Wednesday, August 16, 2006

ஆன்மீகப் பார்வையிலும் அடிபடும் ஜோதிடம் : பாகம் 2

இந்தக் கட்டுரையின் இரண்டாம் பாகத்தையும் வெளியிட்ட தமிழோவியம் இதழுக்கு நன்றி.
------------------------------------------------------------------------------------------
அறிவியல் பார்வையில் மட்டுமல்ல, ஆன்மீகப் பார்வையிலும் அடிபடும் ஜோதிடம் : பாகம் 2

ஜ்யோதிஷம் என்னும் அறிவுத் துறையின் வரலாறு மற்றும் சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் பற்றி சென்ற பாகத்தில் பார்த்தோம். நான்கு யோகங்கள், புராணங்கள், சைவ-வைணவ சமயங்கள் முதலியவற்றின் பார்வையில் இன்றைய ஜோதிடம் பற்றிப் பார்க்கலாம்.

யோகங்கள் :

கர்ம யோகத்தின் சாரம் பலன் சாரா செய்கை என்பது. முழு மனதுடனும், சிரத்தையுடனும், வெற்றி-தோல்வி லாப-நஷ்டம் போன்ற “இருமை”களையும் பலன்களையும் எண்ணிப் பார்க்காமல், எல்லாச் செயல்களையும் அர்ப்பணிப்பு உணர்வோடு ‘யக்ஞம்’ போன்று செய்யவேண்டும் என்பதே இந்த யோகத்தின் கோட்பாடு. ஆனால் ஜோதிடத்தில் அதிகம் புழங்கும் வார்த்தையே “பலன்” தான்! எனவே ஜோதிடம் கர்ம யோகத்திற்கு நேர்மாறான நிலைப்பாட்டில் இருக்கிறது. ‘கர்மம்’ என்பதை செயல் என்று கொள்ளாமல் வைதீக நோக்கில் யாகம், ஹோமம் என்று கொண்டாலும், ஜோதிடத்தின் அறிவுரைப் படி சில கிரக தோஷங்களை முறியடிப்பதற்காக இவற்றைச் செய்தால் அது காம்ய கர்மம் (பலன் விரும்பிச் செய்யப்பட்டது) தானே தவிர கர்ம யோகமல்ல.

ஞான யோகத்தின் சாரம் வேதாந்த விசாரம். “நான் யார்?” என்ற கேள்வியில் தொடங்கி ஜீவன், பிரம்மம், மாயை, எல்லாத் தளைகளிலிருந்து விடுபடுதல் போன்ற தத்துவ சிந்தனைகள். பௌதீக ஆகாசத்தில் ஒளிரும் சூரியனை சிதாகாசத்தில் ஒளிரும் ஆன்மாவுடன் ஒன்றிணைத்துத் தான் ஞான யோகம் பார்க்கிறது, ஜோதிடம் பார்ப்பது போல கிரக, ராசி மண்டலத்தின் தலைவனாக மட்டும் அல்ல. “ஓ சூரியதேவனே, உனது கிரணங்களின் உண்மையான பொருளையும் மகிமையையும் உணர்ந்து கொண்டேன். உன்னுள்ளிருக்கும் உண்மையை நான் காண்கிறேன்; உன்னுள் இருப்பதே என்னுள்ளும் இருக்கிறது; நானே அது“ (ஈசாவாஸ்ய உபநிஷதம், 16). காயத்ரி மந்திரமும் “எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என்று சூரிய தேவனிடம் ஞானத்தையே வேண்டுகிறது. ஆனால் சுத்த ஞான ஸ்வரூபனும், மௌன குருபரனும் ஆகிய ஆலமர் செல்வன் தட்சிணாமூர்த்தியை வியாழ கிரகத்தின் தேவதை என்று வர்ணித்து, ஞானம் கீனத்தையெல்லாம் கடாசிவிட்டு குரு பெயர்ச்சி பலன்களுக்காக (பயங்களுக்காகவும்) தட்சிணாமூர்த்தி சன்னதியில் தொழ வேண்டும் என்ற “தத்துவத்தை” பாமர மக்களிடையே உருவாக்கியிருப்பது ஜோதிடத்தின் சாதனை.

ராஜ யோகம் மனக் கட்டுப்பாடு, அஷ்டாங்க யோகம், சாதனைகள், நாடிகள், சக்கரங்கள், குண்டலினி என்று போகிறது. சுவாமி விவேகானந்தர் கூறியது போல ஒவ்வொரு மனிதனுள்ளும் உறங்கிக் கிடக்கும் ஆன்ம சக்தியை எழுப்புவதற்காக, படிப்படியாக ஒழுக்க நெறிகள் (யம, நியமம்), ஆசனங்கள், பிராணாயாமம், புலனடக்கம், தியானம் போன்ற சாதனைகளில் ஈடுபடுவதே ராஜ யோகம். யோகிகள் ஜோதிட நம்பிக்கைகளை சாதனைகளுக்கெல்லாம் மிகக் கீழ் நிலையில் உள்ள பய உணர்வுகளின் வெளிப்பாடுகளாகத் தான் கண்டார்கள்.

பக்தி யோகம் தான் பெரும்பாலான மக்களின் அன்றாட சமய வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கிறது. எல்லா உயிர்களிலும் இயல்பாக இருப்பது அன்பு. இந்த அன்பு என்ற உணர்வு விசாலமாகி தெய்வத்தன்மை பெறும்போது அது பக்தி யோகமாகப் பரிணமிக்கிறது. “ஸா த்வஸ்மின் பரம ப்ரேம ரூபா” (பக்தி என்பது அளப்பரிய அன்பே உருவானது) என்பது நாரத பக்தி சூத்திரத்தின் முதல் அடி. அன்பு கலந்த பக்தி என்பது தனக்குத் தானே சாட்சியே அன்றி (ஸ்வயம் ப்ரமாணாத்), அதற்கு வேறு எந்த வெளிச் சாட்சிகளும் தேவையில்லை என்றும் நாரத முனி கூறுகிறார். “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி”யும், “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இருதிரியா”க்கியும் “கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம்” தான் பக்தி. திருவாசகத்திலோ திருவாய்மொழியிலோ உள்ள சில பாசுரங்களையாவது உணர்வோடு சொல்லி லயித்து வழிபட்டவர்களுக்கு இது புரியும். ஜோதிடர்கள் சொல்லியோ இல்லை தானாக ஜோதிடம் பார்த்து அதன் காரணமாகவோ கோயில்களுக்குச் சென்றும், பூஜைகள் செய்தும், பஜனைகள் பாடியும் பக்தி செய்வதில் பக்தியின் இந்த லட்சணங்களில் ஏதாவது ஒன்றாவது இருக்கிறதா? நவக்கிரக சன்னிதியில் போய்த் தொழும்போது எந்த மாதிரி பாவனைகள் வரும்? “அத்தா உனக்காளாய் இனி அல்லேன்” என்று ஈசனிடமும், “உன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்” என்று கண்ணனிடமும் பக்தர்கள் வேண்டியது போல, சுக்கிரனிடமும், புதனிடமும், சனியிடமும் வேண்ட முடியுமா? கிரக, நட்சத்திர தொல்லைகளும், பயங்களும் தான் மனதில் நிழலாடும்.

புராணங்கள்:

வக்கிரக புராணம் என்ற பெயரில் வழங்கும் சில கதைகளை ஜோதிட வெறியர்கள் ஏதோவொரு கால கட்டத்தில் எழுதியிருப்பார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. எல்லா தேவதைகளும், அவதாரங்களும் கிரக சஞ்சாரங்களால் பீடிக்கப் பட்டார்கள் என்பதாக இந்தக் கதைகள் இருக்கும்.. காலாதீதமான பரம்பொருளான சிவபெருமான் சனி என்கிற ஒரு குட்டி கிரகத்தின் சேட்டையால் கஷ்டப் பட்டதாக எண்ணுவதே நாத்திகம் அல்லவா? சிவ துரோகம் அல்லவா? உண்மையான சிவ பக்தன் இப்படி கனவிலும் நினைப்பானா? ராமாவதாரத்திலும், கிருஷ்ணாவதாரத்திலும் வரும் சம்பவங்களெல்லாம் கிரக, நட்சத்திர சமாசாரங்களினால் நடந்தது என்று சொன்னால் அது அவதார தத்துவத்தையே அவமதிப்பதாகும். இந்த அவதாரங்கள் பட்ட மானுட கஷ்டங்களெல்லாம் தெய்வ லீலை, அலகிலா விளையாட்டு. மறைமுகமாக விளையாடுவது என்பது தெய்வத்திற்குப் பிரியமான ஒன்று - “பரோக்ஷ ப்ரியா: இவ ஹி தேவா:” என்று வேதம் கூறுகிறது. தனக்காகப் போரிட்டு மடிந்த எல்லா வானரங்களையும் உயிர்பெறச் செய்த ராமன், தன் தந்தை தசரதனும், ஜடாயுவும் இறந்த போது கதறி அழுதானே? அதை எப்படிப் புரிந்து கொள்வது? தெய்வ லீலை என்பது தவிர வேறு எந்த மாதிரியும் ஆன்மீக நோக்கில் அதைப் புரிந்து கொள்ள முடியாது !

சமய மரபுகள்:

பிரதோஷத்தன்று சிவ வழிபாடு, ஏகாதசி விரதம், கிருத்திகை, ஷஷ்டியில் முருக வழிபாடு போன்று சமய மரபில் தொன்று தொட்டு வழங்கி வரும் விரதங்களும், பண்டிகை நாட்களும் முன்பே கூறிய படி காலக் கணக்கு என்ற வகையில் அடங்கும். சமுதாய அளவில், அடியார்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட நாளில் சென்று கூட்டாக வழிபடுவதற்குச் செய்யப் பட்ட நல்ல ஏற்பாடு என்பதாகவே இவை உருவாகியிருக்க வேண்டும். இன்றைய ஜோதிடர்கள் இவற்றுக்கு ஜோதிட அடிப்படையில் விளக்கம் அளிக்கவும் சாத்தியக் கூறு இருக்கிறதே அன்றி, இவை ஜோதிடத்தை மனதில் கொண்டு உருவானவை என்று சொல்ல முடியாது. உதாரணமாக, தேவி மகாத்மியம் கடைசி காண்டத்தில் “மழைக் காலத்தில் நடக்கும் சிறப்புப் பூஜை” (ஷரத்காலே மஹாபூஜா) என்று குறிப்பிடப் படுவதே இன்று நாம் கொண்டாடும் அற்புதமான நவராத்திரித் திருநாளாக வளர்ந்திருக்கும்.

திருஞான சம்பந்தர் அருளிய கோளறு பதிகத்தில் சிவனருள் இருந்தால் கிரக, நட்சத்திரங்கள் மட்டுமல்ல, நோய்கள், விலங்குகள் போன்ற மற்ற இயற்கை உபாதைகளும் துன்புறுத்தாது என்ற கருத்தே உள்ளது. “நாள் என் செயும் வினை தான் என் செயும் எமை நாடி வந்த கோள் என் செயும்” என்று அருணகிரி முழங்குகிறார். கிரகங்களின் பலன் எம்மாத்திரம்? ராமனுடைய கருணையின் பலனே பலன் (க்ரஹ பலமேமி? ராமானுக்ரஹ பலமே பலமு) என்கிறார் தியாகராஜர். எல்லா கிரகங்களின் பலமும் நீயே தாமரைக் கண்ணா (ஸகலக்ரஹ பல நீனே ஸரஸிஜாக்ஷா) என்று புரந்தரதாசர் பாடுகிறார். இவற்றையெல்லாம் படிக்கும்போது ஜோதிடத்தை நம்பி தெய்வத்தை நம்பாமல் இருந்த போலி பக்தர்களுக்காகவே இந்த அடியார்கள் இப்படிப் பாடியிருப்பார்கள் என்று தோன்றுகிறது!
“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில்
இடர்ப்படோம் நடலையில்லோம்”
என்றும்
“பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்

நலியும் நரகும் நைந்த நமனுக்கினங்கியாதொன்றுமில்லை”

என்றும் பாடிய அச்சமற்ற ஆன்மீக உணர்வே சைவ, வைணவ சமயக் கோட்பாடுகளில் வெளிப்படுகிறது.

இயற்கை வழிபாடு என்ற அளவில் இன்றைய ஜோதிடம் சார்ந்த சமாசாரங்களைச் சொல்ல முடியுமா? பிரபஞ்சம் முழுவதிலும் நிறைந்தது தெய்வம் என்னும்போது கிரகங்களும் நட்சத்திரங்களும் அதில் அடக்கம் தான், அதனால் அவற்றை வணங்குவது பொருத்தமே என்ற கருத்து வருகிறது. அது சரிதான், ஆனால் எந்த வகையான உணர்வுடன் வணங்குகிறோம் என்பது முக்கியம். கங்கையையும், காவிரியையும் நாம் போற்றி வழிபடுவது பய உணர்வினால் அல்ல. தெய்வத்தின் கருணையே இப்படி ஆறாக ஓடுகிறது என்ற ஆன்மீக உணர்வினாலும், இது என் நாட்டின் நதி என்ற மண்ணின் மணம் சார்ந்த தேசபக்தி உணர்வினாலும் தான்.
“அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகி
உள்நெகிழ் கருணையின் ஒழுக்கம்
போன்றது”

என்று காவிரி நதியை சேக்கிழார் வர்ணிக்கிறார். பொங்கல் வைப்பது, அரச மரம் மற்றும் ஸ்தல விருட்சங்கள் வளர்ப்பது, துளசி மாடத்தில் துளசிச் செடி வைத்து வணங்குவது எல்லாம் இந்த வகையில் அடங்கும் – இவை மூட நம்பிக்கைகள் என்று நாத்திகர்கள் சொல்லலாம், ஆனால் நாம் இப்போது பேசிக் கொண்டிருப்பது ஆன்மீகப் பார்வை பற்றி ! மேலும், இந்த வழிபாட்டு முறைகள் எல்லாம் சுற்றுச் சூழலைப் பேணி வளர்க்கவும் வணங்கவும் வேண்டும் என்ற நல்ல, ஆக்கபூர்வமான சிந்தனையை சமயத்தின் துணை கொண்டு உருவாக்கி வந்திருக்கின்றன. ஆனால் ஜோதிடமோ எதிர்காலம் பற்றிய பயம், குறுக்கு வழிகளில் விருப்பம், உழைப்பையும் தெய்வத்தையும் நம்புவதை விட்டு விதியை நம்புதல், அறியாமை போன்றவற்றையே வளர்த்து வந்திருக்கிறது.

திருமணம்:

திருமணத்தில் ஜாதகம் பார்ப்பது பற்றிக் குறிப்பாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. மற்ற எல்லா விஷயங்களிலும் அவ்வளவாக ஜோதிடத்தை நாடாதவர்களும், இந்த விஷயத்தில் அதில் சரணடைகிறார்கள். நமது புராணங்களிலும், இதிகாசங்களிலும் ஜாதகம் பார்த்து நடந்த கல்யாணம் என்று ஏதாவது ஒன்று உண்டா? சீதை ராமனையும், தமயந்தி நளனையும், திரௌபதி பாண்டவர்களையும் கைப்பிடித்தது சுயம்வரத்தில். ருக்மிணி கிருஷ்ணன், சுபத்திரை அர்ஜுனன் திருமணங்கள் மாப்பிள்ளை பெண்ணத் தூக்கி வந்து நடத்தியவை! முருகன் வள்ளியைக் காட்டில் தேடிச் சென்று மணந்தான். துஷ்யந்தன் சகுந்தலையைக் காட்டில் கண்டு காதல் கொண்டு காந்தர்வ விவாகம் புரிந்தான். சிவன் பார்வதி, முருகன் தெய்வானை, கண்ணகி கோவலன் திருமணங்கள் பெற்றோர்கள் சம்மத்துடன் ஊர் கூடி நடந்தது (ஜாதகம் பார்த்ததாக காவியங்களிலும், புராணங்களிலும் குறிப்பு இல்லை). பெரியவர்கள் பார்த்து நடத்தும் இத்தகைய விவாக முறைக்கு “பிரம்ம விவாகம்” என்று பெயர். இதில் ஒருவருக்கொருவர் குணத்திலும், அழகிலும் பொருத்தமுடைய இருவர் பெற்றோர்கள் சம்மதத்துடன் மணம் புரிய வேண்டும் என்று தான் வரையறை இருக்கிறதே தவிர, ஜாதகம் பார்க்க வேண்டும் என்று இருப்பதாகத் தெரியவில்லை! ஜோதிடம் கிளப்பி விட்ட பய உணர்வின் காரணமாகவும், இவ்வளவு முக்கியமான திருமண பந்தத்தை கிரகங்களின் பாதிப்பு சிறு அளவில் இருந்தாலும் கெடுத்து விடக் கூடாதே என்ற கவலையின் காரணமாகவும் இந்தப் பழக்கம் உருவாகி, இன்று பல திருமண உறவுத் தீர்மானங்களில் முதல் முக்கிய விஷயமாக ஆகும் அளவுக்கு பூதாகாரமாக வளர்ந்திருக்கலாம்.

மொத்தத்தில், எந்த சமய கண்ணோட்டத்தில் பார்த்தாலும், ஜோதிட நம்பிக்கைகளுக்கான ஆன்மீக அடித்தளம் இல்லை என்றாகிறது. மரபுசார்ந்த காலக் கணக்கு என்ற அளவில் பஞ்சாங்கம், தமிழ் மாதங்கள், விரதங்கள், பண்டிகைகள் முதலிய அம்சங்களைக் கடைப்பிடிக்கலாம், கடைப்பிடிக்க வேண்டும். வானியல் இன்று Astronomy, Astrophysics என்று தனி அறிவியல் துறையாகவே ஆகி விட்டது. இதற்கு மேல் ஜோதிடத்தில் எஞ்சி இருப்பவை குருட்டு நம்பிக்கைகள் தான் என்றே எண்ண வேண்டியிருக்கிறது.

இந்தக் கட்டுரை ஜோதிட நம்பிக்கையுள்ள சில சமய, ஆன்மீக அன்பர்களைக் குழப்புவது போல் தோன்றலாம். குழப்பத்திலிருந்து தான் தெளிவு பிறக்கும். மகா யோகியாகவும், மகா பக்தராகவும் திகழ்ந்த மகாகவி பாரதியின் இந்த புதிய ஆத்திச்சூடி உபதேசங்கள் மனத்தை இன்னும் தெளிவாக்கும்.

அச்சம் தவிர்
சோதிடந்தனை இகழ்
ஞாயிறு போற்று
தொன்மைக்கஞ்சேல்
தவத்தினை நிதம் புரி
தெய்வம் நீ என்றுணர்
நினைப்பது முடியும்
பீழைக்கிடம் கொடேல்
லீலையிவ்வுலகு
விதையினைத் தெரிந்திடு
வானநூற் பயிற்சி கொள்
வேதம் புதுமை செய்

Friday, August 11, 2006

ஜிகாதி தீவிரவாதத்தின் கோர முகம்

இந்தக் கட்டுரையை வெளியிட்ட திண்ணை இதழுக்கு நன்றி.

கட்டுரையை திண்ணையில் அல்லது இந்த வலைப்பதிவில் படிக்கலாம். மறுமொழிகளை இங்கே தரவும்.

(இந்தப் பழைய பதிவை வலையேற்றும்போது ஏதோ தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அதே தலைப்பில் இரண்டு மூன்று முறை publish செய்தும், linksல் வரவில்லை, ஆனால் பதிவு இருக்கிறது)

Wednesday, August 09, 2006

ஆன்மீகப் பார்வையிலும் அடிபடும் ஜோதிடம் - பாகம் 1

இந்தக் கட்டுரையை வெளியிட்ட தமிழோவியம் இதழுக்கு நன்றி.
-----------------------------------------------------------------------------------

அறிவியல் பார்வையில் மட்டுமல்ல, ஆன்மீகப் பார்வையிலும் அடிபடும் ஜோதிடம் : பாகம் 1

மிகுந்த சமய, ஆன்மீகப் பற்றுள்ள, ஆனால் ஜோதிடத்தை சிறிதும் நம்பாத (சொல்லப் போனால் ஜோதிடத்தை எதிர்க்கும்) ஆள் நான் என்றால் யாரும் நம்பவும் ஏற்றுக் கொள்ளவும் மறுக்கிறார்கள். “என்ன சார், இவ்வளவு அழகா விபூதி குங்குமம் வெச்சுருக்கீங்க, ஜோதிடம் எல்லாம் பொய்யினு இப்படி நாத்திகர் மாதிரி பேசறீங்களே!” என்பது ஒரு வகை. “நீ ஜோசியத்தை நம்பாமல் கேலி பேசுவதால் உன் ஆன்மீக சாதனைகள் எல்லாமே வீணாய்ப் போகும்” போன்ற சில ‘பெரியவர்களின்’ சாபங்கள் இன்னொரு வகை. தளையற்ற சிந்தனைகளிலும் உணர்வுகளிலும் முகிழ்த்த நம் சமய, ஆன்மீக மரபுகளைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்பவர்கள் இப்படி முரண் போலத் தோன்றுகின்ற சில சின்ன விஷயங்களைக் கூட ஜீரணிக்கத் தயங்குவது ஆச்சரியமான முரண்பாடு தான்.

முதலில் வரலாற்றுப் பார்வையில் ஜோதிடம் பற்றிச் சில விஷயங்கள்.

“ஜ்யோதிஷம்” என்கிற மூலச் சொல்லுக்குப் பொருள் “ஒளி பற்றிய அறிவு” என்பது. ஒளிரும் பொருள்களான சூரியன், சந்திரன் மற்றும் கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சியையும், அறிவையும் குறிப்பதற்காக வேத இலக்கியத்தில் இந்தச் சொல் பயன்பட்டது, ஒரு வகையில் பண்டைய வான சாஸ்திரம் எனலாம். இது பற்றியே வேத வித்யையின் ஆறு அங்கங்களில் ஒன்றாக ஜோதிடம் அறியப் பட்டது. வேத காலத்திலிருந்து இந்த அறிவு விரிவாக்கம் பெற்று வளர்ச்சியடைந்த கால கட்டங்களில் முக்கியமான ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூன்று விஷயங்கள் பற்றிய சிந்தனை வளர்ச்சியை இந்தத் துறை உள்ளடக்கியது –
1. வானியல் : வெளியில் தோன்றும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை இனம் கண்டு வகைப் படுத்துவது. அவற்றின் இயக்கம் மற்றும் சுழற்சி பற்றி அறிவது, தட்பவெப்ப நிலை மாற்றங்களில் வான் பொருட்களின் (celestial objects) தாக்கம், கிரகணங்கள், வால் நட்சத்திரங்கள் போன்றவற்றைப் புரிந்து கொள்ளுதல் முதலியவை.
2. கணிதம் : வான் பொருட்களின் இடம் மற்றும் இயக்கம் பற்றிய அறிவை முன்னெடுத்துச் செல்ல அடிப்படை ஜியோமிதி மற்றும் முக்கோணவியல் (Trignometry) அத்தியாவசியமாயிற்று. ‘கணிதம்’ என்பதும் ஆறு வேத அங்கங்களில் ஒன்றாக அறியப்பட்டுத் தனித் துறையாக வளர்ந்து வந்தது. எனவே, ஜோதிடத்திலும் கணித அறிவின் பல கூறுகள் பயன்படுத்தப் பட்டன.
3. கால அளவு முறைகள்: எல்லா பண்டைய நாகரீகங்களின் வளர்ச்சியிலும் காலக் கணக்கு முறைகள் இயற்கை நிகழ்வுகளின் அடிப்படையிலேயே உண்டாயின. பன்னிரண்டு ராசிகள், சந்திரனின் வளர்பிறை, தேய்பிறை சுழற்சியைக் கொண்டு நாட்களை அளவிடுதல் போன்றவை. பிறப்பு, இறப்பு நாட்கள், பருவங்கள், பண்டிகைகள் இவை அனைத்தும் இந்தக் கால அளவு முறையிலேயே குறித்து வைக்கப் பட்டன. ஆவணி மாதம் வளர்பிறையில் அஷ்டமியும் ரோகிணியும் கூடியிருந்த நாளில் கண்ணன் பிறந்தான் என்பது போல. பஞ்சாங்கம் என்பது அடிப்படையில் ஒரு காலக் கணக்குக் காட்டி என்பதாகவே உருவாயிற்று.

மேற்சொன்ன வானியல் அறிவும், கணித அறிவும், பல நூற்றாண்டுகளாகத் திரட்டப் பட்ட பிரபஞ்ச நிகழ்வுகள் (cosmic events) பற்றிய பதிவுகளும் (recordings) ஒன்றிணைந்து இத் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தின. எந்தத் தொலைநோக்குக் கருவியின் உதவியுமின்றி கிரகணங்களைத் துல்லியமாகக் கணிப்பது போன்ற அரிய நுட்பங்கள் இதனால் உருவாயின. ஜ்யோதிஷம் என்று முதலில் அறியப் பட்ட அறிவுத் துறை இது வரை தான்.

இதே கால கட்டத்தில் தான் கர்மம், ஊழ், வினைப்பயன், மறுபிறவி, பிரபஞ்சவியல் போன்ற கருத்துகளும் வளர்ந்தன. ஒவ்வொரு உயிரின் செயல்பாடுகளும் அதன் கர்ம வினைப் படியே நடந்தேறும், ஒரு ஜீவனின் சுழற்சியை முற்றுமாகத் தீர்மானிப்பது அதன் கர்மமே என்ற அடிப்படை சமய உண்மையும் வலுப்பெற்றது. “அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது”, பிரபஞ்சம் முழுவதும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட பொருட்களால் ஆனது போல் தோன்றினாலும், அடிப்படையில் ஒன்றுக்கொன்று தொடர்புடைய, சொல்லப் போனால் ஒன்றேயான பொருளால் ஆனது என்னும் வேதாந்த சிந்தனையும் இதனூடாக முளைத்தது.

பல்வேறு பட்ட இந்த சமய, அறிவியல் தத்துவங்களின் தாக்கங்களினால் “வான வெளியில் சுழலும் கிரகங்களின் இயக்கம் மனித வாழ்க்கையிலும் புகுந்து, ஓரளவு கர்ம வினைகள் மற்றும் அதன் பயன்களையும் தீர்மானிக்கிறது” என்பதாக ஒரு கருத்து உருவாகியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. இதுவே இன்று நாம் ஜோதிடம் என்று அழைக்கும் விஷயமாக வளர்ந்திருக்கிறது. நாளடைவில் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இதில் “ஓரளவு” என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக “எல்லாவற்றையுமே” கிரக சஞ்சாரங்கள் தான் தீர்மானிக்கின்றன என்பதாக வளர்த்தெடுத்திருக்கலாம். ஏற்கனவே புழக்கத்திலிருந்த சகுனம் பார்த்தல், பறவைகள் மற்றும் விலங்குகளின் சேஷ்டைகள் இயற்கை நிகழ்வுகளை முன்னறிவிக்கும் போன்ற நம்பிக்கைகள் எல்லாம் கலந்து, இன்று அஸ்ட்ராலஜி மட்டுமல்லாமல் நியூமெராலஜி, ஜெம்மாலஜி, ‘சும்மா’லஜி என்று அப்பாவி மக்களையும், பல படித்த முட்டாள்களையும் பைத்தியம் பிடிக்க வைத்துக் கொண்டிருக்கும் நிலைமைக்கு வந்திருக்கலாம்.

சுவாமி விவேகானந்தர் “மனிதனின் விதிக்கு அவனே பொறுப்பாளி” என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவில் ஜோதிடம் பற்றிய தமது கருத்துக்களைத் தெளிவாகக் கூறியிருக்கிறார். “ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற அரசவம்சங்களில் தோன்றியவர்களின் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகங்கள் கணிக்கப்பட்டு எதிர்காலம் பற்றிய யூகங்கள் கூறப்பட்டன, இந்த ஊகங்கள் பிறகு நடந்த உண்மை சம்பவங்களுடன் ஒப்பு நோக்கப்பட்டன. இப்படியே ஒரு ஆயிரம் வருடங்கள் ஜோதிடர்களின் வம்சாவளிகள் இதை செய்து வந்தன. இந்தப் போக்கில் பல யூகங்கள் “பொது விதிகளாக” அறியப்பட்டு ஜோதிடப் புத்தகங்கள் உருவாகியிருக்கலாம்” என்று சுவாமிஜி கூறுகிறார். “பண்டைய இந்துக்களிடமிருந்து வான சாஸ்திரத்தைக் கற்றுக்கொண்ட கிரேக்கர்கள், தங்கள் கலாசாரத்தில் பிரபலமாக இருந்த ஜோதிடக் கலையை இந்துக்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கலாம்” என்றும் சுவாமிஜி கூறுகிறார். இதன்படி பார்த்தால் இன்றைய ஜோதிடக் கலையின் மூலம் வேத கலாசாரமே இல்லை என்றாகிறது! “ஜோதிடத்தின் சிறு சிறு நுட்பங்களிலும் அளவுக்கு அதிகமான கவனம் செலுத்தத் தூண்டிய மூடநம்பிக்கைகள் காலப் போக்கில் இந்துக்களுக்குப் பெரும் தீங்கையே விளைவித்திருக்கின்றன” என்றும் அவர் மதிப்பிடுகிறார்.

அவர் மேலும் கூறுகிறார் - “வேதாந்த தத்துவத்தின் படி ஒரு பொருளின் சகல பரிணாமங்களும் அதன் இயற்கையிலேயே இருக்கின்றனவே அன்றி அதற்கு வெளியில் இல்லை (மரம் முழுவதும் விதைக்குள் அடங்கியிருப்பது போல).. என்னுடைய இப்போதைய நிலை முழுவதையும் விளக்குவதற்கு என் கர்ம வினையே போதுமானது, கிரகங்களும் நட்சத்திரங்களும் தேவையில்லை!.. (போதிசத்வரான) புத்தர் மறுபடியும் மறுபடியும் பற்பல மிருகங்களாகவும் பறவைகளாகவும் பிறந்து, ஒவ்வொரு முறையும் இறுதியில் புத்த நிலையை அடைகிறார். இதில் நட்சத்திரங்களுக்கு என்ன வேலை? அவற்றின் தாக்கம் மிகச் சிறிதளவு இருக்கலாம், ஆனால் நம் கடமை அவற்றை ஒதுக்கித் தள்ளுவது தானே தவிர, அவற்றை எண்ணி மறுகிக் கவலையுறுவதல்ல.. என் போதனையின் முதல் உபதேசம் இது தான் – உடலையோ, மனத்தையோ, ஆன்மாவையோ பலவீனப் படுத்துவது எதுவாயினும், அதைக் கால் தூசுக்கு சமானமாகக் கூடக் கருதாதீர்கள்! மனிதனில் இயல்பாக உறையும் ஆன்ம சக்தியை வெளிக்கொணர்வதே உண்மையான சமய தத்துவம்”

ஒரு பழைய கதை. ஒரு ஜோதிடர் அரசரிடம் வந்து “இன்னும் ஆறு மாத்தில் உங்களுக்கு மரணம் சம்பவிக்கும், என் கணக்கு என்றும் பொய்யாகாது” என்று சொன்னார். இந்த மரண பயத்திலேயே அரசருக்குப் பாதி உயிர் போய்விடும்போலிருந்தது. இது பொறுக்க முடியாத அறிவாளி அமைச்சர் ஜோதிடரைக் கூப்பிட்டு “தங்கள் கணக்குப் படி, தங்களின் ஆயுட்காலம் எவ்வளவோ?” என்று கேட்டார். “பன்னிரண்டு வருஷத்திற்கு எனக்கு ஒரு கண்டமும் கிடையாது. இது நிச்சயம்” என்று சத்தியம் செய்தார் ஜோதிடர். அடுத்த கணம் அமைச்சர் வாளை உருவினார். ஜோதிடரின் தலை தரையில் கிடந்தது. “இந்தப் பொய்யன் சொன்னதை இன்னும் நம்புகிறீர்களா?” என்று அரசரைத் தெளிவித்தார் அமைச்சர்.

இந்தக் கதையைக் கூறிய சுவாமிஜி, மேலும் சொல்லுக்கிறார் – “(கடந்த காலம் பற்றிய) பல ஆச்சரியகரமான விஷயங்கள் ஜோதிடர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால், அவை அனைத்தையும் கிரக நட்சத்திரக் கணக்குகளைக் கொண்டு அவர்கள் சொல்லுகிறார்கள் என்று நம்புவதற்குக் காரண அறிவு இடம் கொடுக்கவில்லை. பெரும்பாலும் மனதைப் படித்து (mind reading) சொல்லப்படுபவையே இவையெல்லாம்… உண்மையான சமய தத்துவம் உங்களை உறுதியாக்கி குருட்டு நம்பிக்கைகளினின்று விடுவிக்கும்… மிக மிக உயர்வானவை அனைத்தும் (ஆன்மாகிய) உன் காலடியில் கிடக்கின்றன. நீ நினைத்தால் நட்சத்திரங்களையும் கையில் அள்ளி விழுங்கி விடலாம். ஆன்மாவாகிய உன் உண்மை இயல்பு இந்தப் பெரும் சக்தியே..”
சென்ற நூற்றாண்டின் ஈடு இணையற்ற ஆன்மீக குருவாகவும், சிந்தனையாளராகவும் திகழ்ந்த சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் இவை. சீர்திருத்தவாதியான சுவாமிஜியின் கருத்துக்கள் இப்படிப் புரட்சிகரமாக இருப்பதில் வியப்பில்லை. ஆனால் காலம் காலமாக வந்த சமய, ஆன்மீக மரபுகள் என்ன சொல்லுகின்றன? அதை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

Tuesday, August 08, 2006

சஞ்சய் சுப்பிரமணியன் சங்கீத மழை

சில விஷயங்கள் பூர்வ ஜன்ம புண்ணியம் செய்திருந்தால்தான் கிடைக்கும் என்பார்கள். நேற்று கேட்ட சஞ்சய் கச்சேரி அப்படிப் பட்டது (பெங்களூர் அல்சூர் ஒடுக்கத்தூர் மடம் அரங்கில் நடந்து வரும் கோகுலாஷ்டமி கச்சேரித் தொடர்). நான் உள்ளே நுழையும்போது சந்திரஜோதி ராக ஆலாபனை பண்ணிக்கொண்டுருந்தார். அதில் "சசி வதனா" தியாகராஜர் கிருதி. பிறகு, ஒரு அழகான குட்டி தர்பார் ஆலாபனை "முந்து வெதகு" தியாகராஜர் கிருதி.
அப்புறம், ஒரு கார்வையான கல்யாணி ஆலாபனை. "உன்னையல்லால் வேறே கதி இல்லையம்மா" பாபநாசம் சிவன் கிருதி. வழக்கமாக துக்கடா போலப் பாடப் படும் இந்த அற்புதமான கிருதியை, அதன் ரான, தாள, அர்த்த பாவங்கள் நன்கு வெளிப்படும்படி சஞ்சய் பாடக் கேட்டது காது கொள்ளா ஆனந்தம்! அதிலும் "உன்னையல்லால்" வரி நிரவல், கல்பனா ஸ்வரங்களும் சஞ்சயின் இசைத் திறமையின் ஆழத்தை வெளிப்படுத்தின. முக்கிய கிருதியாக "காரு வாரு சேரு வாரு" என்ற தியாகராஜரின் கருணை ரசம் ததும்பி வழியும் முகாரி ராக கிருதி. ஆற அமர அறுசுவை உணவு பரிமாறுவது போல இந்த ராகத்தின் சகல அம்சங்களுக்கும் அழகு சேர்க்குமாறு பாடினார். தனி ஆவர்த்தனத்தில் தஞ்சை ராமதாஸ் (மிருங்கம்), டிவி வாசன் (கடம்) கூட்டணி அசத்தியது. நாகை முரளீதரன் வயலின் குழைவும், சஞ்சய் பாட்டோடு அவர் ஒத்திசைந்த விதமும் மிக நன்று.
"ஓ காலமே, உன் போல் எவர்க்குண்டு இந்திர ஜாலமே" என்று காலத்தை விளித்து ஸஹானாவில் பாடிய தத்துவார்த்தமான பாடலும் மிக நன்றாக இருந்தது.
இவ்வளவும் பாடு முடிக்கும் போது மணி எட்டேகால் தான்! ராகம் தானம் பல்லவி பாட வேண்டுமென்றே திட்டமிட்டு கன கச்சிதமாக மனிதர் கச்சேரியை நடத்திச் சென்றிருக்கிறார் என்பது புரிந்தது! அடுத்து வந்த சாருகேசி ராகமும், தானமும் அற்புதம்! ராக லட்சணங்கள் ஓரளவு தெரியுமென்றாலும், சங்கீத நுணுக்கங்கள் எதுவும் அறியாத பாமரன் நான். இருப்பினும், அந்த ராகம், தானம் ரொம்ப ஆழம். "உன் தரிசனம் கிடைக்குமோ நடராஜா, தயாநிதே - உன்.." என்று பல்லவி. கி.. டை..க்... கு.... மோ.... ந... ட... ரா.. ஜா... என்று ஸ்வரக் கோர்வைகளை ஒவ்வொரு முறையும் கோர்த்த விதம் சாருகேசியின் அழகிய கேசத்திற்கு தேவலோக மலர்களைக் கொண்டு மாலை தொடுத்த்து போன்றிருந்தது என்றாலும் மிகையாகாது. கல்பனா ஸ்வரத்திற்குப் பின் இரண்டு மூன்று ராகங்களில் சஞ்சாரம் செய்வார் என்று எதிர்பார்த்தேன்... சாருகேசி ஸ்வரத்துடனேயே பல்லவியை முடித்து விட்டார். நேரமாகிவிட்டது காரணமாக இருக்கலாம். பல்லவி முடிந்த உடனேயே கோபால கிருஷ்ண பாரதியின் "ஆடும் சிதம்பரமோ" (பிஹாக்) பாடலை அழகிய பிருக்காகளுடன் பாடினார். நடராஜர் மேல் பிரதானமாகப் பாடியது பிரதோஷம் அதுவும் திங்கட்கிழமையன்று சோமப் பிரதோஷமாகி விட்டது என்பதாலோ?

கடைசியில் பாடிய துக்கடாக்களும் நெஞ்சில் நின்றன- கண்டேனா கோவிந்தனா (புரந்தர தாசர்), ராமனை பஜித்தால் நோய்வினை தீரும், நிஜகாத ஸா (24வது அஷ்டபதி, சிந்து பைரவியில்).
மொத்ததில் தேவாம்ருதமான கச்சேரி. இதை ஏற்பாடு செய்தவர்களுக்கும், sponsor பண்ணியவர்களுக்கும் கோடி நன்றிகள்.

Friday, August 04, 2006

"விழித்தெழும் பாரதத்தை நோக்கி - சுவாமி விவேகானந்தர் கவிதை

மூலம் : சுவாமி விவேகானந்தரின் கவிதை
“To the awakened India” (பார்க்க [1])
மொழியாக்கம்: ஜடாயு

மீண்டும் எழுவாய்
இது உறக்கம் தான் மரணமல்ல
புது வாழ்வில் விழித்தெழும்
துணிவுறும் பார்வைகள் வேண்டித் துடித்தெழும் உன்
கமல மலர் விழிகளின் சிறு அயரல்
ஓ சத்தியமே, உன்னை
வேண்டி நிற்கும் உலகம்
உனக்கென்றும் அழிவில்லை

உன் வீறு நடையைத் தொடர்வாய்
வீதியோரத்தில் கீழுறங்கும் சிறு துரும்பின்
அமைதியையும் குலைக்காத உன்
அன்புப் பாதங்கள்
வலிமையும், உறுதியும் , துணிவும், விடுதலையும் சுடர்விடும் உன்
திருப்பாதங்கள்
எழுச்சியில் முன் செல்க
சிலிர்ப்பூட்டும் உன் தெய்வ வாசகங்களை மொழிந்திடுக

உன் வீடு பறிபோயிற்று
அன்பு நெஞ்சங்கள் உன்னை வளர்த்தெடுத்து
உன் உயர்வைக் கண்டு களித்த உன்னத வீடு
விதி வலியது, ஆனால்
அனைத்தும் அவற்றின் மூலத்திற்கே திரும்பியாக வேண்டும்
அந்த மூலத்தில் மீண்டும் சக்தி முளைத்தெழும்

புதிதாய்ப் பிறப்பாய்
உன் பிறப்பிடத்தின் முகில் தவழும் பனிச்சிகரங்கள்
தங்கள் ஆசியையும், ஆற்றலையும் உன் மீது பொழியட்டும்
தெய்வ நதிகளின் திருக்குரல் உன் அமர கீதங்களுடன்
சேர்ந்தொலிக்கட்டும்
தேவதாருவின் நிழல்கள் உனக்குச்
சாந்தியளிக்கட்டும்

இமயத்தின் திருமகள் உமை
அனைத்தின் உயிராம், அனைத்தின் சக்தியாம்
அப்பழுக்கற்ற அன்னை
செய்கைகள் அனைத்தையும் செய்விக்கும் உலக நாயகி
அனைத்திலும் உள் ஒளிரும் ஓர் உயிரை உணரும்
மெய்யறிவின் தாள் திறக்கும் அவள் அருளில்
அளவற்ற அன்பென்னும்
அழிவில்லா ஆற்றல்
அவள் உனக்களிப்பாள்

உன் இனத்தின் தந்தையர்
உன்னை ஆசிர்வதிக்கின்றனர்
கால தேச வரம்புகள் கடந்த மாமுனிவர்
உண்மையின் உட்பொருள் உள்ளத்தில் உணர்ந்து
இழிந்தோர்க்கும் உயர்ந்தோர்க்கும்
ஒருங்கே உரைத்தனர்
அவர் தொண்டக்குலம் நீ
அத்வைதம் எனும் அனைத்தின் ஒருமையே
அவர் அளித்த மறைபொருள்
அறிவாய் இதனை

உன் அன்பு மொழிகள்
உலகிற்கு வழிகாட்டும்
தோற்றங்கள் விலகி
கனவுகளின் இழைகள் ஒவ்வொன்றாய்ப் பிரிந்து
சூனியத்தில் இணைந்து
சத்தியம் ஒன்றே
சர்வசக்திமயமாய் ஜ்வலிப்பதை
உணர்ந்து தெளிவதற்காக

உலகிற்கு உரைப்பாய்
எழுமின் ! விழுமின் ! கனவுகள் வேண்டாம்
இது கனவுலகம்
செயல்களும், சிந்தனைகளும் இணைந்து
இனியதும், கொடியதுமாய்ப் பூத்த மலர்களால்
நூலிழையின்றித் தொடுத்த மாலை
சூனியத்தில் பிறந்த வேரும், தண்டுமற்ற மலர்கள்
சத்தியத்தின் சிறு உயிர்ப்பு மீண்டும்
ஆதி சூனியத்திலேயே அவற்றைக் கொண்டு சேர்க்கும்
உறுதி கொள்
சத்தியத்தை நேர்கொள், அதனுடன் ஒன்று கூடு
கனவுத் தோற்றங்கள் தொலையட்டும்
அது இயலாதெனின்
முடிவற்ற அன்பும்
தளையற்ற செயலும் ஆன
சத்தியமே கனவாகட்டும்

[1] மூலக் கவிதை