Thursday, February 28, 2008

தமிழ் எழுத்துலக சகாப்தம் சுஜாதா மறைந்தார்

மனது கனக்கிறது செய்தியறிந்து. தமிழ்ப் படைப்புலகத்தின் இணையற்ற சாதனையாளர் ஒருவர் மறைந்து விட்டார்.




நான் முதல் முதலில் தமிழ்ப் பத்திரிகை படிக்க ஆரம்பித்தது குமுதத்தில் ரத்தம் ஒரே நிறம் வந்து கொண்டிருந்த போது, அதற்கான படங்களைப் பார்த்துத் தான்... அப்போது ஆரம்பித்த வாசக பந்தம் இன்று வரை தொடர்கிறது.. இனிமேலும் தொடரும்.

நான், என் மனைவி, என் தங்கைகள், என் பெற்றோர், என் பாட்டி, என் 6 வயது மகள் (அவள் முதலில் பார்த்துப் படிக்க முயன்ற தமிழ்ப் புத்தகம் பூக்குட்டி) அனைவரும் படித்து, ரசிக்கும் ஒரு எழுத்தாளர் என்றால் அது சுஜாதா மட்டும் தான் - வேண்டுமானால் வால்மீகி முனிவரை சேர்த்துக் கொள்ளலாம். அப்பேர்ப்பட்ட ஆகிருதியும், எளிமையும், பன்முகத்தன்மையும், வர்ண ஜாலங்களும் கலந்த படைப்புகள் அவருடையவை.

கற்றதும் பெற்றதும் பகுதியில் மருத்துவமனையில் தனது இருதய சிகிச்சை தினங்களை எழுதுகையில் மருத்துவர் முதல் நர்ஸ் வரை ஒவ்வொருவரும் என்னை இப்படி கவனித்துக் கொள்கிறார்களே, இதற்காக என்ன பேறு செய்திருந்தேனோ என்று நெகிழ்ந்து போய் "நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன்" என்ற பாசுரத்தை சொல்வார். அந்த இரண்டும் அரங்கன் அருளால் அவரிடம் பரிபூர்ணமாக இருந்தது. சுஜாதாவைப் படிப்பவர்கள் பாக்கியசாலிகள்.

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் ஆறுதல்கள்.

2 comments:

Anonymous said...

ஒரு திராவிட கன்ப்யூஸ்டு சுஜாதா மறைவை ஒட்டி தீவளி கொண்டாடப் போகுதாம்.பாவம் ரொம்ப கன்ப்யூஸ்டாகி திராவிடம் போய் தீவளி வந்து விட்டது.
பாண்டியன்

ஜடாயு said...

பாவண்ணன் திண்ணையில் எழுதிருக்கும் அஞ்சலி :

அபூர்வ மனிதர் சுஜாதா
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20802273&format=html

இந்தக் கட்டுரையில் சில அருமையான வரிகள்

// தொழிலால் உருவாகும் களைப்பை எழுத்தில் ஈடுபட்டுக் கரைத்து உற்சாகத்தைத் திரட்டிக்கொள்வதும் எழுத்தால் உருவாகும் களைப்பை தொழிலில் ஈடுபட்டுக் கரைத்து புத்துணர்வைப் பெற்றுக்கொள்வதும் அவருக்கு சாத்தியமாக இருந்தது.//


// மற்ற எழுத்தாளர்கள் தம் படைப்பின் சுவையில் திளைப்பவர்களாக தம் வாசகர்களை உருமாற்றி வைப்பவர்களாக இயங்கிய வேளையில் சுஜாதா மட்டுமே தன் வாசகர்களை ஏதேனும் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனையைநோக்கி எப்போதும் தள்ளிக்கொண்டிருப்பவராக இயங்கினார். எழுத்தில் திளைப்பவர்களையல்ல, எழுத்தின்வழியாக தன் இயக்கத்தை வடிவமைத்துக்கொள்கிறவர்களாக வாசகர்களை மாற்றினார்.//

// தொழில்நுட்பத்தோடு செயலாற்றும் ஒரு களமாக மட்டுமே எழுத்துமுயற்சியை வரையறுத்துக்கொள்ளும் பார்வை சுஜாதாவுக்கு இருந்தது. ஒருவகையில் இதுவே சுஜாதாவின் பலம். மற்றொருவகையில் இதுவே பலவீனமும் கூட. //