Thursday, December 28, 2006

“அனைத்துயிரும் ஆகி.." - யோகாசனங்களின் உணர்வு நிலைகள்

யோகாசனங்கள் எப்படி உருவாயின என்பது பற்றிய கேள்வி ஆசனங்களைப் பயிற்சி செய்யும் பலருக்கும் தோன்றியிருக்கும். “இலக்கியத்திற்குப் பின் இலக்கணம்” எனப்து போல, யோகத்தின் முதல் நூல் என்று கருதப் படும் பதஞ்சலி யோக சூத்திரங்கள் வரையறுக்கப் படுவதற்கு முன்பே யோகம் பற்றிய பல நுட்பங்கள் அறியப் பட்டிருந்திருக்க வேண்டும் என்றே யோக அறிஞர்கள் பலரும் கருதுகிறார்கள். இந்த நூலில் ஆசனம் பற்றி ஒரே ஒரு சூத்திரம் தான் உள்ளது: “உறுதியானதும், சுகமாயிருப்பதும் ஆன நிலை ஆசனம்”. ஏதாவது ஒரு ஆசனம் செய்யும்போது யாருக்காவது உடல் வலியால் முகம் சுளிப்பது போல் ஆனால் “ஸ்திரம் சுகம் ஆசனம்” என்று எங்கள் யோக ஆசிரியர் இந்த சூத்திரத்தைச் சொல்லி நினைவூட்டிக் கொண்டே இருப்பார்!

பதஞ்சலிக்குப் பின்னர் வந்த “ஹடயோக ப்ரதீபிகா” போன்ற நூல்களில் இன்று மிகப் பிரபலமாகி நாம் பயின்று வரும் பல ஆசனங்களின் பெயர்களும், அந்த ஆசனத்தில் உடலின் தோற்றம் (posture) எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றிய சித்திரங்களும் கிடைக்கின்றன. படங்கள் போன்ற குறியீடுகளைப் பயன்படுத்தாமல் சொற்கள் மூலமே விளக்கினாலும் ஆசனங்களுக்கான தெளிவான கையேடாக இந்த நூல் விளங்கி வந்திருக்கிறது. இது தவிர, வழிவழியாக வந்துள்ள தொடர்ச்சியான குரு சிஷ்ய மரபுகளும் இந்த ஆசனங்களில் உள்ள கலை நுணுக்கத்தை சரியான முறையில் இன்று வரை எடுத்து வந்துள்ளன.


ஆசனங்கள் வெளி உறுப்புக்களையும், தசைகளையும் மட்டுமல்ல, உடலின் பல உள் உறுப்புக்களையும், நாடி நரம்புகளையும் உறுதியாக்குகின்றன.
பல யோகாசனங்கள் பார்ப்பதற்குக் கடினமாகத் தோன்றினாலும், பயிற்சி செய்பவர்களுக்கு இவை மிக இயல்பானதாகவே தெரியும். பயிற்சி இதற்குக் காரணம் என்றாலும், யோக ஆசனங்களின் தன்மையே அப்படிப் பட்டதாயிருக்கிறது. 2-3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வளரும் பருவத்தில் தாங்களாகவே பல ஆசனங்கள் போடுவதைப் பார்க்கலாம். உட்காருவதற்கு வந்து நிற்கத் தொடங்கும் சமயம் பல குழந்தைகளுக்கு வஜ்ராசனம் தானாக வரும். தவழ்வதற்காக அமரும் தோற்றமே ஒரு ஆசனம் தான்! ஆசனங்களின் இந்த இயற்கைத் தன்மை அவற்றுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது.

மனித உடலின் இயக்கம் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவு பெற்றிருந்தனர் பண்டைக் கால யோகிகள். காட்டில் விலங்குகள், பறவைகள் இவற்றின் வாழ்வைக் கூர்ந்து கவனித்த அவர்கள் அவை எப்போது அமைதியடைகின்றன, ஆக்ரோஷம் கொள்கின்றன இவற்றையெல்லாம் ஆராய்ந்து பல ஆசனங்களை உருவாக்கியிருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது.

புகழ்பெற்ற யோக குரு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களிடம் இந்தக் கேள்வி கேட்கப் பட்ட போது அவர் கூறினார் “யோகத்தின் ஒரு உயர்ந்த நிலையில் செல்லும்போது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் ஆன்மாவை யோகிகள் உணர்ந்தார்கள். அந்த உணர்ச்சியின் வெளிப்பாடாக அவர்கள் உடல் தானாகவே பல விதமான தோற்றங்கள் கொண்டது. இப்படித் தான் ஆசனங்கள் தோன்றின. பின்னர் அவை ஆய்வுக்கு உட்பட்டு நெறிப்படுத்தப் பட்டன. பிராணாயாம முறைகள் தோன்றியதும் இப்படித் தான்.” ஸ்ரீஸ்ரீ அவர்களது உருவாக்கம் என்று கருதப் படும் புகழ்பெற்ற “சுதர்ஷன் க்ரியா” என்ற பிராணாயாம முறையும் பரிசோதனைகளாலோ, புறவயப் பட்ட முயற்சிகளாலோ தோன்றவில்லை. மாறாக, ஆழ்ந்த தியானத்தின் போது தானாகவே அது சித்தித்ததாக அவர் பலமுறை கூறியுள்ளார். உலகெங்கும் உள்ள யோக ஆசிரியர்கள் அடிப்படை யோகப் பயிற்சிகளில் புதிய புதிய பரிமாணங்களை இன்றும் ஆக்கம் செய்து வருகிறார்கள். இவற்றில் எத்தனை முயற்சிகள் அகவயப் பட்டவை என்பது கேள்விக்குரியது. இருந்தாலும் யோகம் என்பது “கணந்தோறும் புதிதாகத் தோன்றும்” ஒரு வாழும் கலை என்பதில் ஐயமில்லை.

யோகாசனங்கள் உருவாக்கும் உடல் தோற்றத்தோடு, அவை தரும் உணர்வு நிலையையும் கருத்தில் கொண்டு பின்னர் பெயர்கள் இடப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி
பல் மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி
வல் அசுரராகி முனிவராய்த் தேவராய்
கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்!”

என்று திருவாசகம் கூறும் அதீத அனுபவம் பரிணாம அறிவியல் கூறும் வளர்ச்சிப் படிநிலைகளை மட்டுமல்ல, அனைத்து உயிர்களாகவும் ஆகும் ஆன்மாவின் தன்மையையும் குறிக்கிறது. எண்ணிப் பார்த்தால், இந்தப் பேரனுபவத்தின் வெளிப் பாட்டை மனித உடலின் மொழியில் பாடும் அழகிய கவிதைகள் யோகாசனங்கள்!

அசையாப் பொருள்கள் மற்றும் விலங்குகள், பறவைகள் இவற்றின் தோற்றத்தில் பல ஆசனங்கள் உள்ளன.

பர்வதாசனம் (மலை), நாவாசனம் (படகு), விருட்சாசனம் (மரம்)
புஜங்காசனம் (பாம்பு), சலபாசனம் (வெட்டுக் கிளி), மத்ஸ்யாசனம் (மீன்)
ஊர்த்துவ முக / அதோமுக ஸ்வானாசனம் (மேல் / கீழ் நோக்கும் நாய்), சிம்ஹாசனம் (சிங்கம்)
மயூராசனம் (மயில்), குக்குடாசனம் (சேவல்), கபோடாசனம் (புறா)


கருவில் இருக்கும் சிசுவாக கர்ப்ப பிண்டாசனம்.
எல்லா செய்கையும் அடங்கிய பிணமாக சவாசனம்.

முனிவர்களின் பெயரால் பரத்வாஜாசனம், மத்ஸ்யேந்திராசனம்.
தெய்வ சக்திகளாக வீரபத்ராசனம், நடராஜாசனம்.


இதயக் கமலத்தில் உறையும் ஆன்ம சக்தியின் உருவகமாகவும், ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை என்று ராஜயோகம் கூறும் சக்தி பீடமான சக்கரத்தின் உருவகமாகவும் விளங்கும் அற்புதமான பத்மாசனம்.

இப்படி ஆசனங்களிலேயே அனைத்துயிர்களின் உணர்வு நிலைகளும் தோன்றும் படி யோகிகள் இவற்றை வடிவமைத்து பெயரும் இட்டார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது!

ஆமே அனைத்துயிர் ஆகிய அம்மையும்
தாமே சகலமும் ஈன்றஅத் தையலும்
ஆமே அவளடி போற்றி வணங்கிடில்
போமே வினைகளும் புண்ணிய னாகுமே

- திருமந்திரம் 4.13.23

அடுத்த முறை விருட்சாசனம் செய்யும்போது, சில கணங்கள் கண்களை மூடிக் கொண்டு நீங்கள் மரமாகவே ஆகிவிட்டதாக உணருங்கள். அற்புதமான உணர்வு அது!

13 comments:

Muse (# 5279076) said...

ஜடாயு அவர்களே,

காலேஜ் படிக்கும்போதிலிருந்து ஒரு மூன்று நான்கு வருஷங்கள் செய்துவந்த அனுபவத்தில் கூறுகிறேன்:

யோகாஸனம் போஸ்டர்களில்லாமல், புரோக்கர்கள் இல்லாமல், நிஜமாகவே "அற்புத சுகமளிக்கும்" ஒரு ஆராதனைப் பெருவிழா !

யோகாஸனம் உடலை ஆரோக்கியமாக மட்டுமே வைத்திருக்கும், அதீத பலத்தை அளிக்காது என்பது எந்த அளவு சரியான செய்தி என்பது பற்றி எனக்கு சந்தேகம் இருக்கிறது.

ஆரிய ஸமாஜத்தை தோற்றுவித்த ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி அவர்கள் ஓடுகின்ற குதிரை வண்டியை ஒற்றைக் கையாலேயே நிறுத்தியதாக அவரது பயக்ராஃபி கூறுகின்றது. இவர் யோகாஸனம் செய்துவந்தவர்தான்.

சீன தேஸத்தில் ப்ரபல்யமாகவிருக்கும் மல்யுத்த முறையான "தாய் சீ" கூட ஒருவகை யோகாஸனம்தான்.

ஆஸ்த்மாவால் அவதிப்பட்டு நடக்கவே சிரமப்பட்ட என்னுடைய நண்பர் ஒருவர் யோகாஸனம் கற்றுக்கொண்ட இரண்டு மூன்று வருடங்களில் மிகப் பெரிய ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு முதல் பரிசும் பெற்றார். இது அவரே எதிர்பார்க்காதது. அவருக்கிருந்த ஸ்டாமினாவிற்கு சமமாக பாடி பில்டிங்க் செய்தவர்களின் ஸ்டாமினா இல்லை என்பதையும் நான் கவனித்திருக்கிறேன்.

இரண்டு கேள்விகள்:

ஹட யோகப் ப்ரதீபிகாவில் சூரிய நமஸ்காரம் பற்றி எதுவும் இல்லை என்றும், எனவே அது நவீன யோகாஸனக் கலை என்றும் எனக்கு சொல்லிக்கொடுத்த ஒரு யோகாஸன ஆசிரியர் கூறினார். இது உண்மையா?

நவீன யோகாஸனங்கள் (உதாரணமாக, பவர் யோகா) இக்காலத்திலுள்ள மற்ற எக்ஸர்சைஸ்களுக்கு இணையான பலன் களைத் தருகின்றது என்கிறார்களே. இதுபற்றிய தங்கள் கருத்து என்ன?

ஜடாயு said...

ம்யூஸ்,

// யோகாஸனம் போஸ்டர்களில்லாமல், புரோக்கர்கள் இல்லாமல், நிஜமாகவே "அற்புத சுகமளிக்கும்" ஒரு ஆராதனைப் பெருவிழா ! //

மிக நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்!

// ஹட யோகப் ப்ரதீபிகாவில் சூரிய நமஸ்காரம் பற்றி எதுவும் இல்லை என்றும், எனவே அது நவீன யோகாஸனக் கலை என்றும் எனக்கு சொல்லிக்கொடுத்த ஒரு யோகாஸன ஆசிரியர் கூறினார். இது உண்மையா? //

ஆம். சூரிய நமஸ்காரம் என்பது ஒரு தனி ஆசனம் அல்ல, பல ஆசனங்களை ஒரு தொடராக செய்வது. சூரிய நமஸ்காரத்தில் பாத ஹஸ்தாசனம், புஜங்காசனம், அதோமுக ஸ்வானாசனம் எல்லாம் வருகிறது. இதற்கு வின்யாசம் என்று யோக மொழியில் பெயர்.

வின்யாசங்கள் பற்றி ஹ.யோ.ப்ரதீபிகாவில் இல்லை என்றே படித்திருக்கிறேன். இது பிற்காலத்தில் உருவான முறை தான். ஆனால், குறைந்த நேரத்தில் உடலுக்கு முழு பயிற்சியும் தரக் கூடியது. அதனாலேயே மிகவும் பிரபலமாயிற்று என்று நினைக்கிறேன்.

Dubukku said...

அருமையான விளக்கங்கள். இதை தேசிபண்டிட்-ல் இணைத்துள்ளேன். நன்றி.

http://www.desipundit.com/2006/12/29/yoga/

ஜடாயு said...

தங்கள் கருத்துக்க்ம், இணைப்புக்கும் மிக்க நன்றி டுபுக்கு அவர்களே.

arunagiri said...

பூங்காவில் தொகுக்கப்பட்டது இப்பதிவு. அதற்காக ஜடாயுவுக்கு என் வாழ்த்துக்கள்.

ஜடாயுவின் பதிவு பூங்காவில் வந்ததற்கான காரணத்தை பூங்கா ஆசிரியர் குழு கோடி காட்டி உள்ளது:

"மெய்பேணல் பற்றிய ஜடாயு கட்டுரை யோக அமர்வுகள் குறித்தது. இதுபோன்ற மதத்தோலைக் கழற்றிவிட்ட , ஆனால் சிந்தையும் செயலும் ஒருங்குறுதல் சார்ந்த பதிவுகள் வருதல் அரிது".

நல்லது. யோகம் என்ற பழங்கலையின் பாரம்பரியக் கூறுகள் எவ்வாறு இந்திய ஞான மரபில் வேர் கொண்டுள்ளன, ஆவணப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டன என்றெல்லாம் சொல்வது பூங்காவின் ஆசிரியர்களைப் பொறுத்தவரை "மதத்தோல்" ஆகிறது. (அப்படி ஒன்றும் ஜடாயுவின் அழகான கட்டுரையில் மதத்தோல் கழன்றதாக எனக்குத்தெரியவில்லை என்றாலும்) அந்த "மதத்தோல் கழற்றி விட்ட"தால் இக்கட்டுரை பூங்காவிற்கு உகந்ததாய் ஆனதை எண்ணி வியந்து, என் அறிவை மேலும் விசாலப்படுத்தும் பொருட்டு நடிகை பூஜாவின் பேட்டிக்குச் சென்றேன். அதில் மதத்தோல் கழற்றாத கீழ்க்கண்ட வரிகள் கண்டு புல்லரித்துப் போனேன்:

"உங்களுக்குப் பைபிளில் ஆர்வம் அதிகமாமே?
ஆமாம். நான் படப்பிடிப்புக்குச் செல்லும்போது பைபிளைக் கையோடு எடுத்துச் செல்வேன். ஓய்வு கிடைக்கும்போது பைபிளை படிப்பேன். நான் சம்பாதிக்கும் பணத்தில் ஒருபகுதியை சமூகப் பணிகளுக்காகச் செலவழிக்கிறேன். எல்லோரிடமும் உண்மையாகவும் அன்பாகவும் எளிமையாகவும் இருக்க முயற்சி செய்கிறேன். இதையெல்லாம் எனக்கு பைபிள்தான் கற்றுத் தந்தது".

இந்தக் கேள்வி-பதில் யாரோ ஒரு பதிவரால் தனது பதில் எழுதி, பூங்காவினால் "பொறுப்பேற்க முடியாத" விதத்தில் தொகுக்கப்பட்டது என்று "மயங்க" வேண்டாம். "புத்தாண்டை முன்னிட்டு தமிழ்மணப் பூங்காவிற்காக" பிரத்தியேகமாய்ப் பேட்டி கண்டு பூங்காவால் வெளியிடப்பட்ட அரியதொரு நேர்காணல்தான் இது. அதாவது, நடிகையிடம் நேர்காணலில் அவரது பைபிள் குறித்த விசுவாசம் வெளியாகும் விதத்தில் கேள்வி போட்டு, அதற்கான பதிலைப் பெற்று வெளியிடுவது பூங்கா குழுவைப்பொறுத்தவரை நன்றாக "மதத்தோல் கழற்றப்பட்ட" ஒரு செயலாகிறது; மட்டுமன்றி, அந்த அரிய பைபிள் கருத்தை எங்கே வாசகர்கள் மிஸ் பண்ணி விடுவார்களோ என்று எண்ணியதாலோ என்னவோ, அந்தக் கேள்வியையும் பதிலையும் மட்டும் பிற பதில்களிலிருந்து தனித்துத் தெரியும் விதத்தில் சாய்வெழுத்தில் ("italaics") வெளியிடவும் செய்கிறது. ஆனால் யோகம் பற்றி எழுதுகையில் அதன் இந்து ஞான மரபுப் பாரம்பரியம் குறித்து எழுதி விட்டாலோ "மதத்தோலை கழற்றிவிட்ட" பதிவாக இல்லையே என்று பயங்கரமாக அலுத்துக்கொள்ள வைக்கிறது.

அதாவது பூங்காவைப் பொறுத்தவரை, தொழில்முறை நடிகையின் பேட்டியில் அவரது பைபிள் விசுவாசத்தை வெளிச்சம் போட்டுப் பேசுவது, யோகாசனக் கலைக்கும் இந்து மரபிற்கும் உள்ள தொடர்பைப் பேசுவதை விட அறிவார்ந்த நேர்மை அதிகம் உள்ள செயலாகத் தெரிகிறது போலும். இவ்வித கண்கவர் நேர்மை பூங்கா குழுவில் கசிவது, எந்தத்தோலைப் போர்த்திக் கொண்டதால் என்று எனக்குப் புரியவில்லை.

ஜடாயு said...

இந்தப் பதிவினை 1-ஜனவரி-07 பூங்கா இதழில் வெளியிட்ட பூங்கா தொகுப்புக் குழுவுக்கு மிக்க நன்றி.

அருணகிரி, பூங்கா குழுவின் கருத்தைப் பார்வைக்குத் தந்ததற்கு நன்றி.

இந்து ஞான நூல்களான பதஞ்சலி யோக சூத்திரம், திருவாசகம், திருமந்திரம் இவற்றிலிருந்து மேற்கோள்கள் இந்தப் பதிவில் உள்ளன. இந்து மதத்தின் பிரிக்க முடியாத வாழ்வியல் கலை வடிவமான யோகாசனங்களை தத்துவப் பின்னணி கொண்டே விளக்க முற்படுவதாகத் தான் நான் எண்ணினேன்!

"மதத்தோலை கழற்றிவிட்ட" பதிவு என்று சொல்ல எப்படித் தோன்றியது என்பது எனக்கே புரியவில்லை!

பைபிள் பற்றி அந்த நடிகை நேர்காணலில் கூறியதை வெளியிட்டதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் 'சாய்வெழுத்து' சாய்வு நிலை பற்றிய சந்தேகத்தை அளிக்கிறது என்பது உண்மை.

arunagiri said...

பைபிள் பற்றி நடிகையோ வேறு யாரோ என்ன கருத்து வைத்தால் எனக்கு என்ன? சந்தேகம் தருவது சாய்வெழுத்து மட்டுமல்ல, யோக சாத்திரம் பற்றிய பதிவை மதத்தோல் கழற்றிய விதத்திற்காகப் பாராட்டும் பூங்கா, அதே இதழில் தொழில்முறை சினிமா நடிகையிடம் கண்ட பேட்டியில், மிகவும் கருத்தாக பைபிள் பற்றி கேள்வி கேட்டு அவரது பைபிள் புல்லரிப்புகளைப் பதிலாக வெளியிடுவதுதான் அதன் அறிவுசார் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. யோக சாத்திரத்தில் உள்ளடங்கிய இந்துத்தன்மைகளை எழுத்தில் தவிர்க்கப்பட வேண்டியவையாகப் பார்க்கும் பூங்காவிற்கு ஒரு நடிகையின் பைபிள் புல்லரிப்போ அவசியமாய்ப் பதிய வேண்டிய விஷயமாய்ப் போய் விடுகின்றது. இந்துமதத் தோல் குறித்து வெகு ஜாக்கிரதையாய் இருக்கும் பூங்காவிற்கு பைபிள் மட்டும் எப்படி எளிதாக மதத்தோல் நீங்கிய விஷயமாக ஆகின்றது என்பது பேசப்பட வேண்டும். எப்படி மதத்தோல் என்பது பூங்காவால் இந்து மரபிற்கு மட்டுமே போர்த்தப்படுகிறது என்பது வெளிச்சம் போடப்பட வேண்டும். இதுவே எனது பின்னூட்டத்தின் நோக்கம்.

ஜடாயு said...

// இந்துமதத் தோல் குறித்து வெகு ஜாக்கிரதையாய் இருக்கும் பூங்காவிற்கு பைபிள் மட்டும் எப்படி எளிதாக மதத்தோல் நீங்கிய விஷயமாக ஆகின்றது என்பது பேசப்பட வேண்டும். //

சரியான கேள்வி தான்!

இன்னொன்று, பூங்காவின் கொடுந்தமிழ் நடையில் "மதத்தோல்" என்ற சொல்லைப் பயன்படுத்தியதே குழப்படியாக இருக்கிறது!

"பசுத்தோல் போர்த்திய புலி" என்பது போல, பயங்கரமான ஒன்றை சாதுவாகக் காண்பிப்பதற்குத் தான் "தோல் போர்த்த" வேண்டும். இங்கே யோகம் என்பது பயங்கரமான விஷயம் என்று சொல்ல வருகிறார்களா??

Muse (# 5279076) said...

யோகம் என்பது பயங்கரமான விஷயம் என்று சொல்ல வருகிறார்களா??

இதில் என்ன சந்தேகம், ஜடாயு ஸார்?

பன்னாட்டு மருத்துவ வியாபாரிகளின் கவலையை, அரசியல் வியாபாரிகள் அகற்ற விரும்புகிறார்கள்.

யோகாஸனாவை சொல்லித் தந்துகொண்டிருக்கும் குரு ராமதேவை கட்டம் கட்டி கம்யூனிஸ்ட்டுகளும், அவர்களது மீடியா ஜால்ராக்களும் பிரச்சினைகளை உருவாக்கிவருவதை நீங்கள் கவனிக்கவில்லையா?

முதலில் அவர் தயாரிக்கும் மருந்துகளில் மிருகங்களின் எலும்புகள் இருக்கின்றன என்று பிரச்சினை கிளப்பினார்கள், "எய்ட்ஸ் உள்ளவர்களுக்கு யோகாஸனம் உதவும்" என்று அவர் சொல்லிவிட்டார் என்பதற்காக சென்ட்ரல் கவர்ன்மெண்டின் மருத்துவ அமைச்சகத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள், இப்போது அவரது ஆசிரமத்துக்கு வந்த ஒரு பையன் செத்துப்போய்விட்டான் என்கிறார்கள்.

முந்தைய போப்பாண்டவரே யோகாஸனம் ஹிந்து மதத்தை பரப்ப ஸாத்தான் செய்யும் தந்திரம் என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கும்போது நம்மூர் போலி மதச்சார்பின்மைவாதிகளுக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும்?

எப்படியாவது ராமதேவை ஒழித்துவிட்டால் அதை காரணம் காட்டி இந்திய மருத்துவ முறைகள் அனைத்தையும் அழித்துவிடலாம் என்று திட்டம் போடுகிறார்கள். இவர்கள் கவலையெல்லாம் பன்னாட்டு மருந்து கம்பனிகளின் விற்பனையை இந்திய மருத்துவ முறைகள் பாதிக்கின்றன என்பதுதான்.

அந்த வகையில் பார்த்தால் யோகம் என்பதே பயங்கரமான விஷயம்தான்.

ஜடாயு said...

ம்யூஸ்,

// பன்னாட்டு மருத்துவ வியாபாரிகளின் கவலையை, அரசியல் வியாபாரிகள் அகற்ற விரும்புகிறார்கள். //

இதற்கு இப்படி ஒரு கண்ணோட்டம் இருக்கிறது என்பதை மிக நன்றாக விளக்கியிருக்கிறீர்கள். நன்றி.

யோகத்தின் புகழைக் கெடுக்க வேண்டும் என்ற இத்தகைய தீய எண்ணம் கொண்ட முயற்சிகள் பயங்கரமான தோல்வியையே தழுவிக் கொண்டிருக்கின்றன.

Sai Devotee 1970s said...

நல்ல பதிவு ஜடாயு சார்.

Reason said...

The interpretation of the 'Thiruvasagam' stanza to mean experiencing the Advaitic one-ness - rather than the evident meaning of multiple separate births - was excellent. I have'nt seen it anywhere before.

You, Mugamoodi and Arunagiri are doing a great job. Writing in Tamil is a great thing becuase it will help in demolishing any remaining traces of 'dravida theories' among the Tamils. But if you can also post in english, it will benefit a much larger audience.

வடுவூர் குமார் said...

யோகாசன கலையைப்பற்றி எவ்வளவு முறை படித்தாலும் அலுப்பதில்லை.புது புது விபரங்கள்.
சுமார் 12 வருடங்களுக்கு முன்பு,கிருஷ்ணாமாச்சாரியார் யோகா மந்திரத்தில் போய் சில ஆசனங்கள் கற்று பல வருடங்கள் செய்தேன்.சரியான கால அவகாசம் கொடுக்கமுடியாததால் தொடரமுடியவில்லை.
செய்த்தால் பலன் இருக்கா இல்லையா என்று சொல்லத்தெரியவில்லை.