Wednesday, August 09, 2006

ஆன்மீகப் பார்வையிலும் அடிபடும் ஜோதிடம் - பாகம் 1

இந்தக் கட்டுரையை வெளியிட்ட தமிழோவியம் இதழுக்கு நன்றி.
-----------------------------------------------------------------------------------

அறிவியல் பார்வையில் மட்டுமல்ல, ஆன்மீகப் பார்வையிலும் அடிபடும் ஜோதிடம் : பாகம் 1

மிகுந்த சமய, ஆன்மீகப் பற்றுள்ள, ஆனால் ஜோதிடத்தை சிறிதும் நம்பாத (சொல்லப் போனால் ஜோதிடத்தை எதிர்க்கும்) ஆள் நான் என்றால் யாரும் நம்பவும் ஏற்றுக் கொள்ளவும் மறுக்கிறார்கள். “என்ன சார், இவ்வளவு அழகா விபூதி குங்குமம் வெச்சுருக்கீங்க, ஜோதிடம் எல்லாம் பொய்யினு இப்படி நாத்திகர் மாதிரி பேசறீங்களே!” என்பது ஒரு வகை. “நீ ஜோசியத்தை நம்பாமல் கேலி பேசுவதால் உன் ஆன்மீக சாதனைகள் எல்லாமே வீணாய்ப் போகும்” போன்ற சில ‘பெரியவர்களின்’ சாபங்கள் இன்னொரு வகை. தளையற்ற சிந்தனைகளிலும் உணர்வுகளிலும் முகிழ்த்த நம் சமய, ஆன்மீக மரபுகளைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்பவர்கள் இப்படி முரண் போலத் தோன்றுகின்ற சில சின்ன விஷயங்களைக் கூட ஜீரணிக்கத் தயங்குவது ஆச்சரியமான முரண்பாடு தான்.

முதலில் வரலாற்றுப் பார்வையில் ஜோதிடம் பற்றிச் சில விஷயங்கள்.

“ஜ்யோதிஷம்” என்கிற மூலச் சொல்லுக்குப் பொருள் “ஒளி பற்றிய அறிவு” என்பது. ஒளிரும் பொருள்களான சூரியன், சந்திரன் மற்றும் கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சியையும், அறிவையும் குறிப்பதற்காக வேத இலக்கியத்தில் இந்தச் சொல் பயன்பட்டது, ஒரு வகையில் பண்டைய வான சாஸ்திரம் எனலாம். இது பற்றியே வேத வித்யையின் ஆறு அங்கங்களில் ஒன்றாக ஜோதிடம் அறியப் பட்டது. வேத காலத்திலிருந்து இந்த அறிவு விரிவாக்கம் பெற்று வளர்ச்சியடைந்த கால கட்டங்களில் முக்கியமான ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூன்று விஷயங்கள் பற்றிய சிந்தனை வளர்ச்சியை இந்தத் துறை உள்ளடக்கியது –
1. வானியல் : வெளியில் தோன்றும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை இனம் கண்டு வகைப் படுத்துவது. அவற்றின் இயக்கம் மற்றும் சுழற்சி பற்றி அறிவது, தட்பவெப்ப நிலை மாற்றங்களில் வான் பொருட்களின் (celestial objects) தாக்கம், கிரகணங்கள், வால் நட்சத்திரங்கள் போன்றவற்றைப் புரிந்து கொள்ளுதல் முதலியவை.
2. கணிதம் : வான் பொருட்களின் இடம் மற்றும் இயக்கம் பற்றிய அறிவை முன்னெடுத்துச் செல்ல அடிப்படை ஜியோமிதி மற்றும் முக்கோணவியல் (Trignometry) அத்தியாவசியமாயிற்று. ‘கணிதம்’ என்பதும் ஆறு வேத அங்கங்களில் ஒன்றாக அறியப்பட்டுத் தனித் துறையாக வளர்ந்து வந்தது. எனவே, ஜோதிடத்திலும் கணித அறிவின் பல கூறுகள் பயன்படுத்தப் பட்டன.
3. கால அளவு முறைகள்: எல்லா பண்டைய நாகரீகங்களின் வளர்ச்சியிலும் காலக் கணக்கு முறைகள் இயற்கை நிகழ்வுகளின் அடிப்படையிலேயே உண்டாயின. பன்னிரண்டு ராசிகள், சந்திரனின் வளர்பிறை, தேய்பிறை சுழற்சியைக் கொண்டு நாட்களை அளவிடுதல் போன்றவை. பிறப்பு, இறப்பு நாட்கள், பருவங்கள், பண்டிகைகள் இவை அனைத்தும் இந்தக் கால அளவு முறையிலேயே குறித்து வைக்கப் பட்டன. ஆவணி மாதம் வளர்பிறையில் அஷ்டமியும் ரோகிணியும் கூடியிருந்த நாளில் கண்ணன் பிறந்தான் என்பது போல. பஞ்சாங்கம் என்பது அடிப்படையில் ஒரு காலக் கணக்குக் காட்டி என்பதாகவே உருவாயிற்று.

மேற்சொன்ன வானியல் அறிவும், கணித அறிவும், பல நூற்றாண்டுகளாகத் திரட்டப் பட்ட பிரபஞ்ச நிகழ்வுகள் (cosmic events) பற்றிய பதிவுகளும் (recordings) ஒன்றிணைந்து இத் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தின. எந்தத் தொலைநோக்குக் கருவியின் உதவியுமின்றி கிரகணங்களைத் துல்லியமாகக் கணிப்பது போன்ற அரிய நுட்பங்கள் இதனால் உருவாயின. ஜ்யோதிஷம் என்று முதலில் அறியப் பட்ட அறிவுத் துறை இது வரை தான்.

இதே கால கட்டத்தில் தான் கர்மம், ஊழ், வினைப்பயன், மறுபிறவி, பிரபஞ்சவியல் போன்ற கருத்துகளும் வளர்ந்தன. ஒவ்வொரு உயிரின் செயல்பாடுகளும் அதன் கர்ம வினைப் படியே நடந்தேறும், ஒரு ஜீவனின் சுழற்சியை முற்றுமாகத் தீர்மானிப்பது அதன் கர்மமே என்ற அடிப்படை சமய உண்மையும் வலுப்பெற்றது. “அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது”, பிரபஞ்சம் முழுவதும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட பொருட்களால் ஆனது போல் தோன்றினாலும், அடிப்படையில் ஒன்றுக்கொன்று தொடர்புடைய, சொல்லப் போனால் ஒன்றேயான பொருளால் ஆனது என்னும் வேதாந்த சிந்தனையும் இதனூடாக முளைத்தது.

பல்வேறு பட்ட இந்த சமய, அறிவியல் தத்துவங்களின் தாக்கங்களினால் “வான வெளியில் சுழலும் கிரகங்களின் இயக்கம் மனித வாழ்க்கையிலும் புகுந்து, ஓரளவு கர்ம வினைகள் மற்றும் அதன் பயன்களையும் தீர்மானிக்கிறது” என்பதாக ஒரு கருத்து உருவாகியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. இதுவே இன்று நாம் ஜோதிடம் என்று அழைக்கும் விஷயமாக வளர்ந்திருக்கிறது. நாளடைவில் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இதில் “ஓரளவு” என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக “எல்லாவற்றையுமே” கிரக சஞ்சாரங்கள் தான் தீர்மானிக்கின்றன என்பதாக வளர்த்தெடுத்திருக்கலாம். ஏற்கனவே புழக்கத்திலிருந்த சகுனம் பார்த்தல், பறவைகள் மற்றும் விலங்குகளின் சேஷ்டைகள் இயற்கை நிகழ்வுகளை முன்னறிவிக்கும் போன்ற நம்பிக்கைகள் எல்லாம் கலந்து, இன்று அஸ்ட்ராலஜி மட்டுமல்லாமல் நியூமெராலஜி, ஜெம்மாலஜி, ‘சும்மா’லஜி என்று அப்பாவி மக்களையும், பல படித்த முட்டாள்களையும் பைத்தியம் பிடிக்க வைத்துக் கொண்டிருக்கும் நிலைமைக்கு வந்திருக்கலாம்.

சுவாமி விவேகானந்தர் “மனிதனின் விதிக்கு அவனே பொறுப்பாளி” என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவில் ஜோதிடம் பற்றிய தமது கருத்துக்களைத் தெளிவாகக் கூறியிருக்கிறார். “ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற அரசவம்சங்களில் தோன்றியவர்களின் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகங்கள் கணிக்கப்பட்டு எதிர்காலம் பற்றிய யூகங்கள் கூறப்பட்டன, இந்த ஊகங்கள் பிறகு நடந்த உண்மை சம்பவங்களுடன் ஒப்பு நோக்கப்பட்டன. இப்படியே ஒரு ஆயிரம் வருடங்கள் ஜோதிடர்களின் வம்சாவளிகள் இதை செய்து வந்தன. இந்தப் போக்கில் பல யூகங்கள் “பொது விதிகளாக” அறியப்பட்டு ஜோதிடப் புத்தகங்கள் உருவாகியிருக்கலாம்” என்று சுவாமிஜி கூறுகிறார். “பண்டைய இந்துக்களிடமிருந்து வான சாஸ்திரத்தைக் கற்றுக்கொண்ட கிரேக்கர்கள், தங்கள் கலாசாரத்தில் பிரபலமாக இருந்த ஜோதிடக் கலையை இந்துக்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கலாம்” என்றும் சுவாமிஜி கூறுகிறார். இதன்படி பார்த்தால் இன்றைய ஜோதிடக் கலையின் மூலம் வேத கலாசாரமே இல்லை என்றாகிறது! “ஜோதிடத்தின் சிறு சிறு நுட்பங்களிலும் அளவுக்கு அதிகமான கவனம் செலுத்தத் தூண்டிய மூடநம்பிக்கைகள் காலப் போக்கில் இந்துக்களுக்குப் பெரும் தீங்கையே விளைவித்திருக்கின்றன” என்றும் அவர் மதிப்பிடுகிறார்.

அவர் மேலும் கூறுகிறார் - “வேதாந்த தத்துவத்தின் படி ஒரு பொருளின் சகல பரிணாமங்களும் அதன் இயற்கையிலேயே இருக்கின்றனவே அன்றி அதற்கு வெளியில் இல்லை (மரம் முழுவதும் விதைக்குள் அடங்கியிருப்பது போல).. என்னுடைய இப்போதைய நிலை முழுவதையும் விளக்குவதற்கு என் கர்ம வினையே போதுமானது, கிரகங்களும் நட்சத்திரங்களும் தேவையில்லை!.. (போதிசத்வரான) புத்தர் மறுபடியும் மறுபடியும் பற்பல மிருகங்களாகவும் பறவைகளாகவும் பிறந்து, ஒவ்வொரு முறையும் இறுதியில் புத்த நிலையை அடைகிறார். இதில் நட்சத்திரங்களுக்கு என்ன வேலை? அவற்றின் தாக்கம் மிகச் சிறிதளவு இருக்கலாம், ஆனால் நம் கடமை அவற்றை ஒதுக்கித் தள்ளுவது தானே தவிர, அவற்றை எண்ணி மறுகிக் கவலையுறுவதல்ல.. என் போதனையின் முதல் உபதேசம் இது தான் – உடலையோ, மனத்தையோ, ஆன்மாவையோ பலவீனப் படுத்துவது எதுவாயினும், அதைக் கால் தூசுக்கு சமானமாகக் கூடக் கருதாதீர்கள்! மனிதனில் இயல்பாக உறையும் ஆன்ம சக்தியை வெளிக்கொணர்வதே உண்மையான சமய தத்துவம்”

ஒரு பழைய கதை. ஒரு ஜோதிடர் அரசரிடம் வந்து “இன்னும் ஆறு மாத்தில் உங்களுக்கு மரணம் சம்பவிக்கும், என் கணக்கு என்றும் பொய்யாகாது” என்று சொன்னார். இந்த மரண பயத்திலேயே அரசருக்குப் பாதி உயிர் போய்விடும்போலிருந்தது. இது பொறுக்க முடியாத அறிவாளி அமைச்சர் ஜோதிடரைக் கூப்பிட்டு “தங்கள் கணக்குப் படி, தங்களின் ஆயுட்காலம் எவ்வளவோ?” என்று கேட்டார். “பன்னிரண்டு வருஷத்திற்கு எனக்கு ஒரு கண்டமும் கிடையாது. இது நிச்சயம்” என்று சத்தியம் செய்தார் ஜோதிடர். அடுத்த கணம் அமைச்சர் வாளை உருவினார். ஜோதிடரின் தலை தரையில் கிடந்தது. “இந்தப் பொய்யன் சொன்னதை இன்னும் நம்புகிறீர்களா?” என்று அரசரைத் தெளிவித்தார் அமைச்சர்.

இந்தக் கதையைக் கூறிய சுவாமிஜி, மேலும் சொல்லுக்கிறார் – “(கடந்த காலம் பற்றிய) பல ஆச்சரியகரமான விஷயங்கள் ஜோதிடர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால், அவை அனைத்தையும் கிரக நட்சத்திரக் கணக்குகளைக் கொண்டு அவர்கள் சொல்லுகிறார்கள் என்று நம்புவதற்குக் காரண அறிவு இடம் கொடுக்கவில்லை. பெரும்பாலும் மனதைப் படித்து (mind reading) சொல்லப்படுபவையே இவையெல்லாம்… உண்மையான சமய தத்துவம் உங்களை உறுதியாக்கி குருட்டு நம்பிக்கைகளினின்று விடுவிக்கும்… மிக மிக உயர்வானவை அனைத்தும் (ஆன்மாகிய) உன் காலடியில் கிடக்கின்றன. நீ நினைத்தால் நட்சத்திரங்களையும் கையில் அள்ளி விழுங்கி விடலாம். ஆன்மாவாகிய உன் உண்மை இயல்பு இந்தப் பெரும் சக்தியே..”
சென்ற நூற்றாண்டின் ஈடு இணையற்ற ஆன்மீக குருவாகவும், சிந்தனையாளராகவும் திகழ்ந்த சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் இவை. சீர்திருத்தவாதியான சுவாமிஜியின் கருத்துக்கள் இப்படிப் புரட்சிகரமாக இருப்பதில் வியப்பில்லை. ஆனால் காலம் காலமாக வந்த சமய, ஆன்மீக மரபுகள் என்ன சொல்லுகின்றன? அதை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

8 comments:

Muse (# 5279076) said...

ஹிந்து மதங்களின் கருத்துப்படி 100 % உங்கள் உழைப்புத்தான் உங்கள் வாழ்வின் நல்ல கெட்ட பலன்களுக்குக் காரணம். உதாரணத்திற்கு தாங்கள் குறிப்பிடும் "அதிர்ஷ்டம்" என்கிற வார்த்தையையே எடுத்துக்கொள்வோமே. அதன் பொருள் என்ன?

"த்ருஷ்டம்" என்றால் பார்க்கக் கூடியது (காரணம் தெரியும்)

"அத்ருஷ்டம்" என்றால் பார்க்க முடியாதது (காரணம் தெரியாது)

அதாவது, தாங்கள் தங்களுடைய தொழிலில் உழைக்கிறீர்கள். அந்த உழைப்பின் விளைவை லாபம் என்கிற பலனாக பார்க்கிறீர்கள். அதாவது தங்களுக்கு இந்த பலனுக்கான காரணம் தெரியும். இது த்ருஷ்டம்.

தங்களது மனைவி தங்களுக்காக ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கி வருகிறார். அதில் சுமார் 1,00000000000000000000000 ரூபாய் கிடைக்கிறது :-) !. இதற்கு உங்களுக்கு காரணம் தெரியாது. இது " த்ருஷ்டம்".

அதாவது இந்த பலனுக்கான காரணம் உங்களுக்குத் தெரியவில்லை. அவ்வளவுதான். மற்றபடி காரணமேயில்லாமல் பலன் கிடைத்துவிடவில்லை. அப்படியானல் காரணம் என்னவாகவிருக்கும்? உங்களது போன ஜன்ம உழைப்பு, அல்லது உங்களது மூதாதையர் தங்களது சந்ததியினருக்காகச் செய்த உழைப்பு என்கிற வகையில் கர்ம பலன் அமையும் என்று ஹிந்து மதங்கள் கூறுகின்றன. அதாவது உழைப்பிற்குத்தான் பலன். செயலுக்குத்தான் விளைவு.

எனவே குருட்டு அதிர்ஷ்டம் என்று அழைக்கப்படுகின்ற ஒரு விஷயம் இல்லவே இல்லை. எப்போதோ செய்த செயலின் விளைவை தாங்கள் இப்போது பெறுகிறீர்கள்.

ஹிந்து மதங்களின் கர்ம தத்துவம் மிக மிக நுணுக்கமானது. ஒரு முழுப்பதிவு தேவைப்படுகிற விஷயம்.

எனவே அத்ருஷ்டம் என்பது தகுதியில்லாதவருக்கு கிடைக்கின்ற ஒன்றில்லை. அவரது உழைப்பாலோ, அல்லது அவருடைய நலம் விரும்பிகளின் உழைப்பாலோ மட்டுமே அத்ருஷ்டம் கிட்டும்.

பின் குறிப்பு: லாட்டரியில் இவ்வளவு பணம் கிடைத்திருக்கிறது. எனக்கு கொஞ்சம் கடன் கிடைக்குமா?

ஜடாயு said...

ம்யூஸ், அத்ருஷ்டம் பற்றி நல்ல விளக்கம், அப்படியே ஆனாலும், அது மனிதனுடைய கர்மத்தினால் தான் கிடைக்கிறதே அன்றி, வெளியில் உள்ள கிரக, நட்சத்திர சமாசாரம் இல்லை அல்லவா? விவேகானந்தர் கருத்தோடும் இது ஒத்துப் போகத்தான் செய்கிறது. கர்மம் என்றூ அவர் சொல்வது, பல முந்தைய ஜன்மங்கள் மற்றும் இந்த ஜன்மம் எல்லாவற்றின் செயல்களும் என்றே நான் எடுத்துக் கொள்கிறேன்.

Muse (# 5279076) said...

ஜடாயுஜி,

சரியே. உழைப்பின் விளைவே பலன். கிரகங்களின் கருணையாலோ, அவை போடும் பிச்சையாலோ இல்லை.

உண்மையில் கர்மங்கள் மூன்று வகை: ஸஞ்சித, ப்ராரப்த, ஆகாம்ய.

ஸஞ்சிதம் என்பதின் ஒரு பகுதி போன ஜன்ம கர்ம பலங்கள். அந்த கர்மங்களின் தூண்டுதல்கள் நம்மை பாதிக்கிறது. இந்த பகுதியை அறிந்துகொள்ளும் முயற்சிதான் ஜோஸியம். இதனுடைய மற்ற பகுதிகளாக இருப்பவை நமது மூதாதையர் செய்த கர்ம பலன்கள் (உம்: டயபடீஸ், கொழுப்பு போன்ற ஜெனெடிக் இன் ஹெரிடன்ஸ், மற்றும் ஜிஹாத், உயர்ந்தவன், தாழ்ந்தவன், பொறாமை, நற்குணங்கள் போன்ற மனோ ரீதியான கருத்துருவாக்கங்கள்).

ப்ராரப்த: இப்போது நான் செய்துவரும் செயல்களின் விளைவுகள். உதாரணமாக அறிவுசீவி பட்டத்திற்காக நான் உண்மை என்ன என்று புரிந்துகொள்ள முயற்சி செய்யாமல், ஏதேனும் யூரோப்பிய பாதிரியாரின் கற்பனையை ஒப்பிப்பது. இதன் விளைவு எனது ஐ க்யூவானது குறையும். உளறல் அதிகரிக்கும்.

ஆகாம்ய: மேலேயுள்ள இரண்டின் ஒட்டுமொத்த விளைவுகளின் தூண்டல். இதன்விளைவாய் நான் ஈவேரா போல உண்டா, பார்ப்பனர்கள் கெட்டவர்கள், ஹிந்துத்துவா என்றாலே ஜாதிகள்தான், அது அழிய வேண்டும் என்றெல்லாம் கூறிக்கொண்டு எனது ஜாதிக்காக ரிஸர்வேஷன் கேட்பேன், என்னுடைய ஜாதியை தவிர மற்ற ஜாதியினர் கெட்டவர்கள் என்று நினைத்துக்கொள்வேன். என்னைவிட உயர்ந்த ஜாதியினரை ஜாதிவெறி பிடித்தவர்கள் என்று கூறியவாரே என்னைவிட தாழ்ந்த ஜாதியாக இருப்பவர்கள் முன்னேறவிடாமல் செய்வேன். ஏனெனில் நான் ஸஞ்சித கர்மத்தின் காரணமாய் ஜாதிவெறியும், ப்ராரப்த்த கர்மத்தின் காரணமாய் இந்த ஜாதிவெறிக்கு பகுத்தறிவு, ஸெக்யூலரிஸம் என்கிற சப்பைக்கட்டுக்களும், ஆகாம்ய கர்மத்தின் காரணமாய் நான் என்னதான் வஸதியுள்ளவன் ஆனாலும் என் பிள்ளைகள் அதிகம் படிக்காமல் அரஸாங்க செலவில் படித்து ஸுகபோகம் அனுபவிக்கவேண்டும் என்று கர்மம் புரிவேன்.

gayathri said...

மிகவும் நன்று. என்னை போன்ற இளைஞர்களுக்கு கர்மா தியரி பற்றிய, சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது

Astro Learner LKG said...

தாங்கள் nimiththigan.blogspot.in என்ற வலைப்பூவை பார்வையிட பரிந்துரைக்கிறேன்

Astro Learner LKG said...

சோதிடம்
தாங்கள் nimiththigan.blogspot.in என்ற வலைப்பூவை பார்வையிட பரிந்துரைக்கிறேன்

Astro Learner LKG said...

தாங்கள் nimiththigan.blogspot.in என்ற வலைப்பூவை பார்வையிட பரிந்துரைக்கிறேன்

Karthikrajan said...

நன்றாக குழம்பி இருக்கிறார் ஜடாயு.
அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தம் இருக்கலாம்.
இவை இரண்டிற்கும் ஜோதிடத்திற்கும் சம்பந்தம் இல்லை.
கணிதத்தில் ஜோதிடத்திற்கு இனையாக ஒரு படிப்பு உண்டு , அதற்கு பெயர் Probability statistics.
கணிதத்தை அறிவியலாக பார்ப்பது தவறு, அதை ஒரு கருவி (tool ) என்றுதான் விவரம் அறிந்த விஞானிகள் கூறுவார்கள். அதாவது, அறிவியலுக்கு ஒரு வடிவம் கொடுக்கும் கருவி தான் கணிதம். அந்த கருவிய உபயோகிக்க தெரிந்த நபர்கள்தான் நல்ல விஞானிகலாக முடியும்.

நம் வாழ்க்கையில் என்ன நடக்கலாம் என்று கணிப்பது ஜோதிடம். இது ஒரு கணிப்பு என்பதால் இந்த கணிப்பும் தவறாக போகலாம் என்ற எண்ணம் பலருக்கு வராததால் , பல நல்லவர்களும் இதை நம்பி சீரழிவதை நாம் பார்க்கிறோம். அதுனாலேயே இதற்கு கெட்ட பெயரும் வந்துவிட்டது.

ஆக, ஜோதிடம் நம்பிக்கை சம்பந்த பட்டது, ஒரே இடத்தில் நிற்கும்.
அருவியலும் , ஆன்மீகமும் தேடல்கள் -- முயற்சி சம்பந்த பட்டது. வளர்ந்து கொண்டே இருக்கும். இவை ஜோதிடத்தை கண்டு கொள்வதே இல்லை.