Wednesday, October 10, 2007

பீகாரின் தலித் அர்ச்சகர்கள்: "ஒரு புதிய புனித அத்தியாயம்"

சமீபத்தில் பாட்னா அருகில் உள்ள பாலிகஞ்ச் என்ற ஊரின் ராம ஜானகி ஆலயத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு பூஜை மற்றும் போஜனம் (ஸங்கத் பங்கத்) நிகழ்ச்சியில் மாநில துணை முதல்வர் சுஷீல் குமார் மோடி கலந்து கொண்டார். தலித் சமூகத்தைச் சேர்ந்த திரு. ஜனார்தன் மாஞ்சி என்பவர் இந்த ஆலயத்தின் தலைமை அர்ச்சகராகப் பொறுப்பேற்றுக் கொண்டதை ஒட்டி நடத்தப் பட்ட விழா இது.

இதற்கு முன்பிருந்தே பீகாரின் 5-6 பெரிய கோயில்களில் தலித்கள் தலைமை அர்ச்சகர்களாக இருந்து வருகின்றனர். ஆகஸ்டு-2007ல் தான் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஹில்ஸா என்னும் ஊரின் புகழ்பெற்ற "காகி பாபா ராம் ஜானகி தாகுர்பாரி" என்ற 300-ஆண்டுகள் பழைய ராமர் ஆலயத்தின் பூஜைகள் உள்ளிட்ட முழுப் பொறுப்பும், நிர்வாகமும் தலித்கள் வசம் ஒப்படைக்கப் பட்டது. இந்த முயற்சியில் முன் நின்றவர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த உயர்சாதியினர் உள்ளிட்ட அனைத்து இந்துக்களும். வால்மீகி தாஸ் என்ற மஹந்த் (சாது) அவர்களின் வழிகாட்டுதலின் படி பாஸ்வான், சமார், ரவிதாஸ், ரஜக் ஆகிய தலித் சாதிகளைச் சேர்ந்தவர்களை ஆலயத்தின் நிர்வாகிகளாகத் தெரிவு செய்தனர்.

பீகாரில் நடந்து வரும் ஆலயங்களின் இத்தகைய 'தலித்மயமாக்கல்' குறித்து இந்தியா டுடே (அக்டோபர்-8) இதழ் "The Now Holy Order" என்ற கட்டுரையை வெளியிட்டுள்ளது. முழுக் கட்டுரையையும் இங்கே படிக்கலாம்.

இந்த முயற்சிகளின் பின் இருப்பவர் பீகார் ஆலய வாரியத் (BSBRT) தலைவர் ஆசார்ய கிஷோர் குணால். இவர் ஒரு முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி மற்றும் சம்ஸ்கிருத அறிஞர் ஆவார். பரபரபுக்காக அல்ல, ஒரு மாபெரும் இயக்கமாகவே இதை நடத்தப் போகிறோம் என்று அவர் கூறுகிறார். "தலித்களுக்கு முறையாக சம்ஸ்கிருதம் மற்றும் சமய நூல்களைப் பயிற்றுவித்து அதன் பின்னரே இத்தகைய பூஜை மற்றும் புரோகிதப் பணிகளில் ஈடுபடுத்துகிறோம். இதனால் தலித்களுக்கு சமூக அங்கீகாரம் கிடைப்பது மட்டுமன்றி ஊழல், அராஜகத்தில் சிக்கியிருந்த கோயில் நிர்வாகங்களும் உண்மையான பக்தர்களின் கட்டுப் பாட்டுக்குள் வருகிறது" என்று சில சமீபத்திய உதாரணங்களையும் அவர் அடுக்குகிறார்.

"இந்த சீர்திருத்தங்களுக்கு சாஸ்திர சம்மதம் உள்ளதா?" என்று கேட்பவர்களுக்கு விடையளிக்கும் முகமாக, கடந்த 20 ஆண்டுகளாக பல வேத, சாத்திர, புராணங்களைக் கற்று ஆராய்ச்சி செய்து "தலித தேவோ பவ" (தலித் நம் கடவுளாகட்டும்) என்ற 700 பக்க நூலையும் இவர் எழுதியுள்ளார். "ஆதியில் இருந்தே சூத்திரர்களுக்கு புராணங்கள், காயத்ரி மந்திரம் இவற்றைப் பயிலும் உரிமை வழங்கப் படவில்லை" என்பதை மறுக்கும் இவர் இந்தக் கட்டுப் பாடுகள் சுயநலமிகளால் பின்னர் விதிக்கப் பட்டவையே என்றும் அறுதியிட்டுக் கூறுகிறார் - "சாதியம் பற்றி பரப்பப் படும் பல பொய்கள் உண்மையான இந்து சமய நம்பிக்கைக்கு எதிரானவை. எல்லாச் சடங்குகளையும் செய்யவும், செய்துவைக்கவும் எல்லாருக்கும் உரிமை உள்ளது".

பொதுப்ரஞையில் மறைந்து விட்டாலும் திருப்பதி பாலாஜி, புரி ஜகன்னாதர், புவனேஷ்வர் லிங்கராஜர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் உள்ளிட்ட நாட்டின் பல பிரசித்தி பெற்ற பல கோவில்களின் பாரம்பரியத்தைப் புரட்டிப் பார்த்தால் அதில் தலித்களின் மிகப் பெரிய பங்களிப்பு புரியும். இவற்றை குணால் அவர்களின் நூல் வெளிக் கொணர்கிறது.

" வர்ணாசிரமத்தை பழைய மனுஸ்மிருதி கூறட்டும், ஆனால் நம் அரசியல் சட்டம் அனைவருக்கும் சம உரிமை என்று தானே கூறுகிறது?" என்று கேட்கும் குணால் அவர்களின் சேவை மேன்மேலும் உயரட்டும். அவரைப் பின்பற்றுவோர் மேன்மேலும் பெருகட்டும்.

இந்தக் கட்டுரையை வெளியிட்ட இந்தியா டுடே இதழுக்குப் பாராட்டுக்கள்.

1 comment:

கானகம் said...

மிக நல்ல விஷயம். இந்திய்யா முழுதும் பரவி ஜாதிகள் இல்லா இந்து சமுதாயமாக மலர இறைவன் அருள் புரியட்டும்.