Sunday, December 10, 2006

பாரதி தரிசனம் : கவிதை

இனியொரு விதி செய்த
பிரமன்
அதை எந்த நாளும் காக்கச் சொன்ன
திருமால்
ஜகத்தினை அழிக்கப் புறப்பட்ட
ஜடாதரன்
பகைவனுக்கருளும் நன்னெஞ்சம் வேண்டிப் பாடிய
புத்தன்

ஒளிவளரும் தமிழ் வாணி
செம்மைத் தொழில் புரிந்தசெல்வத் திருமகள்
காலனைச் சிறு புல்லென மதித்துக்
காலால் மிதிக்கத் துடித்த
காளி



பெண்மை வாழ்கவென்று கூத்திட்ட
பெருமகன்
ஆதலினால் காதல் செய்வீர் என்று
அறைகூவி அழைத்த
அன்புத்தூதுவன்
சாதிகள் இல்லையடி பாப்பா என்று
சத்தியம் செய்த
சமத்துவத் தந்தை

வேடிக்கை மனிதரைப் போலே வீழ விரும்பாத
வேதாந்தி
நிலைகெட்ட மனிதரை நினைத்து நெஞ்சு பொறுக்காமல்
நிம்மதி கெட்ட
நிஜப் புரட்சிக்காரன்
வீர சுதந்திரம் வேண்டி
வெகுண்டெழுந்த வேங்கை
வையத்தலைமை எனக்கருள்வாய் எனக் கேட்ட
வல்லரசாதிக்கவாதி

வானம் வசப்படும் என்று நம்பிய
வருங்கால மனிதன்
காணி நிலம் வேண்டும் தொடங்கி
கனவு மெய்ப்பட வேண்டும் வரையில்
கற்பனைகளில் மிதந்த
கனவு சாதனையாளன்
வாதனை பொறுக்கவில்லை எனக் கதறிய
வாழ்க்கைப் போராளி
எத்தனை கோடி இன்பம் என்று
எண்ணிப் பார்த்து மெய்சிலிர்த்த
ஏகாந்த யோகி

பார்மீது நான் சாகாதிருப்பேன் கண்டீர் என்றவனை
அன்று பைத்தியக்காரன் என்று
பார்த்துச் சிரித்த மக்கள் கூட்டத்தின்
வழித் தோன்றல்களை
இன்றும் பைத்தியமாக அடித்துக் கொண்டிருக்கும்
அழியாக் கவிதைகளை
அள்ளித் தந்துவிட்டுப் போன
அமரகவி

2002-ல் திண்ணையில் வெளியான எனது பழைய கவிதை. அழியாத அவன் கவிதை வரிகளோடு இழைந்து அவன் தரிசனம் தேட முயலும் என் போன்ற பாரதியின் மீளா அடிமைகளுக்காக அவனது 124 வது பிறந்த நாளில் இதனை மீள் பதிவு செய்கிறேன்.

10 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வையத்தலைமை எனக்கருள்வாய் எனக் கேட்ட வல்லரசாதிக்கவாதி//

வித்தியாசமான, சிறப்பான கோணம் ஜடாயு சார்!

//பைத்தியக்காரன் என்று
பார்த்துச் சிரித்த மக்கள் கூட்டத்தின்
வழித் தோன்றல்களை
இன்றும் பைத்தியமாக அடித்துக் கொண்டிருக்கும்
அழியாக் கவிதைகளை//

முறுக்கு மீசையான் கவிதைகளில்
கிறுக்கு பிடித்தவர்கள் எத்தனையோ?
:-)

சிறந்த நாளில், நல்ல (மீள்) பதிவு!

ஜடாயு said...

// அவர் சாகாமல்தான் இருக்கிறார். பாரதியெனும் பேருணர்வு தீண்டியவரெல்லாம் பாக்கியசாலிகளே //

பாரதி என்பது ஓர் பேருணர்வு தான்!
நெஞ்சைத் தொடும் வரிகள் கணேஷ். மிக்க நன்றி.

ஜடாயு said...

// //வையத்தலைமை எனக்கருள்வாய் எனக் கேட்ட வல்லரசாதிக்கவாதி//

வித்தியாசமான, சிறப்பான கோணம் ஜடாயு சார்! //

நன்றி கண்ணபிரான்.

ஜடாயு said...

// என் போன்ற பாரதியின் மீளா அடிமைகளுக்காக //

அது என்ன அடிமைத் தனம் என்று சிலர் மின் அஞ்சலில் கேட்டிருக்கிறார்கள். அந்த சொல்லடையின் மூலம் இது தான் -

மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே
மூளாத் தீபோல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி
ஆளாயிருக்கும் அன்பர் தங்கள் அல்லல் சொன்னக் கால்
வாளாயிருப்பீர் ஆரூரர் நீர் வாழ்ந்து போதீரே!

- சுந்தரர் தேவாரம்

Anonymous said...

நல்ல கவிதை. பாரதியின் சொற்களை வைத்தே அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டீர்கள். நன்றி.

Anonymous said...

ஜடாயு,

பாரதியை அவன் கவிதையை வைத்தே பிரம்மா, விஷ்ணு, சிவன் வடிவாகக் கண்டது ரசிக்கும் படியாக இருக்கிறது.

// காலனைச் சிறு புல்லென மதித்துக்
காலால் மிதிக்கத் துடித்த
காளி //

காலனை உதைத்தது சிவபெருமான் இல்லையா?

Anonymous said...

Good poem on the occassion of Bharathi's birthday, December 11.

ஜடாயு said...

// // காலனைச் சிறு புல்லென மதித்துக்
காலால் மிதிக்கத் துடித்த
காளி //

காலனை உதைத்தது சிவபெருமான் இல்லையா? //

அனானி, கூர்ந்து கவனித்து இதனைச் சுட்டியதற்கு நன்றி.
எழுதுகையில் மனதில் வந்த வரிகளை அப்படியே எழுதினேன், ரொம்ப யோசிக்கவில்லை. நீங்கள் கேட்டவுடன் மறுபடி எண்ணிப் பார்க்கிறேன்.

சிவழும், சக்தியும் ஒன்றே. தன் இடக்காலால் காலனை உதைத்தான் அல்லவா சிவபிரான்? அதன் தாத்பரியம் என்ன? இடப்பாகம் சக்திக்குக் உரியது. சிறுவன் மார்க்கண்டனுக்கு இரங்கியது அன்னையின் அன்பு உள்ளம், உடனே எமனை எட்டி உதைத்தது அவள் திருவடி.

காலஹந்த்ரீ (காலனை வதைத்தவள்) என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் அன்னைக்கு ஒரு பெயர் வருகிறது.

சிவ சக்தி ஐக்கிய பாவத்தில் இது சாத்தியம். அதனால் தான் தேவியை முக்கண்ணியாகவும், தலையில் பிறை சூடியவளாகவும், சூலம் ஏந்தியவளாகவும் வழிபடுகிறோம். "மாலயன் தேட மறை தேட வானவர் தேட நின்ற காலையும்" என்று அபிராமி அந்தாதியில் வரும். சிவனது திருவடி மகிமையைச் சொல்லி சக்தியைப் போற்றுகிறார் பட்டர்.

ம்.. அடியேன் அறியாமலே அந்த வரி வந்திருக்கிறது ("கா" என்ற மோனை தான் இதைத் தூண்டியிருக்கிறது). ஆனால் அதன் பின் இவ்வளவு உட்பொருள் இருக்கும் சாத்தியங்கள் நீங்கள் சுட்டியவுடன் தெரிகிறது.

மீண்டும் நன்றி அனானி அவர்களே.

Anonymous said...

உலகுய்விக்கும் பாரதீயம்-அதன்முன்
உலகம்பிடிக்கும் பல கூட்டம்
மாச்சர்யத்தையே மதமாக்கி
உலகளந்தவன் பூமியில்
எண்ணிகையின் அளவுகளில் உருட்டும் புரட்டும்

சிவத்தை இயக்க சக்தி
சக்தியியங்க சிவம்
கவிதையே தொழிலென
இமைப்பொழுதும் இயங்கியவனின் பாடலால்
இயக்கியது இயக்கும்
இறை தமிழரை

அறிவீணர் பரப்பும் இருளும் - அவன்
வேதாந்த வேள்வியால் அகலும்

அவன் சொல்லால் சூலாகியோர்
அச்சூலால் சூலமேந்தியோர்
சுமப்பது சுதந்திர தாகம்
என்றும் தணியா வேகம்

அதுவரை
பள்ளு பாடும் காலம் தேடி
பார்ப்பான் பறையன் பாகழித்து
பேரிகையொடு காத்திருக்கும் பாரதம்

--- ஐயன் காளி

ஜடாயு said...

ஐயன் காளி,

அற்புதமான கவிதைப் பின்னூட்டம்.

// அவன் சொல்லால் சூலாகியோர்
அச்சூலால் சூலமேந்தியோர்
சுமப்பது சுதந்திர தாகம்
என்றும் தணியா வேகம் //

எழுச்சியூட்டும் வரிகள்.

நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி.

இத்தனை நாட்கள் எங்கிருந்தீர் கவிஞரே?