Wednesday, February 28, 2007

யோகா: ஒரு சமுதாயத் தேவை

யோகா என்பது அடிப்படையில் ஒரு தனிமனித ஒழுக்கம், வாழ்க்கை முறை, சுய முன்னேற்ற கருவி, உடல் மற்றும் மன நலம் பேணும் ஒரு அறிவியல் சார்ந்த கலை, ஆன்மிக சாதனம் இப்படித் தான் பொதுவாக எல்லாரும் நினைக்கிறோம். ஆனால், யோகா பயின்று அதைப் பலரும் கடைப் பிடிக்கும் போது சமுதாயத்திற்குக் கிடைக்கும் நன்மை மிகப் பெரியது. இது பற்றிய என் எண்ணங்களின் தொகுப்பு இந்தக் கட்டுரை.

யோகம் என்னும் பரந்த சித்தாந்தத்தில் வேதாந்த தத்துவம் உள்ளிட்ட பலதரப்பட்ட விஷயங்கள் அடங்கும். இங்கே யோகா என்று நான் குறிப்பிடுவது ஆசனங்கள், பிராணாயாமம், தியானம், யோகக் கண்ணோட்டம் (Yogic outlook) இந்த நான்கு அம்சங்கள். நடைமுறையில் யோகம் என்னும் ராஜவீதியில் பயணிப்பவர்கள், நுழைந்திருப்பவர்கள் இந்த அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் பயின்று, கடைப்பிடிப்பது தான் நிறைவை நோக்கி இட்டுச் செல்கிறது என்பதை உணர முடியும்.

ஒரு அனுபவம்:

அண்மையில் பிப்ரவரி-2007 முதல் வாரம் பெங்களூரில் யோக, ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் வாழும் கலை (Art of Living) அமைப்பு நடத்திய நான்கு நாள் “பிராணாயாம தியான முகாம்” (Pranayam Dhyan Shibir) என்ற வெகுஜன யோக வகுப்பில் பங்கு பெற்று பல விஷயங்களைப் பார்வையிட நேர்ந்தது. (சில காலமாக யோகப் பயிற்சிகளை முறையாக செய்து வரும் நான் இது போன்ற பொது நிகழ்ச்சியில் கற்றுக் கொள்வதற்கு புதிதாக ஒன்றும் இல்லை; எனினும் சாதாரண மக்கள் யோகாவில் காட்டும் ஈடுபாடு பற்றி அறிவதற்காகவே பங்கு பெற்றேன்). பலதரப் பட்ட மக்களையும் யோகாவில் ஆர்வம் கொள்ளச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 13,000 பேர் கலந்து கொண்டனர். மென்பொருள் வல்லுனர்கள், அலுவலகப் பணியாளர்கள், சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள், குடும்பத் தலைவியர், மாணவர்கள், முதியவர்கள், பெங்களூரின் புறநகர் மற்றும் சுற்றுப் புற கிராமங்களில் இருந்து வந்திருந்தவர்கள் இப்படி. விசேஷ விருந்தினர் என்று நடிக, நடிகையர் மற்றும் சில பிரபலங்கள். அடிப்படை கட்டணம் ரூ. 350 என்று அறிவித்திருந்தும், ஆர்வமுள்ள பலரை இலவசமாகவே அனுமதித்தனர் என்றும் கேள்வியுற்றேன். சில எளிய ஆசனங்கள் மற்றும் பிராணாயாம முறைகள் (நாடி சோதனா, உஜ்ஜயி, பஸ்திரிகா) கற்பிக்கப் பட்டன. நேரடியாக ஸ்ரீஸ்ரீ அவர்களால் வழிநடத்தப் பட்ட தியானம் (Guided meditation) தினமும் இருந்தது. ஆங்காங்கே நின்று கொண்டிருந்த பயிற்சி பெற்ற தன்னார்வ உதவியாளர்கள் மிகவும் சிரத்தையுடன் தவறுகளைத் திருத்தியும், செய்து காண்பித்தும் பங்குபெற்றவர்கள் சரியாகக் கற்றுக் கொள்ள உதவினர்.

ஒவ்வொரு நாளும் பயிற்சிக்குப் பிறகு வந்த கேள்வி பதில் பற்றும் அனுபவப் பகிர்வுகளில் யோகப் பயிற்சிகள் செய்து வருபவர்கள் தாங்கள் பெற்ற விதவிதமான பயன்களை விவரித்தார்கள்; ஒரு முதிய பெண்மணி நீரிழிவு நோய் கட்டுக்குள் வருகிறது என்றார். இன்னொருவர் தினந்தோறும் அலுவலகத்தில் புத்துணர்வோடு வேலை செய்கிறேன் என்றார். ஒரு மாணவி வீட்டில் சண்டை போடுவது நின்று குதூகலம் பொங்குவதாகக் கூறினார். வேறொருவர் நினைவாற்றல், கவனம் அதிகமாகி இருக்கிறது என்றார். இன்னொருவர் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது என்றார். யோகா மூலம் தங்களது பூஜை மற்றும் வழிபாட்டில் மேலும் தெய்வீகத்தை உணர்வதாக பக்தர்கள் தெரிவித்தனர். கிராமத்தவர்கள் பலர் தியான அனுபவம் தங்களுக்கு மிக ஆழ்ந்த மன நிம்மதியைத் தந்ததாகக் கூறி, எல்லா ஊர்களிலும் இது மாதிரி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். தலைவலி, கை கால் மூட்டு முதுகு வலிகளிலிருந்து விடுபட்டதாகவும் பலர் கூறினர்.

ஒரு விஷயம் வெளிப்படையாகத் தெரிந்தது. யோகா ஒரு காமதேனு. வேண்டியவற்கு வேண்டியது தரும் கற்பக விருட்சம்.

உடல் நலம், மன நலம்:

யோகாசனங்கள் வெளி உறுப்புக்களை மட்டுமல்ல, உடலின் உள் உறுப்புக்களையும், நாடி நரம்புகளையும் உறுதியாக்குகின்றன. மேற்சொன்ன பயிற்சி முகாமில் ஒரு கிராமத்துப் பெண்ணின் அன்றாடப் பணிகளின் ஊடாகவே (நாற்று நடுதல், நீர் இறைத்தல், வீடு பெருக்குதல், உலக்கையால் இடித்தல்) பல விதமான யோக உடற்பயிற்சிகள் எப்படி வந்து விடுகின்றன என்று அழகாக விளக்கினார்கள். இப்படி சமச்சீரான உடல் இயக்கங்கள் தாமாகவே அன்றாட வாழ்க்கை முறையில் அமைந்து விட்டவர்களுக்குக் கூட ஆசனங்கள் உடலை உறுதியாக்க உதவுகின்றன. அப்படியிருக்கும்போது ஓரிடத்திலேயே உட்கார்ந்து வேலை செய்பவர்களாகவும், உடற்பயிற்சிக்கான வாய்ப்பு இல்லாதவர்களாகவும், மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளில் முதுகு ஒடிக்கும் இரு சக்கர வாகனங்கள், இடுப்பு ஒடிக்கும் ஆட்டோக்கள் போன்றவற்றில் அதிகமாகப் பயணம் செய்பவர்களாகவும் நம்மில் பலர் இருப்பதால் அதற்கென்று கண்டிப்பாக நேரம் ஒதுக்கி ஆசனங்கள் செய்தே ஆகவேண்டும்.

சூரிய நமஸ்காரம் போன்று பல ஆசனங்களையும் உள்ளடக்கிய தொடர் பயிற்சிகள் (விந்யாஸ யோகம்) குறைந்த நேரத்தில் செய்ய முடிபவை, நிறைந்த பலன்கள் தருபவை. மற்ற சில உடற்பயிற்சிகள் போன்று விலையுயர்ந்த, எந்த விதமான விசேஷ உபகரணங்களும் தேவையில்லை. ஆட்கள் அகப்பட்டால் கூட்டாகச் சேர்ந்தும் செய்யலாம், இல்லை தனியாகவும் பயிற்சி செய்யலாம்.

“நம் மூச்சின் வசத்தில் தான் வாழ்க்கை முழுதும் உள்ளது; உடலை மனத்துடன் இணைக்கும் நூலிழை மூச்சு தான்; அதனால் சுய உணர்வோடு கூடிய மூச்சின் இயக்கம் உடலை மட்டுமல்ல, மன உணர்வுகளையும் சீராக்குகிறது” என்று யோக தத்துவம் கூறுகிறது. மூச்சுப் பயிற்சிகள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அடுத்த உயர் நிலைக்குக் கொண்டு செல்கின்றன என்றால் மிகையில்லை. உதாரணமாக, உஜ்ஜயி போன்ற ஆக்சிஜனேற்றத்தை அதிகரிக்கும் பிராணாயாமப் பயிற்சியை தினந்தோறும் செய்து வருவது மாசுகளின் (environmental pollution) விளைவுகள் நம்மைத் தாக்காவண்ணம் ஒரு நிரந்தர தற்காப்பு வளையத்தை நம் உடலில் உண்டாக்குகிறது. இதை என் அனுபவத்திலேயே கண்டிருக்கிறேன். வருடாவருடம் குளிர்காலம் ஆரம்பித்தவுடன் தொற்றுகளில் சிக்கி, எப்போதும் இருமி, தும்மிக்கொண்டிருக்கும் நண்பர்கள் பலர் பிராணாயாமம் செய்ய ஆரம்பித்ததும் இந்தத் தொல்லைகளில் இருந்து முழுவதுமாக விடுபட்டிருக்கின்றனர்.

பிராணாயாமப் பயிற்சிகள் மருத்துவ சோதனைக்கு ஆட்படுத்தப் பட்டு அவற்றின் ஆச்சரியகரமான ஆற்றல்களும், விளைவுகளும் நாள்தோறும் பேசப் பட்டு வருவது மனம் நரம்பு இயைந்த தற்காப்பியல் (psycho-neuro immunology) என்ற வளர்ந்து வரும் மருத்துவத் துறையில் முக்கிய சேதி. மன உளைச்சல்கள், மனப் பிரமைகள், மனத் தடைகள் இவற்றை வரவிடாமல் தடுத்தல், குணப்படுத்துதல் இரண்டிலும் பிராணாயாமம் பெருவெற்றி கண்டிருக்கிறது.

செயல் நலம்:

செயல் புரியும் திறனே யோகம் (யோக: கர்மஸு கௌசலம்) - பகவத்கீதை

எல்லா வளர்ந்த நாடுகளிலும் ஊருக்கு ஊர் யோகா பள்ளிகள் பெருமளவு அதிகரித்து வருகின்றன. அரசு மற்றும் பொது நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் யோகா கற்றுக் கொள்வதை வலிய வந்து ஊக்குவிக்கின்றன. ஏனெனில், யோகா தினசரி அலுவல் மற்றும் தொழில் புரிதலில் ஏற்படும் அயற்சியையும், தளர்ச்சியையும் நீக்கி புத்துணர்வு அளிக்கிறது. பணியிடச் சூழலுக்குக் குந்தகம் விளைவிக்கும் ஆக்ரோஷ உணர்வுகள், அசூயை, அகங்காரம் (ஈகோ) இவற்றை பக்குவப்பட்ட, சமச்சீரான நோக்கில் கையாளும் திறனை வளர்க்கிறது. முழு ஈடுபாட்டுடனும் அதே சமயம் பற்றற்ற உணர்வுடனும் கூட செயல்புரியும் கர்மயோகம் நடைமுறையில் வருவதற்கு யோகப் பயிற்சிகள், யோக சிந்தனைகள் உதவுகின்றன. இதன் விளைவாக உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது. நிறுவனங்கள் தங்கள் இலக்குகளை எட்டி, பல சமயங்களில் இலக்குகளைத் தாண்டிச் சென்று சாதனை படைக்கவும் முடிகிறது.

உலகெங்கும், அநேகமாக எல்லா விளையாட்டு வீரர்களின் பயிற்சி வகுப்புகளிலும் யோகாவுக்கு இடம் உள்ளது. யோகா பயிற்சி செய்யும் மாணவர்களின் கற்கும் திறன், சுறுசுறுப்பு, நினைவாற்றல் இவை நன்கு வளர்ச்சியடைவதும் சந்தேகமின்றி நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

சமுதாய நலம்:

மக்கள்தொகை மிகுந்த, தரமான பொது சுகாதார, மருத்துவ வசதிகள் தேவைக்கு மிகக் குறைவாக இருக்கும் இந்திய நாட்டில் யோகா போன்று வருமுன் காக்கும் ஆரோக்கிய முறைகள் ஒரு பெரிய வரப்பிரசாதம். நோய்த் தடுப்பு ஊசிகள், சுற்றுப் புற சுகாதாரம், சத்துள்ள உணவு இவற்றோடு கூட பிராணாயாமம் போன்ற பயிற்சிகளும் எல்லா தரப்பு மக்களையும் சென்றடையச் செய்ய வேண்டும். ஏழை மக்களது தினசரி ஆரோக்கியம் ஒழுங்கு பட்டால் பலவிதமான சாதாரண வியாதிகள் வருவது பெருமளவில் கட்டுப் படுத்தப் படும்.

ஸ்ரீஸ்ரீயின் வாழும் கலை அமைப்பு மகாராஷ்டிரத்தின் பல கிராமங்களில் யோகா மூலம் குடிப் பழக்கத்தை அறவே ஒழித்திருக்கிறது. வடமேற்கு மாநிலங்களில் போதைப் பழக்கங்களில் சிக்கிக் கொண்ட ஏராளமானவர்களை யோகா மூலம் இவற்றினின்று மீட்டிருக்கிறது. மற்ற பலவிதமான சீர்திருத்த முறைகளைக் காட்டிலும் யோகா விரைவில் நல்ல பயன் தருகிறது. பக்க விளைவுகள் இல்லாமல், இத்தகைய பிரசினைகளுக்கு நிரந்தரத் தீர்வு அளிக்கிறது.

சமுதாயத்தில் வன்முறைகள், வக்கிரங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. கல்வி முறையில் நீதிபோதனைக்கான இடம் வெறுமையானது, ஆன்மிகப் பரிமாணம் போதிய அளவு கவனிக்கப் படாமல் இருப்பது, மனித உணர்வுகள் (human values) பற்றிய புரிதல் இல்லாமை இவை இதற்கான முக்கியக் காரணங்கள். ஒரேயடியாக கட்டுப்பாடுகள் போடுதல் மூலமாக அல்லாமல் இந்த விஷயங்களை இயல்பான, அழகான, மென்மையான முறையில் யோகா வாழ்க்கையோடு இணைக்கிறது.

விடலைப் பருவத்து இளைஞர்களும், யுவதிகளும் அந்த வயதைக் கடக்கையில் உடலும், மனமும் பலவித மாற்றங்களுக்கு உட்படுவதால், மிக எளிதாக தீய பழக்கங்கள் மற்றும் பலவிதமான மனப்பான்மைகளுக்கு (complexes) வசப் படுபவர்களாக இருக்கிறார்கள். புரிந்து கொள்ளுதல், புரிந்து கொள்ளப் படுதல் இரண்டுமே அவர்களுக்குப் பிரசினையாக இருக்கின்றன. ஆனால் இந்த வயதிலோ அல்லது இதற்கு வரும் முன்போ யோகா கற்றுக் கொண்டு பயிற்சி செய்யும் இளவயதினர் இந்த பருவத்தின் உற்சாகத்தையும், சவால்களையும் மிகத் தெளிவான, இயல்பான முறையில், தங்கள் இயல்பான புன்முறுவலை இழக்காமல் கையாள்கிறார்கள்! இதை என் அனுபவத்தில் பார்க்கிறேன். பல யோகப் பயிற்சி முகாம்கள் இளமைக் கூட்டங்களால் நிரம்பியிருப்பதில் ஆச்சரியம் இல்லை தான்!

யோகா சமய, சமூக நல்லிணக்கத்தை வளர்க்கிறது என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் கூறலாம். யோகத்தில் ஈடுபடுவர்கள், தியானம் செய்பவர்கள் தாங்கள் பின்பற்றும் சமய, சமூக நம்பிக்கைகளின் எல்லைகளைப் புரிந்து கொள்கிறார்கள். ஆன்மிகத் தேடல் என்பது புத்தகங்களையும், கோட்பாடுகளையும் தாண்டிய சுய அனுபவம் என்றும் தெளிவடைகிறார்கள். இந்த சிந்தனை மூலம் அவர்களது மனம் விசாலமடைகிறது. யோகம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களில் பல சாதிக் காரர்களும் இருக்கிறார்கள், இவர்களை பல சாதிக் காரர்களும் தோழமையுடன் குரு என்பதாகப் பாவித்துக் கற்றுக் கொள்ளவும் செய்கிறார்கள். பாகிஸ்தானில் “வாழும் கலை” அமைப்பு நடத்தும் யோக வகுப்புகளில் கலந்து கொண்டவர்கள் (இவர்கள் சிலரே ஆயினும்) அங்கே சிவசிவ என்று பாடுவதைக் கேட்டு ஜிகாத் செய்ய எண்ணுவதில்லை; கூடப் பாடுகிறார்கள், மனம் மகிழ்கிறார்கள்!

இன்று உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தீவிரவாதத்தின் பல கோர முகங்களை நேர்கொள்வதிலும் யோகா பெரும்பங்கு ஆற்ற முடியும். காஷ்மீர் தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட் குழுக்களுக்கு யோகா பற்றிய அறிமுகம் தர முயற்சிகள் நடந்ததாக செய்திகள் படித்த நினைவு. இன்று யோகாவை உலகெங்கும் எடுத்துச் செல்லும் பேராசான்கள் இது பற்றி மேலும் சிந்திக்க வேண்டும்.

நடைமுறைப் படுத்துதல்:

இந்தியாவைப் பொறுத்தவரை யோகா என்பது பணவசதி உள்ள, மத்திய மற்றும் மேல்தட்டு மக்களுக்கு மாத்திரம் உள்ள சமாசாரம் என்பதான கருத்தே ஒரு பதினைந்து இருபது வருடங்கள் முன்பு வரை நிலவி வந்திருக்கிறது (அதற்கும் முன்பு யோகா என்பது முக்கிய நீரோட்டத்தில் இந்த அளவு கலக்காமல் ஒரு பழம்பெருமை (exotic) விஷயம் மாதிரி மட்டுமே தான் இருந்தது என்பதும் வேதனையான உண்மை). ஆனால் இன்று இந்த நிலைமை மாறி வருகிறது.

உலகப் புகழ் பெற்ற யோக ஆசாரியர் பி.கே.எஸ்.ஐயங்கார் அவர்களிடம் “பல பேருக்கு நீங்கள் யோகா கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். அவர்களில் உங்கள் மனதுக்குப் பிடித்த சீடர்கள் யார்?” என்று கேட்ட போது அவர் சொன்ன ஒரு பெயர் அஜித்குமார். காரணம்? “அஜித்குமார் யோகாவை பாமர மக்களிடம் எடுத்துச் சென்றிருக்கிறார். பட்டி தொட்டிகளில் எல்லாம் ஏராளமான பேரை யோகா செய்ய வைத்திருக்கிறார். எனது சீடரின் இந்தப் பணியை எண்ணிப் பெருமைப் படுகிறேன்” என்று சொன்னார். யார் இந்த அஜித்குமார் என்று தேடிப் பார்த்ததில், இவர் ஒரு மறைந்த சமூக சேவகர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் முழு நேர பிரசாரகராக இருந்து, அந்த இயக்கத்தின் எல்லா தினசரி பயிற்சி வகுப்புகளிலும் யோகாசனங்களை அறிமுகம் செய்தவர். அண்மைக் காலங்களில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், பாபா ராம்தேவ், ஜக்கி வாசுதேவ் போன்ற யோக ஆசான்கள் யோக வாழ்வியலை மாபெரும் சமுதாய இயக்கங்கள் மூலம் முன்னெடுத்துச் சென்று வருகின்றனர். “ஊருக்குழைத்திடல் யோகம்” என்ற பாரதி வாக்குப் படி யோகாவைப் பரப்புவதோடு பெரிய அளவிலான சமூக சேவைப் பணிகளிலும் இந்த இயக்கங்கள் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சி தரும் விஷயம். இப்போதைக்குக் கூட சமுதாயத்தின் எல்லா தரப்பு மக்களையும் இத்தகைய இயக்கங்கள் முழுமையாக ஊடுருவி விடவில்லை. ஆனால் அது கண்டிப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்று கூறலாம்.

கடந்த டிசம்பர் (2006) முதல் வாரம் மத்திய சுகாதார அமைச்சகம் எல்லாக் கல்வி நிலையங்களுக்கும் “கோலா வெளியே, யோகா உள்ளே” என்ற அளவில் ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. உடலுக்குத் தீங்கு தரும் கோகோ கோலா போன்ற காற்றடைத்த பானங்களை மாணவர்கள் அதிகமாகக் குடித்து, பழக்கப் படுத்திக் கொண்டு தங்கள் உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்ற நோக்கத்துடன் வந்த முதல் ஆணையை எந்தப் பள்ளிகளும் முழுதாக நடைமுறைப் படுத்தியதாகக் காணோம். பல பள்ளிகளில் கான்டீனுக்குள் விற்பனையை நிறுத்தியதாகக் கண்துடைப்பு செய்துவிட்டு, வாசலிலேயே கடை போட்டு இந்த பானங்கள் விற்பனை நடப்பதாக செய்திகள் வந்தன. இது இப்படி என்றால் “எல்லா கல்வி நிறுவனங்களிலும் எல்லா மாணவர்களுக்கும் யோகா கற்றுத் தர வழிவகை செய்ய வேண்டும்” என்று வந்த இரண்டாவது அறிவிப்பு பற்றிப் பேச்சே இல்லை! நகர்ப்புறங்களில், உயர் தரமுள்ள பள்ளிகள் அனைத்திலும் இப்போது யோகா பயில வாய்ப்பு, வசதி உள்ளது. யோகா கட்டாயம் என்று இல்லாத போதும் பயன்கள் கருதி பெரும்பான்மை மாணவர்கள் பயில்கிறார்கள். ஆனால், வசதி குறைந்த மாணவர்கள் பயிலும் அரசு மற்றும் அரசுதவி பெறும் பள்ளிகள், கிராமப்புற பள்ளிகள் இவற்றில் உள்ள மாணவர்களுக்கு பெரும்பாலும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. மேற்சொன்ன ஆணையை அமல்படுத்துவதில் அரசு முனைப்பு காட்டுமா என்று தெரியவில்லை.

இன்னொரு முக்கியமான தேவை ஆசிரியர்கள். நல்ல பயிற்சியும், அனுபவமும், கற்பிக்கும் திறனும் வாய்ந்த யோக ஆசிரியர்கள் தேவைக்கு மிக மிகக் குறைவாகவே இருக்கிறார்கள், அதுவும் கூட நகரங்களில் மட்டும் தான். பலர் நல்ல கட்டணம் செலுத்தி யோகா கற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதால், இந்த ஆசிரியர்கள் இதை ஒரு முழு நேரத் தொழிலாகவே கொண்டுள்ளனர் என்பதும் உற்சாகமூட்டும் விஷயம். ஆனால் அடுத்த கட்டமாக யோகாவை எல்லா மக்களுக்கும், கிராமங்களுக்கெல்லாம் கூட எடுத்துச் செல்லும் பணியை சேவை மனப்பான்மை உள்ள யோக இயக்கங்கள் தான் செய்ய வேண்டும். அதற்கு பெருமளவில் ஆசிரியர்கள் தேவைப் படுவார்கள். நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட பெங்களூர் முகாமில் ”எத்தனை பேர் யோகா கற்றுக் கொடுக்க விரும்புகிறீர்கள்?” என்று ஸ்ரீஸ்ரீ கேட்டபோது பல கைகள் உயர்ந்தன! நீங்கள் எல்லாம் உங்கள் பெயர்களைப் பதிவு செய்து விட்டுப் போங்கள். நாங்கள் தொடர்பு கொண்டு உங்களுக்கு மேலும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்கிறோம் என்றும் அவர் கூறினார்.

இத்தகைய பொதுஜன அளவிலான யோக இயக்கங்கள் வெற்றிபெற வேண்டும். கண்டிப்பாக வெற்றி பெறும். ஏனென்றால் யோகா ஒரு சமுதாயத் தேவை.

16 comments:

கார்த்திக் பிரபு said...

good and useful post ..thANKS

சிவபாலன் said...

யோகா மனித இனத்திற்கு தேவையான ஒன்றே!!

இதை பாகுபாடின்றி அனைவரும் செய்யலாம்.

இது வெறும் இந்துக்களுக்கு மட்டும் என எண்ண வேண்டியதில்லை..

நான் அறிந்தவரையில் நிச்சயம் நல்ல பயன் தருகிறது.

ஜடாயு said...

// யோகா மனித இனத்திற்கு தேவையான ஒன்றே!!

இதை பாகுபாடின்றி அனைவரும் செய்யலாம் //

நன்று சொன்னீர்கள் சிவபாலன் அவர்களே. இதுவே தான் என் கருத்தும்.

பல வளர்ந்த நாடுகள் இதை உணர்ந்து தான் யோகாவுக்கு நிறைய ஊக்கமளிக்கின்றன. நம் நாட்டின் சொத்தான இந்தக் கலை நம் நாட்டவர் அனைவருக்கும் கிட்ட வசதி, வாய்ப்புகள் வரவேண்டும்.

Govindarajan said...

Very good post. Thank you, Jadayu,

Anonymous said...

// நம் மூச்சின் வசத்தில் தான் வாழ்க்கை முழுதும் உள்ளது; உடலை மனத்துடன் இணைக்கும் நூலிழை மூச்சு தான்; அதனால் சுய உணர்வோடு கூடிய மூச்சின் இயக்கம் உடலை மட்டுமல்ல, மன உணர்வுகளையும் சீராக்குகிறது //

பிராணாயாமத்தின் அடிப்படை தத்துவத்தை மிக சுருக்கமாக அழகாக விளக்கி உள்ளீர்கள்.

பதிவு கொஞ்சம் நீளம். பல தகவல்களையும் தந்துள்ளீர்கள். நன்றி.

அன்புடன்,
ராஜ் கிருஷ்ணன்

சுப்பிரமணி said...

// இன்று உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தீவிரவாதத்தின் பல கோர முகங்களை நேர்கொள்வதிலும் யோகா பெரும்பங்கு ஆற்ற முடியும். //

எண்ணம் சரிதான். ஆனால் தீவிரவாதிக்கு முதலில் யார் போய் யோகா கற்றுக் கொடுப்பது?

Vajra said...

//
எண்ணம் சரிதான். ஆனால் தீவிரவாதிக்கு முதலில் யார் போய் யோகா கற்றுக் கொடுப்பது?
//

அருந்ததி ராய், கன்னபிரான், சந்தீப் பாண்டே போன்ற தீவிரவாதிகளுக்காக மட்டும் போராடுபவர்கள் இதற்கு வாலண்டீர் செய்தால் நல்லா இருக்கும்.

தமிழ் வலைப்பதிவுலகிலிருந்து ஆட்கள் வேண்டுமென்றால், 60 பேர் கொண்ட திராவிடத் தமிழர்களில் யாரையாவது ஒருவரை துணைக்கு அழைத்துக்கொள்ளலாம்.

கால்கரி சிவா said...

ஜடாயு, கனடாவின் பிரிடிஷ் கொலம்பிய மாநிலத்தில் பப்ளிக் பள்ளி கூடங்கள் உடல் பயிற்சி பாடங்களில் யோகா சொல்லிதருகிறார்கள். அதற்கு ஏகப்பட்ட வரவேற்பு. (கனடாவில் உடற்பயிற்சி பாடம் கட்டாயபாடமாகும்)

என் அலுவலகத்தில் இப்போது கற்றுதர ஆரம்பித்து விட்டார்கள்.

Anonymous said...

ஜடாயு

பயனுள்ள பதிவு. தகவல்களுக்கு நன்றி, உங்கள் தொண்டு தொடர வாழ்த்துக்கள்

அன்புடன்
ச.திருமலை

மாசிலா said...

யோகா மனித குலத்தின் அரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றானதே.

உலகம் முழுதும் இதன் பெருமை பரவிக்கிடக்கிறது.

இதை மதத்தோடு கலப்படம் செய்ய முயற்சிப்பது வருந்தத் தக்கதே!

மேலும் யோகாவை ஜனநாயகப் படுத்தல் வேண்டும். கணினையைப் போல், இக்கால கட்டங்களில் இக்கலை அல்லது துறை ஒரு குறிப்பிட்ட வர்க்த்தினருக்கு மட்டும் சென்று அடைகிறது. இது மாற வேண்டும்.

இந்திய மண்ணில் உதயமான இக்கலையை சீரிய முறையில் அனைத்து பள்ளிகளிலும் பயிற்றுவித்து வருங்கால தலைமுறைகளை, வாரிசுகளை திடமுள்ளதாக ஆக்கலாம்.

பல வித நோய்களை வெறுமனே யோகா செய்வதன் மூலமே தீர்த்துவிடலாம் எனப் படித்தது உண்டு.

அதிர்வேகத்துடன் மாறிவரும் இவ்வவசர உலகில் இதன் தேவை மேலும் அதிகமாகவே செய்கிறது. மன அமையின்மை, அழுத்தம், அலைச்சல், வேலைப் பளு, மாசடைந்த உணவு, சுற்றுப்புற சூழல், ஊடகங்களின் தாக்கங்கள் ஆகிய போன்ற சமுதாய நஞ்சுக்களை எதிர்த்து போரிடுவதற்கும் யோகா ஒரு நல்ல ஆயுதமே.

மாசிலா.

ஜடாயு said...

// கனடாவின் பிரிடிஷ் கொலம்பிய மாநிலத்தில் பப்ளிக் பள்ளி கூடங்கள் உடல் பயிற்சி பாடங்களில் யோகா சொல்லிதருகிறார்கள். அதற்கு ஏகப்பட்ட வரவேற்பு. //

சிவா, அருமை. இது போன்ற வரவேற்புகள் உலகெங்கும் இன்று கிடைத்து வருகின்றன.

// தீவிரவாதிகளுக்காக மட்டும் போராடுபவர்கள் இதற்கு வாலண்டீர் செய்தால் நல்லா இருக்கும். //

வஜ்ரா, நல்ல கேள்வி. But they wont do it. In fact, they want terrorism to survive so that *they* can tun their human right enterprise.

BTW, ஸ்ரீஸ்ரீ ஜே.கே.எல்.எஃப் தீவிரவாதன் அமைப்பு மற்றும் பி.லபிள்யூ.ஜி நக்சசலைட் அமைப்பு இவற்றின் உறுப்பினர்களை அவர்கள் இடங்களிலேயே போய்ச் சந்தித்துப் பேசியுள்ளார். ஒரு ஆன்மிகத் தலைவரின் இத்தகைய செயல்கள் பாராட்டுக்குரியவை.

ஜடாயு said...

// உலகம் முழுதும் இதன் பெருமை பரவிக்கிடக்கிறது.

இதை மதத்தோடு கலப்படம் செய்ய முயற்சிப்பது வருந்தத் தக்கதே! //

மாசிலா, என்ன சொல்ல வருகிறீர் என்று புரியவில்லையே?

யோகா மனிதகுலம் முழுமைக்குமான இந்து ஆன்மிகப் பாரம்பரியம் தந்த சொத்து என்பதை யாரே மறுப்பார்? பதஞ்சலியும், திருமூலரும், ஹடயோக ப்ரதீபிகாவும் இந்து மரபில் வந்தவை தானே?

"ஓம்" இல்லாமல் எந்த யோக முறையும் கிடையாது. ஓங்கார ஒலி எழுப்புதல், ஓங்கார தியானம் இவை எந்தப் பள்ளியில் யோகம் கற்றுக் கொண்டாலும் சொல்லித் தருவார்கள்.

"இதில் மதம் இருக்கிறது, அதனால் கற்றுக் கொள்ள மாட்டேன்" என்று யாராவது அடம் பிடித்தால் இழப்பு அவர்களூக்கு தானே தவிர யோகாவிற்கு அல்ல.

இதைத் தான் நீங்கள் சொல்ல வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

ஜடாயு said...

// உங்கள் தொண்டு தொடர வாழ்த்துக்கள்

அன்புடன்
ச.திருமலை //

உங்கள் அன்புக்கு நன்றி திருமலை. தொண்டு எல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை. ஏதோ என்னால் முடிந்தது யோகா பற்றி அவ்வப்போது எழுத முயற்சிக்கிறேன், அவ்வளவே.

இவற்றைப் படித்து 1-2 புதியவர்களாவது யோகாவில் இணைந்தால் எனக்கு மகிழ்ச்சி!

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

ஜடாயு said...

நான் டிசம்பர்-06 அரசு ஆணை என்ன ஆயிற்று என்று பதிவில் கேட்டிருந்தேன்.

இது பற்றி இன்று வந்துள்ள செய்தி..
http://www.rediff.com/news/2007/mar/05yoga.htm

Parliamentary committee favours yoga in schools

March 05, 2007 14:25 IST

At a time when Bharatiya Janata Party-ruled Madhya Pradesh's 'surya namaskar' programmes has generated much controversy, a Parliamentary committee on Human Resource Development has favoured going all out to propagate yoga in schools.
"Yoga has been gaining immense popularity due to short term as well as long-term benefits that it provides. Yoga helps one to achieve all round development," the Parliamentary Standing Committee on HRD said in its report.

The report presented to Parliament last week said "the committee is of the opinion that yoga is one stream of education, which will make a permanent and positive impact on a student's life."

The 32-member committee headed by senior Congress leader Janardan Dwivedi and includes Rahul Gandhi and Brinda Karat (CPI-M) as its members said that considering the immense potential of this ancient knowledge of India that "yoga be made compulsory for all school going children in the country".

In its action taken report, the Ministry said the National Curriculum Framework for School Education-2005 prepared by the National Council of Educational Research and Training has made health and physical education as a compulsory subject from primary to secondary state.

The framework has put these subjects as an optional subject at higher secondary stage, it said adding yoga was one of the core components of health and physical education.

எம்.பிக்கள் சம்பள உயர்வு போன்ற விஷயங்களில் எல்லா கட்சிகளூக்கும் ஒத்த கருத்து இருக்கும். அதே போல, இந்த விஷயத்தில்லும் சி.பி.எம் உறுப்பினர் பிருந்தா காரட் உட்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் எல்லா பள்ளிகளிலும் யோகா கற்றுத் தர வேண்டும் என்று ஒருமனதாக சொல்லியிருப்பது நல்ல விஷயம்.

பார்க்கலாம் நடைமுறையில் இது எந்த அளவுக்கு செயல்படுத்தப் படுகிறது என்று.

arunagiri said...

In US, healthcare organisations prominently advertise the Yoga programs (in particular Hatha Yoga) they offer for their employees, in their employment advertisements.

வெற்றி said...

ஜடாயு,
மிகவும் அருமையான பதிவு. பல அரிய விடயங்களைத் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.