கண்ணன் எந்தக் குலம்?
கண்ணனது திருக்கதை அமுதத்தைப் பருகியவர்கள் இது பற்றிப் பல விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கலாம். சந்திர வம்சத்து மன்னர்களின் மரபில் வந்த யது என்ற மன்னனின் குலத்திலே தோன்றிய யாதவன். கோகுல பாலன், ஆயர் தம் குலக் கொழுந்து. அவன் தேவர் குலத்தவன், மனிதனாக அவதாரம் செய்தான், இப்படியெல்லாம்.
“கண்ணன் என் தந்தை” என்ற பாடலில் பாரதி சொல்லுகிறார் :
மூவகைப் பெயர் புனைந்தே அவன்
முகமறியாதவர் சண்டைகள் செய்வார்
தேவர் குலத்தவன் என்றே அவன்
செய்தி தெரியாதவர் சிலர் சொல்வார்.
அப்படியானால், எது அவன் குலம்?
பிறந்தது மறக் குலத்தில் - அவன்
பேதமற வளர்ந்ததும் இடைக் குலத்தில்
சிறந்தது பார்ப்பனருள்ளே – சில
செட்டிமக்களோடு மிகப் பழக்கமுண்டு
நிறந்தனில் கருமை கொண்டான் – அவன்
நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்
துறந்த நடைகளுடையான் – உங்கள்
சூனியப் பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்!
கண்ணனைப் பற்றிய எவ்வளவு ஆழமான, தீர்க்கமான தரிசனம் பாருங்கள்! ராமாவதாரத்தில் மட்டுமல்ல, அமானுஷ்யமான தனது கிருஷ்ணாவதாரத்திலும் “மானுடம் வென்றதன்றே” என்றே முரசறைகிறான் கண்ணன். தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் எல்லாக் குலங்களையும் விளங்க வைக்கிறான். எல்லாக் குலங்களையும் தன் குலமாக்கிக் கொள்கிறான். எல்லாக் குலங்களையும் உய்விக்கிறான். எல்லாக் குலங்களையும் இணைக்கிறான்.
அதனால் தான், பட்டர் பிரான் திருமகளாக வளர்ந்த கோதை சொல்கிறாள்:
“பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது”
என்று! அந்தணர் விஷ்ணு சித்தரின் வீட்டில் வளர்ந்த பெண் “அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்தில்” வந்தவளாகத் தன்னைக் கருதுவதிலேயே பெருமை அடைகிறாள். வடமதுரை அரச குலத்தில் கண்ணன் பிறந்த கதை அவளுக்குத் தெரியாததல்ல, இருந்தாலும் “ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கே” என்று கண்ணன் தங்கள் குலத்தில் தான் பிறந்தான் என்று சொல்லிச் சொல்லிப் பூரித்துப் போகிறாள்.
மகள் இப்படி என்றால், அப்பா பெரியாழ்வார் இன்னும் ஒரு படி மேலே போகிறார்:
“அண்டக் குலத்துக்கு அதிபதியாகி அசுரர் இராக்கதரை
இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு”
என்று பாடுகிறார். இங்கே “அண்டக் குலம்” என்பது அண்டர் (தேவர்) குலம் அல்ல. அவன் தேவர் குலத்தவன் என்று செய்தி தெரியாதவர்கள் சிலர் சொல்வார்கள் என்று பாரதி கூறினான் அல்லவா? ஆழ்வார் சேதி தெரிந்தவர், அதனால் கண்டிப்பாக அப்படிச் சொல்லியிருக்க மாட்டார்.
அண்டக் குலம் என்றால் இந்த அண்டம் முழுவதையுமே குலமாக உடையவன் என்று பொருள்.
“அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நினைவாகி ஆனந்தமான பரம்” அவனே.
“நீராய்த் தீயாய்ச் சுடராய்க் காற்றாய் நெடுவானாய்” விரிந்தவன் அவன்.
“உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையுமெல்லாம்” கண்ணன் எம்பெருமான்.
பிரபஞ்சத்தில் உள்ள சகல உயிர்கள், மற்றும் புல் பூண்டு முதலான எல்லாப் பொருள்களும் ஆனவன் அவனே அல்லவா?
அதனால் அவனது குலம் அண்டக் குலம்.
அப்பேர்ப் பட்ட அவனைப் போற்றித் துதிக்கும் தான் எந்தக் குலம் என்றும் பட்டர் அடுத்த வரிகளில் சொல்கிறார் –
தொண்டக் குலத்தில் உள்ளீர் ! வந்தடி தொழுது ஆயிர நாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே!
ஆக நாம் எல்லாரும் ஒரே குலம், அது தொண்டக் குலம். அவன் அடி தொழுத பின் நம்முடைய பழைய குலங்களெல்லாம் போய் “இன்று புதிதாய்ப் பிறந்தோம்”! அதனால் தான் “குலம் தரும் செல்வம் தந்திடும்” என்று திருமங்கையாழ்வார் நாராயண நாமத்திற்குக் கட்டியம் கூறினார்.
நாரத பக்தி சூத்திரம் (72-73) கூறுகிறது:
நாஸ்தி தேஷு ஜாதி வித்யா ரூப குல தன க்ரியாதி பேத: யதஸ் ததீயா:
“பக்தர்களிடத்தில் சாதி, கல்வியறிவு, உருவம், குலம், செல்வம், தொழில்கள் இவற்றால் உண்டாகும் எந்த வேற்றுமைகளுக்கும் இடமில்லை. ஏனெனில் அவர்கள் அனைவரும் அவனுடையவர்களே”.
இப்பேர்ப்பட்ட அடியார்களின் பெருமை எப்பேர்ப் பட்டது?
குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தானிலாத சண்டாள சண்டாளர்களாயினும்
வலந்தாங்கு சக்கரத் தண்ணல் தன் அருளில்
கலந்தார் தம் அடியார் தம் அடியார் எம் அடிகளே!”
என்று குலப் பெருமை பேசித் திரியும் கூட்டத்திற்காகக் குருகூர்ப் பிரான் கூறுகிறார். குலத்தால் வரும் கொள்கையல்ல பக்தி, பண்பால் விளையும் பக்குவம்.
அண்டம் முழுதும் ஓர் குலமாய்ச் செய்த
கொண்டல் மணி வண்ணன் தாளில் – தொண்டன்
பழுதுடையேன் எனினும் பாரிப்பான் என்றே
கழுகரசன் சாற்றும் கவி
31 comments:
testing...
இலக்கிய ஆதாரங்களுடன் மிக நன்றாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் ஜடாயு ஐயா.
very good,very impressed and thank u.
அப்புறம் ஏண்டா பாப்பான் மட்டும்தான் பெரியவன், உயர்ந்தவன் என்று சொல்றீங்க பன்னாடைப் பசங்களா?
நன்றி குமரன், அனானி.
வெங்காயம் said...
// அப்புறம் ஏண்டா பாப்பான் மட்டும்தான் பெரியவன், உயர்ந்தவன் என்று சொல்றீங்க பன்னாடைப் பசங்களா? //
வெங்காயம், அப்படிச் சொல்பவர்களிடம் போய் அல்லவா நீங்கள் இப்படிக் கேட்க வேண்டும்?
இங்கே வந்து கேட்டால் எப்படி?
இது நல்ல தமிழ் புழங்கும் இலக்கிய இடுகை. இழிமொழிகளை இங்கு பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
// அவன் அடி தொழுத பின் நம்முடைய பழைய குலங்களெல்லாம் போய் “இன்று புதிதாய்ப் பிறந்தோம்”! அதனால் தான் “குலம் தரும் செல்வம் தந்திடும்” என்று திருமங்கையாழ்வார் நாராயண நாமத்திற்குக் கட்டியம் கூறினார். //
"குலம் தரும்" என்ற பதத்திற்கு நல்ல, ஆன்மீக விளக்கம். கண்ணன் அடியார்கள் எத்தனையோ பேர் எல்லாக் குலங்களிலும் தோன்றி இருக்கின்றார்கள் என்பதே இதற்குச் சான்று.
நன்றி.
It is the Hindu devotional movement that was a great deterrant against the spread the casteism through ages. The Sages like Alwars and Nayanmars were universal and egalitarian in their outlook. It is their lineage that is the true legacy of Hinduism.
Thank you for highlighting this aspect thru a beautiful writeup about Sri Krishna.
நல்ல தமிழ் அனுபவித்து நாட்களாகி விட்டன. ஜடாயு அளித்த அமுதத்தில் காய்ந்த காளையாய் குதித்தமிழ்ந்தேன். நற்றமிழ், நற்றமிழ் எங்கள் ஜடாயுவின் சொற்றமிழ்.
நன்றி அமுதம் தந்த ஜடாயுவின் குமுத மனத்திற்கு. நீவிர் நலம் பெருக நன்னன் என் கண்ணனை தொழுவேன்.
இங்கனம் தமிழன்,
ஐயன் காளி.
//குலத்தால் வரும் கொள்கையல்ல பக்தி, பண்பால் விளையும் பக்குவம்.//
மிக்கச்சரி.
கும்பிடுவது என்கிற உடல் செயல் கூட பக்தியல்ல பக்குவமான பண்பு - பண்பான பக்குவம் என்பதே பக்தி.
பக்தி அது வெறும் bodyly action மட்டும் அல்ல, உடல் தாண்டி வெளிப்படும் மனம் சார்ந்த attitude!
//அண்டக் குலம் என்றால் இந்த அண்டம் முழுவதையுமே குலமாக உடையவன் என்று பொருள்.//
பேருண்மை! அருமையான இடுகை!
இந்த ஜடாயு ராமனுக்கு மட்டும் என்று இல்லாமல் கண்ணனுக்கும் (நாரயணனுக்கு) நட்பு...
இரு இந்து இதிகாசங்களின் இணைப்பு இந்த ஜடாயு!
2007 புத்தாண்டு வாழ்த்துக்கள்
குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் எனும் பாரதியின் கருத்தை மிக அற்புதமாகக் கொண்டுவந்திருக்கிறீர்கள்.
சில பின்னூட்டங்களைப் பிரசுரித்துவிட்டு, பின் பதில் சொல்வதை விடுத்து, மட்டுறுத்தலாமே!
நன்றி.
தமிழ் புத்தாண்டு வந்தவுடன் நான் சக வலைப்பதிவர்களுக்கு வாழ்த்து சொல்லுகிறேன். அதுவரை ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் என் ஆங்கிலேய நண்பர்களுக்கு மட்டுமே. :-) !
// நன்றி அமுதம் தந்த ஜடாயுவின் குமுத மனத்திற்கு. நீவிர் நலம் பெருக நன்னன் என் கண்ணனை தொழுவேன்.
இங்கனம் தமிழன்,
ஐயன் காளி. //
அம்மையின் பெயர் கொண்ட தமிழ் ஐயனே
தமிழில் தாண்டவர் செய்கிறீர் உம் பேருக்கேற்ற படி
வணக்கங்கள்.
// இந்த ஜடாயு ராமனுக்கு மட்டும் என்று இல்லாமல் கண்ணனுக்கும் (நாரயணனுக்கு) நட்பு...
இரு இந்து இதிகாசங்களின் இணைப்பு இந்த ஜடாயு! //
அரியும், அரனும் சேர்ந்து வாழ்த்திய இந்த வாழ்த்தில் மனம் நெகிழ்கிறேன்.
மிக்க நன்றி ஹரிஹரன் அவர்களே.
// சில பின்னூட்டங்களைப் பிரசுரித்துவிட்டு, பின் பதில் சொல்வதை விடுத்து, மட்டுறுத்தலாமே!
நன்றி. //
நன்றி எஸ்.கே. அவர்களே.
பிரசுரிக்கவே முடியாத அளவு மோசமான மொழியில் இருந்தாலொழிய மாற்றுக் கருத்து பின்னூட்டங்களையும் அனுமதிக்க வேண்டும் என்பது என் கொள்கை.
// சில
செட்டிமக்களோடு மிகப் பழக்கமுண்டு//
கிருஷ்ணனின் செட்டியார் பிரண்டு யார்?
பாரதி அக்காலக்கட்டத்திற்குத் தேவையான கருத்துக்களை பழைய தொன்மங்களின் மூலமாக நிறையச் சொல்லியிருக்கிறான். ஆயினும் அவனுக்கு தமிழ் வைணவ சம்பிரதாயம் முழுவதும் பிடிபட்டதா என்று தெரியவில்லை. ஆனால், உங்களுக்கு பிடிபடும் என்று தோன்றுகிறது :-)
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
//பழுதுடையேன் எனினும் பாரிப்பான் என்றே
கழுகரசன் சாற்றும் கவி//
ஜடாயு சார், உங்க வெண்பாவா?
அருமையா இருக்கு!
அருமையான சிந்தனை, சொற்கள், இலக்கியம் பயின்ற பதிவில் முத்தாய்ப்பாக ஒரு முத்து!
மிக நன்று!
(இந்தப் பதிவை எப்படியோ மிஸ் பண்ணிவிட்டேன் ; கண்ணன் சார் பதிவில் உங்க பின்னூட்டம் பாத்து வந்தேன்; கண்ணன் பதிவுகளுக்கு இந்தக் கண்ணனுக்கும் ஒரு மெயில் அலர்ட் தட்டுங்களேன், இனி!)
ஆண்டாள் "பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ" என்று சொல்லிய பின் அப்பீல் ஏது? :-)
யது குலம்? யாது குலம்? :-)
தொண்டர் குலம்! அதுவன்றோ சிறப்பு!
நம்பனை ஞாலம் படைத்தவனைத் திருமார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைக்
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர்கண்டீர்
எம்பல் பிறப்பிடை தோறும் எம் தொழுகுலம் தாங்களே!
வருகைக்கு நன்றி நா.கண்ணன்.
// கிருஷ்ணனின் செட்டியார் பிரண்டு யார்? //
செட்டி மக்கள் (வணிகர்கள்) என்று தான் பாரதி சொல்கிறான். கண்ணன் திருக்கதையில் இதற்கான குறிப்புகளும் உண்டு.
கோகுலத்தில் வாசலில் நெல்லிக்காய் விற்றுக் கொண்டு வந்த மூதாட்டியிடம் தன் பிஞ்சுக் கரங்களால் நெல்லிக்காய்களை யாசகம் கேட்டு வாங்கி உண்டு, அவளுக்கு மோட்சக் கனியை வழங்கினான்.
வடமதுரையில் நுழைந்தவுடன் கம்சனுக்கு வழக்கமாக சந்தனம் சப்ளை செய்யும் காண்டிராக்டரை மடக்கி, அவனிடமிருந்த சந்தனத்தை வாங்கிப் பூசிக் கொண்டு அவனை ஆட்கொண்டான்.
// ஆயினும் அவனுக்கு தமிழ் வைணவ சம்பிரதாயம் முழுவதும் பிடிபட்டதா என்று தெரியவில்லை. ஆனால், உங்களுக்கு பிடிபடும் என்று தோன்றுகிறது :-) //
பாரதி கண்ணனை சம்பிரதாய நோக்கில் அல்ல, தானே அனுவத்து உணர்ந்த ஆன்மிக நோக்கிலேயே கண்டுணர்ந்து பாடினான். அதனால் தான் ஞானி, யோகி, மகாகவி என்று அறியப் படுகிறான்.
சம்பிரதாயத்தைப் பிடித்திருந்தால் அதிகபட்சம் சவடால் விடும் சமயச் சொற்பொழிவாளனாகப் போயிருப்பான், அவ்வளவு தான்.
தன் உண்மையான பக்தனை எப்படி ஆட்கொள்ள வேண்டும் என்று பகவானுக்குத் தெரியாதா என்ன?? :))
ஜோக்ஸ் அபார்ட், பாரதிக்கு தமிழ் வைணவ மரபில் ஆழ்ந்த ஞானமும், பிடிப்பும் இருந்தது. தன் கட்டுரைகளில் ஆழ்வார் பாசுரங்கள் பலவற்றை எடுத்தாண்டு இருக்கிறார். ஸ்ரீராமானுஜரைப் பற்றியும் பல இடங்களில் குறிப்பிடுகிறார். சென்னை அடையாறில் உள்ள ஒரு கோயிலில் (மத்ய கைலாஷ்??), பன்னிரு ஆழ்வார்களோடு "பாரதி ஆழ்வார்" என்பதாகச் சேர்த்து பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருவதாகவும் செய்தி படித்த ஞாபகம்!
// ஜடாயு சார், உங்க வெண்பாவா?
அருமையா இருக்கு! //
ஆமாம் கேஆரெஸ். அடியேனது வெண்பா தான். படிப்பவர்கள் கண்டு பிடிப்பார்கள் என்ற என் நம்பிக்கையை பெய்யாக்கியதற்கு மிக்க நன்றி.
// (இந்தப் பதிவை எப்படியோ மிஸ் பண்ணிவிட்டேன் ; கண்ணன் சார் பதிவில் உங்க பின்னூட்டம் பாத்து வந்தேன்; கண்ணன் பதிவுகளுக்கு இந்தக் கண்ணனுக்கும் ஒரு மெயில் அலர்ட் தட்டுங்களேன், இனி!) //
கண்டிப்பாக. "கண்ணன் பாட்டிலேயே" இனிமேல் இத்தகைய விஷயங்களைப் போடுகிறேன்.
oops!!!
போன பின்னூட்டத்தில் சொல்ல வந்தது இது:
// என் நம்பிக்கையை மெய்யாக்கியதற்கு மிக்க நன்றி. //
ஆனால், தவறுதலாக இப்படி ஆகி ஆகி விட்டது
// என் நம்பிக்கையை பெய்யாக்கியதற்கு மிக்க நன்றி //
சின்ன slip கூட மெய்யை பொய்யாக்கி விடும்..ம்ம்?
// யது குலம்? யாது குலம்? :-)
தொண்டர் குலம்! அதுவன்றோ சிறப்பு! //
அருமையான சொற்கள் கண்ணபிரான்.
// கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர்கண்டீர்
எம்பல் பிறப்பிடை தோறும் எம் தொழுகுலம் தாங்களே! //
அற்புதமான பாசுரத்தையும் தந்ததற்கு நன்றி.
"நரகே வா நரகாந்தக ப்ரகாமம்" என்ற குலசேகரரின் முகுந்த மாலை வரிகளை நினைவூட்டுகிறது!
வடமதுரையில் நுழைந்தவுடன் கம்சனுக்கு வழக்கமாக சந்தனம் சப்ளை செய்யும் காண்டிராக்டரை மடக்கி, அவனிடமிருந்த சந்தனத்தை வாங்கிப் பூசிக் கொண்டு அவனை ஆட்கொண்டான்
சிரித்துக்கொண்டே இருக்கிறேன்.
ஜடாயு
வழக்கம் போல உங்கள் அழகு தமிழ் மிளிரும் கட்டுரை. தமிழமுது. நல்ல பார்வை. எங்களுடன் உங்கள் பார்வையைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.
அன்புடன்
ச.திருமலை
மிக்க நன்று ம்யூஸ், திருமலை.
நன்றாக எழுதியுள்ளீர்கள்
கிருஷ்ணாஅர்ப்பனம் (கண்ணதாசன் நடையில்)
நல்ல பதிவு ஜடாயூ சார்.
பட்சிராஜன் பார்வை கூர்மை.
எழுத்தும் கூர்மை.கூட நேர்மையும் இருப்பதால் படிக்க இனிமையாக இருக்கிறது.
நல்ல எண்ணங்களும் நேர்மையும் எழுத்தில் இருந்தால் ,
புத்தாண்டு நலம் பெறும் என்பதில் மறுகருத்து இல்லை.
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வல்லி சிம்ஹன்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஆண்டாள் "பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ" என்று சொல்லிய உடனே தெரியவேண்டாமா?கோகுலத்து யாதவர்கள் குலம் கண்ணன் என்று
கருத்து, சொல்லாட்சி, வடிவமைப்பு எல்லாம் நன்றே. வெண்பாவின் இலக்கணம் (தளை)பல இடங்களில் சரியாக அமையவில்லை.
சௌந்தர்
அண்டர் பொதுவர் ஆயர் குடவர் அமுதர் வெளிர் இந்த பெயர் எல்லாம் தமிழில் யதுகுல க்ஷத்ரியார்களையே குறிக்கும்
நந்தகோபனும் வாஸுதேவனும் இருவருமே தேவமிதன் பேரன் தான் இருவருமே யதுகுலத்தில் வ்ருஷ்னிகுல யாதவர்கள் தான் கோபாலனம் (ஆ காத்தல் )செய்ததால் கோபாலர் ஆனால் நீங்க பகவான் பற்றி புராணசுவடையே மறைக்கும் வண்ணம் பக்தி பாகவதர் என்று சொல்லி அவன் அடையாளத்தையே அழிக்க பாக்கிங்க
Post a Comment