சங்கீத அன்பர்களே, இந்த ஏழைக் குடும்பத்துக்கு உதவுங்கள்
தேவகி அண்மையில் காலமானார். திருமணமாகி மூன்றாம் மாதத்தில் இறந்து போன அவரது கணவர் கொடுத்துவிட்டுப் போனது ஒரே மகன். அவரது இறுதி சடங்குகளை செய்யக்கூட நிதி நிலை சரியில்லையாம் அந்தக் குடும்பத்துக்கு. காயத்ரி அறக்கட்டளை எனும் நிறுவனத்தின் உதவியுடன் தான் அது நடந்ததாம். அவரது மகன் அரசு இல்லத்தில் சேர்க்கப்பட்டு வளர்ந்து இப்போது கரண்டிதூக்கி தொழில் நடத்துகிறார். இதற்கும் இந்த குடும்பத்துக்கு எம்.ஜி.ஆர்தான் பொருள் உதவி செய்திருக்கிறார். தேவகியின் பேத்தி பத்தாவதுடன் படிப்பை நிறுத்திவிட்டார். பேரன் காஞ்சியில் வேதம் படிக்கிறார்.
யார் இந்த தேவகி?
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகளின் குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை தேவகி.
கலைகளும், இசையும் கௌரவிக்கப் பட்ட தஞ்சைத் தரணியில் நிலபுலன்களுடன் வாழ்ந்த இந்த இசைக் குடும்பத்தில் அடுத்தடுத்த தலைமுறைகள் தொழில் மற்றும் பிசினஸில் இறங்கி கடன்பட்டு, நொடித்துப் போய் இப்போது இந்த சந்ததியினர் சென்னையில் சிட்லபாக்கத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களது துயர நிலை பற்றி "தி இந்து" நாளிதழில் சமீபத்தில் வந்த செய்தி:
http://www.thehindu.com/2008/05/06/stories/2008050660511100.htm
சந்ததியினர் சங்கீதத்திற்கு என்ன செய்தார்கள்? அவர்கள் பட்ட கடனால் தானே இந்த நிலைமை என்றெல்லாம் தர்க்கங்களும், விவாதங்களும் ரசிகர்கள் சந்திக்கும் இணையக் குழுமங்களில் ஒருபக்கம் நடந்து வருகின்றன. (இந்த விவாத இழையில் சியாமா சாஸ்திரி பற்றிய சில வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன)
ஆனால், காபிரைட், ராய்ல்டி போன்ற எந்தச் சிடுக்குகளும் இல்லாத காலத்தில், இசையையே உயிர்மூச்சாக்கி, இசைக்காகவே வாழ்ந்து மறைந்த ஒரு உன்னத கலைஞரின் சந்ததியினருக்கு உதவ சங்கீத வித்வான்களும், ரசிகர்களும் கடமைப்பட்டுள்ளனர் என்பது எனது சொந்த அபிப்பிராயம். சியாமா சாஸ்திரிகளின் ஒவ்வொரு கிருதியையும் பாடும்போது வித்வான்கள் ஒரு 50 ரூபாய் கொடுத்தால் கூட இந்தக் குடும்பம் இந்த கஷ்டதசைக்கு வந்திருக்காது என்று ஒரு ரசிகர் வருத்தப் பட்டிருந்தார்.
இது பற்றிக் கேள்வியுற்று மனம் வருந்திய ரசிகர் வி.வி.சுந்தரம் (அமெரிக்காவின் புகழ்பெற்ற க்ளீவ்லேண்ட் ஆராதனை இசை விழாக் கமிட்டியுடன் தொடர்புடையவர்) உதவிசெய்ய விரும்புபவர்களது நன்கொடைகளைத் திரட்டி ஒருங்கிணைக்க முன்வந்துள்ளளார். இது பற்றிய அனைத்து விவரங்களும் ஆராதனைக்கமிட்டியின் இணைய தளத்தில் அனைவரும் அறிய வெளியிடப் படும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்த மகானின் கீர்த்தனைகளால் மன அமைதி பெற்றவர்கள் வாழ்வில் வளம்பெற்றவர்கள் எத்தனையோ பேர் இருப்பீர்கள் அவர்கள் இந்த குடும்பத்துக்கு உதவ நினைத்தால்,
வெளிநாடுகளில் இருந்து உதவி செய்ய விரும்புவர்கள், தங்கள் காசோலைகளை Aradhana Committee என்ற பெயரில் அனுப்பவேண்டிய முகவரி:
Aradhana Committee, 4 Cranberry Brook Drive, Millstone, NJ 07726
இந்தியாவில் இருந்து உதவி செய்ய விரும்புபவர்கள் Aradhana Committee என்ற பெயரில் அனுப்பவேண்டிய முகவரி:
Aradhana Committe, 3 Royal Enclave, Adyar, Chennai 600 020
காசோலைகளின் பின்பக்கம் Syama Sastry Family Fund என்று மறக்காமல் குறிப்பிடவும். அதிக விவரங்கள் மேற்குறிப்பிட்ட rasikas.org விவாத இழையில் கிடைக்கும்.
"தருணம் இதம்மா - என்னை ரக்ஷிக்க
தருணம் இதம்மா
கருணாநிதியாகிய காமாக்ஷி ரக்ஷிக்க (தருணம்)"
என்று அன்னை பராசக்தியையே தன் வாழ்நாள் முழுவதும்
பாடிப்பரவிய சியாமா சாஸ்திரிகளின் கௌளிபந்து ராகக் கீர்த்தனை பின்னணியில் ஒலிக்கிறது.
5 comments:
படிக்கும்போதே வேதனை செய்கிறது. சில ஆண்டுகளுக்கு முன், இன்று இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருக்கும், திலகவதி அவர்கள் ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் லண்டன் வாழ் தமிழர்கள் நிதி திரட்டி சில பவுண்டுகள் அனுப்பியதைச் சொல்லி, தமிழ்நாடு வாழ் சங்கீத வித்வான்களின் அலட்சியப்போக்கை விமர்சனம் செய்தது நினவுக்கு வருகிறது. அப்பொழுது அவர் சங்கீத மேடைகளில் பாடப்படும் ஒவ்வொருஊத்துகாடு பாடலுக்கும் ஒரு பத்து ரூபாயை உண்டியலில் போட்டு அதற்கு இணையான தொகையை சபா நிர்வாகிகள் நன்கொடையாகக் கொடுத்து ஆண்டுதோறும் ஊத்துக்காடு பிறந்த தினத்தில் அதை அவர் குடும்பத்துக்குக் கொடுத்து உதவி செய்யவேண்டும் என்று கூறினார். ஆனால் அந்த அருமையான யோசனை செவிடர்களின் காதில் ஊதிய சங்காக ஆகி நான்கைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. என்ன தவம் செய்தனை, வேங்கடசுப்பா என்று பாடலாமா?
//. Krishnamoorthy said...
அந்த அருமையான யோசனை செவிடர்களின் காதில் ஊதிய சங்காக ஆகி நான்கைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. என்ன தவம் செய்தனை, வேங்கடசுப்பா என்று பாடலாமா? //
இந்த ஒவ்வொரு கீர்த்தனைக்கும் இத்தனை ரூபாய் யோசனை நடைமுறையில் ஒத்துவராது என்று நினைக்கிறேன்.
சங்கீத பாரம்பரிய போஷகர்கள் அமைப்பு என்கிற மாதிரி ஒரு டிரஸ்ட் உருவாக்கி, அதில் வித்வான்கள், ரசிகர்கள் நன்கொடைகளைத் திரட்டி ஒரு நிதிவைப்பு இருக்கவேண்டும். இப்படி கஷ்டப்படும் எல்லா புராதன சங்கீத வித்வான்கள் சந்ததியினருக்கும் அதிலிருந்து உதவலாம்.
மதிப்புக்குறிய ஜடாயு ஐயா
செய்தியை வெளியிட்டமைக்கு நன்றி
வேதனைப்படுவதுடன் நில்லாமல், மறைந்த சியாமா சாஸ்திரியார் குடும்பத்துக்கு உதவ நினைக்கிறேன்
ஆனால், aaradhana dot org ல் சொடுக்கியால், அவர்கள் , cleaveland சங்கீத ஆராதனை , அதன் அமைப்பு உள்ளிட்ட பல நல்ல பணிகளுக்காக நிதி சேகரிப்பது புலனாகிறது
குறிப்பிட்ட சியாமா சாஸ்திரி குடும்பத்துக்கு உதவ வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் ?
காசோலையின் பின் எழுதினால் போதுமா ?
சிறிய தொகை அனுப்புகிறவர்கள், நேரடியாக ஏதாவது செய்ய இயலுமா ?
சியாமா சாஸ்திரியாரின் குடும்ப முகவரி கிடைக்குமா ?
அன்புடன்
சுப்பு
அன்புள்ள சுப்பு, நன்றி.
// காசோலையின் பின் எழுதினால் போதுமா ? //
போதும் என்றே தோன்றுகிறது. நான் அப்படித் தான் அனுப்பியிருக்கிறேன்.
rasikas.org குழுமம் தவிர, போன வார கல்கி இதழிலும், இந்த அறிவிப்பு வந்துள்ளதாக அறிகிறேன்.
அதில் தரப் பட்டுள்ள முகவரியும் இதே:
Aradhana committee-Syama Sastry Family Fund
3-Royal Enclave
Adyar
Chennai-600 020
// சியாமா சாஸ்திரியாரின் குடும்ப முகவரி கிடைக்குமா ? //
தி இந்து மற்றும் கல்கி அலுவலகங்களைத் தொடர்பு கொண்டால் கிடைக்கலாம்.
ஜடாயு,
நான் அறிந்த வரையில் சியாமா சாஸ்திரியாரின் சந்ததியினர் நல்ல வசதியுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அடையாரில் உள்ளனர். Hinduவின் படத்தில் உள்ளவர்கள் உன்மையில் சியாமா சாஸ்திரியாரின் சந்ததியினர் கிடையாது!
Post a Comment