Friday, March 30, 2007

தமிழ் வலைப்பூக்களின் பரிணாமம்

பிளாக் எனப்படும் வலைப் பூ எழுதும் உந்துதல் உள்ளவருக்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப் பட்டது. தமிழ் வலைப் பூக்கள் துவக்கத்தில் தொழிற் நுட்பக் காரணங்களில் தடுமாறினாலும்,மெல்ல மெல்ல மற்ற மொழியினர் வியக்கும் வண்ணம் வளர்ந்தது. படித்தவர்கள், இளைஞர்கள்,பெண்கள் என்று பல தரப்பிலும் பதிவர்கள் உண்டாயினர்.அச்சில் தன் எழுத்தைப் பார்க்க முடியாதவர்களுக்கு தங்கள் கருத்தைப் பகிரவும்,எழுத்தை மேம் படுத்தவும் இது நல்ல மேடையாக அமைந்தது.

நன்றாக வளரும் வேளையில் பிடித்தது சனி! சாதாரண ஆத்திக நாத்திக வாதங்கள் சாதிச் சண்டையில் கொழுந்து விட,இது எந்தஅளவிற்கு போய் விட்டது என்றால்,இன்று ஒரு பதிவர் எனக்கு அந்த நடிகரைப் பிடிக்கும் என்றால் அவரை நடிகரின் சாதியோடு இணைத்து ஏசும் அளவிற்கு!ஒரு குறுப்பிட்ட சாதியினரின் ஆதிக்கம் மதுரையில் அதிகமாம்.அதனால் எனக்கு மதுரை பிடிக்கும் என்றால் கூட ஏச்சு விழுகிறது! பாரதியார் பற்றி எழுதினால்,அதில் சாதி,தேசீயம் என்றால் அதில் சாதி,வால் மார்ட் பற்றிக் கூறினாலும் சாதி,திரை விமர்சனம் எழுதினால் கூட சாதி!எதைப் பற்றி கூறினாலும் அதில் சாதியை நுழைப்பதே தலையாயமாகி விட்டது. இன்று தமிழ் மணம் என்ற திரட்டியில் பாருங்கள்; வரும் பதிவுகளில் பாதிக்கு மேல் சாதி மதங்களைப் பற்றித்தான்.

இதில் மிகவும் பாதிக்கப் பட்டவர்கள் பெண் பதிவர்கள்தாம்.பல பெண்கள் தங்கள் எழுத்தா ர்வத்தை வெளிப்படுத்துவதற்கு வலைப் பூக்கள் ஒரு நல்ல வடிகாலாயின.ஆனால் என்ன சொல்வது? இன்று பல பெண்கள் வலையில் எழுதுவதில்லை. காரணம், பின்னோட்டம் என்ற பெயரில் வரும் ஆபாசங்கள்தான் மூல காரணம். என்னதான் கமென்ட் மாடரேஷன்களைப் போட்டாலும் இந்த ஆபாசங்கள் புகுந்து விடுகின்றன. அதிலும் மணமான பெண்கள் என்றால் பின்னோட்ட ஆபாசம் அதிகம்.

எதிர் கருத்துக்களை நாகரீகமாகவும் வெளியிட முடியும் என்று தெரியாதவர்களா இவர்கள். இல்லை என் கருத்துக்கு எதிர் கருத்தே கூடாது என்பவர்களா? இதில் குரூப்பிசம் வேறு! அதாவது dictorship of idiots என்பார்களே அதுதான் நடக்கிறது. ஒருவருடய கருத்தை மற்றவர் மாற்ற இயலுமா? இயன்றாலும்அது தேவையா? இதனால் விரோத பாவங்கள் கூடுதலும், கால விரயமும் தானே மிச்சம்.


மற்ற மொழிகளின் வலைப் பூக்களைப் பார்த்தால் போர்னோ மற்ற வகையறாக்கள் ஒரு 3 விழுக்காடு இருக்கும். நம் மொழியினர் போல சாதிச் சாக்கடை நாறவில்லை!செம்மொழி அல்லவா!!


வலையில் எழுதும் முக்கால் வாசிப் பேர் நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள், இந்தியாவிலும், கடல் கடந்தும். வயதில் இளையவர்கள். படித்தவரிடம் நல்ல பண்பு இருக்கும் என்பது பொதுவான ஒரு நம்பிக்கை. இன்றைய பதிவுகளைப் பார்த்தால் நம்பிக்கை பொய்யோ எனப் படுகிறது.


ஸ்ரீனி


Copyright:thinnai.com

பின் குறிப்பு:

திண்ணை 29 மார்ச் 2007 இதழில் ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு - தமிழ் வலைப்பூக்களின் பரிணாமம்" என்ற தலைப்பில் வந்த ஸ்ரீனியின் கட்டுரை இது. அதை இங்கே மீள் பதிப்பித்திருக்கிறேன்.

கட்டுரை ஆசிரியரின் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.

9 comments:

Anonymous said...

நல்ல காமெடியான பதிவு ஜடாயு....மேலும் நீங்கள் போட்டுள்ள இந்த காமெடி பதிவில் ஒரு உண்மையும் உள்ளது...அதான்...சாதி மதத்தை பற்றியே எல்லாரும் எழுதி வருகிறார்கள் என்று...

உங்களுக்கு செலக்டிவ் அம்னீசியா ஒன்னும் இல்லையே ? அல்லது நீங்கள் எழுதுவதெல்லாம் காமெடி பதிவு தான் என்ற முன்முடிவுக்கு வந்துவிட்டீர்களே..

நெடுநாளைக்கப்புறம் நன்றாக சிரிக்கவைத்த பதிவு...

ஜடாயு said...

செந்தழல் ரவி, யாருக்கு செலக்டிவ் அம்னீஷியா?

சாதீயம் பேசி நான் எழுதிய ஒரு பதிவைக் காட்டுங்கள் பார்போம்.

ஆம், நான் மதம் பற்றி கண்டிப்பாக எழுதியிருக்கிறேன். யோகம், ஆன்மிகம், சமயநெறிகள் பற்றி. மேலும், இந்துமதம், சமுதாயம், தத்துவங்கள் மீது சேறுவீசப் படும் போது அதை எதிர்த்து. சில சமயங்களில் கிறித்தவ, இஸ்லாமிய மதவெறியை எதிர்த்தும் எழுதி உள்ளேன்.

முக்கியமான விஷயம் என்ன என்றால்: இவை அனைத்தையும் *கருத்து* என்ற அளவில் தான் சொல்லி வந்துள்ளேன். சில தனிமனிதர்களை எதிர்த்தோ, அவமதித்தோ அதனால் பரபரப்பு ஏற்படுத்தியோ அல்ல. எதை எழுதினாலும், அதில் பண்பட்ட மொழியையே பயன்படுத்தியும் வந்துள்ளேன்.

இந்தக் கட்டுரையை மீண்டும் ஒருமுறை ஒழுங்காகப் படிக்கவும். அது என்ன சொல்ல வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கவம்.Just try.

Anonymous said...

சரி படிக்கிறேன்....

Anonymous said...

ஜடாயு இந்த கட்டுரையை வெளியிட்டதில் முரண்பாடு எதையும் நான் காணவில்லை.
சாதி, மதம் உள்ளிட்ட சமூக பிரசினைகள், விவாதங்களைப் பற்றியே எழுதக் கூடாது என்று அந்த "பாமர" என்ற பெயரில் எழுதப் பட்ட அறிவுபூர்வமான கட்டுரை சொல்ல வரவில்லை.

எதைப் பற்றியுமே ஆழமாக யோசிக்கத் தெரியாத செந்தழல் ரவிக்கு இப்படித் தோன்றியிருந்தால் அதற்கு ஜடாயு பொறுப்பல்ல!

// பாரதியார் பற்றி எழுதினால்,அதில் சாதி,தேசீயம் என்றால் அதில் சாதி,வால் மார்ட் பற்றிக் கூறினாலும் சாதி,திரை விமர்சனம் எழுதினால் கூட சாதி!எதைப் பற்றி கூறினாலும் அதில் சாதியை நுழைப்பதே தலையாயமாகி விட்டது //

இது தானே ஐயா பிரசினை! முந்தைய பதிவில் பூங்காவை இந்திய தேசிய விரோதம் என்ற சரியான கண்ணோட்டத்தில் ஜடாயு கண்டித்தார். இடதுசாரி சிந்தனை உள்ளவராக அறியப்படும் ரவி சீனிவாசும் இதையே தான் கூறுகிறார்.

ஆனால் அந்த கருத்தை விட்டு விட்டு மறுபடி மறுபடி அதே சாதி ரீதியான கும்மாளம் தானே இங்கே நடக்கிறது?

Anonymous said...

//உங்களுக்கு செலக்டிவ் அம்னீசியா ஒன்னும் இல்லையே ? //

அது செலக்டிவ் அம்னீசியா இல்லை வெறும் அம்னீசியா தான். ஜெயலலிதா அத்வானிக்கு எதிராக நக்கலாக பயன் படுத்திய வார்த்தை "செலக்டிவ் அம்னீசியா". அதையே இப்போது எல்லோரும் பயன் படுத்துகிறார்கள்

உண்மைத்தமிழன் said...

அன்பிற்கிணிய சகோதரர் ஜடாயு அவர்களே.. நான் இன்றைக்குத்தான், சற்று முன்தான் தமிழ்மணம் வாயிலாக http://eyekans.blogspot.com/2007/03/blog-post.html என்ற வலைப்பதிவிற்குச் சென்றேன். அங்கேதான் நீங்கள் பூங்கா இதழை விமர்சித்து எழுதியிருப்பதாகவும் அதற்குத்தான் திரு.கண்ஸ் அவர்கள் இந்தப் பதிவில் தன் கண்டனத்தைத் தெரிவித்திருப்பதாகவும் படித்துப் பார்த்ததில் அறிந்து கொண்டேன். சரி.. அப்படி என்னதான் திரு.ஜடாயுவாகிய நீங்கள் பூங்கா இதழை எழுதியிருக்கிறீர்கள் என்பதை அறிவதற்காக உங்களது தளத்திற்குள் நுழைந்தேன். நீங்கள் எழுதியவற்றையும் படித்தேன். அப்படியே மறுமொழிகளையும் படித்தபொழுது திக்கென்றாகிவிட்டது. ஏனெனில் உண்மைத்தமிழன் என்கிற என்னுடைய பெயரில் யாரோ ஒருவர் உங்களுடைய அனைத்துக் கருத்துக்களும் சரியானவைதான் என்பதைப் போல் பின்னூட்டமிட்டுள்ளார். இது எனக்குக் குழப்பத்தத்தைத் தருகிறது. நான் கடந்த மாதம் 23ம் தேதிதான் எனது வலைப்பதிவைத் துவக்கினேன். அன்றிலிருந்து என் கண்ணுக்குப் படும் அனைத்து வலைத்தளங்களுக்குள் சென்று எனக்குப் பிடித்திருக்கும் சிலவற்றுக்கு உண்மைத்தமிழன் என்ற பெயரில்தான் பின்னூட்டமிட்டு வருகிறேன். நான் நிச்சயமாக உங்களது தளத்திற்குள் வரவில்லை. இந்த பின்னூட்டத்தையும் இடவில்லை. வேறு யாரும் இதற்கு முன்பாக உண்மைத் தமிழன் என்ற பெயரை பயன்படுத்தவில்லையாயின்.. இந்த எனது பின்னூட்டம் எனது பெயரில் தவறாக யாரோ ஒருவரால் என் பெயரில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தப் போடப்பட்டுள்ளது என்பது உண்மையாகும். இந்த என்னுடைய உண்மையான பின்னூட்டத்தை அனுமதித்தீர்களானால் ஏற்கெனவே அனாதைப் பயல் என்று பெயரெடுத்திருக்கும் நான் அடிவாங்காமல் ஏப்ரல் 22ம் தேதி வலைப்பதிவர் கூட்டத்திற்குச் சென்றுவிட்டு வர முடியும்.. நன்றி..

ஜடாயு said...

திண்ணை (ஏப்ரல் 5, 2007) இதழில் வந்துள்ள திரு. ஸ்ரீனியின் கடிதம்:

http://www.thinnai.com/?module=displaystory&story_id=80704053&format=html
----------
கடிதம்
ஸ்ரீனி

திரு.ஜடாயுவிற்கு நன்றி!!

தமிழ் வலைப் பூக்கள் பற்றிய என்னுடைய திண்ணைக் கட்டுரையை ஜடாயு அவர்கள் தன் வலைப்பூவில் போட்டாலும் போட்டார்,எனக்கு பல மின் மடல்கள்.ஒரு சில பாராட்டியும்,சில மிக நாகரீக(!?)மாகவும் வந்தன.கவனிக்கவும்,என்னுடைய இந்த ஒரு கட்டுரையோடு மட்டும்தான் ஜடாயு அவர்கள் தான் ஒத்துப் போவதாக கூறியுள்ளார்.

ஒரு பெண் பதிவர் கேட்கிறார்..ஏன் நாங்க எல்லாம் இப்பவும்தானே எழுதுகிறோம்!பல நன்றாக எழுதிய,எழுதக் கூடிய பெண் பதிவர்கள் இன்று பதிவதில்லை.இதுதான் நான் சொல்லியது.நான் எழுதுகிறேனே,பயப்படவில்லையே என்றால் என்ன சொல்வது!வாழ்த்துக்கள்!பலர் இன்று(இதில் ஆண் பதிவர்களும் உண்டு)எழுதாமல் இருப்பது பயத்தால் அல்ல.ஆபாசம் கண்ட அருவெறுப்பினால்!

ஒன்று புரிந்தது.ஜடாயு அவர்கள் என் கருத்துடன்(இதில் மட்டும்) ஒப்பியதால்,அவர் எழுத்திற்கு எதிர் வினையாடுபவர்கள் என்னையும் தங்கள் லிஸ்டில் போட்டு விட்டனர்.! என் கட்டுரை என் ஆதங்கத்தின் வெளிப்பாடு!

என்னையும் பிரபலமாக்கிய(!??) ஜடாயு அவர்களுக்கு

மறுபடியும் என் நன்றி!

ஸ்ரீனி
--------------

ஜடாயு said...

// எனக்கு பல மின் மடல்கள்.ஒரு சில பாராட்டியும்,சில மிக நாகரீக(!?)மாகவும் வந்தன.கவனிக்கவும்,என்னுடைய இந்த ஒரு கட்டுரையோடு மட்டும்தான் ஜடாயு அவர்கள் தான் ஒத்துப் போவதாக கூறியுள்ளார். //

பாருங்கள், தமிழ்ப் பதிவுகளில் பெரும்பாலும் என்ன எழுதுகிறார்கள் என்பதை விட யார் எழுதுகிறார்கள், யார் யாரை "ஆதரிக்கிறார்கள்" என்பது தான் முக்கியம். எல்லாருக்கும் முத்திரை உள்ளது, பெயரிட்டு அழைத்தல் உண்டு. பெரும்பாலும் எந்தக் கருத்துப் பரிமாற்றமும் இல்லாமல் "ஆகா தலீவா, பின்னிட்டீங்க".. "வந்தேறி நாயே.." போன்ற வழக்குகள் தான் அதிகம் புழங்கும்.

ஒவ்வொரு பதிவருக்கும் இவர்கள் இப்படித் தான் எழுதுவார்கள், எழுத வேண்டும் (!!) என்பதாக எழுதப் படாத விதியும் உண்டு. எல்லாருக்கும் புரோக்ராம் செய்யப் பட்ட மூளை உள்ளது என்று பகுத்தறிவை "நம்பும்" பெரும்பான்மைப் பதிவர்கள் நினைக்கிறார்கள் போலிருக்கிறது. இத்தகைய "கல்ட்" மனோபாவத்தை நீங்கள் கட்டுரையிலேயே குறிப்பிட்டது போன்றது மாதிரியான வலைத்திரட்டிகள் தான் வளர்க்கின்றன.

திராவிட அரசியலின் எல்லா தாக்கங்களும், அம்சங்களும் நிறைந்திருப்பது தான் தமிழ் வலைத் தளங்களின் அடையாளம், அழகு?!?!

// என்னையும் பிரபலமாக்கிய(!??) ஜடாயு அவர்களுக்கு

மறுபடியும் என் நன்றி!

ஸ்ரீனி //

மிக்க நன்றி ஸ்ரீனி.

வடுவூர் குமார் said...

பலர் இன்று(இதில் ஆண் பதிவர்களும் உண்டு)எழுதாமல் இருப்பது பயத்தால் அல்ல.ஆபாசம் கண்ட அருவெறுப்பினால்!

நூற்றுக்கு நூறு சரி.