“அனைத்துயிரும் ஆகி.." - யோகாசனங்களின் உணர்வு நிலைகள்
யோகாசனங்கள் எப்படி உருவாயின என்பது பற்றிய கேள்வி ஆசனங்களைப் பயிற்சி செய்யும் பலருக்கும் தோன்றியிருக்கும். “இலக்கியத்திற்குப் பின் இலக்கணம்” எனப்து போல, யோகத்தின் முதல் நூல் என்று கருதப் படும் பதஞ்சலி யோக சூத்திரங்கள் வரையறுக்கப் படுவதற்கு முன்பே யோகம் பற்றிய பல நுட்பங்கள் அறியப் பட்டிருந்திருக்க வேண்டும் என்றே யோக அறிஞர்கள் பலரும் கருதுகிறார்கள். இந்த நூலில் ஆசனம் பற்றி ஒரே ஒரு சூத்திரம் தான் உள்ளது: “உறுதியானதும், சுகமாயிருப்பதும் ஆன நிலை ஆசனம்”. ஏதாவது ஒரு ஆசனம் செய்யும்போது யாருக்காவது உடல் வலியால் முகம் சுளிப்பது போல் ஆனால் “ஸ்திரம் சுகம் ஆசனம்” என்று எங்கள் யோக ஆசிரியர் இந்த சூத்திரத்தைச் சொல்லி நினைவூட்டிக் கொண்டே இருப்பார்!
பதஞ்சலிக்குப் பின்னர் வந்த “ஹடயோக ப்ரதீபிகா” போன்ற நூல்களில் இன்று மிகப் பிரபலமாகி நாம் பயின்று வரும் பல ஆசனங்களின் பெயர்களும், அந்த ஆசனத்தில் உடலின் தோற்றம் (posture) எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றிய சித்திரங்களும் கிடைக்கின்றன. படங்கள் போன்ற குறியீடுகளைப் பயன்படுத்தாமல் சொற்கள் மூலமே விளக்கினாலும் ஆசனங்களுக்கான தெளிவான கையேடாக இந்த நூல் விளங்கி வந்திருக்கிறது. இது தவிர, வழிவழியாக வந்துள்ள தொடர்ச்சியான குரு சிஷ்ய மரபுகளும் இந்த ஆசனங்களில் உள்ள கலை நுணுக்கத்தை சரியான முறையில் இன்று வரை எடுத்து வந்துள்ளன.
ஆசனங்கள் வெளி உறுப்புக்களையும், தசைகளையும் மட்டுமல்ல, உடலின் பல உள் உறுப்புக்களையும், நாடி நரம்புகளையும் உறுதியாக்குகின்றன.
பல யோகாசனங்கள் பார்ப்பதற்குக் கடினமாகத் தோன்றினாலும், பயிற்சி செய்பவர்களுக்கு இவை மிக இயல்பானதாகவே தெரியும். பயிற்சி இதற்குக் காரணம் என்றாலும், யோக ஆசனங்களின் தன்மையே அப்படிப் பட்டதாயிருக்கிறது. 2-3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வளரும் பருவத்தில் தாங்களாகவே பல ஆசனங்கள் போடுவதைப் பார்க்கலாம். உட்காருவதற்கு வந்து நிற்கத் தொடங்கும் சமயம் பல குழந்தைகளுக்கு வஜ்ராசனம் தானாக வரும். தவழ்வதற்காக அமரும் தோற்றமே ஒரு ஆசனம் தான்! ஆசனங்களின் இந்த இயற்கைத் தன்மை அவற்றுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது.
மனித உடலின் இயக்கம் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவு பெற்றிருந்தனர் பண்டைக் கால யோகிகள். காட்டில் விலங்குகள், பறவைகள் இவற்றின் வாழ்வைக் கூர்ந்து கவனித்த அவர்கள் அவை எப்போது அமைதியடைகின்றன, ஆக்ரோஷம் கொள்கின்றன இவற்றையெல்லாம் ஆராய்ந்து பல ஆசனங்களை உருவாக்கியிருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது.
புகழ்பெற்ற யோக குரு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களிடம் இந்தக் கேள்வி கேட்கப் பட்ட போது அவர் கூறினார் “யோகத்தின் ஒரு உயர்ந்த நிலையில் செல்லும்போது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் ஆன்மாவை யோகிகள் உணர்ந்தார்கள். அந்த உணர்ச்சியின் வெளிப்பாடாக அவர்கள் உடல் தானாகவே பல விதமான தோற்றங்கள் கொண்டது. இப்படித் தான் ஆசனங்கள் தோன்றின. பின்னர் அவை ஆய்வுக்கு உட்பட்டு நெறிப்படுத்தப் பட்டன. பிராணாயாம முறைகள் தோன்றியதும் இப்படித் தான்.” ஸ்ரீஸ்ரீ அவர்களது உருவாக்கம் என்று கருதப் படும் புகழ்பெற்ற “சுதர்ஷன் க்ரியா” என்ற பிராணாயாம முறையும் பரிசோதனைகளாலோ, புறவயப் பட்ட முயற்சிகளாலோ தோன்றவில்லை. மாறாக, ஆழ்ந்த தியானத்தின் போது தானாகவே அது சித்தித்ததாக அவர் பலமுறை கூறியுள்ளார். உலகெங்கும் உள்ள யோக ஆசிரியர்கள் அடிப்படை யோகப் பயிற்சிகளில் புதிய புதிய பரிமாணங்களை இன்றும் ஆக்கம் செய்து வருகிறார்கள். இவற்றில் எத்தனை முயற்சிகள் அகவயப் பட்டவை என்பது கேள்விக்குரியது. இருந்தாலும் யோகம் என்பது “கணந்தோறும் புதிதாகத் தோன்றும்” ஒரு வாழும் கலை என்பதில் ஐயமில்லை.
யோகாசனங்கள் உருவாக்கும் உடல் தோற்றத்தோடு, அவை தரும் உணர்வு நிலையையும் கருத்தில் கொண்டு பின்னர் பெயர்கள் இடப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி
பல் மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி
வல் அசுரராகி முனிவராய்த் தேவராய்
கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்!”
என்று திருவாசகம் கூறும் அதீத அனுபவம் பரிணாம அறிவியல் கூறும் வளர்ச்சிப் படிநிலைகளை மட்டுமல்ல, அனைத்து உயிர்களாகவும் ஆகும் ஆன்மாவின் தன்மையையும் குறிக்கிறது. எண்ணிப் பார்த்தால், இந்தப் பேரனுபவத்தின் வெளிப் பாட்டை மனித உடலின் மொழியில் பாடும் அழகிய கவிதைகள் யோகாசனங்கள்!
அசையாப் பொருள்கள் மற்றும் விலங்குகள், பறவைகள் இவற்றின் தோற்றத்தில் பல ஆசனங்கள் உள்ளன.
பர்வதாசனம் (மலை), நாவாசனம் (படகு), விருட்சாசனம் (மரம்)
புஜங்காசனம் (பாம்பு), சலபாசனம் (வெட்டுக் கிளி), மத்ஸ்யாசனம் (மீன்)
ஊர்த்துவ முக / அதோமுக ஸ்வானாசனம் (மேல் / கீழ் நோக்கும் நாய்), சிம்ஹாசனம் (சிங்கம்)
மயூராசனம் (மயில்), குக்குடாசனம் (சேவல்), கபோடாசனம் (புறா)
கருவில் இருக்கும் சிசுவாக கர்ப்ப பிண்டாசனம்.
எல்லா செய்கையும் அடங்கிய பிணமாக சவாசனம்.
முனிவர்களின் பெயரால் பரத்வாஜாசனம், மத்ஸ்யேந்திராசனம்.
தெய்வ சக்திகளாக வீரபத்ராசனம், நடராஜாசனம்.
இதயக் கமலத்தில் உறையும் ஆன்ம சக்தியின் உருவகமாகவும், ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை என்று ராஜயோகம் கூறும் சக்தி பீடமான சக்கரத்தின் உருவகமாகவும் விளங்கும் அற்புதமான பத்மாசனம்.
இப்படி ஆசனங்களிலேயே அனைத்துயிர்களின் உணர்வு நிலைகளும் தோன்றும் படி யோகிகள் இவற்றை வடிவமைத்து பெயரும் இட்டார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது!
ஆமே அனைத்துயிர் ஆகிய அம்மையும்
தாமே சகலமும் ஈன்றஅத் தையலும்
ஆமே அவளடி போற்றி வணங்கிடில்
போமே வினைகளும் புண்ணிய னாகுமே
- திருமந்திரம் 4.13.23
அடுத்த முறை விருட்சாசனம் செய்யும்போது, சில கணங்கள் கண்களை மூடிக் கொண்டு நீங்கள் மரமாகவே ஆகிவிட்டதாக உணருங்கள். அற்புதமான உணர்வு அது!