Saturday, September 16, 2006

உலகு புகத் திறந்த வாயில்

பழைய சொல்லாடல் ஒன்று அளிக்கும் ஆச்சரியமான புதிய பரிமாணங்களுக்கு இது ஒரு உதாரணம் என்று நினைக்கிறேன்.

புற நானூற்றில் வேள் எவ்வி என்ற மன்னனைப் புகழ்ந்து வெள்ளெருக்கிலையார் பாடிய கையறு நிலைப் பாடலில் இந்த சொல்லாடல் வருகிறது -

நோகோ யானே தேய்காமாலை
பிடி அடி அன்ன சிறுவழி மெழுகித்
தன் அமர் காதலி புல்லின்மேல் வைத்த
இன்சிறு பிண்டம் யாங்கு உண்டனன்கொல்
உலகுபுகத் திறந்த வாயில்
பலரோடு உண்டல் மரீஇயோனே.

உலகத்தோர் அனைவரும் பசி என வந்தாலும் அவர்கள் புகும் வகையில் திறந்தே கிடக்கும் பெரிய வாயிலை உடையவன் வேள் எவ்வி. அவன் தனியே உண்டு அறியாதவன். பலர் சூழ உண்பவன். இத்தகைய வள்ளல் இன்று இல்லை.

யானையின் அடியைப் போல வட்டமாகத் தரையை மெழுகி தருப்பைப் புல் பரப்பி அவனுக்குப் படையலாய் ஈம உணவை அவன் மனைவி வைக்கிறாள். பலரோடு உண்ட எவ்வி எவ்விதம் இன்று தனித்து உண்ணுவான்? இக்காட்சி என் உயிரைக் கொல்லுகிறதே!

(நன்றி : எஸ்.சிவகுமார் எழுதிய கொங்குதேர் வாழ்க்கை, யுனைடெட் ரைட்டர்ஸ் பதிப்பு)

இன்றைய சூழலில் உலகு புகத் திறந்த வாயில் என்று சொன்னால் பன்னாட்டு நிறுனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்துக் கொண்டிருக்கும் சீனாவும் liberlaised பொருளாதாரம் நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நம் பாரதமும் தான் உடனடியாக நினைவுக்கு வருகின்றன.

ஒரு வித்தியாசத்தைக் கவனியுங்கள். தன் செல்வச் செழிப்பை உலகுடன் பகிர்ந்து கொள்ள சங்க காலத் தமிழ் மன்னன் தன் கதவைத் திறந்து வைக்கிறான். ஆனால் செல்வம் வேண்டி நாம் உலகுக்குக் கதவு திறக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் அறிவுரை கூறுகிறார்கள். வேள் எவ்வியின் "திறந்த வாயிலில்" புகுந்தது இரவலர்களின் உலகம். ஆனால், நாம் திறந்திருக்கும் வாயிலில் புகுபவர்கள் உலகின் பெரும் செல்வங்களுக்குச் சொந்தக் காரர்கள்!

"உலகின் எல்லாத் திசைகளிலிருந்தும் மேலான எண்ணங்கள் நம்மை வந்தடையட்டும்" என்று முரசறைந்த ரிக்வேத ரிஷிகளின் பாரம்பரியம் நம்முடையது. ஆனால் இன்று "உலக" கலாச்சாரத் தாக்குதலின் பெருவெள்ளத்தில் இந்தப் பாரம்பரியமே சிக்கித் தத்தளிப்பது போலத் தோன்றுகிறது.

"உலகெங்கிலுமிருந்து என் அறைக்குள் காற்று வரட்டும்.. ஆனால் அது அடியோடு என்னைப் பரத்தி விட முடியாது (Let the winds from all over sweep into my room.. I will not be swept off my feet) என்று காந்திஜி சொன்னார்.

இந்த உறுதி நடைமுறையில் சாத்தியம் என்றால், சுவாமி விவேகானந்தர் சொன்னதைக் கடைபிடிக்க வேண்டும் -
"பாரத நாடே, உன் ஒரு கை உன் நெஞ்சின் மீது உறுதியாக இருக்கட்டும், அது ஒருபோதும் விலகக் கூடாது. மற்றொரு கையால் கிடைப்பவை எல்லாவற்றையும் முடிந்தவரை அள்ளிக் கொள்"

உலகு புகத் திறந்த நம் வாயில் எதற்கும் கொஞ்சம் ஒருக்களித்தே இருக்கட்டும்.

2 comments:

Narada Maharishi said...

Good post

The ideas given in this post are very good. I appreciate this.

ஜீவா (Jeeva Venkataraman) said...

முடிவு பிரமாதம்!