Monday, January 21, 2008

ஒரு மதுரைக்காரனின் ஜல்லிக்கட்டு அனுபவம், சில யோசனைகள்

மாட்டுப் பொங்கல் முடிந்து விட்டாலும் ஜல்லிக் கட்டு, இந்த வருடத்திய நீதிமன்றக் குறுக்கீடு, தமிழர் வீர விளையாட்டுக்குத் தடையா என்பது பற்றிய விவாதங்களை இன்னும் தமிழர்கள் அசைபோட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இது பற்றிய விவாதத்தில் (பெயர் குறிப்பிட விரும்பாத) எனது மதுரை நண்பர் ஒருவர் சில வருடங்கள் முன்பான (இப்போதும் ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை) தனது ஜல்லிக் கட்டு அனுபவத்தை சுவை பட எழுதி, சில கருத்துக்களையும் கூறியிருந்தார். அதனை என் வலைப்பதிவில் அவரது அனுமதியுடன் வெளியிடுகிறேன் -

.. ஒரு மாட்டுப் பொங்கல் நாளிலே, வலுவான மத்தியானச் சாப்பாட்டுக்குப் பின்னால் உறக்கம் லேசாகக் கண்ணைச் சுற்ற சற்றே தலை சாயலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையிலே என் நண்பன் வந்து சேர்ந்தான். "கிளம்பு, கிளம்பு நாம் இன்னிக்கு அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டுப் பார்க்கப் போறோம்" என்றான். ஏதோ விதி விளையாட நானும் தூக்கத்தைத் தியாகம் செய்து அவனுடன் கிளம்பி விட்டேன். இரண்டு பஸ்கள் மாறி, ஒன்றரை மணி பயணத்துக்குப் பின்னால் அலங்காநல்லூர் சென்று இறங்கினோம்.

நகரமும் இல்லாமல் கிராமமும் இல்லாமல் ஒரு ரெண்டும் கெட்டான் ஊர் அலங்கா நல்லூர்., பஸ்ஸீல் ஏறியதுமே கண்டக்டர் எங்களை சற்று ஒரு மாதிர்யாகப் பார்த்து "ஜல்லிக் கட்டுப் பார்க்கவா?" என்று கேட்டார். ஆமாம் என்றோம், 'ஏன் சார் படிச்சவங்க மாதிரி டீசெண்டா இருக்கீங்க , எதுக்கு அங்கிட்டுப் போறீங்க, அது ரவுடிப் ப்சங்க போற இடம்ல?" என்றார். சும்மா ஒரு ஜாலிக்குப் பார்த்து விட்டு வரலாமே என்று சமாளித்தோம், எனக்கு சுருதி இறங்கி விட்டது. நண்பன் மட்டும் ஆர்வமாக இருந்தான். அலங்காநல்லூரில் இறங்கியதும் இன்னும் ஒரு சிலர் எங்களைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டார்கள்.

பஸ்ஸ்டாண்ட் எனப்படும் இடத்தை விட்டு வெளியேறியவுடனேயே திடீரென்று ஒரே கூச்சல். எங்களைத் தள்ளிக் கொண்டு பலரும் ஓடினார்கள். எதிரே கண் மன் தெரியாமல் ஒரு சோனி மாடு வெறியோடு ஓடி வந்து கொண்டிருந்தது. நாங்களும் பதறிப் போய் பக்கத்தில் இருந்த சாக்கடைப் பள்ளத்துக்குள் இறங்கினோம். அந்த மாட்டின் பின்னால் ஓ வென்று கத்திக் கொண்டு ஒரு கும்பல் ஓடி வந்தது. இப்படி ஊர் முழுக்க மாடுகள் வெறியோடு துரத்தப் பட்டு எதிரில் வருவோரை கீழே தள்ளி மிதித்துச் சென்று கொண்டிருந்தன. நான் இப்படியே திரும்பி விடலாம் என்றேன்.

நண்பன் கேட்கவில்லை. இது எல்லாம் ரவுடிப் பசங்க செய்யுறது.. நாம போய் வெள்ளைக்காரன் எல்லாம் பார்க்கும் நிஜ ஜல்லிக் கட்டைப் பார்க்கலாம் என்று அடம் பிடித்தான். ஊர் முழுக்க ரவுடிகள், பொறுக்கிகள் தண்னி போட்டுக் கொண்டு ஆடை அவிழ்வது தெரியாமல் எதிரே வருவோர் போவோரையெல்லாம் மாட்டை விட்டு மிரட்டிக் கொண்டிருந்தனர். முழுக்க முழுக்க வெளியூர் மக்களால் நிறைந்திருந்தது. எங்கும் சாராயம், கஞ்சா மணம். ஊர் முழுக்க குப்பைகளும் உடைந்த பீர் விஸ்கி பிராந்தி பாட்டில்களும், கடித்துத் துப்பிய கரும்புச் சக்கையும் வெத்திலைக் காவியுமாக நாறிப் போய் கிடந்தது.

ஒரு வழியாக ஓடி வந்த மாடுகளில் இருந்து தப்பி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஜல்லிக் கட்டு நடக்கும் இடத்தை நெருங்கி விட்டோம். ஆனால் அந்த குட்டி மைதானம் அடைக்கப் பட்டிருந்தது. அந்தச் சின்ன இடத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி பெருங் கூச்சல் இட்டுக் கொண்டிருந்தனர். கிட்டவே நெருங்க முடியவில்லை. நண்பன் ஒரு வீட்டில் போய் என்னோட அப்பா இங்கு ஹெட்மாஸ்டர் ஆகவே எங்களை வீட்டு மாடிக்கு விடுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க எங்களை உள்ளே விட்டார்கள். ஏன் தம்பி உங்களுக்கெல்லாம் வேற வேலை வெட்டி இல்லையா என்று சலித்துக் கொண்டே மொட்டை மாடிக்கு அனுப்பினார்கள்.

அந்த மைதானம் ஒரே குழப்பமாக இருந்தது. கலெக்டர் வருவதற்காகக் காத்துக் கொண்டிருந்தனர். ஒரு பக்கம் சின்ன அடைசலில் இருந்து கொம்பு சீவிய சாராயம் கொடுக்கப் பட்ட மாட்டை அனுப்ப அது மேல் ஒரு நூறு பேர்கள் போய் மொத்தமாக விழுகிறார்கள். அது மிரண்டு ஓடுகிறது. ஒரு கட்டுப் பாடு இல்லை, ஒரு ஒழுங்கு இல்லை,. ஆட்ட விதிகள் இல்லை,. ஒரு பெரிய காட்டுமிராண்டிக் கும்பல் மிருக வதை செய்து கொண்டிருந்தது. ஒரு வரைமுறை இல்லாமல் அங்கு அப்பாவி மாடுகள் வதை பட்டுக் கொண்டிருந்தன. புழுதி எழும்பி அந்த இடத்தை மேலும் குழப்பமாக்கியது. யார் எதை அடக்குகிறார்கள் என்று ஒன்றும் புலப்படவில்லை. அடிபட்டவன், வயிறு கிழிந்தவன் என்று போதையில் ஒருவர் மீது ஒருவர் ஏறி மிதித்துக் கொண்டிருந்தார்கள். இதுதான் தமிழர் கலாச்சாரம் என்றால் அந்தக் கலாச்சாரம் நாசமாய்ப் போக என்பேன்.

பாதுகாப்பற்ற இடம், விதி முறைகள் கட்டுப் பாடுகள் இல்லாத குழப்பமான சூழல், அளவுக்கு மீறிய போதை, ரவுடித்தனம், திருட்டு, வசைபாடல்கள், அடிதடிகள், இதற்கு நடுவே நூறு பேர் சேர்ந்து ஒரு மாட்டைப் போட்டு அமுக்கி நசுக்கும் ஒரு கொடுமை. அந்தக் கண்றாவியைக் கண்ணால் பார்த்து விட்டுத் தெருவில் இறங்கினால் மாடுகள் தொடர்ந்து கூட்டத்தின் நடுவே ஒடி வந்து மக்களை மிரண்டு ஓட வைத்து ரோட்டில் கீழே விழுந்து பெருங்காயம் ஏற்படுத்திக் கொண்டிருந்தன. நாங்கள் ஒரு கட்டத்தில் ஒரு மாட்டிடம் இருந்து தப்ப ஒரு கால்வாய்க்குள் குதித்து விட நேர்ந்தது முழுக்க நனைந்து ஈர ஆடையுடன் பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்.

ஜல்லிக் கட்டு என்ற பெயரில் ரவுடித்தனம் தான் அங்கு கட்டவிழ்த்து விடப் படுகிறது. இந்தக் கண்றாவியைப் போய் தமிழ் நாட்டின் கலாச்சாரச் சின்னம் என்று சொன்னால் அது இப்பொழுதைய தமிழ் நாட்டின் கலாச்சாரத்துக்குப் பொருத்தமானதே :))) என்று தோன்றுகிறது.

நான் பாரம்பரியத்தை கேவலப்படுத்த வரவில்லல, எதிர்க்கவில்லை. இது இந்துக்களின், தமிழர்களின், பாரம்பரிய விளையாட்டு தான், ஒத்துக் கொள்கிறேன். இருந்தாலும் கூட முறையாக ஒரு ஆட்ட விதி முறையை வகுத்துக் கொண்டு விளையாடுங்கள் என்கிறேன். இந்த முறை சுப்ரீம் கோர்ட் தயவில்; கொஞ்சம் ஒழுங்கு வந்திருக்கிறது. நம் தமிழர்களுக்கு சின்ன சின்ன விதிமுறைகளைச் சொல்லித் தரக் கூட சுப்ரீம்கோர்ட் வர வேண்டியிருக்கிறது.

மெக்சிகோவிலும்,தென்னமரிக்காவிலும் புல் ஃபைட்டுகள் (Bull Fights)நடக்கின்றன ஆனால் எங்கும் இது போன்ற அன்ரூலி பிஹேவியரைப் பார்க்க முடியாது. அதற்கான உரிய இடம் பாதுகாப்பு, முறை, எல்லாம் நிர்ணயம் செய்யப் படாமல் விளையாடும் இதை என்னால் வீர விளையாட்டு என்று கருத முடியவில்லை. தமிழ் நாட்டில் பிற கலாச்சாரங்கள் அழிந்தது போல இதையும் ஒரு ரவுடித்தனமான விஷயமாக மாற்றி விட்டார்கள். பாரம்பரியமான விஷயமே ஆனாலும் எதையும் முறையாக ஒரு கட்டுக்கோப்பாகச் செய்ய வேண்டும் என்பது என் கோரிக்கை. சில யோசனைகள் -

1. இப்பொழுது உள்ள வசதியற்ற சிறு மைதானத்தில் உயிரழப்புகளும் விபத்துக்களும் இடிபாடுகளில் உயிரழப்பும் சாத்தியம் என்பதனால் ஜல்லிக் கட்டுக்கென ஒரு பாதுகாப்பான ஸ்டேடியம் அமைக்கப் பட வேண்டும்

2. ஒரு காளையை ஒரு வீரர் மட்டுமே ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் அடக்க முயல வேண்டும். எவ்வித வன்முறையையும் பிரயோகிக்கக் கூடாது

3. மைதானத்தில் ஒரு காளையும் ஒரு வீரரும் மட்டுமே இருக்க அனுமதிக்க வேண்டும். மற்ற அனைவரும் பார்வையாளர் பகுதியில் நிற்க வேண்டும்.

4. மாடுகளை அலங்கரித்து சாலைகளில் ஓட்டி விடுவதை நிறுத்த வேண்டும்

5. காளைகளுக்குப் போதை மருந்து அளித்தல் தடை செய்யப் பட வேண்டும்

6. வீரர்கள் உரிய உடைகளில் வர வேண்டும், வேட்டி, கைலிகளில் மாடு பிடிக்கக் கூடாது

7. வீரர்களும் மாடுகளும் மருத்துவர்களால் பரிசோதிக்கப் பட்ட பின்பே அனுமதிக்கப் பட வேண்டும்.

இதை ஒரு ஆண்டுக்கு மட்டும் கோர்ட் சொன்னதால் செய்யாமல் நிரந்தரமாகச் செய்யப் பட வேண்டும். உன்மையான வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டை மாற்றுவதும், நம் முன்னோர்கள் விளையாடியது போன்ற கட்டுப்பாட்டுடன் கூடிய விளையாட்டை மீண்டும் நிகழ்த்துவதும் அரசின் கடமை. மக்களும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.


பின் குறிப்பு:

இந்த மதுரைக்காரரின் கருத்துடன் ஒன்றுபடுகிறேன். இந்த வீடியோவைப் பாருங்கள் - அவர் சொல்வது உண்மை என்பது புரியும்.

புராண காலத்திலேயே பிரபலமாக இருந்த விளையாட்டு இது. ஸ்ரீமத் பாகவதம் நக்னஜித் என்ற மன்னனுடைய முரட்டுக் காளைகளைக் கண்ணன் அடக்கியது பற்றிக் கூறுகிறது. இதனையே பெரியாழ்வார்,

எருதுகளோடு பொருதி ஏதும் உலோபாய்காண் நம்பி!*
கருதிய தீமைகள் செய்து கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்!*

என்று பாடுவார். சங்ககாலம் தொட்டு "ஏறு தழுவுதல்" என்று சிறப்பாக வழங்கப் பட்ட விளையாட்டு. தமிழகம் மட்டுமின்றி பாரத நாட்டின் பல பகுதிகளிலும் பிரபலமாக இருந்து, இப்போது வழக்கொழிந்து விட்டது.

இந்த வீர விளையாட்டுப் பாரம்பரியத்தில் புகுந்து விட்ட கசடுகளை நீக்கி நண்பர் கூறும் வழிமுறைகளைச் செயல்படுத்தி இதனை உயிர்ப்பிக்க வேண்டும்.

இந்த அளவில் மிருக வதைக்கு எதிரான அமைப்புகள் தொடுத்த வழக்கையும் அதனால் விளைந்த நீதிமன்ற குறுக்கீட்டையும் நான் வரவேற்கிறேன். ஆனால் இன்னொரு கேள்வி எழுகிறது -

ராஜஸ்தானில் இருந்து தமிழ்நாடு வரை 1000 கிலோமீட்டருக்கு மேல் கால்கடுக்க 50 ஒட்டகங்களை ஓட்டிவந்து அவற்றை நடுரோட்டில் வெட்டிச் சாப்பிடும் பக்ரீத் காட்டுமிராண்டித் தனத்தை எதிர்த்துப் போட்ட வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருந்தது? "மத உணர்வுகளில் தலையிட முடியாது" ஒரே வரி, அவ்வளவு தான், பீரியட். இத்தனைக்கும் அது இந்தியப் பாரம்பரியம், கலாசாரம் இவற்றோடு தொடர்பில்லாத விஷயம் - அரபு அடிவருடித்தனத்தில் விளைந்த காட்டுமிராண்டித் தனம்.

ஏன் அங்கும் கட்டுப்பாடுகள் விதித்திருக்கலாமே - ஒட்டகம் கூடாது, ஆடுதான்.. நடுரோடு கூடாது, அதற்கென்று உள்ள ஒரு இடம்.. இப்படியெல்லாம்? ஏன் இல்லை?

இந்துக்களின் பாரம்பரியத்தில் விளைந்த சீர்கேட்டினை எதிர்த்து எத்தனை இந்துக்கள் குரல் கொடுக்கின்றனர்? வழக்குத் தொடுக்கின்றனர்? பிராணிகளின் மீதான பாசம் என்பது மதம் பார்த்தா வருகிறது? அந்த ஒட்டக வதையை எதிர்த்து ஏன் ஒரு முஸ்லீமும் பேசவில்லை? ஏன் இல்லை?

8 comments:

Anonymous said...

நல்ல கட்டுரை, ஆனா உங்க கிட்ட இருந்து வந்ததால் பல நடுநிலை, சார்புநிலை புல்லுருவிகள் ஏற்கமாட்டார்கள். :(

Anonymous said...

// நாம போய் வெள்ளைக்காரன் எல்லாம் பார்க்கும் நிஜ ஜல்லிக் கட்டைப் பார்க்கலாம் என்று அடம் பிடித்தான். //

:)))

அலங்கா நல்லூரில் ஜல்லிக்கட்டு என்ற பேரில் நடக்கும் அலங்கோலத்தைப் பற்றி அருமையாக சொல்லியிருக்கிறார் உங்க நண்பர். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

// பிராணிகளின் மீதான பாசம் என்பது மதம் பார்த்தா வருகிறது? அந்த ஒட்டக வதையை எதிர்த்து ஏன் ஒரு முஸ்லீமும் பேசவில்லை? ஏன் இல்லை? //

செமத்தியான கேள்வி.

Hariharan # 03985177737685368452 said...

//50 ஒட்டகங்களை ஓட்டிவந்து அவற்றை நடுரோட்டில் வெட்டிச் சாப்பிடும் பக்ரீத் காட்டுமிராண்டித் தனத்தை எதிர்த்துப் போட்ட வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருந்தது? "மத உணர்வுகளில் தலையிட முடியாது" ஒரே வரி, அவ்வளவு தான், பீரியட். இத்தனைக்கும் அது இந்தியப் பாரம்பரியம், கலாசாரம் இவற்றோடு தொடர்பில்லாத விஷயம் - அரபு அடிவருடித்தனத்தில் விளைந்த காட்டுமிராண்டித் தனம்.

ஏன் அங்கும் கட்டுப்பாடுகள் விதித்திருக்கலாமே - ஒட்டகம் கூடாது, ஆடுதான்.. //


ஜடாயு,

பிராணிகள் வதை தடுப்பு என்பதுதான் மையமான முனைப்பு எனில் ஆடு மட்டும் என்னங்க பாவம் செய்தது? ஆடு பிராணியாகக்கூட பார்க்கப்படாமல் "ரெடி டூ யூஸ் பிரியாணி"யாக ஆகிவிட்டது :-((

உண்மையான பிராணிகள் வதை தடுப்பு என்பது தன் இருப்பை உணர வல்ல கான்ஷியஸ்னஸ் இருக்கும் அனைத்து பிராணிகளிடம் பேதமில்லாமல் காட்டப்பட வேண்டியதல்லவா?

வேக வைக்கப்பட்ட அரிசியூடே புதைக்கப்பட்ட பிராணியின் வெந்த பிணத்தை பிரியாணி என்று வெறியோடு உண்பதை என்னவென்பது???

Anonymous said...

//
நடுரோட்டில் வெட்டிச் சாப்பிடும் பக்ரீத் காட்டுமிராண்டித் தனத்தை எதிர்த்துப் போட்ட வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருந்தது? "மத உணர்வுகளில் தலையிட முடியாது" ஒரே வரி, அவ்வளவு தான், பீரியட்.
//

காஷ்மீரில் ஜிகாதி என்ற பெயரில், shaheed என்ற பெயரில் நடக்கும் பலிகளும் மத உணர்வாகத்தானே வெளிப்படுகின்றன... அங்கும் தலையிட முடியாது என்பது தான் எழுதப்படாத தீர்ப்போ?

ஜடாயு said...

// உண்மையான பிராணிகள் வதை தடுப்பு என்பது தன் இருப்பை உணர வல்ல கான்ஷியஸ்னஸ் இருக்கும் அனைத்து பிராணிகளிடம் பேதமில்லாமல் காட்டப்பட வேண்டியதல்லவா? //

ஆமாம் ஹரிஹரன். நீங்கள் கூறுவது தான் சரி. "கட்டுப் பாடுகள்" என்ற உதாரணத்திற்காக ஒட்டகத்தைக் குறிப்பிட்டேன் - சட்ட அளவில்.

பிராணிகள் மீது அன்பு என்பது இயல்பான மனித உணர்வு, அதை சட்டத்தால் கொண்டுவர முடியுமா? குறிப்பாக மாமிச உணவுப் பழக்கத்தை இயல்பாக ஏற்ற மக்கள் குழுக்கள் பல இருக்கையில்.

மிருகவதை அதிபயங்கரமாகமல் இருக்க சில வரையறைகள் போடமுடியும் அவ்வளவே.

Anonymous said...

// அங்கும் தலையிட முடியாது என்பது தான் எழுதப்படாத தீர்ப்போ? //

இந்துக்கள் பலிகடாக்கள் என்று செக்யூலர் கட்சிகள் முடிவு கட்டி எவ்வளவு காலம் ஆச்சு? நீதிமன்றங்களும் அப்படியே நினைப்பது இயல்பு தானோ?
என்ன கொடுமை!

enRenRum-anbudan.BALA said...

ஜடாயு,

ஜல்லிக்கட்டு பற்றி ஒரு வித்தியாசமான பார்வை ! நல்லதொரு பதிவு, நன்றி.

நானும் ஜல்லிக்கட்டு பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். மிருகவதை பற்றியும் அதில் சொல்லியிருந்தேன்! வாசித்து விட்டு உங்கள் கருத்தைக் கூறவும்.
http://balaji_ammu.blogspot.com/2008/01/412.html

//
50 ஒட்டகங்களை ஓட்டிவந்து அவற்றை நடுரோட்டில் வெட்டிச் சாப்பிடும் பக்ரீத் காட்டுமிராண்டித் தனத்தை எதிர்த்துப் போட்ட வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருந்தது?
"மத உணர்வுகளில் தலையிட முடியாது"
//
இந்த பாரபட்சத்தை மனதில் கொண்டே, நானும் எனது பதிவில் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தடை விதித்தது சரியல்ல என்று எழுதினேன்.

எ.அ.பாலா

ஜடாயு said...

நன்றி பாலா.

// நானும் ஜல்லிக்கட்டு பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். மிருகவதை பற்றியும் அதில் சொல்லியிருந்தேன்! வாசித்து விட்டு உங்கள் கருத்தைக் கூறவும். //

கூறியாச்சு.