Saturday, September 02, 2006

திண்ணை கட்டுரை : 24 ஆகஸ்ட் 06

இந்தக் கட்டுரையை வெளியிட்ட திண்ணை இதழுக்கு நன்றி.

எண்ணங்கள் - இந்துக்களின் நற்குணத் திரிபு, இஸ்ரேலின் தார்மீகப் போர், அரபு-அமெரிக்க பெண் உளவியலாளர், ஜிகாதுக்கு எதிராக முஸ்லீம் பெண்கள்

சின்னக் கருப்பனுடைய கருத்துக்களுக்கும், ஸ்ரீராமனை முன் வைத்து அவர் கூறிய தவறான உதாரணத்திற்கும் வந்த எதிர்வினைகள் தெளிவான, குழப்பமற்ற சிந்தனையின் வெளிப்பாடுகளாக இருந்தன. மலர்மன்னன், நேசகுமார், அனல் தூங்கும் கண்ணன் (யார் இந்தப் புது ஆள்?), வஜ்ரா ஷங்கர் - ஜிகாதி தீவிரவாதம் பற்றி இவ்வளவு துணிச்சலாகவும், தீர்க்கமாகவும், தெளிவாகவும் எழுதுபவர்களது எண்ணிக்கை தமிழ் இணையச் சூழலில் அதிகரித்து வருவது நல்ல, ஆரோக்கியமான அறிகுறி. இவர்கள் அனைவருக்கும் நன்றி, பாராட்டுக்கள்.

கொடிய மத வெறியனும், கொள்ளைக் காரனுமான கோரி முகமதுவை பலமுறை மன்னித்து விட்ட பிரித்வி ராஜனைப் பற்றி இரண்டு மூன்று கட்டுரையாளர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். நற்குணத் திரிபு (வடமொழியில் “ஸத்குண விக்ருதி”) என்பதற்கு மிகச் சரியான உதாரணம் இந்தப் பிரித்வி ராஜன். பகைவனையும் மன்னிக்க வேண்டும் என்ற நற்பண்பைப் பாத்திரம் அறியாது கடைப்பிடித்து, பாரதம் முழுவதும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிமைப் படுவதற்கு ஒரு விதத்தில் வழிவகுத்தது அவன் செயல். இந்த பிரித்வியை ஒரு வழியாகத் தோற்கடித்த கோரி அவனை எப்படி நடத்தினான்? அவனது கண்களைப் பிடுங்கி, நாய் போல காபூல் நகர வீதிகளில் தெருத் தெருவாக இழுத்துச் சென்று, சித்திரவதை செய்து கொன்றான் ! காஃபிர் ப்ரித்விராஜன் மீதான ஜிகாதிகளின் வெறுப்பு அப்படியும் அடங்கவில்லை. இன்றும் கூட, ஆப்கானிஸ்தானில் காண்டஹர் அருகே உள்ள பிருத்விராஜனின் பாழடைந்த சமாதிமீது காலால் எட்டி உதைத்து விட்டுத் தான் அங்கு போகும் ஒவ்வொரு பயணியும் கோரியின் சமாதியைப் பார்க்கச் செல்லவேண்டும் என்பதாக ஒரு பழக்கமே உள்ளது (பார்க்க)


தீயவர்களை அழிப்பதில் இது போன்று எந்த விதமான தொய்வுக்கும் இடம் கொடுக்கலாகாது என்பதை மகாபாரத கிருஷ்ணனின் யுத்த தர்மத்தை உதாரணம் காட்டியிருந்த விளக்கங்களும் நன்றாக இருந்தன. கௌரவர்கள் மட்டுமல்ல, ஜராசந்தன், சிசுபாலன், நரகன், காலயவனன் போன்று அநியாயங்கள் புரிந்த அக்கிரமக் கார கொடுங்கோல் அரசர்கள் பலரை அழித்து ஒழிப்பதற்கும் இந்த நெறிமுறையையே கிருஷ்ணன் கையாண்டான். சாணக்கியர், கிருஷ்ண தேவராயர், சத்ரபதி சிவாஜி, குரு கோவிந்த சிங் போன்று தர்மத்தைக் குழப்பமில்லாமல் புரிந்து கொண்ட மாவீரர்களும் இந்த “கிருஷ்ண நீதி”யையே கடைப்பிடித்தார்கள். இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான நமது தற்போதைய போரில் தேவைப்படுவதும் இதுவே.

* * * * * * * * * * *
“இஸ்ரேல் என்ற தேசமே உலக வரைபடத்தில் இருக்கக் கூடாது (மஹ்மூத் அஹ்மதெஞ்சாத் சொன்னது) , யூதர்கள் என்ற இனமே உலகில் இருக்கக் கூடாது (அடால்ஃப் ஹிட்லர் சொன்னது)” என்று தான் பாலஸ்தீன போராளிகளும், ஹெஸ்புல்லாவும், அரபு நாடுகளில் பெரும்பான்மையானவர்களும், ஏன் உலகெங்கும் இருக்கும் இஸ்லாமிஸ்டுகளும் நினைக்கிறார்கள். இப்படிப் பட்டவர்களிடம் இஸ்ரேல் நடந்து கொள்வதைத் தவிர வேறு எந்த மாதிரி நடந்து கொள்ள முடியும்?? ஏழாம் நூற்றாண்டின் காட்டுமிராண்டுத் தனமான இந்த யூத இன வெறுப்பு இன்று வரை தொடர்ந்து, இன்றைய இஸ்லாமின் மத நம்பிக்கைகளில் ஒன்றாகவே ஆகிவிட்டது! ஏறக்குறைய அரை நூற்றாண்டுகளாகத் தான் இஸ்ரேல் இஸ்லாமிய தீவிரவாதத்தைத் தாக்கி வருகிறது, அதுவும் 20 நூற்றாண்டுகளுக்கும் ஏராளமான கொடுமைகளுக்கும் பின் திரும்பப்பெற்ற தன் சின்னஞ்சிறிய தேசத்தையும், அதன் இறையாண்மையையும் காப்பாற்றிக் கொள்வதற்காக! ஆனால் இஸ்ரேலை அனாவசியத்துக்குப் போரில் இறங்கும் ஆக்கிரமிப்பு சக்தியாக சித்தரிப்பதே ஊடகங்களுக்கும், பல “அறிஞர்”களுக்கும் வழக்கமாகி விட்டது. “லெபனானின் அப்பாவிப் பெண்கள், குழந்தைகள் குண்டடி பட்டுச் சாகிறார்கள்” என்று திரும்பத் திரும்பச் சொல்லி உலகத்தின் அனுதாபத்தைப் பெற முயற்சிக்கும் இஸ்லாமிஸ்டுகளின் தந்திரங்களில் இதுவும் ஒன்று. மும்பையிலும், கோவையிலும், தில்லியிலும், காஷ்மீரிலும், லண்டனிலும், பாலி (Bali)யிலும், மாட்ரிட்டிலும், நியூ யார்க்கிலும், ஜெருசலத்திலும் – போரில் அல்ல, சாலைகளிலும், ரயில்களிலும், விமானங்களிலும், உணவகங்களிலும், கடைகளிலும், வீடுகளிலும், விடுதிகளிலும் ஜிகாதிகள் கொன்று குவித்த அப்பாவிப் பெண்கள், குழந்தைகள் எத்தனை, எத்தனை? பங்களா தேஷிலும், பாகிஸ்தானிலும் ஜிகாதிய அரசு ஆதரவுடன் அங்கு வாழ்ந்த இந்துப் பெண்களின் கற்பு சூறையாடப் பட்டதே, அந்த அரக்கத் தனங்கள் பற்றி ஊடகங்கள் இதே அளவு “அனுதாபமூட்டும் வகையில்” செய்தி வெளியிட்டனவா? இஸ்ரேலுக்கு நேர்ந்தது போல இவர்களுக்கும் நேர்ந்து, ஜிகாதி தீவிரவாத்தின் கோரப் பிடியால் பீடிக்கப் பட்டு அழிந்தால் தான் இவர்களுக்குப் புத்தி வரும்!

இஸ்ரேல் லெபனான் தாக்குதலைத் தொடங்கியதும், “உலக மக்களை நோக்கி இஸ்ரேலியப் பிரதமர் ஆற்றியிருக்க வேண்டிய உரை” என்ற தலைப்பில் யூத எழுத்தாளர் ஒருவர் எழுதியிருக்கும் சிறிய கட்டுரை (பார்க்க) இஸ்ரேலின் தார்மீக நிலைப்பாட்டை இன்னும் தெளிவாக விளக்குகிறது “.. இந்தத் தாக்குதலில் தயங்க மாட்டோம், மன்னிப்பு கேட்க மாட்டோம், பின்வாங்க மாட்டோம்.... ஆயிரக் கணக்கில் எங்கள் மக்கள் கொல்லப் பட்டபோது நீங்கள் இப்படி வெகுண்டெழுந்ததாக நினைவில்லை.. தீவிரவாத்தில் கொல்லப்பட்ட எங்கள் இளைஞர்களின் உடல் உறுப்புக்களை நாங்கள் TV காமிரா முன்பு திரும்பத் திரும்பக் காட்டுவதில்லை என்பதாலா? என்ன செய்வது? இத்தகைய பெரும் துக்கத்தையும் அமைதியாகவே அனுசரிப்பது எங்கள் வாழ்க்கை முறை… ஆனால் எங்கள் எதிரிகளின் குழந்தைகளின் சிதைந்த உடல்களைப் பார்த்து நாங்கள் கூரை மேல் ஏறி ஆட்டம் போட்டுக் களிப்பதில்லை – எங்கள் உண்மையான துக்கத்தையும் அனுதாபத்தையும் தெரிவிக்கிறோம். அப்படி ஆட்டம் போடுவது எங்கள் எதிரிகளின் அரக்கத்தனமான வழிமுறை. இன்றைக்கு எங்களை எதிர்த்திருக்கிறவர்கள் நாளை உங்களையும் எதிர்க்கக் கூடும். அவர்களது கொலைவெறித் தாக்குதலை ஏற்கனவே நீங்கள் அனுபத்திருக்கிறீர்கள். இன்னும் அனுபவிக்கப் போகிறீர்கள்”. கடைசி வரிகள் பாரதத்திற்காகவே சொல்லப்பட்டது போல் இருக்கின்றன. முழுக் கட்டுரையையும் படித்துப் பாருங்கள். அதீத தற்காப்பு உணர்வு (இது கசப்பான வரலாற்றினால் கற்ற சரியான பாடம்) என்பதைத் தவிர எந்த வெறித்தனமான கருத்தாக்கமும் இஸ்ரேலின் நிலைப்பாட்டில் இல்லை.

* * * * * * * * * * *
அல்-ஜஜீரா தொலைக்காட்சியில் வந்த லாஸ் ஏஞ்சலீஸில் வாழும் அரபு வம்சாவளியைச் சேர்ந்த பெண் உளவியலாளர் வஃபா சுல்தான் கருத்து (பார்க்க: இந்தக் கட்டுரை வெளியாகும்போதும் இந்த video link வேலை செய்யும் என்று நம்புகிறேன்). இவர் முன்வைக்கும் கருத்து அரபு உலகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வாழும் எல்லா முஸ்லீம்களும் நிச்சயம் சிந்தித்துப் பார்க்க வேண்டியது. இந்தப் பேட்டியிலிருந்து சில துளிகள் –
· இப்போது நடப்பது இரண்டு வேறுபட்ட நாகரீகங்களுக்கோ, சமயங்களுக்கோ இடையிலான போர் அல்ல. இரண்டு காலகட்டங்களுக்கு இடையிலானது – இருள் சூழ்ந்த இடைக்காலத்திற்கும் (middle ages), 21-ம் நூற்றாண்டிற்கும் இடையேயான யுத்தம். காட்டுமிராண்டித் தனத்திற்கும் பண்பாட்டிற்கும் இடையேயான யுத்தம். பெண்களை மிருகங்களாக நடத்தும் மனப்பான்மைக்கும் அவர்களை மனித உயிர்களாகப் பார்க்கும் மனப்பான்மைக்குமான யுத்தம்
· எந்த ஆன்மீக, supernatural விஷயங்களிலும் நம்பிக்கையில்லாத என் போன்றவர்களை ஏன் சமய விரோதியாக இஸ்லாம் பார்க்க வேண்டும்? நீங்கள் கற்களை நம்புவதில் ஒரு பிரசினையும் இல்லை, அவற்றை எங்கள் மீது எறியாமலிருக்கும் வரை!
· யூதர்கள் ஹோலோக்லாஸ்ட் என்ற பேரழிவிலிருந்து வெளிவந்து தங்கள் அறிவுத் திறத்தாலும், செயல் திறமையாலும், உழைப்பாலும் தங்களுக்கான உயர் இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். கொலை வெறியினாலோ, தீவிரவாதத்தாலோ, “ஐயோ, எங்களை அழிக்கப் பார்க்கிறார்கள்” என்று கத்திக் கூப்பாடு போட்டோ அல்ல.
· (ஜெர்மானியர் தங்களுக்கு இழைத்த கொடுமைக்குப் பழிவாங்குவதற்காக) எந்த யூத இளைஞனும் தற்கொலைப் படை அமைத்து ஜெர்மனி வீதிகளில் வெடித்துச் சிதறுவதில்லை. எந்த புத்த மதத்தவரும் இஸ்லாமை அவமதிக்கவில்லை. இஸ்லாமிய வெறியர்கள் தான் பாமியான் புத்தர் சிலைகளைத் தகர்த்து!
இந்தப் பேட்டிக்கு நடுவிலேயே, அரபிய சமய அறிஞர் ஒருவர், இந்தப் பெண்ணைப் பார்த்து, “நீ ஒரு சமயத் துரோகி, உனக்கு ஷரியத் படி தண்டனை வழங்க வேண்டும்” என்று திட்டியதும் நடந்தது!

* * * * * * * * * * *

ஜிகாதி தீவிரவாதப் போக்குகளைக் கட்டுப் படுத்துவதில் முஸ்லீம் பெண்கள் மிக முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பெண்மைக்கே உரிய இயல்பான குணங்களான அன்பு, பொறுமை, கருணை போன்ற மனிதப் பண்புகளும், ஆண்களுக்கே உரித்தான குழு சார்ந்த வெறித்தனம் இல்லாமலிருப்பதும், மதவெறியினால் பாதிக்கப் படாத சுய சிந்தனையை பெண்களிடத்தில் இயல்பாக வளரத் துணைபுரியும். பங்களாதேஷின் இந்துக்களுக்கு இழைக்கப் பட்ட வன்கொடுமைகளைப் பற்றி, எல்லா மிரட்டல்களுக்கும் துணிந்து தஸ்லீமா நஸ்-ரீன் என்ற பெண் எழுத்தாளர் எழுதி வருவது குறிப்பிடத் தக்கது (இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்த இந்த அச்சுறுத்தலுக்குள்ளான எழுத்தாளருக்கு ஆறு மாத விசா மட்டும் வழங்கி இந்திய அரசு அவரைத் துரத்த முயற்சிப்பது அராஜகம், அது தனிக்கதையாக எழுத வேண்டியது).

பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட பல இஸ்லாமிய சமுதாயங்களில் மறுக்கப்பட்டு வந்திருக்கின்றன. இவற்றையும் மீறி தங்கள் துறைகளில் சாதனை படைக்கும் முஸ்லீம் பெண்கள் மனித ஆற்றலையும், மனித நம்பிக்கையையும் பறைசாற்றும் நட்சத்திரங்கள்! தங்கள் கல்வியறிவினால் பெற்ற தன்னம்பிக்கையினால் உந்தப் பெற்ற இத்தகைய முஸ்லீம் பெண்கள் ஏற்கனவே பல இடங்களில் தங்கள் சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் பெண்களுக்கெதிரான தீமைகளை எதிர்த்துப் புறப்பட்டு விட்டார்கள். ஜிகாத் தீவிரவாதத்தைக் கனன்று எரியச் செய்துகொண்டிருக்கும் முல்லா, மௌல்வி, இமாம், காஜி கும்பல்கள் இந்தப் பெண்கள் எழுச்சியைச் சகியாமல் கிலி பிடித்துப் போயிருக்கின்றன. சமய, சமூக சீர்திருத்தத்திற்கான வாய்ப்பாக இதைப் பார்க்காமல், இந்தப் பெண்கள் எழுச்சியை பரவாமல் அடக்குவது எப்படி என்பதிலேயே இந்தக் கும்பல்கள் தங்கள் புத்தியைச் செலுத்திக் கொண்டிருக்கின்றன. இஸ்லாமிய அமைப்புக்குள்ளேயே ஜிகாத் என்ற அரக்கத் தனமான வன்முறை சார்ந்த கோட்பாட்டுக்கு எதிரான போரை முஸ்லீம் பெண்கள் தான் முன்னெடுத்துச் செல்வார்கள். இவர்கள் மீது தான் உலகம் பெரும் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் வைத்திருக்கிறது.

1 comment:

Anonymous said...

நல்ல பதிவு. பெண்கள் சக்தி ஜிகாதிற்கு எதிராகப் பெரிதாக வளருமா என்பது சந்தேகமே.. இருந்தாலும், அப்படி நடந்தால் தான் நல்லது.

தலைப்பு ஏன் இப்பரி மொண்ணையாக "திண்னை கட்டுரை" என்று வைத்துள்ளீர்கள்?