Monday, June 30, 2008

வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 4

முந்தைய பகுதிகள் : பகுதி 1, பகுதி 2, பகுதி 3

// கேள்வி 17 : வைதீக மரபின் மிக உயர்ந்த மந்திரமாகிய காயத்ரி உபதேசித்த பின் தமிழ் ஞானசம்பந்தர் சொன்ன சேதி என்ன... அறிவீர்களா? //

ஆகா! ஒரு வருடம் முன்பு இணையத்தில் வேறு ஒருவரும் இதே கேள்வியைக் கேட்டிருந்தார். அதுகுறித்து அப்போது நான் எழுதியதை அப்படியே கீழே தருகிறேன் - (முழுக்கட்டுரையும் இங்கே)





தமிழன் என்பவர் எழுதுகிறார்:"திருஞானசம்பந்தப் பெருமானே தமிழில் வடமொழி ஆதிக்கத்தைக் கண்டு வெறுப்படைந்தவர்தான். தன்னைப் பல இடங்களில் தமிழ்ஞானசம்பந்தன் என்றே அழைத்துக் கொள்கின்றார்.தனக்கு பூணூல் அணிவித்தபோது கூட காயத்திரி மந்திரம் வேண்டாம் என்று தமிழிலே சைவ வாழ்த்து பாடச்சொல்கிறார்."இது எப்படி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய், திரிபுவேலை என்று பார்ப்போம். திருஞானசம்பந்தருக்குப் பூணூல் அணிவித்த சடங்கு முடிந்ததும் அங்கே வந்திருந்த வேத பண்டிதர்களுக்குப் பாடியதாகச் சொல்லப்படும் பஞ்சாக்கரப் பதிகத்தில் வரும் இந்தப்பாடல்:

மந்திரம் நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே

'நமசிவய' என்ற திருவைந்தெழுத்தே மந்திரங்கள் அனைத்திற்கும் மூலம் என்றும், தீ வளர்த்து ஓம்பியிருக்கும் வேதியர் முப்போதும் ஓதும் சந்தியாவந்தன மந்திரத்திலும் மூலமாயிருப்பது அதுவே என்கிறார். ஏனெனில் ஐந்துமுகம் கொண்ட வேதமாதாவான காயத்ரி தேவியே சதாசிவபத்னியான மனோன்மணி. காயத்ரி அஷ்டோத்திரத்திலே மனோன்மண்யை நம: என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. காயத்ரி தியான மந்திரத்தில் வரும் 'முக்தா, வித்ரும, ஹேம, நீல, தவளம்' என்ற இந்த ஐந்து வண்ணங்கள் பஞ்சபூதங்களையும் சதாசிவத்தையும் சுட்டுகின்றன. மாணிக்கவாசகர் சிவபுராணத்திலே 'நிறங்கள் ஓர் ஐந்துடையாய்' என்றதும் அதனால்தான். இதிலே காயத்ரி மந்திரம் வேண்டாம் என்று எங்கே சொல்கிறார்?

மேலும் 'திருஞானசம்பந்தர் வடமொழி ஆதிக்கத்தைக் கண்டு வெறுப்படைந்தவர்தான்' என்றொரு அடாத பொய்யைச் சொல்லி இருக்கிறார். இதையெல்லாம் மிசினரிமார்தான் இட்டுக்கட்டிச் சொல்வார்கள்.பதிகத்துக்குப் பதிகம் இறைவனை வேத உருவாகக் கண்டவர் 'வேதநெறி தழைத்தோங்க' (சேக்கிழார் வாக்கு) வந்த திருஞானசம்பந்தர். வேதம் என்பதை “மெய்யறிவு” என்பதாக மட்டுமல்ல ரிக், யஜுர், சாம, அதர்வ வேதங்கள் என்ற பொருளிலேயே ஏராளமான பாடல்களில் பாடியுள்ளார்

“வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாக.. “
“வேதமொடு ஆறங்கம் ஆயினானை.. “
“சாகை ஆயிரம் உடையார்.. “ (ஆயிரம் கிளைகள் உள்ள “ஸஹஸ்ர சம்ஹிதா” என்று ரிக்வேதத்தை குறிப்பிடுவார்கள்)


வேதம் மட்டுமல்ல, சம்ஸ்கிருத மொழிமீதும் சம்பந்தர் வெறுப்பைக் காட்டவில்லை. சம்ஸ்கிருதமும், தமிழும் இணைந்ததே தமது வழி என்றும் உரைக்கிறார். “ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா அந்தகர்” என்று சமணரைச் சாடுகிறார். வாதத்திற்கு முன் இறைவனை வேண்டிப் பாடும் திருவாலவாய்ப் பதிகத்தில்

"ஆகமத்தொடு மந்திரங்க ளமைந்தசங்கத பங்கமாப்
பாகதத்தொ டிரைத்துரைத்த சனங்கள்வெட்குறு..”

என்கிறார். வேத, ஆகமங்களின் மொழியாகிய சங்கதம் (சம்ஸ்கிருதம்) பங்கமுறுமாறு பாகதம் (சமணரது பிராகிருத மொழி) பேசுவோர் என்றும் சமணரைச் சாடுகின்றார்.

// கேள்வி 18 : வேத நெறி தழைத்தோங்க என்று பாடிய சேக்கிழார் மிகு சைவத் துறை விளங்க என்று பாடுவதில் உள்ள மிகு சைவம் என்று சொல்லாட்சியின் நுட்பம் என்ன? //

தாங்கள் அந்த நுட்பத்தை விளக்கினால் தெரிந்து கொள்வேன்.
சேக்கிழார் பெரியபுராணத்தில் ஒவ்வொரு நகரை வர்ணிக்கும் போதும் அங்கு இடையறாது கேட்டுக் கொண்டிருக்கும் வேதஒலியையும், வேள்விப் புகையையும், பிரமசாரிகள் வேதம் கற்கும் “கிடை”களைப் பற்றியும் அற்புதமாக வர்ணித்துச் செல்வார். அவரும் வேதங்களின் பெருமையை ஏராளமான இடங்களில் எடுத்தோதியுள்ளார்.

“மிகு சைவம்” என்பது மற்ற சமயப் பிரிவுகளைக் காட்டிலும் சைவமே உயர்ந்தது என்று சொல்கிறது. ஆனால் அதற்கு அடிப்படையானது “வேதநெறி” என்பதையே முதலில் குறித்தார். இதில் வேதத்திற்கு முரணாகவோ, எதிராகவோ எதுவும் அவர் கூறவில்லை என்றே கொள்கிறேன்.

// கேள்வி 19 : வேதத்தை அப்படியே ஏற்றுக் கொண்ட வைதீக மரபுக்கும், தென் தமிழ் நாட்டில் பொலிந்த திருமாலியம், சிவனியம் ஆகிய சமயங்களுக்கும் எந்த வேறுபாடுமே கிடையாதா?//

“வைதீக மரபு” என்று குறிப்பது எதை என்று முதலில் சொல்லவேண்டும். வியாசர், சங்கரர் முதல் விவேகானந்தர் வரை வைதிக (வேத வழிவந்த) நெறி என்று சொல்லும்போது அதில் நான்கு வேதங்கள் - கர்ம, ஞான, பக்தி, ராஜ யோகங்கள் - காணாபத்யம், கௌமாரம், சைவம், வைஷ்ணவம், சாக்தம், சௌரம் முதலிய அறுசமயங்கள் - சாங்க்யம், நியாயம், வைசேஷிகம்,யோகம், மீமாம்சம், வேதாந்தம் முதலிய ஆறு தத்துவ தரிசனங்கள் அனைத்தையும் இணைத்தே கூறுகிறார்கள். இன்று நாம் இந்துமதம் என்று கூறுவதும் இது தான். இதில் ஒவ்வொன்றாகப் பிய்த்து அவற்றுக்கிடையே வேறுபாடுகள் மட்டுமல்ல, மோதலும் இருக்கிறது என்று கூறுவது மேற்கத்திய, கிறிஸ்தவ மிஷநரி ஆராய்ச்சியாளர்களின் ஊழியமும், பொழுதுபோக்கும் ஆகும். (வேறுபாடுகள் என்பது வேறு, முரண்/மோதல் வேறு. ஒரு பூவில் பல வண்ணங்கள் இருப்பதும் வேறுபாடு தான், அவை அனைத்தும் சேர்ந்தே மலர் அழகாகிறது. இந்து கலாசாரம் இத்தகைய இயல்பான பன்முகத்தன்மையை அழிக்க முயல்வதில்லை, மாறாக போற்றி வளர்க்கிறது).





வேதம் விதை, மற்றவை அதன் கனிகள். விதையை நாம் பார்க்க முடியாது, கனிகளை மட்டுமே உண்ண முடியும். அதனால் தான் “வேதத்தை, வேதத்தின் சுவைப் பயனை, விழுமிய முனிவர்கள் விழுங்கும் கோதிலின் கனியை” என்கிறார் திருமங்கையாழ்வார். விதைக்கும், கனிக்கும் இடையே உள்ள தொடர்பு வளர்ச்சியே அன்றி வேறுபாடு அல்ல.

வேதத்தை அடிப்படையாகக் கொண்டு பின்னர் ஏற்பட்ட சமய வளர்ச்சி அனைத்தையும் புறக்கணித்து , ஆதி ஆரம்பத்தில் இருந்த யாக, யக்ஞம் மட்டுமே இந்துமதம் என்று கூறியது ஒரே ஒரு இயக்கம் தான் - “ஆரிய சமாஜம்”. இதை உருவாக்கிய சுவாமி தயானந்தர் சிவ,விஷ்ணு, சக்தி வழிபாடுகள், கோயில்கள் அனைத்தையும் கண்டித்தார். அதனால் தான், ஒரு பெரிய சமூக சீர்திருத்த அலையை ஏற்படுத்தி விட்டு, அதன் வரலாற்றுத் தேவை முடிந்தவுடன் அந்த இயக்கம் வளர்ச்சியடையவில்லை. “வைதிகம்” என்பதற்கான இந்தக் குறுகிய வரையறையை சங்கராசாரிய மடங்கள் உட்பட யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை.

சைவமும், வைதிகமும் ஒன்றே என்ற அளவில் சேக்கிழார் பெருமான் சொல்கிறார் என்று தோன்றுகிறது. திருஞானசம்பந்தர் புராணத்தில் வைதிக என்ற சொல் வரும் பல இடங்களில் சிலவற்றைப் பாருங்கள் -

“மறை வளர் திருவே வைதிக நிலையே வளர் ஞானப் பொறை அணி முகிலே புகலியர் புகலே” (1990, பெரியபுராணம்)

இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட
வந்த வைதிக மாமணி ஆனவர் (2088, பெ.பு)

மன்னு புகலியில் வைதிக வாய்மை மறையவனார் (2238, பெ.பு)

மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்கம் ஆகும் (2498)

மன்னிய புகலி வேந்தர் வைதிக வாய்மைச் சைவச்
செந்நெறி விளக்கு கின்றார் (2503, பெ.பு)

இன்னொரு விஷயம். நம் குருமார்களே வழங்கிய சைவம், வைணவம் என்கிற அழகிய சொற்கள் இருக்க, திருமாலியம், சிவனியம் என்ற சொற்கள் அபத்தமாக ஒலிக்கின்றன. ஏதோ வேதிப் பெயர்களின் பெயர்கள் போலவும் (தோரியம், யுரேனியம்) அவ்வப்போது வீசும் புற்றீசல் அரசியல் கொள்கைகள் போலவும் (மார்க்சியம், பெரியாரியம்) தோன்றும் இத்தகைய சொற்கள் உள்நோக்கத்துடன் உருவாக்கப் படுகின்றன. தயவு செய்து அவற்றைத் தவிர்க்கக் கோருகிறேன்.

// கேள்வி 20 : சமண, பௌத்த மதங்கள் போல வேதத்தை முற்றிலும் எதிர்க்காவிடிலும், தங்களுக்கு அசௌகரியமான இடங்களில் சைவ சித்தாந்திகள் விலகி நிற்கிறார்கள் என்பது உங்களுக்கு நிஜமாகவே தெரியாதா?//

நிஜமாகவே தெரியாது. அந்த அசௌகரியமான இடங்கள் என்னென்ன, எப்படி விலகி நிற்கிறார்கள் என்று தாங்கள் தக்க ஆதாரத்துடன் விளக்கினால் தெரிந்து கொள்வேன்.

இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. சங்கரர், ராமானுஜர், மத்வர் போல வேதாந்தத்தின் மூன்று அடிப்படை நூல்களூக்கும் (உபநிஷதங்கள், பிரம்மசூத்ரம், கீதை) சைவசித்தாந்த நோக்கில் உரை எதுவும் எழுதப் படவில்லை. அதனால் சீராக இத்தகைய ஆராய்ச்சியை செய்வது மிகவும் கடினம்.

சைவத்தைப் பொறுத்தவரை அனுபூதி நிலையில் அருளப்பட்ட திருமுறைகள் முதல் இடத்திலும், தத்துவம் பேசும் சித்தாந்த சாஸ்திரங்கள் இரண்டாம் இடத்திலும் இருப்பதாகக் கூறுவார்கள். ஸ்ருதி, ஸ்மிருதி போல இதைக் கொள்ளலாம். இந்த மிகப்பெரிய சமய இலக்கியக் கடலில் எந்த இடத்தில் எந்த வேதக் கருத்து விலக்கப் படுகிறது என்று கண்டுபிடிக்க முடியுமா? அப்படி ஒரு லிஸ்ட் கிடைத்து விட்டால் மற்ற எல்லா இடங்களிலும் வேதக் கருத்து ஏற்கப் படுகிறது என்று கொள்ளலாமா?

வேதாந்தம், சித்தாந்தம் இரண்டிலும் தேர்ந்த ஞானம் கொண்ட ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் (திருப்பராய்த்துறை) தமது திருவாசக உரையிலும், தாயுமானவர் பாடல் விளக்கங்களிலும் ஏராளமான இடங்களில் கீதை, உபநிஷத கருத்துக்களுடன் சைவசித்தாந்தம் முழுமையாக இயைவதை எடுத்துக் காட்டுகிறார். வேதாந்தம் கூறும் பிரம்மமே, சித்தாந்தத்தில் சிவம் ஆகிறது, சாங்கியம் கூறும் புருஷன்–பிரகிருதி தத்துவமே சிவ-சக்தி என்றெல்லாம் பலவாறாக விளக்கி ஒரு நீண்ட முன்னுரையையும் இந்நூலில் சுவாமி எழுதியிருக்கிறார். கீதை, உபநிஷத உரைகளிலும் இதே போன்று திருமுறைகளை மேற்கோள் காட்டுவார். இன்னொருவர் இதைவிடத் தெளிவாக வேதாந்தமும் சித்தாந்தமும் ஒன்றே என்கிறார், அதை முத்தாய்ப்பாக அடுத்த பதிலில் இடுகிறேன்.

// கேள்வி 21 : தாங்கள் குறிப்பிட்ட தாயுமானவர் பாடலில் ஒரு விளக்கம். சமரசம் என்பது முரண்படுகிற இரு பிரிவினருக்கிடையில் ஏற்படுத்தப்படுவது. அப்படிப் பார்த்தால் வேதாந்த, சித்தாந்த சமரசம் ஏன் தேவைப்பட்டது? என்ன முரண்பாடு? என்ன சமரசம்? என்று யோசித்த பிறகு அந்த மேற்கோளைப் பயன்படுத்த வேண்டாமா?//

சமரசம் என்பதற்கு பொதுவாக உள்ள literal meaning தாங்கள் கூறுவது. யோக மொழியில் அதற்குப் பொருள் “ஒன்றாகக் கருதுவது” என்பது. “ஸமத்வம் யோக உச்யதே” (வேறுபடுவதாகத் தோன்றும் பொருட்களிலும் ஒருமையைக் காண்பதே யோகம்) என்கிறது கீதை. “ஒன்றாகக் காண்பதே காட்சி, புலனைந்தும் வென்றான் தன் வீரமே வீரமாம்” என்கிறாள் ஔவை. “ஸாமரஸ்ய பராயணா” என்று லலிதா சகஸ்ரநாமத்தில் ஒரு திருநாமம் வருகிறது. சமரச சுத்த சன்மார்க்கம் என்று வள்ளல் பெருமான் கூறும்போதும் ஒருமையையே சுட்டுகிறார்.

தாயுமானவர் இங்கே கூறுவது வரலாற்றுக் குறிப்பு அல்ல, அவர் பேசுவது தெளிவான யோக மொழி.





“சிவஞான போதத்தை யான் ஆராய்ச்சி செய்ததில் எனக்குக் கிடைத்த பலன் சித்தாந்தமும் வேதாந்தமும், ஒன்றேயென்ற எனது கொள்கை உறுதியடைந்ததே” என்று சொல்பவர் வேறு யாருமல்ல, மாபெரும் தேசபக்தரும், பெரும் தமிழறிஞரும், சைவ மாமணியுமான வ.உ.சி அவர்கள். (சிவஞானபோதம் உரை, வ.உ.சி, பக்கம் 548).

// இந்தக் கேள்விகளுக்கு விருப்பு, வெறுப்பின்றி விடை கண்டால், நான் சொன்ன பதிலின் நேர்மை புலப்படும். முயற்சி செய்யுங்கள். //

இக்கேள்விகளை எழுப்பவும், விடைகாண முயலவும் நம் இருவரையும் தூண்டிய பரம்பொருளின் பேரருளை வியக்கிறேன்.

ஓம் தத் ஸத்.

அன்புடன்,
ஜடாயு

11 comments:

Anonymous said...

this is really good article that shows lineage between vedas and shaiva sect
i had a query
is saivas brutally killed samanas by pulling the latter in hot oil, by pulling them from mountains...
could u pls enlight me with you knowledge in this...
could u pls give some links supporting your view
thanks in advance

ஜடாயு said...

அனானி, தங்கள் மறுமொழிக்கு நன்றி.

// i had a query
is saivas brutally killed samanas by pulling the latter in hot oil, by pulling them from mountains...//

இது பற்றி அறிய கீழ்க்கண்ட கட்டுரையைப் படிக்கவும் -

சம்பந்தரும் வள்ளலாரும் இந்து ஜிகாதிகளா?
http://arvindneela.blogspot.com/2006/11/blog-post_24.html

Anonymous said...

//காயத்ரி தியான மந்திரத்தில் வரும் 'முக்தா, வித்ரும, ஹேம, நீல, தவளம்' என்ற இந்த ஐந்து வண்ணங்கள் பஞ்சபூதங்களையும் சதாசிவத்தையும் சுட்டுகின்றன//

தயவு செய்து வண்ணங்களைப் பற்றி விளக்கம் தருவீர்களா?
வண்ணங்கள் என்பது இயல்புகளையா சொல்கிறது?

"பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்."

இதில் ஐம்புலன்களைத் தானே சொல்கிறார்.

விவாத்திற்கு அல்ல எனது விளக்கத்திற்காக. :)

கானகம் said...

ஜடாயு அவர்களுக்கு,

தங்களது விளக்கங்களை கடந்த மூன்று பதிவுகளிலும் , இந்த பதிவிலும் கண்டேன். அருமையான ஆழ்ந்த விளக்கங்கள். உங்களுக்கு இறைவன் எல்லா நலனும் அருள்வானாக. அன்பன், ஜெயக்குமார்

Anonymous said...

One more proof!

http://www.hindu.com/2008/07/14/stories/2008071458300400.htm

Anonymous said...

அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய, ஸ்ரீ.ஜடாயு அவர்களுக்கு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தங்கள் "வேத நெறியும், சைவத்துறையும்.." நான்கு பாகங்களையும் படித்து, அதை மொத்தமாக ஒரு "வேர்ட்" ஃபைலாக தொகுத்து நன்பர்கள் எல்லாவர்க்கும் அனுப்பி வருகிறேன். மிக, மிக பயனுள்ள விளக்கங்கள். எல்லா பாரட்டுக்களும் உங்களுக்கே.. இது போன்று ஹிந்து தர்மத்தின் பல்வேறு தளங்களையும் விளக்கி தொடர்ந்து எழுதிட வேண்டுகிறேன். இறைவன் உங்களுக்கு வல்லமை தருவாராக!

Unknown said...

அன்புள்ள ஜடாயூ அவர்களுக்கு, வணக்கம். "ஒருப்படு சிந்தையினா ருடனுறைவின் பயன்பெற்றார்" எனத் தெய்வச் சேக்கிழார் கூறியதுபோன்ற இன்பம் தங்கள் இடுகைகளை வாசித்தபோது ஏற்பட்டது. உங்கள் படிப்பின் விசாலம் இடுகைகளில் தெளிவாகின்றது. வைதிகமும் சைவ சித்தாந்தமும் முரணுவன அல்ல என்பது என் அறிவுக்குப்பட்ட உண்மை. சென்ற தலைமுறையைச் சேர்ந்த சில தமிழறிஞர்களாகிய சைவர்கள், தங்கள் சொந்த வாழ்க்கையில் நேர்ந்த சில தோல்விகளினால் அதற்குக் காரணமானவர்களின் சாதியை முன் வைத்துக் கூசாமல் பொய்சொல்லி அதனை வெறுப்பாக வளர்த்து விட்டனர். நன்கு தமிழும் சைவசித்தாந்தமும் கற்றுத் திருமுறைப் பயிற்சியும் உடைய என் நண்பர்களிடத்திம் இந்நிலையைக் கண்டு வருந்துகின்றேன். தங்களுடைய இடுகைகள் மனத்துக்குத் தெம்பு ஊட்டுகின்றன. அன்புள்ள , கோ.ந. முத்துக்குமாரசுவாமி

ஒரு அரிசோனன் said...

உயர்மதிப்பிற்கு உரிய ஜடாயு அவர்களுக்கு,
தங்கள் blog என் கருத்தைக் கவர்ந்தது. தங்களது தமிழ் அறிவும், தேவாரம், திருவாசகம் இவற்றில் இருக்கும் புலமையும் என்னை வியக்க வைக்கிறது. உங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனான உமையொருபாகனை ஏத்துகிறேன்.

Srinivasan said...

great. I have no knowledge to praise this. bur very informative.

Unknown said...

உயர்மதிப்பிற்கு உரிய ஜடாயு அவர்களுக்கு,

சிவஞானபோதம் உரை, வ.உ.சி புத்தகம் எங்கு கிடைக்கும் அல்லது PDF format இருந்தால் எனது மின்னஞ்சல்க்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி !
koodalanand@gmail.com

Srinivasan said...

Arumai Sir. Arumai.