Thursday, February 15, 2007

யார் தமிழ் எதிரி? எவர் தமிழ் உணர்வற்றவர்?

கலாம் சமஸ்கிருதம் பற்றிய பதிவில் தனித்தமிழ் நடை குறித்து நான் சொன்ன ஒரு கருத்தை வைத்துப் பலரும் கும்மியடிக்கக் காண்கிறேன். என் தமிழ் உணர்வும், தமிழ்ப்பற்றும் பற்றி எனது பதிவுகளையும், இதற்கு முன் திண்ணையில் எழுதிவந்தவற்றையும் படித்தவர்கள் நன்கு அறிவார்கள்.

முதலில் நான் தமிழில் நல்ல கலைச்சொற்களை அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு எதிரானவனில்லை, ஆரவாரமில்லாமல் இத்தகைய சொற்களைப் பயன்படுத்தி வழிகாட்டி வருபவன். (உதாரணமாக, பத்ரியின் சம்ஸ்கிருதம் பற்றிய பதிவில் cryoptology என்பதற்கு நான் முதலில் பயன்படுத்தியிருந்த "குறியீட்டு இயல்" என்ற சொல்லே வந்தது கண்டு மகிழ்ந்தேன்). ஆனால் அதே நேரம் தமிழ்ப்படுத்துகிறேன் என்று பல பெயர்ச்சொற்களை தமிழில் படுத்தும் போக்கை ஏற்காதவன். ஸ்டாலின் என்ற பெயரை இசுடாலின் என்று இங்கே ஒருவர் எழுதுகிறார். இதே போக்கில் ஸ்விட்ஸர்லாண்ட் என்பதற்கு இசுவிச்சர்லந்து என்பதையும் ஸ்பெய்ன் என்பதற்கு இசுபெயின் என்பதையும் என்னால் (கொஞ்சமாவது பொதுப் புத்தியும், அழகியல் பற்றிய பிரக்ஞையும் உள்ள யாராலும்) ஏற்க முடியாது. நான் சொல்ல வந்தது இதைத்தான். தமிழைக் குறித்தோ அதன் தொன்மை குறித்தோ எந்த விமர்சனத்தையும் நான் வைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட 'புனிதப் பசு" பதிவர் ஒருவரது புரியாத நடையைக் கொடுந்தமிழ் நடை என்று சொன்னது மாத்திரம் தான் நான் செய்தது.

இதே அடிப்படையில் தமிழில் இயல்பாகப் புழங்கும் சம்ஸ்கிருதச் சொற்களை வேண்டுமென்றே நீக்கி, அபத்தமான “தனி”த் தமிழ் என்பதாக எழுதுவதையும் எதிர்க்கிறேன். திரு. பத்ரி அவர்களும் இதில் என்னுடன் உடன்படுகிறார்.

இன்றைய காலகட்டத்தில், இந்த வக்கிரமான தனித் தமிழ் கருத்தை தூக்கிப் பிடிக்கும் எண்ணத்தின் பின்னால் ஒளிந்திருப்பவை இந்தத் தவறான புரிதல்கள் தான் -


  • சம்ஸ்கிருதமும், தமிழும் ஒன்றுக்கொன்று எதிரிகள். அவற்றுக்கு இடையே வரலாற்று ரீதியான மோதல் உள்ளது.
  • வட இந்தியர்கள் மற்றும் சம்ஸ்கிருதத்தை எதிர்க்காத அல்லது உயர்வாக மதிக்கும் எல்லா சாதிகளையும் சேர்ந்த எல்லா இந்தியர்களும் பார்ப்பனர்கள். தமிழ் எதிரிகள், துரோகிகள், தமிழர்களை அடிமைப் படுத்தத் துடிப்பவர்கள். (இதன் ஆணிவேர் ஆரிய திராவிட இனவாதத்தில் உள்ளது).
  • சம்ஸ்கிருதம் பிராமணர்களின் மொழி. அதில் நல்லது என்று எதுவுமே இல்லை. அது தீயது. அது அரக்கன். அது பாம்பு.

இவை அனைத்தும் எவ்வளவு பெரிய அண்டப் புளுகுகள், இந்திய தேசிய சிந்தனைக்கு எதிரானவைகள், தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கே எதிரானவைகள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. மொழிப் பாதுகாப்பின்மை பற்றிய ஒரு கேவலமான தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி அதில் கொஞ்ச காலம் வெற்றிகரமாகக் குளிர் காய்ந்த அரசியல் கொள்கைகளின் எச்சங்கள் தான் இவை. இவற்றின் காலம் மலையேறிவிட்டது என்று எல்லாத் தமிழர்களும், குறிப்பாக ஒருங்கிணைந்த, வலுவான இந்திய தேசியத்தின் ஊக்கத்தால் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் உயர்ந்த நிலை அடைந்திருக்கும் தமிழர்கள் உணர வேண்டும். உரத்துச் சொல்ல வேண்டும்.

இரண்டாயிரம் ஆண்டு தமிழ் இலக்கியத்தின் பாரம்பரியத்திற்கே எதிரானது இந்த “தனித் தமிழ்” ஜல்லி. தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலம்பு, திருக்குறள், கம்பராமாயண காலத்திலிருந்து இந்த நூற்றாண்டு வரை ஒரு உயிர்த் துடிப்புள்ள மொழி செய்துவரும் அற்புதமான பரிசோதனைகளின் பரிமாணங்கள் தான் சம்ஸ்கிருத மற்றும் பிற மொழிச் சொற்களின் இயல்பான கலப்புகள். இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாதவர்கள் குருட்டுத் தனமான மொழித் தீவிரவாதிகளே அன்றி மொழியை வளர்ப்பவர்கள் அல்லர்.

என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கி வந்துள்ள பின்னூட்டங்களைப் புறக்கணித்து சில எதிர்க்கருத்துக்களுக்கு மட்டும் இங்கே பதில் சொல்கிறேன். இந்த அரிய தகவல்களில் சிலவற்றை எனக்கு அருளி உதவிய சான்றோர் ஒருவருக்கு நன்றியுடன் கடமைப் பட்டுள்ளேன்.

சம்பந்தர்:

தமிழன் என்பவர் எழுதுகிறார்:

"திருஞானசம்பந்தப் பெருமானே தமிழில் வடமொழி ஆதிக்கத்தைக் கண்டு வெறுப்படைந்தவர்தான். தன்னைப் பல இடங்களில் தமிழ்ஞானசம்பந்தன் என்றே அழைத்துக் கொள்கின்றார்.தனக்கு பூணூல் அணிவித்தபோது கூட காயத்திரி மந்திரம் வேண்டாம் என்று தமிழிலே சைவ வாழ்த்து பாடச்சொல்கிறார்."

இது எப்படி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய், திரிபுவேலை என்று பார்ப்போம். திருஞானசம்பந்தருக்குப் பூணூல் அணிவித்த சடங்கு முடிந்ததும் அங்கே வந்திருந்த வேத பண்டிதர்களுக்குப் பாடியதாகச் சொல்லப்படும் பஞ்சாக்கரப் பதிகத்தில் வரும் இந்தப்பாடல்:

மந்திரம் நான்மறை யாகி வானவர்

சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன

செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்கு

அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே

'நமசிவய' என்ற திருவைந்தெழுத்தே மந்திரங்கள் அனைத்திற்கும் மூலம் என்றும், தீ வளர்த்து ஓம்பியிருக்கும் வேதியர் முப்போதும் ஓதும் சந்தியாவந்தன மந்திரத்திலும் மூலமாயிருப்பது அதுவே என்கிறார். ஏனெனில் ஐந்துமுகம் கொண்ட வேதமாதாவான காயத்ரி தேவியே சதாசிவபத்னியான மனோன்மணி. காயத்ரி அஷ்டோத்திரத்திலே மனோன்மண்யை நம: என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. காயத்ரி தியான மந்திரத்தில் வரும் 'முக்தா, வித்ரும, ஹேம, நீல, தவளம்' என்ற இந்த ஐந்து வண்ணங்கள் பஞ்சபூதங்களையும் சதாசிவத்தையும் சுட்டுகின்றன. மாணிக்கவாசகர் சிவபுராணத்திலே 'நிறங்கள் ஓர் ஐந்துடையாய்' என்றதும் அதனால்தான். இதிலே காயத்ரி மந்திரம் வேண்டாம் என்று எங்கே சொல்கிறார்?




மேலும் 'திருஞானசம்பந்தர் வடமொழி ஆதிக்கத்தைக் கண்டு வெறுப்படைந்தவர்தான்' என்றொரு அடாத பொய்யைச் சொல்லி இருக்கிறார்.
இதையெல்லாம் மிசினரிமார்தான் இட்டுக்கட்டிச் சொல்வார்கள்.

பதிகத்துக்குப் பதிகம் இறைவனை வேத உருவாகக் கண்டவர் 'வேதநெறி தழைத்தோங்க' (சேக்கிழார் வாக்கு) வந்த திருஞானசம்பந்தர். வேதம் என்பதை “மெய்யறிவு” என்பதாக மட்டுமல்ல ரிக், யஜுர், சாம, அதர்வ வேதங்கள் என்ற பொருளிலேயே ஏராளமான பாடல்களில் பாடியுள்ளார் –

“வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாக.. “
“வேதமொடு ஆறங்கம் ஆயினானை.. “
“சாகை ஆயிரம் உடையார்.. “ (ஆயிரம் கிளைகள் உள்ள “ஸஹஸ்ர சம்ஹிதா” என்று ரிக்வேதத்தை குறிப்பிடுவார்கள்)

திருமூலர்:

சம்ஸ்கிருத ஐம்பது எழுத்துக்கள் அடிப்படையில் ஒலிக்குறிப்புகளாகும். இவை பலவித சேர்க்கையில் (combination) அண்டசராசரங்களின் தோற்றத்திற்கும் அடிப்படையாகும். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் ஐந்தெழுத்தின் சூட்சுமத்தையும் புரிந்து கொள்ள முடியும் என்று பாடுகிறார் திருமூலர்.

ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின்
ஐம்பது எழுத்தும் ஐந்தெழுத் தாமே


வள்ளலார்:

வள்ளலாரது திருவடிப் புகழ்ச்சியின் பாடல்களில் பல முழு சம்ஸ்கிருதத்தில் உள்ளன என்று சொல்லியும் சில மூடர்கள் அவர் சம்ஸ்கிருத வெறுப்பாளர் என்று இன்னும் வாதிடுகின்றனர். அந்த நூலின் முதற்பாடல் இதோ –

பரசிவம்சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம்

பரசுகம் தன்மயம் சச்சிதா னந்தமெய்ப் பரமவே காந்தநிலயம்

பரமஞா னம்பரம சத்துவம கத்துவம் பரமகை வல்யநிமலம்

பரமதத் துவநிரதி சயநிட்க ளம்பூத பௌதிகா தாரநிபுணம்

பவபந்த நிக்ரக வினோதச களம்சிற் பரம்பரா னந்தசொருபம்

பரிசயா தீதம்சு யம்சதோ தயம்வரம் பரமார்த்த முக்தமௌனம்

படனவே தாந்தாந்த மாகமாந் தாந்தநிரு பாதிகம் பரமசாந்தம்

பரநாத தத்துவாந் தம்சகச தரிசனம் பகிரங்க மந்தரங்கம்

பரவியோ மம்பரம ஜோதிமயம் விபுலம் பரம்பர மனந்தமசலம்

பரமலோ காதிக்க நித்தியசாம் பிராச்சியம் பரபதம் பரமசூக்ஷ்மம்

இதில் மெய் என்பது தவிர அத்தனையும் செஞ்சம்ஸ்கிருதச் சொற்கள். அற்புதமான ஞான, யோக தத்துவங்கள் அடங்கிய இந்த நூலை இங்கே படிக்கலாம்.





சன்மார்க்கம், சமரசம், அத்துவிதம் போன்ற வடசொற்களைத் தவிர்த்து தனித்தமிழில் அமைக்குமாறு சிலர் சொல்ல 'நிறைமொழி மாந்தர் ஆணையிற்' பிறந்த எல்லாம் மறைமொழிகள்தாம். அதில் மொழி பேதமில்லை, மாற்ற முடியாது என்று வள்ளலார் சொன்னார் என்று படித்திருக்கிறேன்.

இப்போது வள்ளலாரே சமஸ்கிருதச் சொற்களின் கலப்பைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

சன்மார்க்கம் என்ற அடிப்படைக் கலைச்சொல் ஒன்று. அதனோடு இணைக்கும் சமரசம், சுத்தம் என்பனவாகிய சொற்கள். இத்தகைய சொற்களை வள்ளலார் உண்டாக்கவில்லை. இவைகளையெல்லாம் வடமொழி எனத் தள்ளிவிட்டு, பழகுதமிழில் இக்கொள்கையை அமைத்திருக்கலாமே என்பது சிலரின் ஆசை.

மெய்ப்பொருளியற் கலைச்சொற்கள் மக்களாலோ, ஒரு இனத்தாராலோ உண்டாக்கப் பெற்றவை அல்ல. பரநாதத் தலத்தே விளங்கும் பரநாதம், பரவிந்து என்ற இரண்டும் இணைய அவ்விணைப்பின் மூலம் (அனந்த தாத்பர்யங்களை உள்ளடக்கி) பல்வேறு பொருள் நிலைகளை உள்ளடக்கி எழுந்த சொற்களே அவை ஆதலின் அவைகளை மாற்றுதல் இயலாது என்று குறிப்பிடுகிறார். அவைகள் வடமொழிச் சொற்கள் அல்ல, வடலுறு சொற்கள் என்பது வள்ளலார் வழக்கு.

ஆதாரம்: சிதம்பரம் இராமலிங்கரின் சித்திவளாகம் - பக்கம் 26/27.

இந்தப்புத்தகம் வள்ளலாரின் வலைத்தளத்திலேயே இருக்கிறது.

வடலுறு சொற்கள்: வடக்குத் திசையிலிருந்து இங்கே கொண்டு வரப்பட்டவை அல்ல; ஆலவிதை போன்ற பீஜமான சொற்கள்.
வடம் என்றால் ஆலமரம்.

தொழுவூர் வேலாயுத முதலியார்:

சமஸ்கிருதம் ஏதோ பிராமணர்களின் தனிச்சொத்து தனிமொழி என்றொரு பிம்பத்தை உருவாக்கி அதை அழித்துக் கொண்டிருப்பது சமீபத்தில்தான். 19' ம் நூற்றாண்டு வரை சமஸ்கிருதத்தை அனைத்து சாதியினரும் கற்றுத் தேர்ந்திருந்தனர். இதற்குச் சான்றாக சமீபத்தில் என் நண்பர் ஒருவர் மூலம் கிடைத்த ஓர் அரிய புத்தகத்தைக் கீழே பாருங்கள்:






சங்கரவிஜயம் என்ற இந்தப் புத்தகத்தை 1879'ம் ஆண்டில் சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்த்திருப்பவர் தொழுவூர் வேலாயுத முதலியார். வெளியிட்டவர் தண்டலம் ஆறுமுக முதலியார். இந்த தொழுவூர் வேலாயுத முதலியார் சமரச சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்த முன்னோடிகளில் ஒருவர். வள்ளலாருக்கு மிக அணுக்கமானவர். சிதம்பரம் ராமலிங்கம் என்றே தம்மை அழைத்துக் கொண்டவரை வள்ளலார் என்று பெயரிட்டு அழைத்தவரும் இவர்தான்.

வெங்கட் சாமிநாதன் முன்பு சிஃபி.காமில் ஒரு கட்டுரையில் வருந்தியிருந்தார் – “தமிழ் இங்கு வளர்க்கப் படவில்லை, வெறுமனே தமிழ் கோஷப் படுத்தப் பட்டுள்ளது என்று”. ஒரு குறிப்பிட்ட கூட்டத்தின் இந்த எதிர்வினைகள் அதை உண்மையென்று நிரூபிக்கின்றன.

தமிழ் கோஷப் படுத்தப் பட்டது மட்டுமல்ல, வேஷப் படுத்தவும் பட்டுள்ளது. அதனால் நாசப் படுத்தப் படுகிறது. அதைச் செய்பவர்கள் தான் தமிழ் எதிரிகள். தமிழ் உணர்வு இல்லாதவர்கள்.

38 comments:

ஐயன் காளி said...

மொழிப் பாதுகாப்பின்மை பற்றிய ஒரு கேவலமான தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி அதில் கொஞ்ச காலம் வெற்றிகரமாகக் குளிர் காய்ந்த அரசியல் கொள்கைகளின் எச்சங்கள் தான் இவை.

ஒன்று சொன்னீர். நன்று சொன்னீர்.

Anonymous said...

maple sataayu ,
we know how to wash our backside.
you better watch your backside.

Anonymous said...

*Standing ovation*

Thanks also to Thamizhan for his role in bringing out such an excellent post, with irrefutable facts, from you.

Anonymous said...

Jataayu bhai,


We are following prophet moohamad(saw). if ou pray in arabi like we do in our mosques then tamil will become arabised and all theese problems would cease to exist.

asalaanulailakum!

Anonymous said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ஜடாயு. இவர்களுக்கு தமிழும் தெரியாது. சமஸ்கிருதமும் தெரியாது. வெறுப்பை உமிழும் பதிவுகளை கறுப்பு மனத்துடன் எழுத மட்டுமே தெரியும். அவர்கள் அடிக்கும் ஜல்லிகளிலும் ஜால்ராக்களிலும் அவர்கள் மதி மயங்கி அழியட்டும். நீங்கள் கண்டுக்காம உங்கள் கருத்துகளை எழுதிக்கிட்டே வாங்க.

VSK said...

அடுத்த இரண்டு பேரை மூட்டி விட்டு, அதில் ஆதாயம் தேட நினைக்கும் மக்களுக்கு நல்ல பதிலாய் இது அமைந்திருக்கிறது.

ஆங்கிலம் கற்கலாம்; ஜெர்மானிய மொழி கற்கலாம், இன்னும் பிறவெல்லாமும் கற்கலாம்; ஆனால் வடமொழி கூடாது என அடிப்படையில்லாமல் வாதாடுவோரிடம் எதைச் சொல்லித்தான் என்ன பயன்?

நல்ல பதிவுக்கு நன்றி.

கால்கரி சிவா said...

ஜடாயு,

ஆங்கிலம் பல மொழி சொற்களை உள்வாங்கி வளர்ந்து கொண்டு இருக்கிறது. ஆங்கில அகராதிகளைப் பார்த்தால் எந்த சொல் எந்த மொழியிலிருந்து வந்தது என இருக்கு. தமிழ் வார்த்தைகள் கூட ஆங்கிலப் படுத்தப்பட்டுள்ளன.

இந்த நவீன காலகட்டத்தில் அந்த பரநத மனப்பான்மை நம்மிடையே ஏன் இல்லை?

சமஸ்கிருத வார்த்தைகள் அதிகம் உள்வாங்கியது மலையாளம். மலையாளம் என்ன அழிந்தாவிட்டது? தமிழைவிட நன்றாகவே வளர்கிறது. மலையாளிகள் எங்கே போனாலும் தங்கள் மொழியை மறப்பதில்லை.

ஆனால் நாமோ தமிழ் பேசிவிட்டாலே போதும் சக தமிழர் மூளையில் இவர் எந்த ஜாதியாய் இருப்பார் எனக் குடைச்சல் ஆரம்பித்து விடும். சாப்பாட்டிலிருந்து ஆரம்பிப்பார்கள் கேள்விகணைக்களை. என்ன ஒரு குறுகிய மனப்பான்மை.

//இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாதவர்கள் குருட்டுத் தனமான மொழித் தீவிரவாதிகளே அன்றி மொழியை வளர்ப்பவர்கள் அல்லர்.
//

இவர்கள் மொழியை வளர்ப்பதைவிட அதை வளரவிடமால் இருப்பதில் அதிகம் ஆர்வமுள்ளவர்கள்.

என் செய்வது எல்லாம் கருப்புக்கொடி சினிமா கவர்ச்சிக் கயவர்களின் கைவரிசையில் சுயசிந்தனையை இழந்தவர்கள்.

Thamizhan said...

நான் முடிந்தவரை தரமுள்ள சொற்களைப் பயன்படுத்திக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பார்க்கின்றேன்.
திராவிடர்கள்,வெறுப்பு விசம் என்றெல்லாம் எழுதியிருப்பதால் இந்தப் பின்னூடல் என்று தெளிவாக எழுத்யிருந்தேன்.
தமிழர்களில் பல்ர் சமசுகிருதம் படித்த அறிஞர்கள் இருந்தார்கள்.மிகவும் அதிகமான சமசுகிருத வார்த்தைகள் தமிழில் திணிக்கப்பட்டு தமிழில் என்ன இருக்கிறது எல்லாம் சமசுகிருதத்தில் இருந்து வந்ததுதான் என்ற திமிர்தான் தமிழறிஞர்களின் தனித்தமிழ் இயக்கத்திற்கு வித்திட்டது என்றும் எழுதியிருக்கிறேன்.
100-150 ஆண்டுகட்கு முன்னர் உள்ள தமிழ் திருமண அழைப்பிதழே விவாஹசுபமுஹூர்த்தம்,மற்றும் எழுதப்பட்டதில் தமிழைவிட வடமொழி மிகுந்திருந்தது என்றெல்லாம் எடுத்துக்காட்டினால் அது உண்மையா இலையா என்று சொல்லலாமே தவிர வேறு அற்ப வார்த்தைகளுக்கு இடமில்லை.
திருஞானசம்பந்தரைப்பற்றிச் சொன்னதற்கு அடைமொழிகள் அள்ளி வீசப்பட்டுள்ளது.
சமபந்தரும் வள்ளளாரும் என்பது ஊரன் அடிகளார் எழுதி,சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்,வடலூர் வெளியிட்டது.அதில் பக்கம் 156 "சம்பந்தர் கால்த்தில் தமிழ் வழக்குக் குன்றி அயல் வழக்குகள் மிகுந்திருந்தன.அயல் வழக்குகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றினார் சம்பந்தர்."
பக்கம்158
"தன்னைத் "தமிழ் ஞானசம்பந்தன்" என்றும் தன்னுடைய தமிழை "ஞான் சம்பந்தன் தமிழ்" என்றும் கூறிக்கொள்வதில் பெருமை கொள்ப்பவர்.
நாடு தமிழ்நாடாக இருந்தும் மக்கள் தமிழர்களாக இருந்தும் வடமொழிக்கே முதன்மை என்றாகிவிட்ட நாளில்,தமிழுக்குமுதன்மையும் எழுச்சியும் ஏற்றமும் தந்து நாடெங்கும் சைவமும் தமிழும் தழைத்தினி தோங்கச் செய்தது ஞானசம்பந்தரின் தமிழ்ப்புரட்சி.
பக்கம்162
சம்பந்தருக்குப் பூணூல் அணிவிக்கும் சடங்கு நிகழ்ந்த போது காயத்திரி மந்திரத்தை உபதேசிக்கத் தொடங்கிய அந்தணர்களுக்குச் சம்பந்தர் "அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே" என்று கூறித் திருவைந்தெழுத்தின் பெருமையைச் சாற்றும் பதிகத்தைப் பாடினார்.
இதில் பதிவாளர் எதை மறுக்கிறார் என்பதை சமுக்காளம் பாய் இதெல்லாம் இல்லாமல் வார்த்தைகளால் வடிக்கட்டுமே.
ஞானசம்பந்தர் உயிருடன் இருந்தபோது அவர் கூடவே யாழ் வாசித்து வந்தவர் ஒரு தாழ்த்தப்பட்ட ஆனால் அவருக்கு மிக் நெருங்கிய நண்பராக நடத்தப்பட்டவர் என்பதற்காக பூணூல் கூட்டம் அவரை எப்படி நடத்தினார்கள் என்பது வேறுகதை.
அடுத்து தமிழை இகழ்ந்தோரை இவர்கள் தமிழ் வளர்த்தார் என்றே சொல்வதில் உள்ள உண்மையை நீங்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழை நீச பாசை என்பது எதிலே சேர்ந்தது.அவர் சொன்ன மற்றவற்றை சீரங்கம் அக்ணிஹோத்திரம் தோத்தாத்திரியாரின் இந்து மதம் எங்கே போகிறது என்ற நூலில் தெரிந்து கொள்ளலாம்.இன்னும் அந்த மடத்தின் மற்றசெய்திகளையும் அறிந்து கொள்ளலாம்.
தமிழில் வடமொழி கல்ப்பு நிறைய உள்ளது,அது எவ்வளவு என்பதை பழைய ஏடுகள் எதைப்படித்தாலும் தெரியும்.அதை மாற்றித் தமிழில் எழுதினால் சிலருக்கு அது கேலியாக இருக்கிறது.அப்படித்தான் தமிழிசையும் இருந்தது.அப்போதுதான் கி.ஆ.பே.விசுவநாதம் சொன்னார் த்மிழிசை என்பது என்னவென்று தமிழர்க்குப் புரியும் அது புரியாதவன் தமிழனில்லை என்றார்.
தமிழ் செம்மொழி ஆனால் சோறு போடுமா என்று கேட்பவன் தமிழனா?கேட்டால் ஏன் கோபம் வருகிறது.எங்கட்குத் தெரியும் தமிழ் எங்கட்குத் தாய்மொழி என்று.உங்கட்கு எது தாய் மொழி எது பிழைப்பு மொழி என்று கேட்டால் உங்கள் உள்ளங்களுக்குத்தானே உண்மை தெரியும்.
தமிழை சமசுகிருதத்தால் கொல்லப் பார்த்தார்கள் முடியவில்லை.இப்போது தமிங்கலம்,மீண்டும் சமசுகிருதம் என்று முயற்சி செய்கிறார்கள் பலர் என்று சொன்னால் அதைச்செய்பவனுக்குத்தானே கோபம் வரவேண்டும்.
ஷ் புஷ் எங்கே வேண்டுமானாலும் வரலாமென்பதா?மணவை முச்தபா பல்லாயிரக்கணக்கான புதிய தமிழ் வர்த்தைகளைப் பல துறைகளிலும் வெளியிட்டுத் தமிழில் வேர்ச்சொற்கள் நிறைய உள்ளன.அதனால்தான் என்னால் செய்ய முடிகிறது என்கிறாரே.அவர் வேண்டுமிடங்களில் மட்டுந்தானே வேற்று மொழிச்சொற்களைக் கல்ந்துள்ளார்.
அவருக்கு என்ன அடைமொழி வைத்திருக்கிறீர்கள்.
வெறுப்பும் விசமும் யாரிடம் என்பதை சிந்தி்த்து மற்றவர்களை மதித்து வாழக்கற்றுக் கொள்வது நல்லது.வந்தவர்களை வாழவைத்தே அடிமையான்து தமிழும் தமிழினமும்.இனி அது வேண்டாம் என்றால் ஏனய்யா பலருக்குக் கோவம்?

அரவிந்தன் நீலகண்டன் said...

உண்மைகளை வெளிப்படுத்தும் உன்னத பதிவு சகோதரர் ஜடாயு அவர்களே. ஆதாரங்களுடன் தரப்படும் அருமையான பதிலடி. சமஸ்கிருதம் நம் அனைவருக்கும் உரியது. சங்ககாலத்தில் ஆனைகளைப் பழக்கியவர் முதல் மருத்துவ தொழில் பயின்ற பெரியபுராண பரஞ்சோதி வரை சமஸ்கிருதம் தமிழகத்தில் வாழ்வியலை செம்மைப்படுத்திய திருமொழியேயாகும். வாழ்க உங்கள் அருமையான பதில். எதிரணி சகோதரர்கள் இத்தகைய மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர்வதில் காட்டும் கரும சிரத்தை பாராட்டுதலுக்குரியது. (அவர்களது நேர்மை குறைவையும் சமூகநீதி முகமூடிக்குள் ஒளிந்து கொண்டு வசைபாடும் பலவீனத்தையும் இதற்காக கண்டுகொள்ளாமல் விட முடியாது என்றாலும் கூட)

Anonymous said...

How about this

If this is the only best thing to do get pooniyam why cho is not dofying this. Instead of dofying this he is doingu drama, doingu lollu, doingu politics for money and ego which are all definedu as pavam by his writingu. So he is trying to sayingu as all his peopleu are aware and doingu pavam and pavam to make this bhoomi as with more kali so bhoomi will get vedichifying by their pavam. We all don’t know this pavam because we were never known about these kind of pavams are there in the bhoomi and bhoomi will get vedichifying because of this kind pavams. So we may not the reason for that vedichifying but people who know that and over ruled those rules might have caused this pavam by pavam and it is added to pavam made that as pavam squire or may be more powers then that. So indirectly he is saying aval are making the bhoomi to vedichifying because their rules are not followed by others and they are not following as they are the creator of them is what the extract of his preaching is the kelvi to them.

We will be going on askifying but they will not tellingu anything as they do in all such scenarios.

அன்புடன்,
அகல்யா.

Anonymous said...

ஜடாயு ஒரு பார்ப்பனர். வடமொழியை வாழ்த்தும் ஒரு பார்ப்பனர். அவர் வடமொழியில் வலைப்பதிவு செய்தால் எத்தனை பேர் படிப்பார்கள்? ஒரு நாயும் சீந்தாது.

அது நன்கு தெரிந்ததால்தான் தமிழில் வந்து குலைக்கிறது. மாடு துன்னும் செளராஸ்டிரர்களும் செக்ஸ் டாக்டரும் ஜடாயுவுக்கு காவடி தூக்குவது இன்றைக்கு நேத்தா நடக்கிறது.

அது மட்டுமல்ல, காக்கி அரை டவுசர் நீலகுண்டனும் பின்பாட்டு வேறு.

தமிழ்தான் பிடிக்காதே? பிறகு ஏன் கோவிலில் தமிழில் பேசி பிச்சை எடுக்க வேண்டும்?

ஜடாயு said...

கருத்துச் சொல்லிய அனைவருக்கும் நன்றி.

// "தன்னைத் "தமிழ் ஞானசம்பந்தன்" என்றும் தன்னுடைய தமிழை "ஞான் சம்பந்தன் தமிழ்" என்றும் கூறிக்கொள்வதில் பெருமை கொள்ப்பவர். //

"நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்".. இதை யார் மறுத்தது?
ஆனால், இதை வைத்துக் கொண்டு அவர் வடமொழியை வெறுத்தவர், வேதத்தை மறுத்தவர்கள் என்றெல்லாம் சொல்வதுதான் சமுக்காளப் பொய். ஒரு யோசனை - இதே ரீதியில், அவர் தி.க தோன்றுமுன்பே அதில் சம்பந்தர் நிரந்தர உறுப்பினர். தன் பூணூலையும் வேறு சில பார்ப்பனர்களின் பூணூலையும் அறுத்தவர் என்றெல்லாம் கூடக் கதை கட்டி விடுங்களேன்... சில ஜால்ராக்கள் அதையும் வந்து இங்கு எழுதட்டும்.

உங்களைப் போன்ற ஆட்களுக்கு சிவ பக்தியும் கிடையாது, சம்பந்தர், வள்ளலார் மீது குருபக்தியும் கிடையாது. இந்து ஆன்மிக நெறியில் பற்றும் கிடையாது. சம்பந்தரை வைத்து, வள்ளலாரை வைத்து எப்படி சாதி,இனத் துவேஷத்தை இன்னும் தூண்டலாம் என்பது ஒன்று தான் உங்களுக்குக் குறி.

ஆளுடைய பிள்ளையாரின் தமிழ்ப் பதிகங்களை தினந்தோறும் ஓதி வழிபடும் சிவத் திருமணி ஒருவர் சொன்ன கருத்துக்களைத் தான் இங்கே எழுதியிருக்கிறேன் என்பதையும் கூறிக் கொள்கிறேன்.

// "சம்பந்தர் கால்த்தில் தமிழ் வழக்குக் குன்றி அயல் வழக்குகள் மிகுந்திருந்தன.அயல் வழக்குகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றினார் சம்பந்தர்." //

சமண, பௌத்த, களப்பிரர் ஆக்கிரமிப்பு பற்றித் தான் ஊரன் அடிகள் இங்கு கூறுகிறார் என்று நினைக்கிறேன். அடிகளை நான் அறிவேன். வேத நெறிக்கு அவர் எதிரானர் அல்லர். இந்துத்துவ இயக்கங்களுக்கும் ஆசியும், ஆதரவும் தருபவர். அவரது கூற்றைத் திரிக்கப் பார்க்கும் உங்கள் உள்நோக்கம் தான் இதில் தெரிகிறது.

// இந்து மதம் எங்கே போகிறது என்ற நூலில் தெரிந்து கொள்ளலாம்.இன்னும் அந்த மடத்தின் மற்றசெய்திகளையும் அறிந்து கொள்ளலாம்.//

ஏதோ ஒரு மடம் என்னவ்வோ சொன்னால் சம்ஸ்கிருதம் என்ற மொழி முழுவதையுமே தமிழ் எதிரி என்றும் பேய் என்றும் கூறுவீரா? நல்ல நியாயம்!

// தமிழை சமசுகிருதத்தால் கொல்லப் பார்த்தார்கள் முடியவில்லை.//

எப்படி, எப்படி ஐயா இப்படி எல்லாம் சிந்திக்கிறீர்கள்??

அப்போ தமிழ்க் கொலையாளிகள் பட்டியலில் கம்பனையும், அருணகிரியையும், வள்ளலாரையும், சேக்கிழாரையும், ஆழ்வார்களையும் சேர்க்கப் போகிறீர்கள்? வாழ்க உங்கள் தமிழ்த் தொண்டு!

Anonymous said...

//அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ஜடாயு. இவர்களுக்கு தமிழும் தெரியாது. சமஸ்கிருதமும் தெரியாது. வெறுப்பை உமிழும் பதிவுகளை கறுப்பு மனத்துடன் எழுத மட்டுமே தெரியும். அவர்கள் அடிக்கும் ஜல்லிகளிலும் ஜால்ராக்களிலும் அவர்கள் மதி மயங்கி அழியட்டும். நீங்கள் கண்டுக்காம உங்கள் கருத்துகளை எழுதிக்கிட்டே வாங்க.//

இதுக்கு பேரு என்ன ஜல்லி/ஜால்ரா இல்லையா...தோடா, சொல்ல வந்துட்டாரு.

//ஆங்கிலம் கற்கலாம்; ஜெர்மானிய மொழி கற்கலாம், இன்னும் பிறவெல்லாமும் கற்கலாம்; ஆனால் வடமொழி கூடாது என அடிப்படையில்லாமல் வாதாடுவோரிடம் எதைச் சொல்லித்தான் என்ன பயன்?//

ஆங்கில மொழி, ஜெர்மன் மொழி எல்லாம் கத்துக்கிட்டா $-ல சம்பாதிக்கலாம், சமஸ்கிருதம் கத்துகிட்டு என்ன நாக்கையா வழிக்கிறது.

எல்லாம் சமச்சுகிருதம், வேதத்தில இருந்து வந்ததுன்னு திரிக்கிற வேலைய விடுங்க வாத்தியாரே.

//ஆங்கிலம் பல மொழி சொற்களை உள்வாங்கி வளர்ந்து கொண்டு இருக்கிறது. ஆங்கில அகராதிகளைப் பார்த்தால் எந்த சொல் எந்த மொழியிலிருந்து வந்தது என இருக்கு. தமிழ் வார்த்தைகள் கூட ஆங்கிலப் படுத்தப்பட்டுள்ளன.

இந்த நவீன காலகட்டத்தில் அந்த பரநத மனப்பான்மை நம்மிடையே ஏன் இல்லை?

சமஸ்கிருத வார்த்தைகள் அதிகம் உள்வாங்கியது மலையாளம். மலையாளம் என்ன அழிந்தாவிட்டது? தமிழைவிட நன்றாகவே வளர்கிறது. மலையாளிகள் எங்கே போனாலும் தங்கள் மொழியை மறப்பதில்லை.//

தேவைன்னா பண்ணலாம். தேவை இல்லாமல் உட்புகுத்தினால் தப்புதானே?

திரு. என்று அருமையான பட்டம் இருக்கும்பொழுது ஸ்ரீ-ன்னு மாற்றினால் தப்புதானே. இல்லை மலையாளி மாத்துறான், அதனால் நானும் மாத்துறேன்னா, அதற்குப் பெயர் மூடத்தனம்.

திரு. அப்துல் கலாம் அவர்கள் மோடியைப் பற்றியோ அல்லது சமஸ்கிருதத்தைப் பற்றியோ ஒரு வார்த்தை கூறியவுடன் வாரி சுருட்டிக் கொண்டு பதிவு போடத் தெரிந்த உமக்கு, அவர் தமிழ் பற்றி ஆற்றிய உரை எதுவும் கண்ணில் படவில்லையா?

இதற்குப் பெயர்தான் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது.....

Amar said...

வெரி குட், ஜடாயூ.

//மொழிப் பாதுகாப்பின்மை பற்றிய ஒரு கேவலமான தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி அதில் கொஞ்ச காலம் வெற்றிகரமாகக் குளிர் காய்ந்த அரசியல் கொள்கைகளின் எச்சங்கள் தான் இவை.
//

மிக அருமையாக சொல்லிவிட்டீர்கள்.

பார்த்தீர்கள் என்றால் விஷயம் என்ற வார்த்தைக்கு விடயம் ஏன்று எழுதுகிறார்கள்.....இதில் தமிழ் எப்படி செழிக்க போகிறது என்று தெரியவில்லை.

வெளியில் இருந்து வரும் அனைத்தையும் நிறுத்திவிட்டால் தமிழன் தலிபானாக மாறிவிடுவான்.

ஜடாயு said...

நான் "தவறான புரிதல்கள்: பற்றி எழுதியிருப்பதை அப்படியே உண்மையாக்குகிறார் பாருங்கள் ஒரு அனானி!

Anonymous said...
// ஜடாயு ஒரு பார்ப்பனர். வடமொழியை வாழ்த்தும் ஒரு பார்ப்பனர். //

// அவர் வடமொழியில் வலைப்பதிவு செய்தால் எத்தனை பேர் படிப்பார்கள்? ஒரு நாயும் சீந்தாது.//

அப்போ மற்ற மொழிகளைப் பற்றி, தமிழில் எழுதவே கூடாதா?? மொழித் தீவிரவாதத்தின் உச்சகட்ட குருட்டு வெறி இது.

// அது நன்கு தெரிந்ததால்தான் தமிழில் வந்து குலைக்கிறது. //

நல்ல தமிழில் எழுதுவது யார், குரைப்பது யார் என்பதை முடிவு செய்யும் பொறுப்பை வாசகர்களுக்கே விட்டு விடுகிறேன்.

ஜடாயு said...

LFC fan! said...

// ஒருவர் தமிழ் சமஸ்கிருதத்திற்குப் பிறகு வந்த மொழி அல்லது சமஸ்கிருததிலிருந்து வந்த மொழி அல்லது உலகத்தில் உள்ள மொழிகளூக்கு எல்லாம் தாய் மொழி சம்ஸ்கிருதம் என்று கூற விளையும்பொழுதுதான் பிரச்சினை ஆரம்பமாகிறது. //

lfc, அப்படி எந்த சம்ஸ்கிருத அறிஞர்கள் சொன்னார்கள்? ஆதாரம் தர முடியுமா?

இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தின் மூலம் சம்ஸ்கிருதம் என்று தான் எல்லா மொழியியல் அறிஞர்களும் சொல்கிறார்கள். "எல்லா மொழிகள்" என்று சொல்லவில்லை.

முதலில் இரு மொழிகளுக்கு இடையே உள்ள தொடர்புகளை ஆராய்பவர்களுக்கு இரு மொழிகளிலும் ஆழ்ந்த புலமை இருக்க வேண்டும், இரு மொழிகளையும் அவர்கள் நேசித்து அன்போடு படித்திருக்க வேண்டும். ஆராய்ச்சியின் நோக்கம் அறிவுத் தேடலாக இருக்க வேண்டுமே அன்றி சேறு வாரித் தூற்றுவதாக இருக்கக் கூடாது. இது தான் அறிவியல் சிந்தனை.

ஆனால், இங்கே சம்ஸ்கிருத புலமை இல்லாத, அதே சமயம் அம்மொழி மீது மட்டற்ற வெறுப்புக் கொண்ட தம்மை தமிழறிஞர் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு கூட்டம் தமிழில் வழங்கும் சம்ஸ்கிருத சொற்கள் மற்றும் இரு மொழிகளிலும் உள்ள வேர்ச் சொல் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறதாம்! இதில் அறிவியல் பார்வை எப்படி இருக்க முடியும்? வெறுப்பு உமிழும் துவேஷம் தான் இருக்கும்! அதனால் தான், இந்திய அளவில், உலக அளவில் இத்தகைய "ஆராய்ச்சியாளர்களை" யாரும் பொருட்படுத்துவதில்லை!

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

திருஞானசம்பந்தர் வெறுக்கவில்லை, திருமூலர் வெறுக்கவில்லை என்பதெல்லாம் இருக்கட்டும். எம் மொழியாக இருந்தாலும், அதனுள் வேற்று மொழியின் பயன்பாடு அல்லது ஊடுருவல் (திட்டமிடப்பட்ட என்று நான் கூறவில்லை) அதிகமாகும்போது, அதற்கான எதிர்வினை உண்டாவது இயல்புதானே? அந்த ஊடுருவல், எது தேவ பாஷை எது நீச பாஷை என்ற குமட்டும் அடையாளங்களுடன் வரும்போது எதிர்வினை பலமாகத்தானே இருக்கும்? அந்த எதிர்வினைகளால் தமிழுக்கு நன்மைதான் உண்டாயிற்றே தவிர ஒன்றும் குறைந்து விடவில்லை.
கால்கரி அவர்கள், தமிழில் பேசியவுடன் சாதியைப் பற்றி ஆராயத் தொடங்குவதாகக் கூறுகிறார். ஆக, மொத்த தமிழ் சமுதாயத்தையும் சாதி வெறி பிடித்தவர்கள் என்கிறார். தமிழுடன் ஒப்பிட்டு மலையளத்தைப் புகழ்கிறார். ஆக, எதனுடனாவது ஒப்பிட்டு, தமிழையும், தமிழகத்தையும் குறை சொல்வதுதான் குறி என்கின்றபொழுது அது தரும் செய்தி என்ன?

சிறில் அலெக்ஸ் said...

மொழி பொதுவாகப் பயன்படுத்தப் படவேண்டும் என்றால் (இதுதான் வளர்ச்சி என எடுத்துக்கொண்டால்) அது எளிமைப்படுத்தப்படவேண்டும் என்பதில் ஐயமில்லை. இதேபோல அதன் தூய வடிவை வைத்துக்கொண்டே இதை செய்ய இயலும் என்றால் செய்வதில் தவறுமில்லை. இப்ப சமுத்ரா தந்த 'விடயத்துக்கே' வருவோம் (Pun intended) எனக்கு இந்த 'விடயம்' பற்றி ஒரு எதிர் கருத்து இருந்தது. அது இயல்பானதாக, எளிதானதாகத் தோன்றவில்லை. ஆனா இரண்டு மூன்றுமுறை பயன்படுத்தியபிறகு எனக்கு அந்த 'மனத்தடை' (thanks Calgary Siva) இல்லாமல் போனது.

தனித்தமிழ் கோமாளி முயற்சி என்றும், காழ்ப்புணர்ச்சி என்றும் சொல்ல இயலாது என நினைக்கிறேன்.

இப்ப தனித்தமிழ் வேண்டாம் என்கிறதில் எவ்வளவு காழ்ப்புணர்ச்சி இருக்குமோ அவ்வளவு காழ்ப்புணர்ச்சிதான் சமஸ்கிரதக் கலப்பு வேண்டும் என்பதில் இருப்பதாகச் சொல்லலாமில்லையா. இரண்டுபக்க நியாயத்திலும் அரசியல் கலந்துள்ளது என எடுத்துக்கொள்ளலாம், இரண்டுமே நியாயமான முயற்சி என்றும் எடுத்துக்கொள்ளலாம். நம்ம பார்வையிலதான் எல்லாம் இருக்குது.

தங்களுக்கு வேண்டிய ஒரு முயற்சியை சிலர் செய்கிறார்கள் அது உங்களை பாதிக்காதவரைக்குமாவது கொஞ்சம் அமைதி காக்கலாமே.

பதிவுக்கு சம்பந்தமில்லாததாகப் பட்டாலோ திசைதிருப்புவதாக நினைத்தாலோ பின்னூட்டத்தை வெளியிடவேண்டாம்.

Thamizhan said...

கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மீண்டும் சமுக்காளம் எல்லாம் வேண்டாம்.
நாடு தமிழ்நாடாக இருந்தும் மக்கள் தமிழர்களாக இருந்தும் வடமொழிக்கே முதன்மை என்றாகிவிட்ட நாளில் ,தமிழுக்கு முதன்மையும் எழுச்சியும் தந்து,நாடெங்கும் சைவமும் தமிழும் தழைத்தினிதோங்கச் செய்தது ஞான்சம்பந்தரின் தமிழ்ப் புரட்சி.
மேற்கூறிய ஊரன் அடிகளாரின் வார்த்தைக்குப் பொருள் அனைவர்க்கும் புரியும்.
வடமொழி ஆதிக்கத்தை நன்கு உணர்ந்ததால்தான் கம்பர் தனது ராமாயணத்தை எவ்வளவு தமிழ் படுத்தி இலக்குவன் என்றெல்லாம் எழுதி்யிருப்பது மீண்டும் கேட்கிறேன் திராவிட விசத்தாலா?
சமசுகிருத ஆதிக்கம் அதிகமாக இருந்தது ,தமிழைத் தமிழர்கள் பக்தி இலக்கியங்களிலும் சரி மற்ற இலக்கியங்களிலும் சரி மீண்டும் சமசுகிருதம் குறைந்த தமிழில் எழுதினார்கள் என்பது உண்மையா இல்லையா?
இன்றும் பதிவாளர் தமிழில் ஷ்,புஷ் தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது என்று கூறி திராவிட விசம் வெறுப்பு என்று சொல்வதிலே அவருடைய வெறுப்பும் விசமுந்தானே தெரிகிறது.

ஜடாயு said...

// திரு. அப்துல் கலாம் அவர்கள் மோடியைப் பற்றியோ அல்லது சமஸ்கிருதத்தைப் பற்றியோ ஒரு வார்த்தை கூறியவுடன் வாரி சுருட்டிக் கொண்டு பதிவு போடத் தெரிந்த உமக்கு, அவர் தமிழ் பற்றி ஆற்றிய உரை எதுவும் கண்ணில் படவில்லையா?//

நேரம் கிடைக்கும் போது பதிவு எழுதுபவன் நான். அதனால் ஒருவர் எல்லா விஷயங்களையும் பற்றிப் பேசிய எல்லா விஷயங்களையும் பற்றி என்னால் பதிவுகள் போட்டுக் கொண்டிருக்க முடியாது. இதை எழுதினாயே அதை ஏன் எழுதவில்லை என்று கேட்பது தேவையில்லாதது, விஷமத் தனமானது என்று நினைக்கிறேன்.

காவிரி தீர்ப்பு பற்றி வந்த மிகச்சில பதிவுகளில் என்னுடையதும் ஒன்று என்பதை நினைவில் கொள்ளவும். அவ்வப்போது வரும் செய்திகள், நிகழ்வுகள், கிடைக்கும் நேரம் பொறுத்துத் தான் பதிவுகள் வரும்.

தமிழ், திருக்குறள், பாரதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி இவை பற்றிய கலாம் கருத்துக்கள் ஓரளவு தமிழ் படிக்கும் இந்தியக் குடிமக்கள் எல்லாருக்கும் தெரிந்தவை.

தமிழன்பரும், தமிழரும், இந்திய தேசியம் மற்றும் இந்தியப் பண்பாட்டின் மீது அசையாத நம்பிக்கை கொண்டவருமான கலாம், சம்ஸ்கிருதம் பற்றீய தவறான வெறுப்புணர்வு இன்னும் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கும் தமிழகச் சூழலில், சம்ஸ்கிருதம் பற்றி தெரிவித்த கருத்துக்கள் இவை.

தமிழன்பனும், தமிழனும், இந்திய தேசியம் மற்றும் இந்தியப் பண்பாட்டின் மீது அசையாத நம்பிக்கை கொண்டவனுமான ஜடாயுவாகிய நான் இது பற்றித் தமிழுலகம் அறிய வேண்டும் என்றே தான் இதனை வெளியிட்டேன்.

ஜடாயு said...

ஆரூரனின் இந்தப் பதிவில் போட்ட பின்னூட்டத்தை இங்கு தருகிறேன்.

-----
// "தனித்தமிழில் ஞானசம்பந்தர் பாடிய இந்த தேவாரமும், தமிழ் நாயன்மார்களும் ஆழ்வார்களும் அவர்கள் காதலால் கசிந்துருகிப் பாடிய தனித்தமிழ்ப் பாடல்களெல்லாம் ஜடாயுவின் காதுகளுக்குக் கொடுந்தமிழாக ஒலிக்கிறதா?" //

நான் ஸ்டாலினை இசுடாலின் என்றால், ஸ்விட்ஸர்லாண்டை இசுவிச்சர்லாந்து என்றால் கொடுந்தமிழாக ஒலிக்கிறது என்றேன்.
தேவாரத்தைப் பாடினால் கொடுந்தமிழாக இருக்கிறது என்று எங்காவது சொல்லி இருக்கிறேனா? இதற்குப் பெயர்தான் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என்பதா?

அப்படியானால் "சாகை ஆயிரம் உடையார்" என்றெல்லாம் வரும் தேவாரப் பாடல்கள் எல்லாம் தனித் தமிழ் இல்லை என்று சொல்லி அதைப் பாடக் கூடாது என்று ஃபத்வா விடுவீரா? மிசநரி நீர், செய்தாலும் செய்வீர்!

// "இந்த தேவாரத்தில் கூறப்படும் நான்மறை என்பது நான்கு ஆரிய வேதங்களையும் குறிக்கவில்லை, நாயன்மார்கள் காலத்தில் நான்மறை என்பது ஆரிய வேதங்களைக் குறிப்பிடவில்லை" //

இதென்ன புது உளறல்? வேதத்தில் ஆரிய வேதம் ஆராத வேதம் என்றெல்லாம் கிடையாது. மேலும் நான்மறை நால்வேதம் என்று பாடும் போது ஆறங்கம் (நால்வேதம் ஆறங்கம் ஆனாய் நீயே, வேதமோடு ஆறங்கம் ஆயினானை) என்று சேர்த்துப் பாடுகிறார்களே அதுவும் தமிழ் அங்கமா?

ஷடாங்கம் என்றால் ஆயுர்வேதம், தனுர்வேதம் முதலிய வேதத்தின் உப அங்கங்கள்.

சம்பந்தர் இருக்குவேதியர். அதனால்தான் அவருக்கு இருக்குப்பிள்ளையார் என்று கூடப் பெயர் வந்தது. அவரை 'இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட வந்த வைதிக மாமணி' என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார். தமிழ் வைதிகம் என்று புதிதாக ஏதாவது இருக்கிறதா?

மதுரை மாநகரிலே சமணர்களுடன் வாது செய்வதற்கு முன் சோமசுந்தரப் பெருமானிடம் திருவுளம் வேண்டிப் பாடுகிறாரே, 'வேதவேள்வியை நிந்தனை செய்துழல்' என்று தொடங்கும் அந்தப் பதிகத்தைப் பொருளுடன் (உண்மையான தமிழறிஞர்கள் எழுதியது) இங்கே படியுங்கள்:
http://www.thevaaram.org/03/3108.htm

தேவாரத்திலே வேதக்குறிப்புகளைப் பற்றி மேலும் இங்கே விரிவாகப் படிக்கலாம்:
http://tamilartsacademy.com/books/siva%20bhakti/chapter05.html

அப்புறம் தேவாரம் குறிப்பிடும் வேதத்திற்கு விளக்கம் சொல்ல வாருங்கள்.

ஜடாயு said...

ஆரூரனின் இந்தப் பதிவில் போட்ட இன்னும் ஒரு பின்னூட்டத்தையும் இங்கு தருகிறேன்.
----
// "எதற்காக 'ஸ்ரீ' சுப்பிரமணி சாஸ்திரியார் தொழுவூர் வேலாயுத முதலியாரைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யச் சொன்னார், சங்கராச்சாரியாரின் பக்தராகிய ஸ்ரீ சுப்பிரமணி சாஸ்திரியார், அவரே நீச பாசையான தமிழில் மொழிபெயர்த்தால் அவருக்குத் தீட்டுப் பட்டு விடுமென்று சங்கராச்சாரியார் சொல்லியிருப்பாரோ என்னவோ, அது ஜடாயுவுக்குத் தான் வெளிச்சம். :))" //

இதென்ன கிண்டலா? தமிழ் படிக்கத் தெரியும் அல்லவா? அந்தப் புத்தகத்தின் அட்டையிலேயே தெளிவாக இருக்கிறதே, சுப்பிரமணிய சாஸ்திரியார் பெங்களூரைச் சேர்ந்த கன்னடப் பண்டிதர் என்று.

அவரிடமிருந்து மூலத்தை வாங்கி தொழுவூரார் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

தீட்டுபடுவதெல்லாம் உங்களைப் போன்றவர் கண்டுபிடிப்பு.

ஜடாயு said...

// "ஞானசம்பந்தர் உயிருடன் இருந்தபோது அவர் கூடவே யாழ் வாசித்து வந்தவர் ஒரு தாழ்த்தப்பட்ட ஆனால் அவருக்கு மிக் நெருங்கிய நண்பராக நடத்தப்பட்டவர் என்பதற்காக பூணூல் கூட்டம் அவரை எப்படி நடத்தினார்கள் என்பது வேறுகதை"//

அரவிந்தன் சொல்வதுபோல் உங்கள் பின்னூட்டங்கள் பல நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்ல எனக்கு ஒருவகையில் உதவியாக இருக்கின்றன தமிழன் அவர்களே!

அதுவும் சிவராத்திரி புனித நன்னாளில் பெரிய புராணம் மூலத்தின் சில பகுதிகளைப் பயில அமரும் முன் இந்த விதண்டாவாதக் கேள்வியைப் பார்த்தேன்.. இந்தப் புராணத்தை அன்று நான் படித்து எடுத்துரைக்க வேண்டும் என்பதும் சிவனருள் போலும்!

இந்தக் கதையையும் பார்ப்போம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும், சம்பந்தருடன் யாழ் வாசித்து வந்தவரின் பெயர் திருநீலகண்ட பெரும்பாணர். இவரும் ஒரு நாயன்மார்தான்.

பாணரைப் போன்ற இசைவாணர்கள் சங்ககாலத்திலே தாழ்த்தப்பட்ட சாதியில்லை. சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை போன்ற பாணர்களை ஆற்றுப்படுத்தப் பாடிய நூல்களிலிருந்து இதை அறியலாம். இடைக்காலத்திலே சமணரும் பௌத்தரும் கோலோச்சிய மூன்று நூற்றாண்டுகளிலே சில சாதியினர் 'தாழ்த்தப்பட்டவர்' ஆனார்கள். அவர்களில் இசையே வாழ்க்கையாய் வாழ்ந்த பாணர்களும் ஆவர்.

இன்னிசையால் தமிழ் வளர்த்த திருஞானசம்பந்தர் இவர்களைத்தான் முதலில் அந்நிலையிலிருந்து மீட்டார். அவரைப் 'பூணூல் கூட்டம்' எப்படி நடத்தியது என்று திருநீலநக்க நாயனார் புராணத்திலே பாருங்கள். திண்ணையிலே பா.சத்தியமோகன் பெரியபுராணத்தை எளிதாய்ப் புரியும் வகையில் எழுதி வருகிறார்.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=30512092&format=print&edition_id=20051209

1854.
ஒழுக்கமுடைய மெய்த்திருத் தொண்டர்களுடன்
திரு அமுது செய்த பின்பு
உலகம் ஓங்கும் பொருட்டு
பெரிய நாயகி அம்மையாருடன்
தோணியப்பர் வெளிப்பட்டு அருளுமாறு
முன்பு அழுதவரான திருஞானசம்பந்தர் அழைக்க
திருநீலநக்கர் விரைவில் வந்து அடிவணங்கி நின்றார்.

1855.
அங்கு வந்து நின்ற அன்பரை
"நீலகண்ட யாழ்ப்பாணருக்கு இன்று
இங்கு தங்குவதற்குரிய ஓரிடம் கொடுத்தருள்வீர்''
என திருஞானசம்பந்தர் கூறினார்
பெரிதும் இன்புற்று
நடுமனையில்
வேதிகையின் பக்கத்தில்
மறையவரான திருநீலநக்கர் இடம் அமைத்துத் தந்தார்.
(வேதிகை - வேதம்
வளர்க்குமிடம்)

1856.
அங்கு அந்த வேதிகையில்
என்றும் நீங்காமல்
வளர்க்கப்பட்ட செந்தீ
வலமாகச் சுழித்து எழுந்து ஓங்கி
முன்னைவிட
ஒருவிதமாய் அன்றிப்
பலவகையாய் விளக்கம் அடையவே
சகோட யாழ்த் தலைவரான திருநீலகண்டர்
தம் பக்கத்தில் அமரும் மதங்க சூளாமணியாருடன்
திருவருள் மயமாய் பள்ளி கொண்டார்.

சம்பந்தருடன் யாழிசைத்தபடி கூடச்சென்ற பெரும்பாணரையும் அவர் மனைவி மதங்கசூளாமணியாரையும் திருநீலநக்கர் என்ற அந்தணர் வரவேற்று, அமுது படைத்துப் பின், தன் இல்லத்திலே நடுமனையில், அதுவும் யாகசாலையிலே தங்கச்செய்கிறார்.

இதற்குப் பெயர்தான் தீண்டாமையா?

சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam said...


மலையாளத்தை சமசுகிருதம் வளர்த்ததா??

ஜடாயு said...

வள்ளலார் வடசொல் பற்றிக் கூறியது பற்றி எழுதுகையில் "புத்தகத்தின் பெயர் நினைவில்லை""என்று குறிப்பிட்டிருந்தேன். அந்தப் புத்தகம் இணையத்திலேயே கிடைத்து விட்டது! அதனால் வள்ளலார் திருவுருவப் படத்திற்குக் கீழே உள்ள பகுதியில் இன்னும் கொஞ்சம் சேர்த்து எழுதி, மீண்டும் பதிப்பித்துள்ளேன்.

Thamizhan said...

திருஞான சம்பந்தர் தமிழ் ப்புரட்சி செய்தார்,சைவப்புரட்சி செய்தார் அவருடன் தாழ்த்தப்பட்டவரைக் குடும்பத்துடன் அழைத்து்ச் சென்றார்.சாதிவேறுபாட்டை வெறுத்தார்.அதனால் அவருக்குக்கிடைத்தப் பரிசைத்தான் வேறு கதை என்று சொன்னேன்.
அதுதான் சூழ்ச்சியாளர்கள் அவருக்குத் திருமணப்பரிசாக அளித்தார்கள்.
ஆம் இளவயது மணமகன்,மணமகள் பெற்றோர் உற்றோர் அங்கு வந்திருந்த நண்பர்கள் ஒருவர் பாக்கியில்லாமல் அனைவரும் கோவிலில் இருக்கிறார்கள்.அங்கே தீ வந்து அனைவரும் மடிகிறார்கள்.அதுதான் 'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்,நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை' என்று கூறியவர்க்குக் கிடைத்த கதி.
கேட்டால் சோதியில் அனைவரும் மன மகிழ்வோடு முக்தி்ப் பேறு பெற்றனர் என்பார்கள்.

ஜடாயு said...

தமிழன், உன் முகமூடி கிழிகிறது, நீ சைவனே அல்ல, முருகனது திரு அவதாரமாக நாங்கள் போற்றும் சம்பந்தர் தீயில் வெந்து மாண்டார் என்று கூறும் நீ உன் முகத்திரையைக் கிழித்துக் கொண்டுவிட்டாய்..

இது பற்றிய ஆரூரன் பதிவில் இட்ட பின்னூட்டத்தையே இங்கும் இடுகிறேன்.

---------------------->

ஆரூரன்,

பொய்களைத் திரும்பத் திரும்பப் பதிவாகப் போடும், பொய்ச்சைவ வேடம் போட்டு சைவத்தின் ஆணிவேரையே வெட்டப் பார்க்கும் உம்மிடம் என்ன பேசுவது?

"பொய்யொடு மிடைந்தவை தோன்றின், மெய் யாண்டு உளதோ" என்ற அகநானூறு வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன!!

ஒரு பழைய பதிவில் இதே பொய்யை நீர் சொல்ல அதற்கு வந்த பின்னூட்டத்திற்கு இன்று வரை பதில் சொல்லவில்லை நீர்! அதே பொய்யை மறுபடி இங்கு ஏற்றுகிறீரே? இது அடுக்குமா?

----------

//திருஞான் சம்பந்தரின் தமிழ்ப்பற்றால் அவரை பதினாறு வய்தில் பார்ப்பனர்களால் உயிரோடெரிக்கப்பட்டார். //

அட அப்டிப் போடுங்க! பூனைக்குட்டி கடைசில வெளிய வந்துவிட்டது. ஞானசம்பந்தர் எரிக்கப்பட்டார் என்று எந்தச் சைவனும் கற்பனை கூட செய்ய மாட்டான். அப்படி அபாண்டமாய்ச் சொல்வது, பாம்பு கடித்து எப்போதோ மாண்ட ஒரு பெண்ணை, சாம்பலை வைத்து உயிருடன் எழுப்பிய அந்த தெய்வக்குழந்தையின் பெருமைக்கே இழுக்கு. அப்படி எங்குமே சொல்லப்படவில்லை. இது ஒரே அடியில் சைவத்தின் வேரையே வெட்டப் பார்க்கும் பொய்வீச்சு. சில வெளிநாட்டில் துட்டுவாங்கும் மதவெறிநாய்கள் இப்படித்தான் திரிக்கும். அவர்போலவே நீரும் சைவரும் அல்லர், பக்தரும் அல்லர். புரட்டர். உம் பின்னணியில் இருக்கும் சக்திகளும் தெரிந்தவைதான்.

//தமிழ்மொழி வழிபாட்டை எதிர்த்த பிராமணர்களை 'செந்தமிழ்ப் பயன் அறியாத மந்திகள்" எனக் கடுமையாகக் கண்டிக்கவும் செய்தார். //

My dear missionary boy, you seem to be very poor in homework. மேலே முழுப்பதிகமும் இருக்கிறது. அவர் யாரைச் சொல்கிறார் என்று விளங்கவில்லையா? ஆரியத்தொடு செந்தமிழ்ப்பயன் அறிகிலா அந்தகர் என்று திட்டுவது சமணர்களை, பிராமணர்களை இல்லை.

//திருஞானசம்பந்தர் பிறந்ததாகச் சொல்லப்படும் கவுணிய கோத்திரம் இன்று தமிழ்நாட்டிலோ அல்லது வேறெங்கிலுமோ இல்லை! இது அவரது சந்ததி பூண்டோடு அறுக்கப்பட்டதைக் காட்டுகிறது.//

என்னய்யா இது! பலபேர் இப்படி ஒரே மாதிரி பாடம் ஒப்பிக்கிறீர்கள்! யார் எடுத்த ட்யூசன் இது? அதுவும் தப்புத்தப்பாய்! kaundinya gotra என்று வலையில் துழாவிப் பாரும். எண்ணி மாளாது. இன்னும் எத்தனை பொய்களை அடுக்கப் போகிறீர்கள் பார்க்கலாம்.

- வன்றொண்டன்

-------

ஜடாயு said...

அதே பழைய பதிவில் அதே வன்றொண்டர் போட்ட இன்னும் இரண்டு பின்னூட்டங்கள்:
---------------

//சாதி வெறி பிடித்த ஆதி சங்கரர் சம்பந்தரை திராவிட சிசு என அழைத்தார். அதன் பொருள் ஞானசம்பந்தர் சூத்திரன் என்பதாகும். //

ஹஹ்ஹஹாஹா!
சிசு என்றால் சூத்திரனா! நல்ல ஜோக்!
கேக்கறவன் கேணையன் எவனாவது இருந்தா இங்கேயும் படித்துக் கொள்ளட்டும்.

--------

//உண்மை, கற்பனை பண்ணக் கூடமுடியாத கொடுமை, பிராமணராகப் பிறந்து தமிழில் பற்று வைத்த ஒரே காரணத்துக்காக பதினாறு வயதில் உயிரோடு கொளுத்தப்பட்டது கொடுமை. //

'ஆரூரன்',

மதுரையில் அந்தக் குழந்தை தங்கியிருந்த மடத்திற்கு சமணர்களால் தீ வைக்கப்பட்டது. அதற்கு பாண்டிய மன்னனே பொறுப்பேற்க வேண்டும் என்று பையவே சென்று பாண்டியற்காகவே! என்று பாடி அந்த நெருப்புக்கே கட்டளையிட்டு அனுப்பி வைக்கிறார் ஞானசம்பந்தர். மன்னனை வெப்புநோய் சூழ்கிறது. அப்படிப்பட்ட அவரைத் தீ வைத்து எரித்து விட்டார்கள் என்று புதிதாய்க் கதை கண்டுபிடித்துச் சொன்னால், ஒன்று வக்கரித்த மடையனாய் இருக்க வேண்டும் அல்லது மாற்று மத அயோக்கியனாய் இருக்க வேண்டும்.

மேலும் அவர் வரலாற்றைப் பின்னால் வந்த சுந்தரர், நம்பியாண்டார்நம்பி, கூத்தர், சேக்கிழார், வள்ளலார், அருணகிரிநாதர் முதலிய பலர் பாடியிருக்கிறார்கள். இவர்களில் பலர் பிராமணர் அல்லாதவர். இவர்கள் யாருக்குமே தெரியாத ஒரு புதுக்கதையை வெறும் பிராமணத் துவேஷத்தால் (அதுவும் ஈழத்தமிழரிடையே கிடையாது) இட்டுக்கட்டி எழுதுவது என்பது தமிழ்நாட்டில் சில 'சைவப்பூனைகள்' செய்வது. உற்றுப்பார்த்தால்தான் அக்கமாலையில் சிலுவை தொங்குவது தெரியும்.

:-)

- வன்றொண்டன்
---------

Thamizhan said...

பின் வரும் வரிகளுக்கு விளக்கம் சொல்லிவிட்டுப் பின்னர் பதிவாளர் துள்ளிக் குதிக்கட்டும்.
நம்பாண்டார் நம்பியின் இல்லத்தில் திருமணம் நிகழ்ந்தது.திருமணச்சடங்குகளைத்திருநீல
நக்கர் நடத்திவைத்தார்.எரிவலம் வர எழுந்த சம்பந்தர் மணமகளாரின் கையைப் பற்றியவாறு எரியாவார் சிவபெருமானே யாதலின் அவரையே
வலம் வருவோம் என்று திருப்பெருமாணம் கோயிலைநோக்கிச் சென்றார்.
திருக்கோயில் மூலத்தானத்தில் ஒரு பெருஞ்சோதி எழுந்தது.நீயும் உன் பத்தினியும் உன் புண்ணிய மணத்திற்கு
வந்தார் யாவரும் இச்சோதியுள் வந்து
சேரும் என்று ஒரு அசரீரி எழ்ந்தது....
ஞானசம்பந்தர் ஒருவர்தான் ஒரு திருமணக்கூட்டத்திற்கே முத்திப் பேறு வழங்கினார்.
இவை சன்மார்க்க தேசிகன் ஊரன் அடிகளின் வார்த்தைகள்.
இந்த விளக்கங்களே பதிவாளரின் வார்த்தைகளான திராவிடர்,வெறுப்பு,விசம் என்றெல்லாம் எழுதியதால் என்னுடைய மறுப்பைத் தெரிவித்துத் தனித்தமிழ் இயக்கம்,சம்பந்தர் பார்ப்பனராக இருந்தாலும் வடமொழி ஆதிக்கத்தைப் பொறுக்க முடியாமல்
தமிழ்ப் புரட்சி செய்தார் என்பதில்தான்
தொடங்கியது.
நான் சைவனென்ற முகமூடி அணிந்தேனாம் அதை இவர் கிழிக்கிறாராம்.
நான் தமிழன்,என் தாய்மொழி தமிழ் .
பிழைப்புக்காகத் தமிழைப் பேசி எழுதி
உள்ளத்திலே சமசுகிருதம்தான் சிறந்தது என்று எண்ணி எழுதும் வேடதாரிகளின் முகமூடிகளைத்தான்
கிழிக்க வேண்டும்.
ஏதாவது சொன்னால் உடனே ஏன் மிசனரி என்று பாய்கிறார்களோ தெரியவில்லை.நான் பெரியார் தொண்டன்.நான் காட்டும் ஆதாரங்கள் தமிழ்ப் பெரியோர் மதிக்கக் கூடியவையேத் தவிர மிசனரிகளின் வார்த்தை என்று தப்பிக்க முடியாது.

ஜடாயு said...

// “சாகை ஆயிரம் உடையார்.. “ (ஆயிரம் கிளைகள் உள்ள “ஸஹஸ்ர சம்ஹிதா” என்று ரிக்வேதத்தை குறிப்பிடுவார்கள்) //

ஆயிரம் சாகைகளையுடையது சாம வேதம் தான் என்று மின் அஞ்சல் மூலம் சுட்டிக் காட்டிய நண்பருக்கு மிக்க நன்றி.

ரிக் வேதத்திற்கு 27 சாகைகளும் யஜுர் வேதத்திற்கு சுமார் 100 சாகைகளுமே இருப்பதாக அறிகிறேன்.

ஜடாயு said...

// மலையாளத்தை சமசுகிருதம் வளர்த்ததா?? //

இந்தப் பதிவில் நான் போட்ட பின்னூட்டம்;
---------

மலையாள தொலைக் காட்சி சேனல்களை மேயும்போது தமிழ், இந்தி, சம்ஸ்கிருத பாடல்கள் அவற்றில் சரளமாக ஒலிப்பதைக் காணலாம். தமிழ் தொலைக்காட்சிகளில் இது நினைத்துக் கூடப் பார்க்க முடியாதது!

நண்பர் கால்கரி சிவா, மலையாளம் போல தமிழ் சம்ஸ்கிருத மயமாக வேண்டும் என்று சொல்லவில்லை என்றே நான் புரிந்து கொள்கிறேன். புதிய சொற்களை, சிந்தனைகளை எங்கிருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மலையாளிகளின் இந்த தன்மையைத் தான் சுட்டிக் காட்டினார்.

நண்பர் ஜெயமோகனின் இந்தக் கட்டுரையை அப்போதே படித்து ரசித்திருந்தேன். அதை வெளியிட்டதற்கு நன்றி. இதில் மொழியின் ஒரு போக்கை அவர் விமர்சிப்பதைக் காண்கிறேனே அன்றி, குருட்டுத் தனமான சம்ஸ்கிருத வெறுப்பை அல்ல.

என் பணிவான கருத்து என்னவென்றால் தங்கள் மொழியின் வளர்ச்சியையும், செழுமையையும் வார்த்தெடுக்கும் திறன் முழுவதும் மலையாளிகளுக்கு உள்ளது. சொல்லப் போனால் தமிழகத்தை விட கேரளத்தில் வெகுஜன ரசிகத் தன்மை கொஞ்சம் உயர்வாகவே உள்ளது (கல்வியறிவு அதிகமானது காரணமாக இருக்கலாம்) என்றும் சொல்லலாம்.

தமிழில் நடக்கும் ஒருவிதமான செவ்வியல் மொழிப் போக்கையே மலையாளத்திலும் காட்ட வேண்டும் என்ற ஜெயமோகனின் கருத்து அதிகப் பிரசங்கித் தனம் என்பதாகவே மலையாளிகளால் பார்க்கப்படும், பார்க்கப் படுகிறது. அது அவர்கள் பார்வையில் கண்டிப்பாக சரியானதும் கூட.

இதற்கு மேல் சொல்வதற்கு எனக்கு மலையாளத்தில் புலமையும், இலக்கிய அறிமுகமும் கிடையாது.

Anonymous said...

தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக்கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன? நமது நாட்டுக்கு கமால் பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும் யோக்கியனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்பதால், பல முண்டங்கள் பல விதமாய் பேசி முடிக்கிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது என்று கேட்கிறேன்.

நாட்டுக்கு "சுதந்திரம்' கிடைத்து இன்றைக்கு 20ஆவது ஆண்டு நடக்கிறது. 20 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, "இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ் வேண்டும்'. இதுதானா? அய்யோ பைத்தியமே! தமிழை (பிறமொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல்களில் எதை எடுத்துக் கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந்த தமிழ் "சுவை' அல்லாமல், அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை, பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா? கண்டுபிடித்து பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன்.

வெளிநாட்டான் அறிவு இனிப்பு; மொழி கசப்பா ?

சர்வத்தையும் விஞ்ஞான மயமாக மேல்நாட்டு முறைகளைக் கொண்டு ஆக்கி, சர்வத்திலும் மேல்நாட்டானை (புதிய முறைகளை)ப் பின்பற்றி, வளர்ச்சி அடையவே முயற்சிக்கிறோம். திட்டம் போடுகிறோம். இந்தக் காரியங்களுக்கு தமிழர் – முத்தமிழர் சங்கங்களையே நம்பி என்ன காரியத்திற்கு, ஆங்கிலக் கருத்தோ,இங்கிலீஷ் சொல்லோ, ஆங்கிலேயனிடம் பயிற்சியோ இல்லாமல் இங்கிலீஷை பகிஷ்கரித்து விட்டு என்ன சாதித்துக் கொள்ள முடியும்?பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன் ?

சாதாரணமாக பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.–

தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம்...தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? "தாய்ப்பால் சிறந்தது' என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்!

தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?

இப்படிப்பட்ட இந்தத் தாய்ப் பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை காலில் நடப்பதைத் தவிர, உழைப்புக்கு – காரியத்துக்குப் பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை – ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே – என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.இன்றைய தினம் கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்

(பெரியார் எழுதிய "தமிழும் தமிழரும்' என்ற நூலிலிருந்து.)

இந்த தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? – என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. "வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறை வளர்ப்போம்' என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள். இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும், "தமிழ் மொழி 3000 – 4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி' என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டு மிராண்டி மொழி என்பதற்கு அதைத் தானே முக்கிய காரணமாய்ச் சொல்கிறேன். அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணிணியாகட்டும், மற்றும் எவன்தான் ஆகட்டும், இவன்களைப் பற்றி தெரிந்து கொள்ள உனக்கு புத்தியில்லா விட்டால், நீ தமிழைப் பற்றி பேசும் தகுதி உடையவனாவாயா?

தமிழால் என்ன நன்மை?

தமிழ் தோன்றிய 3000 – 4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்த புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இது வரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.

"தமிழ் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாத வித்துவான்களாக... தமிழ்ப் புலவராகவே வெகு காலம் இருக்க நேர்ந்து விட்டதால், அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு, அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள்.

ஆகவேதான் புலவர்கள், வித்துவான்கள் என்பவர்கள் 100க்கு 90 பேர்கள் வரை, இன்றைக்கும் அவர்களது வயிறு வளர்ப்பதற்கல்லாமல் மற்றெதற்கும் பயன்படுவதற்கில்லாதவர்களாகவே ஆகி விட்டார்கள்.

அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள், மக்களின் மடமையை நிறுத்து அறிந்ததன் காரணமாய், அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தாய் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம், மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.

ஜடாயு said...

இராம.கி.யின் தனித்தமிழ் பதிவில் நான் போட்ட பின்னூட்டம்
----
அன்பின் இராம. கி,

நான் தனித்தமிழ் என்பது போலியான, செயற்கையான நடை என்று ஒரு கருத்துக் கூறப் புக, நீங்கள் அதே நடையில் இப்படி ஒரு தொடரையே எழுதத் தொடங்கி விட்டீர்கள்!

முன்பே சொன்னபடி, உங்கள் கலைச்சொல் ஆக்க முயற்சிகளை மனமுவந்து வாழ்த்துகிறேன்.

அதே சமயம், தனித்தமிழ் நடை என்பது போலியானது மட்டுமல்ல, தமிழ் இலக்கண, இலக்கிய மரபுக்கே எதிரானது என்ற கருத்தையும் வலியுறுத்துகிறேன்.

இது பற்றி இணையத்தில் நன்கு அறியப் பட்ட எழுத்தாளர் பி.கே.சிவகுமார் 'மரத்தடி'யில் முன்பு எழுதிய தனித்தமிழ் என்னும் போலி என்ற அருமையான கட்டுரையின் முதல் பாகம் இதோ -

தனித்தமிழ் என்னும் போலி - (1) - பி.கே.சிவகுமார்

[மிஸ்.தமிழ்த்தாய்க்கு நமஸ்காரம் (நன்றி: சுஜாதா) சொல்லி அவளருள் வேண்டி இக்கட்டுரையைத் தொடங்குகிறேன்.]

முன்னுரை:

"சென்றிடுவீர் எட்டுத் திக்கும்- கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்றவர் நம் மஹாகவி. அந்த மஹாகவியின் பார்வையில் பார்க்கும்போது, தமிழுக்கு கலைச்சொல்லாக்கம் (அறிவியல் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த சொற்களைத் தமிழ்ப்படுத்துவது) அவசியமான ஒன்று என்பதிலே யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. "நான் கெட்-அப் பண்ணி பிரஷ் பண்ணி பிரேக்ஃபாஸ்ட் பண்ணி அப்புறம் ஆபிஸுக்குக் கம் பண்ணேன்" என்பது போன்ற தொலைகாட்சிப் பதுமைகள் பேசுகிற தமிங்கலம் குறைக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. "இயன்ற வரை தமிழிலே பேச வேண்டும்" என்றும் மஹாகவி நமக்கு வழி காட்டியிருக்கிறார். எனவே, நல்ல தமிழில் பேசவோ பேச முயலவோ வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், நல்ல தமிழ் என்பது தனித்தமிழ் இல்லை. தனித்தமிழ் நம் மரபும் இல்லை என்று எழுதினால், நம்மில் சிலர் அதை கலைச்சொல்லாக்கத்துக்கு எதிர்ப்பு என்றும், தமிங்கலத்திற்கு ஆதரவு என்றும் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். எனவே முதலில் தனித்தமிழ் என்றால் என்னவென்று பார்ப்போம்.

தனித்தமிழின் தோற்றமும் வரையறையும்:

சூரிய நாராயண சாஸ்திரி என்கிற தன் பெயரைத் தனித்தமிழ்ப்படுத்திக் கொண்ட பரிதிமாற்கலைஞரும், சுவாமி வேதாசலம் என்கிற தன் பெயரைத் தனித்தமிழ்ப்படுத்திக் கொண்ட மறைமலையடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடிகள் எனலாம். தன் பெயரைத் தமிழ்ப்படுத்துவதாக எண்ணி சூரிய நாராயண சாஸ்திரியார் சூரிய= பரிதி, நாராயண= மால் என்று வேறு சமஸ்கிருதச் சொற்களில் அமைத்துக் கொண்டது ரஸமான விஷயம்தான் என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்வதை இங்கு நினைவில் கொள்ளலாம். இவர்கள் இருவரும்தான் வடசொற்களே கலக்காமல் முதலில் தனித்தமிழில் எழுதத் தலைப்பட்டவர்கள். பரிதிமாற் கலைஞர் மறைந்த பிறகு- 1916 முதல் மறைமலையடிகள் தனித்தமிழில் பேசுவதை ஓர் இயக்கமாக முன்னெடுத்துச் சென்றார். வடமொழிச் சொற்களைத் தவிர்க்கிற தனித்தமிழ் இயக்கத்தினர்- கிரந்த எழுத்துகளையும் (ஜ, ஷ, ஸ, முதலியன) வடமொழி எழுத்துகள் என்று சொல்லித் தவிர்க்க ஆரம்பித்தனர். இதிலே பெருஞ்சித்திரனார் போன்றவர்கள், பெயர்களைக் கூடத் தனித்தமிழ்ப்படுத்தத் தலைப்பட்டனர். எனவே, இதிலிருந்து தனித்தமிழ் என்பது- 'வடமொழிச் சொற்கள் என்று தனித்தமிழ் இயக்கத்தினர் நம்புவதையும், கிரந்த எழுத்துகளையும் நீக்கி எழுதுவது' என்று புரிந்து கொள்ளலாம். இந்தத் தனித்தமிழ் குறித்து நம் இலக்கண நூல்கள் என்ன சொல்கின்றன, தனித்தமிழ் ஆதிகாலம் தொட்டே நமது மரபா என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையளிப்பது இக்கட்டுரையின் நோக்கம் எனலாம்.

தொல்காப்பியம்:

தமிழில் நமக்குக் கிடைத்திருக்கிற மிகத் தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இதை எழுதியவர் தொல்காப்பியர் என்று அழைக்கப்படுகிறார். (நூலின் பெயரால் அல்லது பாட்டின் பெயராலேயே ஆசிரியரை அழைக்கிற மரபு தமிழில் இருந்திருக்கிறது என்பதைத் தொல்காப்பியர் என்கிற பெயரின் மூலமும், "செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே" பாடல் புகழ் செம்புலப் பெயனீரார் மூலமும் அறிகிறோம். அவர்களின் இயற்பெயர் மறைந்துபோய் அவர்களின் இறவாத படைப்புகளின் பெயர்களால் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்று சொல்வோரும் உண்டு.) தமிழில் தொல்காப்பியத்திற்கு முன்னும் இலக்கண நூல்கள் இருந்ததை நாம் தொல்காப்பியம் மூலம் அறிகிறோம். ஆனால், அந்த இலக்கண நூல்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. தமிழின் முதல் நூல் அகத்தியம் என்றும் அதன் வழி வந்த வழிநூல் தொல்காப்பியம் என்றும் கூறுவர். தொல்காப்பியத்தின் காலத்தை நிச்சயமாக அறுதியிட்டுக் கூற இயலாது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தொல்காப்பியத்தின் காலம் "கிறிஸ்து சகாப்தத்தின்" (Christian Era) ஆரம்பத்தை ஒட்டி இருக்கலாம் (early centuries of the christian era) என்று சொல்வது பெருந்தவறான கணிப்பாக இருக்க முடியாது என்கிற கூற்றைச் சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி முன்வைக்கிறது. டாக்டர் மு.வ. போன்றவர்களோ தொல்காப்பியம் எழுதப்பட்ட காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்று நிச்சயமாகக் கூறுகிறார்கள். இந்த விவரங்களிலிருந்து, இந்த இடத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டியது பின்வரும் விஷயங்கள் தான்: 1.நம் கையில் கிடைத்திருக்கிற தமிழின் தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். 2.அது ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. 3.அந்தத் தொல்காப்பியத்திலும் அதன்பின்னர் வந்த இலக்கண நூல்களிலும் தனித்தமிழ் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று அறிவது தனித்தமிழ் நல்லதா, நம் மரபா என்று புரிந்துகொள்ள உதவும்.

திசைச்சொல்லும் வடசொல்லும் வளர்த்த தமிழ்:

வடமொழிச் சொற்களைத் தவிர்த்து தனித்தமிழில் எழுத வேண்டும் என்று சொல்கிறார்களே (கிரந்த எழுத்துகளைத் தவிர்க்கிற விஷயத்திற்குப் பின்னர் வருவோம்.), அதுதான் நல்ல தமிழ் என்று சொல்கிறார்களே- நமது மரபு அதுதானா, தொல்காப்பியக் காலத்தில் அப்படித்தான் இருந்ததா என்றெல்லாம் ஆர்வத்துடன் பார்க்கப் போனால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

தொல்காப்பியர் சொற்களை வகைப்படுத்தும்போது அவற்றை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்காகப் பிரிக்கிறார். இயற்சொல்லும் திரிசொல்லும் இக்கட்டுரையின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டவை. எனவே, அவற்றைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். பல திசைகளிலிருந்து (பல மொழிகளிலிருந்து) தமிழில் வந்து கலந்த சொற்களைத் திசைச்சொற்கள் எனலாம். தமிழ்நாட்டின் தெற்கிலிருக்கும் இந்துமா கடல் ஒரு காலத்தில் நிலப்பரப்பாக இருந்தது என்று நம்பப்படுகிறது. அங்கிருந்த பல நாடுகள் கொடுந்தமிழ் நாடுகள் என்று அழைக்கப்பட்டன. எனவே, திசைச்சொல் என்பது கொடுந்தமிழ் நாடுகளிலிருந்தும் பண்டைத்தமிழ் நாடு தொடர்பு கொண்டிருந்த பிற நாடுகளிலிருந்தும் தமிழுக்கு வந்து சேர்ந்த சொற்கள் எனலாம்.

உதாரணமாக, பின்வரும் பழம்பாடல் பண்டைத் தமிழ்நாடு தொடர்பு கொண்டிருந்த பதினேழு பிற நாடுகளைப் பற்றிச் சொல்கிறது:

சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம்
கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம்வங்கம்
கங்கம் மகதம் கடாரம் கவுடம் கடும்குசலம்
தங்கும் புகழ்த் தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே.

(1. சிங்கள நாடு, 2. சோனக நாடு, 3. சாவக நாடு, 4. சீன நாடு, 5. துளுவ நாடு, 6. குடகு நாடு, 7. கொங்கண நாடு, 8. கன்னட நாடு, 9. கொல்ல நாடு, 10. தெலுங்கு நாடு, 11. கலிங்க நாடு, 12. வங்க நாடு, 13. கங்க நாடு, 14. மகத நாடு, 15. கடார நாடு, 16. கவுட நாடு, 17. கோசல நாடு)

பிற்காலத்தில் இஸ்லாமியர், ஆங்கிலேயர், போர்ச்சுக்கீசியர், டச்சு நாட்டவர், ஃபிரெஞ்சு நாட்டவர், யூதர்கள் என்று மேலும் பல நாட்டவர்கள் தமிழ்நாட்டுடன் கொண்ட வணிகத் தொடர்புகளாலும், பிறத் தொடர்புகளாலும் இன்னும் பல திசைச்சொற்கள் தமிழில் சேர்ந்தன. தமிழ் அவற்றை வரவேற்று அனுமதித்து தன் மொழியின் ஒரு பகுதியாக உவகையுடன் ஏற்றுக் கொண்டது. திசைச்சொற்கள் தொல்காப்பியத்திற்கு முன்பிருந்தே தமிழில் இருந்தன என்றும் அறிய வருகிறோம். உதாரணமாக, 'அந்தோ' என்ற வார்த்தை சிங்களத்தில் இருந்து வந்தது என்றும், சிக்கு ("சிக்கெனப் பிடித்தேன்" என்கிறது நம் பக்தி இலக்கியம்) என்பது கன்னடத்திலிருந்து வந்தது என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

எனவே, பிறமொழிக் கலப்பின்றி எழுத வேண்டும் என்று சொல்கிற வாதம் திசைச்சொற்களைத் தூக்கிப் போட வேண்டும் என்று சொல்வதற்கு ஒப்பானது. பொதுமக்களிடையே மிகவும் பிரபலமாகி நாள்தோறும் புழக்கத்தில் இருந்து வருவன இத்தகைய திசைச்சொற்கள். சினிமா, கவர்னர், பார்லிமெண்ட் ஆகியன ஆங்கிலத்திலிருந்து வந்த திசைச்சொற்களுக்கு சில உதாரணங்களாகும். அறிவியல், தொழில்நுட்ப, வணிக வார்த்தைகளுக்குக் கலைச்சொல்லாக்கம் செய்வது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் இலக்கண மரபின்படி நம்மிடையே ஊறிப்போன திசைச்சொற்களை தமிழின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்வதுமாகும். அப்படிச் செய்யாமல் திசைச்சொற்களையும் தமிழ்ப்படுத்தி நாம் உருவாக்குகிற தனித்தமிழ், பொதுமக்களிடமிருந்தும் அன்றாட வாழ்விலிருந்தும் அன்னியப்பட்டதாகும். கலைச்சொல்லாக்கம் என்று வரும்போதுகூட பெரிதும் பழக்கப்பட்டுப் போன திசைச்சொற்களை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் சரியான மரபாகவும், மொழியை வாழவும் வளரவும் வைக்கிற அணுகுமுறையாகவும் இருக்கும். எனவே, பல ஆண்டுகளாகத் தமிழில் ஏற்கனவே புழங்கி பொதுமக்களிடையே பிரபலமான திசைச்சொற்களை தமிழ் என்கிற பெயரில் மாற்ற முயல்வது, தமிழின் இலக்கணமும் மரபும் அறியாதோர் செய்கிற அறிவுபூர்வமற்ற செயல் ஆகும்.

இலங்கைத் தமிழில் பன் என்பது (Bun) பான் என்றும், காப்பி என்பது கோப்பி என்றும், கோர்ட் என்பது கோட் என்றும், ஷர்ட் என்பது சேட் என்றும், டார்ச் என்பது ரோச் என்றும், டவல் என்பது துவாய் என்றும் திரித்து எழுதப்படுகிறது. இவையெல்லாம் திசைச்சொற்களின் திரிபுகளே என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வார்த்தைகள் எல்லாம் தமிழ் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?

இனி, வடசொல்லுக்கு வருவோம். தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழில் வடசொற்கள் (சமஸ்கிருதம் வடமொழி என்றும், சமஸ்கிருதச் சொற்கள் வடசொற்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.) கலந்து புழங்கி வருகின்றன. தமிழில் வழங்கும் வடமொழிச் சொற்களை இருவகையாகப் பிரிக்கின்றனர். அவை, தற்சமம் மற்றும் தற்பவம் ஆகும்.

தற்சமம் என்பது இரண்டு மொழிகளுக்கும் பொதுவான எழுத்துகளால் ஆன சொற்களைத் தமிழில் வரும்போது அப்படியே ஏற்றுக் கொள்வது. உதாரணமாக, அமலம், கமலம், காரணம், காரியம் என்று சில வார்த்தைகளைத் தமிழாசிரியர் சொல்வர் பாருங்கள், இவையெல்லாம் வடமொழி வார்த்தைகள் என்றே நம்மில் பெரும்பாலோர்க்குத் தெரியாது. இவற்றின் மூலம் சமஸ்கிருதமாக இருக்கலாம்; தமிழாகவும் இருக்கலாம். அதாவது, இத்தகைய வார்த்தைகள் சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கலாம். அல்லது, தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்குப் போய் இருக்கலாம். ஒரு சொல்லின் ஆரம்பத்தை (origin) ஆராய்கிற முறைக்கு "வேர்ச்சொல் ஆராய்ச்சி" (Etymology) என்று பெயர். தொல்காப்பியர் கூட சொற்களின் மூலத்தைத் தெளிவாகக் கண்டுபிடித்துவிட முடியாதென்று சொல்கிறார் என்று சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி சொல்கிறது. டாக்டர் கால்டுவெல் போன்ற ஒரு சிலரின் முயற்சிகளைத் தவிர, தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியானது அனுமானத்தின் அடிப்படையிலும், கற்பனையின் அடிப்படையிலுமானவை என்று சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சுருங்கச் சொன்னால் இத்தகைய ஆராய்ச்சிகளால் பெரிதும் பயனொன்றும் இல்லை. பிற மொழிகள் மீது வெறுப்பையும், தன் மொழியின் மீது அறிவுபூர்வமற்ற உணர்வுபூர்வமான பற்றையும் (இது பலநேரங்களில் மொழி வெறியாக மாறக்கூடிய ஆபத்துடையது) வளர்க்கவே இவை உதவும்.

"ஹேஷ்யம்" என்கிற வார்த்தைக்குப் பொருள் கேட்ட நண்பர் ஒருவர், hypothesis என்பதை அச்சொல் குறிக்கிறதா என்று கேட்டிருந்தார். அச்சொல் hypothesis-ஐக் குறிக்குமானால், அதற்கு முன்னூகம் என்னும் அழகானச் சொல் இருப்பதாகவும் எழுதியிருந்தார். ஹேஷ்யம் என்கிற சொல்லுக்கு, ஊகம் என்றும் மேலோட்டமான கணிப்பு என்றும் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி பொருள் சொல்கிறது. ஆனால், பாருங்கள் முன்னூகம் என்ற சொல் பாதித் தமிழ் மட்டுமே என்றும் வாதிட முடியும். ஊஹனா (Uhana) என்கிற சொல் சமஸ்கிருதத்திலும் இதே பொருளில் வழங்கப்படுகிறது. சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி கூட "ஊகனம் (Ukanam) என்பதையே ஊகம்" என்று சொல்லி அதன் மூலம் (origin) தமிழ் இல்லை என்கிறது. எனவே, தனித்தமிழ் இலக்கணப்படிப் பார்க்கப் போனால், முன்னூகம் என்ற சொல் முழுத்தமிழ்ச்சொல் இல்லையென்று ஆகிவிடும். ஆனால், தமிழ் என்று பார்க்கப்போவோமேயானால், ஹேஷ்யம், முன்னூகம் என்ற இரண்டுச் சொற்களையுமே தமிழ் என்று எடுத்துக் கொள்ள முடியும். மேலும் ஊகம், ஹேஷ்யம் என்ற சொற்கள் முன்னூகம் என்ற சொல்லைவிட வெகுஜனப் புழக்கத்தில் அதிகம் இருந்திருப்பதால் எளியோரும் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் அவற்றை முன்னூகத்திற்குப் பதில் பயன்படுத்துவது உபயோகமாக இருக்கலாம். இப்படித்தான், நாம் தனித்தமிழ் என்கிற பெயரில் எழுதுகிற பல சொற்களின் மூலம் தமிழாக இல்லாமலிருப்பதை நாம் பார்க்க முடியும். தனித்தமிழ் என்று போர்டு போட்டுக் கொண்டு, பிறமொழிச் சொற்களைத் தவிர்க்க இயலாது நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருப்பதை விட, தமிழில் கலந்துவிட்ட திசைச்சொற்களையும் வடசொற்களையும் தமிழாக ஏற்றுக் கொண்டு, அவற்றைப் பயன்படுத்துகிற நல்ல தமிழில் எழுதுவது உத்தமம் என்று நான் நம்புகிறேன்.
-----

ஜடாயு said...

பி.கே.சிவக்குமாரின் “தனித்தமிழ் என்னும் போலி” கட்டுரையின் இரண்டாம் பாகம். இதில் கிரந்த எழுத்துக்கள் பற்றியும் கூறுகிறார் -

http://www.maraththadi.com/article.asp?id=702

வடமொழிச் சொற்களின் இன்னொரு வகை தற்பவம் என்று அழைக்கப்படுகிறது. தமிழின் ஒலிக்கேற்பத் திரிந்து ஒலிக்கும் சொற்கள் தற்பவம் என்று சொல்வர். உதாரணமாக, ஹரன் பிரசன்னா என்பதைத் தமிழில் அரன் பிரசன்னா என்று எழுதுவது, ஹரி என்பதைத் தமிழில் அரி என்று எழுதுவது என்று சொல்லலாம். எனவே, இதனுள் ஆழமாகச் செல்லாமல், மேலோட்டமாகக் கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து எழுதுவது என்று பொருள் கொள்ளலாம். அதாவது, இச்சொற்களைத் தமிழ் என்று ஏற்றுக் கொள்ள முடியும் ஆனால் எழுதும்போது கிரந்த எழுத்துகளை நீக்கியும் எழுதக்கூடிய சொற்கள் எனலாம். கிரந்த எழுத்துகளை நீக்கி எழுதுவதுதான் சரியா? அதைப் பின்வரும் பகுதியில் பார்ப்போம்.

கிரந்த எழுத்துகளும் தமிழ் எழுத்துகளே:

கல்வெட்டுகளின் மூலம் கிடைத்திருக்கும் வரலாற்றுப் பூர்வமானச் சான்றுகளைக் கொண்டு ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் பின்வரும் உண்மைகளை வெளிக்கொணருகின்றனர்:

1. தமிழ் பிராமி எழுத்துகள் அசோகன் காலத்தையொட்டிய பிராமி எழுத்துகள்தான். தமிழ் பிராமி எழுத்துகள் எழுத்தாணியால் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டபோது வளைவு சுழிவுகள் பெற்று பரிணாம வளர்ச்சியில் வட்டெழுத்தாக ஆனது.

2. பிராமி எழுத்துகளிலும் தமிழ் முற்காலத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடிய ஔவையார் தமிழ் பிராமி எழுத்துகளில்தான் எழுதியிருப்பார் என்ற முடிவுக்கு வரலாம்.

3. தமிழ் எழுத்துகள் வடநாட்டிலிருந்து வந்த (பிராமி) எழுத்துகளிலிருந்துதான் உருவானவை என்கிற உண்மை சிலத் தமிழறிஞர்களுக்குக் கசப்பாக இருப்பதால், இதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

4. தமிழ் எழுத்துகளிலிருந்து பிராமி எழுத்துகள் உருவானதற்குச் சான்றுகள் இல்லை. ஆனால், பிராமி எழுத்திலிருந்து தமிழ் வட்டெழுத்து உருவானதற்குச் சான்றுகள் இருக்கின்றன.

5. இப்போது இருக்கும் தமிழ் எழுத்துகள் கிரந்தத்தோடு தொடர்புடையன. கிரந்த எழுத்துகள் ஆறாம் நூற்றாண்டிற்குப் பின்பட்டவை. தென்பிராமியிலிருந்து கிரந்தம் மூலமாக வட்டெழுத்துகள் வந்தன. பிறகு வட்டெழுத்து தமிழ்நாடு முழுவதும் விநியோகிக்கப் பட்டது. ஆனால், பத்தாம் நூற்றாண்டிற்குப் பின் வட்டெழுத்து அழிந்து, கிரந்த எழுத்து பல்லவர் காலத்திலிருந்து அண்மைக் காலம் வரைக்கும் இருந்துள்ளது.

மேற்கண்ட வரலாற்று உண்மைகளை ஆராயவும் பொருள் காணவும் நாமும் கல்வெட்டியலாளராகவோ அறிஞராகவோ இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மேற்கண்டவற்றிலிருந்து, குன்சாக, தமிழ் எழுத்துகள் பிராமி எழுத்துகளிலிருந்து (வடமொழி எழுத்து) உருவானவை என்றும் கிரந்தத்துடன் ஏறக்குறைய ஆறாம் நூற்றாண்டு காலம் முதல் தொடர்புடையவை என்றும் சாதாரண I.Q. உள்ள எவரும் கூடப் புரிந்து கொள்ள முடியும். எனவே, கிரந்த எழுத்தைத் தமிழ் இல்லையென்று ஒதுக்கினால், மற்றெல்லா தமிழ் எழுத்துகளையும் கூட தென்பிராமி மற்றும் கிரந்தம் ஆகியவற்றின் வழியே வந்தவை என்று சொல்லித் தூக்கி எறிந்துவிட முடியும். ஆனால், தனித்தமிழ்ப் பிரியர்கள் அதைச் செய்யாமல், கிரந்த எழுத்துகளை மட்டும் வடமொழி என்று சொல்லி நீக்கிச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கிரந்த எழுத்துகளை ஒதுக்கி எழுதுவதுதான் சரியான தமிழ் என்பதற்கு வரலாற்றுபூர்வமாக உண்மையும் இல்லை என்று இதன்மூலம் விளங்குகிறது. எனவே, எதற்காக கிரந்த எழுத்துகளை ஒதுக்க வேண்டும்.

தொல்காப்பியத்திற்குப் பிறகு பல இலக்கண நூல்கள் தமிழில் வந்திருக்கின்றன. அவற்றுள் திவாகரம் (9ஆம் நூற்றாண்டு), பிங்கலம் (10ஆம் நூற்றாண்டு), நன்னூல் (13ஆம் நூற்றாண்டு), உரிச்சொல் நிகண்டு (14ஆம் நூற்றாண்டு), சூடாமணி நிகண்டு (16ஆம் நூற்றாண்டு) ஆகியன குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் பவணந்தி முனிவர் (பவணநந்தி என்ற பெயர் திரிந்து பவணந்தி ஆகியது என்பர்) என்னும் சமணத்துறவியால் பதிமூன்றாம் நூற்றாண்டின் முன்பகுதியில் எழுதப்பட்டதாக கணிக்கப்படும் நன்னூல் மிகவும் புகழ் பெற்றது. "முன்னோர் ஒழியப் பின்னோர் பலரினுள் நன்னூலார் தமக்கு எந்நூலாரும் இணையோ" என்கிற புகழ் பெற்றது நன்னூல். அதாவது, நன்னூல் எழுதப்படுவதற்கு முன்னிருந்த இலக்கண நூல்கள் நன்னூல் வந்தவுடன் முக்கியத்துவம் இழந்துவிட்டன என்னும் அளவிற்கும், நன்னூல் எழுதப்பட்டதற்குப் பின் வந்த இலக்கண நூல்கள் எதுவும் நன்னூலுக்கு இணையாக மாட்டா என்றும் சொல்லும் அளவிற்கும் நன்னூல் சிறப்பு மிக்கது என்று போற்றப்படுகிறது. அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஒ, ஔ என்பன வடமொழிக்கும் தமிழிக்கும் பொது உயிர் எழுத்துகள். வடமொழியில் மெய்யெழுத்து முப்பத்தேழு. அவற்றுள் க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ள என்ற பதினைந்து மெய்கள் வடமொழிக்கும் தமிழுக்கும் பொது எழுத்துகள் என்று நன்னூல் சொல்கிறது. கிரந்த எழுத்துகளை வடமொழி என்று நாம் ஒதுக்குவது சரியென்றால், இருமொழிகளுக்கும் பொதுவான இந்த எழுத்துகளையும் வடமொழி என்று ஒதுக்கிப் புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் சரியான "தனித்தமிழாக" இருக்க முடியும்.

அதுமட்டுமில்லை, சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி உட்படத் தமிழின் அகராதிகள் கிரந்த எழுத்துகள் கலந்த வார்த்தைகளைத் தமிழ் வார்த்தைகளாகவே கருதி, அவற்றைக் கிரந்த எழுத்துகளைக் கொண்டே பாவித்து, பொருள் தந்திருக்கின்றன. எனவே, கிரந்த எழுத்துகள் தமிழர் வாழ்வில் பின்னிப் பிணைந்தன என்று நாம் அறிய முடிகிறது.

தொகுப்புரை:

"தனித்தமிழ் என்பது தமிழ் இலக்கண நூல்கள் சொல்லுவது; அதுதான் சரியான தமிழ்" என்கிற மாயை நம்மில் பெரும்பாலோரிடையே நிலவுகிறது. எனவே, இக்கட்டுரையில் தமிழ்மொழியின் வரலாற்றுப் படியும், மரபுப் படியும், இலக்கணப்படியும், தனித்தமிழ் தமிழ் அல்ல என்று சான்றுகளுடன் நிறுவ முயன்றிருக்கிறேன். எனவே, இப்போது நமக்கு நல்ல தமிழ் என்பது திசைச்சொற்களும் வடசொற்களும் கலந்து வரக்கூடியதுதான் என்று புரிகிறது. தனித்தமிழ் என்பது வரலாற்று ரீதியாகவும், இலக்கண ரீதியாகவும் எங்கும் பயன்படுத்தப்படவில்லை என்பதும் புரிகிறது. சமஸ்கிருதம்- தமிழில் சொற்றொகுதியை (vocabulary) அதிகப்படுத்த உதவியது என்று சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி சொல்வது போலவே, பிற மொழி திசைச்சொற்களும் சொற்றொகுதியை அதிகப்படுத்த உதவும் என்று நாம் புரிந்து கொண்டால், இத்தகைய வசதிகள் (more than one way to describe a word) மொழிக்கு எவ்வளவு செழுமை சேர்க்கும் என்பதைச் சுலபமாக உணர இயலும். அதுமட்டுமல்ல, சங்ககாலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டில் தனித்தமிழ் இயக்கம் தோன்றுகிற வரை, தமிழர்கள் எல்லா மொழிகளிலும் உள்ள, வாழ்க்கைக்கு உதவுகிற வார்த்தைகளை வரவேற்கிற ஏற்றுக் கொள்கிற பெருந்தன்மையாளர்களாக இருந்து வந்திருப்பதைப் பார்க்கிறோம். தமிழ் இவ்வளவு காலம் உயிரோடு இருப்பதற்கும், தழைப்பதற்கும் தமிழ் பிறமொழி வார்த்தைகளை இப்படி ஏற்று அரவணைத்துக் கொள்வது ஒரு பெரிய காரணம் எனலாம்.

மேற்கண்டவாறு- இலக்கண ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும்தான் தனித்தமிழ் எவ்வளவு போலியானது என்று பார்த்தோம். நவீன வாழ்வில் வாழுகின்ற நாம், நடைமுறை வாழ்வில் பயன்படுத்துகிற பிற மதிப்பீடுகளின் சார்பில் தனித்தமிழை ஏற்றுக் கொள்ள முடியுமா என்று சுருக்கமாகப் பார்ப்போம். இதுபற்றி நெத்தியடியாக ஏற்கனவே பலர் எழுதியுள்ளனர். நாம் இரண்டு ஜாதிகளின் கலப்பு மணத்தை ஆதரிக்கிறோம். இரண்டு பொருளாதாரங்களின் கலப்பை (முதலாளித்துவம் + பொதுவுடைமை = சோஷலிஸம்) ஆதரிக்கிறோம். இரண்டு விதைகளைச் சேர்த்து அமோக விளைச்சலுக்கு வீரியமிக்க கலப்பு விதைகளைக் கண்டுபிடிக்கிறோம். கலப்பு உரங்கள் நமக்கு மகசூலில் சாதனை செய்ய உதவுகின்றன. பல கலாசாரங்கள் பயில்வோரிடமும், பல மொழிகள் பேசுவோரிடையேயும் புழங்குகிறோம். இப்படி நவீனத்துடன் தொடர்பு கொண்டு, தன்னை மாற்றிக் கொள்ளாத எதையும் பத்தாம் பசலி என்றும், வாழ்க்கைக்குதவாத பழமையானது என்றும் கூறுகிறோம். ஆனால் தமிழுடன் மட்டும் பிறமொழிச் சொற்கள் கலக்கக்கூடாது என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். தனித்தமிழ் பேசிக் கொண்டிருந்தால், தமிழையும் விரைவில் வாழ்க்கைக்குதவாதது என்று தூக்கி எறிந்துவிட வேண்டி வரலாம்.

இலக்கியத்திற்குத் தனித்தமிழ் உதவுமா? ஜெயகாந்தன் இதை ஏற்கனவே தன்னுடைய "தமிழும் தனித்தமிழும்" கட்டுரையில் "தனித்தமிழ்தான் தமிழ் எனில் இலக்கியம் படைக்க லாயக்கற்ற மொழி தமிழ் என்றாகும்" என்று சொல்லி விளக்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன் இங்கே NPR-வில் (National Public Radio) ஓர் எழுத்தாளரின் நேர்காணல் கேட்கிற வாய்ப்புக் கிடைத்தது. அந்த எழுத்தாளர் "Spanglish" (Spanish + English) என்கிற மொழியில் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். இப்படி நவீன வாழ்வில் மொழியானது கருத்துப் பரிமாற்றத்திற்கான ஓர் ஊடகம் என்கிற அளவிலேயே மதிக்கப்படுகிறது. இனத்தூய்மை பேசுபவர்களை இனவெறியர்கள் (racist) என்று அழைக்கிற மானுட மதீப்பீடுகளை நாம் பின்பற்றுகிறோம். மொழித்தூய்மையைப் பின்பற்ற வேண்டும் என்று சொன்னால், வரலாறு நம்மை மொழிவெறியர்கள் என்று பின்னாளில் அழைக்கக் கூடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நல்ல தமிழ் (திசைச்சொற்களும் வடமொழிச் சொற்களும் கலந்த தமிழ்) பேச, எழுத சொல்வதுதான் நடைமுறைக்கு உகந்ததாக இருக்க முடியுமே தவிர தனித்தமிழ் பயில வேண்டும் என்று சொல்வது எதற்கும் உதவாது.

எனவே, அறிவுபூர்வமாக சிந்திப்போர், எதன் அடிப்படையிலும் தனித்தமிழ் பேசுவோர் முன்வைக்கிற கூற்றுகளை ஏற்றுக் கொள்ளவும் பின்பற்றவும் நிறைய யோசிக்க வேண்டும்.

இக்கட்டுரையை எழுதப் பயன்பட்ட நூல்கள்:

1. ஐராவதம் மகாதேவன் நேர்காணல் - செப்டம்பர் 2003 குமுதம் தீராநதி இதழ்
2. Tamil Lexicon Volumes - University of Madras Publication
3. பிழையின்றி நல்ல தமிழ் எழுதுவது எப்படி - ஜெ.ஸ்ரீசந்திரன் - வர்த்தமானன் பதிப்பகம், சென்னை - 17
4. நன்னூல் காண்டிகையுரை - அ.மாணிக்கம் - பூம்புகார் பதிப்பகம், சென்னை - 18.
5. தமிழும் தனித்தமிழும் - ஜெயகாந்தன் ---> (In TAB encoding) http://www.tamil.net/people/pksivakumar/tamil.htm
6. தமிழ்ப்படுத்துதலும் தமிழ் மனமும் - நாகூர் ரூமி --> http://www.tamiloviam.com/html/Exclusive50.asp
7. பொருந்தாக் காமம் - பி.கே.சிவகுமார் --> http://www.thinnai.com/pl07030310.html
8. தமிழ் இலக்கிய வரலாறு - டாக்டர் மு.வ. - சாகித்திய அக்காதெமி வெளியீடு
9. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - க்ரியா வெளியீடு
10. மண்டல புருடர் வழங்கிய சூடாமணி நிகண்டு (பதினொன்றாம் தொகுதி) - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு.

முற்றும்

Anonymous said...

மேலே ஜெயமோகனின் கட்டுரையைப் படித்துவிட்டு ஏதோ தமிழ்நாட்டுப்

பிராமணர்கள்தான் இன்றைய கேரளாவிலே தமிழ்கெட்டு மலையாளமொழி

உருவானதற்குக் காரணமானவர்கள் என்று ஒரு தவறான புரிதலை ஏற்படுத்திக்

கொண்டு சிலர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் கேரளொத்பத்தி என்ற மலையாள சரித்திரப் புத்தகத்தையோ அல்லது மற்ற

புராண ஆதாரங்களையோ அறியாதவர்கள்.

கேரளாவிலே ஆதியில் குடியேறிய சோழநாட்டுத் தமிழ்ப்பிராமணர்கள் பெரும்பான்மை

அந்தப் பிரதேசத்தின் தட்பவெப்பம் பிடிக்காமல் திரும்பி வந்து விட்டார்கள். அவர்கள்

ஊர்த்வசிகை என்ற முன்னுச்சிக்குடுமி வைத்திருந்த காரணத்தால்தான் சோழியன்

சிண்டு சும்மா ஆடுமா என்ற பழமொழியே வந்தது.

அதற்குப் பின்னால் போய் மேற்குக் கரையோரக் கன்னட தேசத்திலிருந்தும், வடுக

(ஆந்திரா) தேசத்திலிருந்தும் பல பிராமணர்கள் போய் பின்னர் நிரந்தரமாகக்

குடியேறினர். இன்றைய கேரள நம்பூதரிகள், துளு மற்றும் தெலுங்கைப் பூர்விகமாகக்

கொண்டவர்கள்.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலிலே போத்திமார் துளு நம்பூதரிகள்.

எர்ணாகுளத்திலே, வைக்கத்திலே துளுதான். சபரிமலை சர்ச்சையில் சிக்கிய கண்டனுரு

மோகனரு தெலுங்கர். தமிழ்பேசப் பிடிக்காத இவர்களின் மூதாதையர்

சமஸ்கிருதத்தைக் கலந்து உருவாக்கியதுதான் மலையாளமே அன்றி இதிலே தமிழ்

அந்தணர்களுக்கு எந்த விதத்திலும் பங்கில்லை.

இவ்வளவு ஏன், சுமார் 500 வருடங்களுக்கு முன் பாலக்காடு, திருவனந்தபுரம் போன்ற

இடங்களுக்குக் குடிபெயர்ந்த தமிழ் அந்தணர்கள் இன்னும் மலையாளிகளோடு

கலக்காமல், தங்கள் தனித்துவத்தை விடாமல், தமிழ் பேசிக் கொண்டு இருப்பதைப்

பார்க்கலாம். தமிழ்நாட்டு அய்யர்களை நம்பூதரிகள் வெறுப்பதும், தங்களுக்குக்

கீழானவர்களாய்ப் பார்ப்பதும் இதனால்தான்.

இதைப் போலவே தமிழகத்தில் தெலுங்கு நாயக்கர் ஆட்சிக்காலத்தில் புழுக்கத்திற்கு

வந்தது மணிப்பிரவாள நடை. அதற்கும் தமிழ் அந்தணர்கள் காரணமில்லை.

தமிழ் அந்தணர்கள் எந்தக்காலத்திலும் தமிழை விட்டுக் கொடுத்தவரில்லை. 60களில்

திராவிடக்கழக அரசியலால் வெறுப்படைந்து குடிபெயர்ந்த சிலரின் - வெகுசிலரின் - இரண்டாம், மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர் இன்று பல வெளிநாடுகளிலே
குறிப்பாய் இங்கே அமெரிக்காவிலே தமிழ் அடையாளத்தையே வெறுப்பவர் போல்
பேசலாம். ஆனால் இன்றும் 99% தமிழ் அந்தணர்கள் தங்கள் தமிழ் அடையாளத்தை
எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவர்களில் பல முட்டாள்கள்
பிற தமிழர்களைப் போலவே சாதி ஏற்றத்தாழ்வை நம்புபவர்களாய் இருக்கலாம். அவரையும் காலம் மாற்றும். ஆனால் அவர்கள் தமிழர்கள் என்பதை எந்தச் சும்பனாலும்
மறுக்கவோ மாற்றவோ முடியாது. அதற்கான சான்றிதழை அவர்கள் பிறரிடம் எதிர்பார்க்கவும் இல்லை.

- சுப்ரமண்யம் கோபாலகிருஷ்ணன்

ஜடாயு said...

பெரியாரின் தமிழ் பற்றிய கருத்துக்களை இங்கே இட்டிருக்கும் அனானி, நீர் சொல்ல வருவது என்ன? இதெல்லாம் ஏற்கனவே தெரிந்தது தானே?

சுப்ரமண்யம் கோபாலகிருஷ்ணன், கேரள நம்பூதிரிகள் பற்றி உங்களுக்கு இவ்வளவு விஷயம் தெரிந்திருக்கிறது !

// தமிழ்பேசப் பிடிக்காத இவர்களின் மூதாதையர் சமஸ்கிருதத்தைக் கலந்து உருவாக்கியதுதான் மலையாளமே அன்றி இதிலே தமிழ் அந்தணர்களுக்கு எந்த விதத்திலும் பங்கில்லை.//

மலையாளத்தில் சம்ஸ்கிருதச் சொற்கள் மிகுதியும் இருப்பது மற்ற தென்மொழிகளான தெலுங்கு, கன்னடத்தில் உள்ளது போன்றது தான் – பல பண்டிதத் தனமான சொற்கள் (உதாரணமாக மனைவி என்பதற்கு “பார்யா”) புழக்கத்தில் வந்ததற்கு வேண்டுமானால் பண்டிதர்களின் கைவண்ணம் என்று சொல்லலாம், அவ்வளவு தான்.

ஒரு குழுவினர் தமிழ் பேசப் பிடிக்காமல் இப்படி செய்தனர் என்பதற்கு என்ன வரலாற்று ஆதாரம் உள்ளது? அப்படி பார்த்தால் தெலுங்கிலும், கன்னடத்திலும் ஏராளமான சம்ஸ்கிருதச் சொற்கள் உள்ளனவே, அதற்கு என்ன காரணம்?

// இதைப் போலவே தமிழகத்தில் தெலுங்கு நாயக்கர் ஆட்சிக்காலத்தில் புழுக்கத்திற்கு வந்தது மணிப்பிரவாள நடை. அதற்கும் தமிழ் அந்தணர்கள் காரணமில்லை. //

தவறு. மணிப்பிரவாள நடையை உருவாக்கி செழுமையுறச் செய்தவர்கள் பெரியவாச்சான் பிள்ளை, நஞ்சீயர் போன்ற வைணவ ஆச்சாரியர்கள். நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்கு எழுதப் பட்ட உரைகள் தான் முதன்முதலில் பெரிய அளவில் இந்த நடையைக் கைக்கொண்டன. பின்னாளில் இது பல மாற்றங்கள் அடைந்து எல்லாரும் பயன்படுத்தக் கூடிய உரைநடைத் தமிழாகப் பரிணமித்தது. விவிலியத்தின் முதல் தமிழ் மொழிபெயர்ப்புகள் பரிசுத்தம், சுவிசேஷம் போன்ற பதங்களோடு தங்களுக்கு என்று ஒரு விதமான மணிப்பிரவாள நடையை உருவாக்கி “கிறித்துவத் தமிழ்” என்றே அடையாளம் சொல்லத் தக்க அளவு அதை வளர்த்தெடுத்தன.

Anonymous said...

//ஆனால் நாமோ தமிழ் பேசிவிட்டாலே போதும் சக தமிழர் மூளையில் இவர் எந்த ஜாதியாய் இருப்பார்
எனக் குடைச்சல் ஆரம்பித்து விடும். சாப்பாட்டிலிருந்து ஆரம்பிப்பார்கள் கேள்விகணைக்களை
. என்ன ஒரு குறுகிய மனப்பான்மை.//

சிவா,

நான் சமஸ்கிருத ஸ்லோகங்கள் கற்றுக்கொள்ள போவதுண்டு. அப்போது
நாம் இயல்பாக பேசும், வார்த்தைகள் (சேட்டை vs சேஷ்ட்டை)
உணவு பழக்கங்கள், உயிர்தரிப்புக்கள் (முகம் muham vs mukham) என்று ஒவ்வொன்றும்
நகையாடப்படும். இப்படிப்பட்டவர்களுக்கு இராம.கி போன்றோர் தமிழின் பெருமையை எடுத்து
சொல்ல முற்பட்டால் எப்படி பொருக்கும்.

Anonymous said...

//1. தமிழ் பிராமி எழுத்துகள் அசோகன் காலத்தையொட்டிய பிராமி எழுத்துகள்தான். தமிழ் பிராமி எழுத்துகள் எழுத்தாணியால் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டபோது வளைவு சுழிவுகள் பெற்று பரிணாம வளர்ச்சியில் வட்டெழுத்தாக ஆனது.

2. பிராமி எழுத்துகளிலும் தமிழ் முற்காலத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடிய ஔவையார் தமிழ் பிராமி எழுத்துகளில்தான் எழுதியிருப்பார் என்ற முடிவுக்கு வரலாம்.

3. தமிழ் எழுத்துகள் வடநாட்டிலிருந்து வந்த (பிராமி) எழுத்துகளிலிருந்துதான் உருவானவை என்கிற உண்மை சிலத் தமிழறிஞர்களுக்குக் கசப்பாக இருப்பதால், இதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

4. தமிழ் எழுத்துகளிலிருந்து பிராமி எழுத்துகள் உருவானதற்குச் சான்றுகள் இல்லை. ஆனால், பிராமி எழுத்திலிருந்து தமிழ் வட்டெழுத்து உருவானதற்குச் சான்றுகள் இருக்கின்றன.//

நல்ல பகுடி போங்க....

ஐராவதம் மகாதேவன் இப்ப என்ன சொல்றார்னு போய் எங்காவது படிங்க.அவர் 2003-ல சொன்னத இன்னும் சொல்லிட்டு இருக்கீங்க.
கடைசியாக கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளின் படி தமிழ் பிராமி எழுத்துக்கள், வட இந்திய பிராமி எழுத்துக்களை விட பழமையானவை. ஆதிச்சநல்லூர்ல என்ன கண்டு பிடிச்சுருக்காங்கன்னு, கொஞ்சம் கண்ணைத் திறந்து படிங்க சடாயு:-)