தமிழர் திருமகன் இராமன்
இராமசேது பற்றிய விவாதத்தின் மத்தியில், இராமகாதையையும், இராமனையும் பற்றிய தமிழக முதல்வரது இழிமொழிகளுக்கு நாடு தழுவிய எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. தமிழகத்திலும் மிக உறுதியான எதிர்ப்பு பதிவு செய்யப் பட்டிருக்கின்றது. பல ஆங்கில, தமிழ் இதழ்களும், ஊடகங்களும் முதல்வரின் பேச்சை வன்மையாகக் கண்டித்திருக்கின்றன. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அஇஅதிமுக மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தி முடித்துள்ளது. ஊட்டியில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தலைமையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் “புண்படுத்தாதே புண்படுத்தாதே, இந்துக்களின் உணர்வைப் புண்படுத்தாதே”, “மமதை பிடித்த கருணாநிதியே, மன்னிப்புக் கேள், மன்னிப்புக் கேள்” என்ற கோஷங்கள் எழுந்து விண்ணை முட்டின. பாஜக, மதிமுக, தேமுதிக, சரத்குமாருடைய புதிய கட்சி இவையும் முதல்வரின் அருவருக்கத் தக்க பேச்சைக் கண்டிருத்திருக்கின்றன. ஆளும் கூட்டணியில் உள்ள, இந்து உணர்வுகளை ஓரளவு மதிப்பவை என்று எண்ணப் பட்ட பாமக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள், கூட்டணி (அ)தர்மம் கருதியோ என்னவோ, முதல்வரின் இந்த அப்பட்டமான இந்து விரோதப் போக்கைக் கண்டிக்காமல் இருந்து பெரும் தவறிழைக்கின்றன.
இந்த சூழலில், அறிவுலகத்தால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு விட்ட, வெறுப்பியலில் திளைத்த பழைய ஆரிய-திராவிட இனவாதத்தை உயிர்ப்பித்து, இந்தப் பிரசினையை விமரிசிக்கும் விஷமத் தனமான போக்கும் ஊடாகத் தென்படுகிறது. “ராமர் வழிபாடு என்பது தமிழ் நாட்டில் இல்லாத ஒன்று. தெற்கே ராமரை ஆரிய மன்னர் என்று தான் தமிழர்கள் பார்த்து வந்திருக்கிறார்கள்” என்ற அப்பட்டமான பொய்யை என்.டி.டி.வி, சி.என்.என் ஆங்கிலத் தொலைக்காட்சிகளின் சென்னை நிருபர்கள் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒரு என்.டி.டி.வி கலந்துரையாடலில் இந்த அபாண்டத்தைக் கேட்கச் சகியாத பேராசிரியர் நந்திதா கிருஷ்ணா நடுவில் பாய்ந்து, “என்ன கதைக்கிறார் உங்க நிருபர், தமிழ் நாட்டில் ஊருக்கு ஊர் ராமர், அனுமார் கோயில்கள் இருக்கிறதே கண்ணுக்குத் தெரியவில்லையா?” என்று வெடிக்கும் நிலைமை ஏற்பட்டது.
எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (வன்னிய சத்திரியர் என்று தமிழக மக்களில் பெரும்பாலர் கருதும்) இராமர் “பிராமணர் அல்லாதவர்களான, தமிழர்களின் பார்வையில்” மிக எதிர்மறையாகவே எப்போதும் கருதப் படுவதாக, பழைய திராவிட இயக்க அபத்தங்களை ஆங்கில இதழ்களில் மறுசுழற்சி செய்யத் தொடங்கியிருக்கிறார் [1]. இவற்றுக்குச் சிகரம் வைத்தாற்போல இந்த வார ஜூனியர் விகடனில் திருமாவளவன் 'சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த இராவணனை’ போற்றுவதாகத் தெரிவிக்கிறார்.
கவிச்சக்கரவர்த்தி கம்பன் படைத்த தமிழின் ஒப்புயர்வற்ற இலக்கியமான கம்பராமாயணம் ஒன்று போதாதா, இராமன் தமிழர் போற்றும் தெய்வம் என்று நிறுவுவதற்கு? தமிழர் சமயத்தின் இரு கண்கள் சைவமும், வைணவமும். அதில் ஒன்றான வைணவத்தின் பன்னிரு ஆழ்வார்களும் தெய்வமாக இராமனைப் போற்றுகிறார்களே, அது போதாதா? ஆனால் விதி வலியது. ஈவேரா காலத்திலிருந்து, அப்பேர்ப்பட்ட கம்பனுக்கே ஆரியஅடிவருடி, மனுவாதி போன்ற முத்திரைகள் இந்த அறிவீனர்களால் குத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆழ்வார்கள் எம்மாத்திரம்?
ஆதாரமில்லாத இத்தகைய உளறல்கள் ஊடகங்களின் மூலம் தொடர்ந்து பரப்பப் படுவதால், உண்மையை உரக்க உரைப்பது மிக அவசியமாகிறது, ‘’புலிநகக் கொன்றை’ ஆசிரியரும், மார்க்சிய சார்புடையவராகக் கருதப் படும் அறிஞருமான பி.ஏ.கிருஷ்ணன் ‘பயனியர்’ இதழில் எழுதியுள்ள “Karunanidhi wrong, Ram an ancient Tamil icon” என்ற அருமையான ஆங்கிலக் கட்டுரையில் [2] சங்க இலக்கியம் தொட்டு பண்டைத் தமிழரின் போற்றுதலுக்குரிய தெய்வமாக இராமன் இருந்து வந்ததற்கான ஆதாரங்களை அளிக்கிறார். அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள “சிலப்பதிகாரம் தெரியாத கருணாநிதி” என்ற பதிவில் [3] “கடுந்தெறல் இராமன்”, “வெல்போர் இராமன்” என்று இராமன் சங்கப் பாடல்களில் போற்றப் படுவதையும், சமண முனிவரான இளங்கோவடிகள் தனது காப்பியத்தில் திருமாலின் அவதாரமாக இராமனைப் பாடுவதையும் மிக அழகாக எடுத்துக் கூறுகிறார்.
சங்ககால பாமர மக்களின் வழக்கிலே கூட இராமாயணம் என்ற இதிகாசம் போற்றுதலுக்குரிய காவியமாக மட்டுமன்றி, உவமைகளைச் சுட்டும்போது கூட பண்டு நிகழ்ந்த சான்றுகளாய்க் கையாளும் வண்ணம் அமைந்திருப்பதை இந்த இரு கட்டுரைகளும் குறிப்பிடுகின்றன. வேறு சிலவற்றைப் பார்ப்போம்.
மணிமேகலையில் இராமாயணம்:
கம்பராமாயணத்திற்கு 6-7 நூற்றாண்டுகள் முற்பட்ட பௌத்த காவியமான மணிமேகலையில் ராமாயணச் செய்திகள் சான்றுகளாகவே அளிக்கப் பட்டிருக்கின்றன.
'நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்
(உலக அறவி புக்க காதை, 10-20)
காயசண்டிகை கூறினாள் - “நெடியோனாகிய திருமால் இராமனாக மண்ணில் அவதாரம் புரிந்து, அவன் அடங்காத பெரிய கடலை அடைத்த போது, குரங்குகள் பெயர்த்துக் கொண்டு வந்து எறிந்த பெரிய பெரிய மலைகள் எல்லாம் கடலின் வயிற்றில் சென்று மறைந்தது போல, இந்த அடங்காப் பசியை நிரப்ப இடும் மலை மலையான உணவு எல்லாம் என் வயிற்றின் ஆழத்தில் சென்று மறைந்து விடுகிறது”.
இந்த வரிகளில் பல செய்திகள் அடங்கியுள்ளன - ராமன் திருமாலின் அவதாரம். அவனது ஆணையில் வானரர்கள் கடலை அடைத்து அணை கட்டியது. மேலும், இந்த வரலாறு உவமையாகக் கூறப் படும் அளவுக்கு பிரசித்தி பெற்றிருந்தது.
இதே காப்பியத்தில் பிறிதோரிடத்தில், வாத விவாதத்தில், “ராமன் வென்றால் என்றால் மாண்பில்லாத ராவணன் தோற்றான் என்று தானே அர்த்தம்?” என்று அடிப்படையான தர்க்கமாகவே இராமகாதைச் சான்று வைக்கப்படுகிறது, அதுவும் ஒரு புத்தமதம் சார்ந்த புலவரால் என்றால் அது பண்டைத் தமிழகத்தில் எவ்வளவு அறியப் பட்ட விஷயமாக இருக்க வேண்டும்!
"மீட்சி என்பது "இராமன் வென்றான்" என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்
உள்ள நெறி என்பது "நாராசத் திரிவில்
கொள்ளத் தகுவது காந்தம்" எனக் கூறல்"
(சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை, 50-60)
இந்த வரிகளில் “மாட்சி இல் இராவணன்” என்று இராவணன் உரைக்கப் படுவதையும் காண்க.
சைவத் திருமுறைகளில் இராமாயணம்:
சைவம் தழைக்கப் பாடிய சமயக் குரவர்களது பாடல்களிலும் இராமாயணம் இருக்கிறது.
திருநாவுக்கரசர் இராமன் கட்டிய சேதுபந்தனத்தைக் குறிப்பிடும் பாடல் -
"செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ்
சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப்
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற
போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ”
(திருநாவுக்கரசர் தேவாரம், திருவலம்புறப்பதிகம்)
திருஇராமேச்சுரம் என்று வழங்கும் ராமேஸ்வரம் திருத்தலத்தில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் பாடிய பதிகங்களில் சில பாடல்கள் -
"பலவுநாள் தீமை செய்து பார்தன் மேல் குழுமி வந்து
கொலைவிலார் கொடியராய அரக்கரைக் கொன்று வீழ்த்த
சிலையினான் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்
தலையினால் வணங்குவார்கள் தாழ்வராம் தவம் அதாமே
[சிலையினான் - வில்லை உடைய இராமன்]
வன்கண்ணர் வாளரக்கர் வாழ்வினை ஒன்றறியார்
புன்கண்ணர் ஆகிநின்று போர்கள் செய்தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்
தங்கணால் எய்த வல்லார் தாழ்வராம் தலைவன் பாலே"
(திருநாவுக்கரசர் தேவாரம், திருவிராமேச்சுரப் பதிகம்)
தேவியை வவ்விய தென்னிலங்கை யரையன் திறல் வாட்டி
ஏவியல் வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச் சுரத்தாரை
[தேவியை வவ்விய - சீதையைக் கவர்ந்து சென்ற]
(திருஞானசம்பந்தர் தேவாரம், 3ம் திருமுறை, 101-10)
இந்த அனைத்துப் பாடல்களும், தருமத்தின் நாயகனான இராமனைத் திருமாலின் அவதாரமாகவே போற்றுகின்றன. சிவபக்தன் ஆயினும் அதர்ம வழியில் சென்ற இராவணனையும், அவன் கூட்டத்தாரையும் கொடிய அரக்கர் என்றே பல்வேறு அடைமொழிகளுடன் குறிப்பிடுகின்றன.
இராவணன் கயிலாய மலையைப் பெயர்க்கையில், சிவபிரான் தம் கால் விரலால் அதை அழுத்தியதைக் கூறுகையில்,
“அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானிரே”
(திருஞானசம்பந்தர் தேவாரம், திருமறைக்காட்டுப் பதிகம்)
என்றே சம்பந்தர் பாடுவார்.
மேலும், இடர்கள் களையப் பாடிய கோளறு பதிகத்தில் ‘ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்றனோடும் இடரான வந்து நலியா’ என்கையில் இராவணனை தீய சக்தியின் குறியீடாகவும், இடராகவும் உருவகித்து, அத்தகைய தீமைகளும் அணுகாதிருக்கும் என்று சம்பந்தர் உரைக்கிறார்.
சைவத் திருமுறைகள் இப்படி இருக்கையில், தங்களை சைவர்கள் என்று அழைத்துக் கொள்ளும் சிலர், நாத்திகவாத, தமிழ்ப் பண்பாட்டையே இழித்துரைக்கின்ற ஈவேராத் தனமான திராவிட சித்தரிப்புக்களின் வழியே இராமாயணத்தை நோக்க முற்படுவதை காலத்தின் கோலம் என்றும் நகைமுரண் என்றும் தான் கூறவேண்டும்.
திருப்புகழில் ராமாயணம்:
முருக பக்தி மரபில் முதன்மை பெறும் திருப்புகழ் உள்ளிட்ட அருணகிரிநாதரின் எல்லா நூல்களிலும் இராமபிரானைப் பற்றி நூற்றுக் கணக்கான குறிப்புகள் உள்ளன. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தனது பல இராமாயணத் தொடர் சொற்பொழிவுகளில் இவற்றை எடுத்துக் காட்டியிருக்கின்றார்.
கம்பனும், வால்மீகியும், ஏனையோரும் குறிப்பிடாதவற்றையும் அருணகிரியார் தமது பாடல்களில் சொல்லியுள்ளார். உதாரணமாக, கோசலை ராமனைக் கொஞ்சும் அழகு -
“எந்தை வருக ரகுநா யகவருக
மைந்த வருக மகனே யினிவருக
என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம
இங்கு வருக அரசே வருகமுலை
யுண்க வருக மலர்சூ டிடவருக
என்று பா¢வி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்”
(“தொந்தி சரிய” என்று தொடங்கும் திருச்செந்தூர் திருப்புகழ்)
இதற்கு வாரியார் சுவாமிகள் விளக்கம் கூறுகையில் “குடும்பத்தை வாழ்விப்பவன் மகன். தன் சுற்றம், குலம், நாடு எல்லாவற்றையும் வாழ்விப்பன் மைந்தன், அதனால் இந்த இரண்டு பெயர்களையுமே கூறி கோசலை இராமரை அழைக்கிறாள்” என்று அழகாகக் குறிப்பிடுவார். இன்னொரு பாடலில், சானகியை அபகரித்துச் சென்ற இராவணனை “திருட்டு ராக்கதன்” என்றே குறிப்பிடுகிறார்.
“சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய்
திருட்டு ராக்கத னுடலது துணிசெய்து
சயத்த யோத்தியில் வருபவ னரிதிரு ...... மருமகப் பரிவோனே”
(‘பழிப்பர் வாழ்த்துவர்’ எனத் தொடங்கும் மதுரைத் திருப்புகழ்)
இராமபக்திக்கு உரமூட்டிய தமிழகம்:
“வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்” என்று புகழ்பெற்ற நம்மாழ்வார் திருவாய்மொழியில் “கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ? என்று இராமபிரானுக்கு வைணவ மரபில் மிக உயர்ந்த இடத்தை அளித்திருக்கின்றார்.
கண்ணனைக் குழந்தையாக வரித்து வழிபடும் மரபு பிரசித்தமானது. இராமனைக் குழந்தையாகப் பாவித்துத் தாலாட்டுப் பாடிய முதல் பக்தர் குலசேகராழ்வார் தான்.
“மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!”
என்று தொடங்கி ராமாயணம் முழுவதையும் சொல்லித் தாலாட்டுகிறார் ஆழ்வார். இதன் நீட்சியாகவே நந்தலாலா போன்று “ராம லாலா” என்று குழந்தை ராமனின் உருவமும், வழிபாடும் உருவாயிற்று. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் இஷ்டதெய்வமாகக் குழந்தை ராமனை ஆராதித்திருக்கிறார். அயோத்தி ராமஜன்மஸ்தானம் கோயிலில் இருப்பதும் இந்தக் குழந்தைத் திருவுருவம் தான்.
தென் தமிழ் நாட்டிலிருந்து காசிக்குச் சென்று அங்கே சைவ மடம் அமைத்த குமரகுருபரர் கம்பனின் ராமாயணத்தை அங்கே பிரசாரம் செய்ததாகவும், துளசிதாசர் அதைக் கேள்வியுற்றதனாலேயே தமது ராமசரித்மானஸ் என்ற புகழ்பெற்ற ஹிந்தி ராமாயண நூலில் கம்பனின் ராமகாதைப் படி சில இடங்களை அமைத்திருப்பதாகவும் ஒரு வழக்கு உள்ளதாக காசி மடத்துடன் தொடர்புடைய நண்பர் ஒருவர் தெரிவிக்கிறார்.
இன்று பாரதம் முழுவதும் வழங்கும் எல்லா ராமாயணக் கதையாடல்களிலும் சிறப்பிடம் பெறும் ‘அணில் இராமருக்கு பாலம் கட்ட உதவிய” பிரசங்கம், தமிழகத்தில் உயிர்த்ததே ஆகும் என்றும் இது பற்றிய முதல் இலக்கியக் குறிப்பு கீழ்க்கண்ட திவ்வியப் பிரபந்த பாசுரம் தான் என்றும் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ஒரு ஆங்கிலப் பதிவு [4] குறிப்பிடுகிறது -
“குரங்குகள் மலையைத் தூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டோடி
தரங்க நீரடைக்கலுற்ற சலமிலா அணிலும் போலேன்”
(தொண்டரடிப் பொடியாழ்வார், திருமாலை 27)
ராமனுடைய முதன்மையான பெயராகிய புருஷோத்தமன் (புருஷ+உத்தமன்) என்பதன் தமிழ் வடிவமே பெருமாள் (பெரும்+ஆள்). வைணவர்கள் அனைவரும் கடவுளைக் குறிக்கையில் சொல்லும் முதன்மையான திருநாமம் ‘பெருமாள்’ என்பது தான்!
தென் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக-ஆன்மிக விடுதலைக் குரலாக எழுந்த அவதார புருஷர் அய்யா வைகுண்டர் இராமாயண வாசிப்பை தம்முடைய பக்தர்களுக்கு கட்டாயமாக்கினார். அதற்காகவே அருள் நூலில் இராம சரிதை இடம் பெற செய்து இரண்டாம் நாள் திருஏடு வாசிப்பு இராவண வதமாக அமைத்தார். கலிகால சாதியம், வெள்ளையர் காலனியாதிக்கம் மற்றும் மதமாற்ற கொடுமைகளாக உருவாகி வந்திருக்கும் இராவணன் என்ற தீய சக்தி அய்யாவின் அன்பு வழி இயக்கத்தால் அழிக்கப்படும் என்பதும் அதற்காக அனுமனைப் போன்ற தொண்டர்கள் தோன்றி தெய்வீகப் பணி செய்வார்கள் என்பதும் இன்றுவரை அய்யா வழி பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இப்படி இராமகாதை மற்றும் இராமபக்தியின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் தமிழகம் பெரும் பங்கு ஆற்றி வந்திருக்கிறது.
கலைகள் போற்றும் காகுத்தன்:
10-ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தைச் சேர்ந்த இராமன், இலட்சுமணன், சீதை, அனுமன் ஆகிய மூர்த்திகளின் அழகு கொஞ்சும் செப்புத் திருமேனிகள் திருவாரூருக்கு அருகில் உள்ள பருத்தியூர் என்னும் ஊரில் கண்டெடுக்கப் பட்டவை.
ஒய்யாரமாக வில்லைப் பிடித்திருக்கும் ராமனின் கம்பீர வடிவமானது நடராஜ வடிவம் புகழ்பெறத் தொடங்கியிருந்த காலம் முதலே தமிழக சிற்பிகளின் உள்ளத்தை ஆட்கொண்டது இவை என்று உணர்த்துகின்றன.
தஞ்சைத் தரணியில் பிறந்த சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர், இன்றளவும் பல கச்சேரி மேடைகளிலும் இடம் பெறும் இராமநாடகக் கீர்த்தனைகளை இயற்றிய அருணாசலக் கவிராயர் ஆகியோர் தென்னகத்தின் தலைசிறந்த ராமபக்தர்களில் அடங்குவர்.
தெருக்கூத்து, பாவைக்கூத்து, வில்லுப் பாட்டு முதலிய கலைவடிவங்கள் உருவாகும்போது அவற்றின் முதல் கூறுபொருளாக அமைந்தவை ராமாயண, மகாபாரத கதைகள் தான்.
எனவே, செவ்வியல் இலக்கியம் மட்டுமின்றி, சிற்பம், நடனம், இசை, நாடகம், நாட்டுப் புறக் கலைகள் ஆகிய பல்வேறு தமிழகக் கலைகளிலும் இராமனும், சீதையும் அவர்கள் சரிதமும் வெகுகாலம் தொட்டு நீக்கமற நிறைந்திருக்கின்றன.
தமிழர் திருமகன் இராமன்:
திராவிட இயக்கம் சார்ந்த சில தமிழ் ஆர்வலர்களாலும் மதிக்கப் படும் பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் ராம காதையை ஆரிய-திராவிட நோக்கில் பார்த்தது என்பது ஒரு குறுகிய காலத்திற்கு தமிழ்ச் சமுதாயத்தில் உண்டான, துரதிர்ஷ்டவசமான போக்கு என்றும் இது அந்த மாபெரும் இதிகாசத்தின் அடிப்படைகள் பற்றிய தவறான புரிதல் ஆகும் என்றும் குறிப்பிடுகிறார். [5]
“..I find it very sad that anyone would want to burn Kamban's Ramayana. Kamban was, simply, the greatest poet India has produced and one greatest poets of the world. He is demonstrably greater than Kalidasa. Unfortunately, for a short period it became fashionable to read his epic in cultural terms -- Aryan vs. Dravidian. This, in my view, is a misreading of the fundamental premise of the epic: the opposition between two views of life, one epitomized by Rama, the other by Ravana. What makes Kamban so great is that he presents both views in extremely convincing and beautiful terms -- Ravana is the greatest of all kings and symbolizes this world, Rama symbolizes another dimension. And don't forget, Ravana is a Brahmin.”
திராவிட இயக்கத்தினர் இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்ற தொனியில் வெறியூட்டி வந்தபோது, தென் தமிழகத்தில் அதை முன்னின்று எதிர்த்தவர் இஸ்லாமியரான சதாவதானி செய்குத் தம்பி பாவலர். கம்பர் அடிப்பொடி சா.கணேசன் இராமாயணம் என்ற மாபெரும் பொக்கிஷத்தைக் காக்க கம்பன் கழகம் தொடங்கியதன் பின் வந்த காலகட்டங்களில் இராமகாதையில் தோய்ந்து அதைப் பற்றியே தன் வாழ்நாளின் இறுதிவரை பேசியும் எழுதியும் வந்தவர் நீதிபதி மு.மு.இஸ்மாயில்.
எனவே சங்ககாலத் தமிழர் தொடங்கி, சைவ, வைணவ, சமண, பௌத்த தமிழர் வரை அனைவரும் இராமனைத் “தலைவன், திருமகன், திருமால், பெருமாள், தெய்வம்” என்றே கூறி வந்திருக்கின்றனர். இராவணனை “அரக்கன், திருட்டு ராக்கதன்” என்று அழைத்திருக்கின்றனரே அன்றி திராவிட மன்னன் என்றோ, வீரன் என்றோ, மதிப்பிற்குரியவன் என்றோ கூட எந்த மானமுள்ள தமிழனும் குறிப்பிடவில்லை.
'செக்குலர்' சங்கப்புலவனும், தமிழின் அனைத்து சமயப் பெருந்தகைகளும் ஏற்றுக் கொள்ளாத ஓர் அரக்கனை இங்கே தமிழ்ப் பாதுகாவலர்களாகக் கூறிக் கொள்ளும் பொய்ப்பிண்டங்கள் தங்கள் பிரதிநிதியாகச் சித்தரிப்பதும், இராமபிரானை இழித்துரைப்பதும் காலத்தின் கொடுமையன்றி வேறென்ன!
(பி.கு: இதில் கூறப்பட்டுள்ள சில தகவல்களை அளித்த திரு, ஹரி கிருஷ்ணன் மற்றும் பெயர் குறிப்பிடப் பட விரும்பாத இன்னொரு தமிழறிஞர் இவர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றிகள்).
இந்தக் கட்டுரையை வெளியிட்ட திண்ணை இதழுக்கு நன்றிகள்.
24 comments:
"ஆரியருக்கும் திராவிடருக்கும் இடையே நிகழ்ந்த போர்தான் இராமாயணம் என்பதாக ஒரு வாய்மையைப் புனைந்துரைத்து மகிழ்வர் சிலர். இதன் உண்மை அறியாது மயங்கி அறிவு சான்ற சிலரும் இவ்வாதத்தில் ஈடுபடுவது வருந்தத் தக்கது.
இதன் உண்மைதான் என்ன?
இராவணன் தமிழனே அல்லன். அவன் ஓர் அரக்கன். தமிழனுக்குப் பெயர் கிள்ளி, வளவன், நெடுஞ்செழியன் என்றிப்படி அமையுமே அன்றி, ரோதனம் செய்தவன் என்ற பொருளைத் தரும் இராவணன் என்றோ குடம் போன்ற காதினன் என்ற பொருளைத் தரும் கும்பகர்ணன் என்றோ அமைதற்கில்லை.
இனி, இராவணன் தங்கையான சூர்ப்பநகை என்ற பெயராவது தமிழ்க்குலப் பெண்டிர் பெயராகுமா என நோக்குவோம்.
முறம் போன்ற நகங்களை உடையவள் என்பதே சூர்ப்பநகை என்பதன் பொருள்.
அப்படிப்பட்டவள்தான் தன் கணவனைத் தொடுவாளாயின் எத்துணை மென்மையாக இருக்கும்?
இயல்பாகவே நன்மையும் மென்மையும் உடைய தமிழ்க் குலத்தோர்க்கு இவ்வரக்கப் பெயர்கள் சற்றேனும் பொருந்துவனவன்று.
இம்மட்டன்றி, சூர்ப்பநகையின் கணவரது பெயர் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. காரணம் வாயிலும் வழங்க இயலாத அப்பெயர் 'வித்யுத்ஜிஹ்வா' என்பதே.
வித்தையினால் நாவுடன் யுத்தம் செய்தவன் என்பது அதற்குப் பொருள்.
இனி, தமிழில் சங்ககால இலக்கியங்களாவது இராவணன் தமிழன் என்ற செய்தியைப் பேசுகின்றனவா எனில் இல்லை.
புறநானூற்றுப் பாடலொன்று 'இராவணன் அரக்கன்' என்றே கூறுகிறது. தேவார திருவாசகங்களும் இராவணன் அரக்கன் என்று பலவிடங்களில் கூறுகின்றன. எனினும் காலத்தின் முற்பாடு குறித்துப் புறப்பாடலையே ஈண்டு எடுத்துக் காட்டுதல் சாலும்.
ஊன்பொது பசுங்குடையார் பாடலில் காணப்படும் அவ்வரிகள் இதோ:
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
(புறம் 378)
மேற்பாடலால் இராவணன் அரக்கனே என்பது சங்ககாலச் செய்தியானது கண்கூடு.
ஆகவே, இராவணன் தமிழனே என்பாரது கூற்று, சான்று ஏதுமில்லாப் பொய்படு புரையாதல் கண்டு தெளிக."
கிருபானந்த வாரியார்
புத்தகம்: கம்பன் கவிநயம். எழுதியவர் வாரியார். குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 2.
மொழிவழி ஆராய்ச்சிக் கட்டுரைத் தொடர் என்ற பெயரில் இராவணனை அரக்கன் என்றும் தமிழன் என்றும் இணையத்தில் ஏதேதோ எழுதுகின்றனர் பக்கம் பக்கமாக.
ஆனால் இராவணனது சிவ பக்தியினையும், சாமகான திறமையினையும் மறந்து அவனை இன்றைய திராவிட குஞ்சாக மாற்ற முயல்பவர்களைப் பார்த்தால் பரிதாபம்தான் மிஞ்சுகிறது.
அருமையான விளக்கம் அளித்துள்ளீர்கள் ஜடாயு. தமிழர் பண்பாட்டுக்கு பகுத்த்தறிவும் சுயமரியாதையும் இல்லாத திராவிட இயக்க அறிவிலிகளால் ஏற்பட்ட இழுக்கினை நீக்கிவிட்டீர்கள். தமிழன் எனும் முறையில் மனம் உங்கள் பதிவினை படித்து பெருமித உணர்வடைகிறது. மிக மிக நன்றி. இதனை ஆங்கிலப்படுத்தி ஒரு கட்டுரையாக எழுதிட தங்கள் அனுமதியை வேண்டுகிறேன்.
// இராவணன் தமிழனே என்பாரது கூற்று, சான்று ஏதுமில்லாப் பொய்படு புரையாதல் கண்டு தெளிக//
வாரியார் சுவாமிகளின் மேற்கோளைத் தந்திருக்கும் அனானி அவர்களுக்கு மிக்க நன்றி.
// முறம் போன்ற நகங்களை உடையவள் என்பதே சூர்ப்பநகை என்பதன் பொருள்.
அப்படிப்பட்டவள்தான் தன் கணவனைத் தொடுவாளாயின் எத்துணை மென்மையாக இருக்கும்? //
வாதத்திற்கு நடுவிலும் நகைச்சுவை இழையோடச் செய்வது வாரியாரின் சிறப்பு.
மிக்க நன்றி அரவிந்தன்.
// இதனை ஆங்கிலப்படுத்தி ஒரு கட்டுரையாக எழுதிட தங்கள் அனுமதியை வேண்டுகிறேன். //
தாராளமாக எழுதுங்கள். பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுடையது போன்று மேலும் பல கட்டுரைகள் இதுபற்றி ஆங்கிலத்தில் வரவேண்டும்.
ஜடாயு சார்,
இவர்களின் ஆரிய-திராவிட கூற்றை உண்மை என்றே வைத்தாலும் ராமாயணத்தில் ராவணன் ஒரு பிராமணன்தானே.அதனால்தானே அவனைக் கொன்ற பாவத்திற்கு ராமேசுவரத்தில் சத்திரியனான ராமர் பூசை சடங்குகள் நடத்தினார்.மஞ்சத்துண்டு தத்துவப்படி ராவணன் திராவிடப் பிராமணன் போலும்.
அன்புடன்
பொன்.பாண்டியன்
அன்புள்ள ஜடாயு அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி! திராவிடப் புரட்டர்களின் போலி இராவணப் பாசத்தைச் செருப்பால் அடித்தமாதிரி ஒரு பதிவு இது!
'தமிழர் என்றோர் இனமுண்டு,
தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்பார்கள்.
உண்மைதான். தமிழர்க்குரிய தனிக்குணமானதை உலகில் எந்த மொழி பேசும் குழுமத்திலும் காணவியலாது.
அது என்ன தெரியுமா?
'கடந்த மூவாயிரம் வருடங்களாக எம் மூதாதையர் முட்டாள்களாகவே இருந்து வருகிறார்கள்' என்று உலகில் எந்த மொழிக் குடும்பத்தாரும் கனவில் கூட நினைக்க மாட்டார்கள். ஆனால் இன்றைய மூளைச்சலவை செய்யப்பட்ட சோற்றாலடித்த முட்டாள் தமிழர் பெரும்பான்மை இப்படித்தான் நினைக்கிறது.
கம்பனை எரி, சேக்கிழாரைக் கொளுத்து, தொல்காப்பியனைத் தூரக்கிடாசு, ஏழைத்தமிழ்ப்புலவனை ஏளனம் செய், திருக்குறளை மலமென்று சொல் - என்று கடந்த நூறாண்டுகளாக இவர்கள் மண்டையை மரமாக்கியது வெறும் ஈவேரா என்ற தனிமனிதரில்லை. இந்தப் பெருந்திட்டத்தின் பின்னே சூத்திரதாரியாய் கண்ணுக்குத் தெரியாத கயிற்றை இழுப்பது கிறுத்துவ மிசிநரி. கண்டங்கள் தோறும் திட்டமிட்டுக் குறிபார்த்து ஒவ்வொரு இனமாக தங்கள் வேர் மீதே வெறுப்பு கொள்ளும் அளவுக்கு மனம் மாற்றி மதம் மாற்றுவதை ஒரு நுண்கலையாகவே மிசிநரி நிறுவனங்கள் வைத்திருக்கின்றன.
இன்றைய திகதியில் இன்றைய தலைமுறையில் மூலநூல்களைப் படிக்கும் எத்தனை தமிழர்களைப் பார்க்க முடியும்? இவர்கள் கற்பதெல்லாம் மூன்றாம்தர புரட்டு நூல்களையே.
மேலும் தமிழாசிரியர்களில் பலரும் இன்று கிறித்துவர்கள். மீதி இருப்போர் திராவிடக் குஞ்சுகள். இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் ஆன்மிகத்தையும் தமிழையும் திட்டமிட்டுப் பிரித்துத் தமிழினத்தின் ஆணிவேரினையே அறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது உங்களைப் போன்று ஒருவர் வந்து வெளிச்சம் போட்டுக் காட்டாவிட்டால் திருமாவளவன் சொல்வது போல் 'சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த இராவணனுக்கு' ரசிகர் மன்றம் அமைக்கவும் முற்படுவார்கள்.
ஆனால் ஒன்று. எத்தனை புரட்டர் வந்தாலும் தமிழெனும் இறைமொழி முருகன் காப்பது. அது வெற்றிவேலாய் வீரவேலாய் வீறு கொண்டு இவர்களை அழிக்கும்! இது அந்த முருகன் மீது ஆணை!
அன்புடன்,
அருட்பிரகாசம்
// இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் ஆன்மிகத்தையும் தமிழையும் திட்டமிட்டுப் பிரித்துத் தமிழினத்தின் ஆணிவேரினையே அறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.//
உண்மை அருட்பிரகாசம் அவர்களே.
// எத்தனை புரட்டர் வந்தாலும் தமிழெனும் இறைமொழி முருகன் காப்பது. அது வெற்றிவேலாய் வீரவேலாய் வீறு கொண்டு இவர்களை அழிக்கும்! //
உங்கள் சாபம் உண்மையாகட்டும். வீணரை வீழ்த்திய வீரவேல்
சூரனை வென்ற சுடர்வேல்
இந்தக் கயவர்களை மாய்க்கும்.
தெய்வத் தமிழ்ப் பண்பாடு அதன் உண்மையுருவில் சுடர்விட்டு மிளிரும்.
நல்ல பதிவு ஜடாயு.
யாராக இருந்தாலும் அடுத்தவர் நம்பிக்கை/உணர்வுகளில் தன் கருத்தை நுழைப்பது கொடுமை, அதுவும் ஒரு மாநிலத்தை வழிநடத்துபவர் செய்யும் போது அது விபரீதமாக போகக்கூடிய அபாயம் இருக்கிறது.
அற்புதமான கட்டுரை ஜடாயு.
நண்பர் அனந்த கிருஷ்ணன் (நீங்கள் மேற்கோள் காட்டும் பயனீர் கட்டுரை) அவர்களுடன் தங்கி ஆழ்வார் திருநகரியில் பல அரிய புத்தகங்களை எடுத்துக் காத்திருக்கிறோம் (தமிழ் மரபு அறக்கட்டளை).
தமிழ்ப் பக்தி இலக்கியங்கள் உலகப் பண்பாட்டிற்கு அளித்த கொடைஎனும் தலைப்பில் வருகிற பிப்ரவரியில் ஒரு கருத்தரங்கு ஏற்பாடாகி உள்ளது. இக்கட்டுரையை கொஞ்சம் மாற்றம் செய்து அங்கு வாசியுங்களேன்.
'கடந்த மூவாயிரம் வருடங்களாக எம் மூதாதையர் முட்டாள்களாகவே இருந்து வருகிறார்கள்' என்று உலகில் எந்த மொழிக் குடும்பத்தாரும் கனவில் கூட நினைக்க மாட்டார்கள். ஆனால் இன்றைய மூளைச்சலவை செய்யப்பட்ட சோற்றாலடித்த முட்டாள் தமிழர் பெரும்பான்மை இப்படித்தான் நினைக்கிறது.
Very true. Thanks Jatayu for this beautiful article.
Mani
Mirrored at: http://kalyan97.wordpress.com/2007/10/09/993/
http://jataayu.blogspot.com/2007/10/blog-post.html An outstanding monograph.The lie of the dravidianists is nailed. Sri Rama is mentioned -- aha, in Tamil secular literature -- yes, from Sangam days. It also rubbishes, so mellifluently, the propaganda that Rama is anti-Siva. Thevaram and Thiruasagam show Ravana as demon and Sri Rama as valliant hero. Mu Ka type of people should know that Ravana was a brahmana, a samskrta pandita and a worshipper of S'iva. Mu Ka should explain how Ravana becomes his and his followers' hero.
Arpudam. Nal vaazhttukkal. S'ubha kaamanaayen. Congratulations. My words fail. Namaskaram. kalyanaraman
This Article in beautiful Tamil is amazing in its scholarly depth.Tamilians and all Indians must read its translation to know their heritage also to know what kind of a bogus Kalaingar is Karunanidhi. Also the deep plot of Christian missionaries in dividing Hindus of the South and creating groupist hatred over the last several decades requires to be widely disseminated.
I request the writer of the Article to get in touch with us.
R.Venkatanarayanan
Secretary
Hindu Dharma Acharya Sabha
daps2322@gmail.com
மிக அழகாக எழுதப்பட்ட ஒரு கட்டுரை. வாழ்த்துக்கள். நான் இந்த விஶஶஶஷயம் பற்றி ஒரு ப்ளாக் தயாரித்து இருக்கிறேன். அதன் முகவரி
http://sundartheargumentative.blogspot.com/
தங்கள் கருத்துகள் எதிர்பார்க்கிரேன்
இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்:
கலித்தொகையிலும் இராவணன் அரக்கனே என்பதற்கான சான்று உண்டு.
இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல -
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை....
(கலித்தொகை, இரண்டாவது--குறிஞ்சிக் கலி; கபிலர் இயற்றியது; பாடல் 38)
ஐ இரு தலையின் அரக்கர் கோமான். பத்துத் தலைகளைக் கொண்டவனும், அரக்கர்களின் அரசனுமான இராவணன் கைலாச மலையைப் பெயர்க்க முயன்றதைப் போல இந்த யானை, இந்த வேங்கை மரத்ததை அடியோடு பெயர்க்க முயல்கிறது.
ராவண கோஷ்டிகள் மூச்சுபேச்சொடுங்கி பதிலே சொல்லாமல் பம்முகின்றனவே! இதுவே இராமபிரானின் அம்பினைப் போன்ற இந்தப்பதிவின் வெற்றி!
- இனமானத்தமிழன்
எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம்* எனக்கரசு என்னுடைவாணாள்*
அம்பினால் அரக்கர் வெருக்கொளநெருக்கி* அவருயிர்செகுத்த எம்அண்ணல்*
(என்னுடைய பெருமான், என்னுடைய தந்தை, என் உறவினன், என்னை
ஆள்பவன், என் உயிரானவன், எல்லா நேரங்களிலும், எல்லா வகையிலும் என்னை ரட்சிப்பவன், அம்பால் அசுரர்களை மாய்த்த என் கிலேச நாசன்)
என்றும்
பரதனும் தம்பி சத்ருக்கனனும்* இலக்குமனோடு மைதிலியும்*
இரவும் நன்பகலும் துதிசெய்ய நின்ற* இராவணாந்தகனை எம்மானை*
(தம்பிமார்களான பரதனும், சத்ருகனனும், இலக்குவனும், துணைவியான சீதாபிராட்டியும் சதா சர்வ காலமும் சிந்தையில் நிறுத்தி துதி செய்ய வேண்டி, அவர்கள் உடன் நின்ற ஸ்ரீராமனை, வலிமை வாய்ந்த இராவணனை வதம் செய்த ஒப்பில்லா எம்பெருமானை)
என்றும்
ஏனமுனாகி இருநிலமிடந்து* அன்றிணையடி இமையவர்வணங்க*
தானவனாகம் தரணியில்புரளத்* தடஞ்சிலைகுனித்த என்தலைவன்*
(வராஹ அவதாரமெடுத்து கடலின் ஆழத்தில் சிறை வைக்கப்பட்ட பூவுலகை மீட்டுக்
காத்தவனும், பின் ஸ்ரீராமனாக அவதரித்து, வானவர்கள் எல்லாம் வணங்கிப் போற்றும் வண்ணம், பலம் வாய்ந்த இராவணனையும் அசுர வம்சத்தையும் வில் கொண்டு மாய்த்தவன் ஆவான் என் தலைவன்.)
என்றும் திருமங்கையாழ்வாரால் போற்றி வணங்கப்பட்டவனும்,
சதுரமா மதிள்சூழ்* இலங்கைக்கு இறைவன் தலைபத்து-
உதிர வோட்டி,* ஓர் வெங்கணை* உய்த்தவன் ஓத வண்ணன்*
என்று திருப்பாணாழ்வாரை பக்தியால் உருக வைத்தவனும்
மலையதனால் அணைகட்டி* மதிளிலங்கை அழித்தவனே*
அலைகடலைக் கடைந்து* அமரர்க்கு அமுதருளிச் செய்தவனே*
கலைவலவர் தாம்வாழும்* கணபுரத்தென் கருமணியே*
சிலைவலவா சேவகனே* சீராம தாலேலோ
என்று குலசேகர மன்னனால் போற்றி சீராட்டப்பட்டவனும்
ஆன ஸ்ரீராமன் குறித்து பரப்பப்பட்ட புரட்டுக்களுக்கும், அவதூறுகளுக்கும், விளக்கமான இப்பதிவின் மூலம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளீர்கள், பாராட்டுக்கள்!
பொறுப்பான பதவியில் இருக்கும் ஒருவர், அனாவசியமாக, சிந்திக்காமல், சைலண்ட் மெஜாரிட்டியை புண்படுத்தும் விதமாக இராமபிரானை வசை பாடி விட்டு, அதை நியாயப்படுத்த வால்மீகியை துணைக்கழைத்தது பெரிய கொடுமை.
நமது தமிழ் கூறும் வலையுலகத்தில் (பலரும்) அதைக் கண்டிக்காவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் அதையும் பாராட்டி மகிழ்வது உச்சக்கட்ட கொடுமை!
எ.அ.பாலா
DEAR JADAYU,
IT IS NICE WRITTING.
Really wonderful work.
Thanks for writting our feelingd
thanks
regards
V.Narayanan
Bangalore
DEAR JADAYU,
IT IS NICE WRITTING.
Really wonderful work.
Thanks for writting our feelingd
thanks
regards
V.Narayanan
Bangalore
EA Bala:
As a Tamil SriVaishnavaite why were you keeping quite until one Jatayu came out with such a solid rebuttal? And why you guys are not openly condemning that moron, senile, sold out fellow Thathachari? Shame!
//EA Bala:
As a Tamil SriVaishnavaite why were you keeping quite until one Jatayu came out with such a solid rebuttal? And why you guys are not openly condemning that moron, senile, sold out fellow Thathachari? Shame!
//
My dear Anony,
I did not have the time / interest to do a posting by myself but I had published the interview by Sarath kumar in my blog. Pl. read the posting and my response to the comments made.
http://balaji_ammu.blogspot.com/2007/09/common-sense.html
Also, it is impossible (and not really worthwhile) to post a condemnation everytime something like this happens :(
Sometimes, you condemn, sometimes you ignore and keep silent! That's all.
"பொய்ப்பிண்டங்கள்" - திராவிட அற்பப் பதர்களுக்குச் சரியான வார்த்தை.
NDTV-யின் சென்னைப் பிரிவு யார் கையில் இருக்கிறது? அவர்களும் பொய்ப்பிண்டங்களே.
"Sometimes, you condemn, sometimes you ignore and keep silent! That's all."
So is it one such time to keep quite? அதுவும் இராமபிரானைப் பற்றி இத்தகைய அவதூறுகளைச் சகித்துக் கொண்டு...!!!
Post a Comment