் தேவை

யோகா என்பது அடிப்படையில் ஒரு தனிமனித ஒழுக்கம், வாழ்க்கை முறை, சுய முன்னேற்ற கருவி, உடல் மற்றும் மன நலம் பேணும் ஒரு அறிவியல் சார்ந்த கலை, ஆன்மிக சாதனம் இப்படித் தான் பொதுவாக எல்லாரும் நினைக்கிறோம். ஆனால், யோகா பயின்று அதைப் பலரும் கடைப் பிடிக்கும் போது சமுதாயத்திற்குக் கிடைக்கும் நன்மை மிகப் பெரியது. இது பற்றிய என் எண்ணங்களின் தொகுப்பு இந்தக் கட்டுரை.

யோகம் என்னும் பரந்த சித்தாந்தத்தில் வேதாந்த தத்துவம் உள்ளிட்ட பலதரப்பட்ட விஷயங்கள் அடங்கும். இங்கே யோகா என்று நான் குறிப்பிடுவது ஆசனங்கள், பிராணாயாமம், தியானம், யோகக் கண்ணோட்டம் (Yogic outlook) இந்த நான்கு அம்சங்கள். நடைமுறையில் யோகம் என்னும் ராஜவீதியில் பயணிப்பவர்கள், நுழைந்திருப்பவர்கள் இந்த அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் பயின்று, கடைப்பிடிப்பது தான் நிறைவை நோக்கி இட்டுச் செல்கிறது என்பதை உணர முடியும்.

ஒரு அனுபவம்:

அண்மையில் பிப்ரவரி-2007 முதல் வாரம் பெங்களூரில் யோக, ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் வாழும் கலை (Art of Living) அமைப்பு நடத்திய நான்கு நாள் “பிராணாயாம தியான முகாம்” (Pranayam Dhyan Shibir) என்ற வெகுஜன யோக வகுப்பில் பங்கு பெற்று பல விஷயங்களைப் பார்வையிட நேர்ந்தது. (சில காலமாக யோகப் பயிற்சிகளை முறையாக செய்து வரும் நான் இது போன்ற பொது நிகழ்ச்சியில் கற்றுக் கொள்வதற்கு புதிதாக ஒன்றும் இல்லை; எனினும் சாதாரண மக்கள் யோகாவில் காட்டும் ஈடுபாடு பற்றி அறிவதற்காகவே பங்கு பெற்றேன்). பலதரப் பட்ட மக்களையும் யோகாவில் ஆர்வம் கொள்ளச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 13,000 பேர் கலந்து கொண்டனர். மென்பொருள் வல்லுனர்கள், அலுவலகப் பணியாளர்கள், சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள், குடும்பத் தலைவியர், மாணவர்கள், முதியவர்கள், பெங்களூரின் புறநகர் மற்றும் சுற்றுப் புற கிராமங்களில் இருந்து வந்திருந்தவர்கள் இப்படி. விசேஷ விருந்தினர் என்று நடிக, நடிகையர் மற்றும் சில பிரபலங்கள். அடிப்படை கட்டணம் ரூ. 350 என்று அறிவித்திருந்தும், ஆர்வமுள்ள பலரை இலவசமாகவே அனுமதித்தனர் என்றும் கேள்வியுற்றேன். சில எளிய ஆசனங்கள் மற்றும் பிராணாயாம முறைகள் (நாடி சோதனா, உஜ்ஜயி, பஸ்திரிகா) கற்பிக்கப் பட்டன. நேரடியாக ஸ்ரீஸ்ரீ அவர்களால் வழிநடத்தப் பட்ட தியானம் (Guided meditation) தினமும் இருந்தது. ஆங்காங்கே நின்று கொண்டிருந்த பயிற்சி பெற்ற தன்னார்வ உதவியாளர்கள் மிகவும் சிரத்தையுடன் தவறுகளைத் திருத்தியும், செய்து காண்பித்தும் பங்குபெற்றவர்கள் சரியாகக் கற்றுக் கொள்ள உதவினர்.





ஒவ்வொரு நாளும் பயிற்சிக்குப் பிறகு வந்த கேள்வி பதில் பற்றும் அனுபவப் பகிர்வுகளில் யோகப் பயிற்சிகள் செய்து வருபவர்கள் தாங்கள் பெற்ற விதவிதமான பயன்களை விவரித்தார்கள்; ஒரு முதிய பெண்மணி நீரிழிவு நோய் கட்டுக்குள் வருகிறது என்றார். இன்னொருவர் தினந்தோறும் அலுவலகத்தில் புத்துணர்வோடு வேலை செய்கிறேன் என்றார். ஒரு மாணவி வீட்டில் சண்டை போடுவது நின்று குதூகலம் பொங்குவதாகக் கூறினார். வேறொருவர் நினைவாற்றல், கவனம் அதிகமாகி இருக்கிறது என்றார். இன்னொருவர் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது என்றார். யோகா மூலம் தங்களது பூஜை மற்றும் வழிபாட்டில் மேலும் தெய்வீகத்தை உணர்வதாக பக்தர்கள் தெரிவித்தனர். கிராமத்தவர்கள் பலர் தியான அனுபவம் தங்களுக்கு மிக ஆழ்ந்த மன நிம்மதியைத் தந்ததாகக் கூறி, எல்லா ஊர்களிலும் இது மாதிரி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். தலைவலி, கை கால் மூட்டு முதுகு வலிகளிலிருந்து விடுபட்டதாகவும் பலர் கூறினர்.

ஒரு விஷயம் வெளிப்படையாகத் தெரிந்தது. யோகா ஒரு காமதேனு. வேண்டியவற்கு வேண்டியது தரும் கற்பக விருட்சம்.

உடல் நலம், மன நலம்:

யோகாசனங்கள் வெளி உறுப்புக்களை மட்டுமல்ல, உடலின் உள் உறுப்புக்களையும், நாடி நரம்புகளையும் உறுதியாக்குகின்றன. மேற்சொன்ன பயிற்சி முகாமில் ஒரு கிராமத்துப் பெண்ணின் அன்றாடப் பணிகளின் ஊடாகவே (நாற்று நடுதல், நீர் இறைத்தல், வீடு பெருக்குதல், உலக்கையால் இடித்தல்) பல விதமான யோக உடற்பயிற்சிகள் எப்படி வந்து விடுகின்றன என்று அழகாக விளக்கினார்கள். இப்படி சமச்சீரான உடல் இயக்கங்கள் தாமாகவே அன்றாட வாழ்க்கை முறையில் அமைந்து விட்டவர்களுக்குக் கூட ஆசனங்கள் உடலை உறுதியாக்க உதவுகின்றன. அப்படியிருக்கும்போது ஓரிடத்திலேயே உட்கார்ந்து வேலை செய்பவர்களாகவும், உடற்பயிற்சிக்கான வாய்ப்பு இல்லாதவர்களாகவும், மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளில் முதுகு ஒடிக்கும் இரு சக்கர வாகனங்கள், இடுப்பு ஒடிக்கும் ஆட்டோக்கள் போன்றவற்றில் அதிகமாகப் பயணம் செய்பவர்களாகவும் நம்மில் பலர் இருப்பதால் அதற்கென்று கண்டிப்பாக நேரம் ஒதுக்கி ஆசனங்கள் செய்தே ஆகவேண்டும்.

சூரிய நமஸ்காரம் போன்று பல ஆசனங்களையும் உள்ளடக்கிய தொடர் பயிற்சிகள் (விந்யாஸ யோகம்) குறைந்த நேரத்தில் செய்ய முடிபவை, நிறைந்த பலன்கள் தருபவை. மற்ற சில உடற்பயிற்சிகள் போன்று விலையுயர்ந்த, எந்த விதமான விசேஷ உபகரணங்களும் தேவையில்லை. ஆட்கள் அகப்பட்டால் கூட்டாகச் சேர்ந்தும் செய்யலாம், இல்லை தனியாகவும் பயிற்சி செய்யலாம்.

“நம் மூச்சின் வசத்தில் தான் வாழ்க்கை முழுதும் உள்ளது; உடலை மனத்துடன் இணைக்கும் நூலிழை மூச்சு தான்; அதனால் சுய உணர்வோடு கூடிய மூச்சின் இயக்கம் உடலை மட்டுமல்ல, மன உணர்வுகளையும் சீராக்குகிறது” என்று யோக தத்துவம் கூறுகிறது. மூச்சுப் பயிற்சிகள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அடுத்த உயர் நிலைக்குக் கொண்டு செல்கின்றன என்றால் மிகையில்லை. உதாரணமாக, உஜ்ஜயி போன்ற ஆக்சிஜனேற்றத்தை அதிகரிக்கும் பிராணாயாமப் பயிற்சியை தினந்தோறும் செய்து வருவது மாசுகளின் (environmental pollution) விளைவுகள் நம்மைத் தாக்காவண்ணம் ஒரு நிரந்தர தற்காப்பு வளையத்தை நம் உடலில் உண்டாக்குகிறது. இதை என் அனுபவத்திலேயே கண்டிருக்கிறேன். வருடாவருடம் குளிர்காலம் ஆரம்பித்தவுடன் தொற்றுகளில் சிக்கி, எப்போதும் இருமி, தும்மிக்கொண்டிருக்கும் நண்பர்கள் பலர் பிராணாயாமம் செய்ய ஆரம்பித்ததும் இந்தத் தொல்லைகளில் இருந்து முழுவதுமாக விடுபட்டிருக்கின்றனர்.

பிராணாயாமப் பயிற்சிகள் மருத்துவ சோதனைக்கு ஆட்படுத்தப் பட்டு அவற்றின் ஆச்சரியகரமான ஆற்றல்களும், விளைவுகளும் நாள்தோறும் பேசப் பட்டு வருவது மனம் நரம்பு இயைந்த தற்காப்பியல் (psycho-neuro immunology) என்ற வளர்ந்து வரும் மருத்துவத் துறையில் முக்கிய சேதி. மன உளைச்சல்கள், மனப் பிரமைகள், மனத் தடைகள் இவற்றை வரவிடாமல் தடுத்தல், குணப்படுத்துதல் இரண்டிலும் பிராணாயாமம் பெருவெற்றி கண்டிருக்கிறது.

செயல் நலம்:

செயல் புரியும் திறனே யோகம் (யோக: கர்மஸு கௌசலம்) - பகவத்கீதை





எல்லா வளர்ந்த நாடுகளிலும் ஊருக்கு ஊர் யோகா பள்ளிகள் பெருமளவு அதிகரித்து வருகின்றன. அரசு மற்றும் பொது நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் யோகா கற்றுக் கொள்வதை வலிய வந்து ஊக்குவிக்கின்றன. ஏனெனில், யோகா தினசரி அலுவல் மற்றும் தொழில் புரிதலில் ஏற்படும் அயற்சியையும், தளர்ச்சியையும் நீக்கி புத்துணர்வு அளிக்கிறது. பணியிடச் சூழலுக்குக் குந்தகம் விளைவிக்கும் ஆக்ரோஷ உணர்வுகள், அசூயை, அகங்காரம் (ஈகோ) இவற்றை பக்குவப்பட்ட, சமச்சீரான நோக்கில் கையாளும் திறனை வளர்க்கிறது. முழு ஈடுபாட்டுடனும் அதே சமயம் பற்றற்ற உணர்வுடனும் கூட செயல்புரியும் கர்மயோகம் நடைமுறையில் வருவதற்கு யோகப் பயிற்சிகள், யோக சிந்தனைகள் உதவுகின்றன. இதன் விளைவாக உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது. நிறுவனங்கள் தங்கள் இலக்குகளை எட்டி, பல சமயங்களில் இலக்குகளைத் தாண்டிச் சென்று சாதனை படைக்கவும் முடிகிறது.

உலகெங்கும், அநேகமாக எல்லா விளையாட்டு வீரர்களின் பயிற்சி வகுப்புகளிலும் யோகாவுக்கு இடம் உள்ளது. யோகா பயிற்சி செய்யும் மாணவர்களின் கற்கும் திறன், சுறுசுறுப்பு, நினைவாற்றல் இவை நன்கு வளர்ச்சியடைவதும் சந்தேகமின்றி நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

சமுதாய நலம்:

மக்கள்தொகை மிகுந்த, தரமான பொது சுகாதார, மருத்துவ வசதிகள் தேவைக்கு மிகக் குறைவாக இருக்கும் இந்திய நாட்டில் யோகா போன்று வருமுன் காக்கும் ஆரோக்கிய முறைகள் ஒரு பெரிய வரப்பிரசாதம். நோய்த் தடுப்பு ஊசிகள், சுற்றுப் புற சுகாதாரம், சத்துள்ள உணவு இவற்றோடு கூட பிராணாயாமம் போன்ற பயிற்சிகளும் எல்லா தரப்பு மக்களையும் சென்றடையச் செய்ய வேண்டும். ஏழை மக்களது தினசரி ஆரோக்கியம் ஒழுங்கு பட்டால் பலவிதமான சாதாரண வியாதிகள் வருவது பெருமளவில் கட்டுப் படுத்தப் படும்.

ஸ்ரீஸ்ரீயின் வாழும் கலை அமைப்பு மகாராஷ்டிரத்தின் பல கிராமங்களில் யோகா மூலம் குடிப் பழக்கத்தை அறவே ஒழித்திருக்கிறது. வடமேற்கு மாநிலங்களில் போதைப் பழக்கங்களில் சிக்கிக் கொண்ட ஏராளமானவர்களை யோகா மூலம் இவற்றினின்று மீட்டிருக்கிறது. மற்ற பலவிதமான சீர்திருத்த முறைகளைக் காட்டிலும் யோகா விரைவில் நல்ல பயன் தருகிறது. பக்க விளைவுகள் இல்லாமல், இத்தகைய பிரசினைகளுக்கு நிரந்தரத் தீர்வு அளிக்கிறது.

சமுதாயத்தில் வன்முறைகள், வக்கிரங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. கல்வி முறையில் நீதிபோதனைக்கான இடம் வெறுமையானது, ஆன்மிகப் பரிமாணம் போதிய அளவு கவனிக்கப் படாமல் இருப்பது, மனித உணர்வுகள் (human values) பற்றிய புரிதல் இல்லாமை இவை இதற்கான முக்கியக் காரணங்கள். ஒரேயடியாக கட்டுப்பாடுகள் போடுதல் மூலமாக அல்லாமல் இந்த விஷயங்களை இயல்பான, அழகான, மென்மையான முறையில் யோகா வாழ்க்கையோடு இணைக்கிறது.

விடலைப் பருவத்து இளைஞர்களும், யுவதிகளும் அந்த வயதைக் கடக்கையில் உடலும், மனமும் பலவித மாற்றங்களுக்கு உட்படுவதால், மிக எளிதாக தீய பழக்கங்கள் மற்றும் பலவிதமான மனப்பான்மைகளுக்கு (complexes) வசப் படுபவர்களாக இருக்கிறார்கள். புரிந்து கொள்ளுதல், புரிந்து கொள்ளப் படுதல் இரண்டுமே அவர்களுக்குப் பிரசினையாக இருக்கின்றன. ஆனால் இந்த வயதிலோ அல்லது இதற்கு வரும் முன்போ யோகா கற்றுக் கொண்டு பயிற்சி செய்யும் இளவயதினர் இந்த பருவத்தின் உற்சாகத்தையும், சவால்களையும் மிகத் தெளிவான, இயல்பான முறையில், தங்கள் இயல்பான புன்முறுவலை இழக்காமல் கையாள்கிறார்கள்! இதை என் அனுபவத்தில் பார்க்கிறேன். பல யோகப் பயிற்சி முகாம்கள் இளமைக் கூட்டங்களால் நிரம்பியிருப்பதில் ஆச்சரியம் இல்லை தான்!

யோகா சமய, சமூக நல்லிணக்கத்தை வளர்க்கிறது என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் கூறலாம். யோகத்தில் ஈடுபடுவர்கள், தியானம் செய்பவர்கள் தாங்கள் பின்பற்றும் சமய, சமூக நம்பிக்கைகளின் எல்லைகளைப் புரிந்து கொள்கிறார்கள். ஆன்மிகத் தேடல் என்பது புத்தகங்களையும், கோட்பாடுகளையும் தாண்டிய சுய அனுபவம் என்றும் தெளிவடைகிறார்கள். இந்த சிந்தனை மூலம் அவர்களது மனம் விசாலமடைகிறது. யோகம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களில் பல சாதிக் காரர்களும் இருக்கிறார்கள், இவர்களை பல சாதிக் காரர்களும் தோழமையுடன் குரு என்பதாகப் பாவித்துக் கற்றுக் கொள்ளவும் செய்கிறார்கள். பாகிஸ்தானில் “வாழும் கலை” அமைப்பு நடத்தும் யோக வகுப்புகளில் கலந்து கொண்டவர்கள் (இவர்கள் சிலரே ஆயினும்) அங்கே சிவசிவ என்று பாடுவதைக் கேட்டு ஜிகாத் செய்ய எண்ணுவதில்லை; கூடப் பாடுகிறார்கள், மனம் மகிழ்கிறார்கள்!

இன்று உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தீவிரவாதத்தின் பல கோர முகங்களை நேர்கொள்வதிலும் யோகா பெரும்பங்கு ஆற்ற முடியும். காஷ்மீர் தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட் குழுக்களுக்கு யோகா பற்றிய அறிமுகம் தர முயற்சிகள் நடந்ததாக செய்திகள் படித்த நினைவு. இன்று யோகாவை உலகெங்கும் எடுத்துச் செல்லும் பேராசான்கள் இது பற்றி மேலும் சிந்திக்க வேண்டும்.

நடைமுறைப் படுத்துதல்:

இந்தியாவைப் பொறுத்தவரை யோகா என்பது பணவசதி உள்ள, மத்திய மற்றும் மேல்தட்டு மக்களுக்கு மாத்திரம் உள்ள சமாசாரம் என்பதான கருத்தே ஒரு பதினைந்து இருபது வருடங்கள் முன்பு வரை நிலவி வந்திருக்கிறது (அதற்கும் முன்பு யோகா என்பது முக்கிய நீரோட்டத்தில் இந்த அளவு கலக்காமல் ஒரு பழம்பெருமை (exotic) விஷயம் மாதிரி மட்டுமே தான் இருந்தது என்பதும் வேதனையான உண்மை). ஆனால் இன்று இந்த நிலைமை மாறி வருகிறது.

உலகப் புகழ் பெற்ற யோக ஆசாரியர் பி.கே.எஸ்.ஐயங்கார் அவர்களிடம் “பல பேருக்கு நீங்கள் யோகா கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். அவர்களில் உங்கள் மனதுக்குப் பிடித்த சீடர்கள் யார்?” என்று கேட்ட போது அவர் சொன்ன ஒரு பெயர் அஜித்குமார். காரணம்? “அஜித்குமார் யோகாவை பாமர மக்களிடம் எடுத்துச் சென்றிருக்கிறார். பட்டி தொட்டிகளில் எல்லாம் ஏராளமான பேரை யோகா செய்ய வைத்திருக்கிறார். எனது சீடரின் இந்தப் பணியை எண்ணிப் பெருமைப் படுகிறேன்” என்று சொன்னார். யார் இந்த அஜித்குமார் என்று தேடிப் பார்த்ததில், இவர் ஒரு மறைந்த சமூக சேவகர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் முழு நேர பிரசாரகராக இருந்து, அந்த இயக்கத்தின் எல்லா தினசரி பயிற்சி வகுப்புகளிலும் யோகாசனங்களை அறிமுகம் செய்தவர். அண்மைக் காலங்களில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், பாபா ராம்தேவ், ஜக்கி வாசுதேவ் போன்ற யோக ஆசான்கள் யோக வாழ்வியலை மாபெரும் சமுதாய இயக்கங்கள் மூலம் முன்னெடுத்துச் சென்று வருகின்றனர். “ஊருக்குழைத்திடல் யோகம்” என்ற பாரதி வாக்குப் படி யோகாவைப் பரப்புவதோடு பெரிய அளவிலான சமூக சேவைப் பணிகளிலும் இந்த இயக்கங்கள் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சி தரும் விஷயம். இப்போதைக்குக் கூட சமுதாயத்தின் எல்லா தரப்பு மக்களையும் இத்தகைய இயக்கங்கள் முழுமையாக ஊடுருவி விடவில்லை. ஆனால் அது கண்டிப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்று கூறலாம்.





கடந்த டிசம்பர் (2006) முதல் வாரம் மத்திய சுகாதார அமைச்சகம் எல்லாக் கல்வி நிலையங்களுக்கும் “கோலா வெளியே, யோகா உள்ளே” என்ற அளவில் ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. உடலுக்குத் தீங்கு தரும் கோகோ கோலா போன்ற காற்றடைத்த பானங்களை மாணவர்கள் அதிகமாகக் குடித்து, பழக்கப் படுத்திக் கொண்டு தங்கள் உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்ற நோக்கத்துடன் வந்த முதல் ஆணையை எந்தப் பள்ளிகளும் முழுதாக நடைமுறைப் படுத்தியதாகக் காணோம். பல பள்ளிகளில் கான்டீனுக்குள் விற்பனையை நிறுத்தியதாகக் கண்துடைப்பு செய்துவிட்டு, வாசலிலேயே கடை போட்டு இந்த பானங்கள் விற்பனை நடப்பதாக செய்திகள் வந்தன. இது இப்படி என்றால் “எல்லா கல்வி நிறுவனங்களிலும் எல்லா மாணவர்களுக்கும் யோகா கற்றுத் தர வழிவகை செய்ய வேண்டும்” என்று வந்த இரண்டாவது அறிவிப்பு பற்றிப் பேச்சே இல்லை! நகர்ப்புறங்களில், உயர் தரமுள்ள பள்ளிகள் அனைத்திலும் இப்போது யோகா பயில வாய்ப்பு, வசதி உள்ளது. யோகா கட்டாயம் என்று இல்லாத போதும் பயன்கள் கருதி பெரும்பான்மை மாணவர்கள் பயில்கிறார்கள். ஆனால், வசதி குறைந்த மாணவர்கள் பயிலும் அரசு மற்றும் அரசுதவி பெறும் பள்ளிகள், கிராமப்புற பள்ளிகள் இவற்றில் உள்ள மாணவர்களுக்கு பெரும்பாலும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. மேற்சொன்ன ஆணையை அமல்படுத்துவதில் அரசு முனைப்பு காட்டுமா என்று தெரியவில்லை.

இன்னொரு முக்கியமான தேவை ஆசிரியர்கள். நல்ல பயிற்சியும், அனுபவமும், கற்பிக்கும் திறனும் வாய்ந்த யோக ஆசிரியர்கள் தேவைக்கு மிக மிகக் குறைவாகவே இருக்கிறார்கள், அதுவும் கூட நகரங்களில் மட்டும் தான். பலர் நல்ல கட்டணம் செலுத்தி யோகா கற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதால், இந்த ஆசிரியர்கள் இதை ஒரு முழு நேரத் தொழிலாகவே கொண்டுள்ளனர் என்பதும் உற்சாகமூட்டும் விஷயம். ஆனால் அடுத்த கட்டமாக யோகாவை எல்லா மக்களுக்கும், கிராமங்களுக்கெல்லாம் கூட எடுத்துச் செல்லும் பணியை சேவை மனப்பான்மை உள்ள யோக இயக்கங்கள் தான் செய்ய வேண்டும். அதற்கு பெருமளவில் ஆசிரியர்கள் தேவைப் படுவார்கள். நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட பெங்களூர் முகாமில் ”எத்தனை பேர் யோகா கற்றுக் கொடுக்க விரும்புகிறீர்கள்?” என்று ஸ்ரீஸ்ரீ கேட்டபோது பல கைகள் உயர்ந்தன! நீங்கள் எல்லாம் உங்கள் பெயர்களைப் பதிவு செய்து விட்டுப் போங்கள். நாங்கள் தொடர்பு கொண்டு உங்களுக்கு மேலும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்கிறோம் என்றும் அவர் கூறினார்.

இத்தகைய பொதுஜன அளவிலான யோக இயக்கங்கள் வெற்றிபெற வேண்டும். கண்டிப்பாக வெற்றி பெறும். ஏனென்றால் யோகா ஒரு சமுதாயத் தேவை.

பெண்ணடிமையை மனுநீதி வலியுறுத்துகிறதா?

சரியான பார்வையில் மனு ஸ்மிருதி : மலர் மன்னன்

ஓரு குலத்துக்கொரு நீதி என்பதுவே மனுநீதி என்று ஓசை நயத்திற்காகப் பேசிப் பேசி, சமுதாயத்தைப் பிளவு படுத்தி, மக்களிடையே ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் பழங்காலத்துப் பிற்போக்கான சட்ட நூல்தான் மனு நீதி என்கிற எண்ணம் நம்மில் பலரிடையே நிச்சயமாகிவிட்டிருக்கிறது. விருப்பு வெறுப்பின்றி, முன்கூட்டியே ஓர் அபிப்பிராயத்துடன் அணுகாமல் ஆராய்ந்து பார்த்தால்தான் மனு நீதி என்கிற மனு ஸ்மிருதி வகுத்திருக்கும் விதிமுறைகள் எத்தகையன என்னும் முடிவுக்கு வரமுடியும்.

முதலில் ஸ்மிருதி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆதியிலிருந்து தொடர்ந்து வருபவை ஸ்ருதி என்கிற செவி வழியாகத் தலைமுறை தலைமுறையாய் மிகுந்த மரியாதையுடன் ஏற்கப்பட்டு வரும் கோட்பாடுகள். நான்மறைகளும் அவற்றின் அடியற்றி வரும் உபநிடதங்களும் இவ்வகையைச் சேர்ந்தவை. கண்ணபிரான் அருளியதாக அறியப்படும் பகவத் கீதையையுங்கூட ஸ்ருதி என்று கூற வியலாதுதான். ஆனால் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு வாய்மொழியாக அது உபதேசிக்கப்பட்டமையால் அதையும் ஸ்ருதியெனக் கொள்வதில் தவறில்லை எனக் கருதுவோர் உண்டு. ஸ்மிருதி எனப்படுபவை ஏட்டில் பதிவு செய்யப்பட்ட விதிமுறைகள். வேத காலத்திற்குப் பின் வெகு காலங் கழிந்த பிறகுதான் இவை உருவாயின. பொதுவாக தர்ம சாஸ்திரங்கள் எனக் கருதப்படுபவைதாம் ஸ்மிருதி என்று அழைக்கப்படுகின்றன. மாறும் காலத்திற்கேற்ப மாற்றங்கொள்பவைதாம் தர்ம சாஸ்திரங்கள். அவ்வாறு மாற்றங்கொள்ளாமல் சில விதிமுறைகள் முரண்டுபிடித்தால் மூலாதாரமான ஸ்ருதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, ஸ்ருதிகள் என்ன சொல்கின்றனவோ அவற்றை ஏற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட ஸ்மிருதியின் கூற்றைத் தள்ளிவிட வேண்டும் என்று தர்ம சாஸ்தரங்களான ஸ்மிருதிகளே அறிவுறுத்தியிருக்கின்றன. ஸ்மிருதிக்கும் ஸ்ருதிக்கும் ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு காணப்படுமானால் ஸ்ருதியில் சொல்லப்பட்டிருப்பதைத்தான் சரியென்று கொள்ளவேண்டும் என மனு ஸ்மிருதியும் தனது இரண்டாவது சருக்கத்தின் பனிரெண்டாவது, பதிமூன்றாவது செய்யுள்களில் தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஆக, ஹிந்து சமுதாயத்திற்கு ஸ்ருதிகளான வேதங்கள்தாம் வழிகாட்டும் அறநெறிகள். மனு ஸ்மிருதியே ஒப்புக்கொண்டுள்ளவாறு, ஸ்மிருதிகள் இரண்டாம் பட்சந்தான். மனு நீதி எனப்படும் மனு ஸ்மிருதியானது ஹிந்து சமுதாயத்தின் ஒரேயரு ஸ்மிருதியல்ல. மொத்தம் உள்ள பதினெட்டு ஸ்மிருதிகளுள் ஒன்றுதான் அது. ஒரு தனி நபர், ஒரு குடும்பம், ஒரு சமுதயம், ஒரு தேசம் ஆகியவை கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகளை, தான் எழுதப்பட்ட காலத்திற்கேற்ப வகுத்துள்ளது, மனு ஸ்மிருதி. விண்ணியல், மருத்துவம் முதலான விஷயங்கள் குறித்தும் அது பேசுகிறது.


மனு ஸ்மிருதி எப்பொழுது எழுதப்பட்டது என்பதற்கு வரலாற்றுப் பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லை. எந்தக் கால கட்டத்தில் அது ஹிந்து சமூகத்தால் வார்த்தை பிசகாமல் அனுசரிக்கப்பட்டது என்பதற்கும் ஆதாரம் இல்லை. ஸ்ருதிகளான வேதங்கள் தோன்றி நீண்ட நெடுங்காலம் கழிந்த பிறகுதான் ஸ்மிருதிகளுள் ஒன்றான மனு ஸ்மிருதி தோன்றியது. மனு ஸ்மிருதிக்குப் புராண அந்தஸ்தை அளிப்பதற்காக அதனை இயற்றியவர் மனு என்கிற ஆதி புருஷன் என்று கற்பிக்கப்பட்டுள்ளது. மொத்தம் பதினான்கு மன்வந்தரங்கள் கொண்டது ஒரு கல்ப காலம் என்றும், ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் ஒரு மனு ஆதியானவர் என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. தற்சமயம் நடப்பது ஏழாவது மன்வந்தரம். இதன் ஆதிபுருஷர் வைவஸ்த மனு என்கிறது, புராணம். இந்த மனு எழுதி வைத்ததுதான் மனு ஸ்மிருதி என்று எவரும் கூறினால் அதை ஏற்பது எளிதல்ல.

வரலாற்றுக் கண்ணோட்டப்படிப் பார்த்தால் சுங்க வம்சத்துப் பேரரசர் புஷ்யமித்திரர் காலத்தில்தான் மனு ஸ்மிருதி என்கிற பெயரில் ஒரு சாஸ்திரம் எழுதப்பட்டது என்று ஒரு தரப்பினரால் கருதப்படுகிறது. ஆனால் இதற்கும் உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. ஆக, புராதன வேத காலத்து ஹிந்து சமுதாயம் இந்த மனு ஸ்மிருதியை அனுசரித்திருக்க வாய்ப்பில்லை. மனு ஸ்மிருதி எழுதப்பட்ட காலம் கி. மு. முதல் நூற்றாண்டு என ஒரு கருத்து நிலவுகிறது.

மனு ஸ்மிருதியைப் பற்றிய பிரதான கருத்துகள் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்தான் வெளிப்படலாயின. இவை பெரும்பாலும் ஹிந்து சமய நம்பிக்கைகளையும் ஹிந்து சமூக நடைமுறைகளையும் இழிவானவை என நிறுவவேண்டும் என்கிற நோக்கத்துடன்தான் தெரிவிக்கப்பட்டன. மேலும் மனு ஸ்மிருதியின் மீதான கடுமையான விமர்சனங்கள் பெரும்பாலும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டுத்தான் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த மொழிபெயர்ப்புகள் ஐரோப்பியர்களால், அவர்களின் கண்ணோட்டத்திற்கும் புரிந்துகொள்ளும் ஆற்றலுக்கும் பயிற்சிக்கும் ஏற்பவே இருக்கும் என யூகிப்பதில் தவறிருக்காது.

மனு ஸ்மிருதியில் மொத்தம் 2031 செய்யுள்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு ஒழுக்க விதியை வலியுறுத்துகிறது. ஆனால் இந்த 2031 விதிமுறைகளும் எந்தக் கால கட்டத்திலேனும் ஹிந்து சமூகத்தால் பாரத தேசம் முழுவதும் ஒட்டுமொத்தமாகக் கடைப்பிடிக்கப்பட்டதாகக் கூறுவதற்கில்லை.
மனு ஸ்மிருதியை ஆதாரம் காட்டிப் பேசப்படுகின்ற விதிமுறைகள் பலவும் அவரவர் கன்ணோட்டப்படியான விளக்கவுரைகளேயன்றி நேரடியான மொழிபெயர்ப்புகள் அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த தலை சிறந்த சமூக சீர்திருத்தத் துறவியும், ஆரிய சமாஜம் என்னும் அமைப்பை உருவாக்கியவருமான சுவாமி தயானந்த சரஸ்வதி மனு ஸ்மிருதிக்கு ஒரு விளக்கம் தந்துள்ளார். மனு ஸ்மிருதியின் செய்யுள்களிலேயே பல ஒன்றுக்கொன்று முரண்படுவதை அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது, ஒவ்வொரு கால கட்டத்திலும் அவ்வப்போதைய வாய்ப்புகளுக்கு இணங்க மனு ஸ்மிருதியில் இடைச் செருகல்கள் நுழைந்து விட்டிருக்கின்றன என்பதுதான். ஒன்றோடொன்று முரண்படும் விதிமுறைகளைக் கண்டறிந்து இன்றைய காலகட்டத்திற்கு எந்த விதிமுறைகள் பொருந்துகின்றனவோ அவற்றை ஏற்றுக்கொண்டு பொருந்தாதவற்றைப் புறக்கணிப்பதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக, மனு ஸ்மிருதியின் இரண்டாம் சருக்கத்தின் தொண்ணூற்றேழாவது செய்யுள் கீழான குணவியல்புகள் உள்ள வர்கள் வேதமெய்ப்பொருளை அறியவியலாது என்று கூறுகிறது. பிறவியின் அடிப்படையில் பேசப்படாமல் குண நலன்களையே வலியுறுத்துவதாக இது இருப்பதால் இதனை ஏற்பதுதான் முறையாக இருக்கும்.
ஆண், பெண் என்கிற பேதமின்றி எல்லாக் குழந்தைகளையும் ஐந்து அல்லது எட்டாவது வயதிலாவது கட்டாயக் கல்வி பெறச் செய்வது பெற்றொருக்கு மட்டுமின்றி அரசுக்கும் நிர்வாக சபைகளுக்கும் கடமை யென்று ஏழாவது சருக்கத்தின் 152 வது செய்யுள் விதிக்கிறது. குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யத் தவறுவது தண்டனைக்குரிய குற்றம் என்றே இச்செய்யுள் எச்சரிக்கிறது. எனவே பெண்களுக்குக் கல்வி அவசியமில்லை என விதிமுறை ஏதும் இருக்குமானால் முரண்பாடான அந்த விதியைத் தூக்கி யெறிந்துவிடலாம்.


திருமணத்தைப் பற்றிப் பேசும்போது, தனது ஒன்பதாவது சருக்கத்தின் தொண்ணூறாவது செய்யுளில் ஒரு பெண்ணுக்கு உரிய பருவத்தில் தன் தகுதிக்கு ஏற்ற கணவனைத் தேர்வு செய்துகொள்ளும் உரிமையை மனு ஸ்மிருதி உறுதிசெய்கிறது. எனவே பாலிய விவாகத்தை அது வலியுறுத்துவதாகக் கருதத் தேவையில்லை.

திருமணப் பொருத்தம் என்பது மனப் பொருத்தம், குண வியல்புகளுக்கியைந்த கருத்தொற்றுமை, உடல் ஆரோக்கியம் ஆகியவைதான் என்று மனு ஸ்மிருதி கூறுகிறது. அவரவர் வகுப்பில் மணம் செய்துகொள்வது அவசியம் என்று கூறுகையில் இவற்றைத்தான் மனு ஸ்மிருதி வலியுறுத்துகின்றதேயல்லாமல் பிறவியின் மூலம் வருகின்ற வகுப்பைக் குறிப்பிடவில்லை.

பெண்களை மிக உயர்வாகப் போற்றும் பல செய்யுள்களை மனுஸ்மிருதியில் காணலாம். மூன்றாவது சருக்கத்தின் அறுபத்திரண்டாவது செய்யுள் மனைவியைக் கணவன் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என விதிக்கிறது. மகிழ்ச்சியில்லாத மனைவி இருக்கிற குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்காது என்று மனு ஸ்மிருதி எச்சரிக்கிறது. பெண்களை தந்தைமாரும் சகோதர்களும், ஏன் கணவனுங்கூட வணங்கக் கடமைப் பட்டிருப்பதாக அது கூறுகிறது. பெண்களுக்குக் குடும்பங்களில் நல்ல உணவு, சிறந்த ஆடையாபரணங்கள் ஆகியவற்றை அளித்து மகிழ்விக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதி விதிக்கிறது. பெண்கள் மதிக்கப் படுகின்ற குடும்பங்களிலும் சமுதாயத்திலும்தான் சிறந்த மனிதர்கள் தோன்றுவார்கள் என்று மனு ஸ்மிருதி அறிவுறுத்துகிறது. பெண்கள் துன்புறும் நிலை இருக்கின்ற குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது என்று அது சொல்கிறது. பெண்களை மதிக்காத சமுதாயத்தில் எத்தனை நல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றால் பயன் விளையாது என்கிறது, மனு ஸ்மிருதி. அதன் மூன்றாவது சருக்கத்தில் ஐம்பத்தைந்திலிருந்து, ஐம்பத்தொன்பது வரையிலான செய்யுள்கள் பெண்கள் நல னையே பிரதானமாக வலியுறுத்துகின்றன.

தகப்பன் பெயர் இல்லையேல் தாயின் பெயரால் பிள்ளைகள் அறியப்படட்டும் என்று சொல்கிற நடைமுறை வேத கால சமுதயத்தில் இருந்திருக்கிறது. பெண்கள் ஆண்களோடு சரி சமானமாக அமர்ந்து தத்துவ விசாரங்களிலும் தர்க்கங்களிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என்பதற்கும் சான்றுகள் உண்டு. எனவே பெண்ணடிமை முறையும், பெண்களை அறிவார்ந் த சபைகளிலிருந்து விலக்கி வைக்கும் போக்கும் இடையில்தான் நுழைந்திருக்கக்கூடும் எனப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்குச் சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனு ஸ்மிருதியில் அதற்கு ஏற்ற இடைச் செருகல்கள் உள்நோக்கத்துடன் நுழைக்கப்பட்டிருக்கலாம் என யூகிக்க முடியும்.
மனு ஸ்மிருதியின் பத்தாவது சருக்கத்தில் உள்ள அறுபத்தைந்தாவது செய்யுள் ஒரு சூத்திரன் பிராமணனின் நிலைக்கு உயர்வதும் அதேபோல் ஒரு பிராமணன் சூத்திரனின் நிலைக்குத் தாழ்வதும் சாத்தியம் என்று சொல்கிறது. சத்திரியர், வைசியர் விஷயத்திலும் இது பொருந் தும் என்று அது மேலும் விளக்குகிறது. இதிலிரு ந்து பிறவியின் பயனாக வர்ணங்கள் அமைவதில்லை, குணநலன்களின் அடிப்படையில்தான் அவை நிர்ணயிக்கப்படுகின்றன என்று மனு ஸ்மிருதி வலியுறுத்துவதாகக் கொள்ளமுடியும்.


மேலும், பிராமணன் ஒரு குற்றம் இழைத்தால் அதற்கு மிக அதிக பட்ச மாகவும், அதே குற்ற்றத்தை இழைத்த சத்திரியனுக்கு அதைவிடச் சிறிது குறைவாகவும் வைசியனுக்கு அந்தக் குற்றத்திற்கு மேலும் குறைவாகவும் சூத்திரனுக்கு மிக மிகக் குறைவாகவும் தண்டனை விதிக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதி நிர்ணயிக்கிறது. காரணம், பிராமணனாக அறிவு நிலையில் உயர்ந்திருப்பவன் தெரிந்தே குற்றம் இழைத்திருப்பான் என்று கொள்ளவேண்டும் என அது விளக்குகிறது. பிற பிரிவினரை ஓரளவுக்கே விவரம் தெரிந்தவர்களாகக் கருத வேண்டுமாதலால் அதற்கேற்பக் குறைவாகவும், சூத்திரன் தனது அறியாமையால் குற்றம் இழைத்திருப்பான் ஆதலால் மிக மிகக் குறைவாகவும் அதே குற்றத்திற்குத் தண்டணை விதிப்பதே பொருத்தம் என்கிறது, மனு ஸ்மிருதி.

மனு ஸ்மிருதியைப் பற்றிய விரிவான பிரஸ்தாபம் காலனி யாதிக்க காலத்தில்தான் தலையெடுத்தது. குறிப்பாக ஹிந்து சமூகத்தைக் குறை கூறி, மேற்கத்திய நாகரிகமும் சம்பிரதாயங்களும்தாம் மேன்மையானவை என்று மனதில் பதிய வைப்பதற்குத்தான் அத்தகைய பிரஸ்தாபம் பயன்படுத்தப் பட்டது. ஆங்கிலக் கல்வியின் வழியாகத் தம் தாயகத்தின் கலாசாரத்தையும் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் காணப் பழகியவர்களுக்கு காலனியாதிக்கக் கல்வியாளர்கள் மனு ஸ்மிருதி பற்றி வெளியிட்ட கருத்துகள்தாம் வேத வாக்காகவும் அமைந்துவிட்டன. அந்த அடிச்சுவட்டில் தொடர்ந்து நடப்பவர்களிடையே மனு ஸ்மிருதியைப் பற்றி ஒருதலைப்பட்சமான கருத்து நிலவுவது இயற்கைதான்.


பின் குறிப்பு:

திண்ணை இதழில் முதுபெரும் எழுத்தாளர் திரு. மலர்மன்னன் எழுதிய கட்டுரை இது. அவர் அனுமதியுடன், அதை இங்கே மீள் பதிப்பிக்கிறேன்.

பெண்கள் பற்றி பொதுவாக மனு மிக உயர்வாகவே கூறிச் செல்கிறார், அவர் பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தவில்லை என்று சுதந்திரமான வாசிப்பில் நானும் புரிந்து கொண்டிருக்கிறேன். அதனால், இது பற்றிய திரு. மலர்மன்னன் கருத்துடன் உடன் படுகிறேன்.

पुराणमित्यॆव न साधु सर्वं, सन्त: परीक्ष्यान्यतरात् भजन्ते ।
तातस्य कूपोयमिति ब्रुवाण:, क्षारम् जलं कापुरुषा: पिबन्ति ॥

இந்த சம்ஸ்கிருத சுலோகம் கூறுகிறது -

தொன்மையானது என்பதாலேயே எல்லா விஷயமும் நல்லது ஆகி விடாது
சான்றோர்கள் நன்கு சோதித்துப் பார்த்தபின்பே ஒரு விஷயத்தைப் போற்றுவார்கள்
முட்டாள்கள் தான் தன் தாத்தா வெட்டிய கிணறு என்பதற்காக
அதில் வரும் உப்புத்தண்ணீரையும் குடித்துக் கொண்டிருப்பார்கள்!

அதனால், வர்ணாசிரமம் பற்றிய மனுஸ்மிருதியின் கருத்துக்கள் பலவும் எனக்கு ஏற்புடையவை அல்ல. சுவாமி விவேகானந்தரையும், டாக்டர் அம்பேத்கரையும், ஸ்ரீநாராயண குருவையும் முன்னோடிகளாகக் கொண்டு, சாதிப் பாகுபாடுகளையும், சாதீயத்தையும் வேரோடு ஒழிக்கப் பாடுபடும் இந்துத்துவ நிலைப்பாடே என்னுடையது.

ஆனால் மனுஸ்மிருதி என்பது முழுக்க ஒரு தீய நூல் போன்றும் மனு ஒரு அரக்கன் போன்றும் கூறும் சித்தரிப்புக்களே தொடர்கின்றன. இதுவும் தவறு என்று நான் கருதுகிறேன். திருக்குறளில் கூடக் காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்கள் உள்ளன. அதற்காக அந்த நூலையே தூக்கிப் போட்டு விடுவதில்லை நாம், அதில் வரும் நல்லவற்றை எடுத்துக் கொள்கிறோம் அல்லவா? அது போன்று தான் மனுஸ்மிருதியும் மதிப்பிடப் படவேண்டும்.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

Friday, February 23, 2007

இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன? - ஜெயமோகன்

சில நாட்கள் கழித்து திண்ணையில் ஜெயமோகன் எழுத்துக்களைப் பார்த்து மகிழ்ச்சி. என்றும் வற்றா ஜீவநதி - இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன? என்ற தலைப்பில் அவர் கல்லூரி மாணவர்களுக்கு ஆற்றிய எளிய உரையின் இந்தக் கட்டுரை வடிவம் இலக்கியத்தில் கொஞ்சம் ஆர்வமுள்ளவர்கள் கூடப் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.

நவீனத்துவம் என்னும் இலக்கிய வடிவத்தின் கூறுகளை எளிமையாக எடுத்துச்சொல்லி, இவ்வகையான இந்திய இலக்கியம் எப்படி மேற்குலக நவீனத்துவ இலக்கியம் போன்று இல்லாமல் "உக்கிரமான வெறுமையின் சாரத்திலும் கனிவைக் காணும்" போக்கை அடைந்தது என்று தனக்கே உரிய பாணியில் விளக்குகிறார்.

..ஓயாது ஒழியாது இன்பத்திற்காக தவித்தபடியே இருக்கிறது மனிதமனம். அழியாத இந்த ஆனந்த வேட்கையே மனதின் இயல்பான நிலை. ஏன் மனம் ஆனந்தத்தை நாடுகிறது? ஏனெனில் மனித மனம் ஆனந்தத்தால் ஆனது. ஆனந்தமே அதன் சகஜ நிலை. எதனாலும் தீண்டபப்டாதபோது அது ஆனந்தமாகவே இருக்கிறது . தன் இயல்புநிலைக்குச் செல்ல அது எப்போதும் ஏங்கியபடியே உள்ளது

ஆனந்தம் ப்ரஹ்மேதி வ்யஜானாத்.. "ஆனந்தமே பிரம்மத்தின் இயல்பு நிலை என்று அறிவாய். ஆனந்தத்திலிருந்து தான் இந்த உயிர்கள் எல்லாம் உண்டாகின்றன. ஆனந்தத்தில் தான் உண்டாகிய உயிர்கள் வாழ்கின்றன. ஆனந்தத்திலேயே அவை சென்று ஒடுங்குகின்றன" (தைத்திரிய உபநிஷத், யஜுர்வேதம்) என்னும் உபநிஷதக் கவிதையின் எதிரொலியாக உள்ளது மேற்சொன்ன ஜெயமோகன் கருத்து. இந்த இந்திய சிந்தனை இழை தான் எவ்வளவு ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது!

ஆம் மனித மனத்தை அதன் திரைகளை விலக்கிப் பார்த்தால் தெரிவது காமம் வன்முறை அகங்காரம் ஆகியவைதான். நம் மரபு இதை 'காமகுரோதமோகம்' என்றது. திரைவிலக்கி அதை காட்டுவதுடன் திருப்தியடைகிறது ·ப்ராய்டியம். ஆனால் அதுவும் ஒரு திரை. அதையும் நாம் விலக்க முடியும். அதர்கும் அப்பால் தெரிவது என்ன?

அருமையான ஒப்பீடு. "மனிதன் ஏன் அனிச்சையாகவே பாவச் செயல்களில் ஈடுபடுகிறான்?" என்று அர்ஜுனன் கேட்கிறான். "காமம் தான், குரோதம் தான், ரஜோகுணத்தில் உண்டான இவைகள் தான் காரணம். நெருப்பை புகை போலும், கண்ணாடியை அழுக்கு போலும் மறைத்திருப்பவை இவை தான்" என்று கண்ணன் கூறி, இவற்றை அறுத்தெறிய வேண்டும் என்று சொல்கிறான். இந்திய ஆன்மிக தத்துவமும், இந்திய இலக்கியமும் ஒன்றுபடும் புள்ளி இது.

இந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிடும் பிரேம்சந்தின் 'லட்டு' என்ற கதையை ஹிந்தியிலேயே படித்திருக்கிறேன். மனித மனத்தின் பாசாங்குகளுக்கும், அழுத்தங்களுக்கும் உள்ளே பொதிந்திருக்கும் அன்பைக் கூறும் இந்தக் கதையை, மனித மனதின் அடித்தளத்தில் தேங்கி நிற்கும் கயமையைக் காட்டும் அவரது கஃபன் (சவசல்லா என்ற பெயரில் தமிழில் வந்துள்ளது) என்ற கதையுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். அருமையான கதைகள் இரண்டும்.

. அந்த ஆனந்தமே இலக்கியத்தின் மையம்.
பல்லாயிரமாண்டுகளுக்கு முன் நம் பேரிலக்கியங்கள் அந்த சாரத்தைக் கண்டுகொண்டன. மீண்டும் மீண்டும் நம் இலக்கியங்கள் அந்த சன்னிதிமுன்னர் சென்று தலைவணங்கி நிற்கின்றன. லட்சியவாதமோ நவீனத்துவமோ பின் நவீனத்துவமோ எதுவானாலும்.


"எத்தனையோ மாற்றங்களுக்கு நடுவிலும் இலக்கியம் படைக்கும் இந்திய மனதில் ஒரு மாறாத்தன்மையும், தொடர்ச்சியும் உள்ளது, இந்திய ஓவியங்களிலும் சிற்பங்களிலும் உள்ளது போன்றே" என்று ஸ்ரீஅரவிந்தர் கூறுவார். (.. "There is a persistence, a continuity of the Indian mind in its literary creation in spite of great changes as consistent as that which we find in painting and sculpture." - Foundations of Indian culture).

பல்வேறு மொழிகள், பிரதேசங்கள், மக்கள் மற்றும் இலக்கியப் போக்குகளின் ஊடாக வாழும் "இந்திய இலக்கியம்" என்பதற்கு ஒரு மையம், சாரம் உள்ளது. அதை மிக அழகாக உணர்த்தியது இந்தக் கட்டுரை.

தமிழும் தனித்தமிழும்! : ஜெயகாந்தன்

தமிழ் ஒரு மொழி. தனித் தமிழ் ஒரு முயற்சி. தனித் தமிழே தமிழ் மொழியல்ல.

இந்தத் தெளிவு எனக்கிருப்பதால் தனித்தமிழ் மீது எனக்கு வெறுப்பில்லை. இந்தத் தெளிவு இல்லாததினால் தனித்தமிழ்ப் பிரியர்கள் தம்மை அறியாமலேயே தமிழை வெறுத்து வருகிறார்கள்.

தமிழனது சமுதாய வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் கலப்புகள் நிகழ்ந்திருக்கிறதோ அப்பொழுதெல்லாம் தமிழ் மொழியில் கலப்பு நிகழ்ந்திருக்கிறது. இவ்விதக் கலப்பினாலேயே அவனது வாழ்க்கை வளமுற்றது போல - அவனது மொழியும் வளம் பெற்றிருக்கிறது.

தனிப்பட்ட சொந்த வாழ்க்கையின் இத்தகைய கலப்புக்களையெல்லாம் தவிர்க்க முடியாமல் ஏற்றுக் கொண்டுவிட்ட சிலர், மொழி மட்டும் தனித்திருக்க வேண்டுமென்று ஆசையுற்று அவ்வித முயற்சியில் இறங்குவது ரசனைக்குரியதே. ஒரு முயற்சி என்ற முறையில் அதிலிருக்கும் பலவீனமான அழகைக் கூட என்னால் ரசிக்க முடிகிறது. எனினும் அதுவே தமிழ் என்பதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அந்தத் தனித்தமிழ் முயற்சியில் சில வியாசங்கள் வரையலாம். நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதிக் கொள்ளலாம். மேடையில் மிகுந்த ஜாக்கிரதையோடு கூடிய ஒரு சமத்காரத்தோடு கூற வந்த விஷயத்தைக் கூற முடியாமலேயே - தமிழின் தனித்துவத்தைக் காப்பாற்றக் கூடிய முயற்சியில் வெற்றியோ, தோல்வியோ பெற்று ஒருவாறு பேசி முடிக்கலாம்.

என்னதான் செய்தாலும் இந்தத் தனித்தமிழில் ஒன்றை மட்டும் செய்ய முடியாது. இலக்கியம் சிருஷ்டிப்பது என்ற மகத்தான காரியத்தைக் கம்பியில் நடப்பது போன்ற இந்தத் தனித்தமிழ் என்கிற 'பாலன்ஸ்' கூத்தின் மூலம் நிறைவேற்றவே முடியாது.

ஒரு மொழியெனின் அதில் இலக்கியம் உருவாக வேண்டும். வாழ்க்கையைப் புறக்கணித்து இலக்கியங்கள் உருவாவதில்லை. இன்றைய தமிழ் இலக்கியம் என்பது - உலக அளவிற்கு உட்பட்ட துறைகளில் உருவாவது, உரைநடையில் நிறைவேறுதல் வேண்டும். உரை நடையென்று செய்யுளுக்கு வந்த உரைபோல அமைதல் கூடாது. எந்த அளவுகு நடைமுறை வாழ்க்கையோடு - அதன் பிரத்தியேக அழகுகளோடு வசனம் இசைந்து உருப்பெறுகிறதோ அந்த இசையையே வசனத்தின் வளர்ச்சியெனக் கொள்ளூதல் வேண்டும். அதற்குமேல் நவீன இலக்கியங்கள் நாம் சந்திக்கின்ற மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

பாத்திரப் படைப்பு என்பது ஒவ்வொன்றும் தனித்தன்மையோடு விளங்க - இது இந்தக் காலத்தை - இந்தச் சூழ்நிலையை - இந்தப் பிரதேசத்தை - இந்த வர்க்கத்தை என்றெல்லாம் சம்பாஷணைகளின் மூலமும் சிந்தனைகளின் மூலமும் ஆசிரியனின் விவரிப்பின் மூலமும் நிலை பெறுதல் வேண்டும்.






இந்தச் சாதனையைத் தனித்தமிழ் என்ற ஒரு சாதாரண முயற்சி சாதிப்பது துர்லபம். ஏனெனில் தனித்தமிழ் என்பது ஒரு வாழ்க்கை உண்மையில்லை; அது ஒரு மனமயக்கம்! அல்லது ஒரு குழுவின் விருப்பம். இதற்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லாதிருப்பதே இதன் சிறப்பு.

(எனவேதான் இதனை ஒரு முயற்சி என்று குறிப்பிட்டேன்.)

இதில் ஒரு வெறியோடு சம்பந்தப்பட்ட சிலர் தங்களது சிந்தனைகளையெல்லாம் மனத்துள் மொழிபெயர்த்து நண்பர்களோடு உரையாடுகையில் பேசிக்கொள்கிறார்கள். இவர்கள் தங்களது கையாலாகாத்தனம் வெளிப்படுகையில் கூட வெட்கப்பட்டு இதனைக் கைவிடுவதில்லை. இவர்கள் உண்மையின் ஒளியின்றி உதட்டால் பேசுவதைக் காணும்பொழுது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளக்கூடிய மாய்மாலக்காரர்களாகவே எனக்குத் தோன்றுகிறது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு இவர்களது அசட்டுத்தனம் மாறிப் போனதை நான் பார்க்கிறேன்.

இந்தத் தனித்தமிழ் இலக்கியம் சமைப்பதாக எண்ணிக் கொண்டு எழுதித் தள்ளிய பேராசிரியர்கள்கூட அந்த வழியினின்றும் இன்று மாறியிருக்கிறார்கள். இன்னும் இலக்கியம் இவர்கள் கையில் உருப்பெறாததற்குக் காரணம் இது ஒன்றுமட்டுமல்ல; தனித்தமிழ் ஒரே மாதிரிதான் இருக்கும். அதிலே பல்வேறுபட்ட நடைகளும் சாத்தியமில்லை.

ஒரு நடைதான் சாத்தியமெனில் அது ஒரு மொழியா?


வேறு மாதிரியான ஒரு நடையே சாத்தியமில்லையெனில் பல்வேறு தரப்பட்ட பாத்திரங்களை சிருஷ்டிப்பது சாத்தியமாகாது.

தனித் தமிழ்தான் தமிழ் எனில் இலக்கியம் படைக்க லாயக்கற்ற மொழி தமிழ் என்றாகும்.

தனித்தமிழ் என்பது ஒரு நினைப்புத்தான். தனித்தமிழ் என்று நினைத்துக் கொண்டிருப்பினும் இவர்களால்கூட அறியாமை காரணமாகப் பிறமொழிச் சொற்கள் உபயோகிக்காமல் இருக்க முடிவதில்லை.

ஆனால் பாவம், இவர்களுக்கு அது தெரியாது. தமிழ் தனியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கும் தனியாக இருக்கிறது என்று நம்புகிறவர்களுக்கும் கூடத் தெரியாமலேயே தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்திருக்கின்றன. தமிழ் பிறமொழிகளில் கலப்பதும் பிற மொழிகள் தமிழில் கலப்பதும் விஞ்ஞானப் பூர்வமான ஒரு விளைவு என்பதனால்தான் இதனை அவ்வளவு சீக்கிரம் பிரித்து விடவும் முடிவதில்லை.

திரு.வி.கே. சூரியநாராயண சாஸ்திரிகள் தமது பெயரைத் தனித்தமிழில் மாற்றிக் கொள்வதாக எண்ணி, சூரியன் - பரிதி, நாராயணன் - மால், சாஸ்திரி - கலைஞன் என, மொழிபெயர்ப்பதாக எண்ணி வேறு சமஸ்கிருதச் சொற்களில் மாற்றி 'பரிதிமாற்கலைஞன்' என்று வைத்துக் கொண்டார் என்பது ரொம்ப ரஸமான விஷயந்தான்.

பரிதி என்பதும், மால் என்பதும் சமஸ்கிருதச் சொற்களே!


ஒரு பொருளைக் குறிக்கப் பல வார்த்தைகளிருப்பது ஒரு மொழியின் செழுமை. அவ்விதம் இருக்கின்ற வார்த்தைகளை மொழி ஆராய்ச்சியாளர்கள் எந்தெந்த வார்த்தைகள், எந்தெந்தக் காலத்தில், எதனெதன் விளைவாய் எந்தெந்த மொழிகளில் இருந்து வந்திருக்கக் கூடுமென்பதை ஆராய்ந்து குறிக்கலாம். இதற்கு உதவுபவை அம்மொழியின் இலக்கியங்களேயாகும்.

அதாவது இத்தகைய கலப்புக்களை அவ்விலக்கியங்கள் பிரதிபலித்திருக்கக் கூடும் என்று கொள்ளுதல் வேண்டும்.

நாவாய் என்ற வார்த்தை தமிழர் நாகரிகம் கடல் கடந்து சென்ற காலத்திற்கு முன்பு தமிழக மண்ணில் யவனர்கள் வாணிகஞ் செய்யும் பொருட்டு வருவதற்கு முன்பு இருந்திருக்க முடியுமா என்பதை ஆராய வேண்டும்.

நாவாய் என்ற சொல் கப்பலைக் குறிக்கின்ற தனித் தமிழ் சொல்லெனக் கருதுதல் வேண்டா. அஃது கிரேக்க மொழியின் 'நோவே' என்ற கப்பலைக் குறிக்கின்ற சொல்லின் திரிபேயாகும்.

இவ்விதம் திரிந்து பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் இவ்வார்த்தை இருத்தல் கூடும். ஆங்கிலத்தில் 'நேவி' என்றிருப்பது போல.

தமிழ் இலக்கியங்களைப் பார்த்தால் ஒவ்வொரு காலத்து இலக்கியமும் அந்தந்தக் காலத்தைப் பிரதிபலிப்பனவையாயிருக்கின்றன. அவையாவும் ஒரே செய்யுள் வடிவில் இருப்பினும் ஒரே மாதிரியாக இல்லை.

தமிழுக்கு சிரஞ்சீவித் தன்மை தந்த தமது முற்காலத்துக் கவிஞர்கள் எல்லாம் வாழ்க்கையில் வந்து கலந்த பிறமொழிச் சொற்களைக் கைவிட முடியாமல் கையாண்டு நமது இலக்கியங்களூக்குச் செழுமை தந்திருக்கின்றனர். அதற்கு இடங்கொடுக்காத இலக்கணத்தை அவர்கள் இழுத்து வளைத்திருக்கிறார்கள். அவர்கள் இழுப்பிற்கு இலக்கணம் வளைந்து கொடுத்தும் இருக்கிறது. அதன் மூலம் அவர்கள் புதிய இலக்கணத்தை உருவாக்கியுமிருக்கிறார்கள்.

அன்று அவர்கள் இலக்கியம் சமைத்திருப்பது செய்யுள் உருவத்தில். அவர்களே இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார்கள் என்றால் - அவர்கள் காலத்தைவிட எத்தனையோ மடங்கு வேகமானதும் விரைவானதுமான, அதிகக் கலப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் கால வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நவீன இலக்கியத்தை உரைநடையின் மூலம் உருவாக்குகின்ற ஒருவன் தனித் தமிழைக் காப்பாற்றுவது எங்ஙனம்?

'அந்தோணி சைக்கிளில் போனான். டயர் பஞ்சராயிற்று' என்ற வாக்கியங்கள் தமிழ் இல்லையென்று யார் சொல்லுவது? இதனை எவ்விதம் தமிழாக்குவது? தனித் தமிழ்வாதிகளூக்கு இந்தச் சொற்றொடரில் இரண்டே வார்த்தைகள் தான் இருக்கின்றன. ஆயிற்று, போனான் என்பதே அவை. ஆவதும், போவதும் தமிழனின் எல்லாக் காலத்திலும் இருந்த ஒரு வினை.

ஆனால் அந்தோணியும், சைக்கிளும், டயரும், பஞ்ச்சரும் ஒரு நவீன காலத்தைப் பிரதிபலிக்கின்ற உண்மைகள் அல்லவா?

இதனை மொழிபெயர்ப்பதன் மூலம் காலமும் இடமும் அற்ற ஒரு கனவு மயக்கத்திற்கு அல்லவா நாம் போய் விடுகிறோம்.

சைக்கிள் என்ற பொருள் நமக்கு வேண்டும். சைக்கிள் என்ற பெயர் நமக்கு வேண்டாம் என்று சிலர் விரும்புவதை வாழ்க்கை எவ்விதம் அனுமதிக்கும்?

எனவேதான் சொல்லுகிறேன்.

தமிழ் ஒரு மொழி.

தனித்தமிழ் ஒரு முயற்சி - ஒரு விளையாட்டு. அது சிருஷ்டிமேதை அவசியப்படாத சில வாத்தியார்களுக்கும், ஒரு தற்காலிகக் கவர்ச்சியை நாடும் சில மாணவர்களூக்கும் ஒரு வேளை உகந்ததாய் இருக்கலாம்.

மொழி என்பது சில வாத்தியார்களிடத்திலும் இல்லை; சில மாணவர்களிடத்திலும் இல்லை. அது வாழ்க்கையில் இருக்கிற்து.

எனவே இந்தத் தனித்தமிழ் யதார்த்தத்திற்கும் ஒத்துவராது; இலக்கியத்திற்கும் ஒத்துவராது; எழுதுபவனுக்கும் ஒத்துவராது.

எனினும் தனித்தமிழ் என்பது ஒரு ரசிக்கத்தக்க முயற்சிதான்!

இந்தத் தனித்தமிழ் மீது நம்பிக்கையில்லாமலேயே சில அரசியல்வாதிகள் இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்களே அதுதான் இதில் உள்ள மகத்தான ஹாஸ்யம்.!

(எழுதப்பட்ட காலம்: 1964)

ஜெயகாந்தன் ஒரு பார்வை - டாக்டர். கே.எஸ். சுப்பிரமணியன், முதல் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை - 600 017.

(நன்றி : இந்தக் கட்டுரையை Tab எழுத்துருவில் இட்டிருக்கும் எனி-இந்தியன் இணையதளத்திற்கு. http://www.anyindian.com/jayakanthan/tamil.htm )

--------------

தனித்தமிழ் பற்றிய மேலும் சில அறிவுபூர்வமான சிந்தனைகள்:

பொருந்தாக் காமம் : பி.கே.சிவகுமார் ('திண்ணை')

தலைப்பைப் பார்த்துவிட்டு, ஏதேதோ கற்பனை செய்தபடி இதைப் படிக்க ஆரம்பித்து முடிவில் ஏமாந்து போனால் அதற்கு நான் பொறுப்பல்ல. தனித்தமிழின்மீது ஒருசிலர் கொண்டுள்ள பிரேமையைப் 'பொருந்தாக் காமம் ' என்று அழைப்பதே பொருத்தமென எனக்குத் தோன்றுகிறது. தனித்தமிழ் என்பது காலத்திற்குப் பொருந்தாதது என்பது என் கருத்து. பொருந்தாத ஒன்றின் மீது பிறக்கும் மோகத்தைப் 'பொருந்தாக் காமம் ' என்று அழைக்கலாம்தானே! .......

தனித்தமிழ் என்னும் போலி (1) : பி.கே.சிவக்குமார் ('மரத்தடி')

தனித்தமிழ் என்னும் போலி (2) : பி.கே.சிவக்குமார் ('மரத்தடி')