Thursday, December 14, 2006

பாரதி பாடல்களில் அறிவியல் படிமங்கள்

தனக்கு முன்னும், பின்னும் வாழ்ந்த தமிழ்க்கவிஞர்கள் பலரிடம் காணக்கிடைக்காத அறிவியல் ஆர்வம் பாரதிக்கு இருந்தது என்று சொல்லலாம்.

ஜகதீச சந்திர போசின் தாவர ஆராய்ச்சிகள் பற்றி எழுதியிருக்கிறார். அவர் வாழ்நாளின் போது வந்த ஹாலியின் வால் நட்சத்திரம் பற்றி “சாதாரண வருஷத்துத் தூமகேது” என்று ஒரு கவிதை புனைந்தார்.

“எண்ணில் பல்கோடி யோசனை எல்லை
எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால்
புனைந்த நின்னொடு வால் போவதென்கின்றார்”


என்று அந்த வால் பற்றிய அறிவியல் உண்மையைக் கூறுகிறார். அதே பாடலில்

“பாரத நாட்டில் பரவிய எம்மனோர்
நூற்கணம் மறந்து பன்னூறாண்டாயின
உனதியல் அன்னியர் உரைத்திடக் கேட்டே
தெரிந்தனம்; எம்முள் தெளிந்தவர் ஈங்கிலை”


என்று அறிவியல் அறிவை பாரத நாடு மறந்துவிட்டதைப் பற்றியும் வருந்துகிறார்.

“பாரத நாட்டுக்குத் தேவையான கல்வி” என்ற விஷயத்தைப் பற்றி எழுதுகையில் இயற்பியல், ரசாயனம், வான சாஸ்திரம், கணிதம் போன்ற துறைகளில் எந்த மாதிரியான முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன என்பதைக் குறிப்பிட்டு இவற்றையெல்லாம் நம் மாணக்கர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற தன் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துகிறார். அணு, மூலக்கூறு இவற்றின் அமைப்பு பற்றிய சித்தாந்தங்கள் புரியத் தொடங்கியது 1910களில் தான். ரூதர்போர்ட் அணுவின் மையமாக நியூக்ளியஸ் என்னும் பருப் பொருளை (mass) கண்டறிந்தார், தொடர்ந்து புரோட்டான், எலக்ரான், நியூட்ரான் துகள்களும் அறியப் பட்டன. சூரியனைக் கோள்கள் சுற்றுவது போல், அழகான வட்டப் பாதையில் எலக்ரான்கள் மையத்தில் உள்ள நியூக்ளியசைச் சுற்றுவது போன்ற ஒரு கற்பனை பிம்பத்தையும் அன்றைய அறிவியல் உலகம் உருவாக்கிற்று. (உண்மையில், நியூக்ளியசின் வெளிப்பகுதி முழுவதிலும் இம்மி இடமில்லாமல் துகள்களே நிரம்பியிள்ளன. அவை சுற்ற ஆரம்பித்தால் பெரும் மோதல் தான் ஏற்படும்! ஆனால், இன்று வரை இந்தப் பிம்பம் பாடப் புத்தகங்களிலும், வெகுஜன அறிவியல் எழுத்துக்களிலும் நீடிக்கிறது) மேற்குறிப்பிட்ட கட்டுரையில், அணுக்கூறுகள் சுற்றி வருவது பற்றிய அவர் காலத்து “சமீபத்திய” அறிவியல் முடிவுகளை கவித்துவத்தோடு பாரதி எழுதியிருக்கிறார். பல உலக அளவினான ஆங்கிலப் பத்திரிகைகளையும் படித்து வந்தததனால் தனது சமகால அறிவியல் முன்னேற்றங்கள் பற்றிய தகவல்களை அவர் நன்கு அறிந்திருந்தார் என்பதற்கு இது சான்று.

பாஞ்சாலி சபதத்தில் வரும் அழகான கடவுள் வாழ்த்துப் பாடல் இது :

இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென
இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்
இடையின்றிக் கதிர்களெலாம் சுழலுமென
வான் நூலார் இயம்புகின்றார்
இடையின்றிச் சுழலுதல் இவ்வுலகினிடைப்
பொருட்கெல்லாம் இயற்கையாயின்
இடையின்றிக் கலைமகளே ! நினதருளில்
எனது மனம் இயங்கொணாதோ?


பல நயங்களை இதில் அனுபவிக்கலாம். எல்லா அறிவுத் துறைகளின் உருவகமான சரஸ்வதியை வணங்கும் முன்னர் Perpetual molecular motion மற்றும் planetary motion என்னும் இயற்பியல், வானியல் உண்மைகளைப் பிரமாணமாக முன்வைக்கிறார். க்வாண்டம் பற்றிய ஆராய்ச்சிகள் அறியப்படாத அந்தக் காலகட்டத்தில் இயற்பியலின் பொது விதிகளே (general laws of physics) அணுவின் சுழற்சி முதல் அண்ட வெளியில் சுழலும் கோள்கள் வரை எல்லாவற்றுக்கும் பொருந்தும் என்ற கருத்து இருந்தது. அந்தக் கருத்தையும் இந்தப் பாடல் உள்ளடக்கியிருக்கிறது. “இந்த எல்லாவற்றையும் போலவே என் மனமும் ஒரு இயற்கைப் பொருள் (physical object) தானே? அதுவும் இடைவிடாமல் இயங்காதா?” என்று கேட்கையில் “உன் அருளில்” என்ற சொல்லை வைத்ததால், மேலே சொன்ன எல்லா பிரபஞ்ச இயக்கமும் நடப்பதும் பரம்பொருளான உன் அருளே அல்லவா என்ற ஆன்மீக பாவனையும் வெளிப்படுகிறது.மகாசக்தி வாழ்த்து என்ற கவிதையின் முதற்பாடல்:

விண்டுரைக்க அறிய அரியதாய்
விரிந்த வான வெளியென நின்றனை
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை
அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை
மண்டலத்தை அணு அணுவாக்கினால்
வருவதெத்தனை அத்தனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை
கோலமே நினைக் காளியென்றேத்துவேன்


அண்டம் பற்றிய அளவீடுகளும், பரிமாணங்களும் மனித மனமும், அறிவும் செய்யும் எந்தக் கற்பனையையும் விட பிரம்மாண்டமானவை. பில் ப்ரைஸன் (Bill Bryson) எழுதிய “எல்லாவற்றையும் பற்றிய சுருக்கமான சரித்திரம்” (A brief History of nearly Everything) அல்லது Stephen Hawkingன் “காலத்தின் சுருக்கமான சரித்திரம்” (A brief History of Time) போன்ற வெகுஜன அறிவியல் நூல்களைப் படித்தவர்கள் இந்தப் பிரம்மாண்டத்தைக் கொஞ்சம் உணரலாம். ஒரு சிறிய சர்க்கரைக் கட்டிக்குள் எத்தனை அணுக்கள் இருக்கின்றன? நாம் இருப்பது பால்வீதி எனப்படும் வெளி (galaxy). இது போன்ற எத்தனை கோடி வெளிகள் பிரபஞ்சத்தில்? இவற்றுக்கு உடையே உள்ள தூரம் என்ன? தூரமும் காலமுமே மயங்கும் கணக்கு இது. “ஒளியின் வேகம்” என்ற நாம் அறிந்த அதிக பட்ச வேகக் கணக்கை வைத்து நடைமுறையில் இன்றைய அறிவியல் பெரும் வளர்ச்சி கண்டு விட்டது. ஆனால் பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு இடத்தில் எப்போதோ ஒரு நட்சத்திரம் சிதறிய போது அதில் வெளிப்பட்ட ஒளி இன்னும் நம்மை வந்து சேரவில்லை என்றால் நாம் அங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம்? இதையெல்லாம் கற்பனை செய்து பாருங்கள்!

இந்தப் பிரமாண்டத்தை கவித்துவ மொழியில் சொல்ல விழைவதே மேற்சொன்ன பாடல். இவ்வளவும் சொல்லிவிட்டுக் கடைசியில் “கோலமே” என்று பாடுகிறார். எண்ணிப் பார்த்தால் இது கூட அண்டம் பற்றிய நம் மனத்தில் உள்ள கோலம் தான், உண்மையல்ல!

அண்டம் பற்றிய ஆச்சரியங்களின் வெளிப்பாடு இந்து ஆன்மீக, பக்தி மரபில் புதிதல்ல. நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடல்களிலேயே உள்ளது. அதற்கும் முந்தைய வேத, உபநிஷத இலக்கியத்திலேயே உள்ளது. அவை எல்லாம் உள்ளுணர்வின் அடைப்படையிலானவை. ஆனால், இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சி நடைபோடத் தொடங்கியிருந்த காலத்தில், அதைப் பற்றி ஓரளவு நன்கு அறிந்திருந்த கவிஞனின் பக்தி வெளிப்பாட்டில் கூட அறிவியல் சிந்தனை தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இந்தப் பாடல்கள் உணர்த்துகின்றன. இது அவனது ஆன்மீகத் தேடலைக் குழப்பவில்லை, மாறாக தெளிவித்திருக்கிறது, பரிணமிக்க வைத்திருக்கிறது.

பிற்காலத்தில், தமிழகத்தில் அறிவு சுத்தமாக மழுங்கியிருந்த ஒரு இருண்ட காலகட்டத்தில் “அமெரிக்காக் காரன் நிலாவில் கால் வைத்து விட்டான், மண் எடுத்து வந்து விட்டான், நீ அதை சிவன் தலையில் இருப்பதாகக் கருதி வணங்குகிறாயே” என்றெல்லாம் எள்ளி நகையாடி திராவிட இயக்கப் பாவேந்தர்கள் பாடல்கள் எழுதினார்கள். பாரதிக்கு இருந்ததில் பத்தில் ஒரு பங்கு அறிவியல் சிந்தனை கூட அவர்களுக்கு இருந்திருக்கவில்லை என்பது தெளிவு. அவர்களின் மற்ற படைப்புகளைப் படித்தால் இது புரியும். அமெரிக்க நிலாப் பயணத்தைப் பற்றி செய்தித் தாளில் படித்தவுடன் அரைகுறைப் பகுத்தறிவு பீறிட்டெழுந்து இத்தகைய அட்சரலட்சம் பெறுமான கவிதைகளை எழுதித் தள்ளினார்கள். மேற்சொன்ன பாரதி பாடல்களைப் படிக்கும்போது ஏனோ இது நினனவுக்கு வந்து தொலைக்கிறது.

“நிலவுலாவிய நீர்மலி வேணியன்” என்ற பழம்பாடலையும், பாரதியின் மேற்சொன்ன பாடல்களையும் இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் கழித்தும் நாம் படித்து அனுபவிக்கலாம். ஆனால் வெறுப்பில் விளைந்த அந்தக் காழ்ப்புணர்ச்சிப் பாடல்களைக் காலம் ஏற்கனவே விழுங்கி ஜீரணித்து விட்டது. “காலமே, நினைக் காளியென்றேத்துவேன்”!

டீ.என்.ஏ உள் நிற்கும் தெய்வமே போற்றி!
விண்கலன் செலுத்தும் விரைவே போற்றி!
கணினி நிரலின் காரணா போற்றி!

‘சிலிக்கன் சிப்’ மேவிய சிவனே போற்றி!

16 comments:

SP.VR. SUBBIAH said...

இதையும் சேற்த்துக்கொள்ளுங்கள்

பங்குச் சந்தையே போற்றி
பில்கேட்ஸ் கைப்பணமே போற்றி
வங்கி வைப்புத்தொகையே போற்றி
வரும்பொருள் காப்பாய் போற்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உனதியல் அன்னியர் உரைத்திடக் கேட்டே தெரிந்தனம்; எம்முள் தெளிந்தவர் ஈங்கிலை//

அதே! அதே!
அப்படியே பாரதியின் ஆற்றாமை தொனிக்கிறது பாட்டில்!

Black Holes பற்றியும் ஒரு பாட்டில் அழகாச் சொல்லுவார்; "காலமாம் வனத்தில் அண்டக் கோல மா மரத்தின் மீது" என்று நினைக்கிறேன்!

நல்ல அலசல் ஜடாயு ஐயா!

jeevagv said...

ஆமாங்க, அறிவியலை ஞான விளக்கில் ஏற்றிக் காட்டி இருப்பார் பாரதி.
'எத்தனை கோடி இன்பம் வைத்தாய்...' பாடல் எனக்கு பிடித்தது.
அனுபவிச்சு, பாரதியின் வரிகளை ரசித்து எழுதி இருக்கீங்க, மகிழ்ந்தேன்!

அரவிந்தன் நீலகண்டன் said...

அருமையான பதிவு ஐயா. பாரதியின் கவித்துவ தரிசனமும் உள்ளுணர்வும் இன்றைய நவீன உயிரியல் கோட்பாடுகள் சிலவற்றையும் தரிசித்திருக்கிறது.பாரதியின் கீழ்வரும் வரிகளை காணுங்கள். நினைவிலிருந்து எழுதுவதால் வரிகள் மாறியிருக்கலாம் பொறுத்தருள்க:

அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா?
ஆம்.
இரைகின்ற கடல்-நீர் உயிரால் அசைகிறதா?
ஆம்.
...பூமிப்பந்து இடைவிடாமல் மிக்கவிசையுடன் சுழல்கின்றது.
அவள் தீராத உயிருடையவள், பூமித்தாய்.
எனவே அவள் திருமேனியிலுள்ள ஒவ்வொன்றும்
உயிர் கொண்டதேயாம்.
அகில முழுதும் சுழல்கிறது....
எனவே
இவ்வையகம்
உயிருடையது.
வையகத்தின் உயிரையே காற்றென்கிறோம்.
அதனை முப்பொழுதும் போற்றி வாழ்த்துதல் செய்கிறோம்.

லின் மர்குலிஸும் ஜான் லவ்லாக்கும் கடும் ஆராய்ச்சியின் தரவுகளால் உருவாக்கிய கயா (Gaia)வினை கவித்துவ உள்ளுணர்வால் உணர்ந்திருக்கிறார் மகாகவி. இது குறித்து தனிபதிவும் இடலாம் என உள்ளேன்.தங்கள் பதிவே அதனை தூண்டிற்று. தாங்கள் குறிப்பிட்டுள்ள பாரதியின் சரஸ்வதி வந்தனம் நம் பாரத குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களால் பாரதம் முழுவதும் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது. அருமையான பதிவுக்கு நன்றி.

அரவிந்தன் நீலகண்டன் said...

சிலிக்கன் சிப்’ மேவிய சிவனே போற்றி! :)
'ஸென் அண்ட் ஆர்ட் ஆஃப் மோட்டார் சைகிள் மெயிண்டனன்ஸ்' இல் படித்த ப்ர்ஸிக்கின் இந்த வரிகளை ஞாபகப்படுத்தின: "What most people do not understand is that the Buddha, the Godhead, resides just as comfortably in gears and circuits as in hills and trees. To believe otherwise is to dilute the Godhead."

ஜடாயு said...

// இதையும் சேற்த்துக்கொள்ளுங்கள்

பங்குச் சந்தையே போற்றி
பில்கேட்ஸ் கைப்பணமே போற்றி
வங்கி வைப்புத்தொகையே போற்றி
வரும்பொருள் காப்பாய் போற்றி! //

சுப்பையா, இது என்ன புரியவில்லையே? நீங்கள் உண்மையிலேயே பணத்தை ஆராதிப்பவரா இல்லை என் வரிகளை நையாண்டி செய்து இதை எழுதியிருக்கிறீர்களா?

எதுவாயினும், எல்லாம் சக்தியின் விளையாட்டே!

ஜடாயு said...

// லின் மர்குலிஸும் ஜான் லவ்லாக்கும் கடும் ஆராய்ச்சியின் தரவுகளால் உருவாக்கிய கயா (Gaia)வினை கவித்துவ உள்ளுணர்வால் உணர்ந்திருக்கிறார் மகாகவி. //

ஆகா! இந்த வசன கவிதையைப் படித்திருக்கிறேன். நீங்கள் சொன்னவுடன் தான் Gaia விஷயம் இதில் இருப்பது புலனாகிறது. அருமை நீலகண்டன்.

// தாங்கள் குறிப்பிட்டுள்ள பாரதியின் சரஸ்வதி வந்தனம் நம் பாரத குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களால் பாரதம் முழுவதும் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது. //

அப்படியா? அறிந்து மிகவும் மகிழ்ச்சி. தனது வாழக்கப் படி, தமிழிலேயே இந்தப் பாடலை அவர் படித்தும் காட்டியிருப்பார் என்று ஊகிக்கிறேன்.

ஜடாயு said...

// Black Holes பற்றியும் ஒரு பாட்டில் அழகாச் சொல்லுவார்; "காலமாம் வனத்தில் அண்டக் கோல மா மரத்தின் மீது" என்று நினைக்கிறேன்!

நல்ல அலசல் ஜடாயு ஐயா! //

நன்றி கண்ணபிரான்.

நீங்கள் குறிப்பிடுவது அற்புதமான பாடல்
"காலமாம் வனத்தில் அண்டக்
கோலமா மரத்தின் மீது
காளி சக்தி என்ற பெயர் கொண்டு
ரீங்காரமிட்டுலாவுமொரு வண்டு"

என்று வரும். பிரபஞ்ச தரிசனம் அந்தப் பாடலிலும் உண்டு - ஆனால் அது முழுக்க ஆன்மிக மொழியில் ஆனது. Black Holes பற்றி என்று குறிப்பிட்டுச்சொல்லும் படியாக அந்தப் பாட்டில் வரிகள் இல்லை என்று நினைக்கிறேன்.

ஜடாயு said...

// ஆமாங்க, அறிவியலை ஞான விளக்கில் ஏற்றிக் காட்டி இருப்பார் பாரதி. //

ஆம். அறிவியலும், பரந்த நோக்கில்லான ஆன்மீகமும் அவருக்கு முரணாகத் தோன்றவில்லை. இரண்டையும் ரசிக்கும், கற்கும், ஏற்றூக் கொண்டு இன்புறும் பக்குவம் அவரிடம் இருந்தது.

// அனுபவிச்சு, பாரதியின் வரிகளை ரசித்து எழுதி இருக்கீங்க, மகிழ்ந்தேன்! //

மிக்க நன்றி ஜீவா.

SP.VR. SUBBIAH said...

//சுப்பையா, இது என்ன புரியவில்லையே? நீங்கள் உண்மையிலேயே பணத்தை ஆராதிப்பவரா இல்லை என் வரிகளை நையாண்டி செய்து இதை எழுதியிருக்கிறீர்களா? //

என் வயதிற்கு நையாண்டி செய்ய மனதில் தெம்பில்லை நண்பரே!

இன்றைய உலகம் 'காசேதான் கடவுள்' என்று இருப்பதைச் சுட்டிக்காட்டி அவர்களின் மனதில் ஓடும் போற்றிப் பாட்டு இதுதான் என்று சுட்டிக்காட்டவே அதை எழுதினேன்

அவ்வளவுதான்

Hari said...

மண்டலத்தை அணு அணுவாக்கினால்
வருவதெத்தனை அத்தனை யோசனை


மனித மனத்தில் உள்ள குழப்ப சிந்தனைகளை சொல்கிறாரா? புரியவில்லை.

கோலமே நினைக் காளியென்றேத்துவேன்

இயற்கையை வணங்கியிருக்கிறார். இவருக்கு மத பூச்சு தேவையில்லாமல் அடிக்கப்பட்டதோ?

ஜடாயு said...

// மண்டலத்தை அணு அணுவாக்கினால்
வருவதெத்தனை அத்தனை யோசனை

மனித மனத்தில் உள்ள குழப்ப சிந்தனைகளை சொல்கிறாரா? புரியவில்லை. //

ஹரி, இது மனத்தின் 'யோசனை' இல்லை. இங்கு 'யோசனை' என்பது பண்டைய இந்திய தூர அளவு. ராமாயணத்தில் 100 யோசனை தூரம் உள்ள கடலை அனுமன் தாண்டினான் என்று வரும்.

மண்டலம் என்பதற்கு இந்த இடத்தில் மண்+ தலம், அதாவது பூமி என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த பூமியை அணுஅணுவாக்கினால் எவ்வளவு பெரிய எண்ணிக்கை வருமோ, அத்தகைய தூரங்கள் அண்டங்களுக்கிடையில் என்று சொல்ல வருகிறார்.

ஜடாயு said...

// கோலமே நினைக் காளியென்றேத்துவேன்

இயற்கையை வணங்கியிருக்கிறார். இவருக்கு மத பூச்சு தேவையில்லாமல் அடிக்கப்பட்டதோ? //

எல்லை. அவர் சார்ந்த இந்து மதத்தில் இயற்கையின் பிரம்மாண்டத்தில் இறையைப் போற்றும் தன்மை காலம் காலமாக இருந்து வந்தது தானே?

இதில் "மதப்பூச்சு" எங்கேயிருந்து வந்தது?

Hari said...

விளக்கத்திற்க்கு நன்றி.

Muse (# 01429798200730556938) said...

அவள் தீராத உயிருடையவள், பூமித்தாய்

அது சாங்கியமாகட்டும் வைசேசிகமாகட்டும். அறிவியலை வெற்று ஜடமாய் அணுகாமல் உணர்வுள்ள உயிருள்ளதாக அணுக இந்திய அறிவியலாளராலேயே முடிந்திருக்கின்றது. அந்த வகையில் பாரதியும் ஒரு இந்திய அறிவியல் அறிஞர்தான்.

ஆயினும், உயிருள்ள ஒன்றை உறவுள்ள ஒன்றாக பாடும்போது அக்கவிஞன் ஞானியாகிறார்.

S. Jayabarathan said...

வசனக் கவிதைகளில் பாரதியார் சக்தியைப் (Energy) பற்றிக் கூறும் போது விஞ்ஞானம் ஆன்மீகம் ஆகிய இரண்டையும் இணைக்கிறார் :

சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஓர் குமிழியாம்.

சக்தி அநந்தம், எல்லையற்றது, முடிவற்றது. அசையாமல் அசைவு காட்டுவது.

சக்தி . . . . கூட்டுவது, பிணைப்பது (Fusion Energy), கலப்பது . . . ஒன்றாக்குவது, பலவாக்குவது, . . வீசுவது, சுழற்றுவது,

சக்தி முகர்வதும் சுவைப்பது, தீண்டுவது, கேட்பது, காண்பது,

சக்தி நினைப்பது, ஆராய்வது, கணிப்பது . . . சுழல்வது, . . உணர்வது

சக்தி குளிர் தருவது, அனல் தருவது,

சக்தி முதற் பொருள் (ஐன்ஸ்டைனின் பிண்ட-சக்தி சமன்பாடு - Einstein's Mass-Energy Equation); பொருளில்லாப் பொருளின் விளைவில்லா விளைவு.

சக்திக் கடலிலே ஞாயிறு ஓர் நுரை.

சக்தி கூத்திலே ஒளி ஒரு தாளம்.

என்னிடத்தே சக்தி எனதுயிரிலும், உள்ளத்திலும் இருக்கிறாள்.

தொடக்கமும், முடிவுமில்லாத காலத்திலே . . . .

வடிவத்திலே சக்தி நீடித்து நிற்கும்.

வடிவம் மாறினும், சக்தி மாறுவதில்லை. எங்கும், எதனிலும், எப்போதும் எல்லாவிதத் தொழில்களும் காட்டுவது சக்தி,

தோற்றம் பல. சக்தி ஒன்றே

சி. ஜெயபாரதன், கனடா