Tuesday, December 18, 2007

எங்கும் தெய்வத் தமிழ் ததும்பும் மார்கழி..

மார்கழி வந்து விட்டாலே நெஞ்சில் கலந்து விட்ட திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்கள் மனத்தில் ரீங்காரமிடத் தொடங்கி விடுகின்றன.

தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சிகளில் (ஜெயா, விஜய், பொதிகை) தினந்தோறும் காலையில் விளக்க உரைகளோடு இந்த தெய்வீகத் தீந்தமிழ்ப் பாடல்கள் வருகின்றன. தொலைக்காட்சிக் காரர்களும், பார்வையாளர்களும் பாக்கியம் செய்தவர்கள். விடுபட்ட தொலைக்காட்சிகள் அடுத்த ஆண்டிலாவது இந்த தெய்வீக ஜோதியில் கலக்கும் என்று நம்பலாம்.

ஜெயாவில் பாவாடை, தாவணியில் பக்தி மணம் கமழ பெண்கள் குழாம் ஒன்று இனிய குரலில் பாடி, ஆயர்பாடி கோபிகைகளை நினைவு படுத்துகிறது என்றால், விஜய் டிவியில் நடனமும் சேர்ந்து கண்களுக்கு விருந்தளிக்கிறது. தினமலர் முதல் தினத்தந்தி வரையிலான நாளேடுகள் முதல் பக்கத்திலலேயே அந்த நாளுக்கான பாசுரங்களையும், சுருக்கமான பொருளையும் தந்து புண்ணியம் தேடிக் கொள்கின்றன.





சௌலப்யம், சௌசீல்யம், ப்ரபத்தி, சேஷத்வம் என்ற பரிபாஷைகள் வைஷ்ணவ ஆச்சாரியர்களின் விளக்க உரைகளில் தூள் கிளப்புகின்றன என்றால், பசு-பதி-பாசம், திரோதானம், சிவானுபவம் என்று சைவ அறிஞர்கள் முழக்கம் இன்னொரு பக்கம். இந்த மார்கழி மாதம் ஊடகங்கள் எல்லாவற்றிலும் ஊதுபத்தி ஏற்றியது மாதிரி
பக்தி மணம் கமழ்கிறது.

மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம் இணையத்திலும் சப்திக்கிறது.

வலைப்பதிவுகளில் நண்பர் ஸ்ரீகாந்த் தினந்தோறும் திருப்பாவை விளக்கம் எழுத ஆரம்பித்திருக்கிறார். பரமானந்தமாக இருக்கிறது.

பதிவுலகின் சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை?

மதுரமொழி பதிவில், திருவெம்பாவை விளக்கம், மாணிக்கவாசகர் சரிதத்தோடு அமர்க்களமாக ஆரம்பிக்கப் போகிறது.





ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக இடையறாது இந்த மார்கழி பாவைப் பாரம்பரியத்தை உயிர்த்துடிப்புடன் காப்பாற்றி வரும் தமிழ் இந்துக்களாகிய நாம் உண்மையிலேயே பெருமை கொள்ளவேண்டும்.

அன்னவயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் - இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

தொல்லை இரும்பிறவி சூழும் தளைநீக்கி
அல்லலறுத்து ஆனந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எம்கோன்
திருவாசகம் என்னும் தேன்.

மாணிக்கவாசகர் மலரடிகளே சரணம்.

3 comments:

Expatguru said...

அருமையான சுட்டிகளையும் பாசுரங்களையும் எடுத்து காட்டியமைக்கு நன்றி. வாழ்க பாரதம், வளர்க தமிழ், சர்வம் க்ருஷ்ணார்பணம்.

Sri Srinivasan V said...

Dear JATAYU,
Vnakkam and Great to know your post.
I read your other posts as well regularly.
Good wishes on this Margazhi and on all times ahead.
My reverential salutations to you for all your EFFORTS.
God Bless you,
affly,
srinivasan
Perth, Australia.

ஜடாயு said...

ஸ்ரீனிவாசன், expatguru, உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.