"விழித்தெழும் பாரதத்தை நோக்கி - சுவாமி விவேகானந்தர் கவிதை
மூலம் : சுவாமி விவேகானந்தரின் கவிதை
“To the awakened India” (பார்க்க [1])
மொழியாக்கம்: ஜடாயு
மீண்டும் எழுவாய்
இது உறக்கம் தான் மரணமல்ல
புது வாழ்வில் விழித்தெழும்
துணிவுறும் பார்வைகள் வேண்டித் துடித்தெழும் உன்
கமல மலர் விழிகளின் சிறு அயரல்
ஓ சத்தியமே, உன்னை
வேண்டி நிற்கும் உலகம்
உனக்கென்றும் அழிவில்லை
உன் வீறு நடையைத் தொடர்வாய்
வீதியோரத்தில் கீழுறங்கும் சிறு துரும்பின்
அமைதியையும் குலைக்காத உன்
அன்புப் பாதங்கள்
வலிமையும், உறுதியும் , துணிவும், விடுதலையும் சுடர்விடும் உன்
திருப்பாதங்கள்
எழுச்சியில் முன் செல்க
சிலிர்ப்பூட்டும் உன் தெய்வ வாசகங்களை மொழிந்திடுக
உன் வீடு பறிபோயிற்று
அன்பு நெஞ்சங்கள் உன்னை வளர்த்தெடுத்து
உன் உயர்வைக் கண்டு களித்த உன்னத வீடு
விதி வலியது, ஆனால்
அனைத்தும் அவற்றின் மூலத்திற்கே திரும்பியாக வேண்டும்
அந்த மூலத்தில் மீண்டும் சக்தி முளைத்தெழும்
புதிதாய்ப் பிறப்பாய்
உன் பிறப்பிடத்தின் முகில் தவழும் பனிச்சிகரங்கள்
தங்கள் ஆசியையும், ஆற்றலையும் உன் மீது பொழியட்டும்
தெய்வ நதிகளின் திருக்குரல் உன் அமர கீதங்களுடன்
சேர்ந்தொலிக்கட்டும்
தேவதாருவின் நிழல்கள் உனக்குச்
சாந்தியளிக்கட்டும்
இமயத்தின் திருமகள் உமை
அனைத்தின் உயிராம், அனைத்தின் சக்தியாம்
அப்பழுக்கற்ற அன்னை
செய்கைகள் அனைத்தையும் செய்விக்கும் உலக நாயகி
அனைத்திலும் உள் ஒளிரும் ஓர் உயிரை உணரும்
மெய்யறிவின் தாள் திறக்கும் அவள் அருளில்
அளவற்ற அன்பென்னும்
அழிவில்லா ஆற்றல்
அவள் உனக்களிப்பாள்
உன் இனத்தின் தந்தையர்
உன்னை ஆசிர்வதிக்கின்றனர்
கால தேச வரம்புகள் கடந்த மாமுனிவர்
உண்மையின் உட்பொருள் உள்ளத்தில் உணர்ந்து
இழிந்தோர்க்கும் உயர்ந்தோர்க்கும்
ஒருங்கே உரைத்தனர்
அவர் தொண்டக்குலம் நீ
அத்வைதம் எனும் அனைத்தின் ஒருமையே
அவர் அளித்த மறைபொருள்
அறிவாய் இதனை
உன் அன்பு மொழிகள்
உலகிற்கு வழிகாட்டும்
தோற்றங்கள் விலகி
கனவுகளின் இழைகள் ஒவ்வொன்றாய்ப் பிரிந்து
சூனியத்தில் இணைந்து
சத்தியம் ஒன்றே
சர்வசக்திமயமாய் ஜ்வலிப்பதை
உணர்ந்து தெளிவதற்காக
உலகிற்கு உரைப்பாய்
எழுமின் ! விழுமின் ! கனவுகள் வேண்டாம்
இது கனவுலகம்
செயல்களும், சிந்தனைகளும் இணைந்து
இனியதும், கொடியதுமாய்ப் பூத்த மலர்களால்
நூலிழையின்றித் தொடுத்த மாலை
சூனியத்தில் பிறந்த வேரும், தண்டுமற்ற மலர்கள்
சத்தியத்தின் சிறு உயிர்ப்பு மீண்டும்
ஆதி சூனியத்திலேயே அவற்றைக் கொண்டு சேர்க்கும்
உறுதி கொள்
சத்தியத்தை நேர்கொள், அதனுடன் ஒன்று கூடு
கனவுத் தோற்றங்கள் தொலையட்டும்
அது இயலாதெனின்
முடிவற்ற அன்பும்
தளையற்ற செயலும் ஆன
சத்தியமே கனவாகட்டும்
[1] மூலக் கவிதை
2 comments:
வாழ்த்துக்கள் ஜடாயு!!
வாழ்க வளமுடன்! வாழ்க வலைப் பதிவுடன்!!
ஜடாயு,
தங்களின் பதிவுகள் மகத்தானவை. உண்மையை வெளிக்கொனரும் தங்களின் கட்டுரைகளை திண்ணையிலும் கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.
Post a Comment